Friday, October 22, 2010

மலர் 1 இணைய மாதஇதழ் 3 11 அக் 2008

தலையங்கம்.

அன்பும் வணக்கமும். நண்பர்கள் பலரின் பகிர்வுகளுக்கு நன்றி. நமது இணைய இதழில் ஓஷோவின் தமிழ் மொழிபெயர்ப்புகள் பலவும் பல நண்பர்களிடமிருந்தும் இடம் பெற உள்ளது.
இந்த வாரம் எனது ஆசையாகிய ஓஷோவின் சிறப்பு பற்றி கூறப் பிரியப்படுகிறேன்.
ஓஷோ ஒரு ஞானி. மற்ற ஞானிகள் கூறியிருப்பதையே அவரும் கூறுகிறார். என்ன சிறப்பு ?
ஓஷோவின் சிறப்புகள் இவைதான்:
1. ஞானமடைய புதுப் பாதை
2. ஞான அனுபவம் பெற புது தியான முறைகள்
3. மனித குலத்தில் முதன்முறையாக ஞானம் பெற்றபின் உள்ள வாழ்வு, வாழ்வியல் பற்றிய அனுபவபகிர்வு.

இப்போது ஒன்றின் பின் ஒன்றாக பகிர்ந்து கொள்கிறேன்.

1.ஞானமடைய புதிய பாதை.
ஆதியில் யோகா, தந்த்ரா என்ற இரண்டு வழிகள் இருந்தன. யோகா புலனடக்க வழி. புலன்களே ஒருவனின் உலகம். அதை அடக்கிவிட்டால், அவை இறந்தபின் எஞ்சியிருப்பது எது? எந்த உணர்வு? பயிற்சி மூலம் புலன்கள் இறந்தாலும் உணர்வு எஞ்சி இருந்து பெறும் அனுபவம் இது.

தந்த்ரா என்பது ஏதாவது ஒரு புலனை பயன்படுத்தி ஏதாவது ஒரு குறிப்பிட்ட உணர்வை கூர்மைப்படுத்திக்கொண்டே போய், அதன் மூலம் வெறும் உண்ர்வாய், உடல் தாண்டி, புலன்கள் தாண்டியுள்ள உணர்வு நிலை அனுபவம் பெறுவது இது.
இவை இரண்டும் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை ஒன்றுக்கு ஒன்று எதிரானவை. அதன்பின், மன எல்லை கடந்த அனுபவத்திற்க்குப்பின், ஒருவனுக்கு எல்லாம் ஒன்றுதான்.

மூன்றாவதாக இருந்தது ‘சரணாகதி’ வழி. அன்புணர்வில் இடையறாது திளைக்கும் ஒருவன் அந்த உணர்வில் மூழ்கிப்போய் மெய்யுணர்வு பெறும் அனுபவம் இது.
இதுவே சற்று மாறி ‘ அனுமதித்து விடுதல்’(let go) என்ற வழியாக சீனாவில் பரிமளித்தது. இது இயற்கையிடம் சரணாகதி. இது ஆழ்ந்த அன்புணர்வில் ஏற்படும் சரணாகதிக்கு பதிலாக,ஆழ்ந்த வாழ்வின் புரிதலில், எந்த மனமயக்கத்திலும் வீழ்ந்துவிடாமல் மெய்யுணர்வை வாழ்வில் பெறும் அனுபவம்.
இப்படியிருந்த காலகட்டத்தில் கெளதம புத்தர் ஒரு புது வழியை காட்டினார். அது சாட்சிபாவம் என்பது. சாட்சிபாவம் என்ற ஒருகுணம் எந்த மாறுபட்ட நிலையிலும் அழியாமல் இருக்கிறது என்று கண்டுபிடித்த கெளதம புத்தர், அதையே ஒரு வழியாக்கினார்.

இப்போதே, மனிதனின் இன்றைய நிலையிலேயே சாட்சிபாவம் அவனிடம் இருக்கிறது. எனவே அதை அதிகரித்து, அதில் அவன் மையம் பெற முயல வேண்டும். அந்த சாட்சிபாவ அனுபவம் அவனுக்கு புலன், மனம் தாண்டிய அனுபவத்தை தரும்.

ஆனால் இதற்கு முன் கூறிய முறைகளைப் போல அல்லாமல் இதற்காக உலகத்தை துறந்து இந்த முயற்சியிலேயே 24 மணி நேரமும் ஈடுபட வேண்டும் என்றார். உலக வாழ்வில் எந்த பயனும் இல்லை என்றார். அதனால் சந்நியாச முறை பிறந்தது.
இப்போது 2500 வருடங்களாக அதுவே ஏதோ ஒரு விதத்தில் ஆன்மீக நாட்டம் உள்ளவர்களை ஆட்சி செலுத்தி வந்தது. ஆனால் இதனால் சமூகமும், வாழ்க்கைதரமும், புலன்களும், உடலும் புறக்கணிக்கப்பட்டது. கெளதம புத்தர் அரச வாழ்வு வாழ்ந்து அதன் வெறுமையை உணர்ந்து துறவு பூண்டவர். ஆனால் பின்னாட்களில் மக்கள் ஏராளமான ஆசைகளுடன் துறவு பூண்டனர். மக்களை ஏமாற்றி சுக வாழ்க்கை வாழும் தொழிலாகிவிட்டது அது. ஆகவே அந்த துறவிகளால் ஒழுக்கக்கேடும், மன அழுத்தமும், போலித்தனமும் மூட நம்பிக்கையும் நிறைந்த சமூகம் உருவாகி விட்டது.

இந்நிலையில் ஓஷோ மனிதனின் அறிவு வளர்ச்சியை, மனதின் பெருக்கத்தை, அதன் குதிரை வேகத்தை, அவனது அமுக்கிவைக்கப்பட்டுள்ள உணர்ச்சிகளை, அவனது கட்டுப்பெட்டித்தனமான போலி முகத்தை, அவனது குற்றவுணர்வுப் புழுக்கத்தை, உணர்விழந்த உடலைப் பார்த்து, ஆராய்ந்து ஒரு புதிய பாதையை கூறுகிறார். அதுதான் “ REJOICE”, “ZORBA THE BUDDHA” . அதாவது “மனமற்று அனுபவி, “ “ஜோர்புத்தா” ..
வாழ்வை புறக்கணிக்காதே, வாழ்ந்து பார்த்து உதிர்வது வேறு., அப்படித்தான் நடக்க வேண்டும் என்கிறார். இந்த உலகமும் ஆன்மீக உலகமும் எதிரெதிரானதல்ல. இந்த உடலே புத்தர், இந்த பூமியே சொர்க்கம் என்று முழங்கினார். ஆகவே அவரது புதிய பாதை எது என்றால் யோகா, தந்த்ரா, சரணாகதி, சாட்சிபாவப் பயிற்சி இப்படி எந்த முறையை கடைபிடித்தாலும் சரி, புது முறைகளைக் கடைப்பிடித்தாலும் சரி, உண்மையில் உனக்கான முறையை நீயேதான் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார்.. உனது வாழ்வில் நீ சமநிலை தவறாமல் செல்ல வேண்டும். ஒன்றை புறக்கணித்து மற்றதை நாடக் கூடாது. ஒன்றை தாழ்த்தி ஒன்றை உயர்த்தக் கூடாது. நீ முழு மனிதனாக, இயற்கையை முற்றிலும் ஏற்று, இயற்கையின் ஒரு பாகமாகவே முன்னேற வேண்டும். உலகில் எதுவும் எதிரெதிரானவை அல்ல. ஒன்றுக்கு ஒன்று உதவியாக உள்ளவைகளே. நீரும் நெருப்பும் பகையல்ல, சமநிலை காக்க உதவி செய்பவைகளே. வேரும் கிளையும் எதிரெதிர் நோக்கம் உள்ளவை அல்ல. எனவே ஒவ்வோர் மனிதனும் தனது தனி தன்மைப்படி பயணப் பட வேண்டும். அதே சமயம் வாழ்வின், உடலின், உலகத்தின் அங்கம் நான் என்ற உணர்வின் அடிப்படையில் எல்லா பரிமாணங்களையும் ஏற்று நடக்க வேண்டும். அப்போதுதான் சொர்க்கமான உலகு பிறக்கும்.
மேலும் இந்த அவரது பாதையில், கடந்த காலத்தின் இறுக்கத்திற்கும், கவலைக்கும் இடம் இல்லை, மாறாக நேர்மையான அதேசமயம் சீரியஸ் இல்லாத சிரிப்போடு கூடிய பாதை அவருடையது.

ஆன்மீகம் இல்லாத உலகு திசை தெரியாத பயணம். உலகியல் இல்லாத ஆன்மீகம் பாலைவனத் தேடல். ஆனால் ஓஷோ கூறும் புதிய மனிதனின் புது வாழ்க்கை முறை ஜோர்புத்தா. ஜோராக உலகை மனமற்று அனுபவித்தவாறே புத்த நிலை நோக்கி செல்லும் பயணம்.

சரி., மற்ற இரண்டும் பற்றி அடுத்த மாத தலையங்கத்தில் பார்ப்போம்.
அன்பு,
சித்.

ஓஷோவின் வீடியோ

OSHO: My Way Of Life is Not Philosophy
OSHO: SEX & DEATH - two great taboos
OSHO: Don't Use this Planet Like a Waiting Room
கவிதைப் பகுதி

அன்பின் தீமைகள்

அன்பில் குருடனாகிறான்,
ஆம்......அன்பு புறம் சார்ந்ததில்லை,

அன்பில் விழுகிறான்,
ஆம்......அன்பு உன்னைவிடப் பெரிது,

அன்பில் பைத்தியமாகிறான்,
ஆம்......அன்பு கணக்கிடும் உலகம் கடந்தது,

அன்பில் வேதனைப்படுகிறான்,
ஆம்......அன்பு உன்னை புடம் போடுகிறது,

அன்பில் அடிமையாகிறான்,
ஆம்...... அன்பே எஜமானன் என்றுணர்ந்ததன் விளைவு,

அன்பில் அழிகிறான்,
ஆம்......சுவைத்தவன் விரும்பிச் செய்து கொள்வது இது.

கேள்விப் பகுதி
இம்மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி “நெறிமுறை பற்றி ஓஷோ கருத்து என்ன?” : நெறிமுறை பற்றிய 3 கேள்விகளுக்கு ஓஷோ பதில்கள்

1. நெறிமுறை என்றால் என்ன ?
மதம் சிதைந்து போனால் அது எப்போதும் நெறிமுறையாக மாறிவிடுகிறது. நெறிமுறை என்பது இறந்து போன மதம். மதம் என்பது உயிரோட்டமுள்ள நெறிமுறை. அவை சந்திப்பதேயில்லை, அவை சந்திக்க இயலாது. ஏனெனில் வாழ்வும் மரணமும் சந்திப்பதேயில்லை, இருளும் ஒளியும் சந்திப்பதேயில்லை. ஆனால் பிரச்சனை என்னவென்றால் அவை ஒன்று போலவே தோற்றமளிக்கின்றன. வாழும் மனிதனை போலவே இறந்த பிணமும் காட்சியளிக்கிறது. அதே முகம், அதே கண்கள், அதே மூக்கு, மயிர்கள், உடம்பு எல்லாம் அவன் உயிரோடு இருந்தபோது இருந்ததை போலவே இருக்கின்றன. ஒன்றே ஒன்றுதான் இல்லை, அந்த ஒன்றை பார்க்க இயலாது. உயிரோட்டம் இல்லை, ஆனால் உயிரோட்டத்தை தொடவோ,
பார்க்கவோ முடியாது. எனவே இறந்துபோன ஒரு மனிதன், இன்னும் அவன் உயிரோடு இருப்பதை போலவே காட்சியளிக்கிறான். நெறிமுறை பற்றிய விஷயத்தில் அது இன்னும் சிக்கலானது.

நெறிமுறை மதத்தைப் போலவே காட்சியளிக்கிறது, ஆனால் அது அப்படி அல்ல. அது ஒரு பிணம். மதம் இளமையானது, புத்துணர்வு மிக்கது. மதம் மலர்களின் புத்துணர்வையும், காலைப் பனித்துளியின் புத்துணர்வையும் கொண்டது. மதம் ஒரு வசந்தம், நட்சத்திரங்களின் வசந்தம், வாழ்வின் வசந்தம், பிரபஞ்சத்தின் வசந்தம். மதம் உள்ளபோது நெறிமுறை இருப்பதில்லை, அவனது இயல்பே நெறிமுறையாக இருக்கிறது. ஆனால் அங்கு நெறிமுறை என்ற ஒன்று தனியாக இருப்பதில்லை, நெறிமுறை என்றால் என்ன என்ற கருத்தும் இருப்பதில்லை. அது அவனது இயல்பாகவே உள்ளது, உன்னுடைய நிழல் உன்னை தொடர்வதை போல அது உன்னை தொடர்கிறது. நீ உன்னுடைய நிழலை சுமக்க வேண்டியதில்லை. நீ உன்னுடைய நிழலைப் பற்றி நினைக்க வேண்டியதில்லை. உன்னுடைய நிழல் உன்னை தொடர்கிறதா இல்லையா என நீ திரும்பி திரும்பி பார்க்க வேண்டியதில்லை. அது உன்னை பின்தொடரும்.

அதைப்போலவே, நெறிமுறை மதத்தன்மை வாய்ந்த மனிதனை பின்தொடர்கிறது. அவன் அதைப் பொருட்படுத்துவதில்லை, அவன் அதைப் பற்றி நினைப்பதில்லை, அது அவனது இயல்பான குணம். ஆனால் மதம் இறந்தபிறகு, உயிரோட்டம் மறைந்த பிறகு, ஒருவன் நெறிமுறையைப் பற்றி தொடர்ந்து சிந்திக்க தொடங்குகிறான். விழிப்புணர்வு மறைந்துவிட்டது, அது குறித்த சிந்தனை மட்டுமே அவன் ஒதுங்குமிடமாக மீதமுள்ளது.

இரண்டாவதாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், நெறிமுறைவாதி பல காரணங்களுக்காக எப்போதும் தனது நெறிமுறையை பிறர்மீது திணிக்க முயற்சி செய்துகொண்டே இருக்கிறான். முதலாவது தனது நெறிமுறையை அவன் தன்மீது அதிகாரம் செலுத்த உபயோகப்படுத்துகிறான். இயல்பாக மற்றவரிடத்திலும் அவன் அதையே செய்கிறான். அவன் தனது நெறிமுறையை மற்றவர்மீது அதிகாரம் செலுத்த பயன்படுத்துகிறான். அவன் நெறிமுறையை தனது சொந்த லாபங்களுக்காக பயன்படுத்த தொடங்குகிறான். இயல்பாக அவன் இந்த தந்திரத்தைக் கற்றுக்கொள்கிறான். அவன் தனது நெறிமுறையை மற்றவர்கள் மீது திணிக்கமுடிந்தால் பிறகு செயல்கள் எளிமையாகிவிடும். எடுத்துகாட்டாக, நெறிமுறைவாதி உண்மையை பேசினால், அவனுடைய உண்மை ஆழமானதல்ல, அடி ஆழத்தில் பொய்கள், பொய்கள் மட்டுமே உள்ளன. ஆனால் சமுதாயத்திலாவது அவன் உண்மை பேசுவதைப் போல நடிக்கிறான். அவன் மற்றவர்களிடமும் அவனுடைய உண்மையை திணிக்க முயல்வான். அவன் மற்றவர்கள் அனைவரும் உண்மையை பேச வேண்டும் என விரும்புவான். ஏனெனில் அவன் தன்னை யாராவது பொய் சொல்லி, குறுக்கு வழியில்,ஏமாற்றிவிடுவார்களோ என மிகவும் பயந்துகொண்டிருப்பான்......அவன் நாம் சாதுரியமான வார்த்தைகளால் மக்களை பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிவான். ஆனால் மேலோட்டத்தில் அவன் உண்மையை காப்பாற்றுகிறான். அவன் எல்லோரும் உண்மையாக இருக்கவேண்டும் என கத்திக் கொண்டேயிருக்கிறான் அவன் மிகவும் பயந்திருக்கிறான். அவன் மற்றவர்களை ஏமாற்றுவதைப் போல மற்றவர்களும் அவனை ஏமாற்றலாம் என அவனுக்குத் தெரியும்.
மூலம் :I SAY UNTO YOU – VOL # 2 – CHAPTER # 1

2. நெறிமுறை என்பது சமுதாய பயன்பாடு என நீங்கள்
கூறுகிறீர்கள். அப்படி என்றால் தனிமனிதனுக்கு அது பயனற்றதா?

நெறிமுறை அல்லது ஓழுக்கமான பழக்கவழக்கம் என்பது சமுதாயத்தைப் பொறுத்தவரை வெறும் பயன்பாடு மட்டுமே. ஆனால் தனிமனிதனுக்கு அது பயன்பாடல்ல, அது ஒரு ஆனந்தம். ஆதலினால், சமுதாயத்தின் தேவைகளை போலித்தனமான நெறிமுறையில் கூட திருப்திப்படுத்திவிடமுடியும்.
ஆனால் தனிமனிதனைப் பொறுத்தவரை அது போதாது. சமுதாயத்தைப் பொறுத்தவரை நீ மற்றவர்களிடம் நல்லவிதமாக நடந்துகொண்டால் போதும் ஆனால் உன்னைப் பொறுத்தவரை அது போதாது. நீ கண்டிப்பாக இதைப் பார்க்க இயலும் — நீ உனக்குள்ளே நன்றாக இருக்கிறாயோ இல்லையோ. சமுதாயம் உனது சமூக முகத்தை குறித்தே கவலை கொள்கிறது, உன்னுடைய உள்ளிருப்பை பற்றி அது கவலைப்படுவதில்லை. ஆனால் உனக்கு சமூக முகம் ஆடையை போன்றதே. அது எங்கு முடிகிறதோ அங்கிருந்துதான் நீ தொடங்குகிறாய். சமூக முகம் என்ற இந்த முகமூடியிலிருந்து தனித்தும் அதற்கு பின்னும் உள்ளதே உனது உண்மையான இருப்பு. அங்குதான் நெறிமுறை பிறக்கிறது.

பொய்யான நெறிமுறை மூலம் உருவான சமுதாயம் நாகரீகம் என அழைக்கப்படுகிறது. வாழ்வின் உண்மையை அடைந்த மனிதர்களை கொண்ட சமுதாயம் பண்பாடானது என அழைக்கப்படுகிறது. இதுதான் நாகரீகத்திற்கும் பண்பாட்டிற்கும் உள்ள வேறுபாடு. நாகரீகம் என்பது ஒரு பயன்பாடு, பண்பாடு என்பது உள் ஒத்திசைவு மற்றும் ஆனந்தம்.

இன்று நம்மிடம் நாகரீகம் உள்ளது ஆனால் பண்பாடு இல்லை. இருந்தாலும் நாம் எல்லோரும் இணைந்து முயற்சி செய்தால் இந்த பண்பாட்டை உருவாக்க முடியும். நாம் மற்றவர்களிடம் நடந்துகொள்ளும் முறையை தூய்மைபடுத்துவதால் நாகரீகம் வருகிறது. பண்பாடு நம்மை தூய்மைபடுத்திகொள்வதன் மூலம் நம்மை புரிந்துகொள்வதால் வருகிறது. நாகரீகம் என்பது உடல், பண்பாடு என்பது இருப்பு. தன் இருப்பில் ஆழமாக வேரூன்றி இருப்பவர்கள் மட்டுமே ஒரு பண்பாட்டை உருவாக்கமுடியும்.
மூலம் : THE PERFECT WAY – CHAPTER # 5

3. காமத்தைப் பொறுத்தவரை நெறிமுறையின் எதிர்காலம் என்ன?

காமத்தைப் பொறுத்தவரை எந்த நெறிமுறைக்கும் எதிர்காலம் இல்லை.உண்மையில் நெறிமுறையையும் காமத்தையும் இணைத்த காரணத்தால் நெறிமுறையின் கடந்த காலம் முழுவதும் விஷமாகிவிட்டது. நெறிமுறை அளவுக்கு அதிகமாக காமத்தை சார்ந்ததாகிவிட்டது. அதனால் அது காமத்தைத்தவிர முக்கியமான மற்ற தனது பரிமாணங்களை எல்லாம் இழந்துவிட்டது. நெறிமுறை சிந்தனைக்கு காமம் பெரிய பொருட்டாக இருக்ககூடாது.

உண்மை, நேர்மை, சுயப்பொறுப்புணர்வு, முழுமை, இவைகளைத்தான் நெறிமுறை பொருட்படுத்தவேண்டும்.விழிப்புணர்வு, தியானம், தன்ணுணர்வு, அன்பு இவைகளைத்தான் நெறிமுறை பொருட்படுத்தவேண்டும்.

ஆனால் கடந்த காலத்தில் காமமும் நெறிமுறையும் கிட்டதட்ட ஒரே பொருள் தருவதாக மாறிவிட்டன. காமம் அதிக சக்தியுள்ளதாகவும், அடக்கமுடியாததாகவும் மாறிவிட்டது. எனவே யாரையாவது நெறிமுறையற்றவன் என நீ கூறினால் அவனுடைய காம வாழ்க்கையில் ஏதோ தவறு நிகழ்ந்துள்ளது என்றே நீ குறிப்பிடுகிறாய். நீ மிக நெறிமுறையானவன் என யாரைப் பற்றியாவது கூறினால், அவன் வாழும் சமூகத்தில் காமத்தைக் குறித்துப் போடப்பட்டுள்ள சட்டதிட்டங்களின்படி நடந்துகொள்கிறான் என்பதையே நீ குறிப்பிடுகிறாய். நெறிமுறை ஒற்றைப் பரிமாணம் கொண்டதாகிவிட்டது. அது நல்லதல்ல, அந்த நெறிமுறைக்கு எதிர்காலம் இல்லை, அது இறந்து கொண்டிருக்கிறது. உண்மையில் அது இறந்துவிட்டது. நீ ஒரு பிணத்தை சுமந்துகொண்டிருக்கிறாய்.

கடந்த காலத்தில் இருந்ததைப்போல இறுக்கமான விஷயமாக இல்லாமல் காமம் மேலும் விளையாட்டுத்தன்மை கொண்ட விஷயமாக மாறவேண்டும். அது ஒரு விளையாட்டை விளையாடுவதைப் போல விளையாட்டாக இருக்கவேண்டும். இரண்டு மனிதர்கள் ஒருவர் இன்னொருவரின் உடல் சக்தியோடு விளையாடுகிறார்கள். அவர்கள் இருவரும் மகிழ்வாக இருந்தால், யாரும் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் யாருக்கும் தீங்கு செய்யவில்லை. அவர்கள் ஒருவர் மற்றொருவரின் சக்தியில் ஆனந்தம் கொள்கிறார்கள். இரு சக்திகள் இணைந்து ஆடும் ஒரு நடனம் அது. சமூகத்தைப் பொறுத்தவரை அது ஒரு பொருட்டாகவே இருக்கக்கூடாது. ஒருவர் மற்றொருவரின் வாழ்வில் குறுக்கிட்டால், ஒருவன் தன்னை மற்றவர் வாழ்வில் கட்டாயபடுத்தி திணித்தால், மற்றவரின் வாழ்வை கெடுத்தால் அப்போது மட்டுமே சமுதாயம் உள்ளே வரவேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனையே இல்லை. அது ஒரு பொருட்டாக இருக்ககூடாது.

எதிர்காலம் காமத்தை குறித்து ஒரு முற்றிலும் வேறுபட்ட பார்வையை கொண்டிருக்கும். அது அதிக விளையாட்டாகவும், அதிக மகிழ்ச்சியுடனும், அதிக நட்போடும் கடந்த காலத்தைப் போல் இறுக்கமான விஷயமாக இல்லாமல் விளையாட்டாகவும் இருக்கும். அது மக்களின் வாழ்வை அழித்துள்ளது. தேவையில்லாமல் அவர்களை அதிக சுமை கொண்டவர்களாக ஆக்கியுள்ளது. அது காரணமேயில்லாமல் அளவுக்கதிகமான பொறாமையையும், பிடிப்பையும், ஆளுமையையும், நச்சரித்தலையும், சண்டையிடுதலையும், குறை கூறுதலையும், உருவாக்கியுள்ளது.

காமம் உடலைச் சார்ந்த ஒரு சாதாரண விஷயம், அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்ககூடாது. அதன் ஒரே முக்கியத்துவம் அந்த சக்தியினை உயர்ந்த தளங்களுக்கு மாற்றமுடியும் என்பதே. அது மேலும் மேலும் ஆன்மீகமாக மாறமுடியும். அதை மேலும் மேலும் ஆன்மீகமாக மாற்றும் வழி அதன் இறுக்கத்தை குறைத்து தளர்த்துவதே.

டாக்டர் பைபர்க்கு வந்திருக்கும் நோயாளியுடன் என்ன செய்வது என தெரியவில்லை. அந்த பெண்ணை அவர் எல்லா பரிசோதனையும் செய்துவிட்டார் ஆனால் அவரது பரிசோதனையின்
முடிவுகள் ஓரு முடிவுக்கு வரமுடியாமல் இருந்தன. முடிவில் அவர்
“ பிரச்சனை என்ன என எனக்கு தெளிவாக தெரியவில்லை” என
ஒப்புகொண்டார்.

“உனக்கு சளி பிடித்திருக்கிறது அல்லது நீ கர்ப்பமாக இருக்கிறாய்”
என அவர் கூறினார்.

அதற்கு அவள்,
“நான் கர்ப்பமாகத்தான் இருக்கவேண்டும், எனக்கு சளியை
கொடுத்திருக்ககூடிய அளவு நெருக்கமாக யாரையும் எனக்கு
தெரியாது” என கூறினாள்.

இதுதான் எதிர்காலம்.
மூலம் : : AH THIS! – CHAPTER # 8

உறங்கும் மனிதன் - ஓஷோவின் கதை - 3

நான் மிகவும் அழகான யூத கதையைப் பற்றி கேள்விபட்டிருக்கிறேன்
அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது – அது ஒரு மனிதனைப் பற்றிய கதை.

அவன் எப்போதும் தூக்க கலக்கத்தில் இருந்தான். எல்லா இடங்களிலும் எப்போதும் தூங்குவதற்கு தயாராக இருந்தான். பெரிய பொது கூட்டங்களிலும், எல்லா இசை நிகழ்ச்சிகளிலும், எல்லா முக்கிய ஆலோசனை கூட்டங்களிலும், அவன் அமர்ந்து தூங்கிகொண்டிருப்பதை பார்க்கமுடியும்.

உனக்கு கண்டிப்பாக அந்த மனிதனை தெரிந்திருக்கும் ஏனெனில் நீதான் அது. நீ அந்த மனிதனை பலமுறை கடந்திருப்பாய், ஏனெனில் அவனை நீ எப்படி ஒதுக்க முடியும்? -- அது நீ.

நினைத்து பார்க்ககூடிய நினைத்து பார்க்க முடியாத அனைத்து நிலைகளிலும் அவன் தூங்கினான். அவன் தனது முழங்கையை காற்றில் மடித்து தனது கைகளை தனது தலைக்கு பின்னால் வைத்துக்கொண்டு தூங்கினான். அவன் நின்றுகொண்டு, விழாமல் இருப்பதற்காக சாய்ந்துகொண்டு தூங்கினான். அவன் திரை அரங்கத்திலும், தெருக்களிலும், மசூதிகளிலும் தூங்கினான். அவன் எங்கே சென்றாலும் அவனுடைய கண்கள் தூக்க மயக்கத்திலேயே இருக்கும்.

அவன் இந்துவாக இருந்திருந்தால் அவன் தலைகீழாக நின்றுகொண்டு
சிரசாசனத்தில் கூட தூங்கியிருப்பான். நான் இந்துக்கள் அவ்வாறு தூங்குவதை பார்த்திருக்கிறேன். பல யோகிகள் தலைகீழாக நின்றுகொண்டு தூங்குவதில் திறமைசாலிகள். அது கடினம், கஷ்டமான காரியம், அதற்கு மிக பயிற்சி தேவை – ஆனால் அது நடக்கிறது.

அவன் ஏற்கனவே ஏழு பெரிய அக்னிகளை தூங்கி கடந்துவிட்டதாக பக்கத்து வீட்டுகாரர்கள் கூறுவார்கள், ஒருமுறை ஒரு பெரிய தீ விபத்தில் அவனை படுக்கையில் இருந்து தூக்கி பக்கத்து சந்தில் வைத்துவிட்டனர், அவன் இன்னமும் தூங்கிகொண்டிருந்தான். ரோந்து வந்தவர்கள் அவனை கூட்டிசெல்லும் வரை அவன் சில மணிநேரங்கள் அந்த சந்தில் தூங்கிகொண்டிருந்தான்.

அவன் கல்யாணத்தில் மந்திரம் சொல்லும் போது பாதியில் தூங்கிவிட்டான் அவனுடைய தலையில் பலமணிநேரம் அடித்து அவனை எழுப்பினார்கள். அவன் மெதுவாக அடுத்த வார்த்தையை சொல்லிவிட்டு திரும்பவும் தூங்கிவிட்டான்.

நீ தாலி கட்டியதை நினைத்துப் பார். உன்னுடைய தேன் நிலவை நினைத்துப் பார். உன்னுடைய கல்யாணத்தை நினைத்துப் பார். எப்போதாவது விழித்துகொண்டுள்ளாயா? நீ எப்போதாவது தூங்ககூடிய வாய்ப்பை தவறவிட்டுள்ளாயா? நீ எப்போதும் தூங்கிகொண்டேயிருக்கிறாய்!

நம்முடைய கதாநாயகனை பற்றி சொல்லபோகும் கதையை நீ நம்புவாய் என்பதற்காகவே இவ்வளவும் சொல்கிறேன்.

ஒருமுறை, அவன் தூங்கிவிட்டான், அவன் தூங்கினான், தூங்கினான், தூங்கிகொண்டேயிருந்தான், ஆனால் தூக்கத்தில் வெளியே தெருக்களில் இடிஇடிப்பது போல சத்தம் கேட்பதாக பட்டது, அவனுடைய படுக்கையும் லேசாக ஆடியது, எனவே அவன் அவனுடைய தூக்கத்தில் வெளியே மழை பெய்கிறது என நினைத்துக்கொண்டான், அதன் காரணமாக அவனுடைய தூக்கம் இன்னும் இனிமையானதாக மாறியது. அவன் போர்வையிலும், அதனுடைய இதமான சூட்டிலும் தன்னை சுருட்டிக்கொண்டான்.

தூக்கத்தில் எத்தனை முறை விஷயங்களை எப்படியெல்லாம் அர்த்தபடுத்தியுள்ளாய் என நினைவு இருக்கிறதா? சில சமயங்களில் நீ அலாரம் வைத்திருப்பாய், அது சத்தம் போடும்போது நீ சர்ச்சில் இருப்பதாகவும் அங்கு மணிகள் சத்தமிடுவதாகவும் கனவு காணத் தொடங்குவாய். அலாரத்தை ஒதுக்குவதற்கான, அலாரம் உண்டாக்கும் தொந்திரவை ஒதுக்குவதற்கான மனதின் ஒரு சாதுரியம்.

அவன் எழுந்தபோது அவன் ஒரு ஆச்சரியகரமான சூனியத்தை கண்டான், அவனுடைய மனைவி இல்லை, அவனுடைய படுக்கை இல்லை, அவனுடைய போர்வை இல்லை. அவன் ஜன்னல் வழியாக பார்க்க விரும்பினான், ஆனால் பார்ப்பதற்கு அங்கு ஜன்னல் இல்லை. அவன் மூன்று மாடிகள் கீழே ஓடி உதவி என கத்த விரும்பினான் ஆனால் ஓடுவதற்கு படிகளும் இல்லை கத்துவதற்கு காற்றும் இல்லை. அவன் வெறுமனே வெளியே செல்ல விரும்பியபோது, வெளியே என்று ஏதுமில்லை என்பதை அவன் கண்டான். அனைத்தும் காணாமல் போய்விட்டது

சிறிது நேரம் என்ன நடந்துள்ளது என்பதை கிரகிக்கமுடியாமல் குழப்பத்தில் அங்கேயே நின்றான். ஆனால் பிறகு அவனுக்கு அவனே நினைத்துக்கொண்டான், நான் தூங்கபோகிறேன். ஆனால் அப்படித் தூங்குவதற்கு இனி எந்த பூமியும் இல்லை என்பதை அவன் கண்டான்.பிறகுதான் அவன் இரண்டு விரல்களை நெற்றியில்
வைத்துக்கொண்டு யோசிக்க தொடங்கினான். உலகத்தின் முடிவு வரை தூங்கிவிட்டேன் என்பது தெளிவாகிறது. இது, “நான் என்ன செய்திருக்கிறேன் பார்!” என்று கர்வப்பட்டுக்கொள்ளப்படவேண்டிய ஒன்றுதான்.

ஆனாலும் அவன் சோகத்தில் ஆழ்ந்தான். இனி உலகம் இல்லை, அவன், உலகமில்லாமல் நான் என்ன செய்வேன், நான் எங்கு வேலைக்கு செல்வேன், நான் எவ்வாறு வாழ்வை மேற்கொள்வேன், முக்கியமாக இப்போது தினசரி செலவினங்கள் மிக அதிகமாகிவிட்டன, ஒரு டஜன் முட்டை விலை இருபது டாலராகிவிட்டது. அவை புதியனவா என்பது யாருக்கும் தெரியாது, அது தவிர கேஸ் கம்பெனி எனக்கு தர வேண்டிய ஐந்து டாலர்கள் என்னவாவது? என்னுடைய மனைவி எங்கே சென்றிருக்கிறாள்? அவளும் இந்த உலகத்தோடு நான் பாக்கெட்டில் வைத்திருந்த முப்பது டாலர் பணத்தோடு மறைந்திருக்ககூடிய வாய்ப்பு உண்டா? அவள் மறைந்துபோகக்கூடிய குணமுடையவள் அல்ல, என்று அவனே அவனுக்குள் நினைத்துக்கொண்டான்.

திடீரென உலகம் மறைந்துவிட்டால் நீயும் இவ்வாறே நினைப்பாய். உனக்கு வேறெதுவும் நினைக்கத் தெரியாது. நீ முட்டையின் விலையைப் பற்றியும், அலுவலகத்தை பற்றியும், மனைவி மற்றும் பணம் குறித்தும் நினைத்துக்கொள்வாய். வேறெதைபற்றியும் சிந்திக்க உனக்குத் தெரியாது. முழு உலகமும் மறைந்துவிட்டது – ஆனால் நீ உன்னுடைய சிந்தனையில் இயந்திரத்தனமாகிவிட்டாய்.

நான் தூங்க நினைத்தால் என்ன செய்வது? உலகம் இல்லாவிட்டால் நான் எதில் படுப்பேன்? என்னுடைய முதுகு வலித்தால்?, கடையில் இருக்கும் வேலைகளை யார் முடிப்பது? எனக்கு மால்ட் வேண்டுமென்றால் எங்கு கிடைக்கும்?. ஒரு மனிதன் தூங்கும்போது உலகம் அவன் தலைக்கடியில் இருந்தது ஆனால் எழும்போது உலகம் இல்லை என்பதை போல எங்காவது பார்த்திருக்கிறீர்களா? என்று அவன் நினைத்துக்கொண்டான்.

இது ஒருநாள் இல்லை ஒருநாள் நடக்கப்போகிறது – சாகும்போது ஒவ்வொரு மனிதனுக்கும் இதுதான் நடக்கிறது. திடீரென முழு உலகமும் மறைந்துவிடுகிறது. தீடீரென அவன் இந்த உலகத்தின் பகுதியல்ல. திடீரென அவன் இன்னொரு பரிமாணத்தில் இருக்கிறான். இது இறக்கும் எல்லோருக்கும் நடக்கிறது, ஏனெனில் நீ அறிந்தவை எல்லாம் மேலோட்டமானவையே. நீ இறக்கும் பொழுது, திடீரென உனது மேல்தளம் மறைந்துவிடுகிறது – நீ உனது மையத்தை நோக்கி தூக்கி எறியப்படுகிறாய். உனக்கு அந்த மொழி தெரியாது. உனக்கு மையத்தை குறித்து எதுவும் தெரியாது. அது சூனியத்தை போல, வெறுமையாக காட்சியளிக்கிறது. வெற்றிடமாக, ஏதுமின்றி இருப்பது போல தெரிகிறது.

நமது கதாநாயகன் உள்ளாடையுடன் நின்று என்ன செய்வது என யோசித்துகொண்டிருந்தபொழுது, அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. போனால் போகட்டும், எந்த உலகமும் இல்லை, அது யாருக்கு வேண்டும்?
மறைந்தது மறைந்துவிட்டது – நான் திரைப்படத்துக்கு சென்று நேரத்தை கழிக்கிறேன். ஆனால் அவன் ஆச்சரியபடும்படி உலகத்தோடு திரையரங்குகளும் மறைந்துவிட்டன என்பதைக் கண்டான்.

மிகவும் குழப்பத்தை உண்டாக்கிக் கொண்டுவிட்டேன், என நினைத்துக்கொண்டே நமது கதாநாயகன் மீசையை தடவத் தொடங்கினான். தூங்கியதன் மூலம் மிகப்பெரிய குழப்பத்தை உண்டாக்கிவிட்டேன் நான் ஆழ்ந்து தூங்காமல் இருந்திருந்தால் எல்லாவற்றோடும் நானும் மறைந்திருப்பேன் என அவனை அவனே திட்டிக்கொண்டான். அப்படி பார்த்தால் நான் அதிர்ஷ்டம் இல்லாதவன், எனக்கு மால்ட் எங்கு கிடைக்கும் காலையில் அதை குடிக்க எனக்கு பிடிக்கும். என்னுடைய மனைவி? அவள் யாரோடு மறைந்தாள் என யாருக்கு தெரியும்? அது மேல்தளத்தில் இருக்கும் அந்த துணி தேய்ப்பவனாக இருந்தால், நான் அவளை கொன்றுவிடுவேன். கடவுளே எனக்கு உதவி செய்.

எவ்வளவு நேரம் கடந்துவிட்டது என்று யாருக்கு தெரியும்?
இந்த வார்த்தைகளை கூறியபடியே நமது கதாநாயகன் அவனுடைய கைகடிகாரத்தை பார்க்க விரும்பினான் ஆனால் அது எங்கே என்று தெரியவில்லை. அவன் இரு கைகளாலும் முடிவில்லாத வெற்றிடத்தில் வலது இடது பைகள் இருக்குமிடங்களில் தேடினான் ஆனால் தொடுவதற்கு எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

நான் இப்போதுதான் கடிகாரத்திற்கு இரண்டு டாலர்கள் கொடுத்துள்ளேன் இதோ அது ஏற்கனவே மறைந்துவிட்டது, என அவனுக்கு அவனே நினைத்துக்கொண்டான். சரி உலகம் பாதாளத்திற்கு போயிருந்தாலும், அது பாதாளத்திற்கு போய்விட்டது. அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. அது எனது உலகமல்ல. ஆனால் கடிகாரம்! ஆனால் என்னுடைய கடிகாரம் ஏன் பாதாளம் போகவேண்டும்? புதிய கடிகாரம். இரண்டு டாலர்கள். அது காயப்படாதது. மால்ட் எனக்கு எங்கு கிடைக்கும் காலையில் மால்ட்டை விட சிறந்தது வேறு ஒன்றுமில்லை. யாருக்கு தெரியும் ஒருவேளை என்னுடைய மனைவி.... மோசமான அழிவின் போது தூங்கியிருக்கிறேன், எனக்கு மோசமானதுதான் நடக்கும். உதவி, உதவி, உ-த-வி! என்னுடைய மூளை எங்கே? முன்பே என் மூளை எங்கு போயிற்று? உலகத்தையும் என்னுடைய மனைவியையும், அவள் இளமையாக இருக்கும் போதே பார்த்துக்கொள்ளவில்லை, நான் ஏன் அவைகளை மறைந்து போக விட்டுவிட்டேன்?

நமது கதாநாயகன் சூனியத்தில் தலையை முட்டிக்கொள்ள தொடங்கினான், ஆனால் சூனியம் மிகவும் லேசாக இருந்த காரணத்தால் அது அவனை காயப்படுத்தவில்லை, அதனால் அவன் இக்கதையை சொல்வதற்கு உயிரோடு இருந்தான்.

இது மனித மனத்தின் கதை. நீ உன்னைச் சுற்றி கற்பனை உலகத்தை உருவாக்கியுள்ளாய். நீ சாகும்போது உன்னுடன் வரமுடியாத பொருட்கள் மீது பற்று வைத்துக்கொண்டே செல்கிறாய். உன்னிடம் இருந்து எடுத்துகொள்ளபடக்கூடிய பொருட்களோடு உன்னை நீ அடையாளபடுத்திக் கொள்கிறாய்.
Source : THE SUDDEN CLASH OF THUNDER #3

No comments: