Monday, April 25, 2011

மலர் 3 இணைய இதழ் 6 11 ஜனவரி 2011

மலர் 3 இணைய இதழ் 6 11 ஜனவரி 2011

ஓஷோ சாஸ்வதம் செய்தி

அவினாசி 2 கோவை NH – 47-ல், கந்தம்பாளையம் சாலையில் உள்ள ஓஷோ சாஸ்வதம் மையத்தில் சென்ற மாதம், அதாவது டிசம்பர் மாதம் 25 ந் தேதி மாலை சன்னியாஸ் கொண்டாட்டமும் அதை தொடர்ந்து 26ந் தேதி முழுவதும் தியானங்களும் நடந்தேறின.
இந்த மாதம் ஜனவரி 14, 15, 16 மூன்று நாட்களும் தன்னை அறிந்து கொள்ள விரும்பும் அன்பர்களுக்கு ஒரு வாய்ப்பு. தியானங்கள், தியானங்கள், தியானங்கள்தான், தியானம் மட்டும்தான். விவரம் அறிய உங்களுக்கே தெரியும்.
திருப்பூரில் உள்ள சாஸ்வதம் தியானமையத்தில் (கிளை) விரும்பும் அன்பர்கள் தியானம் செய்யலாம்.

தலையங்கம்

அன்பு நண்பர்களே,

வணக்கமும் வாழ்த்தும்.

ஞானம் எப்படி அடைவது?
தியானமில்லா ஞானம் ஏன் பெறக் கூடாது?
இவ்வுலகமே வெறுத்துவிட்டது, எனக்கு ஞானம் மட்டுமே வேண்டும்.!
தியான யுக்திகளைச் செய்வதே முழு நேர வேலையாக முயற்சிக்க விரும்புகிறேன்.!
ஞானம் அடைந்தால் அப்படி இருக்குமா? இப்படி இருக்குமா? ஞானமடைந்தவரைப் பார்க்க வேண்டும்.!
இப்படி பலர் வருகிறார்கள்.
இவர்களின் பிரச்னைதான் என்ன? ஏன் இவர்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள் என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும்.

இருக்கும் வாழ்வை, இக்கணத்தை, கிடைத்த வாழ்வை, அனுபவிக்க முடியாமல் சிறுமைப்பட்டு கிடப்பதே காரணம். தன்னை உயர்த்திக் கொள்ள வழி தேடும் இவர்களுக்கு இந்த ஞானப்பிரச்னைக்குள் நுழைந்து கொள்வது சாதகமாகவும், பாதுகாப்பாகவும் மதிப்பாகவும் போய்விடுகிறது.

ஞானம் யாருக்கு வேண்டும், மக்களை ஒவ்வொருவராக உண்மையைச் சொல்லச் சொல்லிக் கேளுங்கள். துன்பமும் பயமும் வரும்போது தப்பிக்கவே ஞானம் தேவைப்படுகிறது. நிராதரவான நிலையிலேயே ஆறுதலாக ஞானத்தை தேடுகின்றனர். பிறகு அதுவே ஒரு சமூக அந்தஸ்து கொடுப்பதைப் பிடித்துக் கொண்டு நடித்துக் கொண்டிருப்பவர்களே பலர். வேறு நல்ல பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு வந்துவிட்டால் ஞானம் மறந்து போகும், மறைந்து போகும். வேலையிருக்கிறது அப்புறம் பார்க்கலாம் என்று ஆகி விடும்.
இல்லாவிட்டால் ஞானத்தைத் தேடுபவதாக பேர் பண்ணிக் கொண்டு ஒரு பாதுகாப்பான பஜனைக் கூட்டத்தில் ஐக்கியமாவதில் எல்லோருக்கும் விருப்பம் இருக்கிறது.

இல்லையென்றால் டென்ஷனும், உடல் உபாதையும் தலைவலியும் துரத்தும்போது தப்பித்துக் கொள்ள பக்கவிளைவு இல்லாத உடனடி நிவாரணத்துக்காக ஞான கூடாரம் பக்கம் போக விரும்புகின்றனர்.

இது சரிதான் என்றே நான் சொல்கிறேன். ஏனெனில் முதலில் ஞானம் என்றால் என்ன என்று தெரியாதபோது அதை எதற்கு தேடி அலைவதாக பாவ்லா பண்ண வேண்டும். ஏனெனில் பாவ்லா மட்டும்தான் நம்மால் பண்ணமுடியும். தெரியாததை எப்படி உண்மையாகத் தேட முடியும்?

அப்படியானால் நாம் ஏன் நேர்மையாய் இருக்கக் கூடாது ? நேர்மையாய் நம்முடைய பிரச்னைகளை சிந்திக்கவும், சந்திக்கவும் கூடாது ? ஏன் ஞானத்தை, ஆன்மீகம் என்ற கற்பனைக் குப்பையை உள்ளே இறக்க வேண்டும் ?

ஓஷோவின் வழி ஞானத்தை அளிக்கிறேன் என்பதல்ல.
நம்மை உண்மையாக நாமே பார்ப்பது, அலசுவது, ஆராய்வது, தெளிவு பெறுவது, அதற்கு விஞ்ஞான பூர்வமான உடல், மன இயல்களைப் பயன்படுத்தி செயல்திட்டம் வகுப்பது.

நம்முடைய பிரச்னை, வாழ்வை அனுபவிக்க முடியவில்லை. மகிழ்ச்சியாக செயல்பட முடியவில்லை, வாழ முடியவில்லை, அமைதி இல்லை, விளையாட்டுத்தன்மை இல்லை. பிறக்கும்போது இருந்த குழந்தைத் தனமும், கொஞ்சு முகமும், குதூகலமும் மறைந்து விட்டது. சாவுக்கு பயம், புதுமைக்கு பயம், மாறுதலுக்கு பயம், சோம்பேறித் தனமும், தூக்கமும், கனவுமே சுகமாகத் தோன்றுவதால் வாழ்க்கையை சந்திக்க சிரமமாய் இருக்கிறது. இப்படித்தான் இருக்கிறது நிலைமை.

இதில் ஞானமில்லையே என்பது எங்கு இருக்கிறது.? செல்வமில்லையே என்பதே மனிதன் பிரச்னையாக இருக்கிறது. செல்வமிருப்பவனுக்கு அதனால் கிடைக்கும் சுகங்கள் போதை போலவே இருக்கின்றன. சிறிது நேரத்தில் இறங்கி விடுகின்றன என்ற பிரச்னை.

ஆகவே ஓஷோ சொல்வது நாம் வாழ்க்கையிடம் தவறான அணுகுமுறை கொண்டவர்களாக இருக்கிறோம் என்பதே. பயமும் பதட்டமும் பேராசையும் பாதுகாப்பும் நமது சமூகத்தின் அடித்தளங்களாக இருந்து வந்திருக்கின்றன என்பதே. சுரண்டலும் சுயலாபமும் கொண்ட அரசன் போன்ற ஆதிக்க நிலையில் உள்ளவர்களுக்காக உருவாக்கப்பட்ட கொள்கைகள், போட்பாடுகள், நம்பிக்கைகள், சடங்குகள், வழக்கங்கள், நாகரீகங்கள் கொண்டதாகவே இதுவரை நமது சமூகம் இருந்து வந்துள்ளது. இருந்து கொண்டிருக்கிறது என்பதே.

ஆகவே அறியாத ஞானத்திற்கு ஆசைப்பட சொல்வதில்லை ஓஷோ.
கிடைத்துள்ள வாழ்வை அனுபவிக்கும் கொண்டாடும் ஆனந்தப்படும் வழி சொல்பவர் ஓஷோ.

இந்தக்கணம் மட்டுமே இருப்பது என்ற நிசர்சனத்தில் நிலை கொண்ட வாழ்வை வலியுறுத்துபவர் ஓஷோ.

எனவே ஓஷோ இன்றைய மனிதனின் நோய்களை ஆராய்ந்து மருந்தாக தியான யுக்திகளைக் கொடுத்து அவன் இக்கணத்தை இனிமையாய் வாழ வழி செய்பவர். வறட்டு வேதாந்தம் பேசுபவரல்ல. கதா காலேட்சேபம் செய்பவரல்ல.

ஆகவே நண்பர்களே
எப்படி வாழ்வது என்று கேளுங்கள். ஆழமாக, ஆனந்தமாக, கொண்டாட்டமாக, அழகாக, எப்படி வாழ்வது என்று தேடுங்கள்.

அதுதானே மனிதனின் தேடல்.

அதற்கு முதல் படியாய் உங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களை நேசியுங்கள். உங்கள் உடலை அனுபவியுங்கள். கொண்டாடுங்கள். உங்களை நீங்களாக உங்கள் நிறை குறைகளோடு முழுதாக ஏற்றுக் கொள்ளுங்கள். அதற்காக பெருமைப் படுங்கள். அந்த சுய மரியாதையை எதற்காகவும் இழக்காதீர்கள்.

ஓஷோவின் ஏற்றுக் கொள்ளல் அடுத்தவர்களை, அமுக்கும் அதிகாரங்களை, கட்டளைகளை, ஏற்றுக் கொண்டு அடிமையாய், போலியாயம், பாசாங்காய் வாழ்வதல்ல. தன்னை ஏற்றுக் கொள்ளலே. தன் தனித்தன்மையை இழக்காமல் இருத்தலே.

ஆனால் இது முதல்படிதான். இரண்டாம்படி ஏற்றுக் கொண்ட உங்களை குறித்து உணர்வோடு இருங்கள். தன்னுணர்வு கொள்ளுங்கள். இந்த தன்னுணர்வு கொள்ளல் ஏற்றுக் கொண்ட பிறகே, முதல்படிக்குப் பிறகே சாத்தியம். தன்னுணர்வோடு வாழ்தல்தான் வாழ்க்கை. உணர்வோடு இருப்பதுதான் நாம் இருக்கிறோம் என்பதன் பொருள். தன்னுணர்வோடு வாழும்போதுதான் உங்களை நீங்கள் தூய்மையாக, நேர்மையாக, தூசும் மாசும் படியாமல் போற்றி வாழ முடியும். இல்லாவிட்டால் ஏற்றுக்கொண்ட உங்களில் அடுத்தவர்களால் ஏற்படுத்தப்பட்ட அழுக்குகளை, நம்பிக்கைகளை, கருத்துகளை களைந்தெறிய முடியாது. உங்களது உண்மையான உங்களை கண்டுபிடிக்கவும், அதன்பின் பேணி வளர்க்கவும் தண்ணுணர்வு அவசியம்.

இன்றைய தன்னுணர்வு அற்ற நிலை போதை நிலை. மத போதை, கூட்ட போதை, இன போதை, மொழி போதை, சினிமா, டிவி போதை இப்படி தன்னுணர்வு இல்லாமல் கற்பனைக்குள் கூட்டிச் செல்லும் எத்தனையோ போதைகள் சமூகத்தில் உள்ளன. இந்த போதைகளுக்கு முன்னால் ஒருவன் தானே தெரிந்து செய்து கொள்ளும் சிகரெட், மது, கஞ்சா போன்ற போதைகளின் தீமை மிகக் குறைவே.

அடுத்த மூன்றாவது படி நீங்கள் உங்களை அனுபவிக்க, குதூகலிக்க்க் கற்றுக் கொள்ள வேண்டும். ஒப்பிடலாலும், மற்றவர் கருத்தாலும் சிறுமையாய் உணர்வதிலிருந்து வெளிப்பட்டு சந்தோஷிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மந்தையாய் நம்மை அடிமைப்படுத்தும் சிறுமைப்படுத்தும் குருக்களும் போதகர்களும், அதிகாரம் படைத்தவர்களும் பின்னியுள்ள சரியான மனிதன் என்ற சூழ்ச்சி வலைக் கருத்துகளில் அடங்கி விடாமல் அனுபவிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இப்படி சொல்வதால் சமூக ஒழுங்கு சீர்கெட்டுப் போகும் என்று கூப்பாடு போடும் கும்பலொன்று எப்போதும் இருக்கிறது. அதற்கு பதில் இதோ. இந்த முழு பிரபஞ்சமும் எந்தப் போலிஸும் சமூக கட்டுதிட்டமும் இல்லாமல் மிகச் சரியாக இயங்கும்போது ஏன் தன்னுணர்வோடு வாழும் மனிதனால் ஒழுங்கு கெட்டுப் போகும் ? ஆகவே இது மறுபடியும் ஏமாற்று வேலையே,! ஆளை அடிமைப்படுத்தும் வேலையே.!

ஆகவே அனுபவி, சந்தோஷப்படு, குதூகலி, இக்கணத்தை, இந்த உடலை, இந்த பூமியை, கொண்டாடு. ஆடு, பாடு, ஆனந்தப்படு. இது உனது பிறப்புரிமை. உன்னை கொண்டாடப் பிறந்தவனே நீ. நீ அடிமைப்பட்டுப் போனதன் காரணம் தன்னுணர்வை தவறவிட்டது. ஆகவே தன்னுணர்வு கொண்டு, விழிப்புணர்வு கொண்டு உன்னை ஆடிப் பாடி உன் மண்ணை, காற்றை, நீரை அனுபவி. உடலை அனுபவி. ஆனந்தப்படு.
இதற்கு உதவிபுரிய, தன்னுணர்வு தரிசனம் பெறத்தான் தியான யுக்திகளை ஓஷோ உருவாக்கியிருக்கிறார். தியானம் என்பது மருந்து. அதுவே சாப்பாடு அல்ல. மருந்தை உண்டு தன்னுணர்வு பெற்று தன் வாழ்வை மலரும்படி வாழ வேண்டியது நம் பொறுப்பு. அப்படி நமது தனித்தன்மையை தன்னுணர்வோடு வாழ்ந்து கொண்டாடுவதே ஓஷோவின் வாழ்க்கை, வழி, இலக்கு, எல்லாமே. அடைய வேண்டிய இடமோ, இலக்கோ, உச்சியோ வாழ்வில் இல்லை என்பதே அவரின் செய்தி.

யாருக்கு வேண்டும் ஞானம் அப்படியொன்று இருந்தால் அது நாம் வாழும் வாழ்வின் முழுமையில், ஆனந்தத்தில் தானாய் பிறக்கும். அப்படி பிறப்பது வளர்ச்சி.
அப்படி அடைவதே உயர்நிலை. தேடி அடைவது அல்ல. மலர்ந்து மணப்பது அது.

ஆகவே நண்பர்களே
நம்மை ஏற்போம்
தன்னுணர்வு கொள்வோம்
நம்மைக் கொண்டாடுவோம்
அரட்டையில் ஆறுதல் தேடுவோர் தேடிக் கொண்டே இருக்கட்டும்.

அன்பு,
சித்.

கவிதைப் பகுதி

புது வேதம்

வேதம் கடவுளின் பாஷையாம்,
புதிரான சொற்களாம்,
பொருள் கடந்த மந்திரமாம்,
உன்னை உய்விக்குமாம்.
எனக்குத் தெரியாது.
எனக்குத் தெரிந்து யாரும்
இதனால் உய்யவில்லை.

ஆனால்......என் வேதம்.......
வேறுபாடுகள் களையும்
வினாடியில் ஆளை மாற்றும்
வெறுப்பும் எதிர்ப்பும் ஓடிப் போகும்
கொண்டாட்டம் கொண்டு வரும்
குதூகலத்தில் ஆழ்வீர்கள்
தேடுவதை விட்டுவிட்டு
ஓடிச் சென்று கொடுப்பீர்கள்
வாழ்வில் பற்றாக்குறை நீங்க
வாழ்வு வந்து பற்றிக் கொள்ளும்.
அது அன்பு......
அன்பை உணருங்கள்,
அன்பைக் கொள்ளுங்கள்,
அதன்வழி ஆனந்தமாய் வாழுங்கள்.


மெளனத்தில் விளைந்த முத்துகள் – ஓஷோ

மலர்தல்
உனக்குள் மலர்கள் விரிந்து மணம் பரப்புவதை பார்த்த நாளில் இருந்துதான் ஆன்மீகம் என்ற ஒன்று இருப்பதை நீ அறிந்துகொள்கிறாய். மேலும் அது ஒரு இலக்கு அல்ல. மரங்கள் எந்த இலக்கை நோக்கியும் வளர்வதில்லை. மலர்ந்து மணம் பரப்புவதன் மூலம் இயற்கையோடு முழுமையாக கரைந்து கலந்து விடக் கூடிய அவற்றின் உள்ளே உள்ளார்ந்து மறைந்து உள்ள சக்தியை வெளிக் கொண்டு வரவே அவை வளர்கின்றன. பிரபஞ்சத்திற்கு எந்த இலக்கும் இல்லை. அது வெறுமனே மலர்ந்து மணம் பரப்புகிறது.

நீ உனது பொறுப்பை புரிந்து கொண்ட வினாடியில் நீ மலர ஆரம்பிக்கிறாய்.

உன்னுடைய ஆயிரம் இதழ் கொண்ட தாமரை விரிவதுதான் பேரானந்தம். அது உன் உள்ளார்ந்த இயல்பு.

உன்னைச் சுற்றிலும் மலரும் கண்ணுக்குத் தெரியாத மலர்கள் அனைத்தையும் சேகரி.

உன்னுடைய உடல் உனது வேர், உனது தன்னுணர்வு உனது மலர்ச்சி.

இறப்பு எங்கிருந்தோ வருவதல்ல, அது உன்னுள் வளர்வது. அது உனது மலர்ச்சி.

ஞானமடைதல் என்பது உனது தன்னுணர்வு மலர்தலே.

காலமற்ற தன்மை

மனம் குறுகியது. ஆகவே அது பிரிவுகளை உருவாக்கி வைத்திருக்கிறது. மனதின் திரையில் அப்போது தோன்றும் கணத்தை நிகழ்காலம் என்றும், மனதின் திரையை விட்டு போய்விட்ட கணம் கடந்த காலம் என்றும், இன்னும் வராதது எதிர்காலம் என்றும் மனம் பிரித்துவைத்துள்ளது. ஆனால் எதுவும் இயற்கையை விட்டு வெளியே போவதும் இல்லை. இயற்கைக்குள் உள்ளே வருவதும் இல்லை. காலம் என்பது தவறான கற்பனை. காலமற்ற தன்மையே உண்மை.

தன்ணுணர்வு காலத்தை கடந்தது, தன்ணுணர்வுக்கு காலம் கிடையாது.

மௌனம், மனமற்றநிலை, காலமற்ற தன்மை ஆகியன தியானத்தின் மூலமே நிகழும்.

தன்னுடைய இருப்பினுள் நகரும் மனிதன் காலத்தை கடந்து விடுகிறான்.

காலத்தை கடந்து உணர்வது இறப்பற்ற தன்மையை உணர்வதுதான்.

காலத்தை கடந்து விட்டால் நீ வீடு வந்து சேர்ந்து விடுகிறாய்.

தர்க்கம் நேரத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. அன்புக்கு கால நேரம் கிடையாது. அன்பு காலமற்ற தன்மையில் செயல்படுகிறது.


கொண்டாட்டம்
மலர் பூச்சொரிந்து கொட்டுகிறது. அது தொடர்ந்து சொரிகிறது. அவை நிறுத்துவதேயில்லை. இயற்கை இதுவரை நிகழ்ந்த புத்தர்களுக்கும் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் புத்தர்களுக்கும் இனி நிகழப் போகும் புத்தர்களுக்கும் சேர்த்து அளவற்று கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இயற்கையை பொறுத்தவரை கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் என்றெல்லாம் கிடையாது. இப்போது என்பது மட்டுமே முடிவற்றது, இப்போது மட்டுமே இருக்கிறது.

உண்மையான மௌனம் உன்னுள் நிகழ்ந்துள்ளது என்பதற்கான சான்றே கொண்டாட்டம்தான்.

நீ என்ன செய்தாலும் அதை அனுபவித்து, கொண்டாடி, அன்போடு செய்தாலே படைப்பதாகும்.

உன்னுடைய வாழ்க்கை ஒரு கொண்டாட்டமாக இருந்தால் இறப்பு அதன் உச்சகட்ட கொண்டாட்டமாக இருக்கும்.

நீ நிறைவடைந்ததை, அடைந்ததை நடனமாடி கொண்டாடுவதே கருணையாகும்.

இந்த இயற்கை முழுமையும் ஒரு கொண்டாட்டமே, அதன் பாகமாகி விடு.


ஓஷோ வீடியோ

1. Osho : I always thought I loved somebody

2. Osho : Does Society have a responsibility to its disadvandaged people

3. Osho : There is no god but I have found something far more significient


தியான யுக்திகள்

தியான யுக்தி – 1

தீர்மானம்
எப்போது - இரவில்
காலம் - 10 நிமிடங்கள்.

முதல் படி : சுவாசத்தை உள்ளிழுக்கும் போது திரும்ப திரும்ப சொல்லுதல்………

அவசரப்படாமல், மெதுவாக, சுவாசத்தை உள்ளிழுத்து உனது நுரையீரல் முழுவதும் காற்று நிரம்பும்படி செய். அப்படி செய்யும்போதே, உனக்குள் நீ உன் வாழ்வில் செய்ய விரும்புவது எதுவோ அதை மெதுவாக திரும்ப திரும்ப சொல். உதாரணமாக ‘ நான் தியானஉணர்வு பெறுவேன்.’

இரண்டாவது படி : உன் மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டு திரும்ப திரும்ப சொல்லுதல்……..

உனது நுரையீரல் முழுவதும் நிறைந்தபின் உனது மூச்சை இழுத்து பிடித்துக் வைத்துக்கொண்டு, ‘நான் தியானஉணர்வு பெறுவேன்’ என்பதை திரும்ப திரும்ப சொல். நீ பதட்டமடைவாய், மூச்சை வெளிவிட துடிப்பாய், இருப்பினும் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு நான் தியானஉணர்வு பெறுவேன் என்பதை திரும்ப திரும்ப சொல்.

மூன்றாவது படி மூச்சை வெளிவிடும்போது திரும்ப திரும்ப சொல்லுதல்....

இப்போது மெதுவாக மூச்சை வெளிவிட்டபடி நான் தியானஉணர்வு பெறுவேன் என்பதை திரும்ப திரும்ப சொல். சுவாசம் முழுமையாக வெளியேறும்வரை மூச்சை வெளிவிட்டபடி நான் தியானஉணர்வு பெறுவேன் என்பதை திரும்ப திரும்ப சொல்.

நான்காவது படி மூச்சை முழுமையாக வெளியேற்றியபின் திரும்ப திரும்ப சொல்.

இப்போது முழுமையாக மூச்சை வெளியேற்றியபின் திரும்ப சுவாசிக்காதே. மூச்சை இழுத்து பிடித்து வைத்துக் கொண்டு எவ்வளவு தடவை முடியுமோ அவ்வளவு தடவை திரும்ப திரும்ப நான்தியானஉணர்வு பெறுவேன் என்பதை சொல்.

ஐந்தாவது படி சுவாசி....

இப்போது மெதுவாக மூச்சை உள்ளிழுக்க ஆரம்பி. ஒரு முறை உள்ளிழுத்து ஒருமுறை வெளியே விடுவது இரண்டும் சேர்ந்து ஒரு தடவை என்பதாகும்.

ஆறாவது படி ஓய்வெடு. இதை ஐந்து முறை செய்தபின் மெதுவாக சுவாசித்தபடி நிமிர்ந்து அமைதியாக உட்கார்ந்து ஓய்வெடு. உனது உடல் தளர்வாக, கண்கள் மூடியபடி ஐந்து நிமிடங்கள் உட்கார்.

நான் அமைதியை அடைவேன், நான் தியானஉணர்வு பெறுவேன், நான் தியானஉணர்வு பெறுவதில் உறுதியாக இருக்கிறேன் என்று உனது முழு உயிர்த்தலும் இந்த உறுதிமொழியை எடுத்துக் கொள்ளட்டும். அதன்மூலம் அது தியானத்தினுள் நுழையட்டும். உனது முழு இருப்பையும் அந்த உறுதி மொழி சூழ்ந்து கொள்ளட்டும். இது உன் தன்னுணர்வின் ஆழ் மையம்வரை சென்று சேரட்டும்.

இந்த ஓய்வாக இருக்கும் நேரத்தில் நீ எடுத்துக் கொண்ட தீர்மானம் உன் உள்ளே உள் மையத்திற்கு சென்று சேரட்டும். அந்த தீர்மானத்தை 5 தடவை சொல். பின் மௌனமாக அமர்ந்து உனது சுவாசத்தை கவனி. மெதுவாக மூச்சு விடு.

இந்த யுக்தியை 5 அல்லது 7 தடவை படுக்கைக்கு போகும்முன் செய். உன்னால் செய்ய முடியும் வரை செய். பின் உறங்கச் செல். நான் அமைதியாக இருப்பேன் – இது உறுதி. என்று நினைத்தபடி உறங்கச் செல். தூக்கம் வரும்போது இந்த எண்ணம் உன்னுள் இருக்கட்டும். பின் விளக்கை அணைத்துவிடு.

முழுமையாக மூச்சை வெளியேற்றியபின் சுவாசிக்காமல் இருக்கும்போது என்ன நிகழ்கிறது மூச்சை முழுமையாக வெளியேவிட்டபின் சுவாசிக்காமல் மூக்கை மூடிக் கொண்டு விட்டால் என்ன நடக்கிறது சிறிது நேரத்திற்க்குள் என் முழு உடல் மட்டும் சுவாசத்திற்காக துடிப்பதில்லை, என் உடலின் ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு செல்லும் மட்டும் காற்றுக்காக கதறுவதில்லை, எந்த அளவு நான் சுவாசத்தை இழுத்து பிடித்து வைத்திருக்கிறேனோ அந்த அளவு காற்றுக்கான துடிப்பு என் தன்னுணர்வற்ற நிலைக்குள்ளும் செல்கிறது. எந்த அளவு நான் மூச்சை நிறுத்தி வைத்திருக்கிறேனோ அந்த அளவு எனது இருப்பின் ஆழ் மையம் வரை காற்றுக்காக ஏங்குகிறது. அது ஒரு சாதாரண விஷயம் அல்ல இப்போது. மேல்மட்டம் தான் பாதிப்படைகிறது என்பதல்ல இப்போது இது. இப்போது இது வாழ்வா சாவா என்ற பிரச்னை. கீழ்மட்டத்திலிருந்து அடி மட்டம்வரை அனைத்துமே காற்றை கேட்கிறது.

உனது முழு இருப்பும் காற்றுக்காக ஏங்கும் இந்த கட்டத்தில், இந்த நேரத்தில் நீ உன்னுள் நான் தியானஉணர்வு பெறுவேன் என்று சொல்லிக் கொள். உனது உடல் காற்றுக்காக ஏங்கட்டும், உனது மனம் இந்த நினைப்பை திரும்ப திரும்ப சொல்லட்டும். காற்றுக்கான ஏக்கம் அதிகமாக அதிகமாக உனது தீர்மானம் உள்ளே செல்லும். உனது முழு உயிரும் காற்றுக்காக துடிக்க துடிக்க நீ இந்த உறுதிமொழியை திரும்ப திரும்ப சொல். இதன் தீவிரம் பல மடங்கு அதிகரிக்கும். இந்த வழியில் அது உன் தன்னுணர்வற்ற மனத்தினுள் நுழையும், தன்னுணர்வற்ற மனத்துக்கு சென்று சேரும்.

DHYAN SUTRA

தியான யுக்தி – 2

1) மௌனமாக அமர்ந்து உன்னைச் சுற்றி பேரானந்தம் மேகம் போன்று சூழ்ந்திருப்பதாக உணர்ந்து பார். அந்த மேகத்தினுள் தளர்வாக இரு. உன்னை கரைத்துவிடு. அந்த மேகம் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும், ஆயினும் அது உன்னுடனே இருக்கும்.
2) நீ உன்னை கரைக்கும்போது நீ உன்னை மேலும் மேலும் பேரானந்தமாக உணர ஆரம்பிப்பாய். நீ முழுமையாக கரைந்து நீயே இல்லாமல் அந்த மேகம் மட்டுமே இருக்கும் மிக அரிதான கணங்கள் வரும். அவைதான் சமாதி என்றும் சடோரி என்றும் சொல்லப்படும் முதல் தரிசனங்கள்.
3) சில தினங்களுக்கு பின் நீ அதை உண்மையாகவே உணர ஆரம்பிப்பாய். ஏனெனில் அது அங்கேயேதான் இருக்கிறது. நீ அதை இதுவரை உணரவில்லை. அவ்வளவுதான். ஒவ்வொருவரும் பேரானந்த மேகத்தினுள்தான் இருக்கிறோம். நாம் அதை உணர வேண்டும். அது நமது உயிர், இது நமது உள்ளார்ந்த இயல்பு.

Blessed Are the Ignorant
யார் குரு? - ஓஷோவின் கதை - 30

மிகச் சிறந்த சூஃபி ஞானிகளில் ஒருவரான ஹாசன் என்பவரிடம் இறக்கும் சமயத்தில் உங்களது குரு யார் என்று யாரோ ஒருவர் கேட்டார்.

அதற்கு அவர், மிக தாமதமாக இந்த கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். நேரம் இல்லை. நான் இறந்து கொண்டிருக்கிறேன். என்று கூறினார். அதற்கு கேள்வி கேட்டவர், நீங்கள் பெயரை மட்டும் சொன்னால் போதுமானது. நீங்கள் இன்னும் உயிரோடு இருக்கிறீர்கள், இன்னும் சுவாசித்து கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கிறீர்கள். நீங்கள் பெயரை மட்டும் சொன்னால் போதுமானது என்று கேட்டார்.

அதற்கு ஹாசன் எனக்கு ஆயிரக்கணக்கான குருமார்கள் இருக்கிறார்கள். நான் அவர்களது பெயரை சொல்வதற்கே எனக்கு பல மாதங்கள் பிடிக்கும் அவர்களைப் பற்றி பேச வருடங்கள் ஆகும். இருப்பினும் மூன்று பேர்களை மட்டும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.

அதில் ஒன்று ஒரு திருடர். ஒருமுறை நான் பாலைவனத்தில் தொலைந்து போய் வழி கண்டுபிடித்து கிராமத்தை போய் சேரும்போது நடு இரவாகி விட்டது. பாதி இரவு சென்று விட்டது. கடைகள் அனைத்தும் மூடிக் கிடந்தன. கதவுகள் அனைத்தும் அடைபட்டுக் கிடந்தன. ரோட்டில் மனித நடமாட்டமே இல்லை. நான் விசாரிப்பதற்காக யாராவது இருக்கிறார்களா என்று தேடினேன். இறுதியில் சுவற்றில் உள்ளே நுழைவதற்காக கன்னம் வைத்துக் கொண்டிருந்த ஒரு திருடனை பார்த்தேன்.

நான் அவரிடம், நான் தங்க இங்கே ஏதாவது இடம் இருக்குமா என்று கேட்டேன். அவர், நான் ஒரு திருடன், நீங்களோ ஒரு சுஃபி ஞானி போல தோன்றுகிறீர்கள். இப்போது தங்க இடம் கண்டு பிடிப்பது மிகவும் கடினம். ஆனால் நீங்கள் விருப்ப்பட்டால் என் வீட்டிற்கு வரலாம், திருடனுடன் தங்க உங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லையென்றால் என்னுடன் வாருங்கள். என்று அழைத்தார்.

நான் கொஞ்சம் ஒரு வினாடி தயங்கினேன். பின் எனக்கு உரைத்தது. ஒரு திருடன் சூஃபியை பார்த்து பயப்படாத போது ஏன் சூஃபி திருடனைக் கண்டு அஞ்ச வேண்டும். உண்மையில் அவன்தான் என்னைக் கண்டு அஞ்ச வேண்டும். அதனால் நான் அவனிடம் சரி நான் உன் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறினேன். நான் அவனுடன் சென்று அவன் வீட்டில் தங்கினேன். அந்த மனிதன் மிகவும் அன்பானவன், மிகவும் அருமையான மனிதர். நான் அவருடைய வீட்டில் ஒரு மாதம் தங்கினேன். ஒவ்வொரு இரவும் அவர் திருடுவதற்கு கிளம்பும்போதும், சரி, நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள், தியானம் செய்யுங்கள், ஓய்வெடுங்கள், நான் என் வேலையை பார்க்கப் போகிறேன் என்பார். அவர் திரும்பி வரும்போது, ஏதாவது கிடைத்ததா என்று நான் கேட்பேன். இன்று எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் நாளை திரும்பவும் முயற்சிப்பேன். என்று கூறுவார். ஒருநாளும் அவர் நம்பிக்கையிழந்து நான் பார்க்கவேயில்லை.

ஒரு மாதம் முழுவதும் அவர் வெறும் கையுடன்தான் திரும்பி வந்தார். ஆனாலும் அவர் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார். அவர் நாளை முயற்சி செய்வேன். கடவுள் விருப்பபட்டால் நாளை ஏதாவது கிடைக்கும். நீங்களும் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். இந்த ஏழைக்கு உதவி செய்யுங்கள் என்று நீங்கள் கடவுளிடம் சொல்லுங்கள். என்று கூறுவார்.

மேலும் தொடர்ந்து ஹாசன் சொல்லுகையில் நான் பல வருடங்கள் தொடர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கையில் எதுவும் நிகழவில்லை. நான் மிகவும் மனமுடைந்து நம்பிக்கையிழந்து இது எல்லாவற்றையும் நிறுத்திவிடலாமா என்று பல சமயங்களில் நினைத்ததுண்டு. கடவுள் என்று ஒருவரும் இல்லை, எல்லா பிரார்த்தனைகளும் மடத்தனம், எல்லா தியானங்களும் பொய் என்று நினைப்பேன் – அப்போது திடீரென அந்த திருடனின் நினைவு வரும். அவர் ஒவ்வொரு நாள் இரவும் கடவுள் விருப்பபட்டால் நாளை ஏதாவது கிடைக்கும் என்று கூறியதை நினைத்துக் கொள்வேன்.

அதனால் மேலும் ஒருநாள் முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்துக் கொள்வேன். திருடன்கூட அந்த அளவு நம்பிக்கையுடனும் அந்த அளவு நம்பிக்கையுணர்வுடனும் இருக்கும்போது நான் ஏன் இன்னும் ஒருநாள் முயற்சி செய்து பார்க்கக் கூடாது என்று தோன்றும். பலமுறை இப்படி நிகழ்ந்திருக்கிறது. அந்த திருடனும் அவனைப் பற்றிய நினைவும் நான் இன்னும் ஒருநாள் என்று முயல உதவி செய்திருக்கிறது. ஒருநாள் அது நிகழ்ந்து விட்டது. அது நிகழ்ந்தே விட்டது. நான் அந்த திருடனின் வீட்டை விட்டும் அவனை விட்டும் பலஆயிரம் மைல் தூரம் அப்பால் இருந்தேன். ஆயினும் நான் அந்த திசையில் வணங்கினேன். அவர்தான் எனது முதல் குரு.

எனது இரண்டாவது குரு ஒரு நாய். நான் மிகவும் தாகமாக இருந்தேன். தண்ணீர் குடிப்பதற்காக நதியை நோக்கி போய்க் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாயும் தண்ணீர் குடிப்பதற்காக நதியை நோக்கி வந்தது. அதற்கும் மிகவும் தாகமாக இருந்தது. அது நதிக்குள் பார்த்தது. அங்கே வேறொரு நாய் இருப்பதை பார்த்தது. – அதனுடைய பிம்பம்தான் – அதைப் பார்த்து பயந்தது. அது குரைத்தது உடனே அந்த நாயும் குரைத்தது. இது மிகவும் பயந்து போய் தயங்கிக் கொண்டே திரும்பி போனது. ஆனால் தாகம் மிகவும் அதிகமாக இருந்ததால் திரும்பி வந்தது, தண்ணீரில் பார்த்தது, அந்த நாய் அங்கேயே இருப்பதை பார்த்தது. ஆனாலும் தாகத்தினால் தண்ணீரில் எட்டிக் குதித்தது, அந்த பிம்பம் கலைந்து போய் விட்டது. தண்ணீரை குடித்து அது ஒரு கோடை காலமாக இருந்ததால் தண்ணீரில் நீச்சலடித்து ஆனந்தப்பட்டது. நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். அதன்மூலம் கடவுளிடமிருந்து எனக்கு ஒரு செய்தி வந்ததை புரிந்து கொண்டேன். ஒருவர் எல்லா பயங்களோடும் எட்டிக் குதித்து விடவேண்டும் என்பதை புரிந்து கொண்டேன்.

நான் அறியாததற்குள் குதித்து விடும் ஒரு சமயம் வந்த போது ஒரு பயம் வந்தது. அந்த எல்லை வரை போய்விட்டு தயக்கப் பட்டுக் கொண்டு திரும்பி வந்து விடுவேன். அப்போது அந்த நாயின் நினைவுதான் வந்தது எனக்கு. நாய் எட்டிக் குதிக்கும்போது நான் ஏன் எட்டிக் குதிக்கக் கூடாது என்று தோன்றியது. ஒருநாள் நான் அறியாததற்குள் எட்டிக் குதித்துவிட்டேன். நான் கரைந்து அறியாதது மட்டுமே இருந்தது. அந்த நாய்தான் எனது இரண்டாவது குரு.

எனது மூன்றாவது குரு ஒரு சிறு குழந்தை. நான் ஒரு நகரத்தினுள் சென்றபோது அந்த குழந்தை ஒரு மெழுகுவர்த்தியை ஏந்திக்கொண்டு சென்றது அதன் திரி ஏற்றப்பட்டிருந்தது, மசூதியில் வைப்பதற்காக ஏற்றப்பட்ட அந்த மெழுகுவர்த்தியை கைகளில் எடுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தது அந்த குழந்தை. ஒரு கிண்டலுக்காக நான் அந்த குழந்தையை நீயா இந்த மெழுகுவர்த்தியை ஏற்றினாய் என்று கேட்டேன். அவன் ஆமாம் என்று கூறினான். நான் தொடர்ந்து, அந்த ஒளி எங்கிருந்து வந்தது என்று உன்னால் கூற முடியுமா மெழுகுவர்த்தி எரியாமல் இருந்தது, நீ ஏற்றினாய் ஒளி வந்தது. நீ ஏற்றியபோது பார்த்தாய் அல்லவா அந்த ஒளி எங்கிருந்து வந்தது என்று உன்னால் கூற முடியுமா என்று கேட்டேன். அந்த பையன் சிரித்துவிட்டு, மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு, இப்போது நீங்கள் இந்த ஒளி எங்கு போனது என்று பார்த்தீர்கள் அல்லவா அது எங்கு போனது என்று எனக்கு கூறுங்கள் என்று கேட்டான். என்னுடைய ஆணவம் சுக்குநூறானது, எனது அறிவு அனைத்தும் பொடிபொடியானது. அந்த வினாடியில் நான் எனது முட்டாள்தனத்தை உணர்ந்தேன். அப்போதிலிருந்து நான் அறிந்தவன் என்பதை விட்டு விட்டேன். என்றார்.

ஹாசன் மூன்று குருக்களைப் பற்றி கூறினார். மேலும் அவர் பலர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் எல்லோரையும் பற்றியும் பேச எனக்கு நேரம் இல்லை என்றார்.

ஆம், அது உண்மை. எனக்கு ஒருவர்தான் குரு என்று கிடையாது. ஏனெனில் எனக்கு ஆயிரக்கணக்கான குருக்கள் இருக்கின்றனர். நான் சாத்தியப்பட்ட எல்லா வழிகளிலும் கற்றுக் கொண்டேன்.

நீ அப்படிப்பட்ட விதமான ஒரு சீடன் என்றால் உனக்கு குரு என்று ஒருவர் தேவை இல்லை. ஆனால் நினைவில் கொள், குரு என்ற ஒருவர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நீ தேர்ந்தெடுத்தாலும் சரி, தேர்ந்தெடுக்காமல் எல்லோரையும் வைத்துக் கொண்டாலும் சரி, நீ ஒரு சீடனாக இருக்க வேண்டியது அவசியம்.

சீடனாக இருப்பது இந்த பாதையில் மிக அவசியமான ஒரு விஷயம்.

சீடனாக இருப்பது என்றால் - கற்க முடிவது, கற்க தயாராக இருப்பது, இந்த இயற்கைக்கு திறந்தவனாக இருப்பது. நீ ஒரு குருவை தேர்ந்தெடுக்கும் போது என்ன நிகழ்கிறது எப்படி கற்றுக் கொள்வது என கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறாய். ஒரு குருவுடன் இருக்கும்போது நீ மெதுமெதுவாக லயப்பட ஆரம்பிக்கிறாய். மெதுமெதுவாக நீ இயற்கையுடன் லயப்படுவது எப்படி என கற்றுக் கொள்கிறாய்.

குரு என்பவர் இந்த இயற்கையின் சிறிய வடிவம்தான். குருவுடன் நெருங்கி வர வர நீ அழகு, நேசம், நெருக்கம், அணுக்கம், அன்யோன்யம், ஒப்புக்கொடுத்தல் ஆகியவற்றை பற்றி தெரிந்து கொள்கிறாய். ஒருவரிடம் ஒன்றாக இருக்கும்போது இவ்வளவு ஆனந்தம் கிடைக்கும்போது முழுமையுடன் ஒன்றாக இருக்கும்போது எவ்வளவு ஆனந்தம் கிடைக்கும் என்பதை நீ பார்க்கும் ஒரு நேரம் வரும். குரு என்பவர் ஒரு ஆரம்பம்தான், அவர் முடிவு அல்ல. உண்மையான குரு என்பவர் ஒரு வாசல்தான், நீ அவர் மூலம் சென்று கடந்து போக முடியும். உண்மையான குரு நீ அவரை கடந்து செல்ல உதவுபவர்.

The Secret of Secrets, Vol 1 che #3

No comments: