Friday, October 22, 2010

மலர் 2 இணைய இதழ் 4 11 நவம்பர் 2009

தலையங்கம்

அன்பு என்பது என்ன அடுத்தவருக்கு உதவி புரிவதா, குடும்பத்தாருக்காக உழைப்பதா காதல் செய்வதா தாய்மை பாசமா, நட்புக் கொள்வதா இல்லை. இது எல்லாமே போலியா
பக்தி, சரணாகதி என்பதெல்லாம் அன்பைச் சேர்ந்ததா அன்பு வழி என்பது என்ன இப்படி ஒரு நண்பரின் பலப்பல கேள்விகள்.

என்ன சொல்ல. ஓஷோ மிக அருமையாக்க் கூறுகிறார். அன்பு உன் இயல்பு. அதுவாகவே ஆகி விடுவது மனிதனின் சிறப்பியல்பு. அது தொடங்குமிடம் காமம். காமத்தில் அது விலங்கின் குணமாக சிறு தீப்பொறியாக இருக்கிறது. அதை அனுமதிக்க வேண்டும். வளர்ந்து மலர சுதந்திரமும், பாதுகாப்பும், புரிதலும் கொடுக்க வேண்டும்.

காமத்தில் ஒரு உடம்பின் சக்தி மற்றொரு உடம்பிலும் விரிகிறது, பாய்கிறது. இதுதான் முதல் அனுபவம் நமக்கு. அதாவது நாம் என்பது நமது இந்த உடல், இந்த உடலோடு சேர்ந்த மனம், அறிவு, அனுபவம் என்ற எல்லைக்குள் கட்டுண்டு கிடக்கும் சக்தி அல்ல. அப்படி நாம் நினைத்திருக்கும் நினைப்பு வெறும் கற்பனையே. நமது உடலில் உள்ள சக்தி விரிந்து பரவி தொடர்பு கொள்ளும் ஆற்றல் கொண்டது. அது மற்றொரு உடலோடு தொடர்பு கொள்ளக் கூடியது என்ற அனுபவம் காமத்தில் கிடைக்கிறது.

அந்த ஒரு கணத்தில் நான் என்பது மறந்து, இறந்து, மனம் மறைந்து, கடந்து, ஆனாலும் ஒரு இருப்பாய், சக்தியாய் இருக்கும் அனுபவம் கிடைக்கிறது. இதையே சிற்றின்பம் என்கிறோம்.

நமது எல்லைகள் கடந்து நாம் விரியும் முதல் அனுபவம் இது. இதுவே அன்பின் விதை. எனவேதான் அன்பு உயிர்களின் இன்றியமையாத தேவையாக இருக்கிறது. வாழ்வின் இன்பமாக இருக்கிறது. இப்படி அன்பு ஒரு தேவை என்ற அடிப்படையில் இருக்கும்நிலையில் அன்பு வளர்வதில்லை. அது அதன் சிகரங்களைத் தொடுவதில்லை. கருணையாகவும் அருளாகவும் உயர்வதில்லை. தாய்மை கூட அன்புதான். தேவையாக உள்ள அன்பு.

ஒரு தாய்க்கு தன் மக்கள் எல்லாம் தன்னிலிருந்து உருவாக்கிய, தன் உடம்பின் பாகங்களே. ஆகவேதான் ஒரு பெண் தாய்மையில் பெரும் இன்பமும், பூரிப்பும் அடைகிறாள். ஏனெனில் ஒரு தாய் ஒரு உடம்பல்ல. அவள் விரிந்து தன் மக்களுக்குள்ளும் பரிணமிக்கிறாள். ஆகவேதான் தாய்மை அனுபவம் அன்பின் உதாரணமாக உலகில் திகழ்கிறது.

ஆகவே அன்பு என்பது இந்த உடம்பும், மனமும், அறிவும், அனுபவமுமான நான் என்பதை கடந்து வாழ்வின் இருப்பின் இயற்கையின் வேறொன்றில் பரவி விரிவதால் கிடைக்கும் ஆனந்தம், இன்பம் என்று சொல்லலாம். அந்த விரிவுணர்வு, கலப்புணர்வு......

காமம் என்பது உடலின் கலத்தலுக்கான உந்துதல். நட்பு என்பது மனதின் கலத்தலுக்கான களம். ஆக எல்லா கலத்தலும், விரிவும் அன்பின் சுவைதான். கணநேரம் தன்னை மறந்து எதில் கலப்பதும் அன்புதான். ஆனால் இவையெல்லாம் ஆரம்பங்கள்.

மனிதனின் சாத்தியம் மிக அதிகமாயிருக்கிறது. இவனின் ஆரம்பம் காமம் என்றாலும் அழகில், படைப்பில், ஆச்சரியத்தில், சிரிப்பில் என்று அவன் தன்னை இழந்து பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் ஏராளம். இதில் இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். அன்பு நமது சமூகத்தில் அபாய சங்காக இருக்கிறது. ஏனெனில் அதில் தன்னை இழப்பதால் ஆபத்து இருக்கிறது. அடுத்தவர் உன்னை பயன்படுத்திக் கொண்டு விடலாம். அதனால் உனக்கு இழப்பு நேரலாம் என்ற பயம் ஒருபக்கம், இன்னொரு பக்கம் தன்னை இழப்பது என்பது ஒருவகையில் இறப்புதான். நான் என்கிற சிறிய வட்டத்தின் இறப்பு. இறப்பு என்பது சோகம், மோசம், கெட்டது என்ற கருத்தால் அன்பு ஏற்படுத்தும் இறப்பைப் பார்த்து பயம் வருகிறது.

ஆம், அன்பு ஒருவகை இறப்பு அனுபவம்தான். ஆனால் அதன்மூலம் நாம் பரவி விரிகிறோம். நமது உண்மை இயல்பை, சாத்தியத்தை உணர்ந்து ஆனந்திக்கிறோம். மேலும் இந்த சமூகம் காமத்தைக் கூட அன்பாக வளர விடாமல் கட்டுப்படுத்த மற்றொரு காரணமும் இருக்கிறது.

அன்பின், காதலின் அனுபவம் ஒருவனது பயத்தை போக்கி விடுகிறது. ஏனெனில் இறப்பை பார்த்து விடுகிறான். அதன்பின் தான் பரவி ஆனந்திப்பதை அறிந்து விடுகிறான். ஆகவே, அவனை அடிமைப் படுத்தவோ, அடிமையாக வைத்திருப்பதோ சமூகத்திற்கு சாத்தியமில்லாமல் போய்விடுகிறது. ஆனால் இந்த சுரண்டல் சமூக அமைப்பில் ஒரு சிலருக்காகவே பெரும்பான்மையினர் அடிமையாக வாழ வேண்டியுள்ளது. இதில் இப்படி ஒருவன் பயமற்று போவது என்பது சுயநலவாதிகளுக்கு ஆபத்தானது. எனவேதான் சமூகம் முளையிலேயே, காமத்திலேயே அன்பைக் கிள்ளி விடுகிறது, நசுக்கி விடுகிறது.

அன்பு காமத்தில் முளை விடுகிறது. பெண்களுக்கு தாய்மையில் பரவசமளிக்கிறது. ஆண்களுக்கு தாய்அன்பு தெவிட்டாத சுவையாய் இனிக்கிறது. பின் வளர, வளர ஒவ்வொரு வாய்ப்பிலும் மனிதன் தன்னை இழந்து ஈடுபடுகையில் பரவி விரிந்து கலக்கும் அன்பின் அனுபவம் அதிகமாகிக் கொண்டே போகிறது.

செய்யும் செயலில், பழகும் மனிதர்களில், பார்க்கும் மரங்களில், செடிகளில், பூக்களில், கேட்கும் இசையில், ஆடும் நடனத்தில், அருமை மணத்தில், அறுசுவை உணவில் என்று எதில் மெய்மறக்கும் அனுபவமும் பிரபஞ்ச இருப்பின் சுவை அனுபவம்தான். அன்பு அனுபவம்தான்.

விழிப்புணர்வோடு, தியானிப்பவனாய் இருப்பில் கரைந்து இருக்கும்போது பொங்கிப் பெருகி வழிந்தோடும் சக்தியும் அன்புதான்.

அன்பு ஒரு குணம், ஒரு செயலல்ல. அன்பு, நமது இயல்பு நிலையில் நாம் பிரபஞ்ச இருப்போடு இணைந்து இருக்கையில் பொங்கி வழியும் சக்திதான். அது நான் என்பது நிறைந்து மறைந்து போகும் வெளிப்பாடு. ஒரு வகையில் இறப்பு.


நமக்கு இறப்பைப் பார்த்து பயம் வருமாயின் அது இன்னும் அன்பின் சுவையை அறியவில்லை நாம் என்பதன் அறிகுறிதான்.

இறப்பும் இன்பம்தான், பேரின்பம். ஏனெனில் முழுதாய் இறந்தால்தான் முழுதாய் பரவி விரிந்து கலக்க முடியும்.

ஆகவே காமத்தைப் பற்றிய சரியான புரிதலையும் அன்பின் அடிப்படையிலான சுதந்திரத்தையும் நாம் இளைஞர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

அவர்களது வாழ்வின் நட்பு, உறவு, வேலை, தொழில் எல்லாமே அவர்களது அன்பின் அடிப்படையில், அதாவது அவர்களுக்கு அன்பு அனுபவம் தருவதாக மட்டுமே அமைத்துக் கொள்ள சுதந்திரம் கொண்ட வருங்காலத்தை நாம் உருவாக்க வேண்டும்.

அன்பு என்பது ஒரு உணர்வு. உள்ளுணர்வு. இருப்புணர்வில் ஒன்று கலக்கையில் ஏற்படும் இயற்கையுணர்வு. ஆகவே இது நிலையானது அல்ல. இயற்கை எப்படியோ, அப்படியே கணத்துக்குக் கணம் மாறுவது, மாறக்கூடியது. ஒரே உணர்வில் எந்த உயிரும் வாழ்வது சாத்தியமற்றது. இதை நாம் உணர வேண்டும். இந்தக் கணத்தில் நான் அன்பில் மூழ்கலாம், அடுத்த கணத்தில் மாறிப் போகலாம். அன்பை எப்போதும் நினைத்த நேரமெல்லாம் கொண்டுவர முடியாது. அது வரும், போகும். ஆகவேதான் காதலர்கள் சன்டை போடுகின்றனர். இது புரிந்துகொள்ளப் படவேண்டும். எப்போதும் நட்பாய் இருக்கலாம், ஆனால் அன்பாய் இருக்க முடியாது.

அன்பு இயற்கையின் நிலையாமையோடு சேர்ந்தது. அதனால்தான் சமூகம் அன்பை அனுமதிக்க, அன்பை வளர விட, அதற்கு சுதந்திரம் கொடுக்க பயப்படுகிறது .அதற்கு பதிலாக திருமணம் என்ற சட்டச் சிறைக்குள் வைத்துப் பூட்டுகிறது. அன்பு பாதுகாப்பற்றது, பாதுகாப்பு தேடாது. ஏனெனில் இறப்பே ஆனந்தமானவனுக்கு எதற்குப் பாதுகாப்பு.....

கடைசியாக உங்களுக்கே இப்போது புரிந்திருக்கும் என்றாலும் சொல்லி விடுகிறேன். அன்பு தன்னையே கொடுக்கக் கூடியது. ஆனால் கடமை என்ற பெயரிலல்ல. அன்பு பகிர்ந்து கொள்ளக் கூடியது. ஆனால் நான் பெரியவன் ஆகவே நான் செய்கிறேன் பார் உதவி என்ற அகங்காரத்திற்கு ஆட்பட்டதல்ல.

மேலும் அன்பு வளராமல், வெறும்முதல் அனுபவத்தோடு, ஒரு ஏக்கமாக, ஒரு தேவையாக, ஒரு உணவாக, ஒரு கனவாக இன்றைய மனிதனுக்கு ஆகி விட்டது. ஆகவே அது ஒரு வியாபாரப் பொருள் போல நான் உன்னிடம் அன்பு காட்டுகிறேன் நீ என்னிடம் அன்பு காட்ட வேண்டும் என்ற கட்டாயமாக, எதிர்பார்ப்பாக ஆகி விட்டது. ஒருவரையொருவர் அடிமைபடுத்தும் தந்திரமாகவும், போலித்தனமாகவும் நடிப்பாகவும் ஆகி விட்டது. இதில் அன்புணர்ச்சி என்பதே மறந்தும், மரத்தும் போய்விட்டது மனிதனுக்கு.

ஆகவே நண்பர்களே

இன்று அன்பை மீண்டும் கொண்டுவர, மீட்டுக் கொண்டு வர ஒரே வழி தியானம் செய்யுங்கள். விழிப்புணர்வு பெறுங்கள். விழிப்புணர்வோடு வாழும் வாழ்க்கையில் உண்மை அன்பை நீங்கள் அடையாளம் காண்பீர்கள். அனுபவிப்பீர்கள், ஆனந்தப்படுவீரகள்.

அன்பு,
சித்.

கவிதை

அன்பின் ரகசியம்

காலைச் சூரியன் கொண்டு வந்த கதகதப்பில் என் கண்விழிப்பு,
மெதுவாக என் இமைகளே மேலேற.............
எனது அன்புத் தோட்டத்தில் மறுபடியும் நான்……

நேற்றிரவே வந்தேன்,
போர்முனை வீரனின் வீடு திரும்பல் போன்ற பல வருடப் போராட்ட ஓய்வு.

விழி முற்றும் திறந்தது..
உடல் இன்னும் ஓய்வில், தளர்வில், உறக்கத்தில்....
எடைப் போட யாருமில்லை, நிரூபிக்க எதுவுமில்லை,
இந்த அன்பில் முழுதாய் தளர்த்திக் கொள்ளலாம் – என்னை...

கண்களை மறுபடியும் மூடிக் கொள்கிறேன்,
கருப்பை குழந்தைபோல் சுருண்டு கொள்கிறேன்,
கை நீண்டு கனத்த போர்வையை போர்த்திக் கொள்கிறது,
நான் அன்பின் கருப்பையில் மிதக்க ஆரம்பிக்கிறேன்...
என்ன ஒரு ஆனந்தம்...

உடம்பு பொய் என்று யார் சொன்னது .....
எனது உடல் இப்போது இருப்பது பூரண ஆனந்தத்தில், மகிழ்ச்சியில், மிதப்பில், துடிப்பில், வளர்ச்சியில்...
அன்பின் சுரங்களை எழுப்புகிறது அது – என்னைச்சுற்றி.... எல்லோரையும் எல்லாவற்றையும் தொட்டு மீட்டுகிறது அது...

எந்தப் பேச்சும் இல்லாமல்,
இந்த பூரண அமைதியில்,
நாங்கள் அனைவரும் ஒரே லயத்தில்.......

நான் இந்தத் தோட்டத்தின் முழுமையில் கரைந்து இருக்கிறேன்,
நான் எனக்குப் பொருத்தமாகப் பொருந்தி இருக்கிறேன்.
எனது மனைவியின், மகனின் பரபரப்புக் குரல்கள்,
பக்கத்து நண்பனின் வீட்டில் கவனமெடுத்துப் பேசும் மெல்லிய குரல்கள், ஆச்சரிய ஆனந்தத்தில் குதூகலிக்கும் நண்பனின் மகன்களின் குரல்கள்,


இப்படி அன்பென்ற ஒரே பாடலை இசைக்கும் பல்வேறுபட்ட வாத்தியங்கள், அப்படியொரு சந்தோஷ அன்பில் நிறைந்து வழியும் பல்வேறு ஊடகங்கள்,

இதோ, இந்தக் குரல் எனதருமை மரங்களுடையது,
காற்றின் துணையோடு, காண அழைப்பு அனுப்புகிறது.
ஊக்.. அகல விரிந்த கண்களுடன் எழுந்து நின்றேன் – இல்லையில்லை, துள்ளியெழுந்தேன்.......
என் குழந்தைகளை பார்க்க ஓடுகிறேன் - இப்போது மரங்கள்....

ஓ.. என்ன ஒரு சீரும் சிறப்புமாக அவை..
வரிசை வரிசையாக, சாரி சாரியாக,
அவை வளர்ந்து, வரவேற்பு கொடிமரம் போல் அணிவகுப்பில்,
ஆனால் ஒவ்வொன்றும் தன்போக்கில் சாய்ந்துகொண்டு,
ஆனால் அனைத்தும் அன்பு நிரம்பிய தென்றலைப் படைத்துக் கொண்டு........
கண்களில் துளிர் விடுகிறது கண்ணீர்,
கன்னங்களில் வழிந்து கடைவாயில் கரிக்கிறது உப்பு,

அருகே சென்று ஒவ்வொன்றையும் தட்டிக் கொடுத்து சேதி பரிமாறிக் கொள்கிறேன்,
ஹேய்,.. உங்கள் வளர்ச்சியின் அழகான கணங்களை அருகிருந்து ரசிக்காமல் இழந்து விட்டேன்,
ஹேய்,... நீங்கள் சிறுவனிலிருந்து சிறகு முளைத்த வாலிபனாய்
வளர்ந்த விந்தை மாற்றத்தை நான் பார்க்க வில்லை,
நீங்கள் எல்லோரும் மிக வித்தியாசமாய்த் தெரிகிறீர்கள்,
எவ்வளவு உறுதியாய் வளர்ந்து நிற்கிறீர்கள்.....
எப்போதும் என்னை நிமிர்ந்து பார்த்து கவனம் கேட்டு
நச்சரிக்கும் குழந்தைகளா நீங்கள்....

நன்றி கடவுளே நன்றி..... சந்தோஷமாயிருக்கிறது.
சந்தோஷம் தாங்காமல் நான் அழ ஆரம்பிக்கிறேன்,
நீங்களும் சந்தோஷமாயிருக்கிறீர்கள்,
உங்களுக்கு இன்னும் என்னை நினைவிருக்கிறதே....
வணக்கம்டா.... உங்களை வணங்கனும்டா.....

சுற்றிலும் பார்க்கிறேன்.....எல்லோரும் வளர்ந்து விட்டனர்.
எனது நண்பனின் மகன்கள் - வெட்கத்துடனும் நேசத்துடனுமான பார்வையோடு,
எனது மகன் ஒவ்வொரு செடியாக இதைப்பார்.......இதைப்பார்..........
இதைப்பார் என்கிறான், அவர்கள் பகிர்ந்து கொட்டும் நேசத்தை உணர்கிறேன் நான்,
அவர்கள் வளர்ந்து காட்டும் நட்பை அறிகிறேன் நான்,
அவர்கள் தோட்டமாய் துணை நிற்கும் ஆதரவு புரிகிறது எனக்கு.
ஓ... என் முழுத் தோட்டமும் அன்பில் மிதக்கிறது
கொண்டாட்டத்தின் குதூகலம்....

எங்கே இந்த மரங்களும் செடிகளும், மனிதர்களும் பருவம் மாறி
பூத்து விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது எனக்கு....
இது ரொம்ப அதிகம்.... ஹேய், காப்பாற்றிக் கொள்ளுங்கள்......
உங்கள் நேசத்தை, சந்தோஷத்தை, கொண்டாட்டத்தை, தக்க வைத்துக் கொள்வீர்

இதயத்தின் ஆழத்தில் இவைகளைப் புதைத்துக் கொள்ளுங்கள்,
இதுதான் இயற்கை உரம் இன்பமான மனிதன் வளரவும் மலரவும்.....
இதை இவ்வளவு எளிதில் கடந்து போகும் காற்றில் வீசிவிடக் கூடாது.
வாருங்கள் அருகில்,
நான் காட்டித் தருகிறேன் – இந்த அன்பில் தழைக்கும் செயல்களை, படைப்புகளை, பரிமாறல்களை, கருணையை, அமரத்துவத்தை,

இது மிக எளிதாகக் கைகூடக் கூடியது,
அதனாலேயே மட்டும் அகங்காரத்திற்கு கடிது.
இது...... இந்த ரகசியம்........
நேசத்தை வெளித் தொடர்பாய் காட்டக் கூடாது
ஆம்,.... அன்பை நேசியுங்கள், ஆனந்தத்தை நேசியுங்கள், அழகை நேசியுங்கள், நேசியுங்கள்........நேசியுங்கள்........
நேசிப்பின் சுவைக்காக நேசியுங்கள்....
இதுதான் பூரணம்., இதுதான் அமரத்தன்மை.

ஓஷோ வீடியோ

1. OSHO : Making Love is a Sacred Experience

2. OSHO : I Don’t Have a Biography

3. OSHO : Books I Have Loved


கேள்வி – பதில்

இம்மாதம் மனம் மற்றும் தியானம் பற்றிய கேள்விகளுக்கு ஓஷோவின் பேச்சுகளிலிருந்து சில பகுதிகளை புரிதலுக்காக அளிக்கிறோம்.

1. உள் நோக்கி திரும்புதல்

சாதாரணமாக சக்தி உன்னிடமிருந்து போகிறது – பொருட்களை நோக்கி, லட்சியங்களை நோக்கி போகிறது. சக்தி உன்னிடமிருந்து வெளியேறுவதால் நீ வெற்றிடமாக உணர்கிறாய். வெளியேறும் சக்தி திரும்ப வருவதேயில்லை. நீ சக்தியை வெளியே வீசிக் கொண்டேயிருக்கிறாய். மெதுமெதுவாக நீ முடமானவனாக, விரக்தியாக உணர்கிறாய். எதுவும் திரும்பி வருவதில்லை. மெதுமெதுவாக நீ வெறுமையாக உணர ஆரம்பிக்கிறாய். சக்தி ஒவ்வொரு நாளும் வழிந்தோடுகிறது. – பின் மரணம் வருகிறது. மரணம் என்பது உன்னிடமிருந்து சக்தி தீர்ந்து போய் விட்டது என்பதால் வருவது.

இதை புரிந்து கொண்டு சக்தியை உள்நோக்கி திருப்புவதுதான் வாழ்வின் மிகச் சிறந்த அற்புதம். அது உள்நோக்கி திரும்புதல். அது நீ இந்த உலகை விட்டு நீங்கி விடுவது என்பது கிடையாது. நீ இந்த உலகில்தான் வாழ்கிறாய். எதையும் விட்டுவிடவோ எங்கேயும் போகவேண்டியதோ அவசியமில்லை. நீ இந்த உலகில்தான் வாழ்கிறாய், ஆனால் முற்றிலும் வேறுபட்ட விதத்தில். நீ இந்த உலகில்தான் வாழ்கிறாய், ஆனால் நீ உன்னில் மையம் கொண்டிருக்கிறாய். உனது சக்தி உன்னிடமே திரும்புகிறது.

நீ வெளியேறுபவன் அல்ல. நீ உள் செல்பவன். நீ சக்தி சேகரமாக, சக்தி தேங்கியிருக்கும் இடமாக ஆகிவிடுவாய். சக்தி ஒளி விடுகிறது. சக்தி அங்கிருக்கிறது, வழிந்தோடுகிறது, நீ ஒளி விடுகிறாய். உன்னால் பகிர்ந்து கொள்ள முடியும், நீ அன்பாய் கொடுக்க முடியும். அதுதான் வித்தியாசம். நீ உன் சக்தியை பொறாமையில் செலுத்தினால், அது திரும்பி வராது. நீ உனது சக்தியை அன்பில் செலுத்தினால் அது ஆயிரம் மடங்காக திரும்ப வரும். நீ உனது சக்தியை கோபத்திற்கு கொடுத்தால் அது திரும்ப வராது. அது உன்னை காலியாக, வெறுமையாக ஆக்கி விடும். நீ உனது சக்தியை கருணைக்கு கொடுத்தால் அது ஆயிரம் மடங்காக திரும்ப வரும்.

எங்கே போனாலும், என்ன செய்தாலும் விழிப்புணர்வு என்ற உள் வெளிச்சத்தில் செய்.
இதுதான் தியானம் – அதிக கவனமாக இருப்பது. அதே வாழ்வை வாழ். உனது கவனத்தை மட்டும் மாற்றிக்கொள். அதை இன்னும் அதிக ஆழமானதாக செய். அதே உணவை சாப்பிடு, அதே பாதையில் நட, அதே வீட்டில் வாழு, அதே பெண்ணோடு, குழந்தைகளோடு இரு, ஆனால் உள்ளே முற்றிலும் வேறுவிதமாக இரு. கவனமாக இரு. அதே பாதையில் நட, ஆனால் விழிப்புணர்வோடு நட. நீ விழிப்படைந்துவிட்டால், திடீரென அந்த பாதை பழைய பாதையாக இருக்காது. ஏனெனில் நீ பழைய ஆளல்ல. நீ விழிப்படைந்துவிட்டால் அதே உணவு அதே போன்று இருக்காது. ஏனெனில் நீ அதே ஆளல்ல. உன் மனைவி அதே போன்று இருக்கமாட்டாள், ஏனெனில் நீ அதே ஆளல்ல. உனது உள் மாறுதலோடு எல்லாமும் மாறிவிடும்.

ஒருவர் உள்ளே மாறிவிட்டால் வெளியே சகலமும் மாறிவிடும். நீ ஆழ்ந்த இருளில் இருந்தால் உலகமும் இருளாக இருக்கும். நீ உனது உள் விளக்கை ஏற்றினால் திடீரென இந்த உலகம் மறைந்து விடும், அங்கு தெய்வீகம் மட்டுமே இருக்கும். இந்த முழு விஷயமும் நீ விழிப்புணர்வுடன் இருக்கிறாயா இல்லையா என்பதை பொறுத்தே அமைகிறது. இது ஒன்றுதான் மாற வேண்டியது, இதுதான் நிலை மாற்றம் அடைய வேண்டிய ஒன்று, புரட்சி என்ற ஒன்று.

Source :The Dhammapada: The way of the Buddha

2. கரப்பான் பூச்சி போன்ற மனம்

தியானம் என்பது தினமும் காலை ஏதோ ஒரு மணி நேரம் செய்வதோ அல்லது முஸ்ஸிம்கள் செய்வது போன்று ஒரு நாளில் ஐந்து முறை செய்வதோ அல்ல. வெவ்வேறு மதங்கள் வெவ்வேறு நேரங்களை தியானத்திற்கு என்று வைத்துக் கொண்டுள்ளன. ஆனால் தியானத்திற்கு என்று தனிப்பட்ட நேரத்தை ஒதுக்குவது மற்ற நேரங்களில் தியானத்தில் இல்லாமல் இருப்பது என்பதாகும்.

ஒருமணி நேரம் தியானம், மற்ற இருபத்திமூன்று மணி நேரம் தியானத்தில் இல்லாமல் இருப்பது என்றால் இறுதியில் தியானம் வெல்லும் என்றா நீ நினைக்கிறாய் – இந்த ஒரு மணி நேரத்தில் நீ செய்வது என்னவாக இருந்தாலும் இந்த இருபத்தி மூன்று மணி நேரம் அதை துடைத்து எறிந்துவிடும்.

இரண்டாவதாக இருபத்தி மூன்று மணி நேரம் தியானமற்ற நிலையில் உள்ள ஒரு மனிதன் திடீரென ஒரு மணி நேரம் மட்டும் தியானம் செய்வது எப்படி சாத்தியம் – அது இயலாதது. அது இருபத்தி மூன்று மணி நேரம் ஆரோக்கியமற்று இருக்கும் ஒருவன் அவன் நினைத்தவுடன் திடீரென ஒரு மணி நேரம் மட்டும் ஆரோக்கியமாக மாறுவதை போன்றது. ஆரோக்கியமாக இருப்பதும் ஆரோக்கியமற்று போவதும் ஏதோ அவன் கைகளில் இருப்பதை போல அவன் நினைத்தவுடன் ஆரோக்கியமாகவும், நோய்வாய் படும் நேரம் இது என நினைத்தவுடன் நோய்வாய் படுவதைப் போலவும் இருக்கிறது இது.
தியானம் உனது உள் ஆரோக்கியம். ஒரு நாளின் இருபத்தி மூன்று மணி நேரம் ஆன்மீக ரீதியாக ஆரோக்கியமற்று, கோபம், வெறுப்பு, பொறாமை, போட்டி, வன்முறை என நிரம்பி வழிந்து கொண்டு திடீரென ஒரு மணி நேரம் மட்டும் புத்தரைப் போல மாறுவது எங்ஙனம் சாத்தியம் -- இது சாத்தியமற்றது.

எல்லா மதங்களும் மனிதனை திசை திருப்புகின்றன, ஏமாற்றுகின்றன.. ஏனெனில் மக்கள் ஆன்மீகரீதியான ஏதாவது ஒன்றை வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். அவர்களுக்கு ஒரு பொம்மை – ஒரு மணி நேரம் இந்த தியானம் செய்வதை வைத்துக் கொள் – கொடுக்கப்படுகிறது. ஆனால் இதன் தன்மையை மக்கள் பார்ப்பதில்லை. இது இயற்கையானது அல்ல. நீ இதை இந்த வழியில் செய்ய முடியாது.

நீ ஒன்று நாள் முழுவதும் தியானம் செய் அல்லது நாள் முழுவதும் தியானம் செய்யாமல் இரு. அது உன் முடிவுதான். ஆனால் நீ உன் வாழ்வை இரண்டு விதமாக பிரிக்கமுடியாது. – கோவிலில் தியானிப்பது, கடையில் ஆபீஸில் தியானிக்காமல் இருப்பது என இருக்கமுடியாது.

கௌதமபுத்தர் மற்றும் அவர் வழி வந்த அவரைப் போன்ற மக்கள் கடந்த காலங்களில் நீ என்ன செய்தாலும் உன் ஒவ்வொரு செயலிலும் ஊடுருவும் ஒரு தியானத்தை வலியுறுத்தி வந்தனர். அது உன்னை நிழல் போல தொடரும். அது உன் உள்ளுணர்வில் தன்னுணர்வில் ஒரு ஆழ்நீரோட்டம் போல ஓடிக் கொண்டே இருக்கும். நீ கடைவீதியிலோ, கோவிலிலோ எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உனது உள்ளார்ந்த மௌனம் பாதிக்கப்படாமல், சிதையாமல் இருக்க வேண்டும். அதுதான் உண்மையான தியானத்தின் குணம்.

அதனால் முதலில் முயற்சி எதுவும் செய்யாமல் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். கோபம் இருந்தால் கவனி. அதை வெளியே தள்ள எந்த முயற்சியும் செய்யாதே, ஒரு பார்வையாளனாக இரு. அது உன் வேலை அல்ல என்பது போல இரு. வெறுப்பு இருக்குமானால் கவனி. இவை யாவும் மிக மெலிதான மேகங்கள் போன்றவை. நீ கவனிப்பவனாகவே இருந்தால் சில விநாடிகளுக்குள் அவை மறைந்து விடும். அவை தானாகவே போய் விடும்.

அவற்றை தள்ளாதே, ஏனெனில் எந்த அளவு அவற்றை வெளியே தள்ள முயற்சிக்கிறாயோ அந்த அளவு நீ அவற்றை உண்மையென கொள்கிறாய். நீ அவற்றை வெளியே தள்ள தள்ள நீ அவற்றின் தளத்திற்கு இறங்கி விடுகிறாய். நீ அவற்றை வெளியே தள்ளும் அளவு அவை அழுத்தமான பழக்கங்களாக மாறும்.

நீ பூச்சிகளை கவனித்திருக்கிறாயா – நீ ஒரு பூச்சியை வெளியே தள்ளினால், உடனே அது திரும்பி உன்னை நோக்கியே ஓடி வரும். அது ஒரு மிக வித்தியாதமான செயல். இந்த முழு உலகமும் அதற்கு இருக்க அது வேறு எங்கும் போகாது. அது சவால் விடுகிறது. யார் நீ – ஒரு சிறு பூச்சி, கரப்பான் பூச்சி – அதை தள்ளி விட்டு விட்டு என்ன நடக்கிறது என்று பார். அது உடனே மிகுந்த வேகத்துடன் திரும்பி வரும்.

உன்னுடைய மனதும் இதையேதான் செய்யும். உண்மையில் கரப்பான்பூச்சியின் மனமும் உன்னுடைய மனமும் வேறு வேறல்ல. அவற்றின் அடிப்படை கட்டமைப்பு ஒன்றுதான். அவற்றின் மனம் ஒரு சிறிய மாடல் போன்றது, சிறிய அளவிலானது. உன்னுடையது கொஞ்சம் பெரியது. ஆனால் உன்னிடமுள்ள அதே திறமைகள் அவற்றிடமும் உள்ளது.

உன்னுடைய மனதிலுள்ள விஷயத்தை எடுத்து வெளியே வீச முயற்சி செய்யும் போது, அது திரும்பவும் உன்னிடமே வேகமாக ஓடி வரும். நீ முயற்சி செய்து பார். குரங்கைப் பற்றி எதுவும் நினைக்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டு ஐந்து நிமிடங்கள் உட்கார்ந்து என்ன நடக்கிறதென்று பார். உலகிலுள்ள அத்தனை குரங்குகளுக்கும் உன் மேல் ஆர்வம் வரும். நான் குரங்குகளைப் பற்றி நினைக்கப் போவதில்லை என்று நீ அவற்றிடம் சொல்ல வேண்டியதில்லை. உன் அறையில் அந்த எண்ணத்துடன் உட்கார்ந்தாலே போதும். அது எல்லா குரங்குகளுக்கும் பரப்பப் பட்டு விடும். நீ எங்கே என்ன செய்து கொண்டிருந்தாலும் அவை அங்கே இருக்கும். ஐந்து நிமிடங்கள் முடிந்து விட்டது. இனி நீ இங்கே இருக்க விரும்பினாலும் சரி, போக விரும்பினாலும் சரி, அது உன்னை பொறுத்தது என்று நீ கூறும் அந்த கணமே அவை யாவும் போய்விடும். ஆனால் நீ போ என்று சொல்லி அவை போவது அவற்றின் பெருமைக்கு இழுக்கு. ஒவ்வொரு எண்ணமும் ஒவ்வொரு உணர்ச்சியும் ஒவ்வொரு உணர்வும் அதற்கான தான் என்ற ஆணவத்தைக் கொண்டுள்ளது போலத் தோன்றுகிறது. அதனால் அதை எதிர்த்து போரிடும் மக்கள் யாரும் வெற்றி பெறுவதில்லை. சண்டையிடாதே, வெறுமனே கவனி. அவை அங்கிருப்பதால் எந்த தீங்கும் இல்லை.

நீ உன்னை கோபத்துடன் அடையாளப்படுத்திக் கொள்ளாத வரை தனிபட்ட கோபம் மட்டும் எந்த தீமையையும் செய்து விட முடியாது. நீ அதனுடன் அடையாளப்படுத்திக் கொண்டு விட்டால் பின் நீ மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய எதையாவது செய்யக் கூடும். கோபம் மட்டும் எதையும் செய்துவிட முடியாது. அது சக்தியற்றது, அது வெறுமனே ஒரு எண்ணம்தான். அது அங்கேயே இருக்கட்டும், கவனி, மகிழ்வுடன் கவனி. உன்னுடைய பங்களிப்பு இல்லாமல் அதனால் எத்தனை நேரம் இருக்க முடிகிறது என்று பார். ஒரு சில வினாடிகளுக்கு மேல் அதனால் தாக்கு பிடிக்க முடியாது. அது போய் விடும்.

தியானம் ஒரு கவனமாக மலர வேண்டும், பின் ஒரு நாளின் 24 மணி நேரமும் கவனிப்பது சாத்தியமாகும். தூங்கப் போகும் போது கூட கவனி. தூக்கம் உன்னை ஆட் கொள்ளும் கடைசி விநாடி வரை கவனமாகப் பார். இருள் அடர்ந்து கொண்டே போகும், உடல் தளர்வடையும், நீ விழிப்பிலிருந்து தூக்கத்தினுள் விழும் ஒரு கட்டம் வரும் – அந்த கணம் வரை பார். பின் காலையில் முதல் விஷயமாக, தூக்கத்திலிருந்து எழுந்து விட்டோம் என நீ உணர்ந்த கணமே கவனிக்க ஆரம்பித்து விடு. பின் விரைவிலேயே தூக்கத்தில் நீ இருக்கும் போது கூட கவனிக்க ஆரம்பித்து விடுவாய்.

கவனித்துப் பாரத்துக் கொண்டிருப்பது என்பது இரவும் பகலும் உன்னுள் எரிந்து கொண்டிருக்கும் ஒரு தீபமாகட்டும்.

இதுதான் உண்மையான ஆணித்தரமான தியானமாகும். மற்ற எல்லாமே தியானம் என்ற பெயரில், நீ ஏதோ ஆன்மீக சம்பந்தமானது செய்து கொண்டிருக்கிறாய் என உன்னை ஏமாற்றும், நீ விளையாட கொடுக்கப்பட்ட ஒரு பொம்மைதான். இந்த உண்மையான தியானத்தில் நீ தவிர்க்க இயலாததையும் தாண்டி வந்து விடுவாய். பொய்யான யாவும் காணாமல் போய்விடும்.

ஆனால் பிரபஞ்சத்தில் உள்ள யாவும் பொய்யானது அல்ல. எது பொய்யானது இல்லையோ அது தவிர்க்க இயலாதது. தவிர்க்க இயலாததை நீ என்ன செய்யப் போகிறாய். நீ அதைப் பற்றி நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டாய். அந்த தவிர்க்க இயலாதது தான் தியானம்.

தவிர்க்க முடியாததை பார்த்துக் கொண்டே இருந்தாயானால் பொய்யானது தானாகவே கரைந்து போய் விடுவதை தெளிவாக காண்பாய். உனது பொய்யான கனவுகளின், ஆசை மேகத்தின் பின்னால் மறைந்து இருந்த உண்மையான விஷயம் இப்போது தெளிவாக, மேலும் அதிக தெளிவுடன் உன் முன் நிற்பதை காண்பாய்.

Source : The great Zen master Ta Hui

வாழ்வின் ஏமாற்றம் - ஓஷோவின் கதை 16

ஒருவர் சக்ரவர்த்தி ஆவது ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நிகழக்கூடும் என்றும் அவர் ஒரு தனிப்பிறவி என்றும் அதனால் சக்ரவர்த்தியான ஒருவர் இறந்தால் அவருக்கு சொர்க்கத்தில் தனிப்பட்ட மரியாதைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டு, சிறப்பான ஒரு இடம் கொடுக்கப்படும் என்றும் சொல்லப்படுவதுண்டு.

ஜைன மத நூல்களில் சொர்க்கத்தில் இமயமலையை போன்ற ஒரு மலை உண்டு எனக் கூறப்பட்டுள்ளது. இந்த இமயமலை பாறைகளாலும் மண்ணாலும் பனியாலும் உருவாக்கப்பட்டுள்ளது. சொர்க்கத்தில் உள்ள அந்த மலைக்கு பெயர் சுமிரு. சுமிரு என்றால் மிக உயர்ந்த மலை எனப் பொருள். அதை விட சிறந்த, அதை விட அழகானது வேறில்லை என்பது அதன் அர்த்தம். அது தங்கத்தால் உருவானது. அதில் பாறைகளுக்கு பதிலாக வைரங்களும் பவளங்களும் மரகதங்களும் உள்ளன. சக்ரவர்த்தி ஒருவர் இறந்தால் அவரது பெயர் அந்த மலை மீது பொறிக்கப்படும்.

அப்படி ஒரு சக்ரவர்த்தி இறந்த சமயம் அவரது பெயரை சுமிரு மலை மீது பொறிப்பதற்காக அவரை கூட்டிப் போனார்கள். அது ஒரு அரிதான தருணம். அது ஆயிரம் வருடங்களில் ஒருமுறையே நிகழும். இந்த மன்னன் தன் பெயரை சுமிரு மலை மீது தான் பொறிக்கப்போவதை எண்ணி மிகவும் மனக்கிளர்ச்சியடைந்தான். இதுவரை இருந்த மிகச் சிறந்தவர்களில் ஒருவனாகப் போவதோடு, வரப்போகிற சிறந்தவர்களுக்கும் ஒரு பாடமாக, வழிகாட்டியாக இருக்கப்போகிறான். அந்த சக்ரவர்த்தி அசாதாரணமானவர்களில் ஒருவனாகப் போகிறான்.

அந்த வாயில் காவலன் மலைமீது அவரது பெயரை பொறிப்பதற்க்கு தேவையான கருவிகளை கொடுத்தான். சக்ரவர்த்தி தன்னுடன் இன்னும் சிலரை கூட்டிச் செல்ல விரும்பினான். சக்ரவர்த்தியின் வாழ்நாள் பூராவும் அவருடன் இருந்து அவரது வெற்றிக்கு துணை நின்ற அவரது மனைவி, அமைச்சர், தளபதி ஆகியோர் சக்ரவர்த்தி இறந்தபோது அவரின்றி வாழ முடியாது என தற்கொலை செய்துகொண்டு அவருடன் கூடவே உயிர் விட்டு அவருடன் இப்போது சொர்க்கத்துக்கு வந்துள்ளனர். அவர்களையும் கூட்டிச் செல்ல அனுமதிக்குமாறு வாயில் காப்போனைக் கேட்டார். ஏனெனில் தன்னந்தனியே போய் தன் பெயரை பதித்துவிட்டு வருவதில் என்ன சந்தோஷம் இருக்கப் போகிறது—அங்கு அதைப்பார்க்க யாருமே இல்லாவிடில் மகிழ்ச்சி எப்படி வரும்—ஏனெனில் இந்த முழு உலகமும் பார்ப்பதில்தான் சந்தோஷமே இருக்கிறது.

வாயில் காவலன், என்னுடைய பேச்சை தயவு செய்து கேளுங்கள். இது என்னுடைய பரம்பரை தொழில். என்னுடைய அப்பா, தாத்தா, அவருடைய அப்பா என நாங்கள் ஆயிரக்கணக்கான நூற்றாண்டுகளாக இந்த சுமிரு மலையின் வாயில் காப்பவர்கள். அதனால் என் பேச்சைக் கேளுங்கள். இவர்கள் யாரையும் உங்களுடன் கூட்டிச் செல்லாதீர்கள். இல்லையெனில் வருத்தப்படுவீர்கள். என்றான்.

சக்ரவர்த்தியால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவரால் அவனது பேச்சைக் கேட்காமலும் இருக்க முடியவில்லை. ஏனெனில் அவரைத் தடுப்பதால் அவனுக்கு என்ன லாபம்...

வாயில் காப்போன், நீங்கள் இவர்களை இப்போதேக் கூட்டிச் செல்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அவர்களைக் கூட்டிச் சென்று விட்டு பின் அங்குள்ள நிலையை பார்த்துவிட்டு ஒருக்கால் காண்பிக்க வேண்டாம் என முடிவெடுத்தால் அப்போது அதை செயல்படுத்த வழியும் இருக்காது, வாய்ப்பும் இருக்காது. அவர்கள் உங்களுடன்தான் இருப்பார்கள். எனவே இப்போது நீங்கள் தனியே சென்று உங்கள் பெயரை பொறித்துவிட்டு வாருங்கள். பின் இவர்கள் பார்க்கத்தான் வேண்டும் என விரும்பினால் திரும்பி வந்து இவர்களை கூட்டிச் செல்லுங்கள். என்றான்.

இது மிகச் சரியான யோசனையாகத் தோன்றியதால் சக்ரவர்த்தி, மற்றவர்களிடம், நான் தனியாகப் போய் எனது பெயரை பொறித்துவிட்டு திரும்ப வந்து உங்கள் எல்லோரையும் அழைத்துச் செல்கிறேன். என்றார்.

வாயில் காப்போன், இதுதான் மிகச் சரியானது என்றான்.

சக்ரவர்த்தி சென்று ஆயிரக்கணக்கான சூரியன்களுக்கு அடியில் தகதகத்துக் கொண்டிருந்த சுமிரு மலையைக் கண்டார். – ஏனெனில் சொர்க்கத்தில் ஒரே ஒரு சூரியனோடு ஏழை போன்று இருக்க முடியாது – ஆயிரக்கணக்கான சூரியன்கள், இமயமலையைவிட பெரிதான தங்க மலை. இமயமலையே இரண்டாயிரம் மைல் நீளம் உடையது. சக்ரவர்த்தியால் கண்களை திறக்கவே முடியவில்லை. அவ்வளவு தகதகப்பு – பின் மெதுவாக கண்களை பழக்கப்படுத்திக்கொண்டு தனது பெயரை பொறிக்க சரியான ஒரு இடத்தைத் தேடினார். ஆனால் அவர் மிகவும் வியப்படைந்தார். அங்கு இடமே இல்லை. மலை முழுவதும் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவரால் தனது கண்களையே நம்ப முடியவில்லை.

முதல் தடவையாக அவர் தான் யாரென்று உணர்ந்தார். இதுவரை ஆயிரம் வருடங்களில் ஒருமுறை மட்டுமே உருவாகக் கூடிய சிறப்பான மனிதனாக தன்னை நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் காலம் முடிவற்றது. அதில் ஆயிரம் வருடங்கள் என்பது எந்தப்பெரிய மாறுதலையும் ஏற்படுத்தி விடாது. அது ஒரு பொருட்டே அல்ல. அதனால் ஏகப்பட்ட சக்ரவர்த்திகள் ஏற்கனவே இருந்திருக்கிறார்கள். அவ்வளவு பெரிய மலையில் இவருடைய சிறிய பெயரை எழுத இடமே இல்லை.

அவர் திரும்பி வந்தார். உன்னுடைய மனைவி, அமைச்சர்கள், தளபதி மற்றும் நெருங்கிய நண்பர்கள் என யாரையும் உன்னுடன் கூட்டிச் செல்ல வேண்டாம் என காவலாளி தடுத்தது ஏன் என இப்போது புரிந்தது. அவர்கள் இந்த காட்சியை பார்க்காமல் இருந்தது நல்லது. தங்களது சக்ரவர்த்தி ஒரு அரிய பிறவி என்றே அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கட்டும்.

அவர் காவலாளியை உள்ளே தனியே அழைத்து, அங்கே இடமே இல்லை என்பதைக் கூறினார்.

காவலாளி, இதைத்தான் நான் உங்களிடம் கூறினேன். நீங்கள் சில பெயர்களை அழித்துவிட்டு உங்களது பெயரை எழுதிவிட்டு வாருங்கள். அப்படித்தான் செய்திருக்கிறார்கள். என் வாழ்வில் பலர் இப்படி செய்வதை பார்த்திருக்கிறேன். எனது தந்தையும் இப்படி நடந்திருக்கிறது எனக் கூறியிருக்கிறார். எனது தாத்தா ஏன் எனது பரம்பரையில் யாருமே சுமிரு மலை காலியாக இருந்தோ, சிறிதளவு இடம் இருந்தோ பார்த்ததில்லை.

எப்போதுமே ஒரு சக்ரவர்த்தி வந்தால் அவர் சில பெயர்களை அழித்துவிட்டு தனது பெயரை எழுதுவார். இதுவரை இருந்த எல்லா சக்ரவர்த்திகளின் பெயரும் இதனுள் இருக்கிறது என்று கூறிவிட முடியாது. பலமுறை அழிக்கப்பட்டு பலமுறை பொறிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் உங்களது பெயரை எழுதிவிட்டு பின் உங்களது நண்பர்களிடம் காட்ட விரும்பினால் அவர்களை உள்ளே அழைத்துச் செல்லுங்கள். என்றான்.

சக்ரவர்த்தி, இல்லை, நான் அவர்களிடம் காட்டவும் விரும்பவில்லை, என்னுடைய பெயரை நான் எழுதவும் போவதில்லை. அதனால் என்ன பயன் – ஒருநாள் யாராவது ஒருவர் வந்து அதை அழிக்கப் போகிறார். என்னுடைய முழு வாழ்வும் இப்போது பொருளற்றதாகி விட்டது. சொர்க்கத்தில் உள்ள சுமிரு மலையில் எனது பெயர் பொறிக்கப் படும் என்பதுதான் எனது ஒரே நம்பிக்கையாக இருந்தது. இதற்காகவே நான் வாழ்ந்தேன். இதற்காகவே நான் எனது வாழ்க்கை முழுவதையும் பணயம் வைத்தேன். இதற்காகவே நான் இந்த உலகம் முழுவதையும் கொல்லத் தயாராக இருந்தேன். ஆனால் இப்போது வேறு யார் வேண்டுமானாலும் வந்து எனது பெயரை அழித்துவிட்டு தங்களது பெயரை எழுதக்கூடும் எனும்போது அதில் எழுதுவதில் என்ன பொருளிருக்கிறது--- நான் அதில் எழுதப் போவதில்லை. என்றார்.

காவலாளி சிரித்தான். சக்ரவர்த்தி, ஏன் சிரிக்கிறாய் எனக் கேட்டார்.

காவலாளி, ஆச்சரியமாயிருக்கிறது. ஏனெனில் சக்ரவர்த்திகள் வந்து, இதைப் பார்த்துவிட்டு, கேட்டுவிட்டு, தங்கள் பெயரை எழுதாமல் திரும்பி போன கதையையும் நான் எனது தாத்தாவிடமிருந்து கேட்டிருக்கிறேன். நீங்கள் மட்டுமல்ல, ஒரு சிறிதளவாவது புத்திசாலித்தனம் உள்ள யாரும் இதையேதான் செய்வர். என்றான்.

Source :FROM DARKNESS TO LIGHT ch.# 2 Q 1

No comments: