Thursday, October 28, 2010

மலர் 3 இணைய இதழ் 3 11 அக்டோபர் 2010

ஓஷோ சாஸ்வதம் செய்தி

அவினாசி 2 கோவை NH – 47-ல், கந்தம்பாளையம் சாலையில் உள்ள ஓஷோ சாஸ்வதம் மையம் தனது தனித்துவமான விதத்தில் பலவிதமான நபர்களின் பிரச்னைகளின் அடி ஆழத்தை கண்டாய்ந்து அவர்கள் அதிலிருந்து வெளி வர உதவி வருகிறது. நான் இதிலிருந்து வெளிவர வேண்டும், ஆனால் எப்படி என தெரியவில்லையே என்று முழுமையாக விரும்பும் நபர்கள் ஒருமுறை முயற்சி செய்யலாம். தேவை முழுமையான விருப்பம் மட்டுமே. அப்போதுதான் தன்னை வெளிப்படுத்தி கொள்ள அவர்களால் முடியும். இந்த ஓஷோ மையத்தை பொறுத்தவரை யாரும் மதிப்பீடு செய்யப்படுவதில்லை, அவரவர் சூழ்நிலை மற்றும் வளர்ப்பு மற்றும் பதிவுகள் மூலமே அனைத்தும் நடக்கிறது என்பதை அவரவர்களுக்கே புரிய வைப்பதே நோக்கம் என்பதால் தயக்கம் தேவையில்லை. அவரவர்களை அவரவர்களுக்கே ஓஷோவின் வழிகாட்டல் மற்றும் தியானங்களின் படி விழிப்புணர்வு கொள்ள வைப்பதையே நாம் தனிநபர் அகநலபகுத்தாய்வு என குறிப்பிடுகிறோம்.

மற்ற தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும். தங்கி தியானம் செய்யலாம்.

மெளனத்தில் விளைந்த முத்துகள் – ஓஷோ

1.
உங்களது வாழ்வை ஓர் அழகியல் அனுபவமாக்குங்கள். அப்படி அழகியல் அனுபவமாக மாற்றப் பெரிதாக ஒன்றும் தேவையில்லை. வெறும் அழகான உணர்வு நிலையே தேவை ஒரு நுண்ணுணர்வுள்ள ஆன்மா. அதிக உணர்வு கொள்ளுங்கள், அதிக உணர்ச்சியுடனிருங்கள். அப்போது நீங்கள் அதிக ஆன்ம உணர்வும் பெறுவீர்கள்.
2.
ஒருமையில் இருக்கும் துணிவை நுண்ணறிவு தருகிறது. மேலும் படைப்புத் தன்மையையும் நுண்ணறிவு தருகிறது. படைப்பதற்கு மிகப் பெரிய பசியும், மிப்பெரிய தவிப்பும் எழுகிறது. அதற்குப் பின்தான், அதன் தொடர்ச்சியாகத்தான், நீங்கள் மகிழ்ச்சியடைய முடியும், நீங்கள் பரமானந்தமடைய முடியும்.
3.
வாழ்வுக்கு மிகப்பெரிய ஒட்டுமொத்தமான ஆம் என்பதையே நான் உங்களுக்குக் கற்பிக்கிறேன். நான் உங்களுக்குத் துறந்துவிடுதலைக் கற்பிக்கவில்லை, மாறாக மகிழ்ச்சியடைதலையே கற்பிக்கிறேன். மகிழ்ச்சி கொள், மகிழ்ச்சி கொள், மீண்டும் மீண்டும் நான் சொல்கிறேன், மகிழ்ச்சி கொள், ஏனெனில் நீங்கள் மகிழ்ச்சி கொள்ளும்போது கடவுளுக்கு மிக அருகில் வந்து விடுவீர்கள்.

தலையங்கம்

அன்பு நண்பர்களே,

வணக்கமும் வாழ்த்தும்.

எனது தலையங்கங்கள் அமைவதுதான். நான் யோசித்து எழுதுவது அல்ல. அதில் வரும் கருத்துக்களும், பார்வைகளும் ஓஷோவைப் பகிர்ந்து கொள்ளும்போது வெளிப்படுபவைதான். ஆகவே இதில் உங்கள் பங்கும், ஓஷோவின் பங்கும் நிறைய பெரும்பகுதியாக உள்ளன. எனது பகுதி நான் இதற்குப் பயன்படுகிறேன் என்பதே. தலையங்கம் சில ஒருமாதம், இரண்டு மாதம் முன்பே வந்துவிடும். எழுதிவிடுவேன். சில சமயம் கடைசி நாட்களில் வரும். ஏன் வராமலேயே போகும் ஒரு கட்டம் வரலாம். அப்போது தலையங்கம் இருக்காது.

சரி, நேற்று ஒரு தலையங்கம் ஒரு நண்பரின் பகிர்ந்து கொள்ளுதலில் பிறந்துவிட்டது. இதோ எழுதிவிடுகிறேன்.

நமது ஓஷோ அன்பர்களுக்கும், சந்நியாசிகளுக்கும், தியானம் செய்பவர்களுக்கும் ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்குமான விஷயம் இது.

முதலில் இது எப்படி வந்தது என்றால், இந்த ஒருநாள் முகாம், மூன்று நாள் முகாம் நீங்கள் ஏன் நடத்தக் கூடாது, ஏன் நடத்துவதில்லை, அதற்கான வசதியும் வாய்ப்பும் இருந்தும் ஏன் செய்வதில்லை என்பதில் ஆரம்பித்தது.

ஒரு நாள் மூன்று நாள் தியான முகாம்கள் ஓரளவு நடத்தப்பட்டு வருகின்றன. நானும் பதினைந்து வருடங்களுக்கு முன்புவரை, ஏறத்தாழ பதிமூன்று வருடங்கள் நடத்தியும் வந்தவன்தான்.

இப்போது நான் அதைச் செய்வதில்லை. செய்யத் தயாரில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு ஆறு அல்லது எட்டு ஒருநாள் தியான முகாம்கள் திருப்பூரில் எனது இடத்தில் நமது ஓஷோ சந்நியாசி ஒருவரால் நடத்தப்பட்டது. அவருக்கு வேறு வேலைகள் வந்து விட்டபோது நின்று விட்டது. ஆகவே தயவுசெய்து நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் அதற்கு எதிரானவன் அல்ல. தேவையற்றது என்ற கருத்துக் கொண்டவன் அல்ல. ஆதரிக்காதவன் அல்ல.

ஆனால் அது மட்டும் போதாது, அதோடு நின்றுவிடக் கூடாது, புதியவர்களுக்கு அது தேவை, அது ஒரு அறிமுகம், ஒரு முதல் தரிசனம் என்று கூறுகிறேன். இதுவேதான் தினமும் ஒருமணி நேரம் டைனமிக்கோ, குண்டலினியோ செய்ய வருபவர்களுக்கும் கூறுகிறேன். அந்த ஒரு மணிநேர தியானம் இடைவிடாது ஒரு பயிற்சியாகச் செய்வதால் மட்டும் எதுவும் நிகழ்ந்துவிடாது. மறுபடியும் நான் சொல்லவேண்டும். நான் அதற்கு எதிரானவன் அல்ல. ஆனால் அதோடு நின்றுவிடக் கூடாது என்பவன்.

எந்த அனுபவத்தையும் மனம் தனதாக்கிக் கொள்ளும், தனது அகங்காரத்தில் சேர்த்துக் கொள்ளும். உடல் பழகி விடும், மனம் தயாராகி விடும். மேலும் தியானத்தைத் தொடர்ந்து பயிற்சியாக செய்வதனால் மனம் புத்துணர்ச்சி பெறலாம், உடலின் நோய் தீரலாம். பொறுமையும், அமைதியும் அதிகமாகலாம். கோபம் குறையலாம், திறன் அதிகமாகலாம், உணர்வுக் கூர்மையும் புத்திக் கூர்மையும் மேலும் கூர்மையடையலாம். சங்கடங்கள், பதட்டங்கள் குறையலாம். தெளிவும் தைரியமும் பிறக்கலாம். சுருக்கமாக மனமாற்றமும், ஏன், குண மாற்றமும் எளிதாக நடக்கலாம்.

ஆனால் ஓஷோவின் கனவு, ஜோர்புத்தா - ஒரு நிலைமாற்றம். ஓஷோவின் கனவு இயல்பான வாழ்விலிருந்து வலுக்கட்டாயமாக எதையும் மாற்றாமல் விழிப்புணர்வின் மூலம் புத்தாவாதல். ஜோர்பாவாக இரு, இயல்போடு இரு. ஆனால் உனது கவனம் புத்தாவினுடையதாக இருக்கட்டும். வேர் விடுவது ஜோர்பா வாழ்க்கை, இயல்பு வாழ்க்கை. கிளை விட்டு மலராய் பூப்பது புத்தத் தன்மை. இவை ஒன்றுக்கொன்று எதிரானது அல்ல என்று நிரூபித்துக் கொண்டிருப்பவர் ஓஷோ.

ஆகவே உங்களது தியானத்தை இந்த உலகத்தோடு, இந்த உடலோடு, உங்கள் ஆசைகள், உங்கள் நோக்கங்கள், உங்கள் எதிர்பார்ப்புகளோடு பொருத்தி விடாதீர்கள். அவை நிறைவேற பயன்படுத்திக் கொள்வதே நோக்கமாக்கிக் கொண்டு விடாதீர்கள். ஏனெனில் அப்போது நீங்கள் தியானம் செய்வதுகூட உங்கள் பேராசையாக, உங்கள் இவ்வுலக குறிக்கோளுக்கான முயற்சியாக ஆகிப் போகிறது. அப்போது நீங்கள் இன்னும் இந்த உலக வாழ்க்கை ஒரு கனவு, உங்கள் மனதின் பிரதிபலிப்பு என்பதை மறந்தவர்களாய் ஆகிவிடுகிறீர்கள். ஓஷோவின் மலர்வதற்காக வேர்விடும் மரத்தைப் போன்ற ஜோர்புத்தாவை மறந்துவிடுகிறோம். இன்னும் உள்முகமாய் திரும்பாமலேதான் தியானம் செய்து கொண்டிருக்கிறோம். இன்னும் புறவாழ்க்கையின் மேலேயே நமது கண்கள் பதிந்துள்ளன.

இப்படித்தான் எல்லா சாமியார்களின் எல்லா ஆசிரமங்களும் உள்ளன. இதுதான் அடிப்படை வேறுபாடு. உனது இப்போது வாழும் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள தியானத்தைக் கற்றுக் கொடுக்கிறார்கள் எல்லா இடத்திலும்.

ஆனால் ஓஷோ தியானத்திற்காக உனது இப்போது வாழும் வாழ்க்கையை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்று சொல்கிறார். தியானத்தை மேம்படுத்திக்கொள்ளும் வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கிறார் ஓஷோ. தியானத்தின் மூலமாக சக்தியை, பலனைத் திரும்ப தியானத்தில் இன்னும் ஆழமாகப் போகவே உபயோகப்படுத்தச் சொல்கிறார் ஓஷோ. வாழ்வில் உன்னிடம் பணம் இருக்கிறதா, படிப்பு இருக்கிறதா, கலைத்திறன் இருக்கிறதா, படைப்பாற்றல் இருக்கிறதா, எல்லாவற்றையும் தியானத்தில் குதிக்க, தியானத்தில் மூழ்கப் பயன்படுத்து என்பவர் ஓஷோ. நல்ல மனைவி என்றால் அவளுடன் சேர்ந்து தியானி. மோசமான மனைவி என்றால் கிடைக்கும் தனிமையை தியானிக்கப் பயன்படுத்து. புகைப்பதை விடமுடியவில்லையா, அதைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்காதே, அதை தியானமாக மாற்றி அதன்மூலமும் தியானத்திற்கு வழி சொல்கிறேன் என்பவர் ஓஷோ. நல்ல குணமோ, கெட்ட குணமோ, பணக்காரனோ ஏழையோ, உழைப்பாளியோ சோம்பேறியோ எந்தவித வாழ்க்கை உனக்கு அமைந்திருந்தாலும், நீ வாழ்ந்தாலும் நீ செய்ய வேண்டியது ஒன்றுதான்.

அது, இதைப் பெரிதுபடுத்துவதை நிறுத்திவிட்டு, இதிலுள்ள பிரச்னைகளைத் தீர்ப்பதை விட்டுவிட்டு, இதில் போட்டிபோடாமல், இதில் வெற்றியைத் தேடாமல் உள்நோக்கித் திரும்பு. உனது வாழ்வு எதுவாய் இருந்தாலும் அதிலுள்ள ஆதரவுக் கணங்களை, மகிழ்ச்சிக் கணங்களை, அது ஏற்படுத்தியிருக்கும் வாய்ப்புகளை, அதனால் உனக்கு தெரியவந்துள்ள உண்மைகளைப் பயன்படுத்தி தியானத்தில் குதி.

உடல்நிலை சரியில்லையா, அதுவும் நல்லதுதான். எய்ட்ஸ் நோய் வந்துவிட்டது, இதைவிட அருமையான எந்தப் பரிசை பிரபஞ்ச இருப்பு உனக்கு கொடுக்கமுடியும். சாவு தெரிந்துவிட்டது, இனி வீணடிக்க நேரமில்லை, பயமில்லை, வறட்டு கௌரவமும், போலித்தனமும் தேவையில்லை. வாழ்ந்து பார்த்துவிடலாம் முழுமையாக என்கிறார் ஓஷோ. அது போல எதையும் தியானத்திற்குப் பயன்படுத்தச் சொன்னார் ஓஷோ. மாறாக மற்றவர்கள் தியானத்தை எதற்கும் பயன்படுத்தச் சொல்லித் தருகிறார்கள். அதனால் என்ன பயன். அலையில் ஆடும் படகை அசையாமல் நிறுத்தும் முயற்சி இது.

மேலும் மாதத்திற்கு ஒருநாள், ஒருநாளில் ஒருமணி நேரம் தியானம் செய்வது எதற்கு. அதைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த அனுபவத்தைச் சுமந்துகொண்டு தினசரி வாழ்க்கையில் அதைத் தேட வேண்டும் என்பதுதான் சரியான வழி. அதை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு, மறந்துவிட்டு, சராசரி வாழ்க்கைக்கு வந்துவிட்டால் அது பயனளிக்காது. கண்டிப்பாக நிலைமாற்றமோ, ஜோர்புத்தாவோ நடக்காது. மனமாற்றமும் குணமாற்றமும் பற்றி நான் பேசவில்லை. ஒருமணி நேரம் தியானம் புரிந்துவிட்டு 23 மணிநேரம் அதற்கு எதிரிடையாக செயல்பட்டால் அதில் என்னபயன், அது பயித்தியக்காரத்தனம், வெறும் அகங்காரத் தீனிதான், என்கிறார் ஓஷோ.

ஆகவே ஒருநாளில் ஒருமணிநேரம், ஒரு மாதத்தில் ஒருநாள் ஆழமான அனுபவம் பெற்று, அதை மீதமுள்ள நேரம் முழுவதுமான வாழ்வில் புகுத்துங்கள். அதுதான் என் விருப்பம்.

வாழ்வில் வசதியும், வாய்ப்பும் எப்படிக் கிடைக்கிறதோ அதை தியானத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதை எப்படி தியானத்திற்கு பயன்படுத்தலாம் என்று யோசியுங்கள். தோல்வியில் கிடைக்கும் அமைதியும், தனிமையும் அருமையான வாய்ப்புத்தானே. அவமானத்தில் ஏற்படும் அகங்காரத்தின் இறப்பு மனதைக் கடக்கும் ஒரு சந்தர்ப்பம் தானே. நோய்வாய்படுவது உடலின் இறப்பை உணர்த்தும் உபயோகமுள்ளதுதானே.

ஓஷோ சமுதாய வாழ்வில் எதையும் சாதிக்கச் சொல்லவில்லை. பாதுகாப்பையும் உறவையும் பலப்படுத்திக் கொள்ள சொல்லவில்லை. காமத்தையும், கோபத்தையும், பேராசையும், அகங்காரத்தையும் நியாயப்படுத்திக்கொள்ள சொல்லவில்லை. அறிவாய் அவரை பயன்படுத்தச் சொல்லவில்லை. நல்லவனாய், வல்லவனாய் இரு என்றோ, எதற்கும் எதிரியாய், புரட்சியாளனாய் இரு என்றோ ஓஷோ சொல்லவில்லை. கெட்ட குணங்களை விட வேண்டாம் என்றோ, நல்ல குணங்கள் கூடாது என்றோ ஓஷோ சொல்லவில்லை. ஓஷோ சொல்வதெல்லாம் எனக்கு இந்த கனவுலக வாழ்வில் அக்கறை கிடையாது நீயும் அதைப் பொருட்படுத்தாதே. உண்மை உலகம் தியானத்திற்குப் பின்தான் தெரியும். ஆகவே தியானம் செய். அதற்கு இந்த உலகத்தை, கனவுலகத்தை பயன்படுத்த முடிந்த அளவு பயன்படுத்திக் கொள். பயணம் இனிதாக இருக்கும். சண்டையிடும் சக்தியும் மிச்சமாகும். அவ்வளவுதான். இருப்பது கனவுலகில் எனும்போது இதுவே சிறந்த உபாயம். அவ்வளவுதான்.

ஆகவே நம்பர்களே விழிப்புணர்வோடு இயல்பாயிரு அதுதான் ஜோர்புத்தா ஜோர்பா எனும் புத்தர். அதற்கு அப்படி முழு வாழ்வையும் முழுநேரத்தையும் விழிப்புணர்வோடிருக்க பணயம் வைக்கும் தைரியத்திற்கு, அந்த தைரியத்தைப் பெறுவதற்கு, அந்த துணிச்சலை, உள்முகமாய் திருப்புதலே வாழ்வு என்று முடிவெடுப்பதற்கு ஒரு ஆரம்பமாக, ஒரு உதவியாக, ஒரு தரிசனமாக மட்டுமே தியானப் பயிற்சிகள் இருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

அவை சமுதாய வாழ்விற்கு உதவும்பொருட்டு ஏற்படுத்தப்பட்டவை அல்ல. உடல் உபாதைகளைக் குறைத்துக் கொள்வதற்கான உபாயங்கள் அல்ல. அவை உண்மையின் தரிசனங்கள். எவரெஸ்ட் சிகரத்தை தரிசிப்பது வேறு. அங்கு ஏறி அதன் உச்சியை அடைவது வேறு. ஆகவே முழு வாழ்க்கையையும் தியானத்தை நோக்கியதாக, தியானத்திற்கு உதவுவதாக, அமைத்துக் கொள்ள முடிவு எடுங்கள்.

எல்லாவற்றையும் தியானமாக மாற்றும் மந்திரக்கோல் விழிப்புணர்வை விட்டுவிடாதிருங்கள். பிறகு இந்த உடலே புத்தர், இந்த பூமியே சொர்க்கம் என்கிறார் ஓஷோ. அதேபோல பலரும் என்னிடம் கேட்கின்றனர், ஏன் நீங்கள் 5 பேர் மட்டும்தான் ஒரே நேரத்தில் தியானம் செய்ய இருக்கவேண்டும், அதிகம்பேர் வேண்டாம் என்கிறீர்கள் என்று.

கூட்டத்தில் நாம் ஏற்கனவே சிக்குண்டு கிடக்கிறோம். கூட்ட மனப்பான்மை ஏற்கனவே நம்மை ஆட்டிப் படைக்கிறது. மேலும் அகங்காரம் கூட்டத்தில் வெளியே முண்டியடித்து வருவதற்குத் துடிக்கும். ஆகவே கூட்டத்தைத் தவிர்த்தால் கூட்டமனப்பான்மை இல்லாமல், அகங்காரத்தின் வெளிப்பாடு குறைவாயிருக்கும்படியாக நாம் இருக்கமுடியும். அதோடு கூட்டத்தில் குளிர்காயும் உணர்வைத் தவிர்ப்பது தியானத்திற்கு மிகவும் அவசியம். தியானம் தனிமனிதனுக்கானது, தனக்குள் செல்லும் விஷயம். இதில் கூட்டத்தின் பங்கு ஒன்றுமேயில்லை. திருவிழாவும், கொண்டாட்டமும் தனிமையிலேயே உள்ளிருந்து பொங்கி எழுவதே சிறப்பு. வெளித்திருவிழாவும், கொண்டாட்டமும் நமது விழிப்புணர்வை குறைத்து, உணர்வற்ற மனம் வெளிவரவே உதவும்.

நான் இதற்கு எதிரானவன் அல்ல. தயவுசெய்து இதைப் புரிந்து கொள்ளுங்கள். அதிக நபர்கள் கொண்ட தியானமுகாம்கள் நடத்துவதை எதிர்ப்பவன் அல்ல நான். அதுவும்கூட இன்றைய மனிதனின் ஆரம்பக் கட்டத்திற்கு தேவைப்படலாம், உதவலாம். உதவி புரிகிறது. ஆனால் திரும்பவும் அறிமுகத்திற்கு மட்டுமே அது. ஆழமாகச் செல்ல கூட்டம் நிச்சயமாக ஒரு தடை. எனவே நான் அதைச் செய்வதில்லை. அவ்வளவுதான்.

சேர்ந்து செய்கையில் சக்தி கிடைக்கிறது, உற்சாகம் பிறக்கிறது, மகிழ்ச்சி அடைகிறேன் என்பது உண்மைதான். ஆனால் அது ஆழமற்றது. வந்தது போலவே கூட்டம் கொண்டு போய்விடும். ஆகவே அது உன்னுடையதல்ல. அது தியானமல்ல, அது விழிப்புணர்வின் விளைவு அல்ல. அது நமது கூட்ட மனபான்மையின் விளைவுதான். அங்கு சக்தி அதிகம் இருப்பது உண்மைதான். அதைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறு ஏதும் இருப்பதாக நான் சொல்லவில்லை. முதல் அனுபவத்திற்கு அது உதவும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அது விழிப்புணர்வற்றது. ஆழமற்றது. அவ்வளவுதான். ஆகவே அதையே பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது விழிப்புணர்வு வளர்ச்சிக்கு உதவாது. விழிப்புணர்வு வளர்ச்சிக்கு இடையூறு கூட ஏற்படுத்தும். ஆகவே நான் ஒருமையில் தியானம் செய்ய ஒரு வாய்ப்பை உருவாக்க முயல்கிறேன். அவ்வளவுதான்.

நான் முடிந்தவரை ஒருவராகக் கூட தியானம் செய்யச் செல்கிறேன். 2 பேர் டைனமிக் செய்ய இருந்தால் தனிதனியாக்க் கூட செய்து கொள்ளுங்கள் என்று சொல்கிறேன். ஏனெனில் தியானம் மிகவும் அந்தரங்கமானது என்கிறார் ஓஷோ.

மேலும் கூட தியானம் செய்யும் முறை ஒரு ஆலோசனை, ஒரு வழிகாட்டுதல் தானே தவிர விதி அல்ல என்று ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் என்று நான் கூறுகிறேன். டைனமிக் என்றால் சில ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் ஓஷோ கொடுத்திருக்கிறார். ஆனால் எப்படிச் செய்வது என்பதையும், எப்படி அந்த ஆலோசனைகளை முழுமையாகப் பயன்படுத்துவது என்பதையும் எப்படி அந்த ஆலோசனைகளின் பயனை நாம் முழுமையாக அடையும்படி மாறுவது என்பதையும் நீதான் வகுத்துக் கொள்ளவேண்டும். உனது உடல் மற்றும் மனதிற்கு இசைந்தபடி, அவற்றோடு சண்டையிடாமல், எப்படிச் செய்வது – நமது மனதை தளர்த்தி அது கொஞ்சம் கொஞ்சமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ள, அடக்கி வைத்துள்ளவைகளை அனுமதிக்க உன் மனதை எப்படி அணுக வேண்டும் என்பதை நீதான் முடிவு செய்ய வேண்டும். ஒரு விளையாட்டில் ஈடுபடும் மனநிலையை நீதான் தியானம் செய்யுமுன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உன்னுடன் சண்டை போடாமல், நீ செய்வதை மகிழ்வோடு அனுபவிக்கும் மனநிலையை நீதான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இப்படி உன்னை நீ தயார்செய்து கொண்டு ஓஷோவின் தியான முறைகளில் ஈடுபட்டால்தான் அவரது ஆலோசனைகளும் வழிமுறைகளும் உனக்கு ஆழம்வரை செல்லவும், நிலைமாற்ற அனுபவத்தை தொட்டுக் காட்டவும் உதவும்.

எனவே நான் தனிமனிதன் பலவிதங்களிலும் தனக்கே உரிய விதத்தில், வேகத்தில், தனது பின்புலத்தில், ஓஷோவைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புத் தர விரும்புகிறேன். அவ்வளவுதான்.

அன்பு,
சித்.

கவிதைப் பகுதி

அடிப்படைத்தேவை

தாய்........
குழந்தையைக் கொஞ்சினாள்,
அது குதூகலித்தது!
குழந்தையை அணைத்தாள்,
அது நிறைவாய் உணர்ந்தது!
குழந்தையைத் திட்டினாள்,
அது முறைத்தது!
குழந்தைக்கு மருந்து கொடுத்தாள்,
அது அடம் பிடித்தது!
குழந்தையை அடித்தாள்,
அது அழுதது!

அனைத்திலும்........
சக்தி இருந்தது,
உயிர் இருந்தது,
துடிப்பு இருந்தது,!

தாய் ஒருநாள்.........
அலட்சிய நாடகம் ஆடினாள்........
வேலையாள் உணவு கொடுத்தான்,
உடை கொடுத்தான்,

ஆனால்......
குழந்தை வாடியது,!
சக்தி இழந்தது,
துடிப்பை மறந்தது!!

ஏன்
அன்பு.....அன்பு......அன்பு
ஆம், மனித ஆன்மாவின்
அடிப்படைத் தேவையது!!!

ஓஷோ வீடியோ

1. Osho : Crimes Against Humanity, Nature, Environment and Ecology

2. Osho : The Compulsion to Reach Power and Prestige

3. Osho : Something which Never Dies


தியான யுக்திகள்

இடைவெளியை உணர்ந்து பார்

பிரபஞ்சம், தெய்வீகம், இடைவெளியில்தான் உள்ளது. இரண்டு வார்த்தைகளுக்கிடையில், இரண்டு எண்ணங்களுக்கிடையில், இரண்டு ஆசைகளுக்கிடையில், இரண்டு உணர்ச்சிகளுக்கிடையில், இரண்டு உணர்வுகளுக்கிடையில் உள்ள இடைவேளைகளில்தான் உள்ளது. தூக்கத்துக்கும் விழிப்புக்கும் இடையே, அல்லது விழிப்புக்கும் தூக்கத்துக்கும் இடையே உள்ள இடைபட்டவேளையில் உள்ளது. உடலுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள இடைவெளியில் உள்ளது. அன்பு வெறுப்பாக மாறும்போது இங்கே அன்பு போயிருக்கும், இன்னும் வெறுப்பு வந்திருக்காது, அது அன்பாக இருக்காது, ஆனால் அது இன்னும் வெறுப்பாகவில்லை அந்த இடைப்பட்ட நேரம் – கடந்தகாலம் எதிர்காலமாக மாறும்போது இடைவெளி – அது அன்பாக இல்லை, ஆனால் எதிர்காலம் இன்னும் வரவில்லை, அந்த இடைவெளி, மிகச் சிறிய இடைவெளி அதுதான் நிகழ்காலம் அதுதான் இப்போது. அது மிகச் சிறியது எனவே நீ அதை ஒரு காலத்தின் நேரமாக அழைக்க முடியாது. அது பார்க்க முடியாத அளவு சிறியது. அதை பிரிக்கமுடியாது. அந்த கணநேரம் காணமுடியாதது. அது ஒவ்வொரு கணமும் ஆயிரத்தோரு வழிகளில் வருகிறது.

உனது மனநிலை ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறுகிறது, நீ அவற்றின் ஊடே செல்கிறாய். இருபத்தி நான்கு மணி நேரத்தில் நீ பலமுறை தெய்வீகத்தை கடந்து வருகிறாய், ஆனாலும் எப்படி நீ தொடர்ந்து தவற விடுகிறாய் என்பது ஆச்சரியமான விஷயம்தான். ஆனால் நாம் இடைவெளியை பார்ப்பதேயில்லை, இடைவெளியை பார்க்காமல் இருக்கும் தந்திரத்தை நாம் கற்று வைத்திருக்கிறோம். அது மிகச் சிறியது, ஆகவே அது வந்து போவதே நமக்கு தெரிவதில்லை. அதைப் பற்றிய உணர்வே நமக்கு இல்லை. ஏதாவது ஒரு விஷயம் நம்மிடமிருந்து போய், அது கடந்தகாலம் என ஆன பின் அல்லது எதிர்காலமாக இருக்கிறது இன்னும் வந்து சேரவில்லை எனும் போது நமக்கு அதைப்பற்றிய உணர்வு வருகிறது. ஆனால் அது நம்மிடம் இங்கிருக்கும்போது எப்படியோ அதை பார்க்காமல் நாம் சமாளித்துக் கொள்கிறோம்.

நீ கோபமாக இருக்கும்போது நீ அதைப் பார்ப்பதேயில்லை, பின் செய்த பிழைக்காக வருந்துகிறாய். பின் அதுவே திரும்பவும் நடக்கிறது, பின் திரும்பவும் நீ வருத்தப்படுகிறாய், மேலும் அது திரும்ப திரும்ப நடப்பதால் நீ சஞ்சலப்படுகிறாய். ஆனால் அது வரும்போது நீ குருடாக, செவிடாக, தன்னுணர்வற்றவனாக, விழிப்புணர்வின்றி திடீரென ஆகி விடுகிறாய். அந்த இடைநேரம் மிகச் சிறியதாக இருப்பதால் அதை தவற விடும் கவனம் உனக்கு இருப்பதில்லை. அது நுண்ணியது, அதை முழுமையான விழிப்புணர்வினால் மட்டுமே கைப்பற்ற முடியும். முழுமையாக இருக்கும் போது மட்டுமே உன்னால் அதை பார்க்க முடியும். உயிர்ப்பிலிருந்து ஒரு எண்ணம் வெளியேறும், வேறொரு எண்ணம் உயிர்ப்புக்குள் வரும், இந்த இரண்டு செயல்களுக்கு நடுவே ஒரு எண்ணமற்ற இடைநேரம் இருக்கும். இதுதான் தெய்வீகம்.
.............நான் உனக்கு திறவுகோலை முழுமையாக கொடுத்து விட்டேன். இப்போது நீ இந்த திறவுகோலினால் உனது இருப்பினுள் செயல்பட ஆரம்பிக்கலாம்.

தியான யுக்தி – 1

இடைநேரத்தை பார்.

தூங்கப் போகும் நேரம் விழிப்புமல்லாத ஆனால் இன்னும் தூக்கம் வராத அந்த இடைநேரத்தை பார்க்க முயற்சி செய். ஒரு கணம், மிக நுண்ணிய கணம் வரும். ஆனால் அது அதிக நேரம் இருக்காது. அது ஒரு தென்றல் போல, சின்ன காற்றுப் போல வரும். அது அங்கிருக்கும், பார்க்கும்முன் போய்விடும். ஆனால் உன்னால் அதை பிடிக்க முடிந்தால் நீ மிகவும் ஆச்சரியமடைவாய். வாழ்க்கையின் மிகச் சிறந்த பொக்கிஷத்தின் மீது மோதிக் கொண்டதை நீ உணர்வாய்.

............இந்த இடைநேரத்தை விழிப்புணர்வின்றி கடந்தால்கூட நீ பலனடைவாய். அதன் மணத்தின் ஏதோ சில பகுதி, ஏதோ கொஞ்சம், நீ அறியாமலேயே உனது இருப்பினுள் சென்று விட்டால்கூட அது அங்கே நெடுநேரமிருக்கும். ஆனால் அந்த கணத்தில் இருந்து எச்சரிக்கையாக இரு. மெது மெதுவாக அந்த சாமர்த்தியம் வந்துவிடும்.

Source: LET GO

தியான யுக்தி - 2

இயல்பாயிருக்கும் கலை

எப்போது – ஒவ்வொரு நாள் இரவும்

முதல் படி – உடலிலிருந்து ஆரம்பி
உடல்தான் ஆரம்பமாயிருக்க வேண்டும். படுக்கையில் படுத்துக் கொள்.....தூக்கம் வருவதற்கு முன், மூடிய கண்களுடன் காலிலிருந்து கவனிக்க தொடங்கு. அங்கிருந்து ஆரம்பி – உள்ளே கவனி, ஏதாவது பதட்டம் எங்காவது இருக்கிறதா, காலில், தொடையில், வயிற்றில் பதட்டம் இருக்கிறதா எங்காவது இடையூறு, ஏதாவது பதட்டம் உள்ளதா

இரண்டாவது படி – அந்த பதட்ட முடிச்சை தளர்வடையச் செய்
எங்காவது பதட்டமாக ஏதாவது இருப்பின், அதை தளர்வடையச் செய். அங்கே தளர்வை நீ உணரும்வரை அந்த இடத்திலிருந்து நீ நகராதே.

மூன்றாவது படி – கைகளிலிருந்து தொடங்கு
கைகள் முழுவதையும் உணரு. – ஏனெனில் உனது கைகள்தான் உனது மனம். அவை உனது மனதுடன் இணைந்துள்ளன. உனது வலது கரம் பதட்டமாக இருந்தால் உனது இடது மூளை பதட்டமாக இருக்கும். உனது இடது கரம் பதட்டமாக இருந்தால் உனது வலது மூளை பதட்டமாக இருக்கும். அதனால் முதலில் உனது கைகளை உணரு. அவை கிட்டத்தட்ட உனது மூளையின் கிளைகள் போன்றவை. பின் கடைசியாக மனதை சென்றடை.

நான்காவது படி – கடைசியாக மனம்
முழு உடலும் தளர்வாக இருக்கும்போது உனது மனம் கிட்டத்தட்ட 90 சதவீதம் தளர்வாக இருக்கும், ஏனெனில் உடல் என்பது மனதின் ஒரு நீட்டிப்புதான். இப்போது ஒரு 10 சதவீத பதட்டம் உனது மனதில் இருக்கும் – வெறுமனே அதை கவனி. அதை கவனிப்பதாலே அந்த மேகம் மறைந்துபோகும்.

இதற்கு சில நாட்கள் பிடிக்கும், இது ஒரு உபாயம். நீ மிகவும் தளர்வாக இருப்பது உனது குழந்தைபருவ அனுபவத்தை திரும்ப கொண்டுவரும். எப்படி ஓய்வாக இருப்பது என்ற ரகசியத்தை யாரும் உனக்கு கற்றுக் கொடுக்கமுடியாது, நீயேதான் அதை தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் ஒரு முறை தெரிந்துகொண்டு விட்டால் பின் பகலில்கூட எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நீ உன்னை தளர்த்திக் கொள்ளலாம். தளர்த்திக் கொள்வதில் ஆற்றல் படைத்தவனாக இருப்பது இந்த உலகத்திலேயே மிகச் சிறப்பு வாய்ந்த அனுபவங்களில் ஒன்றானதாகும்.

Source : SATYAM, SIVAM, SUNDERAM

கேள்வி – பதில்

முயற்சிப்பதா அல்லது இயல்பாயிருப்பதா

நான் வாழ்க்கையை வாழும்போது அதில் மிகவும் ஈடுபட்டு அதை அனுபவிப்பதால் பல சமயங்களில் தன்னுணர்வின்றி இருக்கிறேன் என்பதை நான் உணர்கிறேன். தன்னுணர்வோடு இருப்பதற்கு எனக்கு தீவிரமான முயற்சி தேவைப்படுகிறது என்றாலும்கூட நான் ஒவ்வொரு கணமும் முயற்சி செய்து தன்னுணர்வை கொண்டுவர வேண்டுமா?

மக்கள் பல வழிகளில் பல விதமாக இருக்கின்றனர். இரண்டு பேர் ஒரேவிதமாக இருக்க உறுதியாக வாய்ப்பே இல்லை. உனக்கு பொருந்தாத ஏதோ ஒன்றை நீ செய்ய ஆரம்பிக்கும் போதுதான் பிரச்னையே.

ஒரு சிறிய நிபந்தனையை நினைவில் கொள்ள வேண்டும். எது உனக்கு நல்ல உணர்வை தருகிறதோ – தன்னிச்சையாக அமைதியை, ஆனந்தத்தை தானாகவே அளிக்கிறதோ – அதுவே உனது வழி.

ஆனால் யார் தன்னிச்சையாக இல்லையோ, யாருக்கு தளர்வடைவது மிகவும் கடினமான செயலோ, யாருக்கு எதுவும் செய்யாமல் சும்மாவே உட்கார்ந்திருப்பது சாத்தியமில்லாததோ, அவர்களுக்காகவும் நான் பேசியாக வேண்டும்.

அவர்களுக்குத்தான் நான், முழுமையான தீவிரத்தோடு வாழு, முழு முயற்சியோடு இரு என்று சொல்கிறேன். ஏனெனில் அதுதான் அவர்களுக்கு சுலபம். யாருக்கு எது சுலபமோ அதுதான் அவர்களை உண்மைக்கு அருகே கொண்டு வரும்.

உன்னைப் பொறுத்தவரை, அது சுலபமான விஷயமல்ல. நீ உனக்கு எதிராகவே பெருமுயற்சி செய்ய வேண்டும். ஆனால் அப்படி செய்வது நீ ஏற்கனவே உணர்ந்திருக்கும் அமைதி மற்றும் மௌனத்தின் முழு அழகையும் கெடுத்து விடும்.

நீ தன்னிச்சையாக இருப்பதன் மூலமாக, தளர்வாக இருப்பதன் மூலமாக, இயல்பாக இருப்பதன் மூலமாக அமைதியையும், மௌனத்தையும், சக்தியையும் உணர்ந்தால் அப்போது அதுதான் உனது வழி. ஒவ்வொருவரும் தங்களது இதயத்துக்கு நெருங்கியது எது என்பதை அவர்களேதான் கண்டுபிடிக்க வேண்டும். எது உனக்கு சரியானது என்பதை நீதான் கண்டுபிடித்துக் கொள்ளவேண்டும்.

ஆகவே எதனுடன் உனது இதயம் லேசானதாக உணர்ந்தாலும் அதன் அடிஆழம் வரை செல், அதனுடன் செல், அதுஎன்னவென்று உணர்ந்து கொள். பிறகு திரும்பி பார்க்காதே, மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதே.

Source : BEYOND ENLIGHTMENT

தேடல் – ஓஷோவின் கதை - 27

ஒரு இளைஞன் உண்மையை தெரிந்து கொள்ளவேண்டும் எனும் தீராத ஆவலால் தனது குடும்பம், தனது சுற்றம் எல்லோரையும் துறந்து தனக்கு ஒரு குருவைத் தேடி புறப்பட்டான். அப்படி அவன் தனது நகரத்தை விட்டு புறப்பட்டுச் செல்லும்போது ஒரு அறுபது வயது குறிப்பிடத்தக்க ஒருவர் ஒரு மரத்தடியில் மிகவும் அமைதியாகவும், மிகவும் வசீகரத்தோடும் அமர்ந்திருப்பதை பார்த்தான். அவர் எல்லோரையும் கவர்ந்திழுக்கக் கூடியவராகவும், மிகவும் காந்த சக்தியுடையவராகவும் இருந்தார். அவனையறியாமலேயே தற்செயலாக அவன் அவரிடம் சென்று தான் ஒரு குருவைத் தேடி புறப்பட்டு இருப்பதை கூறினான். “நீங்கள் ஒரு மூதறிஞர், உங்களுடைய ஞானத்தை என்னால் உணர முடிகிறது. உங்களைச் சுற்றியுள்ள உயிர்துடிப்பை என்னால் உணர முடிகிறது. நான் எங்கே போவது? இவர்தான் என்னுடைய குரு என்பதை நான் எப்படி கண்டு பிடிப்பது? அதன் அறிகுறி என்ன? இங்கே பலகுருமார்கள் இருக்கின்றனர், ஆனால் யார் எனக்கு முடிவற்றதற்கு வழி காட்டக் கூடியவர் என்பதை நான் எப்படி உணர்ந்து கொள்வது? என்று எனக்கு கூற முடியுமா?” என்று கேட்டான்.

அந்த வயதானவன், “அது மிகவும் சுலபம்” என்று கூறிவிட்டு, “அந்த குரு எப்படி இருப்பார், அவரைச் சுற்றி எந்த விதமான சூழ்நிலை இருக்கும், அவருக்கு எவ்வளவு வயதிருக்கும்,” எனறெல்லாம் கூறிவிட்டு ‘அவர் எந்த மரத்தடியில் அமர்ந்திருப்பார்’ என்பதைக் கூட கூறினார்.

இளைஞன் அவருக்கு நன்றி கூறினான். அப்போது அவர், “நீ எனக்கு நன்றி கூறும் நேரம் இன்னும் வரவில்லை, நான் காத்திருக்கிறேன்” என்றார். “ஏன் அவர் இப்படி கூறுகிறார், எதற்காக அவர் காத்திருக்கிறேன் என்கிறார்” என்பது இளைஞனுக்கு புரியவில்லை.

சுமார் முப்பது வருடங்கள் அவன் குருவைத் தேடி காடு, மலை, வனம், வனாந்திரம், பாலைவனமெல்லாம் அலைந்தான். ஆனால் எல்லா விதத்திலும் பொருந்தக் கூடியவரை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தோல்வியடைந்தவனாய், விரக்தியுற்று, சோர்வாக அவன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அவன் இப்போது இளைஞன் அல்ல. அவன் கிளம்பும்போது அவனுக்கு வயது முப்பது, இப்போது அவனுக்கு வயது அறுபது.

ஆனால் அவன் தன்னுடைய நகரத்தினுள் நுழையும் சமயம் அவன் அந்த வயதானவன் இன்னும் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருப்பதை பார்த்தான். அவனால் தனது கண்களையே நம்ப முடிய வில்லை. “அடக் கடவுளே இவர்தானா அவர் குறிப்பிட்ட மனிதர்! – அவருக்கு 90 வயதிருக்கும் என்று கூட குறிப்பிட்டாரே...... மேலும் மரத்தைப் பற்றி கூட சொன்னார். அவர் அமர்ந்திருந்த மரம் என்ன என்பதைக் கூட பார்க்க முடியாத அளவு முழுமையாக தன்னுணர்வின்றி இருந்திருக்கின்றேனே. அவர் குறிப்பிட்ட அந்த மணம் - அந்த பிரகாசம், அந்த இருப்பு, அவரைச்சுற்றியுள்ள அந்த உயிர் துடிப்பு.........”

அவன் அவர் காலடியில் விழுந்தான். “என்ன விதமான வேடிக்கை இது,! முப்பது வருடங்களாக நான் பாலைவனத்திலும், மலைகளிலும் தேடி அலைந்தேன். இது உங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். ஆனாலும் இப்படி என்னை தேடி அலைய விட்டு விட்டீர்களே” என்று கேட்டான்.

அவர் கூறினார், “எனக்கு தெரிந்திருப்பது ஒரு பொருட்டே அல்ல. உன்னால் தெரிந்துகொள்ள முடிகிறதா என்பதுதான் கேள்வி. நான் முழுமையாக தெளிவாக விளக்கிக் கூறினேன். ஆனால் நீ இந்த முப்பது வருடங்கள் தேடி திரிய வேண்டும். இந்த முப்பது வருடங்கள் அலைச்சலுக்குப் பிறகுதான் உனக்கு ஒரு சிறிதளவு கவனம் வந்திருக்கிறது. அன்று நீ எனக்கு நன்றி கூறியபோது, நான் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை, ஒருநாள் அந்த நேரம் வரும் எனக் கூறினேன் அல்லவா?
நீ உன்னுடைய முப்பது வருடங்கள் தேடி அலைந்ததைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறாய், ஆனால் நான் இங்கே முப்பது வருடங்களாக உனக்காக உட்கார்ந்துகொண்டு இருக்கிறேன். என்னுடைய சொந்த வேலை எப்போதோ முடிந்து விட்டது. என்னுடைய படகு வந்து எனக்காக காத்துக் கொண்டிருக்கிறது. நான் ஒத்திப் போட்டு, ஒத்திப்போட்டுகொண்டே வந்திருக்கிறேன். முட்டாளே முப்பது வருடங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறாயே! – நான் மரத்தைப் பற்றிக்கூட விவரித்தேனே, என்னுடைய ஒவ்வொன்றையும் பற்றியும் விவரமாக கூறினேனே – என்னுடைய மூக்கு, என்னுடைய தாடி, என்னுடைய கண்கள்!. நான் விரிவாக விளக்கமாக எல்லாவற்றையும் கூறினேன். நீ என்னைத் தேடி அவசரமாக ஓடினாய்.

ஆனால் இன்னும் தாமதமாகி விடவில்லை. நான் இறந்து போய்விட்டால் எனது வார்த்தை, எனது வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் போய்விடுமே என்று அஞ்சினேன். கூடிய விரைவில் இந்த முட்டாள் வந்துவிடுவான், ஆனால் நான் இங்கே இல்லையென்றால் எனது வர்ணனை, என்னைப்பற்றிய எனது குறிப்பு, எல்லாமே வீணாகிப் போய்விடுமே, எல்லாம் பொய்யென்று ஆகிவிடுமே என்று கவலைப்பட்டேன். அதை நிரூபிப்பதற்காக, நான் இந்த மரத்தடியில் முப்பது வருடங்களாக உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். நீ என்னை அன்றே தேர்ந்தெடுத்துவிட்டாய், ஆனால் நீ அதை உணர முடியாது, உனக்கு அந்த கண்கள் அன்று இல்லை. நீ என் வார்த்தைகளை கேட்டாய், ஆனால் அதன் பொருளை உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் உன் முன்னால் இருந்தேன், என்னை நானே விவரித்துக் கூறினேன், ஆனால் நீ என்னை எங்கோ தேடும் எண்ணத்தில் இருந்தாய்” என்று கூறினார்.

The Osho Upanishad, che – 20

No comments: