Sunday, November 28, 2010

மலர் 3 இணைய இதழ் 4 11 நவம்பர் 2010

ஓஷோ சாஸ்வதம் செய்தி

அவினாசி 2 கோவை NH – 47-ல், கந்தம்பாளையம் சாலையில் உள்ள ஓஷோ சாஸ்வதம் மையம் பலரின், தியானம் என்பது என்ன ? அதை செய்வது எப்படி ?அதை உபயோகிக்கும் விதம் என்ன ? அதனால் நாம் அடைவது என்ன ? ஓஷோவின் வழி என்ன, செய்தி என்ன? என்பது போன்ற சந்தேகங்களுக்கு பதில் அளித்து அதை நடைமுறைப் படுத்தவும் உதவி வருகிறது.

மற்ற தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும். தங்கி தியானம் செய்யலாம்.

மெளனத்தில் விளைந்த முத்துகள் – ஓஷோ

1.சிரிப்பு

ஆழமான சிரிப்பில் மனம் கரைந்துவிடுகிறது.

சிரிப்பு மனதின் பாகமோ, இதயத்தின் பாகமோ அல்ல.

உண்மையான சிரிப்பு உனது அடிவயிற்றின் ஆழத்திலிருந்து வரும்போது அது உனது மையத்திலிருந்து வருகிறது. அலைகள் மையத்திலிருந்து கிளம்பி வெளிவட்டத்துக்கு வருவது போல உண்மையான சிரிப்பு உனது மையத்திலிருந்து கிளம்பி அலையலையாய் வெளிப்புறத்துக்கு வரும்.

சிரிப்பு உன்னுள் ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்கும்.

நீ உன்னைப் பார்த்து சிரிப்பதுதான் உண்மையான சிரிப்பு.

எப்போதும் உனது அடி வயிற்றிலிருந்து வருவதுதான் உண்மையான சிரிப்பு.

நீ சிரிக்கும்போது எதிர்காலத்திலோ, இறந்த காலத்திலோ இருக்க முடியாது.

சிரிப்பு முடிவானதின் வாயிலை திறக்கக் கூடும்.

2.அன்பு

நிஜமான அன்பு என்பது உள் வெளியை நிறைக்கும் ஏதோ ஒன்று அல்ல. அதற்கு பதிலாக உள்வெளியை பகிர்ந்து கொள்வதோடு சம்பந்தப்பட்டது. நீ பகிர்ந்துகொண்டால் அது அன்பு. பகிர்தல்தான் மனிதனை தெய்வீகத்தோடு இணைப்பது. அன்புதான் உன்னை தெய்வீகத்தோடு இணைக்கும் பாலம்.

அன்பு அபாயகரமான பாதை. துணிவுள்ளவர்கள் மட்டுமே அதில் பயணம் செய்யமுடியும்.

அன்பு செய்வது என்பது உனது ஆணவத்தை விடுவது, உன்னை இழப்பது. அன்பு என்றால் இல்லாமல் போவது.

நீ மிகவும் தலைகனம் பிடித்தவனாய் இருந்தால் உன்னால் காதலில் விழ முடியாது.

உடலுக்கு எப்படி உணவு தேவையோ அது போல ஆன்மாவுக்கு தேவையானது அன்பு.

அன்புக்கு தர்க்கம் கிடையாது, அன்புக்கு காரணம் கிடையாது, அன்புதான் வாழ்க்கை.

அன்பு நிபந்தனைகளற்ற பரிசு, அது பேரம் பேசுவதல்ல.

3.மையம்.

மையமின்றி வாழ்வு இல்லை. உனக்கு அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கலாம். அது வேறு விஷயம். அதை நீ உருவாக்க முடியாது, நீ அதை திரும்பவும் கண்டுபிடிக்க வேண்டும். நினைவில் வைத்துக் கொள், நான் நீ அதை கண்டு பிடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை, நீ திரும்பவும் கண்டு பிடிக்க வேண்டும் என்றுதான் கூறுகிறேன்.

மையமின்றி யாரும் உயிர்த்திருக்க முடியாது. மையமில்லாமல் வாழ்வு சாத்தியமேயில்லை.

புயலின் நடுவே அசையாதிருக்கும் அந்த மையத்தை கண்டறி.

கவனமாயிருப்பது, விழிப்புணர்வோடிருப்பது ஒன்று மட்டுமே உன் மையமாகட்டும்.

வெளிப்புறமின்றி மையமில்லை. அவை உண்மையில் ஒன்றே.

எல்லா சிறப்பானவைகளும் மையத்திலிருந்து தோன்றியவையே.

தலையங்கம்

அன்பு நண்பர்களே,

வணக்கமும் வாழ்த்தும்.

இந்த தலையங்கத்தில் மூன்று தலைப்புகளில் எழுதப் போகிறேன்.

வரும் நண்பரிகளிடம் நான் முதலில் சோதிக்க வேண்டியிருப்பது அவர்கள் தன்னைப் பார்க்க தயாராய் இருக்கிறார்களா என்பதைத்தான்.

அது இல்லாதவர்கள் தியானம் செய்வதில்கூட சமூக மனத்தின் பேராசையும், பாதுகாப்புத் தேடுதலுமே ஓங்கி நிற்பதை நான் பார்க்கிறேன்.

உதாரணமாக ஒரு நண்பர் நான் அந்த சாமியாரிடம் போனேன், அதற்குப் பின்பு கஷ்டம் நீங்கி நன்றாக இருக்கிறேன் என்கிறார். இன்னொருவர் அந்தக் கோயிலுக்குப் போய் அங்கு ஓரிடத்தில் நின்றால் அங்கு ஒரு சக்தியிருப்பதை உணர்கிறேன். அதற்காகவே அங்கு தவறாது போகிறேன். அது எனக்கு அமைதி கொடுக்கிறது என்கிறார்.

ஓஷோவையும் படிக்கிறார்கள், தியானம் செய்கிறார்கள். ஆனால் ஈர்ப்பு வேறொங்கோ இருப்பது ஏன்,? மேலும் ஓஷோவிடமும் அப்படி ஒரு பயன்பெறவே வர விரும்புகிறார்கள். ஓஷோவும் அப்படி பயனளிப்பார், தனது நோயைத் தீர்ப்பார், வியாபாரத்தைப் பெருக்குவார், ஆரோக்கியம் தருவார் என்று நம்ப விரும்புகிறார்கள்.

நண்பர்கரளே, தயவுசெய்து ஓஷோவையாவது அவர் வழியே விட்டுவிடுங்கள்.

உங்களது ஆசைகளை, பேராசைகளை, பயத்தை, சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஓஷோவை பயன்படுத்திக் கொள்ள நினைக்காதீர்கள். சாமியாரிடம் போனால் கஷ்டம் நீங்கி விட்டது என்றால் இங்கு எல்லோரும் ஏன் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்? சாமியாரின் முகவரி தெரியாத ஒன்றுதான் பிரச்னையா? மடத்தனம் இது.!

ஒரு முறை நான் பல வருடங்களுக்கு முன்பு தற்செயலாக மகரிஷி மகேஷ்யோகி அவருடையதேயான சேனலில் அவர் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். அவர் சொல்லிக் கொண்டிருந்தார். இந்தியாவின் அனைத்து கஷ்டங்களுக்கும் காரணம் நமது பார்லிமெண்டின் வாஸ்து சரியில்லை என்பதுதான் என்று. இவருக்கு என்று ஒரு தனி தொலைக் காட்சி சேனல்.! இதைப் பார்த்து ஏமாறும் மக்கள் கூட்டம்.! என்ன சொல்வது நமது சமூகத்தை?

நான் கூறவந்தது என்னவென்றால், இப்படி நம்புகிறவர்கள், ஏமாறுகிறவர்கள் அனைவரின் பொதுகுணமாக இருப்பது தன்னைப் பார்க்க பயப்படும் தன்மைதான்.

ஆனால் ஓஷோ உன்னைப் பார்ப்பதுதான் ஆரம்பம் என்பவர். உன்னை அப்படியே ஏற்றுக் கொள், அப்படியே பார், எல்லா அசிங்கங்களையும், சேர்த்து வைத்துள்ள எல்லா குப்பைகளையும் பார். பார்க்க முடிந்த பின்பு தானே சுத்தம் செய்வது, எப்படி சுத்தம் செய்வது என்பதெல்லாம் வருகிறது. சுத்தம் செய்த பின்பு தானே தியான வாய்ப்பு வருகிறது.!

ஒரு செடி உள்ளிருந்து வளர்கிறது. வெளியே உள்ளவைகளை வாழ்க்கைச் சூழ்நிலையை பயன்படுத்தி வளர்கிறது. வளர்ந்து மலர்கிறது. மணம் பரப்புகிறது. காயாகி, கனியாகி உதிர்கிறது. மேலும் இந்த முழுவதையும் அழகோடு, ஆனந்தத்தோடு செய்கிறது.

மனிதனுக்கு என்ன ஆனது? முதலில் உள்ளிருந்து வாழ்வதை நிறுத்தி விட்டான். வெளி விஷயங்களை உணரவும் முடிவதில்லை. உள்ளிருந்து வாழும் உடலோடு ஆன தொடர்பும் கொஞ்சமே இப்போது மிச்சமிருக்கிறது.

நாம் இயற்கையின் தொடர்பை மதிப்பதில்லை. அதன் அவசியத்தை நாம் மறந்து விட்டோம்.

ஒரு மான் கூட்டமும், அதை கொன்று வாழும் புலியும் ஒரே காட்டில் ஒரே இடத்தில்தான் வாழ்கின்றன. எந்த மான் கூட்டமும் புலியில்லாத காட்டிற்கு தப்பி ஓடிவிட முயற்சிப்பதில்லை. புலி துரத்தும்போது ஓடுகிறது. ஏதாவது ஒரு மானை புலி பிடித்தவுடன் புலி நின்று விடுகிறது. மான் கூட்டமும் ஓடுவதை நிறுத்திவிட்டு மேய ஆரம்பிக்கிறது. புலியும், எதற்கு தினமும் இந்த துரத்தல் சில நாள் எதுவும் கிடைப்பதில்லை, மான் லாவகமாக தப்பி ஓடி விடுகிறது. ஆகவே ஒரு பத்து மான்களை அடித்து ஒரு குகையில் சேர்த்து வைக்கலாம் என்று திட்டமிடுவதில்லை. பசிக்கும்போது தேட ஆரம்பிக்கிறது. உண்டவுடன் இளைப்பாற ஆரம்பித்து விடுகிறது.

இப்படி இயற்கையில் எதிரெதிர் ஆனவை என்று நாம் நினைக்கும் அனைத்தும் சேர்த்து வாழ்கின்றன. மான் பெருகி பஞ்சம் வந்து விடாமல் புலி காக்கிறது. புலி உணவின்றி இறந்துவிடாமல் மான் காக்கிறது.

ஆனால் மனிதனின் நிலை என்ன? எதிரானது என்று தோன்றுவதை எல்லாம் அழித்து சமநிலையைக் குலைக்கிறான்.

வெள்ளம் வராது இருக்க அணை கட்டுகிறான். வெள்ளம் வந்தால்தான் அது கொண்டு வரும் வண்டல் மண் நிலம் முழுவதும் பரவி, நிலத்தின் வளம் அழிந்துவிடாமல் காப்பாற்றப் படும். ஆனால் அணையில் ஆறு அடித்து வரும் வண்டல்மண் எல்லாம் பயனற்று அணையின் அடியில் சேகரமாகிறது படிந்துவிடுகிறது. மேலேதான் நீர் வெளியேற திறக்கப்படுவதால் வண்டல்மண் வீணாவதே நடக்கிறது.

உதாரணத்திற்கு ஒன்று இது. இப்படி சமநிலையைக் கெடுப்பதால், காடுகளை அழித்து, பெட்ரோல் சேமிப்புகளைக் குடித்து, காற்றை மாசுபடுத்தி, தற்கொலைப் பாதையில் செல்வதே இன்றைய நாகரீகத்தின் விளைவாக இருக்கிறது.

விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி இயற்கையை அழிக்காமல் வாழ்வதை விட்டுவிட்டு அதை வெற்றி கொள்ளும் வெறியில் மனிதன் அழிவுப் பாதையில் செல்கிறான்.

மலைகள் தகர்க்கப்படுகின்றன. சேலம் பக்கத்தில் பல மலைகளைக் காணோம். பூனாவைச் சுற்றி மலைகள் சமமாக்கப்பட்டு அடுக்குமாடி வீடுகளாக்கப்பட்டு விட்டன. எதற்கு இந்த தற்கொலை முயற்சி ?ஏன் இந்த தற்கொலை முயற்சி?

இதன் காரணம் மனிதன் தனது உள்ளுணர்வை இழந்து விட்டதுதான். இயற்கையோடுள்ள இணைப்புணர்வை இழந்து விட்டதுதான். ஒரு உதாரணம் சொல்கிறேன். டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்பட்டது இது. நான் பார்க்கவில்லை. ஒரு நண்பர் கூறிய தகவல். ஆனால் இது உண்மைதான், மேலும் இது போன்ற உதாரணங்களை கோடிக்கணக்கில் கொடுக்கமுடியும். அதாவது ஒரு மரம் கொஞ்சம் பெரிய காயாக காய்த்து வெடிக்கிறது. அப்போது அதனுள்ளிலிருந்து விதைகள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. அந்த விதைகளுக்கு ஹெலிக்காப்டரைப் போல மெல்லிய இறக்கைகள் உள்ளன. மேலும் அவை வெளிப்படுகையில் ஒரு விசை போன்ற துடிப்பை விதைகள் பெறுகின்றன. அதன் மூலம் அது காற்றில் பறக்க ஆரம்பித்து வெகுதூரம் செல்கிறது. அந்த இறக்கைகள் காற்றில் சுழன்று வெகுதூரம் விதையை எடுத்துச் செல்கின்றன. இதைப் பார்த்து நண்பர் ஆச்சரியப்பட்டு போனார். எவ்வளவு அறிவோடு எல்லாம் இருக்கிறது என்ற ஆச்சரியம் அவருக்கு. இதைக் கேட்ட நான் சொன்னேன். இந்த அறிவுக்கே ஆச்சரியப் படுகிறீர்களே! இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து பாருங்கள். அந்த மரம் ஒரு அடி கூட அதன் வாழ்நாளில் நகர்ந்ததில்லை. பிறகு எப்படி பறப்பது பற்றி அதற்கு தெரிந்தது,? மரம்தான் காயை உருவாக்கியது, அதன் விதைகளை அது தான் அவ்வாறு உருவாக்கிறது. ஆனால் அதற்கு காற்றில் பறக்க இப்படி இறக்கையோடு நமது விதையை ஏற்படுத்த வேண்டும். அதன் ஆரம்பத்திற்கு ஒரு விசை கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் அதற்கு எப்படித் தெரிந்தது? அதன் சொந்த அனுபவம் என்ன? சொந்த அனுபவமும் இல்லை, படித்ததும் இல்லை, கல்லூரி சென்று கற்கவும் இல்லை, ஆனால் தவறில்லாமல் முதல்முறையே மிகச் சரியாகத் தயாரித்து வெற்றிகரமாக செயல்படுத்துகிறது.! எப்படி - இந்த ஆச்சரியத்தை யோசியுங்கள் என்றேன். நீங்களும் யோசியுங்கள்.

நமது சொந்த அனுபவம், பார்த்தது, கேட்டது, படித்தது, கற்றது என்ற ஐம்புலன் அனுபவத்தை அறிவென்று எண்ணி அல்லல்படும் நாம் இதை கண்டிப்பாக யோசிக்க வேண்டும். இயற்கையின் இணைப்புணர்வே நமது உண்மையான வழிகாட்டி, அந்த உணர்வே நமது வாழ்வின் சாரம்.

இன்றைய மனிதன் நோக்கம், பார்வை, இலக்கு, இலட்சியம், கொள்கை, கோட்பாடு, நெறிமுறை, கருத்து, உறுதி, ஆகிய எல்லாமே சரியான திசையில், சரியான கண்ணோட்டத்தோடு இல்லை என்பது அடிப்படை சமூக பிரச்சனை.

இந்த சமூகம் பணத்தை முன்னிறுத்தி விட்டது. பாதுகாப்பை முன்னிறுத்தி விட்டது. சுயநலத்தை முன்னிறுத்து விட்டது. போலி கௌவரத்தை, அதிகாரத்தை, ஆடம்பரத்தை முன்னிறுத்தி விட்டது. வீண் பெருமையை, அடுத்தவர் புகழ்ச்சியை முன்னிறுத்தி விட்டது. பயத்தையும் சந்தேகத்தையும், முன்னிறுத்தி விட்டது. பேராசையை முன்னிறுத்தி விட்டது. தன் குடும்பம், தன் இனம், தன் மொழி என்பதை முன்னிறுத்தி விட்டது.

ஆனால் நமது சமூகம் பணத்திற்கு பதிலாக குணத்தை முன்னிறுத்துவதாக, பேராசைக்கு பதிலாக பகிர்ந்து கொடுப்பதை, பொறாமைக்கு பதிலாக அன்பை, அதிகாரம் தேடுவதற்கு பதிலாக அருளை, கருணையை, போட்டிக்கு பதிலாக அமைதியை, வறட்டு கெளரவம் தேடுவதற்கு பதிலாக கடவுள் நிலை தேடுதலை முன்னிறுத்தியதாக இருந்தது. முழு வாழ்க்கை முறையும் கடவுள் நிலை பெறுவதை முன்னிறுத்தியே இருந்தது. அதற்கான ஒரு முழு மனவியலும் இங்கே ஓங்கி வளர்ந்திருந்தது.

நடுவில் என்ன ஆனது. மேற்கு நாடுகளைப் பார்த்து பணப்பேய், அதிகாரப்பேய், அதற்காக எந்த சூழ்ச்சியும், சுரண்டலும் செய்வது, மது, மாது, சூதுவே மகிழ்ச்சி என்ற மயக்கம் நம்மைப் பிடித்துக் கொண்டது. ஆகவே நாம் திசை மாறினோம். இலக்கு மாறினோம். இதுவே நம் சமூகத்தின் இன்றைய அவலம்.

பாதுகாப்பை முன்னிறுத்திய சமூகமாக நம்முடையதும் மாறி விட்டது. அடிமையாய் வறுமையாய் இருந்ததன் விளைவால் நாம் மேற்கத்திய வாழ்க்கைக்கு அதிகம் ஈர்க்கப்பட்டோம்.

இதனால் இன்று பாதுகாப்பான வாழ்வை எட்டிவிட்டவர்கள் அடைய வேண்டியதை அடைந்து விட்டதாக மகிழ்ச்சி கொள்ள முயல்கிறார்கள்.! அரசாங்க உத்தியோகம் பெற்றவர்கள், புதுப் பணக்காரராய் மாறி விட்டவர்கள், வாடகையும் வட்டியும் வாங்கி வாழ்பவர்கள் இவர்களெல்லாம், வரவுக்குள் வாழ்வைச் சுருக்கி பாதுகாப்பான வாழ்வை தவறவிட்டுவிடாமல் வாழும் போக்கு நமது சமூகத்தில் இருக்கிறது.

மேலும் இவர்கள் இதில் பெருமை வேறு பட்டுக்கொள்கிறார்கள், வாழ்வில் வெற்றி அடைந்துவிட்டதுபோல. ஆனால் உண்மை என்ன?

பாதுகாப்பு எதற்கு? வாழ்வதற்கு, பயமின்றி வாழ்வதற்கு.! ஒரு செடி வளர்வதற்கு அதைச் சுற்றிப் போடும் வேலி ஒரு பாதுகாப்பு. ஆனால் வேலியை முதலில் முள்வேலி, பிறகு கம்பி வேலி, பிறகு காம்பவுண்ட் சுவர் என்று அதிகரித்துக் கொண்டே போய்விட்டு விதையை மண்ணில் விதைக்காமல் வைத்திருந்தால் என்ன பயன்? ஆனால் ஒருவருக்கும் இதைப் பற்றிய உணர்வே இல்லை. பாங்க் இருப்பை, சொத்து மதிப்பை, அதிகரித்துக் கொண்டே போகிறார்கள். ஆனால் வாழும் தைரியம் வருவதில்லை.

இதற்கும் காரணம் இருக்கிறது. சுற்றிலும் இந்தப் பாதுகாப்பை அடையாமல், இந்தப் பாதுகாப்பை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் கூட்டம் இருக்கிறது. அதைப் பார்க்கையில் நாம் அடைந்துவிட்டோம் என்ற மகிழ்ச்சி பிறக்கிறது. இது பொய்யானதுதான். நமது கற்பனைதான்.

உண்மையான உணர்வு எதுவுமே உள்ளிருந்து வர வேண்டும். பசி, தாகம் போல. ஆனால் இந்தப் பொய்யான உணர்வு கொடுக்கும் அகங்கார போதையில் அனைவரும் மகிழ்ந்து கொள்கிறார்கள். காலை எழுந்தவுடன் பேப்பர் படித்து, எங்கெங்கு கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபத்து, கலவரம் என்றெல்லாம் தெரிந்துகொள்வதில் எல்லோருக்கும் ஆர்வம் இருக்கிறது. ஏனெனில் இது எதுவும் நடக்காமல் நான் நன்றாக இருக்கிறேன் என்று மகிழ்ந்து கொள்ள இது மிகவும் அவசியமாக இருக்கிறது. நான் பாதுகாப்பாய் இருக்கிறேன் என்று திரும்பத் திரும்ப உணர்வதன் மேல் இன்றைய மனிதனுக்கு விருப்பம் ஏற்படுகிறது.

ஆனால் இது ஒரு மனநோய்தான். மற்றவர்களின் துன்பமே நமது மகிழ்ச்சிக்கு காரணமாய் இருப்பது ஒரு நோயல்லாமல் வேறென்ன? அடுத்த வீட்டுக்காரனின் வெற்றியும் தோல்வியுமே உனது கோபத்தையும் மகிழ்ச்சியையும் தீர்மானிப்பதாய் இருப்பது ஒரு அவலம்தான்.

மேலும் நாம் இதை சிறுவயது முதலே குழந்தைகளுக்கு ஊட்டி விடுகிறோம். இதன் அடியில் உள்ள பயத்தைப் போக்கிக் கொள்ளும் வழியை நாமும் தெரிந்துகொள்வதில்லை. குழந்தைகள் பயத்தை உணரும்போதும் அதைக் கடப்பதற்கு நாம் சொல்லியும் தருவதில்லை. அதை அமுக்கி வைக்கும், மறைத்துக் கொள்ளும் வழிகளையே சொல்லித் தருகிறோம்.

நமக்கு வாழ்வின் இலக்கே மாறிப்போனது அல்லது மறந்துபோனதுதான் இந்நிலைக்குக் காரணம் என்று உணர்ந்தால், நமக்கு உறைத்தால் அப்போதுதான் விடிவு பிறக்கும். நிறைவு கிடைக்கும். நாம் திரும்பவும் வாழ ஆரம்பிப்போம். போதையை நோக்கியல்ல, சத்தியத்தை நோக்கி.

அன்பு,
சித்.

கவிதைப் பகுதி

கண்ணீர்

இதயம் கரைகையில் எழுவது கண்ணீர்

அதுவே மனிதனைக் கழுவி,
அவன் ஆன்மாவை காப்பாற்றி வருகிறது.

இடர்களை இறக்கிவைத்து,
வாழ்வைத் தொடர வழி செய்கிறது.

இன்பம் முட்டும்போதெல்லாம்,
நன்றியை பொங்கிப் பெருக வைக்கிறது.

உடல் உபாதையில் உழழும்போது,
வலியைக் கரைத்து வழிகிறது கண்ணீர்.

இப்படி மனிதனை இயற்கையோடு.......
இணைத்து வைத்திருப்பது கண்ணீர்.

அவன் இதயம் திறக்கும்போதெல்லாம்.......
அதில் பூத்து மலர்வது கண்ணீர்.

ஆம்.......
உடலின்பால் அன்பு,
உறவின்பால் அன்பு,
உள்ளத்தின்பால் அன்பு,
உயிரின்பால் அன்பு,
என்று.......
அன்பு எழும்போதெல்லாம் முகிழ்வது கண்ணீர்.

கண்ணீர் அன்பின் வெளிப்பாடு,
ஆகவே கண்ணீர் விடுங்கள்,
உங்களை அன்பால் கழுவுங்கள்.

2,
அன்பு இல்லையே

உன்னை பார்க்கப் பிடிக்கவில்லை
ஏனெனில் நான் உன்மீது அன்பு கொண்டிருக்கிறேன்.

உன் பேச்சைக் கேட்கப் பிடிக்கவில்லை
ஏனெனில் அன்பு......

உன்னை நினைக்கப் பிடிக்கவில்லை
ஏனெனில் அன்பு.......

உன்னை தனியாகப் பிடிக்கவில்லை
ஏனெனில் அன்பு......

நீ நான், நான் நீ
ஆம் இதுதான் பிடித்திருக்கிறது

ஓஷோ வீடியோ

1. Osho : Meditation is a very simple phenomenon2. Osho : Rediscovering your joyful self3. Osho : Spiritual growth and enlightenmentதியான யுக்திகள்

தியான யுக்தி – 1

இதயத்துடனான இணைப்பை இழந்து விடாதே.

உணர்வுதான் உண்மையான வாழ்க்கை. நினைப்பு போலியானது. ஏனெனில் நினைப்பு என்பது அதைப் பற்றியது. அது உண்மையானதல்ல. மதுவைப் பற்றிய நினைப்பு உனக்கு போதையை கொடுக்காது. மதுதான் உனக்கு போதையை கொடுப்பது. நீ மதுவைப் பற்றி நினைத்துக் கொண்டே இருக்கலாம், ஆனால் மது பற்றிய நினைப்பு மட்டுமே உனக்கு போதை தராது. நீ அதை குடிக்க வேண்டும். குடிப்பது உணர்வின் மூலமே நிகழும்.
நினைப்பு ஒரு போலியான செயல், ஒரு பதிலான செயல். அது உனக்கு ஏதோ ஒன்று நிகழ்ந்து கொண்டிருப்பது போன்ற உணர்ச்சியை தரும். ஆனால் எதுவும் நிகழ்வதில்லை. அதனால் நினைப்பிலிருந்து உணர்வுக்கு நிலைமாறு. அதற்கு சிறந்த வழி இதயத்திலிருந்து சுவாசிக்க ஆரம்பிப்பதுதான்.

பகலில், எவ்வளவு முறை நினைவு வருகிறதோ அவ்வளவு முறை ஒரு ஆழமான மூச்சு எடு. அது உனது இதயத்தின் மையத்தை சென்று அடைவதாக உணரு. முழு இயற்கையும் உன் இதயமையம் எதுவோ அங்கே உன்னுள் சொரிவதாக உணர்ந்து பார். அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அது சாதாரணமாக வலது பக்கத்தில் இருக்கும். அதற்கும் உடல்ரீதியான இதயத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அது முற்றிலும் வித்தியாசமான விஷயம். அது நுண் உடலை சேர்ந்தது.
ஆழமாக மூச்செடு. நீ என்ன செய்தாலும் ஆழமான மூச்செடுத்து ஐந்து தடவைகள் செய். மூச்சை இழுத்து இதயத்தை நிரப்பு. இயற்கை இதயத்தின் மூலமாக நிரம்புவதாக இதயத்தின் நடுவே உணர்ந்து பார். வாழ்வு, தெய்வீகம், இயற்கை, துடிப்பு எல்லாமும் சொரிவதாக உணர். பின் அழுத்தமாக மூச்சை வெளியே விடு. இதயத்திலிருந்து உனக்கு கிடைத்த எல்லாவற்றையும் திரும்ப இயற்கைக்கு, தெய்வீகத்திற்கு கொடுப்பதாக உணர்ந்து கொடு.

ஒரு நாளைக்கு இதை பல தடவைகள் செய். ஆனால் எப்போது இதை செய்தாலும் முதலில் ஐந்து தடவைகள் ஆழமான மூச்செடு. அது தலையிலிருந்து இதயத்துக்கு இடம் மாற உனக்கு உதவி புரியும்.

நீ மேலும் மேலும் உண்ர்வுள்ளவனாக மாறுவாய். நீ விழிப்படையாத பல விஷயங்களைப் பற்றி உணர்வடைவாய். நீ அதிக சுவை அறிபவனாக, அதிக வாசனை உணர்வுள்ளவனாக, தொடு உணர்ச்சி அதிகம் உள்ளவனாக மாறுவாய். உன்னால் அதிகம் கேட்க முடியும், அதிகமாக பார்க்க முடியும். எல்லாமும் அதிக ஆழமானதாக மாறும். தலையிலிருந்து இதயத்துக்கு இடம் மாறு, திடீரென உனது புலன்கள் ஜொலிப்பதை நீ உணர்வாய். வாழ்வு உன்னுள் துடிப்பதை, உன் மூலம் பாய்ந்தோட தயாராக இருப்பதை, உன் மூலம் பொங்கி வருவதை நீ உணர்வாய்.

தியான யுக்தி – 2

உணர்வோடு சுவையறிதல்

நாம் சுயஉணர்வின்றி, இயந்திரதனமாக, அவசரமாக சாப்பிடுகிறோம். சுவையை அறியாமல் ருசித்து உணராமல் சாப்பிடும்போது நாம் உணவை அடைக்கிறோம், அவ்வளவுதான். மிகவும் மெதுவாக சாப்பிடு, சுவையை ருசி. பொருட்களை விழுங்காதே. அவசரமின்றி ருசித்து சுவையாகவே மாறி விடு. இனிப்பை உணரும்போது இனிப்பாகவே மாறு. அப்போது அதை உனது உடல் முழுவதும் உணர முடியும். வாயில் மட்டுமின்றி. நாக்கில் மட்டுமின்றி அலை போல உடல் முழுவதும் பரவுவதை உணர முடியும்.

நீ எதை சாப்பிட்டாலும் அந்த சுவையை உணரு, அந்த சுவையாகவே மாறு. சுவையறியாவிட்டால் உனது புலன்கள் இறந்தவையாகி விடும். அவை மேலும் மேலும் உணர்விழந்துவிடும். உணர்விழந்து இருக்கும்போது உனது உடலை உன்னால் உணர முடியாது. உனது உணர்ச்சிகளை உன்னால் உணர முடியாது. அப்போது நீ உனது தலையில் மட்டும்தான் இருப்பாய்.

தண்ணீர் குடிக்கும்போது அதன் குளிர்ச்சியை உணரு. கண்களை மூடி, மெதுவாக உணர்ந்து குடி. குளிர்ச்சியாக இருப்பதை உணர்ந்து அந்த குளிர்ச்சியாகவே நீ மாறு. ஏனெனில் தண்ணீரில் இருந்த அந்த குளிர்ச்சி இப்போது உனது உடலுக்கு மாற்றப்பட்டு விட்டது. அது உனது உடலின் பாகமாகி விட்டது. தண்ணீரில் இருந்த குளிர்ச்சி இப்போது உன் வாயில், உனது நாக்கில் உள்ளது. அது உனது உடல் முழுவதும் நிகழ அனுமதி. அதன் குணம் உடல் பூராவும் பரவ அனுமதித்தால் உனது உடலில் குளிர்ச்சியை நீ உணரலாம். இந்த முறையில் உனது புலனுணர்வு வளரும், நீ மேலும் மேலும் உயிர்துடிப்போடும், நிறைவாகவும் மாறுவாய்.

தியான யுக்தி 3

மனதை உபயோகிக்காமல் பார்த்தல்

நீ பொருட்களை எப்படி பார்க்கிறாய் என்பது உன்னைப் பொருத்தது, பொருட்களை பொருத்ததல்ல. இடைச்செருகல் செய்யும் மனதை விட்டு விட்டு நேரடியாக தனித்து பொருட்களை பார்க்கும் ஒரு நிலைக்கு வரும் வரை மனம் உன்னை மொழிபெயர்த்துக் கொண்டேதான் இருக்கும். அது நிறத்தை மாற்றும், அது பல விஷயங்களை கலந்து இடையூறு செய்யும். அவை தூய்மையானதாக இராது.

அதனால் உண்மையை அடைய ஒரே வழிதான் உள்ளது. – எப்படி நீ உனது பார்வையாக மாறுவது, மனதின் துணையை எப்படி கைவிடுவது என கற்றுக் கொள்வதுதான். இந்த மனதின் கொந்தளிப்புதான் பிரச்னை. ஏனெனில் மனத்தினால் கனவுகளை மட்டும்தான் உருவாக்க முடியும். ஆனால் மனதால் மிக அழகான கனவுகளை உருவாக்க முடியும். அதனால் நீ மிகவும் கிளர்ச்சியுறுகிறாய். இந்த கிளர்ச்சியினால் அந்த கனவு உண்மை போல தோன்றுகிறது. நீ மிகவும் அதீத கிளர்ச்சியுறும்போது போதையடைந்து விடுகிறாய். நீ உணர்வோடு இல்லை. அப்போது நீ பார்ப்பது எதுவும் நீ பார்ப்பதல்ல. மேலும் எத்தனை மனம் உண்டோ அத்தனை உலகம் இருக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு மனமும் அதன் சொந்த உலகில் வாழ்கிறது. நீ அடுத்தவரின் முட்டாள்தனத்தை எண்ணி சிரிக்கலாம், ஆனால் நீ உன்னுடைய முட்டாள்தனத்தை பார்த்தே சிரிக்காத வரை நீ இயல்பானவனாகவோ, உண்மையானவனாகவோ, தாவோவின் வழி செல்பவனாகவோ ஆக முடியாது. என்ன செய்வது ?

மனதை கொண்டு வராமல் இருந்து பார்க்க முதலில் சிறிய விஷயங்களில் முயற்சி செய். ஒரு மலரை பார்க்கும் போது வெறுமனே பார். அழகு என்றோ அசிங்கம் என்றோ சொல்லாதே. வார்த்தைகளை கொண்டு வராதே. சொற்படுத்தாதே. வெறுமனே பார். மனம் மிகவும் சங்கடப்படும், அசௌகரியப்படும். ஏதாவது சொல்ல முற்படும். ‘அமைதியாக இரு, நான் பார்க்கிறேன், என்னை பார்க்க விடு’ என்று சொல்லி விடு.

முதலில் இது கடினமானதாக இருக்கும். ஆனால் உனக்கு அதிக ஈடுபாடு இல்லாத விஷயங்களில் இருந்து இதை ஆரம்பி. வார்த்தைகள் எதையும் உள்ளே கொண்டு வராமல் உனது மனைவியை பார்ப்பது கடினம். நீ உணர்வுரீதியாக இணைந்திருக்கிறாய், ஈடுபாடு கொண்டிருக்கிறாய். அன்போ, கோபமோ ஆனால் ஈடுபட்டிருக்கிறாய். நடுநிலையான விஷயங்களில் இருந்து ஆரம்பி, பின்தான் உணர்வுரீதியாக கட்டுண்டுள்ள சூழ்நிலைகளை கையாள முடியும்.

எப்போது என்னால் விஷயங்களை மனமின்றி பார்க்கமுடியும் என்று உனக்கு தோன்றுகிறதோ அதன்பின் சொந்த பிடிப்புக்கள் மீது முயற்ச்சித்துப் பார். மெது மெதுவாக அதில் திறமை வந்துவிடும். நீ மனதோடு அதிக நாட்கள் இருந்துள்ளதால் மனமின்றி ஒரு கணம் கூட இருக்க முடியாது என்றே உனக்குத் தோன்றும். மனமின்றி இருக்க முடியும் என்பதை உன்னால் நம்ப முடியாது. ஆனால் முயற்சித்துப் பார். எந்த அளவு மனதை தள்ளி வைக்கிறாயோ அந்த அளவு வெளிச்சம் உனக்குத் தெரியும். ஏனெனில் அப்போது அங்கே கனவுகள் இல்லை, எனவே கதவு திறந்திருக்கிறது, ஜன்னல் திறந்திருக்கிறது, ஆகாயம் உனக்கு தெரிகிறது, சூரியன் எழுகிறது, அது வந்து உன் இதயத்தை தொடுகிறது, ஒளி உன்னை வந்தடைகிறது. உனக்குள் கனவுகள் குறைய குறைய நீ சத்யத்தால் மேலும் மேலும் நிரப்பப்படுவாய்.

யார் பிராமணன் - ஓஷோவின் கதை - 28

நான் ஜபல்பூர் எனப்படும் ஊரில் இருபது வருடங்கள் தங்கி இருந்தேன். அதன் பழைய பெயர் ஜபலாபுர். அது மிகப் பெரிய ஞானிகளில் ஒருவரும், உபநிஷதத்தை எழுதியவருள் ஒருவருமான சத்யகம் ஜபால் என்ற ஞானியின் பெயரால் அழைக்கப்பட்டது. இந்த கதை சத்யகம் ஜபால் தெடர்புடையது.

சத்யகம் குழந்தையாய் இருக்கும் போதே மிகவும் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார். அவர் அனுபவிக்காதவரை அவர் எதையும் நம்புவதில்லை. அவர் இளைஞனாக ஆன போது – அவருக்கு பன்னிரெண்டு வயதானபோது – அவர் தனது தாயிடம், “இந்த நாட்டின் இளவரசன் காட்டில் இருக்கும் குருகுலம் செல்கிறான். அவனுக்கும் எனது வயதுதான். நானும் போக விரும்புகிறேன், நானும் வாழ்க்கை என்றால் என்னவென்று கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு இதுதான் நேரம்.” என்றார்.

தாய், “அது மிகவும் கஷ்டம், சத்யகம். ஆனால் எனக்குத் தெரியும், நீ பிறவியிலேயே தேடுதல் ஆர்வமுடையவன். நீ உன்னை ஒருநாள் ஒரு குருவிடம் அனுப்பச் சொல்லிக் கேட்பாய் என்று நான் பயந்து கொண்டேதான் இருந்தேன். நான் ஒரு ஏழைபெண். ஆனால் அது பிரச்னையல்ல. பிரச்னை என்னவென்றால் நான் இளமையாக இருந்தபோது பல வீடுகளில் வேலை செய்துகொண்டிருந்தேன். நான் ஏழை, ஆனால் அழகானவளாக இருந்தேன். அதனால் உனது தந்தை யாரென்று தெரியாது. நான் உன்னை ஒரு குருவிடம் அனுப்பினால் அவர்கள் உன் தந்தை யாரென்று கேட்பார்கள். உன் தந்தை யாரென்று தெரியாது என்று சொன்னால் அவர்கள் உன்னை ஏற்றுக் கொள்ளாமல் போகக் கூடும்.

ஆனால் முயற்சி செய்வதில் எதுவும் தப்பில்லை. நீ போய் நான் உன்னிடம் இப்போது சொன்னது போலவே உண்மையை அப்படியே சொல். நான் ஏழையாக இருந்ததால் பலர் என்னுடைய உடலை உபயோகித்திருக்கின்றனர். என்னுடைய தந்தை யாரென்று எனக்குத் தெரியாது என்பதை சொல். உன்னுடைய பெயர் சத்யகம் என்றும் உன் தாய் பெயர் ஜபாலா என்றும் சொல். அப்போது அவர்கள் உன்னை சத்யகம் ஜபால் என்று அழைக்கட்டும். உண்மையை பொறுத்தவரை உனது தந்தை யாரென்பது ஒரு பிரச்னையல்ல.”

சத்யகம் காட்டில் உள்ள ஒரு வயதான குருவிடம் சென்றான். நிச்சயமாக முதல் கேள்வி, உன்னுடைய பெயர் என்ன? உன்னுடைய தந்தை பெயர் என்ன? என்று கேட்பார்கள் என்று தெரிந்தே போனான்.

அவர்கள் கேட்டவுடன் அவன் தன் தாய் சொன்னதை அப்படியே சொன்னான்.
அங்கு பல இளவரசர்கள், பணக்காரர்களின் புதல்வர்கள் ஆகியோர் சீடர்களாக இருந்தனர். அவர்கள் சிரிக்க ஆரம்பித்தனர்.

ஆனால் அந்த வயதான குரு, “நான் உன்னை என் சீடனாக ஏற்றுக் கொள்கிறேன். உனது தந்தை யாரென்பது பொருட்டல்ல. நீ ஆணித்தரமாகவும், நேர்மையாகவும், பயமில்லாமலும் இருப்பது தான் இங்கு முக்கியமான விஷயம். எந்தவிதமான தர்மசங்கடமும் இல்லாமல் உண்மையை சொல்லும் நேர்மை உன்னிடம் இருப்பதுதான் சிறப்பு. உன் தாய் உனக்கு சரியான பெயர்தான் கொடுத்திருக்கிறாள் சத்யகம் சத்யகம் என்றால் உண்மையை அடைவது மட்டுமே தேடுதலாக கொண்டவன் என்று பொருள். உனக்கு மிக அழகான தாய் கிடைத்திருக்கிறாள், நீ இன்றிலிருந்து சத்யகம் ஜபால் என்று அழைக்கப்படுவாய்.

இங்கு பிராமணர்கள் மட்டுமே சீடர்களாக ஏற்றுக்கொள்ளப் படுவது தான் சம்பிரதாயம். நான் உன்னை ஒரு பிராமணன் என்று பிரகடனப்படுத்துகிறேன். ஏனெனில் பிராமணர்களுக்கு மட்டுமே இந்த உண்மையை ஒத்துக் கொள்ளும் தைரியம் இருக்கும்.” என்றார்.

அவை மிக அழகான நாட்கள். அந்த வயதான குருவின் பெயர் உதாலக்.
சத்யகம் அவருடைய மிக நெருங்கிய அன்பான சீடனாக ஆனான். அவருக்கு தகுதி இருந்தது. அவர் மிகவும் தூய்மையானவராகவும் மிகவும் நிர்மலமானவராகவும் இருந்தார்.

ஆனால் உதாலக்கு சில வரையறைகள் இருந்தன. அவர் கற்றுக் கொடுப்பதில் மிகச் சிறந்தவராக இருந்த போதிலும் அவர் ஞானமடையவில்லை. அதனால் அவர் சத்யகமுக்கு எல்லா சமயநூல்களையும் கற்றுக் கொடுத்தார், அவருக்கு தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தார், ஆனால் அவர் எல்லோரையும் நம்பவைப்பது போல சத்யகம்மை நம்பவைக்கவில்லை. சத்யகம் கேள்வி கேட்பார் என்பதற்காக அல்ல. அவருடைய நிர்மலமான தன்மை அந்த அளவு உண்மையானதாக இருந்தது. அவர், “நான் உனக்கு சொல்லிக் கொடுத்தது எல்லாமே நான் நூல்களில் இருந்து படித்ததுதான். அவை எனக்கு சொந்தமானவை அல்ல. நான் அவற்றை அனுபவப்படவில்லை. அதை நான் வாழ்ந்து பார்த்ததில்லை. இன்னும் உள்ளே காட்டிற்க்குள் வாழும் ஒரு மனிதரை எனக்குத் தெரியும். அவர் மிகவும் அன்பானவர், கருணையானவர், உண்மையே வடிவானவர். நீ அவரிடம் போ.” என்று கூறி சத்யகம்மை அவரிடம் அனுப்பி வைத்தார்.

உதாலக் அவரைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தாரே தவிர அவரை நேரில் பார்த்ததில்லை. உதாலக் மிகப் பிரபலமானவர், சிறந்த பண்டிதர்.......
சத்யகம் அந்த இன்னொருவரிடம் சென்றார். அவர் சத்யகம்முக்கு பல புதிய சமய நூல்களையும், எல்லா வேதங்களையும், இந்த உலகத்தின் பழைமையான நூல்களையும் கற்பித்தார். பல வருடங்களுக்கு பிறகு, “இப்போது உனக்கு அனைத்தும் தெரியும், இனி கற்பதற்கு எதுவும் இல்லை. நீ திரும்பி வீட்டுக்குப் போகலாம்.” என்றார்.

முதலில் சத்யகம் உதாலக்கை காண சென்றார். உதாலக் ஜன்னல் வழியே காட்டிக்குள்ளிலிருந்து வரும் ஒத்தையடிப் பாதையின் வழியே சத்யகம் வருவதை பார்த்தார். அவர் அதிர்ச்சியடைந்தார். சத்யகம்மின் நிர்மலமான தன்மை காணாமல் போயிருந்தது. அதற்கு பதிலாக பெருமை குடியிருந்தது – எல்லோருக்கும் ஆவது போலவே, அவருக்கு இப்போது இந்த உலகத்திலுள்ள தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் தெரியும் என்ற நினைப்பே ஆணவத்தை கொடுத்திருந்தது.

அவர் உள்ளே வந்தார். அவர் உதாலக்கின் பாதங்களை தொட குனியும்போது உதாலக், “எனது பாதங்களில் விழாதே. முதலில் நீ உன்னுடைய நிர்மலமான தன்மையை எங்கே தொலைத்தாய் என எனக்குத் தெரிய வேண்டும். நான் உன்னை தவறான மனிதரிடம் அனுப்பி விட்டேன் போலத் தெரிகிறது” என்றார்.

சத்யகம், “தவறான மனிதரிடமா, அவர் அறிய வேண்டிய அனைத்தையும் எனக்கு கற்றுக் கொடுத்தார் .“ என்று கூறினார்.

உதாலக், “நீ எனது பாதங்களில் விழுவதற்கு முன் நான் உன்னை ஒன்று கேட்க விரும்புகிறேன் – நீ எதையாவது அனுபவப்பட்டாயா அல்லது எல்லாமே வெறும் தகவல்கள் மட்டும்தானா? ஏதாவது நிலைமாற்றம் நிகழ்ந்ததா? உனக்கு தெரிந்திருப்பவை அனைத்தும் உன்னுடையவை என்று கூற முடியுமா?” என்று கேட்டார்.

சத்யகம், “அப்படி எதையும் கூற முடியாது. நான் அறிந்திருப்பவை அனைத்தும் நூல்களில் உள்ளவை மட்டுமே. நான் எதையும் அனுபவப்படவில்லை” என்று கூறினார்.

அப்போது உதாலக், “நீ போன பிறகு வேறொரு மனிதரைப் பற்றி நான் கேள்விப்பட்டேன். நீ அவரிடம் போ. உனக்கு அனுபவப்படாத வரை திரும்பி வராதே. நான் உன்னை அனுப்பும் போது இருந்ததை விட மதிப்பு குறைந்தவனாக திரும்பி வந்திருக்கிறாய். மதிப்பிட முடியாத ஒன்றை நீ இழந்து விட்டாய். அறிவு என்று நீ அழைப்பது கடன் வாங்கப் பட்டதாக இருந்தால் அது உனது அறியாமையை மூடி மறைப்பதாக மட்டுமே இருக்கும். அது உன்னை அறிந்தவனாக ஆக்காது. நான் சொல்லும் இந்த மனிதரிடம் செல், அவரிடம், உண்மையை பற்றி, கடவுளைப் பற்றி, அன்பைப் பற்றி மேலும் அதிக விவரங்கள் பெறுவதற்காக வரவில்லை என்று கூறு. நீ கடவுளை, அன்பை, உண்மையை தெரிந்து கொள்வதற்காக வந்திருக்கிறாய் என்று சொல். உங்களால் இதை செய்ய முடியுமென்றால் நான் இங்கே இருக்கிறேன். இல்லையென்றால் நான் நேரத்தை வீணாக்காமல் வேறு ஒரு குருவை தேடிப் போகிறேன் என்று சொல்” என்று கூறினார்.

சத்யகம் சென்று அப்படியே கூறினார்.

அந்த குரு ஒரு மரத்தடியில் தனது சில சீடர்களுடன் உட்கார்ந்திருந்தார். இந்த கோரிக்கையை கேட்டவுடன் அவர், “அது சாத்தியமானதுதான், ஆனால் நீ வித்தியாசமான ஒன்றை கேட்கிறாய். இங்கே பல சீடர்கள் உள்ளனர். அவர்கள் இன்னும் அதிக விவரமான தகவல்கள் கேட்கின்றனர். இதைப் பற்றி, அதைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். ஆனால் உனக்கு தகவல்கள் சேகரிக்க விருப்பம் இல்லையென்றால், நீ உண்மையை தெரிந்து கொள்வதற்காக எதையும் செய்ய தயார் என்றால் சத்தியத்திற்கான உனது தேடுதல் உன்னையே நீ அர்ப்பணித்துக்கொள்ள தயாராக இருக்குமானால் நான் உனக்காக ஒரு வழி கண்டுபிடிக்கிறேன்”. என்றார்.

சத்யகம், “நான் எனது வாழ்க்கையை அர்ப்பணிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் உண்மையறியாமல் திரும்பி செல்ல என்னால் முடியாது. எனக்கு சதயகம் என்று பெயரிட்ட எனது தாயிடமோ, அல்லது நான் உண்மையை கூறிய ஒரே காரணத்தினாலேயே நான் பிராமணனா இல்லையா என்று கவலைப் படாமல் என்னை ஏற்றுக் கொண்ட எனது குருவிடமோ திரும்பி போக முடியாது. என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.” என்று கேட்டான்.

குரு, “இங்கே நீ பார்க்கும் இந்த பசுக்களை கூட்டிக் கொண்டு உள்ளே காட்டிற்க்குள் சென்று விடு. எந்த மனிதருடனும் தொடர்பு கொள்ள முடியாத வண்ணம் எவ்வளவு அடர்ந்த காட்டிற்க்குள் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் உள்ளே சென்று விடு. நீ மொழியை, வார்த்தைகளை மறக்கவேண்டும் என்பதுதான் காரணம். பசுக்களுடன் வாழ், அவற்றை பாதுகாத்து வா, உனது குழலுடன் விளையாடு, நடனமாடு – ஆனால் வார்த்தைகளை மறந்துவிடு. இந்த பசுக்களின் எண்ணிக்கை ஆயிரம் ஆனவுடன் திரும்பி வா.” என்றார்.

இங்கே இருந்த மற்ற சீடர்களுக்கு என்ன நிகழ்கிறதென்றே புரியவில்லை – ஏனெனில் அங்கு இருந்தது ஒரு டஜன் அல்லது இரண்டு டஜன் பசுக்கள்தான். அவை எப்போது ஆயிரம் பசுக்கள் ஆவது ?

ஆனால் சத்யகம் பசுக்களை கூட்டிக் கொண்டு அடர்ந்த காட்டுக்குள், மனித சஞ்சாரமற்ற இடத்துக்கு, மனித வாடையற்ற இடத்துக்கு சென்றார். முதல் சில தினங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. பசுக்கள் மட்டுமே அவரது தோழமையாக இருந்தன. அவை மிக அமைதியான மக்கள். அவன் தனது புல்லாங்குழலை வாசிப்பான், காட்டில் தனியாக நடனமாடுவான், மரத்தடியில் படுத்து ஓய்வெடுப்பான்.
முதல் சில வருடங்கள் தொடர்ந்து பசுக்களை கணக்கெடுத்து வந்தான். பின் மெது மெதுவாக அதை விட்டு விட்டான். ஏனெனில் அவை ஆயிரமாக மாறுவது இயலாததாக தோன்றியது. மேலும் எப்படி கணக்கெடுப்பது என்பதையும் அவன் மறந்துவிட்டான். மொழி மறைந்துவிட்டது.

வார்த்தைகள் மறைந்துவிட்டன. கணக்கு எடுக்க இயலவில்லை.

இந்த கதை மிகவும் அழகானது.

பசுக்களின் எண்ணிக்கை ஆயிரம் அடைந்தவுடன் பசுக்கள் கவலைப்பட ஆரம்பித்தன. ஏனெனில் அவைகள் வீடு செல்ல விரும்பின. இவனுக்கு எப்படி எண்ணுவது என்பது மறந்து போய் விட்டது. இறுதியில் பசுக்கள், “நாம் இவனுக்கு சொல்லியாக வேண்டும். இல்லாவிடில் இந்த தனிமையான வனமே நமது கல்லறையாகிவிடும்.” என்று முடிவெடுத்தன.

அதனால் ஒருநாள் பசுக்கள் சத்யகம்மை பிடித்து நிறுத்தி, “இங்கே பார், சத்யகம், நாங்கள் இப்போது ஆயிரம் பசுக்களாகி விட்டோம். நாம் இப்போது வீடு திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என்றன.

சத்யகம், “உங்களுக்கு மிகவும் நன்றி. நீங்கள் இப்போது என்னிடம் இதை சொல்லியிராவிட்டால்........ நான் வீட்டை பற்றியும் திரும்பி போவது பற்றியும் மறந்து விட்டேன். ஒவ்வொரு கணமும் மிகவும் அழகானதாக..... பரவசமாக இருக்கிறது. இந்த மௌனத்தில் மலர்கள் பூச்சொரிகின்றன. நான் எல்லாவற்றையும் மறந்து விட்டேன். நான் யார் என்பதையும் நான் எதற்காக இங்கே வந்தேன் என்பதையும் நான் மறந்து விட்டேன். இங்கே எல்லாமும் முடிவடைந்துவிட்டது. புல்லாங்குழல் வாசிப்பது மட்டுமே போதும். மரத்தடியில் ஓய்வெடுப்பது மட்டுமே போதும், இந்த அழகான பசுக்கள் சுற்றிலும் அமைதியாக இருப்பதை பார்ப்பது மட்டுமே மிக அருமையானது. ஆனால் நீங்கள் வற்புறுத்தினால், நாம் திரும்பிப் போவோம்.” என்றான்.

அந்த குருவின் சீடர்கள் சத்யகம் ஆயிரம் பசுக்களோடு திரும்பி வருவதை பார்த்தனர். அவர்கள் குருவிடம், “அவன் ஆயிரம் பசுக்களோடு திரும்பி வருவான் என நாங்கள் நினைக்கவேயில்லை. அவன் வந்து விட்டான். நாங்கள் எண்ணி விட்டோம் அவை மிகச் சரியாக ஆயிரம் பசுக்கள் உள்ளன. அவன் வருகிறான்.” என்றனர்.

அவன் வந்து நின்றான்........பசுக் கூட்டத்தின் நடுவே நின்றான்.

குரு தனது சீடர்களிடம், “நீங்கள் தவறாக எண்ணியிருக்கிறீர்கள். அங்கே ஆயிரத்தோரு பசுக்கள் உள்ளன. நீங்கள் சத்யகம்மை எண்ண மறந்து விட்டீர்கள். அவன் உங்களது உலகத்தை விட்டு தாண்டி போய் விட்டான். அவன் நிர்மலமான தன்மையினுள், மௌனத்தினுள், அறிவுக்கெட்டாதனுள் நுழைந்து விட்டான். அவன் பசுக்கள் எப்படி நிற்கிறதோ அங்கேயே நிற்கிறான் பாருங்கள்.” என்றார்.

குரு, “சத்யகம், நீ வெளியே வரலாம். இப்போது நீ உன்னை இங்கே அனுப்பிய உனது குருவிடம் செல்லலாம். அவர் மிகவும் வயதானவர், அவர் உன் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கக் கூடும். உன் தாய் உனக்காக காத்துக் கொண்டிருப்பாள்.” என்றார்.

சத்யகம் தனது முதல் ஆசிரியரிடம் – சத்யகம் ஒரு தகவல் களஞ்சியமாக மட்டுமே மாறியதால் தனது வெகுளித்தனத்தை தொலைத்து, தனது நிலையிலிருந்து கீழிறங்கி ஒரு பிராமணனாக இல்லாமல் போய் விட்டார் எனக் கூறி தனது பாதத்தில் விழக் கூடாது என தடுத்த உதாலக்கிடம் - திரும்பி வந்தார். இவர் வருவதை ஜன்னல் வழியாக பார்த்த உதாலக் பின் வாசல் வழியாக ஓடிப் போய் விட்டார். ஏனெனில் இப்போது சத்யகம் தனது பாதங்களில் விழ அனுமதிக்க கூடாது. தான்தான் அவர் பாதங்களில் விழ வேண்டும். ஏனெனில் உதாலக் இப்போது வெறும் பண்டிட் மட்டுமே, ஆனால் சத்யகம் இப்போது விழிப்புணர்வு பெற்று அறிந்தவராகி விட்டார்.

உதாலக் வீட்டிலிருந்து தப்பிப் போய் விட்டார். “என்னால் அவரை சந்திக்க முடியாது. நான் வெட்கமடைகிறேன். உதாலக் இறந்து போய்விட்டார். அவர் உன்னை நினைத்துக் கொண்டே இறந்தார் என சத்யகம்மிடம் சொல்லி விடு. அவரை அவருடைய தாயிடம் போக சொல்” என தனது மனைவியிடம் சொல்ல சொல்லிவிட்டு போய் விட்டார். வெவ்வேறு விதமான மக்கள் இருக்கிறார்கள்.

சத்யகம் வீடு திரும்பினார்.

தாய்க்கு மிகவும் வயதாகி விட்டிருந்தது. ஆனால் அவள் காத்துக் கொண்டே...........இருந்தாள். “உண்மை எப்போதும் ஜெயிக்கும் என்பதை நீ நிரூபித்துவிட்டாய், சத்யகம். பிராமணன் என்பவன் பிறப்பது இல்லை, பிராமணன் என்பது அடையவேண்டிய ஒரு குணாதிசியம் என்பதை நீ நிரூபித்துவிட்டாய். ஒவ்வெருவரும் பிறப்பால் சூத்திரர்தான், ஏனெனில் ஒவ்வொருவரும் பிறப்பில் ஒன்றானவரே. ஒருவன் தன்னை தூய்மைப் படுத்திக் கொள்வதனாலும், ஒருமை படுத்திக் கொள்வதனாலும், மையம் மற்றும் ஞானத்தை அடைவதனாலும், தான் ஒரு பிராமணன் என்பதை நிரூபிக்கவேண்டும். பிராமண குடும்பத்தில் பிறப்பதால் மட்டுமே அவன் பிராமணன் ஆவதில்லை.” என்றாள்.

Source : BEYOND ENLIGHTENMENT, che - 25

No comments: