Monday, April 25, 2011

மலர் 3 இணைய இதழ் 5 11 டிசம்பர் 2010

மலர் 3 இணைய இதழ் 5 11 டிசம்பர் 2010

ஓஷோ சாஸ்வதம் செய்தி

அவினாசி 2 கோவை NH – 47-ல், கந்தம்பாளையம் சாலையில் உள்ள ஓஷோ சாஸ்வதம் மையத்தில் இந்த மாதம், அதாவது டிசம்பர் மாதம் 25 ந் தேதி மாலை சன்னியாஸ் கொண்டாட்டமும் அதை தொடர்ந்து 26ந் தேதி முழுவதும் தியானங்களும் நடக்க இருப்பதால் விரும்பும் அன்பர்கள் கலந்து கொள்ளலாம். விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

சென்ற மாதம் திடீரென கூடிய அன்பர்கள் எட்டு பேர் கலந்துகொண்ட ‘ உள்ளுக்குள் உள்ளது யார் ‘ மிகச் சிறப்பாக நடந்தேறியது. எந்த வித முன்னறிவிப்பும் இன்றி நிகழ்ந்தது இந்த குழு தியான முகாம். இது மிகப் பெரிய அளவில் உதவியதை கலந்து கொண்ட அனைவரும் உணர்ந்தனர்.

டிசம்பர் 11, ஓஷோவின் பிறந்தநாள், திருப்பூரில் உள்ள ஓஷோ சாஸ்வதம் மையத்தில் மாலை 6 மணிக்குத் தொடங்குகிறது.


தலையங்கம்

அன்பு நண்பர்களே,

வணக்கமும் வாழ்த்தும்.

இந்த தலையங்கத்தில் நான்கு விஷயங்களை எழுதப் போகிறேன்.

நான் ஓஷோவின் பேச்சுக்களை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். ஆனால் குழப்பமாக இருக்கிறது என்று ஒரு நண்பர் கேட்டார்.

எனது பதில் ஒன்றே ஒன்றுதான். ஓஷோவின் பேச்சு முழுவதும் வற்புறுத்துவது ஒன்றே ஒன்றைத்தான். அது ‘பிரபஞ்சத்தன்ணுணர்வை அடை’ என்பதுதான். பிரபஞ்சத்தன்ணுணர்வை அடையும் வரை போய் கொண்டே இரு.

எப்போதும் பிரபஞ்ச இணைப்புணர்விலிருந்தே நீ செயல்பட வேண்டும். உனது உடல் ஏற்கனவே அப்படித்தான் செயல்படுகிறது. உனது மனமே பிளவு. உனது தன்னுணர்வு உனது உடலைப் போல பிரபஞ்சத் தன்ணுணர்வினுடன் இணைந்து செயல்படுவதே. உனது உடல் தனியாகத் தெரிகிறது பார்ப்பதற்கு. ஆனால் அது தனியல்ல, நீ சுவாசிக்கிறாய். அதுதான் உன் உயிரின் ஆதாரம். சுவாசம் காற்றுமண்டலத்தை சேர்ந்தது. காற்று மண்டலம் இல்லாவிட்டால் உன் சுவாசம் இல்லை. அப்படியானால் உன் உடல் காற்று மண்டலத்தின் ஒரு பாகம்தானே! அது போலவே உனது உடல் நீரின் பாகமாகவும் நிலத்தின் பாகமாகவும் இருக்கிறது. இதை தனி என்று நினைப்பது அறியாமையே. அது போலவே ஒருவரின் தன்னுணர்வும் தனியானது அல்ல. அப்படி நினைப்பது அறியாமை. அந்த அடிப்படை அறியாமையிலிருந்து பிறப்பதுதான் ‘நான்’ என்ற மாயை. அதைச்சுற்றி அதைக் காப்பாற்ற இயங்கும் சக்தி ஓட்டமே மனம்.

ஆகவே ஓஷோ எங்கு தொட்டாலும், எதைப் பேசினாலும், அது செக்ஸ், அன்பு, நட்பு, தியானம், செயல் என்று எதுவாக இருந்தாலும், இந்த வாழ்க்கையின் உணர்வுகள் முழுவதையும் பிரபஞ்சத்தன்ணுணர்வு வரை கொண்டு செல்ல சொல்கிறார். அதற்கு பாதை போட்டுக் காட்டுவதே அவரது பேச்சுக்களும், விளக்கங்களும். அதோடு அப்படி பிரபஞ்சத்தன்ணுணர்வை அடைய தடையாக இருக்கும் உணர்வுகளை தூக்கியெறிந்துவிடச் சொல்கிறார். அதுதான் அவரது கெத்தாரிஸிஸ். மேலும் அவர் தனது புது வழியென – பிரபஞ்சத்தன்ணுணர்வு அடையக் – கூறுவது ‘ தன்னுணர்வோடு உன்னைக் கொண்டாடு ‘ என்பதையே. அப்படி கொண்டாடும்போது பிரபஞ்சவுணர்வை இயல்பாக எட்டுவாய் என்கிறார். ஆகவே 3 விஷயங்கள்:

1. பிரபஞ்சத்தன்ணுணர்வை எட்டு
2. அதற்கு தடையானவற்றை அகற்று
3. அதற்கு வழியாக தன்னுணர்வோடு உன்னைக் கொண்டாடு

சுருக்கமாக இந்த சாரத்தை புரிந்து கொண்டால் ஓஷோவை எங்கு தொட்டாலும் அவர் சுட்டிக்காட்டுவதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

2. மற்றொரு முக்கிய விஷயமாக நான் கூற விரும்பும் ஓஷோவின் செய்தி சீரியஸாக இருக்காதே. கடுகடுப்போடு இருக்காதே. கடுகடுப்புதான் ஈகோ, இறுக்கம், பதட்டம். இது மனிதனின் அடிப்படை நோயாக இருக்கிறது. எவ்வளவு நல்ல விஷயத்தையும் எவ்வளவு ஆழமான நட்பையும், அன்பையும், புரிதலையும் கூட இது ஒரு சொட்டு விஷமாக கெடுத்து விடுகிறது. ஆனந்தமான சூழலை அசிங்கமாக்கி விடுகிறது. ஓஷோ இதை மனிதனைப் பிடித்துள்ள ஒரு கொடிய நோயாகச் பேசுகிறார்.

ஆகவே எப்போதும் இந்த கடுகடுப்பில் விழுந்துவிடாமல் ஜாக்கிரதையாக இருங்கள். அதுவே உங்கள் இதயத்தைத் திறக்கும். வாழ்வைப் பிடித்து வைத்துக் கொள்ள முடியாது. வாழ்தலில் எதுவும் நிரந்தரமில்லை. ஆகவே கடுப்பும் இறுக்கமும் கொள்வதில் என்ன பயன்? லேசாக இருங்கள்! கிடைக்கும் கணத்தை வாழ்ந்து விடுங்கள். அது மட்டுமே புத்திசாலித்தனம்! பிடித்து வைத்துக் கொள்ள முயல்வதில் பிறப்பதுதான் கடுகடுப்பு. இழந்துவிட மனமில்லாத பேராசை, உரிமை கொள்வதில் ஏற்படும் படபடப்புதான் சீரியஸ்தன்மை, கடுகடுப்பு.

ஆகவே நண்பர்களே! எந்த சூழலிலும் கடுகடுப்பாகாதீர்கள். பதிலாக வாழுங்கள்! திறந்த இதயத்துடன் ஆடுங்கள்! திறந்த கைகளுக்கு வானமே எல்லை. மூடிய கைகளுக்குள் எவ்வளவை அடக்கி வைக்க முடியும்? எவ்வளவு நாட்களுக்கு மூடிய கையுடன் வாழ முடியும்? வாழ்க்கை ஓடிக் கொண்டிருப்பது! பட்டினத்தார், ‘ வாழ்வை குடம் கவிழ் நீர் ஓட்டமென்றேயிரு நெஞ்சே உனக்கு உபதேசமிதே ‘ என்று கூறுவதே உண்மை, சத்தியம்.

கடுகடுப்புக்கு இடம் தராமல் இறுக்கமும் பதட்டமும் இன்றி இருந்து பாருங்கள். வாழ்வு எவ்வளவு இனிய தருணங்களைக் கொண்டிருக்கிறது என்பது புரியும். இந்த வாழ்வே இனிக்கும். இருப்பதிலேயே கிடைப்பதிலேயே மகிழ்வு பிறக்கும். கொண்டாட முடியும். இல்லாமல் கடுகடுப்போடு தியானம் செய்தால்கூட பலனில்லை. இந்த நோய் மிக ஆழம் வரை வேரோடிக் கிடக்கிறது. இதுவே இலக்கும் பொறாமையும் போட்டியும் சூழ்ச்சியும் என கால்வாய் வெட்டிப் பாய்கிறது. ஆகவே இதைக் கண்டு பிடித்து உங்கள் இருப்பிலிருந்து எடுத்து விடுங்கள். இருப்பதை கொண்டாடுவது அப்போதுதான் சாத்தியம். அங்கிருந்துதான் வளர்ச்சியும் ஆரம்பமாகும்.

3. ஓஷோ விளையாட்டுத்தன்மையோடு இருக்கச் சொல்கிறார். இது உண்மை, மிக உண்மை. ஆனால் பலர் விளையாட்டுத்தன்மையோடு இருப்பதை தன்னுணர்வற்றும் பொறுப்பற்றும் இருப்பதோடு பொருத்திக் கொள்வதை நான் பார்த்திருக்கிறேன். ஆகவேதான் இதை எழுதுகிறேன்.

ஓஷோ விளையாட்டுத்தன்மையோடு செயல்படு, தியானம் செய் என்று கூறுவதன் பொருள், நாம் ஒரு விளையாட்டில் ஈடுபடும்போது உள்ள மனநிலையை குறிப்பதுதான். விளையாட்டில் ஈடுபடும்போது மகிழ்ச்சி கொள்கிறோம். முழுமையாக அதில் குதிக்கிறோம். விளையாட்டில் நேரம் போவதே தெரிவதில்லை. மனம் மறந்து போகிறது. உடல் ஆனந்த நடனமாடுகிறது. மேலும் விளையாட்டிலேயே நாம் மூழ்கி விடுகிறோம். ‘ நான் ‘ காணாமல் போய் அந்த விளையாடும் செயலே அங்கிருக்கிறது.

மாறாக விளையாட்டை எப்படி நமது மனம் நினைத்துத்பார்க்கிறது என்ற மனநிலையில் வாழச் சொல்வதில்லை ஓஷோ. மனதிற்கு எப்போதும் சீரியஸ்தான் பிடிக்கும். விளையாட்டாய் ஈடுபடுவது வேஸ்ட், அது ஒரு பொழுதுபோக்குதானே தவிர வாழ்க்கையில்லை, இப்படியெல்லாம் நினைப்பது மனம். இந்த மனத்தோடு எதையும் செய்யச் சொல்வதில்லை ஓஷோ.

அவர் சொல்வது மனம் கடந்து விளையாட்டில் குதூகலிக்கும் நிலை. ‘ நான் ‘ என்பதை மறந்து உடலின் செயல்பாட்டில் மகிழ்ச்சி கொள்ளும் நிலை.

இதற்கு நமது முழு சக்தியையும் கொடுத்து விளையாட வேண்டும். முடிவு பற்றிய பிடிப்பு எதுவும் அற்று, தன்னைக் கொண்டாடும் வாய்ப்பாக, விளையாட்டாக ஈடுபட வேண்டும்.

பொறுப்பற்ற, சீரியஸ் அல்லாத என்ற மனதின் பார்வைப்படி அணுகிவிடக்கூடாது. அப்போது நமது முழு சக்தியையும் நாம் கொடுக்க மாட்டோம். மாறாக மனம் பொழுதுபோக்காக போக்குக் காட்டி நம்மை ஏமாற்றி விடும். ஆகவே ஜாக்கிரதையாக நாம் ஓஷோ கூறுவதை உணர்ந்து கொள்வது அவசியம்.

4 அதே போல இன்னொரு விஷயம் நம்மை நாம் உடல், மனம், இதயம் எனப் பிரித்து உணர்கிறோம். இவைகள் ஒன்றோடொன்று இணைந்த ஒரே உயிர்தான் என்றாலும் தனித்தனி செயல்பாடுகள் உள்ளன. இதைக் குறித்து நாம் கொண்டிருக்கும் பழக்கங்கள், கட்டுக்கோப்புகள் அறியாச் செயல்கள் நம்மை மிகவும் பாதிக்கின்றன. வாழ்க்கையையே சிக்கலாக்கி விடுகின்றன.

பிரபஞ்சத்தன்ணுணர்வடைவதற்கான அல்லது அந்த பிரபஞ்சத்தன்ணுணர்வு வரை நமது தன்னுணர்வைக் கூர்மைப் படுத்துவதற்கான பாதையில் செல்லும் நாட்டம் கொண்ட நாம், இந்த மூன்றையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.


இதில் முதலில் உடல்! இதை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும்? லயத்தில் இசை பிறக்க சரியாக சுருதி கூட்டப்படும் கம்பியைப் போல, எந்த வித்திலும் ஒரு பக்கமாக சாயாமல் வைத்துக் கொள்ள வேண்டும். பட்டினி கிடப்பதும் தவறு! பசியின்றி விழுங்குவதும் தவறு! அதிக தூக்கமும் தவறு! தூக்கமின்மையும் தவறு! மாடு போல உழைப்பதும் தவறு! டிவி நேயராகி விடுவதும் தவறு! அப்படி உடலை ஒரு இயந்திரத்தை வைத்துப் போற்றுவது போல சரியாக்க் காப்பாற்ற வேண்டும்.

மனம்! அதை சந்தையில் மட்டும் பயன்படுத்துங்கள். வியாபாரத்தில் மட்டும், சமூகத் தேவைகளுக்காக மட்டும், இயக்குங்கள். நண்பரிடம், மனைவியிடம், குழந்தையிடம், இசை கேட்கையில், நடமாடுகையில், ஒரு ரோஜாவை, ஒரு அருவியை, மலையை, சூரிய உதயத்தைப் பார்க்கையில் உள்ளே கொண்டு வராதீர்கள். அது வெறும் ஒரு சமூக பாதுகாப்பு கருவியாக இருக்கட்டும்! அது ஒரு நல்ல வேலைக்காரன், மிக மோசமான எஜமானன் என்று ஓஷோ கூறுவதை நினைவில் கொள்ளுங்கள்.

இதயம்! இதுதான் நாம் வாழ வேண்டிய இடம். மனிதனின் இருப்பிடம்! நமது இருப்பிற்குச் செல்ல பிரபஞ்சவுணர்வோடு நம்மை சேர்க்கக் கூடிய இடம். அதுதான் நமது எஜமானனாக இருக்க வேண்டும். இதயத்துக்கு உடலும் மனமும் உண்மையுள்ள வேலைக்காரனாக உதவ வேண்டும். இதயம் அன்பு வழி! இதயத்தின் மொழி அன்பு! இதயம் அன்பு மயமானது! அகங்காரமற்றது! தவறுகளை மன்னிப்பது! காயங்களை குணப்படுத்துவது! சுமையற்றது! பறக்கவும், பரவவும், விரியவும், வல்லமை கொண்டது. உணர்வின் ஆட்சி இங்கு! இதிலிருந்து பிறக்கும் எதுவும் பூமியை வளமாக்கும். அழகாக்கும். மெருகேற்றும்! யுத்தமும் அரசியலும் இங்கு இல்லை. தவறு கண்டு தட்டிக் கேட்பதும், கொடுமை கண்டு கொந்தளிப்பதும் கூட இதுதான்! இது உணர்வுக் கடல். மேலே ஏற்படும் கொந்தளிப்புகள் சிறிது நேரமே இருக்கும். பிறகு மாறிப் போகும். உள்ளே ஆழத்தில் அமைதியும் சாந்தமும் தாய்மையும் எப்போதுமிருக்கும். இது மனிதனின் சாத்தியம்

நாம் பிறப்பது இங்குதான்! மனம் எஜமானனாவதில்தான் நம் வாழ்வு தடம் புரள்கிறது. ஆகவே இதயம் திறந்து வாழுங்கள். அதற்காக இழப்பதெல்லாம் மதிப்பற்றவையே! வாழ்ந்து பெறப்போவது இருப்புநிலை.

சமயம் வாய்க்கும்தெல்லாம் இதயம் திறக்க கற்றுக் கொள்வதிலிருந்து தியானத்தை ஆரம்பியுங்கள்.

அன்பு,
சித்.

கவிதைப் பகுதி

காதலி

அன்பைக் கற்றுக் கொள்ள அன்னையிடம் தவறவிட்டவர்கள்,
காதலியிடம் கற்றுக்கொள்ளுங்கள்......

ஆம் நண்பா
காதலி முக்கியமல்ல,
காதலிப்பது முக்கியம்,
கல்யாணம் முக்கியமல்ல,
காதல் சுவை முக்கியம்.
இன்னும் சொல்லப்போனால்......
காதலின் சுவை பிரிவில்தான்
நிலைத்து நிற்கும்.
கல்யாணம் செய்து காப்பாற்றிக் கொள்வது
மிகவும் சிரமம்.
எனவே நண்பா
காதல் கொள் அன்பின் அரவணைப்பைப் பார்
உன்னுள் ஊறும் அன்பை உணர்
அதன்பின்.....
அனைவரையும் அனைத்தையும் அன்பு செய்
அப்போது உன் வாழ்வுக்குப் பிறக்கும்......ஓர் அர்த்தம்
ஓர் ஆனந்தம் ஓர் சுவை ஓர் இருப்பு.


அன்பு உலகம்

பூட்டு இல்லாத பீரோ,
தாழ்ப்பாள் அற்ற கதவு,
விளக்குப் போடாத வீதி,
போலீஸ் இல்லாத சமூகம்,
சட்டம் இயற்றாத ஆட்சிக் குழு,
ராணுவம் அற்ற நாடு,
அணுகுண்டு இல்லாத உலகம்,
பிரிவினை கொள்ளாத பக்தன்,
போட்டியிடாத வியாபாரிகள்,
பொறாமைப்படாத பெண்கள்,
காமம் களைந்த ஆண்கள்,
பாசவலை பின்னாத குடும்பம்,
அகந்தை அற்ற மனிதன்,
அடடா.......இந்த அன்பு உலகம்......
அனைவரும் பகிர்ந்துகொள்ளத் துடிக்கும் இந்த ஆனந்தப்பூங்கா,
அன்பில் விளைந்த அமிர்த யுகம்.

நண்பர்களே!
இது இன்றும் சாத்தியம்!
இங்கு இப்போதே சாத்தியம்!
இதற்கு தேவையெல்லாம் இதுதான்,
இதயத்தை மலர விடுங்கள்!

மெளனத்தில் விளைந்த முத்துகள் – ஓஷோ

நட்புணர்வு

நட்புணர்வு என்பது யாரைக் குறித்துமான, யாரை நோக்கியுமான அன்பு அல்ல. அது பேச்சாலோ அல்லது வேறு விதத்திலோ செய்துகொண்ட எந்த ஒப்பந்தமும் அல்ல. அது ஒருதனிநபருக்கும் மற்றொரு தனிநபருக்கும் இடையே ஆனதல்ல. மாறாக அது ஒரு தனிநபருக்கும் முழு இயற்கைக்குமானது. மேலும் அதில் மரங்களும் விலங்குகளும் நதிகளும் மலைகளும் விண்மீன்களும் அடங்கும். எல்லாமே நட்புணர்வுக்குள் அடங்கி விடுகிறது.

உனது மௌனம் வளர்வதைப் போலவே உனது நட்புணர்வும் வளரும், உனது அன்பும் நேசமும் பிரியமும் வளரும்.

பொறாமை மறையும்போது அங்கு ஆழமான நட்புணர்வு மலரும்.

வாழ்வு ஒரு கண்ணாடி, அதனுடன் நட்புணர்வு கொள் – வாழ்வு அனைத்தும் நட்புணர்வையே பிரதிபலிக்கும்.

நட்பும், நட்புணர்வும் அன்பின் மிக சிறந்த நறுமணமாகும்.

மனதுடன் நட்பு கொள், அதை ஆழ்ந்த நட்புணர்வுடன் கவனி.

நட்புணர்வு எதையும் எதிர்பார்ப்பதில்லை, அது எந்த விதத்திலும் கட்டாயப்படுத்துவதில்லை.

கவனித்தல் [கவனம்]

உன்னுடைய எண்ணங்களுக்கு சக்தி கொடுக்காதே, ஒரு கவனிப்பவனாக மட்டுமே, ஒரு சாட்சியாக மட்டுமே இரு – தொடர்பற்றவனாக, தொலைவில் இருப்பவனாக, வேறுபட்டவனாக இரு. எண்ணங்களை வெறுமனே பார்! அதனுடன் எந்த வகையிலும் ஈடுபாடு கொள்ளாதே, அதனுடன் இணைந்தோ அதற்கு எதிராகவோ இருக்காதே! ஒரு கவனிப்பவனாக மட்டுமே இரு! மன ஓட்டம் நிகழட்டும், ஓரத்தில் நின்று அதை வேடிக்கை பார்! அதனுடன் நீ எந்த தொடர்பும் கொள்ளாமல், அதனால் எந்த பாதிப்பும் அடையாமல், தள்ளி நின்று பார்.

எதுவும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்து என்ன நிகழ்ந்தாலும் கவனி.

உன் உள்ளத்தில் என்ன உணர்வுகள் வந்தாலும் ஒரு கவனிப்பவனாக மட்டுமே இருந்து கவனி.

ஆன்மீகத்தின் எளிய ரகசியமே இதுதான், ஒரு சாட்சியாக இரு!

மனதை விட்டுவிடு, கவனிப்பவனில் மேலும் மேலும் மையம் கொள்.

கவனிப்பவனில் நீ மையம் கொண்டிருந்தால் நடப்பவை யாவும் கடந்து செல்பவை மட்டுமே.

முழுமையான சாட்சிபாவம் பெற, முழுமையான கவனிப்பவனாக மாற சிறிதுகாலம் பிடிக்கும், பொறுத்திரு.

வாழ்க்கை

வாழ்வை பருகுபவனாக, இயற்கையின் சாற்றை பருகுபவனாக, குடிகாரனைப் போல இரு. தூங்குமூஞ்சியாக இருக்காதே, ஒரு தூங்குமுஞ்சி இறந்தவனே! வாழ்வின் ரசத்தை பருகு, அது கவிதை ரசமும் அன்பு மயமும் அளவுகடந்த சாறும் கொண்டது. நீ எந்த வினாடியும் வசந்தத்தை கொண்டு வரமுடியும். வசந்தத்துக்கு ஒரு அழைப்பு விடு! சூரியனும் காற்றும் மழையும் உன்னுள் நுழைய அனுமதி.

வாழ்க்கை ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டதல்ல, அதிலும் குறிப்பாக மனித இனத்துக்கு அறவே கிடையாது.

நீ எதைச் செய்தாலும் வாழ்க்கை அதுவாகவேதான் இருக்கும் என்பதை புரிந்து கொள்.

வாழ்க்கை தனிப்பட்ட அர்த்தம் எதுவும் கொண்டதல்ல, ஆடு, பாடு, அனுபவி, ஆனந்தப்படு, கொண்டாடு!

வாழ்க்கைக்கு எல்லைகளோ, வரையறைகளோ கிடையாது, அது எப்போதும் எல்லாவற்றையும் கடந்து செல்லும்.

வாழ்க்கை ஒரு நம்பிக்கையல்ல, அது உண்மைக்கான ஆழமான தேடல்.

வாழ்க்கை ஒரு சாகச பயணம், வாழ்க்கை ஒரு தொடர்ந்த தேடல்தான்!


ஓஷோ வீடியோ

1. Osho : I Respect Money

2. Osho : Bringingup Children

3. Osho : About Drugs


தியான யுக்திகள்

தியான யுக்தி – 1

அன்பை வெளிக்காட்டுதல்

இதயம் தூங்கிக் கொண்டிருக்கிறது, நமக்கு வெறுப்பை மட்டுமே வெளிக்காட்ட சொல்லித் தரப்பட்டிருக்கிறது. நாம் அன்பில் துடிக்கும்போது மட்டுமே நாம் உண்மையிலேயே வாழ்கிறோம், முழுமையாக வாழ்கிறோம்.

அதனால் அதைப்பற்றி விழிப்புணர்வு கொள், மேலும் மேலும் விழிப்புணர்வு அடைய அடைய அதிக அளவு அன்பை உணர்வாய்.

உனது நண்பனின் கரங்களை பிடித்துக் கொண்டிருக்கும்போது, அதை மிகவும் விழிப்போடு பிடி. உனது கரம் கதகதப்பை வெளிப்படுத்துகிறதா இல்லையா என்று பார்.
கதகதப்பை வெளிப்படுத்த வில்லையானால் அங்கு சக்தி தொடர்பு இருக்காது, சக்தி மாற்றம் இருக்காது. உள்ளே ஆழத்தில் சக்தி பாய்ந்தோடுகிறதா இல்லையா என்று பார். சக்தி வெளிப்பட உதவி செய். அங்கு சக்தியை கொண்டுவா, ஆரம்பத்தில் அது ஒரு கற்பனையான செயலாக இருக்கும், ஆனால் சக்தி கற்பனையை தொடர்ந்து வரும். கரம் கதகதப்போடும் வரவேற்பதாகவும் இருப்பதாக கற்பனை செய் – மிகப் பெரிய மாற்றம் நிகழ்வதை நீயே கண்கூடாக பார்ப்பாய்.

யாரையாவது பார்க்கும்போது, உனது அன்பின் மூலமாக பார், உனது கண்கள் மூலமாக அன்பை கொட்டு, நடக்கும்போது சுற்றிலும் அன்பை பரப்பிக் கொண்டே நட. ஆரம்பத்தில் அது கற்பனையாக மட்டுமே இருக்கும். ஒரே மாதத்தில் அது உண்மையாகிவிடும். உன்னை அன்பானவனாக, கதகதப்பானவனாக, உன்னருகில் இருப்பதே மிகவும் நன்றாக இருப்பதாக, மற்றவர்கள் உணர ஆரம்பிப்பர். ஒரு நல்ல இருத்தல் எழுகிறது.

அன்பை பற்றி மேலும் அதிக உணர்வடை, அன்பை மேலும் அதிகமாக வெளிப்ப்படுத்து.

Blessed Are the Ignorant

தியான யுக்தி – 2

மேலும் அதிக நேசமாக இருத்தல்

நேசத்திலிருந்து சந்தோஷம் பிறக்கிறது. அதுதான் ஒரே சந்தோஷம். நீ எப்போதெல்லாம் நேசிக்கிறாயோ, அப்போதெல்லாம் நீ சந்தோஷமாக இருக்கிறாய். எப்போதெல்லாம் நேசமாக இருக்க முடிவதில்லையோ, அப்போதெல்லாம் நீ சந்தோஷமாக இருக்க முடிவதில்லை. சந்தோஷம் நேசத்தின் விளைவு, நேசத்தின் நிழல். அது நேசத்தை பின்தொடரும். நீ மேலும் மேலும் நேசமாக இருக்க இருக்க நீ மேலும் மேலும் சந்தோஷப்படுவாய்.

உன்னுடைய நேசம் திரும்ப வருகிறதா இல்லையா என்பதைப் பற்றி கவலைப்படாதே. அது முக்கியமல்ல. அது திரும்ப வருகிறதோ இல்லையோ, மற்றவர்கள் பெற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நீ நேசித்தால் சந்தோஷம் நேசத்தை தானாகவே பின்தொடரும்.

நீ சந்தோஷமாயிருப்பாய், அதுவே போதும். ஒருவர் எதிர்பார்ப்பதை விட போதும். அதுதான் நேசத்தின் அழகு – அதன் விளைவு – அதன் அர்த்தம் - அது அடுத்தவரின் எதிர்விளைவை பொறுத்ததல்ல, அது முழுமையாக உன்னுடையது.

மக்கள் எப்போதும் திரும்ப எதையாவது எதிர்பார்கிறார்கள். அவர்களது நேசம் நிபந்தனைக்குரியது. அவர்கள் என்னை சந்தோஷப்படுத்து, பின் நான் உன்னை நேசிக்கிறேன் என்கின்றனர். அவர்களது நேசத்தில் கட்டுப்பாடு உள்ளது, அதில் பேரம் உள்ளது. அவர்கள் முழுமையான குருடர்களாக உள்ளனர். நேசிப்பதன் மூலம் சநேதோஷம் தானாகவே மலரும் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. அது ஒரு தொடரும் பின்விளைவு. அதனால் நேசி, நீ யாரை அல்லது எதை நேசிக்கிறாய் என்பது முக்கியமல்ல – பூனை, நாய், மரம், பாறை எதுவாக இருந்தாலும் சரி, ஒரு பாறையின் அருகில் உட்கார்ந்து அதை நேசி! அதனுடன் பேசு! அதை முத்தமிடு.

அந்த பாறை மீது படுத்துக்கொள். அந்த பாறையுடன் ஒன்றாக உணர்ந்து பார்! திடீரென ஒரு சக்திபிரவாகம், ஒரு சக்தி வெள்ளம் வருவதை உணர்வாய். நீ அளவற்ற மகிழ்ச்சியடைவாய். அந்தப் பாறை திரும்ப எதுவும் கொடுக்காமல் இருக்கலாம், கொடுக்கலாம் – ஆனால் அது முக்கியமல்ல! நீ நேசிப்பதன் மூலம் நீ மகிழ்ச்சியடைகிறாய்.

யார் நேசிக்கிறார்களோ அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். ஒருமுறை உனக்கு இந்த சாவி கிடைத்துவிட்டால், உன்னால் இருபத்திநான்கு மணி நேரமும் சநேதோஷமாக இருக்க முடியும். நீ இருபத்திநான்கு மணி நேரமும் நேசமாக இருந்தால் பின் நேசிக்க பொருளை தேட மாட்டாய். மேலும் மேலும் நீ விடுதலை பெற்றவனாக இருப்பாய். ஏனெனில் உன்னால் நேசிக்க முடியும் என்பதை மேலும் மேலும் அதிகமாக அறிந்து கொள்வாய் – அங்கு யாரும் இல்லையென்றால் கூட உன்னைச் சுற்றியுள்ள அந்த வெறுமையை நேசிப்பாய். உன்னுடைய அறையில் தனிமையில் அமர்ந்திருக்கும்போதுகூட அந்த அறையை உனது அன்பால் நிறைத்துவிடுவாய். நீ சிறையில் இருக்கலாம், நீ அதை கோவிலாக ஒரு வினாடிக்குள் மாற்றி விடுவாய். நீ அதை நேசத்தால் நிறைக்கும்போது அது ஒரு சிறையாக இருக்காது!

Dance Your Way To God

தியான யுக்தி 3

உனது நேசிக்கும் திறனை வளப்படுத்திக்கொள்

மரங்கள், பாறைகள், அன்னியர்கள், மக்கள், நண்பர்கள் ஆகிய எல்லோரையும் நேசிக்க ஆரம்பி.

ஒரு பாறை மேல் உட்கார்ந்து அதை நீ காதலிப்பதுபோல உணர்ந்து தொட்டுப்பார்! நீ உடனடியாக பதில்விளைவை உணர்வாய்! ஒரு மரத்தை ஆழ்ந்த நேசத்துடன் தொட்டுப்பார்! திடீரென அது ஒரு வழிப்பாதையல்ல என்பதை உணர்வாய்! உணவை சாப்பிடும்போது, உணவை அன்புடன் மெல்லு! குளிக்கும்போது தண்ணீரை தெய்வீகம் போன்று ஆழ்ந்த அன்புடன் நன்றியுடன் பெற்றுக் கொள்! ஏனெனில் தெய்வீகம் எல்லாவற்றிலும் எல்லா இடத்திலும் உள்ளது.

ஒருமுறை எல்லாமும் தெய்வீகம் என்று உணர ஆரம்பித்துவிட்டால் பின் நீ நேசத்திற்காக ஏங்க மாட்டாய், ஏனெனில் எல்லா இடங்களிலும் அது நிறைந்திருப்பதை நீ உணர்வாய்.

Nothing To Lose But Your Head

கூட்ட மனப்பான்மை - ஓஷோவின் கதை - 29


கலீல் கிப்ரானின் புத்தகத்தில் ஒரு அழகான சூஃபி கதை ஒன்று உண்டு. உண்மையில் நிகழ்ந்ததாக கூறப்படும் அந்தக் கதையில் ஒரு கிராமத்தில் இரண்டு கிணறுகள் இருந்தன. ஒன்று அரண்மனையில் இருந்தது. அதை மந்திரியும் அரச குடும்பத்தினரையும் தவிர வேறு யாரும் உபயோகிக்க முடியாது. மற்றொன்று ஊரின் நடுவே இருந்தது. அதை மற்ற அனைவரும் உபயோகித்தனர்.

ஆனால் ஒருநாள், ஒரு மந்திரவாதி அந்த ஊருக்கு வந்து சில மந்திரங்களை கூறிக்கொண்டே ஏதோ ஒன்றை அந்த பொது கிணற்றினுள் போட்டான். மக்கள் எல்லோரும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் யாருக்கும் என்ன நிகழ்கிறதென்று புரியவில்லை! அவன் இந்த கிணற்றிலிருந்து தண்ணீர் பருகுபவர் யாராயிருந்தாலும் அவர்கள் பைத்தியமாகி விடுவர் என்று கூறிவிட்டு மறைந்துவிட்டான்.

தண்ணீர் குடிக்க வேறு வழியில்லை, அரண்மனைக்கு போக முடியாது. எனவே தாங்கள் பைத்தியமாகி விடுவோம் என தெரிந்தபோதிலும் மக்கள் வேறு வழியில்லாமல் இந்த தண்ணீரையே குடித்தனர். சூரியன் மறையும்போது அந்த தண்ணீரைக் குடித்த வயது முதிர்ந்த கிழவனிலிருந்து சிறு குழந்தை வரை அனைவருக்கும் பைத்தியம் பிடித்துவிட்டது. ராஜா, ராணி, இளவரசன், மந்திரி ஆகியோரைத் தவிர தலைநகர் முழுமைக்கும் பைத்தியம் பிடித்துவிட்டது.

யாருக்கும் சுயநினைவில்லை! ஏனெனில் எல்லோரும் பைத்தியமாக இருக்கும்போது யாருக்கு சுய உணர்விருக்கும்? ஹிப்பிகள் சொல்வதுபோல ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பியதை செய்தனர். மக்கள் அம்மணமாக திரிந்தனர், கத்தி கதறி கூக்குரலிட்டனர், பெண்கள் நிர்வாணமாக தெருவில் ஓடினர்! ஒருவர் தலைகீழாக நின்றார், மற்றொருவர் யோகாசனம் செய்தார், எல்லோரும் கொண்டாடிக்கொண்டிருந்தனர்! என்ன செய்வது? நகர் முழுவதும் பைத்தியமாகிவிட்டனர். எல்லோரும் பைத்தியமாகிவிட்டதால் எடுத்துச் சொல்ல யாருமே அங்கு இல்லையே!

மந்திரியும் அரச குடும்பத்தினரும் மட்டுமே சோகமாக இருந்தனர். எல்லோரும் பைத்தியமாகி விட்டனரே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். உண்மையில் தங்களது உணர்வைப் பற்றி அவர்களுக்கே சந்தேகமாக இருந்தது. நாம்தான் பைத்தியமாகிவிட்டோமோ என்று சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டனர். அப்போது அங்கு ஒரு வித்தியாசமான விஷயம் நடந்தது.

நகர் முழுவதும் அரசரும் மந்திரியும் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தது. அரசரும் மந்திரியும் பைத்தியமாகிவிட்டனர் என்ற வதந்தி பரவியது. கூட்டம் முழுமையும் அரண்மனை முன் ஒன்று கூடி அரசன் பைத்தியமாகிவிட்டான் என சத்தமிட ஆரம்பித்தனர். எல்லோருக்கும் பைத்தியம் பிடித்திருந்தது. எனவே அரசர் நம்மைப் போல இல்லை எனும் விஷயத்தில் எல்லோரும் ஒன்றுபட்டனர்.

காவலாளிகள், போலீஸ், படைபட்டாளம் ஆகிய அனைத்தும் பைத்தியமாகிவிட்டனர்! அதனால் அங்கு எந்த பாதுகாப்பும் இல்லை. அவர்களும் சேர்ந்து கூடி கூத்தாடிக் கொண்டு, “மரியாதையாக இயல்பாகி விடு, இல்லையேல் அரண்மனையை விட்டு வெளியே வா! நாங்கள் எங்களைப் போலவே இருக்கும் ஒருவரை புதிய அரசராக தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்,” என கூக்குரலிட்டனர்.

அரசர், மந்திரியிடம், “நமது படைகளுக்கும் கூட பைத்தியம் பிடித்து விட்டதே! என்ன செய்வது? நமக்கு பாதுகாப்பில்லையே!” என்று கேட்டார். மந்திரி விவேகமுள்ளவர், வயது முதிர்ந்த அனுபவசாலி. அவர், “ஒரே ஒரு வழிதான் உள்ளது! முன்வாசலை அடைத்துவிட்டு பின்வாசல் வழியே தப்பி சென்று அவர்கள் தண்ணீர் பருகிய அந்த கிணற்றிலிருந்தே தண்ணீர் எடுத்து குடித்து நாமும் பைத்தியமாகி விட வேண்டியதுதான். இல்லாவிடில் இந்த பைத்தியகார கும்பல் நம்மை கொன்றுவிடும்.” என்றார்.

அந்த அறிவுரை மிகவும் சரியானது. அரசரும் மந்திரியும் அரச குடும்பத்தினரும் பின்வாசல் வழியே ஓடினர். அந்த மந்திரவாதி ரசாயன மாற்றம் செய்திருந்த அந்த கிணற்று தண்ணீரைக் குடித்தனர். பின் அவர்கள் பின்வாசல் வழியே வரவில்லை, ஆடிக் கொண்டும், கத்திக் கொண்டும், குதித்துக் கூத்தாடிக் கொண்டும், முன் வாசல் வழியே வந்தனர். தங்களது அரசரும் மந்திரியும் இயல்பாகி விட்டதைக் கண்ட கூட்டம் மிகவும் மகிழ்ச்சியடைந்தது. அன்று இரவு தலைநகரம், ‘அரசரும் அரச குடும்பத்தினரும் மந்திரியும் இயல்பு நிலையடைந்து விட்டனர் ‘ என்று மிகவும் கோலாகலமாக இருந்தது.

Source: Christianity : The Deadliest Poison and Zen : The Antidote to All Poisons Chapter # 3 Question # 1

No comments: