Monday, April 25, 2011

மலர் 3 இணைய இதழ் 9 11 ஏப்ரல் 2011

ஓஷோ சாஸ்வதம் செய்தி

அவினாசி 2 கோவை NH – 47-ல், கந்தம்பாளையம் சாலையில் உள்ள ஓஷோ சாஸ்வதம் மையத்தில் த்யான் சித்தார்த், ஓஷோ தரிசனம் எனும் மூன்று நாள் பட்டறையை இந்த மாதம் 22,23,24, தேதிகளில் நடத்துகிறார். 15 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. ஒரு நபருக்கு உணவு உறைவிடம் உள்பட கட்டணம் 1500. விரைந்து முன்பதிவு செய்துகொள்ளவும்.

திருப்பூரில் உள்ள ஓஷோ சாஸ்வதம் தியானமையத்தில் (கிளை) விரும்பும் அன்பர்கள் வந்திருந்து தியானம் செய்யலாம்.

தலையங்கம்

நான் சென்னைக்கு ஒரு தியானப் பட்டறை நடத்தப் போயிருந்தேன். அப்போது ஓஷோவை நிறையப் படித்தவர்களைப் பார்த்தேன். அவர்களுக்கு ஓஷோ இனிக்கிறார். படிக்க நன்றாக இருக்கிறது. ஆனால் அந்த இனிப்பை சாப்பாட்டுக்கு பயன்படுத்துவது எப்படி என்று தெரியவில்லை. தங்கள் வாழ்க்கைக்குப் பயன்படுத்தத் தெரியவில்லை. கசப்பை மறக்க மட்டுமே பயன்படுவதாக, துயரங்களை, கஷ்டங்களை தாங்க மட்டுமே பயன் தருவதாக இருக்கிறது. அவர் சொல்லும், சுட்டிகாட்டும் நிலையை, வாழ்க்கையை பார்க்கத் தெரியவில்லை.

சாமியார்கள், தலைவர்கள், தன்னம்பிக்கைவாதிகள், ஆன்மீகவாதிகள், கவிஞர்கள், நடிகர்கள், கலைஞர்கள், பெண் விடுதலையாளர்கள், அறிவுஜீவிகள் ஆகிய எல்லோரையும் பொறுத்தவரை தியானம் என்பது மிக அவசியமான ஒன்று என்பது ஓஷோவிற்குப் பின் ஏற்றுக்கொள்ளப்பட்ட, மறுக்கமுடியாத விஷயமாகிவிட்டது. ஆனாலும் எல்லோரும் வாழ்க்கைக்கு, தங்கள் வாழ்க்கைக்கு, தாங்கள் வாழ்க்கை என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருப்பதற்கு – தியானம் உதவும், உதவுகிறது, எப்படியெல்லாம் உதவமுடியும் என்று ஆராய்ந்து பயன்படுத்துகிறவர்களாகவும், அடுத்தவர்களுக்கு பாடம் எடுப்பவர்களாகவும், அதை வைத்து வியாபாரம் செய்பவர்களாகவும் தான் இருக்கிறார்கள்.

ஆனால் ஓஷோவிற்கு அப்படியல்ல. ஓஷோ சொல்வதும் அது அல்ல. வாழ்க்கைக்கு பயனுறும் பயிற்சி அல்ல தியானம். உடல் நோயைத் தீர்க்கவும், ஆயுளை அதிகப்படுத்தவும், இளமையை காத்துக்கொள்ளவும், திறமையை வளர்த்துகொள்ளவும்,டென்ஷனை குறைத்துக்கொள்ளவும், மன அழுத்தத்தை, உளைச்சலை விரட்டவும், ஞாபக சக்தியை வளர்த்துகொள்ளவும், கோபத்தை வெளிக்காட்டாமல் கட்டுப்படுத்திக்கொள்ளவும், அன்பை அதிகப்படுத்திக் கொள்ளவும், உலக சமாதானத்திற்கு உதவவும், போர், சண்டை, மத நல்லிணக்கமின்மை ஆகியன நீங்கவும் செய்வதல்ல தியானம். வறுமை ஒழிப்பு, கல்வி புகட்டுதல், மரம் நடுதல் ஆகியன செய்யத் தூண்டுவதோ, இது போன்ற அரசியல் நடத்தி கூட்டம் கூட்டி வியாபாரம் பெருக்குவதோ தியானத்தோடு தொடர்புடையது அல்ல. குடும்ப அமைதி, குடும்ப நல்லிணக்கம், தாய் தந்தையர் பேணல், குழந்தை வளர்ப்பு, மனைவி நலம் ஆகியன செய்ய தூண்டுவதல்ல ஓஷோவின் தியான நோக்கம். சமூக ஏற்றதாழ்வு, சுரண்டல் சமூக அமைப்பு, சாதிக்கொடுமை ஆகியனவற்றை அழிக்கும் முயற்சியும், சுயமரியாதையை தோற்றுவிக்கும் குறிக்கோளும் கொண்டதல்ல ஓஷோ கூறும் தியானம்.

ஓஷோ கூறும் தியானம் உன் வாழ்க்கையோடு சம்பந்தபட்டதல்ல. அவர் வாழும் வாழ்க்கையோடு சம்பந்தபட்டது. ஓஷோவிற்கு இயற்கையின் இணைப்புணர்வே தியானம். அது மூச்சுப் போன்று இயல்பாக இயற்கையோடு இணைந்துள்ள உணர்வு நிகழ்வு. அதில் நீ இறந்துகொண்டேயிருக்கிறாய், பிறந்துகொண்டேயிருக்கிறாய், வானத்தில் பறக்கும் பறவை பறந்த தடத்தை பதிய விட்டுச் செல்லாமல் பறப்பது போல இயற்கையோடு இயைந்துள்ளது உன் வாழ்வு. நீ நீயல்ல. நகரும் வாழ்வின் ஓர் முனை. புவிஈர்ப்பை கடந்துவிட்ட வாழ்வெனும் அதிவேக ராக்கெட்டின் ஓர் கண வாழ்வனுபவம் நீ. நீ என்பது ஒரு குறிப்பிட்ட மன பிம்பமோ, உடலோ அல்ல. நீ செய்யும் செய்ய விரும்பும் செயல்கள் அல்ல. நீ சக்தியின் வெளிப்பாடு. சக்தியின் லீலை, சக்தியின் நடனம், நடனமற்றவன் இல்லாத நடனம். நடனம் ஆடும் ஆனந்தம், அழகு, அனுபவிக்கும் சாட்சிபாவம், ஆகிய குணங்கள் அங்கே உள்ளன. ஆனால் அவை உன் குணங்கள் அல்ல. இயற்கையின் குணங்கள். பிரபஞ்சத்தின் குணங்கள். அவை நான் என்ற வரையறைக்குள் உணரப்படும்போது அது பொய்யானதாகவே, உனது துன்பத்தின் பின்புலத்தைச் சேர்ந்ததாகவே இருக்கும்.

ஆகவே ஓஷோவின் தியானம், இயற்கையோடு உள்ள மறந்துவிட்ட இணைப்புணர்வை கண்டெடுக்கும் அனுபவம், அதன்பின் அங்கு நீ, நான் என்பதில்லை. பிரபஞ்ச சக்தியே இருக்கிறது. அங்கு பிரபஞ்சத்தின் மர்மம் இருக்கிறது. சமநிலை இருக்கிறது. லீலை இருக்கிறது. மெளனம் இருக்கிறது. புயல் இருக்கிறது. ஆழமும் இருக்கிறது. மேலே அலையும் இருக்கிறது.

ஆகவே ஓஷோ உனது தற்போதைய வாழ்வுக்கு உதவ தியானம் பற்றிக் கூறுவதில்லை. உனது தற்போதைய வாழ்வு விலங்குணர்ச்சிகளையும், சமூக பாதிப்புகளையும் அடிப்படையாகக் கொண்டது.

நீ பிறக்கும்போது உனக்கிருந்தது விலங்குணர்ச்சிகள். இது தவறோ, மோசமோ, தாழ்ந்ததோ அல்ல. இது வெறும் ஒரு நிதர்சன உண்மை. மனிதன் மிருக உணர்ச்சிகளுடனேயே பிறக்கிறான். ஆனால் அவன் முழு வளர்ச்சியடையாமல் பிறக்கிறான். ஆகவே தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு, தன்னை வளர்த்திக்கொள்ளும் பொருட்டு அவன் தன்ணுணர்வு கொண்டவனாகப் பிறக்கிறான். அந்த தன்ணுணர்வால் அவன் வெளி அனுபவங்களின் தாக்கத்தை பொறுத்து ஒரு நான் என்ற சுய கற்பனை பிம்பத்தை உருவாக்கிக்கொள்கிறான்.

அடியில் விலங்குணர்ச்சிகளான வாழும் வேட்கை, சாவுக்கெதிரான போராட்டம்,பொறாமை, பேராசை, வன்முறை, கோபம், தந்திரம், போன்ற உணர்ச்சிகள். அதன்மேல் முகமூடியாக சமூக பாதிப்பால் விளைந்த நான் எனும் சுய கற்பனை பிம்பம். நமது எல்லா விலங்குணர்ச்சிகளும் இந்த நான் என்பதன் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு அடக்கி வைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட அளவில், அனுமதிக்கப்பட்ட விதத்தில் மட்டுமே வெளிப்படுகின்றன. இந்த விலங்கின, சமூக பின்புலத்திலிருந்து செயல்படும் இயந்திரங்களாக இருக்கிறான் மனிதன். ஏனெனில் சமூக பின்புலத்தால் உருவான நான் என்பதை தொடர்ந்து அதனை கட்டிக்காப்பாற்ற ஓடிக் கொண்டிருக்கும் எண்ண ஓட்டமே மனம்.

இந்த மனம் சமூக கருத்துகளும், தாக்கலும், எதிர்பார்ப்பும் அதிகமானதைத் தொடர்ந்து அதிக வேகம் கொண்ட எண்ண ஓட்டமாகவும், இடைவிடாது 24 மணி நேரமும் ஓடுவதாகவும் மாறிவிட்டது. அதுவே பெரும்பான்மை சக்தியை எடுத்துக் கொண்டு எஜமானனாக ஆகிவிட்டது.

முற்றிலும் வளராத உடலைப் பாதுகாத்துக்கொள்ள, தன்ணுணர்வு கொண்ட குழந்தைக்கு நான் என்பதும் அந்த நானை காப்பாற்றும் மனம் என்பதும் ஒரு அவசியம். ஆனால் உடல் வளர்ந்தபின் மனிதன் தன்ணுணர்வோடு விலங்கின உணர்ச்சிகளை வாழ்ந்து பார்க்கும் ஒரு வாழ்வே இயல்பானது, இயற்கையானது. இதற்கு மாறாக சமூகம் நானை பெரிதும் வளர்த்துவிடுகிறது. அந்த நான் என்பதை வாழ்ந்து காட்டும் வாழ்வே திணிக்கப்படுகிறது. இந்த சமூக பாதிப்பால், அடக்குமுறையால், தவறான கட்டுகோப்பால், மனம் எஜமானனாகிவிடுகிறது.
உண்மையான விலங்கியல் உணர்ச்சிச் சந்தோஷங்கள் சமூகத்தால் மறக்கடிக்கப்பட்டு போலியான புகழ், பாராட்டு, அந்தஸ்து, மரியாதை போன்றவற்றிற்கான வாழ்க்கை போதிக்கப்படுகிறது.

தன்ணுணர்வோடு மனிதன் விலங்கின உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்போதுதான் காமம் அன்பாகிறது. உழைப்பு படைப்பாகிறது. இறப்பின் உண்மை உரைப்பதால் உடலின் மீது பற்று குறைகிறது, வெற்றியும் தோல்வியும் கடந்த மனித நேயம் பிறக்கிறது, அழகைச் சுவைக்கத் தோன்றுகிறது. தியான அனுபவம் கிடைக்கிறது.
அந்த தியான அனுபவத்திற்குப் பின் வாழ்வின் தன்மை மாறிவிடுகிறது. கருணையும், அந்பும், சாந்தமும், அமைதியும், அருளும், அழகும், மெளனமும், கனிவும், பரிவும், கொண்ட வாழ்க்கை துவங்குகிறது.

ஆகவே ஓஷோவின் தியானம் ஒரு அடுத்த பரிணாம வாழ்க்கை முறை. இந்த வாழ்வின் எல்லா வசதிகளையும் தியானத்திற்கு பயன்படுத்து, அது உன்னை அடுத்த உயர்மட்ட வாழ்வுக்கு எடுத்து செல்லும் என்பதே ஒஷோ கூறுவது.

உனது இன்றைய வாழ்க்கை மேம்போக்கானது, பொய்யானது, போலியானது, இயந்திரத்தனமானது, கட்டுப்படுத்தப்பட்டது, அடிமைத்தனமானது, மனப்பேயின் ஆட்டமாய் இருப்பது, தனிமை கண்டு அஞ்சுவது, மரணத்தை வாழமுடியாதது, கூட்டத்தைத் தேடுவது, சமுதாய பாகமாய் இருப்பது, இயற்கையின் இணைப்பை உணராதது, ஆழத்தை உணராதது, அகம்பாவத்திற்குப் போராடுவது, அழகற்றது, தெளிவற்றது, பெருமைக்கு வாழ்வது, தூக்கமும் சோர்வும் கொண்டது, கடந்த கால சுமையின் பாரம், எதிர்கால கனவின் பாதிப்பு, இக்கணத்தை உணரமுடியாதது. இதை விடுத்து இயற்கையின் இணைப்புணர்வில் வேர் கொண்டவனாய் முளைத்து தழைத்து கிளைவிட்டு பூப்பூத்து மணம் பரப்புபவனாய், தனிமை விட்டு இயற்கையோடு மீண்டும் மீண்டும் இணையும் ஆனந்த அனுபவத்தில் திளைப்பவனாய் வாழச் சொல்வது ஓஷோவின் தியானம்.

நண்பர்களே வாருங்கள் !
இந்த வாழ்வை பணயம் வைப்போம்
இயற்கை இணைந்த வாழ்வுக்காக தியானம் புரிவோம் !

அன்பு,
சித்.


கவிதைப் பகுதி

அன்பு ஒரு சந்திப்பு

கோபம், பொறாமை, பேராசை
பயம், அடிமைத்தனம், பதுங்கல்,
அதிகாரம், ஆணவம், சூழ்ச்சி

இவை விலங்குகள் தம்தம் நிலையில்
தப்பித்து உயிர் பிழைக்க
தழைத்திருக்கும் உபாயங்கள்.

தானாய் புலன்வழி இயங்கி
தகவல் பெற்று தன்னை மேலும்
மெருகேற்றிக் கொண்டிருக்கும்
இந்த மனம் விலங்கு மனம் இது ஒரு புறம்

சக்திமயமாய் ஊற்றெடுத்து
சலனங்களில் உலகம் படைத்து
சர்வத்திலும் வியாபித்திருக்கும்
சாட்சிபாவ கடவுள் நிலை மறுபுறம்.

இரண்டும் சந்திக்கிறது
சிந்திக்கிறது
சாதிக்கிறது
அது அன்பில்
மனிதனில்
ஆம். மனிதனில் நேயத்தை எடுத்துவிட்டால் விலங்கு.
ஆம். மனிதனில் விலங்கை விலக்கிவிட்டால் கடவுள்.. மெளனத்தில் விளைந்த முத்துகள் – ஓஷோ


 ஆயிரக்கணக்கான கேள்விகள் இருக்கலாம், ஆனால் அதற்குக ஒரே ஒரு பதில்தான். உனது விழிப்புணர்வு.

 வாழ்க்கை என்பது இறுக்கம் அல்ல. மனித மனங்களை தவிர.

 வாழ்க்கை எப்படியோ அப்படியே ஏற்றுக்கொள். வேறு ஏதாவதாக மாற்ற முயற்சிக்காதே.

 நீ நீதான். உன்னுடன் ஒப்பிடக்கூடியவர் யாருமில்லை.

 வாழ்வை இந்த ஒரு கணத்தில் முழுமையாக வாழ்வது எப்படி என்று உனக்கு தெரிந்துவிட்டால் இந்த வாழ்வின் முழு இரகசியமும் உனக்கு தெரிந்துவிடும்.

 வாழ்க்கை அர்த்தமுள்ளதுமல்ல, அர்த்தமற்றதுமல்ல. வாழ்க்கை ஒரு வாய்ப்புதான், ஒரு வாசல்தான்.

 கொடுப்பவனாக இரு. உன்னால் கொடுக்கமுடிந்ததை பகிர்ந்துகொள்.

 அன்பு பயத்திற்கு நேர் எதிர் துருவமாகும். வாழ்வு அன்பின் அடிப்படையில் இருக்கவேண்டும், பயத்தின் அடிப்படையில் இருக்கக்கூடாது.

 இந்த கணமே நீ அனைத்து பிரச்சனைகளையும் விட்டுவிடமுடியும் ஏனெனில் அவை நீ உருவாக்கியவைதான்.

 தேடுதல் அழிவற்றதை நோக்கியதாக இருக்கவேண்டும் மேலும் ஒவ்வொருவருக்கும் அழிவற்றதை அனுபவப்படகூடிய ஆற்றல் இருக்கிறது.

 ஒவ்வொரு எண்ணமும் விடப்படவேண்டும். அது நல்லதோ கெட்டதோ அது முக்கியமல்ல.

 எல்லா பயங்களுடனும் அறியாத்தின் சவாலை ஏற்றுக் கொள்வதே தைரியம். பயம் அங்கிருக்கும், ஆனால் திரும்ப திரும்ப அந்த சவாலை ஏற்றுக்கொண்டால் மெதுமெதுவாக அந்த பயங்கள் மறைந்துவிடும்.

 உனது பிரச்சனைகளை மற்றொரு முறை நன்றாக பார். நீ ஆழமாக பார்க்க, பார்க்க அவை சிறிதாக தெரியும்.

 நீ ஒரு ரோஜாவா, தாமரையா, அல்லியா என்பது ஒரு விஷயமே அல்ல. நீ மலர்கிறாயா என்பதுதான் பிரச்சனை.

 இறந்த காலமும் கிடையாது, எதிர்காலமும் கிடையாது, இந்த கணம் மட்டுமே உள்ளது நீ எப்படி எதனோடு எதனை ஒப்பிடுவாய்.

 ஆசை உள்ளே நுழையும்போது படைப்பு மறைந்துவிடுகிறது.

 உனது உடலுடன் ஏதாவது செய்யும்போது உனது உடல் சொல்வதை கவனி.ஓஷோ வீடியோ

1. OSHO : ALLOW THE SILENCE TO GROW
2.OSHO : I DON’T WANT TO BE RESPECTABLE3. OSHO : NO TIME FOR MEDITATION
தியான யுக்திகள்

தியான யுக்தி – 1

உனது சொந்த குரலை கண்டுபிடித்தல்

நீ உனது சொந்த விருப்பத்தின் மூலமாக செயல்பட முடிந்தால், உனது உள்ளுணர்வு சொல்வதை தேர்ந்தெடுக்கமுடிந்தால். . . . ! உனது உள்ளுணர்வு குழந்தை பருவத்தில் மிகவும் வலிமையானதாக இருக்கும். ஆனால் வளர வளர மெதுமெதுவாக அது வலிமையிழந்துவிடுகிறது. பெற்றோர்களின், ஆசிரியர்களின், சமுதாயத்தின், குருமார்களின் குரல் வலுத்து ஒலிக்க ஆரம்பித்துவிடுகிறது. நீ உனது குரலை கண்டுபிடிக்க வேண்டுமென்றால் அந்த கூட்டத்தை விட்டு வெளியே வர வேண்டும்.

முதல் படி:
உள்ளே கவனி – இது யாருடைய குரல் ? சில நேரங்களில் அது உனது தந்தையினுடையதாக சில சமயங்களில் அது உனது தாயினுடையதாக, சில நேரங்களில் தாத்தாவினுடையதாக, சில நேரங்களில் உனது ஆசிரியருடையதாக இருக்கலாம். இவையனைத்தும் வேறு வேறு விதமாக இருக்கும். அவ்வளவு சுலபமாக அடையாளம் காண முடியாத ஒரே விஷயம்- உனது சொந்த குரல். அது எப்போதும் அடக்கி வைக்கபட்டிருக்கும். பெரியவர்கள் சொல்வதை, குருமார்கள் சொல்வதை, ஆசிரியர்கள் சொல்வதை, கேட்கவேண்டும் என்று உனக்கு சொல்லப்பட்டிருக்கும். ஆனால் உன்னுடைய சொந்த குரலை கவனி, அது கூறுவதை கேள் என்று உனக்கு சொல்லப்பட்டிருக்காது.

உன்னுடைய சொந்த குரல் மெலிதானதாக, கேட்கப்படாமல், இந்த கூட்ட நெரிசலில் கேட்க முடியாதபடி அழுந்தி இருக்கும். அதை கேட்பது கிட்டதட்ட இயலாத செயல். முதலில் நீ இந்த குரல்களிலிருந்து வெளியேற வேண்டும், ஒரு விதமான அமைதியை, மெளனத்தை, நிசப்த்த்தை அடையவேண்டும். அப்போதுதான் அது கேட்கும், உனக்கே சொந்தமான குரல் உண்டு என்பது ஒரு ஆச்சரியமான விஷயமாக உனக்கு தெரியும். அது அங்கே ஒரு ஆழ்நீரோட்டமாக, அடி நீரோட்டமாக இருந்துகொண்டேயிருக்கும்.
நீ உனது சொந்த விருப்பத்தை காணமுடியாவிடில், உனது வாழ்க்கை கருவறையிலிருந்து கல்லறை வரை மிக நீண்ட ஒரு சோகமாகத் தான் இருக்கும். தன்மீது பிறர் திணிக்கும் அவர்களது கருத்துகளை எதிர்த்து புரட்சி செய்து தங்களது விருப்பத்தின்படி வாழும் மக்களே இந்த உலகில் ஆனந்தமாக வாழும் மக்கள். மற்றவர்களது கருத்துகள் எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும் அவை உன்னுடையதாக இல்லாதபோது அவை பயனற்றவையே. உன்னுள் உதயமாகும், உன்னுள் வளரும், உன்னுள் மலரும் கருத்துகளே அர்த்தமுள்ள கருத்துகளாகும்.

இரண்டாம் படி:
யார் பேசுவது என கவனிப்பது !
நீ என்ன பேசினாலும் செய்தாலும் நினைத்தாலும் முடிவு செய்தாலும் உன்னை நீயே கேட்டுக்கொள் : இது உன்னிடமிருந்து வருகிறதா அல்லது வேறு யாராவது பேசுகிறார்களா ?
உன்னுடைய சொந்த குரலை கண்டுபிடித்துவிட்டால் நீ ஆச்சர்யபடுவாய். உன்னுடைய தாயின் குரலை நீ திரும்பவும் கேட்பாய். தந்தையின் குரலை திரும்பவும் கேட்பாய்- அதை கண்டுபிடிப்பது கடினமானதல்ல. முதன்முறை உனக்கு கொடுக்கப்பட்ட சமயத்தில் எப்படி சொல்லப்பட்டதோ அப்படியே பதிவு செய்யப்பட்டிருக்கும். அந்த அறிவுரை, கட்டளை, ஒழுக்கம், ஆகிய எல்லாமும் – நீ குருமார்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், சொந்தகாரர்கள், மற்றும் பக்கத்து வீட்டுகாரர்கள் ஆகிய பலரையும் நீ அங்கே காணலாம். சண்டையிட வேண்டிய அவசியமில்லை. அது உன்னுடைய குரலல்ல, வேறு யாருடையதோ – யாராயிருந்தாலும் சரி, வேறு யாரோ தான்- என்று தெரிந்துகொள், அதுவே போதும். நீ அதை பின்பற்றமாட்டாய். அதன் விளைவுகள் என்னவாக இருந்தாலும் சரி, நன்மையோ, தீமையோ- நீ இப்போது உன் வழியே செல்ல முடிவெடுத்துவிடுவாய். நீ பக்குவப்பட, பண்பட ஆரம்பித்துவிடுவாய்.நீ குழந்தையாக இருந்தது போதும், நீ சார்ந்திருப்பவனாக இருந்தது போதும். நீ இந்த குரல்களை கேட்டு கேட்டு அதை பின்பற்றுபவனாக இருந்தது போதும்.அவா உனக்கு கொடுத்தது என்ன ? குழப்பம்தான்.

மூன்றாம் படி:
நன்றி. . . . வணக்கம்.
ஒருமுறை அது யாருடைய குரல் என்பதை நீ கண்டு கொண்டு விட்டால் அந்த குரலுக்குரியவருக்கு நன்றி சொல், பின் உன்னை விட்டு போகச் சொல், பின் அந்த குரலுக்கு, அந்த குரல் சொல்லும் விஷயத்திற்கு வணக்கம் சொல். உனக்கு அந்த குரலை கொடுத்த நபர் உனது விரோதியல்ல. அவருடைய குறிக்கோள் தீமை செய்வதல்ல, ஆனால் அவரது குறிக்கோள் என்ன என்பதல்ல கேள்வி. உனது உள் மையத்திலிருந்து வராத ஏதோ ஒன்றை அவர் உன்னிடம் பதிய வைக்கிறார் என்பதுதான் பிரச்சனை, மேலும் வெளியிலிருந்து வந்து பதியும் எதுவுமே உன்னை மனரீதியாக அடிமைப்படுத்தும்.

ஒருமுறை அந்த குரலிடம் என்னை விட்டுவிடு என்று உறுதியாக கூறிவிட்டால், பின் நீ அதனுடன் கொண்டுள்ள தொடர்பு, நீ அதனுடன் கொண்டுள்ள அடையாளம் உடைந்துவிடும். அது உன்னுடைய குரல் என்று நீ நினைத்துக்கொண்டிருக்கும் வரைதான் அது உன்னை கட்டுப்படுத்தும் திறன் பெற்றிருக்கும். அந்த அடையாளம் தான் முழு பிரச்சனையே. அது உனது எண்ணமல்ல, உனது குரலல்ல, என இப்போது உனக்கு தெரியும். அது உனது இயல்புக்கு அன்னியமானது. அதை தெரிந்துகொள்வதே போதுமானது. உன்னுள் உள்ள அந்த குரல்களிலிருந்து நீ விடுபட்டவுடன் நீ இதுவரை கேட்டிராத மெலிதான, சிறிய குரலை கேட்கும்போது வியப்படைவாய். . . . பின் நீ அதுதான் உனது குரல் என்று தெளிவாக அறிந்துகொள்வாய்.

அது எப்போதுமே அங்கிருக்கிறது, ஆனால் மெலியதாக, சன்னமாக கேட்கும் ஏனெனில் அது அடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. நீ குழந்தையாக இருக்கும்போது அந்த குரல் மெல்லியதாக இருக்கும், ஒரு விதை முளைவிட்டதைபோல, ஆனால் மற்ற செடிகள் அதை மறைத்து மூடிவிட்டன. நீ இப்போது அந்த செடிகளை பார்த்து கவனித்துகொண்டிருக்கிறாய், அந்த சிறிய முளைதான் உனது வாழ்க்கை, அது இன்னும் உயிரோடு இருக்கிறது, நீ அதை கண்டுபிடிப்பதற்காக அது காத்திருக்கிறது என்பதை நீ முற்றிலுமாக மறந்துவிட்டாய். உனது சொந்த குரலை கண்டுபிடி, பின் எந்தவித பயமும் இல்லாமல் அதை பின்பற்று.

அது உன்னை எங்கே வழிகாட்டி கூட்டி சென்றாலும் அதுதான் உன் வாழ்வின் இலட்சியம், அதுதான் உனது இறுதிப்பாடு. அங்கே மட்டுமே நீ நிறைவடையமுடியும், திருப்தியடையமுடியும். அங்கேதான் நீ மலர்ச்சியடைவாய்- அந்த மலர்தலில்தான் அறிதல் நிகழும்.

Source: THE REBEL

தியான யுக்தி - 2
தலையாய குணங்கள்

முதல்படி :
உனது சக்தியை எடுத்துகொள்வது எது உனது விசேஷ குணாதிசயம் எது என கண்டுபிடிப்பது மிக எளிது – சில தினங்களுக்கு உனது மனதை கவனித்துக் கொண்டிரு- ஒரு டைரி எடுத்து விஷயங்களை குறித்து வைக்கலாம் – உனது சக்தியை, அதிகபட்சமாக எடுத்துக் கொள்வது எது ? உனது கற்பனையை செலுத்துவது எது ?

பொறாமை ? அதிகாரத்திற்கான ஆவல் ? ஆணவம் ? இவைதான் உனது முதல் எதிரி.
ஒவ்வொருவரும் வேறு வேறு விதமான விஷயங்களை கண்டுபிடிப்பர் – கோபம், பாலுணர்வை அடக்கி வைத்தல் – இதுபோல. அது என்ன என்று கண்டுபிடித்தலே பாதி வெற்றியடைந்தது போலத் தான். ஏனெனில் நீ மட்டும்தான் கண்டுபிடிக்கமுடியும்.
குருட்ஜிப் தனது சீடர்கள் இதை கண்டுபிடிக்க பலவேறு விதமான வழிகள் வைத்திருந்தார். ஒரு மன நல மருத்துவர் உன்னுடைய கனவுகள் மூலமாக இதை கண்டுபிடித்துவிடுவார். ஆனால் அவர் எந்த பள்ளியில் இருந்து கற்றுக்கொண்டு வந்தாரோ அந்த வழிமுறை மூலமாக அதை பொருள் கொண்டுவிடுவார்.

இரண்டாவது படி:
எதிர்வினை புரியாதே. அதைப் பற்றிய விழிப்புணர்வு கொள். அந்த எதிரி வரும்போது எதிர்வினை புரியாதே. அமைதியாக இருந்து அது திரையில் கடந்து செல்வதை கவனிப்பதுபோல கவனி. நீ அதனுடன் பிணைப்பு கொள்ளாவிடில் திடீரென உனது எதிரி எடுத்துக் கொண்டிருந்த ஒரு அளவற்ற சக்தி விடுதலை பெறும். நீ புத்துணர்வடைவாய். உநது முழு இருப்பும் திடீரென புதுமையாக இளமையாக மாறும்.

மூன்றாவது படி:
மற்றவைகளையும் கண்டுபிடி. பின் இரண்டாவது மூன்றாவது எதிரிகளை கண்டுபிடி. உனக்கு உன்னிடம் உனது சக்தியை எடுத்துக் கொள்ளும் எதிரிகளே இல்லாத போது உன்னிடம் ஒரு அழகு, சாந்தம், அளவற்ற சக்தி ஆயிரம் தாமரை மலர்களாக உன்னிடம் மலரும்.

Source: THE TRANSMISSION OF THE LAMP

ஓஷோவின் விளக்கம் - ஏழு பள்ளத்தாக்குகள் – பகுதி 3

ஓஷோ மனிதன் கடந்து செல்லும் பாதையில் ஏழு பள்ளத்தாக்குகள் இருக்கின்றன என்று கூறுகிறார். அதைப் பற்றி அவர் கூறுவதன் 3-வது மாதத் தொடர்ச்சி.

மூன்றாவது பள்ளத்தாக்கு தடுப்பு சுவர் தடை பள்ளதாக்கு என அழைக்கப்படுகிறது. ஒருமுறை மனசாட்சி எழுந்துவிட்டால் இப்போது உன்னால் அங்கே எத்தனை தடுப்புகள் இருக்கின்றன என்பதை பார்க்க இயலும். எத்தனை தடைகள் இருக்கின்றன என்பதை பார்க்க உன்னிடம் இப்போது பார்வை உள்ளது. சுவர்களுக்கு அப்பால் சுவர்களாக உள்ளன. கதவுகளும் இருக்கின்றன, ஆனால் அவை வெகு சிலவே உள்ளன. அவையும் எங்கோ தொலைவில் இருக்கின்றன. உன்னால் எல்லா விதமான தடுப்பு சுவர் தடைகளையும் பார்க்க இயலும். அல்ஹசலாலி நான்கு இருப்பதாக கூறுகிறார்.

முதலாவது தூண்டும் இந்த உலகம் – பொருட்களின் உலகம் – இது கவர்ச்சிகரமானது. காமமே உருவாகிறது. ஏன் உலகிலுள்ள அனைத்து மதங்களும் தூண்டும் இந்த உலகத்தை கடந்து போக வேண்டுமென்று கூறுகின்றன.? ஏனெனில் நீ இந்த உலகத்தால் கவர்ந்து இழுக்கப்பட்டால், நீ இந்த உலகத்திலுள்ள பொருட்களுக்காக மிகவும் ஆசைப்பட்டால், நீ கடவுளை அடைவதற்கு ஆசைப்படுவதற்கு போதுமான அளவு சக்தி இருக்காது. உனது ஆசை பொருட்களின் மீது வீணடிக்கப்படுகிறது. ஒரு பெரிய வீடு வேண்டும், வங்கியில் அதிக பணம் இருப்பு இருக்கவேண்டும், உலகில் அதிகார பலம் வேண்டும், கெளரவம் வேண்டும் என ஆசைப்படும் ஒரு மனிதன் தனது எல்லா ஆசைகளையும் இந்த உலகத்திலேயே முதலீடு செய்கிறான், இந்த உலகின் மீது ஆசைப்படுகிறான். கடவுளை தேட ஆசை எதுவும் அவனிடம் மிச்சமில்லை. பொருட்கள் அவையளவில் எதுவும் மோசமானவையல்ல. சூபிகள் பொருட்களுக்கு எதிரியல்ல. அவர்கள் பொருட்கள் அவையளவில் நல்லவை என்றும் ஆனால் கடவுளை தேடும் ஒருவருக்கு அறுதி உண்மை, சத்தியம் கிடைக்காமல் போகக்கூடும், அதற்கு குறிப்பிட்ட விதமான சக்தி தேவைப்படும், உன்னிடம் குறிப்பிட்ட விதமான குணாதிசயம் இருக்கவேண்டும் என கூறுகின்றனர். முழு சக்தியும் ஒரே ஆசையில் செலுத்தப்படவேண்டும். எல்லா ஆசைகளும் ஒரே ஆசையாக வேண்டும்,

அப்போதுதான் கடவுளை அடையும் பாதை வழி செல்லமுடியும், அப்போதுதான் நீ இந்த மூன்றாவது பள்ளதாக்கை கடக்கமுடியும். சாதாரணமாக நம்மிடம் பல ஆசைகள் உண்டு. பல சிற்றாறுகள், ஓடைகள், நதிகள், ஒன்றிணைந்து பெரிய கங்கை நதியாக மாறுவது போல எவனுடைய மற்ற எல்லா ஆசைகளும் ஒன்றாக சேர்ந்து ஒரே ஆசையாக மாறுகிறதோ, எவனிடம் ஒரே ஒரு ஆசை- கடவுளை சேரும் ஆசை மட்டுமே இருக்கிறதோ அவன்தான் ஆன்மீக வாதி. ஆன்மீக வாதியின் அனைத்து ஆசைகளும் ஒரே ஆசையாக மாறிவிடுகின்றன. அவன் கடவுளுக்கு ஆசைப்படுகிறான், அவன் கடந்து செல்ல ஆசைப்படுகிறான். அதனால் முதலாவது கவர்ந்திழுக்கும் இந்த உலகம்,

இரண்டாவது மனிதர்கள் – மனிதர்களுடன் ஏற்படும் பாசம். சூபிகள் மனிதர்களுக்கு எதிரானவர்களல்ல என்று மறுபடியும் கூறுகிறேன். அவர்கள் மனிதர்கள் மீது பாசம் கொள்ளக் கூடாது என்று கூறுகிறார்கள். இல்லாவிடில் அந்த பாசமே ஒரு தடையாக, கடவுளை தேட ஒரு தடுப்பு சுவராக மாறிவிடும். உனது கணவனுடனோ, மனைவியுடனோ, இரு, உனது குழந்தைகளுடன் இரு, உனது நண்பர்களுடன் இரு,

ஆனால் நாம் அனைவரும் இங்கே அன்னியர்கள்தான் என்பதை நினைவில் கொள். நாம் சேர்ந்திருப்பது தற்செயலாக நடந்த ஒரு செயல்தான் விபத்துதான் நாம் பயணிகள், நாம் செல்லும் பாதையில் சந்திக்கிறோம். சில நாட்களுக்கு நாம் சேர்ந்திருப்போம். அதற்காக நன்றியுணர்வு கொள். ஆனால் கூடிய விரைவில் பாதைகள் பிரியும். உனது மனைவி இறந்துவிடுவாள், அவள் அவள் வழியே சென்றுவிடுவாள், அது எங்கே என்றே உனக்கு தெரியாது, அல்லது உனது மனைவி வேறு யாருடனாவது காதலில் விழுந்துவிடுவாள், உங்களது பாதைகள் வேறாகிவிடும். அல்லது நீ வேறு யார் மீதாவது காதல் கொண்டுவிடுவாய் அல்லது உனது மகன் வளர்ந்துவிடுவான் அவன் தனது வாழ்வை முடிவு செய்யும் உரிமையை தன் கையில் எடுத்துகொண்டு உன்னிடமிருந்து விலகி சென்றுவிடுவான். ஒவ்வொரு மகனும் பெற்றோரிடமிருந்து சென்றே ஆக வேண்டும். நாம் இந்த பாதையில் சில தினங்களுக்கு மட்டுமே சேர்ந்து இருப்போம். நாம் சேர்ந்திருப்பது ஒரு விபத்து போல தற்செயலானது. அது எப்போதும் நிரந்தரமாக இருக்கப்போவதில்லை. அதனால் மனிதர்களுடன் இரு, அன்பாக இரு, கருணையோடு இரு ஆனால் பாசம் கொண்டுவிடாதே.- இல்லாவிடில் உனது பாசம் நீ கடந்து செல்ல உன்னை அனுமதிக்காது. அதனால் இரண்டாவது விஷயம் பாசம், மனிதர்களுக்கிடையேயான பாசம்.

அல்ஹசலிலா மூன்றாவதாக கூறுவது சைத்தான், நான்காவது அகங்காரம். சைத்தான் என அவர் குறிப்பிடுவது மனதைதான் – நீ கடந்த காலத்தை பதிவு செய்து சேர்த்து வைத்திருப்பதுதான் மனது எனப்படுவது. மனசாட்சி பிறந்துவிட்டாலும், முன்னெப்போதையும் விட அதிக மனத்தெளிவுடன் நீ இருந்தாலும், மனதின் இயந்திரத்தனமான செயல்பாடு அங்கே அருகிலேயே காத்துகொண்டிருக்கும். அது இன்னும் சிறிது காலம் அங்கே இருக்கும். அது உன்னுடன் அதிக நாட்கள் இருந்துவிட்டதால் திடீரென அது உன்னை விட்டு போய்விடமுடியாது. அதற்கு காலமெடுக்கும். அது அங்கே காத்திருக்கும், கவனித்துகொண்டிருக்கும்- வாய்ப்பு ஏற்பட்டால் அது உடனே உன்மேல் குதித்து உன்னை தன்வசப்படுத்திக்கொண்டுவிடும். அது உன் எஜமான்னாக இருந்திருக்கிறது, நீ அதன் அடிமை போல செயல்பட்டுகொண்டிருந்திருக்கிறாய். திடீரென நீ எஜமானனாகிவிட்டதை மனதால் ஒத்துகொள்ள முடியாது, அதற்கு காலமெடுக்கும். மனம் ஒரு இயந்திரம். அது எப்போதும் அங்கிருக்கும். ஒரு தேடுபவனுக்கு மனம் ஒரு சைத்தான். சைத்தானை பற்றிய கதைகள் அனைத்துமே மனதைப்பற்றிய கதைகள்தான். டெவில் அல்லது சைத்தான் – சுபிகள் டெவில் என்று அழைத்தனர்- டெவில் என்பது மனதின் உருவக பெயர்தான்.

சைத்தான் ஜீஸஸை ஆசை காட்டியது எனும்போது ஏதாவது அங்கே வெளியே நின்றுகொண்டிருந்தது என்றா நினைக்கிறாய்.? மடையனாக இருக்காதே. அங்கே எதுவும் வெளியே இல்லை. அந்த தூண்டுதல் ஜீஸஸின் சொந்த மனதிலிருந்துதான் வந்தது. இப்போது உனக்கு அளவிடற்கரிய சக்தி வந்துவிட்டது நீ ஏன் மற்ற விஷயங்களை பற்றி கவலைப்படுகிறாய்.? நீ ஏன் இந்த முழு உலகத்தின் அரசனாக கூடாது.? நீ அதை அடையலாம். அதற்கு உனக்கு சக்தியிருக்கிறது. நீ இந்த முழு உலகத்தையும் உனதாக்கிக் கொள்ளலாம், உனக்கு ஏகப்பட்ட சக்தி இருக்கிறது. நீ ஆன்மீக ரீதியாக உயர்ந்து நிற்கிறாய். உனக்கு அஷ்டமா சித்திகளும் கைவரப்பெற்றுவிட்டன. நீ ஆசைப்படும் பொருள், புகழ், கெளரவம் அனைத்தையும் நீ அடையலாம். ஏன் கடவுளைப்பற்றியும் மததைப்பற்றியும் கவலைப்படுகிறாய்.? இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள் என்று மனம் தூண்டுகிறது. ஜீஸஸ் எனது வழிக்கு வராதே போய்விடு என்று கூறுகிறார். அவர் வெளியே எங்கோ உள்ள டெவிலிடம் பேசவில்லை. அவர் தனது மனதிடம்தான் தயவுசெய்து என் வழியில் குறுக்கே வராதே. நீ கொண்டுள்ள ஆசைகளை பற்றி எனக்கு கவலையில்லை, நீ வைத்துள்ள கனவுத் திட்டங்களைப் பற்றி எனக்கு அக்கறை கிடையாது, நான் முற்றிலும் வேறுவிதமான பாதையில் பயணம் சென்றுகொண்டிருக்கிறேன். உனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது, நீ பேசாமல் இரு, என்று கூறுகிறார்.

நான்காவது அகங்காரம். தேடும் பாதையில் செல்பவனுக்கு இருக்கக் கூடிய மிகப் பெரிய தடுப்புச் சுவர். சிறிதளவு தன்ணுனர்வு பெறும்போது, உனது மனசாட்சி எழும்போது, தடுப்பு சுவர் தடைகளை உன்னால் பார்க்க முடியும் போது எங்கிருந்தோ ஒரு ஆணவம் எழுந்து, உன்னை தன்வசப்படுத்திகொள்கிறது. நான் ஒரு துறவியாக, ஒரு சித்தராகிவிட்டேன். நான் இனிமேலும் சாதாரணமானவன் அல்ல, நான் சிறப்பானவன் என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது- அங்கே நான் சிறப்பானவன் என்பதுதான் பிரச்சனை. அது உண்மைதான். அதனால் ஆணவம் அதை உறுதி செய்கிறது. இதுதான் மிகப்பெரிய பிரச்சனை, ஏனெனில் ஆணவம் முட்டாள்தனமாக எதையும் பேசவில்லை. அது தெரிந்தே சொல்கிறது. அது அப்படித்தான் என்று நீயும் எடுத்துக்கொள்கிறாய், ஆனால் நீ ஆணவத்துடன் உன்னை அடையாளப்படுத்திகொண்டுவிட்டால், நான் சிறப்பானவன் என்பதுடன் உன்னை கோர்த்துக் கொண்டுவிட்டால், பின் நீ எப்போதும் மூன்றாவது பள்ளத்தாக்கிலேயே இருக்கவேண்டியிருக்கும் என்பதால் அதில் நீ கவனமாக இருக்கவேண்டும். நீ நான்காவது பள்ளத்தாக்கை சென்றடையவே முடியாது,

மேலும் நான்காவது பள்ளத்தாக்கு அதிகமான சிகரங்களையும் மேலும் அதிகமான மலர்களையும் அதிக சந்தோஷங்களையும் தர வல்லது.- நீ இந்தப் பள்ளத்தாக்கை தவறவிட்டுவிடுவாய். இதுதான் சித்திகள்- ஆன்மீக சக்திகள்- மிகவும் தடையான விஷயங்களாக மாறக்கூடிய இடம். இந்த்த் தடைகளோடு சண்டையிட ஆரம்பிப்பது இதன் எதிர்மறையான பாகமாகும். நீ சண்டையிட ஆரம்பித்தால் நீ பள்ளத்தாக்கிலேயே தொலைந்துபோய்விடுவாய். சண்டையிட வேண்டிய அவசியம் இல்லை. எதிரிடையானதை உருவாக்காதே. புரிந்துகொள்ளுதலே போதுமானது. சண்டையிடுதல் என்றாலே அமுக்கி வைத்தல்தான்.

நீ உனது ஆணவத்தை, மக்களுடன் உனக்கிருக்கும் பாசத்தை, பொருட்கள் மீது உனக்கிருக்கும் காதலை, உனது மனதை, உனது சைத்தானை, அடக்கி அமுக்கி வைக்கலாம், ஆனால் அந்த அடக்கி வைத்தல் எப்போதுமே அங்கிருக்கும். உன்னால் நான்காவது பள்ளதாக்கிற்க்குள் நுழையவே முடியாது. அடக்கி வைத்திருப்பது என்பது யாரிடம் இல்லையோ அவர்கள் மட்டுமே நான்காவது பள்ளதாக்கினுள் நுழையமுடியும். அதனால் அடக்கி வைக்கவோ, அமுக்கி வைக்கவோ செய்யாதே. நேர்மறையானது என்னவென்றால் சவாலை சந்தி – ஆணவம் உனக்கு சவால் விடுகிறது. அதை உனது எதிரியாக பாவிக்காதே. அதற்கு பதிலாக கடந்து செல்வதற்கு ஏற்படும் ஒரு சவாலாக எடுத்துக் கொள். அதனுடன் சண்டையிடாதே. அதை புரிந்துகொள். அதனுள் ஆழ்ந்து பார். அதன் நுட்பம் என்னவென்று பார். எப்படி அது செயல்படுகிறது, எப்படி இந்த புதுவிதமான ஆணவம் உன்னுள் வந்தது.? எப்படி மனம் உன்னுடன் விளையாடிக் கொண்டே இருக்கிறது ? நீ எப்படி மனிதர்களுடன் பாசம் கொள்கிறாய்.? எப்படி பொருட்கள் மீது பிணைப்பு கொள்கிறாய் ? என்று பார்.

ஆத்திரப்படாமல் பொறுமையாக அது எப்படி வேலை செய்கிறது என்று பார். எந்த வகையிலாவது நீ ஆத்திரப்பட்டால் நீ சிக்கிகொண்டாய். எந்த வகையிலாவது உணர்ச்சிவசப்பட்டால் நீ சிக்கிக்கொண்டாய். இந்த இரண்டு விஷயங்களும் மிக எளிதாக நடக்ககூடியவை. மக்களுக்கு இரண்டே விஷயங்கள் தான் தெரியும். நண்பர்களாக இருப்பது எப்படி என்று அவர்களுக்கு தெரியும், அல்லது எதிரிகளாக இருக்க தெரியும். சாதாரணமாக இப்படித்தான் புரிந்துகொள்ளமுடியும். மூன்றாவது விஷயம்தான் உதவும். கவனமாக இரு, சாட்சியாக இரு. எதிரிடையாகவோ நட்பாகவோ இருக்காதே. விலகி இரு, தொட்டும் தொடாமலும் இரு. அது அங்கிருப்பதை மட்டும் பார், ஆதரவாகவோ எதிராகவோ எந்த உணர்வுபூர்வ அணுகுமுறையை நீ எடுத்தாலும் அந்த உணர்வே ஒரு தளையாக மாறிவிடும். உணர்வானது என்றாலே நீ பிணைக்கபட்டிருக்கிறாய். நினைவில் கொள். நீ எந்த அளவு நண்பர்களுடன் பிணைக்கப்பட்டிருக்கிறாயோ அந்த அளவு எதிரிகளுடனும் பிணைக்கப்பட்டிருக்கிறாய். உனது எதிரி இறந்துவிட்டால் உனது நண்பன் இறந்துவிட்டால் இழப்பை உணரும் அதே அளவு இழப்பை அங்கேயும் உணர்வாய். – சில நேரங்களில் அதைவிட அதிகமாக கூட. ஏனெனில் எதிரி உனது வாழ்வுக்கு அர்த்தம் கொடுத்தான். அவனுடன் சண்டையிடுவதன் மூலம் நீ ஒரு விஷயத்தை அனுபவித்தாய். இப்போது அவன் அங்கில்லை. அவனுடன் சண்டையிடுவதன் மூலம் திருப்தியை அனுபவித்த உனது ஆணவம் திரும்பவும் திருப்தியை அனுபவிக்கப் போவதேயில்லை. நீ ஒரு புது எதிரியை தேடி அடையவேண்டும். அதனால் நண்பர்களையோ பகைவர்களையோ உருவாக்காதே. வெறுமனே பார். விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையோடு இரு. அதுதான் நேர்மறையான விஷயம். ஆணவம் என்பது என்னவென்று ஆழமாக அறிந்து புரிந்து கொள், சந்தோஷத்தை அறிந்துகொள், காமம் என்றால் என்னவென்று புரிந்துகொள், மகிழ்ச்சியை அறிந்துகொள்.

Source - The Secret of Secrets Vol 2 che #1

தனிமை பற்றி வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஓஷோவின் பதில்

கேள்வி :
நீங்கள் அன்றொரு நாள் நாம் தனியாகவேதான் பிறக்கிறோம், தனியாகவேதான் வாழ்கிறோம், தனியாகவேதான் இறக்கிறோம் என்று கூறினீர்கள். இருப்பினும் நாம் பிறந்ததிலிருந்து நாம் என்ன செய்தாலும், யாராக இருந்தாலும் நாம் அடுத்தவருடன் தொடர்பு கொள்ளுதலையே தேடுகிறோம். மேலும் குறிப்பிட்ட ஒருவருடன் அன்யோன்யமாக இருப்பதற்கு, நெருக்கமாக இருத்தலையே விரும்புகிறோம், அதில் ஈடுபாடு கொள்கிறோம். நீங்கள் இதைப்பற்றி ஏதாவது கருத்து சொல்ல முடியுமா ?


தியான் அமியோ,
நீ கேட்டிருக்கும் இந்த கேள்வி ஒவ்வொரு மனிதனுக்கும் வருகிறது. நாம் ஒருவனாகத்தான் பிறக்கிறோம், ஒருவனாகத்தான் வாழ்கிறோம், ஒருவனாகத்தான் இறக்கிறோம். ஏகாந்தம்தான் நமது உண்மைநிலை. ஆனால் நமக்கு அதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லை. நமக்கு அதைப்பற்றிய உணர்வு இல்லாத்தால் நாமே நமக்கு அன்னியர்களாக தெரிகிறோம். நமது ஒருமையை ஒரு அற்புதமான வரமாக, அழகாக, மௌனமானதாக, அமைதியானதாக, பிரபஞ்சத்துடன் ஒன்றி இருப்பதாக எடுத்துக் கொள்ளாமல் நாம் அதை தனிமையைக தவறாக புரிந்துகொள்கிறோம்.
ஒருமை தனிமை என தவறாக புரிந்து கொள்ளப் படுகிறது. நீ ஒருமுறை உனது ஒருமையை தனிமை என தவறாக புரிந்துகொண்டுவிட்டால் முழு பொருளும் மாறிவிடும். ஒருமை அழகானது, நேர்மறையானது, சிறப்பானது. தனிமை வறுமையானது, எதிர்மறையானது, இருண்டது, இருட்டானது.

தனிமையிலிருந்து எல்லோரும் தப்பித்து ஓடுகின்றனர். அது காயம் போன்றது, அது வலி தருவது. அதிலிருந்து தப்பிக்க ஒரே வழி கூட்டத்தினிடையே இருப்பது சமுதாயத்தின் பாகமாகி விடுவது, மனைவி அல்லது கணவனை தேடிக் கொள்வது, குழந்தைகள் பெற்றுக் கொள்வது ஆகியன. இந்த கூட்டத்தில் நீ உனது தனிமையை மறந்து விட முடியும்.ஆனால் அதை மறப்பதில் இதுவரை யாரும் வெற்றியடைய வில்லை. அது உனது இயல்பு, நீ அதை புறக்கணிக்கலாம் – ஆனால் நீ அதை அதாகவே பார்க்காததால் அந்த பிரச்னை மேலும் சிக்கலானதாகிறது. நீ ஒருமையாக பிறந்திருக்கிறாய் என்பதை நீ சலுகையாக எடுத்துக் கொண்டு மறந்துவிட்டாய்.

அகராதி அடிப்படையில் அவற்றிற்க்கு ஒரே அர்த்தம்தான். இது அந்த அகராதியை உருவாக்கிய மனிதர்களின் மனங்களை காட்டுகிறது. அவர்கள் தனிமைக்கும் ஒருமைக்கும் இருக்கும் அளவற்ற வித்தியாசத்தை புரிந்துகொள்ளவில்லை. தனிமை ஒரு பிளவு. ஏதோ ஒன்று விடுபட்டுவிட்டது. அதை நிரப்ப ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. அதை எதனாலும் நிரப்பமுடியாது. ஏனெனில் முதலாவதாக அது ஒரு தவறான புரிதல். நீ வயதில் வளர வளர அந்த பிளவும் பெரிதாகிறது. மக்கள் தங்களுடன் இருப்பதற்கு பயந்து கொண்டு மிகவும் முட்டாள்தனமான செயல்களை செய்கின்றனர். சீட்டுக்கட்டு தனியாக விளையாடுபவர்களை நான் பார்த்திருக்கிறேன். மற்றவர் அங்கே இருக்க மாட்டார். ஒரே ஆள் இரண்டு பக்கத்திலிருந்தும் ஆடக்கூடிய விளையாட்டை அவர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

எப்படியோ எதிலோ ஈடுபட்டிருக்க வேண்டும். அந்த ஈடுபடுதல் வேலையில் அல்லது மனிதர்களில் இருக்கலாம். வேலையில் ஈடுபடுவர்கள் வேலைபிசாசுகள். அவர்கள் வார இறுதி நாள் நெருங்க நெருங்க பயபடுவார்கள் – என்ன செய்யப் போகிறேமோ என்று. அவர்கள் எதுவும் செய்ய வில்லை, செய்ய முடிய வில்லை என்றால் அவர்களை அவர்களிடமே விட்டு விட்டால், அதுதான் மிகவும் வேதனையான அனுபவம் அவர்களுக்கு.

இந்த உலகில் வார இறுதி நாட்களில்தான் அதிக விபத்துக்கள் நடக்கின்றன என்பதை அறிந்தால் நீ ஆச்சரியப்படுவாய். மக்கள் தங்களது கார்களில் ஏறி ரிசார்ட்டுகளுக்கோ, மலைபிரதேசங்களுக்கோ, கடற்கரைக்கோ காரின் பின் முனையும் அடுத்த காரின் முன்முனையும் ஒட்டிக் கொண்டிருக்கும்படி போகிறார்கள். போய் சேர எட்டு மணி நேரமோ, பத்து மணி நேரமோ ஆகலாம், அங்கேயும் அவர்களுக்கு செய்ய எதுவோ கிடைத்து விட்டது. ஆனால் இப்போது அவர்களது வீடும், அவர்களது இடமும் இந்த கடற்கரை ரிசார்ட்டை விட அதிக அமைதியாக இருக்கும். எல்லோரும் இங்கு வந்து விட்டனர். ஆனால் ஏதோ ஈடுபாடு........

மக்கள் சீட்டுக்கட்டு, செஸ் விளையாடுகின்றனர். மணிக்கணக்காக டிவி பார்க்கின்றனர். ஒரு அமெரிக்கன் சராசரியாக 5 மணி நேரம் டிவி பார்க்கிறான். மக்கள் ரேடியோ கேட்கின்றனர். தங்களை தவிர்த்துக்கொள்வதற்காக மட்டுமே. அவர்களது எல்லா செயல்பாட்டிற்க்கும் காரணம் ஒன்றே. – தனிமையில் இருக்கக் கூடாது. அது மிகவும் அச்சமூட்டுவது. இந்த கருத்து மற்றவர்களிடம் இருந்து பெறப்பட்டது. ஒருமையில் இருப்பது அச்சமூட்டும் நிலை என்று உனக்கு யார் சொன்னது

ஒருமையை பற்றி தெரிந்த, அறிந்த யாராவது அதைப்பற்றி சொன்னால் அது முற்றிலும் வேறானது. ஒருமையாய் இருப்பதை விட அழகானது, அருமையானது, சந்தோஷமானது, அமைதியானது எதுவுமே இல்லை என்றே சொல்வார்கள். ஆனால் நீ கூட்டம் செல்வதை கேட்கிறாய். தவறாக புரிந்து கொண்டிருக்கும் மக்களே பெரும்பான்மையானவர்கள். அப்படி இருக்கும் போது யார் ஜராதுஸ்த்ராவைப் பற்றியோ, கௌதம புத்தரைப் பற்றியோ கவலைப்படுவார்கள் இந்த தனித்துவமான அரியவர் தவறாக இருக்கக் கூடும், அவர்கள் கற்பனையாக நினைத்துக் கொண்டிருக்கலாம், தங்களையும் ஏமாற்றிக் கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றக் கூடும். ஆனால் கோடிக்கணக்கான மக்கள் தவறாக இருக்க முடியாது அல்லவா மேலும் கோடிக்கணக்கான மக்கள், தனிமையில் விடப்படுவது வாழ்வில் மிக மோசமான அனுபவம், அது நரகம் என்று ஒத்துக் கொள்கிறார்கள்.

ஆனால் தனிமையில் விடப்படுவது நரகம் என்ற காரணத்தாலோ, தனிமையை பற்றிய பயத்தினாலோ உருவாக்கப்படும் எந்த உறவும் நிறைவை தராது. அதன் அடிப்படை வேரே விஷம். நீ உனது துணைவியை நேசிக்க முடியாது, நீ தனிமையில் இருக்க முடியாது என்று அவளை உபயோகிக்கிறாய். அவளும் அதே போலத்தான், அவளாலும் உன்னை நேசிக்க முடியாது. அவளும் தனிமையை தவிர்க்கத்தான் உன்னை உபயோகிக்கிறாள்.

இயல்பாகவே அன்பு என்ற பெயரில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் – அன்பைத் தவிர. சண்டைகள் வரலாம், வாக்குவாதங்கள் வரலாம், இருப்பினும் அவர்கள் தனிமையாய் இருப்பதை தேர்ந்தெடுப்பதில்லை. யாராவது ஒருவர் அங்கே இருக்கிறார், நீ ஏதோ ஒன்றில் ஈடுபட்டிருக்கிறாய். நீ உனது தனிமையை மறந்து விடலாம். ஆனால் அன்பு அங்கே சாத்தியமில்லை. ஏனெனில் அன்பிற்க்கான அடிப்படையே அங்கில்லை. அன்பு பயத்தின் மூலம் வராது, வளராது.

நீ கேட்கிறாய், நீங்கள் அன்றொரு நாள் நாம் தனியாகவே பிறக்கிறோம், தனியாகவே வாழ்கிறோம், தனியாகவே இறக்கிறோம் என்று கூறினீர்கள். ஆனாலும் நாம் பிறந்த அன்றிலிருந்து நாம் என்ன செய்தாலும், நாம் யாராகயிருந்தாலும் நாம் தொடர்பு கொள்ள மற்றவரை தேடுகிறோம் என்பது போல தோன்றுகிறது.

இப்படி தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள மற்றவரை தேடுவது தப்பிப்பதைத் தவிர வேறெதுவும் அல்ல. ஒரு சிறு குழந்தை கூட செய்ய எதையாவது கண்டு பிடிக்கிறது. எதுவும் கிடைக்காவிடில் தனது கால் கட்டை விரலை தனது வாய்க்குள் வைத்து சூப்ப ஆரம்பிக்கிறது. அது முற்றிலும் பொய்மையான ஒரு செயல், அதிலிருந்து எதுவும் கிடைக்க போவதில்லை, ஆனால் ஏதோ ஒன்றில் ஈடுபட்டிருக்கிறாய். அவன் எதையோ செய்து கொண்டிருக்கிறான். ரயில் நிலையங்களில், விமான நிலையத்தில் சிறிய குழந்தைகள் தங்களது கரடி பொம்மையை தூக்கி கொண்டிருப்பதை நீ பார்க்கலாம். அவர்களால் அது இல்லாமல் தூங்க முடியாது. இருட்டு அவர்களது தனிமையை மேலும் அபாயகரமானதாக்குகிறது. கரடிபொம்மை ஒரு சிறந்த பாதுகாப்பு. யாரோ அவர்களுடன் இருக்கிறார்.

மேலும் உங்களது கடவுள் என்பவர் வளர்ந்தவர்களுக்கான கரடி பொம்மை மட்டுமே.
நீ எப்படியோ அப்படியே உன்னால் வாழ முடியாது. உனது உறவுகள் உண்மையான உறவுகளல்ல. அவை அவலஷ்சணமானவை. நீ அடுத்தவரை உபயோகிக்கிறாய், மேலும் உனக்கு மிக நன்றாக தெரியும். அடுத்தவரும் உன்னை உபயோகிப்பது. மேலும் மற்றவரை உபயோகிப்பது அவரை ஒரு பொருளாக, ஒரு சந்தைசாமானாக குறைத்து மதிப்பிடுவதாகும். அந்த நபரிடம் உனக்கு எந்த மரியாதையும் கிடையாது.
நீ மேலும் நாம் சாதாரணமாக குறிப்பிட்ட ஒரு நபரிடம் அன்யோன்யப்படுகிறோம். என்றும் கேட்கிறாய்.

இதற்கு உடல்ரீதியான காரணம் இருக்கிறது. நீ ஒரு தாயால், ஒரு தந்தையால் வளர்க்கப்படுகிறாய், நீ ஒரு பையன் எனில் நீ உனது தாயை நேசிக்க ஆரம்பித்துவிடுகிறாய். உனது தந்தையை ஒரு போட்டியாளனாக பார்த்து அவரிடம் பொறாமை கொள்கிறாய். நீ ஒரு பெண்ணாக இருந்தால் உனது தந்தையை நேசிக்க ஆரம்பிக்கிறாய். உனது தாயை வெறுக்க ஆரம்பிக்கிறாய். ஏனெனில் அவள் உனது போட்டியாளராக இருக்கிறாள். இவை நிரூபிக்கப்பட்ட உண்மைகள். மேம்போக்காக கூறப்படுபவை அல்ல. இதனுடைய விளைவாக உனது முழு வாழ்க்கையும் ஒரு துயரமாக மாறி விடுகிறது.

பையன் தனது தாயின் உருவத்தை பெண்ணின் உதாரணமாக கொள்கிறான். அவன் தொடர்ந்து கட்டுதிட்டப்படுத்தப்படுகிறான். அவனுக்கு மிகவும் நெருக்கமாக, மிகவும் அன்யோன்யமாக ஒரே ஒரு பெண்ணைத்தான் தெரியும். அவளது முகம், அவளது தலைமுடி, அவளது அருகாமை எல்லாமும் பதிவாகி விடுகிறது. விஞ்ஞானரீதியாக இதற்கு உபயோகிக்கப்படும் வார்த்தை மிகச்சரியாக இதுதான். அது அவனது மனதில் அச்சாக பதிந்துவிடுகிறது. இதேதான் ஒரு பெண்ணிற்க்கு தனது தந்தையிடம் நடக்கிறது. நீ வளர்ந்தவுடன் யாரோ ஒரு பெண்ணிடமோ, ஆணிடமோ காதல் வயப்படும்போது, நீ நாம் ஒருவருக்கொருவர் உண்டானவர்கள் என்று நினைத்துக் கொள்கிறாய். யாரும் யாருக்காகவும் உண்டாக்கப்படவில்லை. ஆனால் உனக்கு ஏன் குறிப்பிட்ட ஒருவர் மேல் ஈர்ப்பு வருகிறது. ஏனெனில் அதற்கு காரணம் உனது பதிவுதான். அவன் உனது தந்தையை ஏதோ ஒரு வகையில் பிரபலித்திருக்க வேண்டும். அவள் ஏதோ ஒரு வகையில் உனது தாயை பிரதிபலித்திருக்க வேண்டும்.
எந்த பெண்ணும் அப்படியே உனது தாயை நகலெடுத்தாற்போல இருக்க முடியாது. மேலும் நீயும் ஒரு தாயை தோடவில்லை. ஒரு துணைவியைத்தான் தேடுகிறாய். ஆனால் உன்னுள் பதிவாகி உள்ள அச்சு உனக்கு தகுந்த பெண் யாரென்று முடிவு செய்கிறது. நீ அது போன்ற பெண்ணை பார்த்த கணமே அங்கே காரண காரியத்திற்க்கே இடமில்லை. நீ உடனடியாக ஈர்க்கப் படுகிறாய். உனது அச்சுப்பதிவு உடனே வேலை செய்ய துவங்கி விடுகிறது – இவள்தான் உன் துணைவி, அல்லது இவன்தான் உன் துணைவன்.

கடற்கரையில், சினிமா தியேட்டரில், பார்க்கில் அவ்வப்போது சந்திப்பது என்பது மிகவும் நல்லது. ஏனெனில் மற்றவரை பற்றி உனக்கு முழுமையாக தெரியப் போவது இல்லை. ஆனால் நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ விரும்புகிறீர்கள். திருமணம் செய்து கொள்ள ஆசைப் படுகிறீர்கள், காதலிப்பவர்கள் எடுக்கக் கூடிய மிக அபாயமான முடிவுகளில் ஒன்று இது.

திருமணம் முடிந்த கணமே மற்றவரைப் பற்றி முழுமையாக உனக்கு தெரிய ஆரம்பிக்கிறது. அப்போது ஒவ்வொரு சிறு விஷயமும் உனக்கு அதிர்ச்சியூட்டுகிறது – ஏதோ தவறு நடந்துவிட்டது. இதுவல்ல அந்த பெண், இதுவல்ல அந்த ஆண் – ஏனெனில் நீ உனக்குள் சுமந்து கொண்டு இருக்கும் வடிவத்திற்க்கு அவர்கள் பொருந்தி வரவில்லை. பிரச்னை இன்னும் பெரிதாகும். ஏனெனில் அவள் தனது தந்தையின் வடிவத்தை சுமந்து கொண்டிருக்கிறாள், நீ அதற்கு பொருந்த வில்லை. நீ உனது தாயின் வடிவத்தை சுமந்து கொண்டிருக்கிறாய். அவள் அதற்கு பொருந்தவில்லை. நீ உனது தாயின் வடிவத்தை சுமந்து கொண்டிருக்கிறாய், அவள் அதற்கு பொருந்தவில்லை. இதனால்தான் அனைத்து திருமணங்களும் தோல்வியடைகின்றன.
மிக அரிதான திருமணங்கள்தான் தோல்வியடைவதில்லை. தோல்வியடையாத திருமணத்திலிருந்து கடவுள் உன்னை காப்பாற்றுவார் என நான் நம்புகிறேன். சிலர் குரூரமானவர்கள். மற்றவர்களை இம்சை படுத்துவதில் சந்தோஷப்படுவார்கள். சிலர் தங்களை தாங்களே இம்சை படுத்திக் கொள்வதில் சந்தோஷமடைவார்கள். ஒரு கணவனும் மனைவியும் இந்த இரண்டு வகைகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையை சேர்ந்தவராக இருந்தால், அந்த திருமணம் ஒரு வெற்றி பெற்ற திருமணமாக இருக்கும். ஒருவர் இம்சை படுத்துவார், ஒருவர் இம்சை படுவார். – இது ஒரு பொருத்தமான திருமணம், ஏனெனில் ஒருவர் இம்சை படுத்துவதில் சந்தோஷப்படுவார், ஒருவர் இம்சை படுவதில் சந்தோஷம் கொள்வார்.

ஆனால் முதலில் நீ இம்சை படுத்துபவனா, இம்சை படுபவனா என கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம். பின் உனது அடுத்த துருவ வகையை சேர்ந்தவரை கண்டு பிடிப்பது. மேலும் நீ புத்திசாலியாக இருந்தால் நீ ஒரு மனோதத்துவ நிபுணரிடம் சென்று நீ குரூரமானவனா, குரூரத்தை அனுபவிப்பவனா என கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். உனக்கு பொருந்தக் கூடிய சில அறிகுறிகளை அவர் உனக்கு கொடுக்கக் கூடும்.
சில நேரங்களில் குரூரமானவரும் குரூரத்தை அனுபவிப்பவரும் திருமணம் நடந்து விடும். அவர்கள்தான் இந்த உலகிலேயே மகிழ்ச்சியான மக்கள். ஒருவர் மற்றவரின் தேவையை பூர்த்தி செய்கின்றனர். ஆனால் என்ன வகையான தேவை இது. அவர்கள் இருவரும் பைத்தியங்கள். அவர்கள் இம்சை கொண்ட வாழ்க்கை வாழ்கின்றனர். ஆனால் மற்றபடி ஒவ்வொரு திருமணமும் தோல்வியடைப் போகிறது, ஒரே ஒரு காரணத்தால். அந்த அச்சுப் பதிவு தான் பிரச்னை.

திருமணத்தில் கூட நீ எந்த அடிப்படை காரணத்திற்காக உறவை ஏற்படுத்திக் கொள்கிறாயோ அது நிறைவேறுவதில்லை. நீ ஒருமையில் இருப்பதை விட உன் மனைவியுடன் இருக்கும்போது அதிக தனிமையாக உணர்கிறாய். ஒரு கணவனையும் மனைவியையும் ஒரு அறையில் தனியே விடுவது அவர்களை மேலும் அதிக துன்பமடைபவர்களாக ஆக்கும்.

எனது நண்பர்களில் ஒருவன் ஓய்வு பெற்றான். அவன் மிகப் பெரிய தொழிலதிபர். அவன் எனது அறிவுரையின் பேரில் ஓய்வு பெற்றான். நான் அவனிடம், உன்னிடம் ஏகப்பட்ட செல்வம் உள்ளது, உனக்கு மகன் இல்லை. இரண்டு பெண்கள் மட்டும்தான். அவர்களையும் பணக்கார இடத்தில் திருமணம் செய்து கொடுத்து விட்டாய். இப்போது ஏன் தேவையில்லாமல் இந்த தொழில், வருமான வரி, இது அது என்று எல்லா கவலைகளையும் பட்டுக் கொண்டிருக்கிறாய். எல்லாவற்றையும் மூடிவிடு. உன்னிடம் போதுமான அளவு செல்வம் இருக்கிறது. நீ ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தாலும் இது போதும். என்றேன்.


அவன் அது உண்மை தான். ஆனால் உண்மையான பிரச்னை தொழிலல்ல. நான் எனது மனைவியுடன் தனித்து விடப்படுவேன் என்பதுதான் உண்மையான பிரச்னை. நான் இப்போதே என் தொழிலிலிருந்து ஓய்வு பெற்று விடுவேன். ஆனால் நீங்கள் வந்து எங்களுடன் வசிக்க வேண்டும் என்றான்.

நான், இது வித்தியாசமாக இருக்கிறதே. நீ ஓய்வு பெறுகிறாயா அல்லது நான் ஓய்வு பெறுகிறேனா என்றேன்.

அவன் இதுதான் நிபந்தனை. நான் இந்த பிரச்னைகளை விரும்புகிறேன் என்றா நீங்கள் நினைக்கிறீர்கள் இதை என் மனைவியிடமிருந்து தப்பிக்கத்தான் செய்கிறேன் என்றான்.
அவனது மனைவி ஒரு சமுக சேவகி. அவள் ஒரு அனாதை ஆசிரமம், பிச்சைக்காரர்களுக்கான ஆஸ்பத்திரி, ஒரு விதவைகளுக்கான இல்லம் என எல்லாவற்றையும் நடத்திக் கொண்டிருக்கிறாள். நான் மாலையில் அவளிடம், காலையிலிருந்து மாலை வரை நீங்கள் செய்யும் எல்லா செயல்களையும் விரும்பி செய்கிறீர்களா என்று கேட்டேன்.

அவள், அனுபவிப்பதா இது ஒரு வகையான தப்பித்தல், தனக்குத்தானே துன்புறுத்திக் கொள்ளுதல் என்றாள்.

நான் ஏன் நீங்கள் உங்களையே இப்படி துன்புறுத்திக் கொள்கிறீர்கள் என்று கேட்டேன்.
அவள் உங்களது நண்பரை தவிர்க்கத்தான். நாங்கள் இருவரும் தனித்திருந்தால் அதுதான் வாழ்விலேயே மோசமான அனுபவம். என்றாள்.

மேலும் இது காதல் திருமணம், ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் அல்ல. அவர்கள் முழு குடும்பத்தையும், சமுதாயத்தையும் எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர். ஏனெனில் அவர்கள் வேறுபட்ட மதம், ஜாதியை சேர்ந்தவர்கள். ஆனால் அவர்களது அச்சு பதிவு இவன்தான் சரியான ஆண் என்றும், இவள்தான் சரியான பெண் என்றும் அறிகுறி காட்டியது. ஆனால் இது எல்லாமே தன்னுணர்வற்ற மனநிலையில் நிகழ்ந்தது.

இதனால்தான் குறிப்பிட்ட ஆண் அல்லது பெண்ணிடம் உனக்கு ஏன் காதல் வந்தது என்ற கேள்விக்கு உன்னால் பதில் சொல்ல முடிவதில்லை. அது ஒரு உணர்வோடு எடுத்த முடிவல்ல. அது உனது தன்னுணர்வற்ற மனதில் பதிந்துள்ள அச்சுப்பதிவினால் எடுக்கப்பட்ட முடிவு.

அமியோ, இந்த முழு முயற்சியும் – உறவோ அல்லது ஆயிரத்தோரு விஷயங்களில் மும்மரமாக இருப்பதோ – நீ தனிமையில் இருக்கிறாய் என்ற கருத்தினால் அதிலிருந்து தப்பிக்கும் முயற்சியே. இங்குதான் தியானம் செய்யும் மனிதனும் சாதாரண மனிதனும் வேறுபடுகிறார்கள் என்பதை நான் அழுத்தந்திருத்தமாக சொல்ல விரும்புகிறேன்.
சாதாரண மனிதன் தனது தனிமையை மறக்க விரும்புகிறான். தியானிப்பவன் மேலும் மேலும் தனது ஒருமையை அதிகம் தெரிந்து கொள்கிறான். அவன் இந்த உலகத்தை விட்டு செல்கிறான். குகைகளுக்கு, மலைகளுக்கு, காட்டுக்கு ஒருமையில் இருப்பதற்காகவே போகிறான். தான் யாரென்று தெரிந்து கொள்ள விரும்புகிறான். கூட்டத்தில் அது கஷ்டம். அங்கு பல இடைசல்கள் இருக்கும் தங்களது ஒருமையை தெரிந்து கொள்பவர் யாரோ அவர்களே மனித இனத்துக்கு சாத்தியப்படக் கூடிய அளவில்லா சந்தோஷத்தை அறிந்து கொள்பவர். ஏனெனில் உனது இருப்பே ஒரு வரம்தான்.

உனது ஒருமையுடன் நீ லயப்பட்டபின் நீ தொடர்பு கொள்ளலாம், அப்போது உனது உறவுகள் உனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும், ஏனெனில் அவை பயத்தால் அமைந்தவை அல்ல. உனது ஒருமையை கண்டு கொண்டபின் நீ உருவாக்கலாம், நீ எத்தனை விஷயங்களை விரும்புகிறாயோ அத்தனை விஷயங்களிலும் ஈடுபடலாம், ஏனெனில் இந்த ஈடுபாடு உன்னிலிருந்து நீ தப்பி ஓடுவதாக இருக்காது. இப்போது அது உனது வெளிப்பாடு. இப்போது அது உனது திறமையின் வெளிப்பாட்டுத் தோற்றம்.

அப்படிபட்ட மனிதன் மட்டுமே – அவன் ஒருவனாக வாழ்ந்தாலும் சரி, சமுதாயத்தில் இருந்தாலும் சரி, அவன் திருமணம் செய்து கொண்டாலும் சரி, திருமணமே செய்து கொள்ளாமல் இருந்தாலும் சரி, அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது – எப்போதுமே ஆனந்தமாகவும் அமைதியாகவும் மௌனமாகவும் இருப்பான். அவனது வாழ்வே ஒரு கானம், ஒரு நடனம், ஒரு மலர்தல், ஒரு மணம்தான். அவன் எதை செய்தாலும் அவன் தனது மணத்தை அதில் கொண்டு வருவான்.

அதனால் உனது ஒருமையை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அடிப்படையான விஷயம்.

இப்படி உன்னிடமிருந்து நீ தப்பிப்பது நீ கூட்டத்தலிருந்து கற்றுக் கொண்ட விஷயம். ஏனெனில் ஒவ்வொருவரும் தப்பிக்கிறார்கள். நீயும் தப்ப ஆரம்பிக்கிறாய். ஒவ்வொரு குழந்தையும் கூட்டத்தில் பிறக்கிறது, அவர்களை பார்த்து அதே போல போலியாக செய்ய ஆரம்பிக்கிறது, மற்றவர்கள் என்ன செய்கிறார்களோ அதுவும் அதையே செய்ய ஆரம்பிக்கிறது. மற்றவர்கள் எந்த விதமான துயரமான நிலையில் இருக்கிறார்களோ அதுவும் அதே போன்ற துயர நிலைக்குள் விழுகிறான். இதுதான் வாழ்க்கை என்பது என அவன் நினைக்க ஆரம்பித்து விடுகிறான். அவன் வாழ்க்கையை முழுமையாக தவற விட்டு விடுகிறான்.

அதனால் ஒருமையை தனிமை என தவறாக புரிந்து கொள்ளக் கூடாது என நான் உனக்கு நினைவூட்டுகிறேன். தனிமை என்பது ஆரோக்கியமற்றது, நோய் போன்றது. ஒருமை என்பது முற்றிலும் மிக ஆரோக்கியமானது.

நாம் எல்லோரும் ஒரேவிதமான தவறாக புரிந்து கொள்ளுதலை தொடர்ந்து செய்து கொண்டே வந்திருக்கிறோம்.

வாழ்வின் அர்த்தத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் கண்டு பிடிக்க முதலாவதும் முக்கியமாகவும் செய்ய வேண்டிய முதல் படி தனது ஒருமைக்குள் நுழைவதுதான் என்பதை எனது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன். அதுதான் உனது கோவில், அங்கேதான் உனது கடவுள் வசிக்கிறார், நீ இந்த கோவிலை வேறெங்கும் காண முடியாது. நீ சந்திரனுக்கு செவ்வாய்க்கு ............என போகலாம்.
நீ ஒரு முறை உன் இருப்பின் உள் மையத்திற்க்குள் நுழைந்துவிட்டால், உன்னால் உனது கண்களையே நம்ப முடியாது. நீ உன்னுள் அவ்வளவு மகிழ்ச்சியை, அவ்வளவு அன்பை, அவ்வளவு ஆசிகளை சுமந்து கொண்டிருக்கிறாய். நீ உன்னுடைய சொந்த புதையலிலிருந்தே தப்பி ஓடிக் கொண்டிருக்கிறாய்.

இந்த புதையலையும் இதன் குறையாத வளத்தையும் பற்றி தெரிந்து கொண்டு விட்டால் பின் நீ உறவு ஏற்படுத்திக் கொள்ளலாம். உருவாக்குதலிக்குள் நுழையலாம். நீ உனது அன்பை பகிர்ந்து கொள்ளுதலின் மூலம் மனிதர்களுக்கு உதவலாம், அவர்களை உபயோகப்படுத்திக் கொள்ளாமல் இருக்கலாம். நீ உனது அன்பின் மூலம் அவர்களுக்கு ஒரு மதிப்பு கொடுக்கிறாய், நீ அவர்களது மரியாதையை அழிப்பதில்லை. எந்த முயற்சியும் இல்லாமல் மற்றவர்கள் தங்களது சொந்த புதையலை கண்டுகொள்ள ஆதாரமாக நீ மாறுகிறாய். நீ என்ன உருவாக்கினாலும், நீ எதை செய்தாலும், நீ உன்னுடைய மௌனத்தை, அமைதியை, சாந்தத்தை, வாழ்த்துக்களை சாத்தியப்படும் எல்லாவற்றிலும் பரப்புவாய்.

ஆனால் இந்த அடிப்படையான விஷயம் எந்த குடும்பத்தாலும், எந்த சமுதாயத்தாலும், எந்த பல்கலைகழகத்தாலும் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. மக்கள் துயரத்திலேயே வாழ்ந்து அதற்கு பழக்கப்பட்டு போய் விடுகிறார்கள். எல்லோரும் துன்ப்படுவதால் நீ துயரப்படுவது பெரிதாக தெரிவதில்லை. நீ விதிவிலக்காக இருக்க முடியாது என தோன்றி விடுகிறது.

ஆனால் நான் உனக்கு சொல்லுகிறேன். நீ விதி விலக்காக இருக்க முடியும். நீ அதற்கான சரியான முயற்சியை எடுக்க வில்லை, அவ்வளவுதான்.


Source : THE GOLDEN FUTURE CHEPTER # 6 Q # 1


தீட்சை - ஓஷோவின் கதை -33

பழைமையான கதை ஒன்று உண்டு.

கடைசி தீட்சை சீடனுக்கு அளிக்கப்படவுள்ளது. குரு, உன்னுடைய கடைசி தீட்சை மிகவும் மறைமுகமான ஒரு வழியிலேயே அளிக்கப்படும், என கூறினார். குரு அவனுடைய வழியில் வைத்த எல்லா கஷ்டங்களிலும் சீடன் தேறிவிட்டான், அவன் தன்னை நிரூபித்துவிட்டான். இப்போது கடைசி தீட்சை . . . மற்றும் அவன் கடைசி தீட்சையிலும் தேறிவிட்டால், அவன் ஞானமடைந்தவன் என அறிவிக்கப்படுவான் சீடன் குருவின் காலை தொட்டு, நான் தயாராக இருக்கிறேன். வெறுமனே எனக்கு கட்டளையிடுங்கள் மற்றும் எது செய்யப்படவேண்டுமோ அதை நான் செய்வேன், என கூறினான்.

குரு ,நீ அரசரிடம் செல்லவேண்டும், மற்றும் அதிகாலையில் செல்லவேண்டும், அரசரை பார்க்கும் முதல் ஆளாய் நீ இருக்கவேண்டும். ஏனெனில் அரசருக்கு ஒரு பழக்கம் உள்ளது, முதலில் வருபவர்கள் யாராக இருந்தாலும், வருபவர் எதை கேட்டாலும், அரசர் கொடுத்துவிடுவார். ஆனால் நாடு செல்வ செழிப்போடு இருப்பதால் யாராவது செல்வது மிகவும் அபூர்வம். வருடங்கள் கடந்துவிட்டன, எதை கேட்டும் யாரும் போவதில்லை. ஆனால் தவறவிட்டுவிடாதே – மிகவும் சீக்கிரமாகவே அங்கு இரு. அரசர் காலையில் அவருடைய தோட்டத்திற்குள் நுழைவார், சூரியன் உதயமாகும்போது, அரசர் தோட்டத்திற்குள் நுழைவார் – அங்கு இரு. மற்றும் அவர் உன்னை உனக்கு என்ன வேண்டும் ? என்று கேட்பார் மற்றும் உனக்கு என்ன வேண்டுமோ, அதை அவரிடம் கேள், என கூறினார்.

இந்த கடைசி தீட்சை எந்த விதமானது என்பதை சீடனால் புரிந்துகொள்ள முடியவில்லை, ஆனால் கட்டளை பின்பற்றப்படவேண்டும், அவன் சென்றான். அவன் தவறவிடவில்லை, அதிகாலை மூன்று மணிக்கு அவன் அரசருக்காக காத்திருந்தான்.

சூரியன் உதயமாகும் சமயத்தில், அரசர் தோட்டத்தில் நுழைந்தார் அந்த இளைஞன் அரசரை வணங்கினான். அரசர் ,நீ எதையாவது கேட்பதற்காக வந்திருக்கிறாயா ? நீ எதை வேண்டுமானாலும் கேட்கலாம்! நீ என்ன கேட்டாலும், நான் அதனை உனக்கு தருவேன், என கூறினார்.

மிகப்பெரிய ஆசை இளைஞனை ஆட்கொண்டது. அவன் ஒரு ஏழை, மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவன், மற்றும் அரசர் எதுவாக இருந்தாலும் என்று கூறுகிறார் ? நிச்சயமாக தெரிந்துகொள்வதற்காக, அவன் திரும்பவும் கேட்டான்.

எது வேண்டுமானாலும் என்று சொல்வதன் மூலம் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? அரசர் சரியாக அதைத்தான் சொல்கிறேன் – எதுவாக இருந்தாலும் நீ என்னுடைய இராஜ்ஜியத்தை கேட்டால் கூட நான் அதனை உனக்கு தந்துவிடுவேன். நீ உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ அவ்வளவு கேட்கலாம். . . . ,என கூறினார்.

ஏழை இளைஞனால் அதிகமாக யோசிக்கமுடியவில்லை. அவன் ஒருவேளை பத்தாயிரம் ரூபாய் போதுமானது என எண்ணினான். ஆனால் ஓர் ஆசை, ஏன் பத்தாயிரம் ? உனக்கு ஒருவேளை இப்படி ஒரு வாய்ப்பு திரும்பவும் கிடைக்காமலேயே போகலாம் – ஏன் ஒரு இலட்சம் கேட்கக்கூடாது ?

மற்றும் பிறகு மற்றொரு ஆசை, மற்றும் ஆசை மேலும் ஆசை. . . ஏனெனில் மனம் தொடர்ந்து இன்னும் இன்னும் என கேட்டுகொண்டேயிருக்கிறது. எனவே அவன் என்ன முடிவு செய்தாலும், மனம் இன்னும் அதிகமாக என்று கேட்டுகொண்டேயிருந்தது.

அரசர் நீ கேட்பதற்கு இன்னும் தயாராகவில்லை போல தெரிகிறது, நான் எனது காலை நடைப்பயிற்சிக்கு செல்கிறேன், அந்த நேரத்தில் நீ முடிவு செய். மற்றும் நான் திரும்ப வரும்போது, நீ என்ன கேட்டாலும் அது உனக்கு தரப்படும், என கூறினார்.

அந்த அரை மணிநேரம் சித்ரவதையாக இருந்தது, அவன் போய்கொண்டேயிருந்தான், நான் இதை கேட்கலாம் மற்றும் அதையும் கேட்கலாம், ஒரு தங்க ரதம், மற்றும் பல கோடி ரூபாய் பணம், மற்றும் மிக அதிக அளவிலான நிலம் – நான் எனக்கே உரிய ஒரு சிறிய இராஜ்ஜியத்தை உருவாக்குவேன்.

ஆசைகள் மற்றும் கனவுகள். . . மற்றும் அரசர் வந்தார். அந்த அரை மணி நேரம் மிகவும் வேகமாக போய்விட்டது. அரசர் அங்கு நின்றுகொண்டிருந்தார் மற்றும் அரசர் , இளைஞனே நீ இன்னும் முடிவு செய்யவில்லையா ? என கேட்டார்.

பிறகு திடீரென இளைஞன் , நான் எதை கேட்டாலும் அது அரசர் வைத்திருப்பதை விட குறைவாகவே இருக்கும், எனவே ஏன் எல்லாவற்றையும் கேட்ககூடாது ? எண்ணிக்கைக்கு முடிவு கட்டிவிடலாம் என எண்ணினான் !

எனவே அவன் ,ஐயா, நீங்கள் தர விரும்பினால், நான் எல்லாவற்றையும் உங்களிடம் இருப்பது அனைத்தையும் கேட்கிறேன். உங்களுடைய முழு இராஜ்ஜியம், உங்களுடைய அனைத்து செல்வங்களும், உங்களுடைய மாளிகைகள் - - அனைத்தும் வேண்டும். நீங்கள் வெறுமனே அரண்மனையை விட்டு வெளியேறிவிடுங்கள் ! மற்றும் நீங்கள் திரும்பவும் அரண்மனைக்குள் செல்லக்கூடாது. நீங்கள் ஏதையும் எடுத்துகொள்ளக் கூடாது. நீங்கள் வெறுமனே வெளியேறிவிடுங்கள் - - இராஜ்ஜியத்தைப்பற்றி எல்லாவற்றையும் மறந்துவிடுங்கள். நான் உங்களுக்கு நீங்கள் அணிந்திருக்கும் ஆடைகளை மட்டுமே அனுமதிக்கமுடியும்.

அதைக்கூட அவன் எதிர்ப்போடுதான் செய்தான், அதுகூட அவனுக்கு குறைவதாக தோன்றியது.

அரசர் மண்டியிட்டு, கடவுளிடம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார், அவருடைய கண்களில் ஆனந்த கண்ணீர் உருண்டோடியது, பரவச கண்ணீர் ! மற்றும் அவர் கடவுளிடம் நான் இப்படிப்பட்ட ஒரு மனிதனுக்காகத்தான் காத்துகொண்டிருந்தேன் ! ஆனால் முடிவில் என்னுடைய பிரார்த்தனைக்கு செவி சாய்த்துவிட்டீர்கள், இப்போது அவன் வந்துவிட்டான், நான் இந்த எல்லா முட்டாள் தனங்களில் இருந்தும் விடுபட்டுவிட்டேன். நன்றி நீங்கள் என் பிரார்த்தனைக்கு செவி சாய்த்துவிட்டீர்கள், அது அதிக இருந்தாலும், நான் அதிக காலம் காத்திருக்க வேண்டியிருந்தது இருந்தாலும், நீங்கள் எனது பிரார்த்தனைக்கு செவிசாய்த்துவிட்டீர்கள், நான் நன்றியால் நிறைந்துள்ளேன் என நன்றி கூறிக்கொண்டிருந்தார்.

அரசர் இந்த விஷயங்களை கடவுளிடம் கூறிக்கொண்டிருக்கும்பொழுது இளைஞன் அங்கு நின்றுகொண்டிருந்தவன் என்ன விஷயம் ? இராஜ்ஜியத்தை துறப்பது குறித்து இந்த மனிதன் அதிக மகிழ்ச்சியை உணர்கிறான் என்றால், நான் எதற்குள் நுழைகிறேன் ? இந்த மனிதன் சொல்வதைப்போல் 30 வருடங்களாக என்னுடைய முழு இராஜ்ஜியத்தை ஏற்றுகொள்ளும் ஒருவனை அனுப்பு, என்னுடைய முழு இராஜ்ஜியத்தையும் கேட்கும் ஒருவனை அனுப்பு என இந்த மனிதன் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான் என்றால் – 30 வருடங்களாக அவன் பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கிறான் எனில், பிறகு இது எந்த மதிப்பும் உடையது அல்ல. நான் தேவையற்ற பிரச்சனைக்குள் நுழைகிறேன் என யோசிக்க தொடங்கினான்.


இளைஞனும் மண்டியிட்டான், அரசரின் கால்களை தொட்டு சார் நான் ஒரு இளைஞன் . . ஓர் இளைய முட்டாள். தயவுசெய்து மன்னித்துவிடுங்கள். எனக்கு எதுவும் வேண்டாம். கடவுளிடம் உங்களுடைய பிரார்த்தனை, கடவுளிடம் உங்களுடைய நன்றியுணர்வு என்னுடைய முழு மனதையும் முடித்துவிட்டது. நான் காட்டிற்கு என்னுடைய குருவிடம் திரும்பி செல்கிறேன், என கூறினான்.

அரசர் அவனிடம் சம்மதிக்க வைக்க முயன்றார். போகாதே, வெறுமனே பார். அரண்மனைக்குள் வா ! நான் என்னுடைய அரண்மனை, என்னுடைய இராஜ்ஜியம், என்னுடைய செல்வங்கள் மட்டுமல்ல, அதோடு என்னுடைய அழகான பெண்ணையும் உனக்கு தருகிறேன், வந்து வெறுமனே பார் ! என்றார்.

ஆனால் இளைஞன் நான் இங்கு ஒரு நொடிகூட இருக்கமுடியாது - - ஏனெனில் மனம் என்னை ஏமாற்றிவிடலாம். ஒரு உள்ளார்ந்த புரிதல் நிகழ்ந்துவிட்டது, மற்றும் நீங்கள் கடவுளிடம் நன்றியுணர்வு கொண்டதைபோல நான் உங்களிடம் நன்றியுணர்வோடு இருக்கிறேன். நான் தெளிந்துவிட்டேன் ! என கூறினான்.

மற்றும் இளைஞன் தன்னுடைய குருவிடம் சென்று நடந்த முழு கதையையும் சொன்னபோது, குரு உன்னுடைய கடைசி தீட்சை முடிந்துவிட்டது. இப்போது எதுவும் எப்போதும் உன்னை ஒரு அடிமையாக்காது. இப்போது நீ கவனமாக, உணர்வோடு, சுதந்திரமாக இருக்கிறாய், நீ தேறிவிட்டாய் - - நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் இங்கிருந்து கவனித்துகொண்டிருந்தேன், நீ முழு இராஜ்ஜியத்தையும் கேட்டபோது, என்னுடைய இதயம் அழுதது. நான் ,எனவே இந்த முட்டாளிடம் 15 வருட உழைத்தது, எல்லாம் முடிந்தது என நினைத்துகொண்டிருந்தேன். ஆனால் நீ எடுத்த முடிவால் நான் அடைந்த மகிழ்ச்சியை நீ கற்பனை செய்துகூட பார்க்கமுடியாது, என கூறினார். நீ திரும்பவும் வந்துவிட்டாய், உன்னால் அந்த விஷயத்தை பார்க்கமுடிந்தது, நீ கவனித்துகொண்டிருந்தாய். என குரு கூறினார்.

கவனித்து கொண்டிரு, வெறுமனே கவனி. . . . மக்களிடம் பணம் உள்ளது, மக்களிடம் மாளிகைகள் உள்ளன, மக்களிடம் நீ ஆசைப்படும் அனைத்தும் உள்ளன - - வெறுமனே கவனி, வெறுமனே பார். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா ? அவர்கள் நிறைவாக இருக்கிறார்களா ? அவர்கள் உன்னைவிட மகிழ்ச்சியற்று இருக்கலாம் மற்றும் உன்னைவிட அதிகமாக நிறைவற்று உணரலாம் - - பிறகு அவர்களை பின்தொடராதே. அவர்கள் குருடர்கள் ! அவர்கள் மற்ற குருட்டு மக்களை பின்தொடர்ந்திருக்கிறார்கள். அவர்களை பின் தொடராதே, கூட்டத்தை பார்த்து காப்பியடிக்காதே.

மூலம் : THE FISH IN THE SEA IS NOT THRISTY CHAPTER # 7

No comments: