Monday, April 25, 2011

மலர் 3 இணைய இதழ் 7 11 பிப்ரவரி 2011

மலர் 3 இணைய இதழ் 7 11 பிப்ரவரி 2011

ஓஷோ சாஸ்வதம் செய்தி

அவினாசி 2 கோவை NH – 47-ல், கந்தம்பாளையம் சாலையில் உள்ள ஓஷோ சாஸ்வதம் மையத்தில் ஜனவரி மாதம் 13, 14, 15, தேதிகளில் கொண்டாட்டம் நிகழ்ந்தது.
திருப்பூரில் உள்ள ஓஷோ சாஸ்வதம் தியானமையத்தில் (கிளை) விரும்பும் அன்பர்கள் தியானம் செய்யலாம்.

தலையங்கம்

அன்பு நண்பர்களே,

வணக்கமும் வாழ்த்தும்……

நான் எப்படி இருக்கிறேன் ? ஏன் இந்தக் குழப்பம் ? ஏன் என்னால் இந்த உலக பந்தங்களை விட முடியவில்லை ? ஏன் என்னால் தியானம் செய்ய முடியவில்லை ? ஏன் என் மனம் ஓடிக் கொண்டே இருக்கிறது ?

இப்படி கேள்விகளோடு சோர்ந்து போய் வெகு தூரத்திலிருந்து ஒருவர் வந்தார்.
தம்பி, ஒவ்வொன்றாக நிறைய விஷயங்கள் சொல்ல வேண்டியிருக்கிறது.....
முதலாவது இப்படி கேள்வி கேட்கிறாயே, அதுவே ஒரு நல்ல ஆரம்பம்தான்.! குழப்பமாக இருக்கிறோம் வாழ்வில் என்று தெரிவதே ஒரு தெளிவுதான். ஆகவே முதலில் இருக்கும் நிலையை ஆமாம், இப்படி இருக்கிறேன் என்று ஒத்துக் கொண்டிருப்பதும் அப்படி ஒத்துக் கொண்டதால் அப்படி இருப்பதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வும் ஓஷோவால் உனக்கு ஏற்கனவே கிடைத்துள்ளது.

ஆனால் இது மேலும் கேள்விகளையே உண்டாக்கியுள்ளது. இதுவும் சரியே. தெளிவிற்கு முன் தெளிவு வரை, அனுபவப்படும் வரை கேள்வியோடு இருப்பதும் ஆராய்ச்சி செய்வதுமே சரியான வழி. நம்பிக்கையில் விழுந்துவிட்டால் அந்தப் படுகுழியிலிருந்து மீள எத்தனை பிறவிகளாகும் என்று சொல்ல முடியாது. கேள்வி கேட்பதும், ஆராய்வதும், பரிசோதித்துப் பார்ப்பதும் ஒரு ஆன்ம சாதகனுக்கு இன்றியமையாத குணங்களாக இருக்க வேண்டும்.

தியான அனுபவங்களைக் கூட ஆராய்ந்து பார்க்க வேண்டும். குருவாக ஏற்றுக் கொண்டவரைக் கூட சந்தேகிக்க வேண்டும். இப்படி பகுத்தறிவை இழந்து விடாமல் இருப்பது மிக முக்கியம். ஆராய்ச்சி செய்து பார்க்கலாம், பரிசோதனை செய்து பார்க்கலாம், எனக்குப் புரிகிறது , இனி செய்து பார்க்கலாம் என்ற பகுத்தறிவுப் புரிதல் மிக மிக அவசியம். மனம் ஒத்துழைக்கும் ஒரு விஷயத்தில் தான் நாம் முதலில் ஈடுபட முடியும்.

இப்படி ஆரம்பித்தபின் நிகழப் போவது எல்லாம் வாழ்வின் மர்மத்தில் கரைந்து போவதாய் இருப்பினும் ஆரம்பம் இதுதான். இந்தப் புரிதல் இல்லாததால் பல நண்பர்கள் முதல் அடியோடு முற்றுப் பெற்று நிற்கிறார்கள். அடுத்த அடிக்கு மனதின் அனுமதி அவர்களுக்கு கிடைக்கவில்லை. என்றுமே போராட்டம் சக்தியை உறிஞ்சி விடும். ஆதரவு சக்தியை ஊட்டும். ஆகவே மனதைக் கடந்த அனுபவத்திற்கும் மனதின் அனுமதியும் ஆதரவும் தேவை. அதற்கு சரியான பகுத்தறிவுப் புரிதல் தேவை. ஆகவே அந்த அடிப்படையில் கேள்வி கேட்பது என்பது ஒரு நல்ல ஆரம்பம்தான்.
ஆனால் கேள்விகளை புரிந்து கொள்வதற்காகக் கேளுங்கள். உங்களின் ஏதோ ஒரு முடிவை விவாதம் செய்து வெற்றி பெறும் நோக்கத்தில் கேட்காதீர்கள்.
சரி, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் ? சமூகத்தில் எல்லோரும் இருக்கிறபடிதான் இருக்கிறீர்கள். எல்லோரும் எப்படி இருக்கிறார்கள் ?

பிளவு பட்டவர்களாக நாம் இருக்கிறோம். பிறவியிலேயே உள்ள விலங்குணர்ச்சிகள் ஒருபுறம், சமூகத்தில் தாய், தந்தை, ஆசிரியர், கல்வி என்று ஆரம்பித்து இப்படித்தான் வாழ வேண்டும் என்று புகட்டப்பட்ட பாடம் ஒருபுறம், நான் எனும் சுயகற்பனையை காப்பாற்றிக் கொள்ள, மெருகேற்ற, நிரூபிக்க, இப்படிச் செய், இப்படிச் செய் என்ற உந்துதல் ஒருபுறம். இவைதான் அடிப்படைப் பிரிவுகள். இதில் உட்பிரிவுகள் ஏராளமாய் ஏற்படுத்திக் கொண்டே போகிறோம். இந்த பிளவுப் பட்டநிலையினால்தான் எந்த முடிவும் எதிலும் எடுக்க முடிவதில்லை. குழப்பமோ குழப்பம். உதாரணமாக சாமான் வாங்க கடைக்குப் போகிறீர்கள். கடலை மிட்டாயைப் பார்த்தவுடன் வாங்கி சாப்பிட நாக்கில் எச்சில் ஊறுகிறது, அல்லது எலந்த வடையைப் பார்த்தவுடன் நாக்கில் எச்சில் சுரக்கிறது.

ஆனால் எப்படி வாங்குவது ? கண்ணியமான தோற்றத்தோடு டீக்காக டிரஸ் செய்து கொண்டு மரியாதைக்கு உரியவனாக தோற்றம் அளிக்கும் நாம் எப்படி இதை வாங்குவது ? நமது கௌரவம் என்ன ஆகும் இப்படி ஒருபுறம், இது உடம்புக்கு நல்லதல்ல. இதை சாப்பிடக் கூடாது என்ற சமூகப் பாடம் இன்னொரு பக்கம், சுவைக்க விரும்பும் குழந்தையின் உணர்ச்சி மற்றொரு பக்கம். இப்படி இருக்கிறது நமது நிலை. ஒன்றுமில்லாத செயல், ஆபத்தில்லாத செயல், அறிந்த தெரிந்த ஒருவரும் இல்லாத இடம், செலவில்லாத சிறிய இன்பம். இதற்கே இப்படி இருக்கிறது நமது நிலை.

அப்படியென்றால் சமூகம் எதிர்க்கும், சட்டம் கேள்வி கேட்கும், சுற்றம் கேலி செய்யும். செயல்களை எப்படிச் செய்ய முடியும், சேர்த்த பணம் சிதறிப் போகலாம் அல்லது உடலுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படலாம் என்ற செயல்களை அவை நமக்கு பிடித்த விருப்பமான இன்பம் தருவதான செயல்களாக இருந்தாலும் செய்வதில் எந்த அளவு தடுமாறுவோம் அல்லது தடுமாறுகிறோம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இப்போது இதிலிருந்து விடுபடுவது எப்படி ? அதேசமயம் தவறான பாதையில் சென்றுவிடாமல் சரியானதை உணர்ந்து கொள்வது எப்படி ?

முதலில் இந்த பிளவுபட்ட நிலையிலிருந்து நாம் ஒருவனாக, ஒருமைப்பட்டவனாக ஆக வேண்டும். அப்படி ஒருவன் ஒருவனாக இருக்கும்போதுதான் அவன் சக்தி நிறைந்தவனாக, சக்தி ஓட்டமாய், உயிரோட்டமாய், எதையும் உணரும் ஆற்றல் உள்ளவனாய் ஆகிறான்.

இதற்குத்தான் ஓஷோ கூறுகிறார். முதலில் வாழ்வுக்கு எதிர்மறையான நெகட்டிவான கண்ணோட்டத்தை அணுகுமுறையை கைவிடு. எதையும் தவறாகப் பார்க்காதே. நடப்பது எதுவாக இருந்தாலும் அதை எப்படி எடுத்துக் கொள்வது என்பது நம்மிடம்தான் இருக்கிறது. வாழ்வில் எதையும் பாசிட்டிவாக எடுத்துக்கொள். அதிலுள்ள நல்லதை நன்மையைப் பார். மகிழ்ச்சி கொள், சந்தோஷப்படு. அப்படிப் பார்க்க உன் அறிவைப் பயன்படுத்து.

உதாரணமாக ஒரு பகுத்தறிவுவாதி என்னிடம் வந்து சொன்னார். என் மனைவியை திருத்தவே முடியவில்லை. கோயிலுக்குப் போவதும் சாமி கும்பிடுவதும் மூடநம்பிக்கை என்றால் முகத்தை திருப்பிக் கொள்கிறாள். உங்கள் பகுத்தறிவை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் நானாவது உருப்படியாக இருக்கிறேன் உங்களுக்கும் சேர்த்துத்தான் நான் வேண்டிக் கொள்கிறேன் என்று சொல்கிறாள். அவள் சாமி கும்பிடுவதை நிறுத்தச் செய்ய என்னால் முடியவில்லை. எல்லாம் மட ஜன்மங்கள், திருத்த முடியாது என்றார்.

நான் சொன்னேன் : அது அப்படியல்ல. நீங்கள் காலையில் எழுந்து பேப்பர் படிக்கிறீர்கள். பிறகு உலக நடப்பை தெரிந்துகொண்டுவிட்ட மாதிரி வெளியே போய் அரட்டை அடிக்கிறீர்கள், அதனால் ஏதோ சமூகப் பிரசனையை தீர்க்கிறமாதிரி. பிறகு ஆபீஸில் அரட்டை, சண்டை, சிகரெட், மது, டீ, காபி, நொறுக்குத்தீனி என்று உங்களை ஏதோவொரு விதமாய் தளர்த்திக் கொண்டே இருக்கிறீர்கள். உங்கள் மனதின் கூப்பாட்டை, உள் போராட்டத்தை மன இறுக்கத்தைக் குறைத்துக் கொள்ள ஆயிரம் செய்கிறீர்கள். நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கிறீர்கள். இரவில் தண்ணியடித்து கொட்டிக் கொள்கிறீர்கள். விளையாட, ஜிம்முக்கு, டூருக்கு என்று போகிறீர்கள், இப்படி எத்தனை எத்தனை வெளியேற்றும் வழிகள் வைத்திருக்கிறீர்கள்……..

உங்கள் மனைவி யாரிடம் நம்பிக்கையுடன் தன் மனசுமையை இறக்கி வைக்க முடியும் ? நீங்கள் அதற்கு செவி சாய்த்திருக்கிறீர்களா ? சாமி என்பது என்ன ஒரு சுயவசிய தியானயுக்தி தான். இந்து மதத்தில் ஏராளமான சாமிகள் ஏன் தெரியுமா? ஒரு விஞ்ஞான காரணத்தால்தான். தன்னை சுயவசிய படுத்திக் கொள்ள தன்னைப் போன்ற குணங்கள் கொண்ட ஒரு சாமி ஒவ்வொருவருக்கும் தேவை. அதன் முன்னால் நின்று பேசுவது தனக்குத்தானே தெளிவுபடுத்திக் கொள்வதுதான். அது மிகவும் விஞ்ஞானபூர்வமானது. ‘ ஸெல்ப் – ஹிப்னாஸிஸ் ‘ என்ற இந்த சுயவசியம் ஆபத்தில்லாதது. உடனடிப் பலன் கொடுப்பது. நம்மை நாமே சுத்தப்படுத்திக் கொள்ளும் எளிய சக்தி மிகுந்த வழி இது.

ஆகவே இதை அவர்களுக்கு புரிய வைப்பதே செய்ய வேண்டியது, அப்போது அதன்மூலமும் அவர்கள் உயரலாம். இது ஒரு விஷயம்.
மற்றொரு விஷயம் ஒருவரிடம் ஒன்றை நிறுத்தச் சொல்கிறோம் என்றால் அவர்கள் செய்வதை குறை கூறுகிறோம் என்றால் அப்போது அதைச் செய்வதால் அவர்களுக்கு என்ன பலன் கிடைக்கிறதோ அதைவிட அதிக பலனைக் கொடுக்கும் சிறந்த ஒன்றை நம்மால் தரவும் சுட்டிக்காட்டவும் கற்றுக் கொடுக்கவும் முடியவேண்டும். வெறும் குறை கூறுவது முட்டாள்தனம். நமது அகம்பாவத்தையே அது காட்டுகிறது.

ஆகவே மனைவி கோவிலுக்குப் போய் சந்தோஷமாக நிறைவாக இருந்தால் அதைப் பாராட்டு. அதை பாசிட்டிவாகப் பார். அப்போது அதன் அடிப்படை புரியும். பிறகு அதைவிட சிறந்த முறை தியானிப்பது என்று கற்றுக் கொடுத்தால் அவர்கள் வளரலாம். அதை விடுத்து குறை கூறுவதால் போராட்டமும் கசப்புணர்வுமே மிஞ்சும்.

ஆகவே முதலில் கிடைத்துள்ள வாழ்க்கையை சந்தோஷமாக வாழு. பணம் இருந்தால் அருமையான இசையை கேட்டவாறு அழகான ரூமில் நடனமாடு. ஏழை என்றால் நிலவின் வெளிச்சத்தில் இரவில் வண்டுகளின் ரீங்காரத்தில் பறவை பாடல்களின் இடையே திறந்த வெளியில் நடனமாடு. ஏன் குறை சொல்கிறாய் ? வாழ்வில் வாழ்விடம் பிச்சைக்காரனாய் போகாதே, மகாராஜாவாய் போ என்று ஓஷோ கூறுகிறார். ஆகவே பாசிட்டிவாய் இரு. உள் பிளவுகள் இப்போது வலுவிழக்கும். உள் போராட்டம் இருக்காது. அப்போது சக்தியுள்ளவனாய் நீ இருப்பாய்.
வாழ்ந்து பார்க்கும் ஆற்றல் உள்ளவனாய் நீ மாறுவாய். இங்கிருந்துதான் எதுவும் சாத்தியம்.

இப்போது நீ தியானம் செய்து பார்க்கலாம். தியானத்தில் ஒரு உள் சூழலை நாம் உருவாக்குகிறோம். அந்த சூழல் மனதை கடந்த அனுபவம் பெறுவதற்கு உதவி செய்யலாம்.

தியானத்தில் தியானம் நிகழலாம். அதாவது நான் என்ற இப்போதிருக்கும் நமது உணர்வு ‘நானுணர்வு’ போய், இயற்கையின் பிரபஞ்சத்தின் உணர்வுக்குள் நாம் கலந்துவிடுவது ஒரு கணம் நிகழலாம். அப்படி கலந்துவிடும் அனுபவம் பெறுவதே தியானம். இயற்கையோடுள்ள இணைப்புணர்வு அனுபவமே முதல் தியான அனுபவம். இதன்பின் இந்த நானுணர்வு போய் தன்னுணர்வு இருக்கும். தன்னுணர்வு என்பது உணரும் உணர்வு தன்னையே உணர்ந்திருத்தல். இது பிரபஞ்சத்தின் இயல்பு, சத்தியத்தின் இயல்பு. விழிப்புணர்வு என்பதும் இதுதான். விழிப்புணர்வு என்பது உணரும் உணர்வு எதையும் பற்றிக்கொள்ளாமல் தன்னையே உணர்ந்திருக்கும் விழிப்பு நிலை. இது நமது சாத்தியக்கூறு, நமது பிறப்புரிமை. இதற்கு உதாரணமாய் திகழ்பவர்தான் ஓஷோ.

இப்படி இயற்கையோடு இயைந்த இணைப்புணர்வில் நாம் திரும்பப் பெறுவதே தியானம். இந்த அனுபவம் ஏற்பட்டபின் இயல்பாகவே இவ்வுலக வாழ்க்கையின் இறுக்கம் தளர்ந்து விடும். ஏனெனில் இறுக்கத்திற்க்கும் போராட்டத்திற்க்கும் காரணம் நமது நானுணர்வுதான். அது போய் தன்னுணர்வு வரும்போது வாழ்க்கை ஒரு லீலையாய் விளையாட்டாய் மாறிப் போகிறது. எல்லாமே சமம்தான் பாதிபாதிதான் என்ற உணர்வு ஏற்படுகிறது. இயற்கையின் கூறாய் இருக்கும் வாழ்வை இதயம் திறந்து வாழ ஆரம்பிக்கிறோம்.

அப்போது நமது விலங்குணர்ச்சிகள் பரிணாம வளர்ச்சியடைந்து அன்பாய், அழகாய், படைப்பாய், கவிதையாய், பகிர்தலாய், கருணையாய், மகிழ்ச்சியாய், நடனமாய், இசையாய், சிரிப்பாய், விஞ்ஞானமாய், இந்த உலகத்தை சொர்க்கமாக்குகின்றன.
அதற்கு நடை போடுவோம்,


தியான வழிநடப்போம், வாழ்க விழிப்புணர்வுடன்!

அன்பு,
சித்.

கவிதைப் பகுதி

தனிமை
அன்புக்கு ஏற்ற இடம்,
இதமான இடம்,
தோதான நிலை,
தூண்டிவிடும் சூழல்,
அது தனிமைதான்.
ஆச்சரியமாயிருக்கிறதா
அப்படியானால்... இன்னும் நீ
அன்பை அறிந்தவனில்லை.
அன்பில் கரைந்திருந்தால்....
நீ தனிமை தேடுவாய்.
ஆம்...
பேராசை, பொறாமை, காமம், அதிகாரம்,
சுயநலம், பெருமை, போலித்தனம் சூழ்ந்த
சமுதாயத்திலிருந்து நீ தனிமை தேடுவாய்,
இது மனிதர்களை வெறுப்பதல்ல,
மனிதர்களின்
மதம்பிடித்த தன்மையை வெறுப்பது.
ஆகவே உன் தனிமையும்
தனிமையல்ல........
அது ஒருமை
ஆறாய், மலையாய், அருவியாய்,
பருவமாய், அழகாய், மரமாய், செடியாய்.....
இப்படி
இயற்கைநிலை தவறாதவற்றோடு
இயைந்தநிலை

இது ஒருமைநிலை.
தனிமைநிலையல்ல.

.

மெளனத்தில் விளைந்த முத்துகள் – ஓஷோ


புத்துணர்வு

உனது மனம் புத்துணர்வுடன் இருக்கும்போது இந்த முழு பிரபஞ்சமும் ஒரு மெல்லிசையாக மாறும். நீ புத்துணர்வுடன் இருந்தால் எல்லாமும் புதுமையாக இருக்கும். இந்த இயற்கையே புத்துணர்வாக மாறும். நீ புத்துணர்வுடன் இருந்தால், நினைவுகள் சுமையாக இல்லாமல் இருக்கும்போது எல்லாமும் இளமையாக புதிதாக வேறுபட்டதாக இருக்கும்.

நீ வெறுமையிலிருந்து செயல்புரியும்போது அங்கு உன்னைச் சுற்றி ஒரு புத்துணர்வு இருக்கும்.

சக்தி தேங்கி நிற்காமல் ஓடும்போது நீ புத்துணர்வாக இருப்பாய், நீ நதி போல ஓடுவாய்.

சாட்சிபாவமாக இரு. நீ புத்துணர்வோடு இருக்கும்போது மட்டுமே சாட்சி பாவமாக இருக்கமுடியும்.

பக்குவப்படுதல் என்பது புத்துணர்வுடன் வெகுளித்தனமாக தூய்மையாக இருத்தலாகும்.

கடந்தகாலத்தை பொறுத்தவரை இறந்துவிடு. அப்போதுதான் நீ புத்துணர்வுடன் புதிதாக இருக்கமுடியும்.

ஒருவர் இந்த கணத்தை முழுமையாக வாழும்போது ஒரு புத்துணர்வு பிறக்கும்.

சந்தோஷம்

வாழ்வை முழுமையாக மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடி ஆடி பாடி வாழு. அப்போது இந்த கணமே இந்த முழு பிரபஞ்சமும் தெய்வீகமானதாகிவிடும். உன் ஆடலில், பாடலில், சந்தோஷத்தில், பரவசத்தில் அது தெய்வீகமானதாகிவிடும். உன் ஆனந்தத்தில் நீ தெய்வீகத்தின் எல்லையை சென்றடைவாய்.

நீ ஒரு பாடலை பாடும்போது நீ அந்த சந்தோஷத்தை வெளிப்படுத்தலில் உயிர்ப்புடன் இருக்கிறாய்.

நினைவில் கொள், நீ மகிழ்ச்சியடைந்தால் தவிர உன்னால் அன்பு செய்ய முடியாது.

நான் சத்தியமாக சொல்கிறேன், உன்னுள் சந்தோஷமும் கொண்டாட்டமும் நிரம்பி இருக்க முடியும்.

ஆழ்ந்த மௌனத்தில் சந்தோஷத்தில் நிறைவில் லயம் தானாகவே வரும்.

நீ என்ன செய்தாலும் அதை சந்தோஷமாக செய்யும்போது மகிழ்ச்சி தானாகவே நிகழும், மலரும்.

சந்தோஷம் முதலில் வரும். பின் கொண்டாட்டம் அதை தொடர்ந்து வரும்.

ஓஷோ வீடியோ

1. Osho : Jesus never died on the Cross

2. Osho : Bravo America – Glimpses of a Cosmopolitan world

3. Osho : And now the Sutra – A Zen Experience


தியான யுக்திகள்

தியான யுக்தி – 1

எண்ணங்களை எழுதுவது


கேட்கும் காதுகளையுடைய யாரும் கேட்கலாம், ஆனால் அதற்காக அவர்கள் கவனிக்கவேண்டும் என்பது அவசியமில்லை. கவனிப்பதற்கு கேட்கும் சக்தியுடைய காதுகளுடன் மேலும் ஒன்று தேவை. ஒரு அமைதி, ஒரு மெளனம், ஒரு சாந்தம் – காதுகளின் மூலம் மனம் கேட்ககூடாது, இதயம்தான் கேட்க வேண்டும்.
மனம் நீ செவிடு இல்லை என்றாலும் கூட உன்னை செவிடாக்கிவிடும்- ஏனெனில் மனம் ஒரு பேசும் பெட்டி அது நிறுத்தாமல் தொடர்ந்து அரட்டையடித்துக்கொண்டே இருக்கும்.

முதல் படி உனது அறையில் உட்கார்ந்து கதவுகளை மூடிக்கொண்டு, உனது மனதில் ஓடுவதை அப்படியே எழுது.

என்ன ஓடுகிறது என தெரிந்துகொள்வதற்காக எழுது. ஏனெனில் நீ அதை வேறு யாருக்கும் காட்டப் போவதில்லை. திருத்தாதே. அதனால் என்ன வருகிறதோ அதை அப்படியே எழுது. நீ ஆச்சர்யப்படுவாய். பத்து நிமிடத்திற்குள் உன் புத்தி சுவாதீனத்தில் இல்லை என்பதை நீ பார்ப்பாய். உனது மனம் ஒரு பைத்தியக்காரனின் மனமாக இருப்பதை நீ பார்ப்பாய். எப்படியோ நீ அதை மூடிமறைத்து, உள்ளே என்ன உள்ளதென்று யாரும் பார்க்காமல் சமாளித்து போய்கொண்டிருக்கிறாய். உனது மனதில் உள்ளது என்னவென்று பிறர்க்கு மட்டுமின்றி உனக்கும்கூட தெரியாமல் மறைக்கும் அளவு நீ அதில் திறமைசாலியாகிவிட்டாய். அது தொடர்ந்து போய்கொண்டே இருக்கிறது. யாக்கட்டியாக், யாக்கட்டியாக். இதுபோல் தொடர்ந்து ஓசை எழுப்பிகொண்டேயிருக்கும் மனதினால் நீ செவிடாக இல்லாவிட்டாலும்கூட உன்னால் கவனிக்கமுடிவதில்லை நீ கேட்க மட்டுமே செய்கிறாய்.
கவனிப்பதற்கு ஒரு அமைதியான தொடர்பு சாதனம் தேவை.

THE OSHO UPANISHED
.
தியான யுக்தி – 2

உள் உரையாடல்

எப்போது முடிகிறதோ அப்போது ஒரு மணிநேரமோ அதற்கு மேலுமோ மெளனத்தில் அமர்ந்திரு. உள்ளே உரையாடல் ஓடிக்கொண்டேயிருக்கும். ஆனால் அதில் பங்கெடுத்துக்கொள்ளாதே.

காலம் 6 மாதங்கள்.

சம்பந்தப்படாமல் கவனித்தல்

இரண்டு பேர் பேசுவதை கவனிப்பது போல சம்பந்தப்படாமல் கவனிப்பதுதான் இதன் முக்கியமான பாகம். அதில் சம்பந்தப்படாதே. மனதின் ஒரு பாகம் மற்றொரு பாகத்திடம் சொல்வது என்ன என்று பார். என்ன வந்தாலும் வரட்டும். அதை அடக்க முயற்சிக்காதே. ஒரு சாட்சியாக மட்டும் இரு.
வருடக்கணக்கில் நீ சேர்த்து வைத்த குப்பைகள் வெளிவரும். இந்த குப்பைகளை வெளிவீச மனதிற்கு சுதந்திரம் கொடுக்கப்படவேயில்லை.
பந்தயக்குதிரை
வாய்ப்பு கிடைத்தவுடன், மனம் கட்டவிழ்ந்த குதிரை போல ஓடும். ஓடட்டும். உட்கார்ந்து கவனி. கவனி. கவனிப்பது மட்டுமே செய். பொறுமையாக உட்கார்ந்திருப்பது ஒரு கலை. நீ குதிரை மீது அமர்ந்து அதை இப்படி அப்படி செலுத்த விரும்புவாய். அது உன் பழைய பழக்கம். இந்த பழக்கத்தை உடைக்க பொறுமையாக இருக்க வேண்டும். அந்த பொறுமையாக இருப்பது எப்படி என்று கற்றுக் கொள். மனம் ஓடும்போதெல்லாம் வெறுமே கவனி. எந்த வகையிலும் குறுக்கிட முயற்சிக்காதே. ஒரு வார்த்தை எழுந்தாலும் அதன் மூலம் மற்றொன்று என ஆயிரம் விஷயங்கள் உள்ளே வந்துவிடும். ஏனெனில் எல்லாமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையே.
உன் மனதை வெளியே கொட்டு

சாத்தியப்பட்டால் உனது எண்ணங்களை வெளியே கொட்டு. பேசு. அது இன்னும் அவசியம். அது மேலும் உதவி புரியும். ஏனெனில் நீயும் அதை கேட்கலாம். ஏனெனில் நினைக்கும்போது எண்ணங்கள் மிகவும் மெலிதானவை. உனக்கு அதைப் பற்றி தெளிவாக தெரியாததால் ஒருவிதமான பயம் இருக்கக்கூடும். சத்தமாக பேசு, அதை கவனி, அதைப் பற்றிய விழிப்புணர்வு கொள். அதில் சம்பந்தப்படாமல் பிரிந்து இருப்பதில் கவனமாக இரு. மனதில் இருப்பதை பேசுவதன் மூலம் தெளிவு பெறு. ஆனால் தொடர்பற்று சம்பந்தமில்லாமல் இரு. கெட்ட வார்த்தை வந்தால் ஏசு, பேசு. ஆறு மாதங்கள் பொறுமையாக மனதை காலி செய்வது மிகவும் அவசியம். ஏனெனில் உனது வாழ்க்கை முழுவதும் நீ மனதை எண்ணங்களால் நிரப்புவதை தவிர வேறேதுவும் செய்யவில்லை. பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் செய்தால் மட்டுமே ஆறு மாதங்கள் போதும். இல்லாவிடில் அது ஆறு வருஷங்களோ, ஆறு பிறவிகளோ எடுக்கும். எல்லாமே உன்னைப் பொறுத்தது. நீ எந்த அளவு முழு மனதுடனும் நேர்மையாகவும் இந்த முறையில் முயற்சி செய்கிறாய் என்பதை பொறுத்தது. நீ சாட்சியாக இருக்கிறாய் என்பதை பலமுறை நீ மறந்துபோவாய். குதிரை மீது ஏறி சவாரி செய்ய ஆரம்பித்து விடுவாய். அதில் ஈடுபட்டு, உனது எண்ணங்களின் பயணத்தை ஆரம்பித்துவிடுவாய். நீ ஏதாவது எண்ணத்துடன் உன்னை அடையாளப்படுத்திக் கொண்டு விட்டால் அப்போது நீ தோற்றுப் போய் விட்டாய். அதைப் பற்றி விழிப்புணர்வு அடைந்த கணமே குதிரையை விட்டு இறங்கி, வார்த்தைகளும் எண்ணங்களும் அதை செலுத்தாமல் எங்கே போகுமோ அங்கே போகட்டும். விட்டுவிடு, கவனிப்பதை மட்டுமே செய்.

மெது மெதுவாக நீ மௌனத்தின் மிருதுவான காலடி ஓசையை கேட்க ஆரம்பிப்பாய். கேட்கும் கலையை அனுபவப்படுவாய். காற்று மரத்தில் மோதும் ஒலியை, பூவிதழ்களும் சருகுகளும் உதிரும் ஓசையை நீ கேட்பாய். கடற்கரையில் அமர்ந்தால் அலையின் ஓசையை கேட்பாய். நதியின் ஓட்டத்தை, மின்னலை, இடியோசையை கேட்பாய். பறவைகள் பாடுவதை, குழந்தை அழுவதை, நாய் குரைப்பதை கேட்பாய். சூழ்நிலை எதுவாக இருந்தாலும் நீ சப்தத்தை கேட்பாய்.

நீ கேட்பது எப்படி என்ற கலையை கற்றுக் கொண்டு விட்டால் பின் நீ சந்தோஷத்தால் நிறைந்து போவாய், ஏனெனில் நீ அப்போது ஒரு சாட்சியாளன் மட்டுமே. கவனிப்பதே சந்தோஷமானதாக இருக்கும். கவனித்தால் அது தியானமாகும். தியானமாக இல்லாவிடில் நீ கேட்க முடியாது.

THE TRUE SAGE

தியான யுக்தி - 3
தந்தி வாக்கியம் போல பேசு

வார்த்தைகளில் உணர்வு வார்த்தைகள், அறிவார்ந்த வார்த்தைகள் என உள்ளன. அறிவார்ந்த வார்த்தைகளை மேலும் மேலும் விலக்கி விடு. மேலும் மேலும் உணர்வுரீதியான வார்த்தைகளை உபயோகப்படுத்து. சமூக வார்த்தைகளும் ஆன்மீக வார்த்தைகளும் உண்டு. சமூக வார்த்தைகளை விடு. பிளவை உருவாக்கும் வார்த்தைகள் உள்ளன. நீ அவற்றை சொன்ன கணமே வாதம் ஆரம்பமாகும். அதனால் தர்க்கரீதியான வாதத்துக்கு அடிகோலும் மொழியை உபயோகிக்காதே. அன்பின் அக்கறையின் கனிவின் மொழியை உபயோகி. அப்போது தகராறு எழாது.

முதல்படி அவசியப்பட்டால் மட்டுமே பேசுதல் தேவைப்பட்டதை மட்டும் பேசுதல்- தந்தி கொடுப்பது போல, பத்து வார்த்தைகளுக்குள் தேர்ந்தெடுத்து பேசு. மக்கள் பேசும்போது கேட்டால் ஆச்சர்யப்படுவாய் எல்லா இடத்திலும் தவறாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. நீ சொல்வது ஒன்று, வேறொன்று புரிந்துகொள்ளப்படுகிறது. மக்கள் தாங்கள் இப்போது பேசுவதில் ஐந்து சதவீதம் மட்டும் பேசினால் போதும் அந்த ஐந்து சதவீதத்தில் தேவைப்படுவது அனைத்தும் உள்ளடங்கிவிடும். அப்போது இந்த உலகம் இன்னும் அமைதியாகவும் இன்னும் மெளனமாகவும் இருக்கும்.
உன்னுடைய தந்தி என்பது ஒரு கடிதத்தை விட சுருக்கமானதாகவும் பொருள் நிறைந்ததாகவும் இருக்கும். தந்திபோல பேசு, அப்படி பேசினால் நாள் பூராவும் சில தடவைகள் மட்டுமே பேச வேண்டிவருகிறது என்பதை கண்டு நீ ஆச்சர்யப்படுவாய்.

THE GOLDEN FUTURE


ஓஷோவின் விளக்கம் - ஏழு பள்ளத்தாக்குகள்


ஓஷோ மனிதன் கடந்து செல்லும் பாதையில் ஏழு பள்ளத்தாக்குகள் இருக்கின்றன என்று கூறுகிறார். அதைப் பற்றி அவர் கூறுவதும் அதைப் பற்றி அவர் கூறும் விளக்கங்களும் இனி தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பள்ளத்தாக்கு என தொடர்ந்து வரும்.

முன்னொரு காலத்தில் ஒரு பெண் இருந்தாள். அவள் வளர்ந்து வந்த மதத்தை விட்டு அவள் விலகி வந்தாள். அவள் மற்றொரு மதத்தின் மீது நம்பிக்கை கொண்டு அதில் சேர்ந்தாள். பின் மற்றொரு மதத்தின் கொள்கை மீது பிடிப்பு ஏற்பட்டு இதை விட்டு விலகி அதில் சேர்ந்தாள். ஒவ்வொரு முறை அவள் வேறு மதத்தின் மீது ஈர்ப்பு கொள்ளும்போதும் அவளுக்கு ஏதோ புரிந்து விட்டதாகவும் ஆனால் அது நிறைவு தரவில்லை எனவும் அவள் நினைத்தாள். ஒவ்வொரு முறை அவள் மதம் மாறும்போதும் அவள் வரவேற்கப்பட்டாள். அவளது தரம் உயர்ந்து இருப்பதாகவும், அவளது தூய்மையும் ஞானநிலையும் உயர்ந்து வருவதாகவும் எல்லோரும் நினைத்தனர்.

ஆனால் அவளது மனநிலையோ குழப்பமாகத்தான் இருந்தது. இந்த நீண்ட பயணத்தில் அவள் ஒருமுறை இமாம் ஜபார் சாதிக் என்ற நிறைவடைந்த ஞானி ஒருவரைப் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்திக்கச் சென்றாள்.

அவளது முயற்சிகளையும் கருத்துக்களையும் கேள்விப்பட்ட பின் அவர் நீ உன் வீட்டிற்கு திரும்பிச் செல். நான் எனது முடிவை ஒரு செய்தியாக அனுப்பி வைக்கிறேன் என்றார்.

விரைவிலேயே அந்த ஞானியின் சீடர் ஒருவர் இவளின் வீடு தேடி வந்தார். அவர் கையில் அந்த குரு கொடுத்தனுப்பிய ஒரு பார்சல் இருந்தது. அவள் அதை திறந்து பார்த்தாள். அதில் ஒரு கண்ணாடி பாட்டில் இருந்தது. அதில் கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறங்களையுடைய மணல் மூன்று அடுக்குகளாக நிரப்பப்பட்டு இருந்தது. மீதி பாதி பஞ்சால் நிறைக்கப்பட்டிருந்தது. அதன்கூடவே இந்த பஞ்சை எடுத்துவிட்டு இந்த பாட்டிலை குலுக்கு. அது எப்படி இருக்கிறதோ அப்படித்தான் நீ இருக்கிறாய் என்ற எழுதப்பட்ட குறிப்பு ஒன்றும் இருந்தது.

அவள் அந்த பஞ்சை எடுத்துவிட்டு அந்த பாட்டிலை குலுக்கினாள். பார்த்தபோது அவள் கையில் இருந்தது சாம்பல் கலர் கொண்ட மணல் பாட்டில்.


மனிதன் முரண்பாடுடையவன். மனிதன் மட்டுமே மிருகமாகவும் மனிதனாகவும் இருக்கக் கூடியவன். அதுதான் முரண்பாடு. அதுதான் அவனது தனித்துவம். மனிதனின் சிறப்பே அவனுக்கு உள்ளே உள்ள உள்முக முரண்பாடுதான். மற்ற அனைத்து மிருகங்களும் முரண்பாடு உடையவை அல்ல.

ஒரு மரம் மரம் மட்டுமே. ஒரு நாய் நாய் மட்டுமே. ஆனால் மனிதனுக்கு மட்டும் அது மட்டுமே என்பது போன்ற நிலை கிடையாது. அவன் எப்போதுமே வளர்ச்சியடைபவன், நிலைமாற்றமடையக் கூடியவன். மனிதன் எப்போதும் தன்னையே கடந்து செல்கிறான். அதுதான் அவனது முரண்பாடு. அது அவனது ஆழ்நிலை இருப்பு. அது தற்செயலானதல்ல, அதுதான் அடிப்படையே. நீ இந்த முரண்பாட்டை புரிந்து கொண்டால் மனித்தன்மை பற்றிய முதல்தரிசனம் உனக்கு ஏற்படும்.

மனிதன் என்பவன் எப்போதும் ஒரு திட்டம்தான், ஒரு வளரக்கூடியவன்தான். அவனது இருப்பு வளரக்கூடியது, அதுதான் முரண்பாடு. அவன் எப்போதும், முன்பு எப்படி இருந்தானோ அதற்கும் இனிமேல் என்னவாக மாறப் போகிறானோ அதற்கும் இடையில் இருக்கிறான். அவன் எப்போதும் அவனது கடந்த காலத்திற்கும் அவனது எதிர்காலத்திற்கும் இடையில் இருக்கிறான். கடந்த காலமும் எதிர்காலமும் ஆன இரண்டு நிரந்தரத்திற்கிடையே ஆன பாலம் அவன். அவன் கடந்து செல்பவன், தொடர்ந்து கடந்து சென்று கொண்டே இருப்பவன். மனிதன் அவன் என்னவாக இருக்கிறானோ அதில் நிறைவடைவது இல்லை. அவன் கடந்து செல்ல முயன்று கொண்டே இருக்கிறான். எப்போதும் முயன்று கொண்டே இருக்கிறான். அவன் என்ன செய்தாலும் அடிப்படையில் அவனது முயற்சி எப்படி மேன்மேலும் உயர்வது, மேன்மேலும் சிறப்படைவது, மேன்மேலும் வளர்வது என்பதிலேயே இருக்கிறது.
மனிதன் ஒரு முன்னேறுபவன், ஒரு வழிப்போக்கன், ஒரு பயணம்தான். அவனது வாழ்வே ஒரு புனிதப்பயணம்தான், முடிவற்ற பயணம்தான், அது போய்க் கொண்டே இருக்கும். ஒரு நாய் பிறக்கிறது, ஒரு மரம் பிறக்கிறது - மரம் ஒரு மரத்திற்குரிய குணாதிசியங்களுடன் பிறக்கிறது, நாய் அதற்கேரிய குணாதிசியங்களுடன் பிறக்கிறது. மனிதன் அது போன்ற கொடுக்கப்பட்ட யதார்த்தமல்ல. மனிதன் மறைந்துள்ள ஆற்றலுடன், ஒரு சாத்தியக்கூறாக பிறக்கிறான். மனிதன் வெறுமையாக, வெற்றுத்தாளாக பிறக்கிறான். எதுவும் எழுதப்படவில்லை.

மற்ற உயிரினங்கள் அனைத்தும் ஒரு குறிபிட்ட ஜீவிதத்தை ஒரு குறிப்பிட்ட உயிரமைப்பை கொண்டுள்ளன. மனிதன் எதிரிடையானவன். அவனது இருப்பு முதலில் வந்து விடுகிறது. அவன் அவனது உயிரமைப்பை தேடுகிறான். மற்ற விலங்குகளில் உயிரமைப்பு முதலில் வந்து விடுகிறது, பின் இருப்பு வருகிறது. அவை ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட உள்ளடங்கிய அமைப்புடன் வருகின்றன. அவை வளருவதேயில்லை, அவை அப்படியேதான் இருக்கின்றன. அதனால்தான் அவை வெகுளியாக, கவலையற்று, பதட்டமற்று இருக்கின்றன. ஒரு பசுவின் கண்களைப் பார் – எவ்வளவு அமைதி, எவ்வளவு அடக்கம், எவ்வளவு சாந்தம் – அதில் வேதனையோ கவலையோ எதுவும் இருக்காது. தெளிவாக இருக்கும். மனிதனின் கண்களைப்பார், அவை எப்போதும் தெளிவற்று இருக்கும். அதில் எப்போதும் ஒரு வேதனை இருக்கும். அதில் எப்போதும் ஒரு நடுக்கமிருக்கும். நான் இதை செய்து முடிப்பேனோ இல்லையோ என்னால் என்னை கண்டுபிடிக்க முடியுமோ முடியாதோ நான் நிறைவடைவேனோ இல்லை நிறைவடையாமல் நின்று விடுவேனோ என்ற பதட்டம் இருந்து கொண்டேயிருக்கும்.

விலங்குகள் தளர்வாக ஓய்வாக இருக்கின்றன. மனிதன் இறுக்கத்தில் இருக்கிறான். அதுதான் அவனது சிறப்பு, அதுதான் அவனது வேதனை. அதுதான் அவனது அழகு, அதுதான் பிரச்னை. அவனால் அவனை செதுக்க முடியும் அதுதான் அவனது தனித்துவம், அவன்தான் கடவுள். அவனால் அவனை செதுக்கமுடியாமல் போய்விடலாம், அவன் தோல்வியடையலாம், என்ன நிகழுமென்பது யாருக்குத் தெரியும் அதுதான் அவனது வேதனை. சுதந்திரத்தினால் அது சிறப்பானது. அவன் ஏற்கனவே வடிவமைக்கப்பட்டவனல்ல. ஏற்கனவே உருவாக்கப்பட்ட அமைப்புடன் பிறக்காத ஒரே விலங்கு மனிதன்தான். அவனுக்கு வழிமுறை இல்லை. அவன் திட்டமிடப்பட்டவனல்ல.

மனிதன்தான் செயல்முறை திட்டமற்றவன். அவன் பிரபஞ்சத்தினுள் ஏதுமற்றவனாக வருகிறான். பின் அவன் அவனது உயிரமைப்பை துழாவ ஆரம்பிக்கிறான். அவன் தேடி திரிந்து உருவாக்க ஆரம்பிக்கிறான். மனிதனே ஒரு சாகசம்தான்.

ஆனால் சாகசத்துடன் நிலையற்றதும் பாதுகாப்பற்றதும், தோல்வியும் பயமும் இருக்கும். தவறாக போய்விடலாம். தவறாகப் போய்விடக் கூடிய வாய்ப்புதான் அதிகம். சரியாக செல்லக்கூடிய வாய்ப்பு குறைவு. ஆயிரத்தோரு வழிகள் உள்ளன. எது சரியானது. நீ எப்போதும் தவிப்பில்தான் இருப்பாய். நீ எதை தேர்ந்தெடுத்தாலும் அதை உறுதியோடு தேர்ந்தெடுக்க முடியாது. ஏனெனில் இந்த பாதை உன்னை உனது குறிக்கோளுக்குத்தான் கூட்டிச் செல்லும் என்ற உறுதி உனக்கு இருக்கமுடியாது. அது சென்றடையலாம் அல்லது அது ஒரு பாலைவனத்தில் சென்று முடியலாம்.

மனிதனின் சிறப்பே அவனது சுதந்திரம்தான். அவனால் அவனை உருவாக்கிக் கொள்ள முடியும், அவனால் அவனாக இருக்கமுடியும். எதுவும் அவனுக்கு கட்டாயமில்லை, எதுவும் அவன்மேல் திணிக்கப்படவில்லை. மனிதனின் துயரம் என்னவென்றால் அவனால் உறுதியாக இருக்கமுடியாது, அவன் சரியான பாதையில்தான் இருக்கிறான் என்று உறுதி கொள்ள முடியாது, அவன் செய்வது அர்த்தமுடையதா இல்லையா என்று கூற முடியாது என்பதுதான்.

மனிதன் கிறுக்காகிவிட்ட ஒரே விலங்கு. அவன் சந்திக்கவேண்டிய தீர்க்கவேண்டிய பிரச்னை உண்டு. அவன் அதை கடந்து வளர வேண்டும். இதுதான் நீ புரிந்துகொள்ளவேண்டிய முதல் விஷயம் என நான் உனக்கு சொல்ல விரும்புகிறேன்.

மிகச் சிறந்த சூஃபி ஞானி ஒருவர் இருந்தார். - அவர் எல்லா ஞானிகளைவிடவும் மிகவும் சிறந்தவர் – அவர் பெயர் அல் ஹாஜலை. அவர், மனிதனிலிருந்து கடவுளுக்கு, மனிதனின் ஆற்றலிலிருந்து நிதர்சனத்திற்கு, சாத்தியக்கூற்றிலிருந்து நிஜத்திற்கு என மனிதனின் வளர்ச்சிப் பாதையில் ஏழு நிலைகள் - ஏழு பள்ளத்தாக்குகள் - உள்ளன எனக் கூறியுள்ளார். இந்த ஏழு நிலைகளும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இதை புரிந்து கொள்ள முயற்சி செய். ஏனெனில் நீ இவற்றை கடந்து வர வேண்டும். ஒவ்வொருவரும் இந்த ஏழு நிலைகளையும் கடந்து வந்தாக வேண்டும்.
அந்தந்த பள்ளத்தாக்குடன் என்ன செய்ய வேண்டும் என்பதை நீ சரியாக புரிந்து கொண்டால் நீ அதை எளிதாக கடந்து விடலாம். சிகரத்தை அடையலாம். ஏனெனில் ஒவ்வொரு பள்ளத்தாக்கும் மலைஉச்சிகளால் சூழப்பட்டுள்ளது. உன்னால் பள்ளத்தாக்கை கடந்து செல்ல முடிந்தால், நீ பள்ளத்தாக்கில் சிக்கிக் கொள்ளவில்லையென்றால், நீ பள்ளத்தாக்கில் தொலைந்து போக வில்லையானால், நீ பள்ளத்தாக்குடன் பந்தம் கொள்ளாவிடில், நீ பந்தமற்று ஒரு சாட்சியாக தனிப்பட்டவனாக இருந்தால், சிகரத்தை மறக்காமல் இருந்தால், நான் மலைஉச்சியைதான் சென்றடைய வேண்டும், நான் இங்கு ஒரு அன்னியர்தான், இது எனது வீடல்ல என்பதை மறக்காமல் தொடர்ந்து நினைவில் வைத்துக் கொண்டிருந்தால் நீ சிகரத்தை சென்றடைவாய். ஒவ்வொரு பள்ளத்தாக்கை கடந்தபின்னும் அங்கு கொண்டாட்டம் இருக்கும்.

ஆனால் ஒவ்வொரு பள்ளத்தாக்கை கடந்தபின்னும் நீ மற்றொரு பள்ளத்தாக்கினுள் நுழைய வேண்டும். இது போய்க்கொண்டே இருக்கும். ஏழுபள்ளத்தாக்குகள் உள்ளன. நீ ஏழாவது பள்ளத்தாக்கை கடந்துவிட்டால் பின் முடிந்தது. அப்போது மனிதன் தன் இருப்பை சென்றடைந்து விடுகிறான். அவன் இப்போது முரண்பாடானவனல்ல. அங்கு தவிப்பில்லை, வேதனையில்லை. இதைத்தான் நாம் புத்தநிலை என்று அழைக்கிறோம். இதைத்தான் கிறிஸிதுவர்கள் கிறிஸ்து நிலை என்று அழைக்கின்றனர். ஜைனர்கள் ஜைனநிலை என்று அழைக்கின்றனர். வெற்றி பெற்ற நிலை. அதற்கு பல பெயர்கள். ஆனால் மனிதன் கடவுள் நிலை அடையும்வரை அவன் தவிப்பில் இருப்பான் என்பதுதான் அடிப்படையான ஒன்று. கடவுள் நிலையை அடைவதற்கு முன் ஏழு நிலைகள் ஏழு பள்ளத்தாக்குகள் கடக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு நிலையும் அதற்கே உரித்தான கவர்ச்சியை கொண்டுள்ளது. நீ அதில் ஈர்ப்பு அடைந்து அதிலேயே இருந்து விடும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. நீ இரண்டாவது பள்ளத்தாக்கினுள் செல்ல இதிலிருந்து வெளியே சென்றாக வேண்டும். இதை விட்டாக வேண்டும். ஒவ்வொரு பள்ளத்தாக்கிற்க்கு பின்னும் ஒரு சிகரம் ஒரு மிகஉயர்ந்த மலைஉச்சி இருக்கும். ஒவ்வொரு பள்ளத்தாக்கிற்கு பின்னும் ஒரு கொண்டாட்டம் இருக்கும். அந்த கொண்டாட்டம் மேலும் மேலும் ஆழமானதாக இருக்கும். இறுதியாக ஏழாவது பள்ளத்தாக்கில் நீ அந்த ஆனந்த பிரபஞ்சநிலையை அடைந்து விடுகிறாய். நீ கரைந்துவிடுகிறாய். பின் அங்கு கடவுள் மட்டுமே இருக்கிறார்.

இந்த ஏழு பள்ளத்தாக்குகளை பற்றியும் கவனித்து கேட்டு புரிந்துகொள்ள முயற்சி செய். அல் – ஹாஜலில் ஏதோ தத்துவார்த்தமாக பேசுகிறார் என்று நினைக்காதே. சூஃபிகள் தத்துவத்தில் அக்கறை கொள்வதில்லை. அவர்கள் மிக யதார்த்தமான மக்கள். அவர்கள் எதையாவது சொன்னால் அதில் பொருள் இருக்கும்.அவர்கள் எதையாவது சொன்னால் அது தேடுபவர்களுக்கானது, அது வெறுமனே ஆவல் கொண்டவர்களுக்கானதோ, அறிவு பூர்வமானவர்களுக்கானதோ அல்ல. அது உண்மையை அடைய மிக தீவிரமாக முயற்சி செய்பவர்களுக்கானது, அந்த பாதையில் இருப்பவர்களுக்கானது, அது தேடுபவர்களுக்கானது.

முதல் பள்ளத்தாக்கு............. அது அறிவு பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது.
இயல்பாகவே அறிவு முதலில் வரும். ஏனெனில் மனிதன் அறிந்து கொள்வதில் இருந்துதான் ஆரம்பமாகிறான். வேறு எந்த மிருகத்திற்கும் அறிவு இல்லை. மனிதன் மட்டுமே அறிந்து கொள்கிறான். மனிதன் மட்டுமே அறிவை சேகரித்து வைத்துக் கொள்கிறான். மனிதன் மட்டுமே எழுதுகிறான், படிக்கிறான், பேசுகிறான். மனிதனுக்கு மட்டுமே மொழி, கொள்கைகள், வேதங்கள் உள்ளன. அதனால் அறிவுதான் தகவலறிவுதான் முதல் பள்ளத்தாக்காக இருக்க முடியும்.

இந்த பள்ளத்தாக்கின் எதிர்மறையான விஷயம் என்னவென்றால் நீ தகவலறிவால் கவரப்படுவாய். நீ அறிவானவனாக மாறலாம், நீ தகவலறிவின் உண்மையான காரணத்தை மறந்து விடக்கூடும். நீ தகவலறிவுடன் மிகவும் ஒன்றிவிடலாம். பின் மேலும் மேலும் அறிவை சேர்த்துக் கொண்டே போகலாம். பல பிறவிகள்கூட அறிவை சேர்க்கலாம். நீ மிகச் சிறந்த அறிவாளிகளில் ஒருவராக, பண்டிதர்களில் ஒருவராக கூட ஆகலாம். ஆனால் நீ ஒரு தெரிந்து கொண்டவனாக முடியாது.

தெரிந்து கொள்வதற்கான வழி அறிவைச் சேகரிக்கும் வழியிலிருந்து வேறுபட்டது.
அறிவு வரும்போது இரண்டு விஷயங்கள் நிகழ்கின்றன. அறிந்து கொள்ளும் விஷயம் – நீ ஏதோ ஒன்றை அறிந்து கொள்கிறாய். அடுத்து, தன்னுணர்வு - பிரதிபலிப்பு - அறிந்து கொள்ளும் நீ. அறிந்து கொள்ளும் உன்னை விட்டுவிட்டு அறிந்து கொண்ட விஷயத்துடன் நீ மிகவும் ஒன்றி விடும்போது பள்ளத்தாக்கில் நீ தொலைந்துவிடுகிறாய். உன்னை கவரும், உன்னை சிக்க வைக்கும், நீ ஒன்றிவிடும் பாகத்தைத்தான் நான் எதிர்மறை என்றழைக்கிறேன்.

நீ அறிவானவனாக மாறிவிட்டால் நீ தொலைந்து போவாய். நீ இந்த முதல் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறுவதில்லை. தகவலறிவு அதிகம் பெற பெற நீ அதிக குழப்பமடைவாய் – ஏனெனில் எது உண்மை என்று முடிவு செய்ய வழியேயில்லை.
நீ காதால் கேட்பது எதுவுமே தர்க்கரீதியாக சொல்லப்பட்டால், மிகச் சரியாக உன்முன் வைக்கப்பட்டால், அது சரியானதாக தோன்றும். முடிவு செய்ய உனக்கு வேறு வழியேயில்லை. அதற்கு அளவுகோல் இல்லை. அதனால்தான் அது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நீ ஒரு குருவிடம் செல்கிறாய், அவர் சொல்வதை நீ கேட்கும்போது அது சரியானதாக தோன்றுகிறது. நீ வேறொரு குருவிடம் சென்று அவர் கூறுவதை கேட்கும்போது அதுவும் சரியானதாக தோன்றுகிறது. நீ ஒரு புத்தகத்தை படிக்கிறாய், அது சரியானதாக தோன்றுகிறது. வேறொரு புத்தகத்தை – அதற்கு நேர் எதிரிடையானதை – படிக்கிறாய். அதுவும் அதற்கான தர்க்கத்துடன் படிக்கும்போது அதுவும் சரியானதாக தோன்றுகிறது. சரியானது என்று முடிவு செய்ய இங்கு வழியேயில்லை. நீ சேர்த்துக் கொண்டே போனால் எதிர்மறையானவற்றையும் – வேறுபட்ட கோணங்களை – சேர்த்துக் கொண்டே போவாய். கோடிக்கணக்கான நிலைப்பாடுகள் உள்ளன. விரைவிலேயே நீ தத்துவங்களின் கோட்பாடுகளின் கூட்டமாக மாறி விடுவாய். அது உதவப் போவதில்லை, அது மிகுந்த இடையூறாக மாறிவிடும்.

அறிவு பள்ளத்தாக்கில் ஒருவர் கவனமாக இருக்க வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால் அறிந்து கொள்கிறோம் என்பதில் மட்டுமே தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவேண்டும். பொருளைப்பற்றியோ, விஷயத்துக்கோ முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. சாட்சியாக இருப்பதிலேயே கவனமாக இருக்க வேண்டும். மேலும் மேலும் சுதாரிப்புடனும் விழிப்புடனும் இருந்தால் தெரிந்து கொள்பவராக மாறலாம். பல விஷயங்களை அறிந்து கொள்வதால் அல்ல, விழிப்புணர்வுடன் இருப்பதால் மட்டுமே ஒருவர் உண்மையான தெரிந்து கொள்பவராக மாற முடியும்.
தகவல் அறிவு பாதை, கருத்துகள் நம்பிக்கைகள் முறைகள் கொண்ட ஆன்மீக நூல்களுடன் சம்பந்தப்பட்டது அல்ல. அது தெரிந்து கொள்வதுடன் சம்பந்தப்பட்டது. நீ தெரிந்து கொள்கிறாய். தன்னுணர்வு அடைவதற்கு உன்னிடம் அளவு கடந்த ஆற்றல் இருக்கிறது. பெற்றுக் கொள்பவரைப் பற்றி அக்கறை கொள். விழிப்புணர்வடை. பெற்ற விஷயத்தை பொருட்படுத்தாதே.
அறிந்து கொண்ட விஷயத்தைப் பற்றி அக்கறைப் படாதே. அறிந்து கொண்டுள்ளவரைப் பற்றி அக்கறை கொள். அறிவு இருபுறமும் முனை கொண்ட அம்பு போன்றது. ஒருமுனை அறிந்த விஷயத்தையும் மற்றொரு முனை அறிந்து கொள்பவரையும் சுட்டும். நீ விஷயத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் நீ பள்ளத்தாக்கில் தொலைந்து போவாய். நீ அறிந்து கொள்பவரை பிடித்துக் கொண்டால் நீ பள்ளத்தாக்கில் தொலைந்து போக மாட்டாய். உன்னால் பள்ளத்தாக்கை கடந்து போக முடியும். நீ அறிவு பள்ளத்தாக்கை கடந்து விட்டால் அங்கு சந்தோஷமான சந்தோஷம் இருக்கிறது. ஏனெனில் நீ உன்னுள் உள்ள அடிப்படைகளில் ஏதோ ஒன்றை இறுதி வரை இருக்கப்போகின்ற ஏதோ ஒன்றை மிகவும் தேவையான ஒன்றை புரிந்து கொண்டு விட்டாய். அறிந்து கொள்ளும் திறமையை தன்னுணர்வு அடையும் திறமையை புரிந்து கொண்டு விட்டாய்.

நீ அறிந்து கொள்பவரை பார்க்க கற்றுக் கொண்டால், அறிந்து கொள்பவரை பற்றி கவனமாக இருக்க ஆரம்பித்தால் நீ நேர்மறையானதை உபயோகிக்கிறாய்.

Source - The Secret of Secrets Vol 2 che #1சொர்க்கம் மற்றும் நரகத்தின் கதவுகள்- ஓஷோவின் கதை - 31

இந்த கதை அழகானது. ஜென் குரு ஹேக்குன் அபூர்வ மலர்களில் ஒருவர். ஒரு போர்வீரன் அவரிடம் வந்தான். ஒரு சமுராய், ஒரு சிறந்த வீரன் வந்து ஹேக்குனிடம் நரகம் என்று ஏதாவது உள்ளதா ? சொர்க்கம் என்று ஏதாவது உள்ளதா ? நரகம் மற்றும் சொர்க்கம் என்று ஒன்று இருக்குமானால் அவைகளின் கதவுகள் எங்கே உள்ளன ? நான் எங்கேயிருந்து உள்ளே செல்வது ? நான் எவ்வாறு நரகத்தை தவிர்த்துவிட்டு சொர்க்கத்தை தேர்ந்தெடுப்பது ? என கேட்டான், அவன் ஒரு எளிய வீரன். வீரர்கள் எப்போதும் எளிமையானவர்கள்.

எளிமையாக இருக்கும் ஒரு வியாபாரியை கண்டுபிடிப்பது கடினம். ஒரு வியாபாரி எப்போதும் தந்திரமான புத்தியை உடையவன். இல்லாவிடில் அவன் ஒரு வியாபாரியாக இருக்கமுடியாது. ஒரு வீரன் எப்போதும் எளிமையானவன், இல்லாவிடில் அவன் ஒரு வீரனாக இருக்கமுடியாது. ஒரு வீரன் இரண்டு விஷயங்களை மட்டுமே அறிவான், வாழ்க்கை மற்றும் இறப்பு – அதிகமல்ல.
அவனுடைய வாழ்க்கை எப்போதும் பணயத்திலேயே உள்ளது, அவன் எப்போதும் சூதாடிக்கொண்டிருக்கிறான், அவன் ஒரு எளிமையான மனிதன். அதனால்தான் வியாபாரிகள் ஒரே ஒரு மகாவீரரையோ, ஒரே ஒரு புத்தரையோ கூட உருவாக்கமுடியவில்லை. பிராமணர்களும்கூட ஒரு இராமரையோ, ஒரு புத்தரையோ, ஒரு மகாவீரரையோ உருவாக்கமுடியவில்லை. பிராமணர்களும் தந்திரசாலிகள், வேறு ஒரு வகையில் தந்திரசாலிகள். அவர்களும் ஒரு வேறுபட்ட உலகத்தின், மறு உலகத்தின் வியாபாரிகளே. அவர்கள் இந்த உலகத்தை சேராத ஒரு வியாபாரத்தை செய்கிறார்கள், ஆனால் அது மறு உலகத்தை சேர்ந்தது. அவர்களுடைய பூசாரித்தனம் ஒரு வியாபாரம். அவர்களுடைய மதம் கணிதம், கணக்கீடு. அவர்களும் தந்திரசாலிகளே, வியாபாரிகளை விட அதிக தந்திரசாலிகள். வியாபாரி அவனுடைய உலகத்திற்கு உட்பட்டவன், அவர்களுடைய தந்திரம் அதையும் கடந்து செல்கிறது. அவர்கள் எப்போதும் மறு உலகத்தைப்பற்றி, அவர்கள் மறு உலகத்தை அடையும்போது அங்கு கிடைக்கபோகும் பரிசுகள் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய சடங்குகள், அவர்களுடைய முழு மனமும் மறு உலகில் அதிக சுகத்தை எப்படி பெறுவது என்பது குறித்து சிந்தித்துகொண்டிருக்கிறது. அவர்களது கவலை சுகத்தை பற்றியது. வியாபாரிகளால் முடியவில்லை. பிராமணர்கள்கூட ஒரு புத்தரை உருவாக்கமுடியவில்லை. இது அதிசயமாய் உள்ளது. 24 தீர்த்தங்கரர்கள் அனைவரும் சத்திரியர்கள், வீரர்கள். புத்தர் ஒரு சத்திரியர், இராமன் மற்றும் கிருஷ்ணர் இருவரும் சத்திரியர்கள்.

அவர்கள் எளிமையான மக்கள், அவர்களுடைய மனதில் எந்த தந்திரமும், எந்த கணக்கீடும் இல்லை. அவர்களுக்கு இரண்டு விஷயங்கள் மட்டுமே தெரியும் – வாழ்க்கை மற்றும் இறப்பு.

இந்த எளிமையான வீரன் ஹேக்குனிடம் சொர்க்கம் எங்கே இருக்கிறது மற்றும் நரகம் எங்கே இருக்கிறது என்று கேட்பதற்காக வந்துள்ளான், அவன் எந்த கோட்பாடுகளையும் தெரிந்துகொள்வதற்காக வரவில்லை. அவன் கதவுகளை தெரிந்துகொள்ள விரும்பினான். அதனால் அவன் நரகத்தை தவிர்த்துவிட்டு சொர்க்கத்தில் நுழையலாம் ஹேக்குன் ஒரு வீரன் மட்டுமே புரிந்துகொள்ளகூடிய வகையில் பதிலளித்தார். அங்கு ஒரு பிராமணன் இருந்திருந்தால், வேதங்கள் தேவைப்பட்டிருக்கும், அவர் வேதங்கள், உபநிடதங்கள், பைபிள், குரான், ஆகியவற்றிலிருந்து மேற்கோள் காட்டியிருப்பார் அப்போதுதான் ஒரு பிராமணன் புரிந்துகொள்ளமுடியும். ஒரு பிராமணனுக்கு தேவையானவை அனைத்தும் வேதங்களில் உள்ளது, வேதங்களே உலகம். ஒரு பிராமணன் வார்த்தைகளில், சொற்களில் வாழ்கிறான். ஒரு வியாபாரி அங்கு இருந்திருந்தால், ஹேக்குன் கொடுத்த பதில், இந்த வீரனோடு அவர் நடந்துகொண்ட விதம், ஆகியவற்றால் இந்த விடையை புரிந்துகொண்டிருக்கமாட்டான். ஒரு வியாபாரி எப்போதும் உன்னுடைய சொர்க்கத்தின் விலை என்ன ? என்ன விலை ? நான் அதனை எப்படி அடைவது? நான் என்ன செய்யவேண்டும்? எவ்வளவு புண்ணியம் செய்திருக்கவேண்டும்? அங்குள்ள நாணயம் எது? சொர்க்கத்தை அடைய நான் என்ன செய்யவேண்டும்? என்றே கேட்டுகொண்டிருப்பான். அவன் எப்போதும் விலையை கேட்பான்.

நான் ஒரு அழகான கதையை கேள்விப்பட்டிருக்கிறேன். இது தொடக்கத்தில் கடவுள் உலகத்தை படைத்தபோது நடந்தது. கடவுள் வெவ்வேறு இனத்தை சேர்ந்தவர்களிடம் பத்து கட்டளைகளை பற்றி கேட்பதற்காக பூமிக்கு வந்தார்.

வாழ்வின் பத்து விதிமுறைகள். யூதர்கள் அந்த பத்து விதிமுறைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துவிட்டார்கள் – கிறிஸ்துவர்களும் முகமதியர்களும். இந்த மதங்கள் அனைத்தும் யூதத்தன்மை உடையவை, அடிப்படை யூதம், யூதன் ஒரு சரியான வியாபாரி.


இப்படி அதனை கேட்பதற்காக கடவுள் வந்தார், அவர் இந்துகளிடம் வந்து பத்து கட்டளைகளை பெற்றுகொள்ள விரும்புகிறீர்களா என கேட்டார். இந்துகள் முதல் கட்டளை என்ன ? எங்களுக்கு இந்த பத்து கட்டளைகள் என்னவென்று தெரியாது எங்களுக்கு கண்டிப்பாக ஒரு உதாரணம் தேவை என்றனர்.

கடவுள் உயிர்களை கொல்லக்கூடாது என கூறினார்.

இந்துகள் எங்களுக்கு அது கடினமாக இருக்கும். வாழ்க்கை சிக்கலானது, கொல்வதும் உள்ளடங்கியுள்ளது. அது ஒரு பெரிய பிரபஞ்ச விளையாட்டு, அதில் பிறப்பு, இறப்பு, போராட்டம், போட்டி, எல்லாம் உள்ளது. எல்லா போட்டிகளும் எடுக்கப்பட்டுவிட்டால் முழு விஷயமும் தட்டையாக துடிப்பற்றதாகிவிடும். எங்களுக்கு இந்த கட்டளைகள் பிடிக்கவில்லை. அவை முழு விளையாட்டையும் அழித்துவிடும். என கூறினர். பிறகு அவர் முகமதியர்களிடம் சென்று தவறான உறவில் ஈடுபடக்கூடாது என அவர்களுக்கும் அவர் ஒரு உதாரணம் கொடுத்தார். அவர்களும் உதாரணம் கேட்டனர். முகமதியர்கள் இது கடினமாக இருக்கும். வாழ்க்கை எல்லா அழகையும் இழந்துவிடும், குறைந்தபட்சம் நான்கு மனைவிகளாவது தேவை. நீங்கள் அதனை பலவந்தம் என அழைக்கலாம், ஆனால் இதுதான் வாழ்வைத் தரக்கூடியது, எல்லா புனிதமான மக்களும் பெற வேண்டியது. மறு உலகத்தைப்பற்றி யார் அறிவார் ? இதுதான் உலகம், அனுபவிப்பதற்காக எங்களிடம் நீங்கள் இந்த உலகத்தை அளித்துள்ளீர்கள் ஆனால் இப்போது நீங்கள் இந்த பத்து கட்டளைகளோடு வந்துள்ளீர்கள். இது முரண்பாடானது என கூறினர்.

கடவுள் சுற்றி சுற்றி வந்தார். பிறகு அவர் மோசஸிடம், யூதர்களின் தலைவரிடம் வந்தார். மோசஸ் உதாரணத்தைச் சிறிதும் கேட்கவில்லை, மேலும் கடவுள் பயப்பட்டார், மோசஸ் முடியாது என்று சொல்லிவிட்டால், யாரும் இல்லை, மோசஸ்தான் கடைசி நம்பிக்கை. கடவுள் மோசஸை கேட்டபோது – கடவுள் என்னிடம் பத்து கட்டளைகள் உள்ளன என்று சொன்ன நொடியில் –- மோசஸ் என்ன பதிலளித்தார் ? அவர் அவை என்ன விலை? என்று கேட்டார். இப்படித்தான் ஒரு வியாபாரி யோசிப்பான். அவன் தெரிந்துகொள்ள விரும்பும் முதல் விஷயம் விலை.
கடவுள் அவை இலவசம் என கூறினார். மோசஸ் பிறகு நான் பத்தை வைத்துக்கொள்கிறேன். அவை இலவசமாக இருக்கும் பட்சத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என கூறினார். அப்படித்தான் பத்து கட்டளைகளும் பிறந்தன.

ஆனால் இந்த சமுராய் ஒரு யூதனல்ல, அவன் ஒரு வியாபாரியல்ல, அவன் ஒரு போர்வீரன். அவன் ஒரு எளிமையான கேள்வியோடு வந்துள்ளான். அவனுக்கு வேதங்களிலோ, விலையிலோ, சொல்லும் பதிலிலோ, ஆர்வமில்லை. அவன் உண்மையின் மீது ஆர்வம் கொண்டிருந்தான். மற்றும் ஹேக்குன் என்ன செய்தார் ? அவர் நீ யார் ? என கேட்டார் போர்வீரன் நான் ஒரு சமுராய் என பதிலளித்தான். ஒரு சமுராயாக இருப்பது ஜப்பானில் மிகவும் பெருமை வாய்ந்த ஒரு விஷயம். அதன் பொருள் ஒரு சிறந்த போர்வீரன், அவனுடைய வாழ்க்கையை இழப்பதற்கு ஒரு நொடிகூட தயங்கமாட்டான். அவனைப்பொறுத்தவரை, வாழ்வும் இறப்பும் வெறும் ஒரு விளையாட்டு.

அவன் நான் ஒரு சமுராய், சமுராய்களின் தலைவன். அரசரும்கூட எனக்கு மரியாதை அளிக்கிறார், என கூறினான். ஹேக்குன் சிரித்துவிட்டு, நீ ஒரு சமுராய் ? நீ ஒரு பிச்சைக்காரனைப்போல இருக்கிறாய் என கூறினார்.

உடனே சமுராயின் பெருமை காயப்பட்டுவிட்டது, அவனுடைய ஆணவம் அடி வாங்கிவிட்டது. அவன் எதற்காக வந்தான் என்பதை அவன் மறந்துவிட்டான். அவன் அவனுடைய வாளை எடுத்து ஹேக்குனை கொல்லப்போனான். சொர்க்கத்தின் கதவைப்பற்றியும் நரகத்தின் கதவைப்பற்றியும் கேட்க இந்த குருவிடம் அவன் வந்துள்ளான் என்பதையே அவன் மறந்துவிட்டான்.

அப்போது ஹேக்குன் சிரித்துவிட்டு இதுதான் நரகத்தின் கதவு. இந்த வாளோடு, இந்த கோபம், இந்த ஆணவம், கதவு இங்குதான் திறக்கிறது என கூறினார்.

இதைத்தான் ஒரு போர்வீரன் புரிந்துகொள்ளமுடியும். உடனடியாக அவன் புரிந்துகொண்டான், இதுதான் கதவு. அவன் அவனுடைய வாளை அதன் உறைக்குள் போட்டான்.

அப்போது ஹேக்குன் இங்கு சொர்க்கத்தின் கதவு திறக்கிறது என கூறினார்.

நரகமும் சொர்க்கமும் உனக்குள் உள்ளன. இரண்டு கதவுகளும் உனக்குள் உள்ளன. நீ உணர்வற்று செயல்படும்போது அங்கு நரகத்தின் கதவு உள்ளது, நீ கவனமாகவும், உணர்வுடனும் இருக்கும்பொழுது, அங்கு சொர்க்கத்தின் கதவு உள்ளது.

இந்த சமுராய்க்கு என்ன நடந்தது? ஹேக்குனை கொல்லப்போகும் அந்த சமயத்தில் அவன் உணர்வோடு இருந்தானா ? அவன் என்ன செய்யப்போகிறான் என்பதுபற்றி அவன் உணர்வோடு இருந்தானா ? அவன் எதற்காக இங்கு வந்துள்ளான் என்பதுபற்றி உணர்வோடு இருந்தானா ? எல்லா உணர்வும் மறைந்துவிட்டது.

ஆணவம் ஆட்கொள்ளும்போது, நீ கவனமாக இருக்கமுடியாது. ஆணவம் ஒரு போதை, அந்த போதை உன்னை முழுமையாக உணர்வற்றவனாக்கிவிடும். நீ செயல்படுவாய் ஆனால் அந்த செயல் உனது உணர்வற்ற நிலையிலிருந்து வெளிப்படும் உன்னுடைய உணர்வு நிலையிலிருந்து வெளிப்படாது. மற்றும் உணர்வற்ற நிலையிலிருந்து எந்த செயல் வந்தாலும் அப்போதெல்லாம், நரகத்தின் கதவு திறந்துள்ளது. நீ என்ன செய்தாலும், நீ என்ன செய்கிறாய் என்ற உணர்வு உனக்கு இல்லாவிட்டால் நரகத்தின் கதவு திறந்துவிடுகிறது.

திடீரென, ஹேக்குன் இதுதான் கதவு அதை நீ ஏற்கனவே திறந்துவிட்டாய் என சொன்னவுடன் உடனடியாக சமுராய் கவனமடைந்தான் – சூழ்நிலையே கண்டிப்பாக கவனத்தை உண்டாக்கியிருக்கவேண்டும்.

வெறுமனே கற்பனை செய்து பார். நீ போர்வீரனாக இருந்திருந்தால், சமுராயாக இருந்திருந்தால், வாளை கையில் ஏந்திகொண்டு, கொல்லப்போகிறாய். என்ன நடந்திருக்கும். ஒரு நொடி அதிகமாகியிருந்தால் ஹேக்குனின் தலை வெட்டப்பட்டிருக்கும், ஒரு நொடி அதிகமாகியிருந்தால் அது உடலிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கும். அப்போது ஹேக்குன் இதுதான் நரகத்தின் கதவு என கூறினார்.

இது ஒரு தத்துவார்த்தமான பதில் அல்ல. எந்த ஞானியும் தத்துவார்த்தமான முறையில் பதில் அளிப்பதில்லை, சாதாரண ஞானமடையாத மனங்களுக்கு மட்டுமே தத்துவம் இருக்கிறது. ஞானி பதிலளிக்கிறார். அப்போது அந்த பதில் வார்த்தைகளால் ஆனதல்ல. அது முழுமையானது. இந்த மனிதன் அவரை கொன்றிருக்கலாம் என்பது பொருட்டல்ல. நீ என்னை கொன்றால் நீ கவனம் பெறுவாய் என்றால், அது தகுதிவாய்ந்ததே – ஹேக்குன் விளையாட்டை விளையாடினார். ஒரு வினாடி தப்பியிருந்தாலும் அந்த மனிதன் அவரை கொன்றிருக்கலாம். ஆனால் சரியான நொடியில் ஹேக்குன் இதுதான் கதவு என கூறினார்.

நீ ஒருவேளை சமுராயைப்பற்றி கேள்விபடாமல் இருக்கலாம். நீ ஒரு சமுராயை கொல்லப்போவதாக வைத்துகொள்வோம், உன்னுடைய வாள் உன்னுடைய கையில் உள்ளது, அது இப்போது அவனுடைய கழுத்தை தொடப்போகிறது. அவன் உனக்கு முன்னால், பாதுகாப்பு ஏதுமின்றி, எந்த ஆயுதமும் இன்றி, நின்றுகொண்டிருக்கிறான். சமுராய்கள் ஒரு குறிப்பிட்ட சத்தத்தை வைத்திருக்கிறார்கள், ஒரு மந்திரம். அவன் ஒரே ஒரு வார்த்தையை மிகவும் சத்தமாக கூறுவான், நீ உன்னுடைய சக்தி அனைத்தையும் இழந்துவிடுவாய். நீ இறந்ததை போல, ஒரு சிலைபோல ஆகிவிடுவாய். அவன் வெறுமனே ஒருவேளை ஹே என்று கூறலாம். நீ நிள்றுவிடுவாய். உனது கை நகராது. அந்த சத்தம் எல்லாவற்றையும் கட்டுபடுத்தும் இதயத்தில் குத்தும். உன்னுடைய கை நின்றுவிடும், உன்னுடைய மனம் அதிர்ச்சி அடையும், எல்லா செயல்பாடுகளும் மறைந்துவிடும். அவன் ஆயுதம் ஏதுமின்றி இருந்தால்கூட உன்னால் ஒரு சமுராயை கொல்லமுடியாது. ஒரு சத்தம் அவனுக்கு பாதுகாப்பாகிவிடும். நீ ஒரு துப்பாக்கி வைத்திருந்தால், உன்னுடைய கைகள் நகரமுடியாது, அல்லது நீ குறியை தவறவிடுவாய். அது வெறும் ஒரு சத்தம், ஒரு குறிப்பிட்ட முறையில் எழுப்பபடவேண்டிய ஒரு சத்தம், ஆனால் அது உனது இதயத்திற்குள் ஆழமாக சென்று உன்னுடைய செயல்பாட்டை முழுமையாக மாற்றிவிடும், உன்னுடைய செயல்பாட்டின் வழக்கத்தை மாற்றிவிடும்.

ஹேக்குன் இதுதான் கதவு என கூறியபோது சமுராய் சிலைபோல கண்டிப்பாக நின்றிருக்கவேண்டும். அந்த சிலைபோன்ற நிலையில், எல்லா செயல்களும் உறையும்போது, நீ கவனமடைகிறாய். ஏதாவது செயல் தேவை . . . இல்லாவிடில் உனது உணர்வற்ற தன்மை உடைந்து நீ உணர்வு பெறுவாய். ஒரு மனிதன் ஆறு மணிநேரம் எதுவும் செய்யாமல் அமர்ந்திருந்தால் அவன் ஞானடைந்துவிடுவான் என ஜென் கூறுகிறது. வெறும் ஆறு மணிநேரம் . . .ஆனால் ஆறுமணிநேரம் உண்மையிலேயே மிக அதிகம். நான் ஆறு நிமிடங்கள் போதும் என கூறுகிறேன். நீ முற்றிலுமாக எந்த செயல்பாடும் இன்றி இருக்கமுடியுமானால் ஆறு நொடிகள் கூட போதும். நீ ஏதும் செய்யாமல் இருக்கும்போது, நீ உணர்வற்று இருக்கமுடியாது, நீ ஏதும்செய்யாமல் இருக்கும்போது உன்னுடைய முழு சக்தியும் உணர்வுதன்மை அடைகிறது. ஒரு பிரம்மாண்ட வெடித்தல் நிகழ்கிறது.

Source: A BIRD ON THE WING CHAPTER # 3.

No comments: