Friday, October 22, 2010

மலர் 2 இணைய இதழ் 8 11 மார்ச் 2010

தலையங்கம்

அன்பர்களுக்கு வணக்கம்.

பலர் என்னைப் பார்க்க வருகிறார்கள். பாராட்டவும் செய்கிறார்கள். பார்க்க அழைப்பவர்களும் பலர். இவர்கள் எல்லாமே ஒரே வார்த்தையில் ஓஷோ அன்பர்கள்தான்.

ஆனால் நான் பலரையும் ஒதுக்க வேண்டியிருக்கிறது. ஆர்வம் காட்டாமல் என் அன்பை பொழியாமல் ஒதுக்க வேண்டியிருக்கிறது. சிலரை கட்டாயமாக ஒதுக்க வேண்டியிருக்கிறது.

இப்படி நான் நடந்து கொள்வது பல சமயங்களில் என்னுடன் இருப்பவர்களுக்கு தர்ம சங்கடமாகவும், எதிர்பாராததாகவும், என் இயல்புக்கு மாறாகவும், நான் பேசும்படி நடக்காமல் போவது போலவும் தெரிகிறது, தெரியும்.

ஆனால் எனது இந்த 34 வருட ஓஷோவின் அன்பர்களுடனான பயணத்தில் அவரது அன்பர்களை நான் இருவகையில் பார்க்கிறேன். அப்படிப் பார்க்காமல் பழகியதால் பயனில்லை என்பதையும் இப்போது உணர்ந்தவனாய் இருக்கிறேன். ஆகவே அப்படி பார்த்து பழகுவதை இப்போது எனக்கு நானே கட்டாயப்படுத்திக் கொள்கிறேன்.

ஒரு பிரிவினர் ஓஷோவைபோ படிப்பவர்கள், ரசிப்பவர்கள், கைதட்டுபவர்கள், பாராட்டுபவர்கள், புகழ்பவர்கள், சமூகத்திற்கு சொல்பவர்கள், கலந்துரையாட விரும்புவர்கள், அவரது பேச்சாற்றலை, புத்தி கூர்மையை, கல்வியறிவை, மேதா விலாசத்தை, தைரியத்தை சிலாகிப்பவர்கள், மெச்சுபவர்கள்.
அவரது எழுத்தைப் படித்ததால், கருத்தும் சிந்தனையும் மாறியுள்ளவர்களும் இதில் அடங்குவர்.

தங்களின் வாழ்வின் சூழலுக்கு ஏற்ப பாதுகாப்பான ஒரு வாழ்க்கைக்கு, அமைதியான ஒரு வாழ்க்கைக்கு தாங்கள் தந்திரமாக ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு ஏற்பாட்டை நியாயப்படுத்திக் கொள்ள ஓஷோவை பயன்படுத்திக் கொள்ளும் ஏராளமானவர்களும் இதில் அடக்கம். ஒரு கண நேர தரிசனத்தில் ஓஷோவிடம் நெருங்கி அவரது புது சந்நியாசம் பெற்று, அதன்பின் நழுவி பழையபடி மனதின் தந்திரத்திற்கே ஓஷோவை உபயோகிக்கும் ஓஷோ சந்நியாசிகளையும் நான் இதில்தான் சேர்க்கிறேன்.

ஓஷோ புத்தகங்கள் ஏராளமாய் படித்திருக்கிறேன். ஓஷோவை எனக்கு மிகவும் பிடிக்கும். ஓஷோ ரொம்ப பெரிய ஞானி. ஓஷோ தியானம் செய்து பார்க்க விருப்பம். இப்போது நான் ஈஷா தியானம் செய்கிறேன், நித்யா தியானம் செய்கிறேன், வேதாந்த மகரிஷி தியானம் செய்கிறேன், அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் ஏதாவது புரோகிராம் நீங்கள் நடத்தினால் சொல்லுங்களேன், நான் வர முயற்சிக்கிறேன். உங்க இடத்தில் தியானம் செய்ய ஓரளவு ஆட்கள் வராங்களா என்று கேட்கும் பத்தாம் பசலி ஆன்மீகம், சமூக கௌரவ ஆன்மீகம், அறிவு நிறைந்த ஆன்மீகம் பேசுபவர்களையும் நான் இதில்தான் வகைப் படுத்துகிறேன்.

இவர்கள் எல்லோரைக் கண்டும் நான் ஒதுங்குகிறேன். அவர்கள் மேல் எனக்கு கோபம் என்பதல்ல. அவர்களை நான் நேசிக்கவில்லை என்பதல்ல. அவர்கள் ஏதோ தவறு செய்கிறார்கள் என்பதல்ல. அவர்கள் எனக்கு எதிரிகளோ பிடிக்காதவர்களோ அல்ல. அவர்கள் மேலும் எனக்கு பிரியமும் மரியாதையும் உள்ளது. ஆனால் எனக்கு அவர்களோடு என்னைப் பகிர்ந்து கொள்ளும் அளவு நேரமுமில்லை, காலமுமில்லை. இன்னும் இந்த உடலில் இருக்கப்போகும் குறுகிய காலத்தில் ஓஷோவைப் பகிர்ந்து கொள்ள எனக்கு உயிர்த்துடிப்பானவர்கள் தேவை. அவர்களையே நான் நாடியும் தேடியும் போய் சேவை செய்ய விரும்புகிறேன். இதுவே காரணம்.

அப்படி உயிர் துடிப்புள்ளவர்களாக நான் பார்க்கும் ஓஷோ அன்பர்களின் அளவுகோல் எனக்கு அவர்கள் தினசரி குறைந்தது ஒரு மணி நேரமாவது தியானம் செய்பவர்களா என்பதுதான். தியானமுறையில் ஏதாவது ஒன்றை தினசரி முயற்சிக்கும் தேடுதல் வேட்கை கொண்டவர்களையே நான் தேடவும் நாடவும் செய்கிறேன். அவர்களுக்கே தன்னுணர்வு மலரவும் சத்தியத்தை தரிசிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அவர்களுக்கு மட்டுமே இருக்கிறது என்பதாலேயே மற்றவர்களை விலக்கி இவர்களை நாடுகிறேன்.
இதனால்தான் ஓஷோவும் தன்னிடம் சந்நியாச தீட்சை கேட்டு வருபவர்களிடம், அவர்களின் ஒரே தகுதியாக அவர்களால் தினசரி ஒரு மணி நேரமாவது தியானத்திற்கு என்று ஒதுக்கக் கூடிய வைராக்கியம் இருக்க வேண்டுமெனக் கேட்டார்.

ஒரே வரியில் கூறினால் ஆறுதலும் தேறுதலும் நாடுபவர்களை விட தேடுபவர்களுக்கும் தியானம் செய்ய விரும்புவர்களுக்கும் இடையே இருப்பதிலேயே என் குறி இருக்கிறது.

தியானத்தின் மூலம் மட்டுமே பிரபஞ்ச இணைப்புணர்வை (TRUST) ஒருவன் பெற முடியும் . அந்த இணைப்புணர்வு நிகழ்ந்து விட்டால் பிறகு இந்த உலகம் மாயையாய் விளையாட்டு லீலையாய் மாறிப் போகும். கனவுகளை கனவுகள் எனப் புரிந்து கொள்ள அப்போதுதான் முடியும். உடல், மன எல்லைகளை அப்போதுதான் அறிய முடியும். அதுதான் விழிப்புணர்வு. நான் என்ற உறக்கத்திலிருந்து எழுவது. இது ஒரு அனுபவ அறிவு. இந்த அனுபவம், இந்தப் பிரபஞ்ச அனுபவம் நான் என்பதன் கடைசி அனுபவம் எனலாம்.

மேலும் இதில் வேடிக்கை என்னவென்றால் இதன் பின்னும் எதுவும் மாறுவதில்லை. மாறாது. உடலும், மனமும், மூளையும் அதனதன் எல்லைக்குள்தான் செயலாற்றும். என்ன, அதிகபட்ச எல்லைவரை செயல்படும். ஆற்றல் வரும். அவ்வளவுதான். அது ஒன்றும் முக்கியமானதல்ல. முக்கியம் அதை வேடிக்கை பார்க்க முடிவதுதான். இதன்பின் வேடிக்கை விளையாட்டு நிலையாமையின் நடனம் இப்படி பூமியே சொர்க்கமாய் ஆகிப் போகும்.

சென்ற மாதம் ஓஷோவின் புதுமை சந்நியாசியும் எங்கள் அன்பு நண்பருமான சுவாமி யோகராஜ் திடீரென தனது இளவயதில் காலமானார்.
அப்போது பார்த்தேன். நமது ஓஷோ அன்பர்களைத் தவிர சமூகத்தில் எவருக்குமே மகிழ்ச்சியோடு அவரை வழியனுப்பும் உணர்வும் தைரியமும் இல்லை. இறக்கும்வரை அவர் உயிர் வாழ விரும்பும் போராட்டத்தில் உதவி செய்தோம். ஆனால் உடல் சீர்பட வில்லை. இறந்து விட்டது. பின் என்ன, ஒரு குட்பை கூறி ஆனந்தமாக வழியனுப்ப வேண்டியதுதானே.

இந்த மாதம் மார்ச் 21-ம் தேதி முதல் ஓஷோ ஸாஸ்வதம் புதிய தியான
அரங்கில் செயல்பட உள்ளது. இது அவினாசி அருகே உள்ளது. அனைவரும் வந்து தியானம் புரிந்து மகிழ்க.

அன்பு,
சித்.
கவிதை

அன்பு வழி வாழ்வு

நண்பனே,
கூடு விட்டு கூடு தாவும் அனுபவம் உண்டா உனக்கு,
அடுத்தவர் எண்ணம் அறியும் ஆற்றலுண்டா உனக்கு,
விதை பார்த்து கனியின் சுவை கூறமுடியுமா உன்னால்,
சுலபம்,..... வெகு சுலபம்,
இவையெல்லாம் சித்துவேலையல்ல,
அன்பின் சத்து வேலை.

ஆம்....அருமை நண்பனே,
அன்பின் இராசயனம் அனைத்து இயற்கையிலும் பரவிக்கிடக்கிறது.
அந்த சாத்தியத்தில்.....
அன்பில் நீ கரையும்போது அனைத்தையும் உணர முடியும்.
மரத்தை நேசிக்கும்போது இலையின் அசைவை நீ அறிவாய்.

ஆம்.....நண்பா,
அன்பில் கரைந்தபின் எதுவும் சாத்தியம்.
பாறை வளர்வதையும் பார்த்து ரசிக்கலாம்,
வெறும் கோப்பையிலிருந்து தேநீரையும் சுவைத்துக் குடிக்கலாம்,
இறப்பின் ஆனந்தத்தை இனிய கவிதையாய் வடிக்கலாம்,
தனிமையே ஒருமையாய் தன்னை எங்கும் உணரலாம்.

ஆகவே எனக்குப் பிரியமானவனே,
அன்பு வழி வாழ்வு.
வாழ்வின் பொருள் அன்பு,
அதை சுவைக்கவும் அதில் கரையவும்,
நாம் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வோம்.

ஓஷோ வீடியோ

1. Osho : I am not a worshiper of poverty

2. Osho : Ecstasy (Meditation Minutes)

3. Osho : Something which never diesஇம்மாதம் மூன்று தியானமுறைகளை ஓஷோவின் விளக்கங்களோடு அளிக்கிறோம்.

1.எண்ணங்களின் உணர்வுகளின் ஆளுமையை உடைத்தல்

உங்களுடைய உணர்வுகளுடன் ஐக்கியப்பட்டு விடாதீர்கள்.
உங்களுடைய மனத்தின் ஆளுமையை வீசியெறிய வேண்டுமெனில் அதனுடன் நீங்கள் கொண்டுள்ள அனைத்து தொடர்புகளையும் அழித்து விடுங்கள். உங்களுக்குள் ஒரு எண்ணம் எழுகிறது, - அதனுடன் ஒன்றாகி விடாதீர்கள். நீங்கள் அதனுடன் ஒன்றாவதுதான் அதற்கு வலிமையை கொடுக்கிறது. தனித்து நில்லுங்கள். சாலையோரம் நின்றுகொண்டு கடந்து மக்களை வேடிக்கை பார்ப்பது போல பாருங்கள். வானத்தில் உள்ள மேகங்களை கீழே உள்ள பூமியில் நின்று கொண்டு வேடிக்கை பார்ப்பது போல பாருங்கள். அடையாளப்படுத்திக் கொள்ளாதீர்கள். அதனுடன் ஐக்கியப்பட்டு விடாதீர்கள். இது என்னுடைய எண்ணம் என்று சொல்லாதீர்கள். என்னுடைய என்று சொல்லும் அந்த கணமே நீங்கள் தொடர்பு கொண்டு விடுகிறீர்கள். தொடர்பு ஏற்பட்ட அந்த வினாடியே உங்களுடைய அனைத்து சக்திகளும் அந்த எண்ணத்துக்கு போய் விடுகிறது. அந்த சக்திதான் உங்களை அடிமை படுத்துகிறது – அது உங்களது சக்திதான்.

உங்களது எண்ணங்களிடமிருந்து நீங்கள் விலகி நின்று பார்க்கும்போது அவை சக்தி இழந்து போகிறது, வாழ்விழக்கிறது. ஏனெனில் அவைகளிடம் எந்த சக்தியும் கிடையாது. நீ ஒரு பக்கம் விளக்கை அணைக்க விரும்புகிறாய், இன்னொரு பக்கம் அதற்கு எண்ணை ஊற்றிக் கொண்டிருக்கிறாய். கையால் எண்ணை ஊற்றிக் கொண்டே வாயால் அதை ஊதுகிறாய். இதுதான் உன் பிரச்னை. புதிதாக எந்த எண்ணையும் ஊற்றாதே. இருக்கும் எண்ணை வெகு நேரம் எரியாது.

எண்ணை என்பது என்ன? எப்போதெல்லாம் ஒரு எண்ணம் உன்னை பிடித்துக் கொள்கிறதோ, - உதாரணமாக எப்போதெல்லாம் கோபம் வருகிறதோ – நீ உடனடியாக அதனுடன் ஒன்றாகி விடுகிறாய். நீ நான் கோபமாக இருக்கிறேன் என்று சொல்கிறாய். நீ அந்த கோபத்துடன் உன்னை மிகவும் அடையாளப்படுத்திக் கொண்டு விட்டதால் உனது சக்தி முழுவதும் அதற்கு சென்று விட்டது. இதுதான் உண்மை. நீ நிழலாகி விட்டாய். கோபம் எஜமானனாகி விட்டது. கோபம் வரும்போது தனியாக நின்று அதைப் பார், கவனி. கோபம் பொங்கி எழட்டும். அது உன் உடலை முழுவதுமாக ஆக்ரமிக்கட்டும். அது எல்லா திசைகளிருந்தும் சூழட்டும். நடக்கட்டும். நீ நான் கோபமல்ல என்ற ஒரே ஒரு சின்ன விஷயத்தை மட்டும் நினைவில் கொண்டிருந்தால் போதும். கோபத்தினுள் குதிக்க அவசரம் காட்டாதே, ஏனெனில் அதிலிருந்து வெளியே வருவது மிகவும் கடினம்.

இடைவெளிக்காக காத்திரு.
உனது கோபத்தை கவனி. ஆனால் அதற்காக எதுவும் செய்யாதே. உன்னை அவமதித்த மனிதனை நீ ஏதாவது செய்ய வேண்டுமானால், கோபம் வடியும் வரை காத்திரு. அதற்கு முன் எந்த சூழ்நிலையிலும் அதற்கு பதிலளிக்காதே.

ஆரம்பத்தில் அது மிகவும் கடினமானதாக இருக்கும். மிகவும் கடினமானதாக தான் இருக்கும். நீ மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உன்னை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும், போக, போக அது சுலபமானதாகிவிடும். கோபம் இருக்கும் வரை உன் வாயை மூடிக் கொண்டிரு. கோபம் வடிந்த பிறகு பதில் சொல். இதுதான் ஒரே சரியான வழி. அமைதியான தருணங்களில்தான் சரியான பதில் வரும். கோபத்தில் பதில் சொல்வது போதையில் பதில் சொல்வதைப் போன்றது. உனக்கும் உனது எண்ணங்களுக்கும் இடையில் எவ்வளவு தூரம் இடைவெளி உண்டாக்கிக் கொள்கிறாயோ அவ்வளவு உனது கட்டுப்பாட்டை நிலை நிறுத்திக் கொள்கிறாய். நீ உனது ஆசைகளுக்கு மிக அருகில் இருப்பதால் அதற்கும் உனக்கும் இடையே இடைவெளி இருக்கிறது என்பதையே நீ மறந்து போய் விடுகிறாய். இரண்டிற்கும் இடையே இடைவெளியே இருப்பதில்லை.

பலன் உடனே கிடைக்காது. ஏனெனில் உனது நெருக்கம், அதனுடன் உனது தொடர்பு கணக்கற்ற பிறவிகளாக தொடர்ந்து வருகிறது. அந்த தொடர்பை ஒரு நாளில் உடைக்க முடியாது. அதற்கு காலம் பிடிக்கும். ஆனால் உன் பக்கத்திலிருந்து கிடைக்கும் சிறு முயற்சி பலனை கொடுக்கும், ஏனெனில் இது தவறான அடையாளம். அது உண்மையென்றால் அதை உன்னால் உடைக்கவே முடியாது.

ஆனால் உன்னுடைய எண்ணங்களோடு நீ கொண்டுள்ள இந்த அடையாளம் உன்னுடைய ஒப்புதலேயன்றி வேறல்ல. இருப்பினும் இதுதான் உன் எல்லா பிரச்னைகளையும் உருவாக்குகிறது.
பசி வரும்போது நான் பசியாயிருக்கிறேன் என்று சொல்லாதே. பதிலாக இந்த உடல் பசியாக உணருவதை நான் பார்க்கிறேன் என்று சொல்.

இதுதான் உண்மை. நீ பார்ப்பவன்தான். உடல்தான் பசியை உணருகிறது. தன்னுணர்வு ஒருபோதும் பசியாக இருப்பதில்லை. உணவு உடலுக்குள் தான் செல்கிறது. உடலுக்கு, தசைக்கு, இரத்ததிற்கு தான் தேவை இருக்கிறது. இந்த உடல்தான் சோர்வடைகிறது. தன்னுணர்வு சோர்வடையாது. திரியும் எண்ணையும் இல்லாமல் எரியும் தீபம்தான் தன்னுணர்வு. அதற்கு எரிபொருளும் தேவையில்லை, உணவும் தேவையில்லை. அதற்கு எதுவுமே தேவையில்லை.

உடலுக்குத்தான் எரிபொருளும், உணவும் தேவை. உடல் ஒரு மெஷின், உயிர் மெஷினல்ல.

உடலுக்கு உணவு தேவை எனும்போதெல்லாம் அதற்கு உணவளி. ஆனால் ஒரு விஷயத்தை நினைவில் கொள். உடல்தான் பசியோடு இருக்கிறது, நான் அதை கவனித்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு தாகமாக இருக்கும்போது தண்ணீர் கொடு.

உடல், உணவும் தண்ணீரும் தேவைப்படும் ஒரு இயந்திரம். நான் உடலல்ல, அதனால் அதற்கு உணவும் தண்ணீரும் தர மாட்டேன் எனக் கூறும் மனிதன் ஒரு முட்டாள். காருக்கு பெட்ரோல் போட வில்லையென்றால் எப்படி காரை ஓட்ட முடியும்? நீ அதற்குள் உட்கார்ந்து இருக்கலாம், ஆனால் அது ஓடாது...... காருக்கு பெட்ரோல் போட வேண்டும். அப்போதுதான் அது ஓடும். காருடன் ஒன்றி விடாதே. ஒரு முதலாளியாக இருந்து அதன் தேவைகளை நிறைவேற்று.

உடலின் தேவைகள் நிறைவேற்றப் பட வேண்டும். அது நீ உபயோகப்படுத்தக் கூடிய ஒரு இயந்திரம். அது மிகப் பயனுள்ள ஒரு சாதனம். அதுதான் முக்தி நிலைக்கு நாம் செல்ல உதவும் ஒரு ஏணி. இந்த உடல் ஒரு இயந்திரம், ஒரு சுமந்து செல்லும் மெஷின். அதை கவனமாக பராமரி, அதை கெடுத்து விடாதே. உன்னுடைய வேலைக்காரனின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய், அதற்காக அவனையே முதலாளி என்று எண்ண வேண்டியதில்லை.

மனதை கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம் உண்மையை உணரலாம். மனது உனது கட்டுப்பாட்டில் இருக்கும்போது நீ மெதுமெதுவாக சாட்சியாளனாக மாறி விடுவாய், உனக்கு உண்மை புரியும், உனது உயிர், உனது உண்மையான இருப்பு விழிப்புணர்வு நிலையை அடைய ஆரம்பிக்கும்.

Source : The Great Path Ch. #6

2.உரிமையாளனை நினைவு கொள்ளுதல்

எனக்கு வலிக்கிறது, எனக்கு வலியாக இருக்கிறது, நான் வலியை உணருகிறேன், இவைதான் மூன்று நிலைகள், முற்றிலும் வேறு விதமான நிலைகள். ஞானமடைந்த ஒருவர் கூறுகையில், நான் வலியை உணருகிறேன் என்றுதான் கூறுவார். இந்த அளவு கூறுலாம். ஏனெனில் இப்போது நீ வலியை கடந்து போகிறாய். விழிப்புணர்வு நிலைமாற்றுகிறது. – நீ வலியிலிருந்து வேறுபட்டவன். அங்கே ஆழமான பிரிவினை இருக்கிறது. உண்மையில் அங்கு சம்பந்தமே இல்லை. அருகாமையில் இருப்பதால், உன்னுடைய தன்னுணர்வு நெருக்கமாக அங்கு இருப்பதால் அங்கே உறவு இருப்பது போல தோன்றுகிறது.

நீ வலியை உணரும்போது தன்னுணர்வு வெகு நெருக்கமாக இருக்கும் – அது அங்கேயே அருகிலேயே இருக்கும். அது அங்கேதான் இருக்கமுடியும். இல்லாவிடில் வலி குணமாகாது. அதை தெரிந்து கொள்ள, அதை புரிந்து கொள்ள, அதை பற்றி விழிப்பு அடைய அதன் அருகிலேயே இருந்தாக வேண்டும். ஆனால் இந்த அருகாமையால் நீ அதனுடன் ஒன்றி விடுகிறாய். இது ஒரு பாதுகாப்பு ஏற்பாடு, ஒரு இயற்கையான காவல். ஒரு வலி வரும்போது உன்னுடைய தன்னுணர்வு அங்கே விரைந்து வந்தாக வேண்டும் – வலியை உணர, அதற்கு ஏதாவது செய்ய, அங்கே வரும். அந்த நெருக்கத்தினால் இந்த ஐக்கியப் படுதல் ஏற்படுகிறது.

நீ உணரக் கூடிய எதுவும் நீயல்ல. வந்து போகும் பல உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் தலைவன். விருந்தாளிகளுக்கிடையில் தொலைந்து போய் விடாதே. உன்னுடைய நிலையை நினைவில் கொள்.

விருந்தாளி வரும்போது உரிமையாளரை நினைவில் கொள். பல விதமான விருந்தாளிகள் வருவர். சந்தோஷமானவர்கள், கவலையோடு இருப்பவர்கள், என பலர். நீ விரும்பும் வகையினர் விருந்தினராக வருவர், நீ யாருடன் இருக்க விரும்புகிறாயோ அவர்களும் வருவர், யாரை நீ தவிர்க்க விரும்புகிறாயோ அவர்களும் வருவர், ஆனால் அனைவரும் விருந்தாளிகள்தான்.

தொடர்ந்து உரிமையாளரை நினைவில் கொள், உரிமையாளராகவே இரு. அப்போது அங்கே ஒரு பிரிவினை இருக்கும், ஒரு இடைவெளி, நடுவில் ஒரு இடம் இருக்கும் – பாலம் உடைந்து போகும். அப்போது நீ அதில் இருப்பாய், ஆனாலும் அதனுடன் இருக்க மாட்டாய். அப்போது நீ அங்கிருப்பாய், விருந்தாளிகளுடன் இருந்தாலும் உரிமையாளராக இருப்பாய். விருந்தாளிகளை விட்டு ஓடிப் போக வேண்டிய அவசியமில்லை, தேவையுமில்லை.

Source : That Art Thou Ch. #16

3,கடந்து போதல்

1. அமைதியாக அமர்ந்து பார்த்துக் கொண்டிரு. துயரம் வரும்போது அதை அடையாளம் கண்டு கொள். அது நல்லது கெட்டது என்றோ இது எனக்கு வந்திருக்கக் கூடாது என்றோ வந்திருக்க வேண்டும் என்றோ மதிப்பீடு செய்யாதே. துன்பம் வந்திருப்பதை பற்றி மட்டும் விழிப்போடு இரு. அதை உணர்ந்திரு.

2. மகிழ்ச்சியை உண்டாக்க முயற்சி செய்யாதே. செய்தால் அடுத்த பக்கமும் சேர்ந்தே வரும். மகிழ்ச்சி வந்தால் அதை பிடித்து வைத்துக் கொள்ள முயற்சி செய்யாதே. இல்லாவிடில் மற்றொரு பக்கத்தையும் சேர்ந்தே அனுபவிக்க நேரிடும். திரும்பவும் துயரம் வந்து சேரும்.

3. நீ தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தால் துன்பம், மகிழ்ச்சி இரண்டையும் பார்த்துக் கொண்டே இருந்தால் திடீரென ஒரு நாள் நீ தனித்து இருப்பதை இரண்டிலிருந்தும் தனியாக பிரிந்து இருப்பதை, உணருவாய். இந்த விஷயங்கள் அனைத்தும் உன்னைச் சுற்றி நடப்பவை மட்டும்தான். நீ அவற்றிற்க்கு அப்பாற் பட்டவன் என்பது உனக்கு தெரிய வரும். இந்த தனித்து இருத்தல்தான் பிரபஞ்ச ஆன்மா. அப்பாற் பட்டு இருத்தலின் நடப்பு, இரண்டையும் கவனித்து பார்த்தாலும் இரண்டையும் தாண்டி இருக்கும் இந்த இருப்பு, என்ற இந்த கணம்தான் நீ முழுமையானதாகவும், வெறுமையானதாகவும் இருக்கும் நேரம். நீ வெறுமையாகவும் இல்லை, அல்லது நிரம்பி வழிபவனாகவும் இல்லை.
ஏனெனில் நீ மகிழ்வும் அல்ல துயரமும் அல்ல என்பதை நீ
உணர்ந்திருக்கிறாய்.

Source : The Great Secret Ch. #2

ஞானத்தின் பக்குவம் - ஓஷோவின் கதை 20

ஒரு நாள் இரவு நான் ஒரு சூஃபி கதையை படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு அது மிகவும் பிடித்தது. நான் அதை அனுபவித்தேன். நான் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு சூஃபி ஞானி கடவுளை தேடி நாடுநாடாக அலைந்து திரிந்து கொண்டிருந்தார். அவர் பல குருமார்களை சந்தித்தார். ஆனால் எதுவும் அவருக்கு திருப்தியளிக்க வில்லை. இதயத்தை அர்ப்பணிக்க கூடிய இடத்தை அவரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

ஏமாற்றத்தோடும் நிராசையோடும் அவர் வெளியே குருவை தேடுவதை நிறுத்தி விட்டு உள் குரலை கேட்பது என்று முடிவு செய்து, தனித்து இருப்பதற்காக காட்டுக்குச் சென்றார்.

அங்கு அவர் ஒரு மிக அழகான தேக்கு மரக் கூட்டத்தை கண்டார். பழமையான வயதான பல தேக்கு மரங்கள் ஒன்று கூடி ஒரு கூடாரம் போல உருவாகியிருந்தன. அதன் கிளைகள் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து இயற்கையின் மழை, காற்று, வெயில் ஆகிய எல்லாவற்றிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் உருவாகியிருந்தது. அருகில் ஒரு ஏரி இருந்தது. அந்த கூடாரம் மிகவும் அமைதியானதாக, காட்டின் நடுவில் யாரும் வராத இடத்தில் இருந்தது.
அந்த சூஃபி அதனுள் சென்றார். அவருக்கு அந்த இடம் மிகவும் பிடித்தது. அதற்கே உரிதான அழகுடன் அந்த இடம் இருந்தது. அவர் அங்கே உட்கார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார். வாரத்திற்கு ஒருமுறை அவர் அந்த இடத்தை விட்டு வெளியே வந்து பக்கத்து கிராமத்துக்குப் போய் கொஞ்சம் உணவு வாங்கி சாப்பிட்டு விட்டு திரும்பவும் வந்து உட்கார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்து விடுவார்.

சூஃபிக்கள் கடவுளின் பெயரை அல்லா என்று திரும்ப திரும்ப உச்சரிப்பர். முகம்மதியர்களின் மந்திரமான இதன் பொருள், `கடவுள் என்று யாரும் இல்லை. ஆனால் கடவுள் உண்டு.` ஆனால் சூஃபிகள் இதை அல்லா என்ற ஒரே வார்த்தைக்குள் சுருக்கி விட்டனர். இதற்கு அவர்கள் கூறும் காரணம் திடீரென ஒருநாள் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருக்கும் போதே இறந்து விடக்கூடும். அப்படி உச்சரித்துக் கொண்டிருக்கும்போதே இறந்து விட்டால் பாதியில் கடவுள் இல்லை என்று கூறிக் கொண்டிருக்கும்போது இறக்க நேரிட்டால் நீ ஒரு நாத்திகனாக இறந்து விடுவாய். கடைசி நிமிடத்தில் எல்லாமும் குழம்பி விடும். எதிர்மறையாளனாகி விடுவாய். அதனால் அது ஆபத்தானது என்பதாகும். அதனால் அவர்கள் இந்த முகம்மதிய மந்திரத்தை அதன் முழுவதுமாக சொல்வதில்லை. வெறுமனே அல்லா அல்லா எனக் கூறுவதோடு சரி. அல்லா எனக் கூறிக் கொண்டே இருந்தால் கடைசி நிமிடத்தில் கூட அவர்கள் இதயம் நிரம்பி, அவர்கள் மூச்சுக் காற்றுக்கூட அல்லா எனக் கூறும், கடவுளின் நினைவாகவே இறப்பர். இந்த நிலையைத்தான் அவர்கள் ஜீக்குரா என்று அழைக்கின்றனர்.

இந்த சூஃபி தன்னுடைய மந்திரமான அல்லா, அல்லா என்பதை மாதக்கணக்கில் உச்சரித்துக் கொண்டேயிருந்தார். அவர் மிகவும் அமைதியாகவும், சாந்தமானவராகவும், தன்மையானவராகவும், மாறுவதை அவர் உணர ஆரம்பித்தார். அந்த கூடாரத்தை சுற்றி மிகவும் ஆழ்ந்த மௌனம் இருந்தது. அது மிகவும் அமைதியானதாக இருந்தது. அவர் தனக்குள்ளும் அந்த மௌனத்தை உணர துவங்கினார். அவரது இருப்பின்னுள்ளும் அந்த அமைதி பரவியது. ஆனால் அவர் மகிழ்ச்சியாக இல்லை. அது போதாது. முக்தி நிலை, ஞானமடைதல் அதற்கு இன்னும் வெகு தூரம் போக வேண்டும்.

வருடங்கள் கடந்தன. அந்த கூடாரம் ஒரு தூய்மையான இடமாக மாறி விட்டது. தேக்கு மரங்கள் மிகவும் வளமடைந்தன. அவை புதிதாக நிறைய கிளைகள் விட்டு, இலைகள் விட்டு செழிப்படைந்தன. அந்த கூடாரமே அழகால் நிரம்பியிருந்தது. - ஆனால் அந்த சூஃபியின் இதயம் மிகவும் வருத்தத்தில் இருந்தது. ஆனால் அவர் காத்துக் கொண்டேயிருந்தார். அவர் அவரால் செய்யக்கூடிய எல்லாவற்றையும் செய்து விட்டார். அவர் தியானமும் பிரார்த்தனையும் செய்து கொண்டேயிருந்தார். பதினெட்டு வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் அவர் முக்தி நிலை பெறவேயில்லை. அவர் ஆழ்ந்த மௌனத்திலும் அமைதியிலும் இருந்தார். ஆனாலும் அவர் ஞான நிலை கிட்ட வில்லை. இருந்தது கரைந்து விட்டது, ஆனால் எதுவும் அவருக்கு நிகழவில்லை. இருந்தது போய் வெறுமையாகி விட்டது, வெறுமை ஒரு விதமான அமைதிதான், ஆனாலும் வெறுமை வெறுமையாகவே இருந்தது. வேறு எதுவும் செய்ய வழியில்லை.
ஒரு நாள் நடு இரவில் திடீரென அவருக்கு ஒரு ஐயம் எழுந்தது. ஒரு சந்தேகம் தோன்றியது. ஏனெனில் பதினெட்டு வருடங்கள் என்பது மிகவும் அதிகமானது, அவர் மிகவும் முயற்சி செய்து பார்த்து விட்டார், அவர் தனது முழு மனதோடு அதில் ஈடு பட்டு இருந்தார், அவர் எதையும் பிடித்து வைக்கவில்லை, அப்படியும் அது நடக்கவில்லை என்றால் அது எப்போதுமே நடக்காது போல தோன்றுகிறது. ஒரு சந்தேகம் எழுந்தது, அவர் சிந்தித்து பார்க்க ஆரம்பித்தார். இந்த தேக்கு மரக் கூட்டம் எப்படி மழையையும், வெயிலையும் உள்ளே அனுமதிப்பதில்லையோ, அது போல எனது பிரார்த்தனையையும் வெளியே போக அனுமதிப்பதில்லையோ? இதன் கிளைகள் மிகவும் அடர்த்தியாக உள்ளதால் எனது பிரார்த்தனைகள் உள்ளேயே நின்று விடுகின்றதோ, இறைவனை போய் சேர வில்லையோ? எப்படி சூரிய ஒளி இந்த கூடாரத்துக்குள் ஊடுருவ முடிந்ததில்லையோ, அது போல எனது பிரார்த்தனை இறைவனைப் போய் சேர வில்லையோ? இந்த கூடாரம் ஒரு டிராகுலா போன்றதோ, ஒரு ஒட்டுண்ணியோ என நினைத்தார்.

பயந்து போய் நட்ட நடு இரவில் இருளில் உடனே அந்த கூடாரத்தை விட்டு தப்பியோடி விட்டார்.

ஆனால் அதே சமயத்தில் அந்த அடர்ந்த மரக் கூட்டத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள சாலையில் ஒரு பிச்சைக்காரன் ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்க்கு போய் கொண்டிருந்தான். திடீரென அவனுக்கு காட்டிற்க்குள் போக வேண்டுமென்ற தீவிர வேட்கை எங்கிருந்தோ தோன்றியது. அவன் அந்த அவாவை அலட்சியம் செய்தான். காலைக்குள் அடுத்த ஊருக்குப் போய் சேர்ந்தாக வேண்டும், இன்னும் பாதி தூரம் கூட போய் சேர வில்லை. எதற்காக காட்டிற்க்குள் போக வேண்டும்? அது ஆபத்தானது, காட்டிற்க்குள் விலங்குகள் இருக்கும், அவனுக்கு அங்கென்ன வேலை என நினைத்தான். ஆனால் ஏதோஒன்று அவனை இழுத்தது. அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. அவன் வகையற்று போனான். அவன் பைத்தியம் பிடித்தாற்போல காட்டிற்க்குள் ஓடலானான். நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என அவன் நினைத்தான். ஆனால் அவனது உடல் அவனது கட்டுப்பாட்டில் இல்லாமல் அதன் போக்கில் இயங்கியது. அவன் தப்பியோட நினைத்தான். காட்டுக்குள் செல்வது மிகவும் ஆபத்தானது, அவன் பயந்தான், நடுங்கினான் – ஆனால் பயனில்லை. ஆனால் அவன் அந்த மரக்கூடாரத்தை நெருங்கியவுடன் அவனுக்கு புரிந்தது.

அந்த மரக்கூடாரத்திலிருந்து ஒரு மெல்லிய குரல் வந்தது. என்னிடம் வா. அது புற செவிகளுக்கு கேட்காது, ஆனால் அது அவனுக்கு கேட்டது. அந்த கூடாரம் நம்பவே முடியாத அளவு ஜொலித்தது. அந்த முழு கானகமும் இருட்டில் இருக்க, இந்த கூடாரம் மட்டும் தனியாக நீல வண்ணத்தில் மின்னியது.

அது ஏதோ வேறு ஒரு உலகம் போலவும், அந்த மரத்திற்கு அடியில் ஏதோ ஒரு புத்தர் அமர்ந்திருப்பது போலவும், அதன் அடியில் யாரோ ஒருவர் ஞானமடைந்தது போலவும், அந்த மரத்தை சுற்றி ஞானஒளியும், முக்தி நிலையின் அமைதியும் பரவசமும் பரவி படர்ந்திருந்தது. அவன் அந்த மரத்தைச் சுற்றி ஒரு அதிர்வலை இருந்ததை உணர்ந்தான். இப்போது அந்த பயம் போய் விட்டது. அவன் அந்த மரக்கூடாரத்தினுள் நுழைந்தான். நுழைந்த அந்த கணமே அந்த நிலைமாற்றமடைந்தான். ஒரு புதிய மனிதனாக பரிமணித்தான். அவனால் அவனை நம்பவே முடிய வில்லை. அவன் ஒரு சாதாரண மனிதன், நல்லவனுமல்ல, கெட்டவனுமல்ல, ஒரு சராசரியான மனிதன்.

அன்றாட வாழ்க்கையின் சிக்கல்களில், குழப்பங்களில், ஆழ்ந்து கிடப்பவன். அவன் ஒரு ஆத்திகனுமல்ல, நாத்திகனுமல்ல. உண்மையில் அவன் கடவுளைப்பற்றி எனக் குறிப்பாக எதையும் நினைத்தது கிடையாது. மதத்தைப்பற்றி எந்த கொள்கையும் கிடையாது. அவன் அதைப் பற்றி கவலைப் பட்டதே கிடையாது. வாழ்க்கையின் பல பிரச்னைகளோடு அவன் போராடிக் கொண்டிருந்தான்.....ஆனால் திடீரென அந்த மரக்கூடாரத்தில் நுழைந்தவுடன் அவன் ஒரு சுழலில் சிக்குண்டான். அவன் ஒரு மரத்தடியில் அமர்ந்தான், அவனால் நம்பவே முடியவில்லை. – அவன் அந்த விதமாக அது வரை அமர்ந்ததே இல்லை. அவன் ஒரு சூஃபி ஞானியை போல அமர்ந்தான். அவனுள் ஒரு லயம் பரவியது, அவன் இருப்பினுள் ஒரு நாதம் எழுந்தது. அவனது உள்ளிருந்து ஒரு ஓசை ஒலித்தது. என்ன நடக்கிறதென்றே அவனுக்கு புரிய வில்லை. அது ஒரு அதிசயம். இன்னவென்று அவன் அறிந்திராத ஒரு சத்தம் அவனுக்குள்ளிருந்து வெடித்துக் கிளம்பியது. மெதுமெதுவாக, அந்த பரபரப்பு அடங்கியவுடன், எல்லாமும் அமைதி பட்டவுடன் அவனால் அந்த சத்தத்தை கேட்க முடிந்தது, அந்த ஓசை தெளிவடைந்தது, வடிவற்றது வடிவமடைந்தது, அப்போது அது என்னவென்று அவனுக்கு தெரிந்தது. அது வேறு எதுமல்ல - அல்லா, அல்லா – இப்போது அவனையும் அறியாது அவனே அதை சொல்லத் துவங்கினான். அவன் அதை சொல்ல வில்லை. அவன் செய்பவனல்ல. அது நிகழ்ந்தது. அவன் ஒரு சாட்சியாளனாக இருந்து அதைப் பார்த்தான்.

ஏதோ ஒரு பிரபஞ்ச கடலின் கரையில் அவன் இருப்பதைப் போலவும், பெரும் அலை வந்து அவன் மீது நீரை வாரி இறைப்பதை போலவும் இருந்தது. – அல்லா, அல்லா, அல்லா – கடலின் பிரமாண்டமான அலை கரையில் இருந்த அவனை முழுவதுமாக நனைத்து சென்றது. நிலைமாற்றமடைந்த அவன் பல்லாயிரம் தடவை அன்றைய இரவில் இறந்து பிறந்தான்.

பதினெட்டு வருடங்கள் அந்த சாதகன் அங்கே இருந்தான், எதுவும் நடக்கவில்லை. பதினெட்டு மணி நேரங்களில் அந்த பிச்சைக்காரன் புத்தனாகி விட்டான். அவன் எதுவும் செய்யவில்லை. எனக்கு இந்த கதை மிகவும் பிடித்தது. லா வேட்ஸூ இந்த கதையை மிகவும் விரும்பி இருப்பார். அவரால் இந்த கதையை புரிந்து கொள்ள முடியும். இதன் ரகசியம் என்ன? இது இயல்புக்கு முரணானதாக தெரிகிறது. பதினட்டு வருடங்கள் முயற்சி செய்தவனுக்கு எதுவும் நிகழ வில்லை, பிரார்த்தனையே செய்யாதவனுக்கு பதினட்டு மணி நேரங்களில் எல்லாமும் கிடைத்து விட்டது. இந்த கதையின் பொருள் என்ன?

லா வேட்ஸூ எப்போதும் ஒரு வார்த்தை கூறுவார். அது வூ வீ. அதன் பொருள் செயலற்ற செயல். செயலற்று செயல் செய்தல். செயல் செய்தலும் செயலற்று போதலும் ஒருங்கிணைத்து இருப்பது. இதுதான் ரகசியம். அந்த சாதகன் அதிகப்படியாக செய்தான். அவன் தன்னை சமமாக நிலை நிறுத்திக் கொள்ளவில்லை. அவன் அதிகமாக செய்தது செய்யாதது போன்றதுதான்.

வாழ்க்கை ஒரு சமன்பாடுதான். அவன் சமப்படுத்திக் கொள்ள வில்லை. அடைவதற்கான பேராசையினால், லட்சியத்தினால், அவன் எல்லைக்கே சென்று விட்டான். அவன் மிகவும் ஈடுபட்டு விட்டான்.

எப்போதெல்லாம் நீ மிகவும் செயல்படுபவனாக இருக்கிறாயோ, எப்போதெல்லாம் செயல்படுபவனாக மட்டுமாக இருக்கிறாயோ, அப்போது இந்த உலகின் விஷயங்கள் அனைத்தும் ஒத்துவரும் – ஆனால் அக உலகின் விஷயங்கள் உனக்கு நிகழாது போய் விடும். ஏனெனில் நீ மிகவும் பதற்றத்தோடும், தவிப்போடும் இருப்பதால் ஏற்றுக் கொள்வதற்க்குரிய நிலையில் நீ இல்லை. செயலுக்கும் செயலற்ற நிலைக்கும் இடையில் சமனோடு, நேர்மறைக்கும் எதிர்மறைக்கும் இடையில் சமனோடு, எல்லா இரட்டை தன்மைகளுக்கும் இடையில் சமமாக யார் இருக்கிறார்களோ அவர்களால்தான் பெற்றுக் கொள்ள முடியும்.

TAO: THE THREE TREASURES, VOL 2 CHAPTER #7

No comments: