Friday, October 22, 2010

மலர் 2 இணைய இதழ் 12 11 ஜூலை 2010

ஓஷோ சாஸ்வதம் செய்தி

அவினாசி கந்தம்பாளையம் சாலையில் உள்ள ஓஷோ சாஸ்வதம் NH 47 – ல் செல்பவர் பலரையும் எட்டிப் பார்க்க வைக்கிறது.

தினசரி டைனமிக் யார்யாரோ எங்கிருந்தோ வந்து செய்து தூய்மை அடைந்து சக்தி கொடுக்கின்றனர். சனி, ஞாயிறு பலவகை தியானங்கள் நடைபெறுகின்றன.

மற்ற தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும். தங்கி தியானம் செய்யலாம்.


தலையங்கம்

அன்பு நண்பர்களே,

தன்னுணர்வு, விழிப்புணர்வு மட்டும்தான் உண்மை என்றால் உறவு, நட்பு, காதல், அழகு, கலை, கவிதை, சங்கீதம் இப்படி வாழ்க்கையில் உள்ள எல்லாமே பொய்யா, ஞானமடைதல் மட்டுமே உண்மை என்றால் மற்றவையெல்லாம் பயனற்றதா, மாறாத சத்தியமே உண்மை என்றால் மாறும் இயல்புடையனவெல்லாம் போலியா, வேஷமா, வீணா, வாழும் வாழ்க்கையே அர்த்தமற்றதா, விரயமா, மடத்தனமா, இவையெல்லாம் தவறு என்று நீக்கிவிட்டால் வெறுமைதானே மிச்சமிருக்கிறது. வளர்ச்சி எதுவும் வருவதில்லையே, சலிப்புதானே வருகிறது, என்று ஒரு நண்பர் அடுக்கடுக்காய் பொங்கினார்.

இப்போது இதில் இரண்டு அடிப்படை விஷயங்கள் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஒன்று, ஒருவர் தியானம் செய்ய ஆரம்பித்தவுடன் தன்னிடம், தன்னுணர்வில் ஒரு வித்தியாசம் பிறக்கிறது. வேஷமும் வியாபாரமுமாய், போலித்தனமும் சுயநலமுமாய், பொறாமையும் பேராசையுமாய், தான் இதுவரை இருந்து வந்திருப்பதை உணர்கிறார். அதோடு தன்னைச் சுற்றியுள்ள சமூகமும் இப்படித்தான் இருக்கிறது என்பது தெரிகிறது. இதனால் அவர் ஒதுங்க ஆரம்பிக்கிறார். அப்போது அவருள் தனிமையும் வெறுமையும் சலிப்பும் சோம்பலும் ஏற்படுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இது மனதின் கடைசி ஆயுதம், கடைசி போராட்டம். மனம் தீனி கிடைக்காமல் தவிக்கும் தவிப்பு இது. இந்த சமயத்தில் திரும்பவும் சமூகத்தில் அமிழ்ந்து விடுபவரே பெரும்பாலராய் உள்ளனர். இன்னும் சிலர் தான் எதையோ அடைந்துவிட்டதைப் போல உபதேசம் செய்ய ஆரம்பித்து அதன் வழியாய் சமூகத்தில் சேர்ந்து கொள்கின்றனர். இவை இரண்டுமே சரியல்ல.

இந்த நிலைக்கு வந்த ஒருவர் மனதிலிருந்து இதயத்திற்குள் விழ வேண்டும். இதயம் திறந்து வாழ ஆரம்பிக்க வேண்டும். இதனால் வெளியே என்ன இழப்பு ஏற்படினும் உள்ளே மலர்ச்சி ஏற்படும். உன்னைச் சுற்றி மணம் பரவும்.

அதாவது இந்த வெறுமை, மனதின் வெறுமை. மனம் பயித்தியமாய் அலைந்து கொண்டிருந்தது இல்லாத வெறுமை. இதை உணர்ந்து இந்த வெறுமையிலிருந்து திரும்பவும் பயித்தியமாய் வெறி பிடித்து அலையப் பார்க்காமல், மாறாக இதயம் திறக்கும் பாசிடிவ் பக்கம் வர வேண்டும். தன்னை விரிவடைய அனுமதிக்க வேண்டும். மண்டை ஓட்டினுள் மனதில் ஒளிந்துகொண்டு நான் என்ற ஈகோவில் வாழ்வதை விட்டுவிட்டு இதயம் திறக்கும் வாழ்வுப் பாதைக்கு மாறவேண்டும்.

பயனின்றி மகிழச்சிக்காக மட்டும் ஏதாவது செய்யுங்கள். விளையாடுங்கள் வெற்றி என்ற குறிக்கோள் இருப்பது விளையாட்டு அல்ல. குழந்தையை கொஞ்சுங்கள். மலர்களை பார்த்து ஆச்சரியப் படுங்கள். மேகங்களின் பயணத்தை பார்த்து கவனியுங்கள். வெண்ணிலாவின் குளிர்ச்சியை அனுபவியுங்கள். துளித்துளியாய் சுவைத்து மணத்தை நுகர்ந்து டீ குடியுங்கள். கலர்களுடன் கலந்து வண்ணம் தீட்டி மகிழுங்கள். இதயம் திறக்கும் இசை, இன்பம் ஏற்படுத்தும் கவிதை, கல்லில் காவியமாயுள்ள சிற்பங்கள் என அனுபவியுங்கள். கடலுக்கும், மலைக்கும், அருவிக்கும் செல்லுங்கள். அழகை அனுபவியுங்கள். அழகு என்பது என்ன? வெளியே நாம் உணரும் ஒரு லயம் திடீரென நமது உள்ளே சிதறிக் கிடக்கும் நம்மை ஒரு லயப்படுத்துகிறது. அப்படி உள்ளே லயப்படுத்துகையில் ஏற்படும் உணர்வுதான் அழகுணர்வு.

அன்பு என்பது என்ன? உள்ளே நாம் நிறைவாக உணர்கையில் நம்மிடமிருந்தே பொங்கி பெருகி வழிந்தோடி சுற்றியுள்ள அனைத்தையும் அணைத்துக் கொள்ளும் சக்தி பெருக்கத்தால் நாம் விரிவடையும் போது எழும் உணர்வே அன்பு.

இப்படி இதயம் திறக்கையில் நாம் பிரபஞ்சத்துளியாய் மாறிவிடும் அனுபவம் கிடைக்கிறது. இதுவே ஆனந்தம்.

இப்படி இதயம் திறக்க ஏதாவது ஒன்றைச் செய்தால் மட்டுமே உனது வெறுமையும், தனிமையும், சலிப்பும், சோம்பலும் போய் வாழ்வின் பாசிடிவ் பக்கத்தை உணர முடியும், வளர முடியும். ஏன் விழிப்புணர்வில் நின்று வெறுமையைப் பார்த்தால் கூட வெறுமையை விட்டு நாம் விழிப்புணர்வுதான் என்ற நிறைவில் நுழைய முடியும்.

விழிப்புணர்வும், சாட்சிபாவமும், நிசப்தமும், அழகும், படைப்பும், சத்தியமும், நிறைவும், கருணையும், ஆனந்த நடனமும், பிரபஞ்ச இருப்பின் குணங்கள். இதில் ஏதாவது ஒன்றைப் பற்றிக் கொண்டு வெறுமையிலிருந்து வெளிவந்தால் மீண்டும் மனம் துளிர்க்காது. மாறாக பிரபஞ்ச இருப்பில் கரைந்துவிடும் ஞானம் பிறக்கும்.

இதிலும் கவனமாக இருக்கவேண்டிய ஒரு விஷயம் உள்ளது. ஒரு கண தரிசனம் கிடைத்தவுடன் நமக்கு ஆச்சரியமும், வியப்பும், ஆனந்தமும் பொங்கும். அங்கு நாம் விழிப்புணர்வை விட்டு விடுவோம். மனம் இயங்க ஆரம்பிக்கும். நமக்கு தியான அனுபவம் கிடைத்து விட்டது, அது இப்படி இருக்கிறது, அதை நாம் அடைய முடியும், அதை அடைந்துவிட்டேன் என்றெல்லாம் சொல்லி மேலும் ஆழமாகச் செல்ல முடியாமல் மனம் நம்மை தடுத்துவிடும்.

தியானமும் எனக்குத் தெரியும் என்று அதைக் கடந்த அனுபவத்தைக் கூட நுட்பமான ஈகோவாக மாற்றிக் கொண்டுவிடும். அப்படி நமக்கு ஆகாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதன் அறிகுறி என்னவென்றால் நாம் முயற்சிப்பதை நிறுத்திவிடுவோம், சந்தோஷம் அதிகமாவதற்கு பதிலாக அன்பு அதிகமாவதற்கு பதிலாக மற்றவர்களிடம் அதுவும் காதலியிடம், மகன், மகள், மனைவி என்று தன்னை வெளிப்படுத்த உரிமை உள்ளவனாக நினைக்கும் இடங்களிலெல்லாம் கோபம் அதிகம் வரும். அவர்களை கண்டிக்க ஆரம்பிப்போம். இது தவறான பாதையில் செல்வதன் அறிகுறி.

அன்பும், தியானமும் ஒன்றாய் வளர்ந்தால்தான் அது சரியான வழி. விழிப்புணர்வும், அழகும், கருணையும், நிசப்தமும், படைப்பும் என பிரபஞ்ச இருப்பின் குணங்கள்தான் நம்மிடமிருந்து வெளிப்பட ஆரம்பிக்க வேண்டும். இது சரியான வழி.

மேலும் தியானிப்பவர்கள் நாபிக்கமலத்தில் வேர் ஊன்றி அதை இயங்கச் செய்ய வேண்டும். நாபிச்சக்கரம்தான் மனிதனின் இருப்பு நிலை. அதற்குக் கீழே உள்ளவை விலங்குகளுக்கு உள்ளவைதான். நாபிச்சக்கரத்தில் இருந்து நாம் வளர வேண்டும். இப்போது எல்லோரும் நமது இருப்பு நிலையை விட்டுவிட்டு தலையில் நமது சிறிய தன்னுணர்வால் ஏற்படுத்தப்படும் மனக்கூட்டுக்குள் வாழ்கிறோம். இது புருவமத்தி சக்கரத்தில் வாழ்வது போல தோன்றலாம். ஆனால் இது உண்மையல்ல. இங்குள்ள சக்தி மிகக் குறைந்தது. இதை அமைதிப்படுத்தும் வழிமுறைகள் பயனற்றவை. ஏனெனில் அவை நிரந்தர நிலைமாற்றத்தை, குணமாற்றத்தை ஏற்படுத்தாது. இருப்புநிலையிலிருந்து முளை விட்டு, கிளைவிட்டு, அதன் வேராய் உள்ள பாலுணர்வு சக்கரம், ஹரா சக்கரத்திலிருந்து சக்தியை எடுத்து மாற்றி மலர்ந்து இருதய சக்கரமாய் அன்பிலும், தொண்டை சக்கரமாய் வெளிப்படுத்தலிலும் புருவமத்தி சக்கரமாய் தெளிவும் அடைந்து, சகஸ்ர சக்கரத்தில் பிரபஞ்ச இருப்புடன் சங்கமிக்கும் வாய்ப்பு மனிதனுக்கு இருக்கிறது.

நாம் பொய்யான வாழ்க்கை வாழ்வதால் இருப்பு நிலைக்கு செல்வதே முதல் வேலை ஆகிறது. அதற்காகத்தான் ஓஷோ உணர்ச்சிகளை வெளியே வீசும் கேத்தாரிஸிஸ் முறையை அறிமுகப்படுத்தினார். நாம் தலை கனத்தவர்களாய், மண்டை வீங்கியவர்களாய் இருக்கிறோம். வேரிலிருந்து விளைந்த மரமாய் இல்லாமல் பிளாஸ்டிக் மரமாய் பெரிதாகப் பிரியப்படுகிறோம்.

ஆனால் இந்த நிலையிலும் நமக்கு உயிர்தொடர்பும், துடிப்பும் இருப்பதைப் பயன்படுத்தி வெறுமையைக் கடந்து பிரபஞ்ச இருப்பைத் தொடும் சுவை பெற முடியும். அதற்குத்தான் ஓஷோ ஆயிரக்கணக்கான தியானப் பயிற்சி முறைகளைக் கொடுத்திருக்கிறார்.

தியான பயிற்சி முறைகள் தியானமல்ல. அது நிகழ உதவும் சூழலை ஏற்படுத்தும் முயற்சியே. மேலும் முதல் அனுபவத்திற்க்குப் பிறகு நமது வாழ்க்கையை மாற்றிக் கொள்ள நாம் தயாராகவேண்டும். தலையிலிருந்து வாழாமல் இருப்புநிலையிலிருந்து வளரும் வாழ்க்கைக்கு மாற வேண்டும். அப்போதுதான் தியானம் நிகழும்.

நமது வாழ்வைத் தொடாமல் வெறும் தியானப் பயிற்சி முறைகளைப் பின்பற்றுவது ஒரு பழக்கமாக, நல்ல பழக்கமாக வேண்டுமானால் உதவலாம். அப்படி ஆகும்போது அதுவும் மனதிற்கு உதவும் பழக்கமாகவே ஆகிவிடுகிறது. இருந்தாலும் நல்ல பழக்கம் என்பதால் அது உடல் ஆரோக்கியத்தையும், மனத்திற்கு வெறிபிடித்து விடாது சமநிலையையும் கொடுக்கும். ஆனால் இதுவல்ல ஓஷோவின் எதிர்பார்ப்பு.

புதிய மனிதன். இருப்பு நிலையிலிருந்து வளர்ந்து, மலர்ந்து, மணம் பரப்பி, இந்த உடலே புத்தர், இந்த பூமியே சொர்க்கம் என்று வாழும், ஞானத்தை நோக்கிச் செல்லும், ஆரோக்கிய மனிதனே ஓஷோவின் செய்தி, செயல், வாழ்வு, விளைவு, இயக்கம், எதிர்பார்ப்பு.

அதை நனவாக்கும் முயற்சியில் ஒருவருக்கொருவர் உதவியாய் வளர்வோம். உண்மையை உணர்வோம். வாருங்கள்.

அன்பு,
சித்.
கவிதை

பரவச இரகசியம்

நண்பா!

அனைவரிடமும் அனைத்தும் உள்ளது,
அனைத்தும் உள்ளது உன்னிடமும்!
ஆம்.....நீ அன்போடு இருக்கையில் – இல்லை இல்லை,
நீ அன்பாகவே இருக்கையில் – இல்லை இல்லை,
நீ இல்லாமல் அன்பு மட்டுமேயாக இருக்கையில்!
இதுதான் பரவசத்தின் இரகசியம்,
பரம இரகசியம்!!

கட்டுப்பாட்டை இழந்துவிடுவது – அன்பில்,
திசைதெரியாமல் ஆகிவிடுவது – அன்பில்,
தன்னையே மறந்துவிடுவது – அன்பில்,
முழுப்பயித்தியம் பிடித்துவிடுவது – அன்பில்,
இதுதான் பரமசுக இரகசியம்!!!
இதுதான் வாழ்வின் அர்த்தமுள்ள சமயம்,
இதுதான் வாழ்வில் மிகத் தெளிந்த தருணம்,
இதுதான் வாழ்வில் சாகாவரம் பெறும் இரசவாதம்,
இதுதான் வாழ்வில் கடவுளான கணம்!!!

ஆனால்....அன்பில் அழிந்துவிட்டதை
எப்படி அறிவது?
அகங்காரத்திலோ, அதீதக் கற்பனையிலோ,
நீ அமிழவில்லை என்பதை எப்படி உறுதிசெய்வது?

நடப்பதற்கெல்லாம் நன்றியுணர்வு பொங்குகிறதா,
அடுத்தவர்களையும் உன்னையும் கணக்குப்
போடுவதை விட்டுவிட்டாயா
சக்தி கருணையாய் பொங்குகிறதா,
என்றுமழியாத அமைதியை எங்கும் உணர்கிறாயா,
நடனமாடுபவன் தொலைந்து நடனமாடுகிறாயா,
கவனிப்பவன் காணாமல்போய் கவனிப்பு
மட்டுமாகிவிட்டாயா
அப்போது அன்பாக நீ மாறி அன்பு மட்டுமே
இருப்பது நிஜம்!!!

அன்பு நண்பா!
இது தூரமோ கடினமோ இல்லை,
இது எது இருக்கிறதோ அதுதான்,
இது வாழ்க்கை!
சிந்திப்பதை நிறுத்திவிட்டு, ஒருகணம் சிலிர்த்துக் கொண்டு,
கண் முன்னால் இருப்பதை அன்புசெய்,
நாளைக் கவலையை விட்டுவிட்டு நடப்பை அனுபவி.
இதை முழுமையோடு செய்தால் அதுதான்!
மறுபடியும் இது கஷ்டம் என்று நினைக்காதே,
முழுமை கஷ்டமல்ல,
வெகு சுலபம்!
இதயத்திலிருந்து செயல்படு, அவ்வளவுதான்,
தலையிலிருந்து, தனிமையிலிருந்து விடுபடுவாய்!
அன்பு மடை திறந்து பொங்கும்,
அதன்பின் எல்லாம் அதுவே நடத்தும்,
நீ அழகாகிப் போவாய்!
அற்புதமாகிப் போவாய்!!

எனதருமை நண்பனே!
முயற்சி செய், முயற்சி செய்,
முயற்சியை நிறுத்தாதே,
எவ்வளவு முறை தோற்கிறாய்,
எவ்வளவுமுறை விழுகிறாய் என்பது முக்கியமல்ல,
ஒருமுறை அது கிடைத்துவிட்டால்,
அதுதான் முக்கியம்!
பிறகு அதை இழக்கமுடியாது,
அதன்முன், நீ இழந்ததெல்லாம் மதிப்பற்றது.
இப்போது நீ மீண்டும் பிறக்கிறாய்!
வாழ்வாக, அன்பாக, சிரிப்பாக!!

ஓஷோ வீடியோ

1. Osho : We use all available Media

2. Osho : This is not a Teaching

3. Osho : Meditation is not part of your Biology – but your Freedomமூன்று தியான யுக்திகள்

தியான யுக்தி - 1

ஓஷோவின் விளக்கம் - நாகரீகமற்றவனாக மாறு

கேள்வி - நான் சோகமாக உணர்கிறேன். ஆனால் என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை.

பதில் – இந்த கேள்விக்கு ஓஷோ பதிலளிக்கையில் அவர் வாழ்க்கையை நம்பவில்லை என்றும் தன்னைத்தானே பிடித்து வைத்துக் கொள்கிறார் என்றும் கூறுகிறார். எங்கோ ஆழத்தில் அவர் எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வில்லையென்றால் விஷயங்கள் தவறாக போய்விடும் என்பது போன்றும், எல்லாவற்றையும் அவர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் விஷயங்கள் தவறாகாது என்பது போன்றும் அவர் வாழ்வின் மீது அவநம்பிக்கை கொண்டுள்ள்ளார். அதனால் அவர் எப்போதும் திட்டமிட்டு செயல்களை செய்து கொண்டிருக்கிறார். அவரது சிறுவயது கட்டுதிட்டம் இந்த வகைபட்டதாக இருக்கலாம். இது மிகவும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஏனெனில் ஒரு மனிதன் செயல்களை கட்டுப்படுத்த ஆரம்பித்தால், அவன் வாழ்க்கை மிக குறுகியதாகி விடும்.

வாழ்க்கை மிகப் பெரியது, அதை கையாள்வது என்பது சாத்தியமில்லாதது. அதை நீ கையாள விரும்பினால் அதை மிகச் சிறியதாக செய்தால் மட்டுமே முடியும். பின் அதை நீ கையாளலாம். இல்லாவிடில் வாழ்க்கை மிகவும் காட்டுத்தனமானது. அது இந்த வானத்தைப் போல, இந்த மரங்களைப்போல, இந்த தென்றலைப் போல, இந்த மழையைப்போல, இந்த மேகத்தைப்போல முரட்டுத்தனமானது. அது காட்டுத்தனமானது. அதைக் கையாள விரும்பினால் நீ உன்னுடைய முரட்டுத்தனமான பாகத்தை முழுமையாக வெட்டிவிட வேண்டும். நீ அதைக் கண்டு பயப்படுகிறாய். – அதனால்தான் உன்னால் முழுமையாக வெளிப்படையாக இருக்க முடியவில்லை. அதுதான் உனக்கு சோகத்தை கொடுக்கிறது.

சோகம் என்பது மகிழ்ச்சியாக மலர வேண்டிய அதே சக்திதான். நீ உன்னுடைய சக்தி மகிழ்ச்சியாக மலருவதை காண முடியவில்லையென்றால் நீ சோகமாகிறாய். யாராவது மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்தால் உடனே நீ சோகமாகிறாய். இது ஏன் எனக்கு நிகழவில்லை, அது உனக்கும் நிகழும். அதில் எந்த பிரச்னையும் இல்லை. நீ உன்னுடைய கடந்த காலத்தை இழந்துவிடவேண்டும். அது நிகழ நீ உன்னுடைய பாதையிலிருந்து ஒரு சிறிதளவு விலகி வர வேண்டும். நீ வெளிப்படையாக இருக்க ஒரு சிறிதளவு முயற்சிகள் செய்ய வேண்டும். அது ஆரம்பத்தில் வலி கொடுக்க கூடியதாகத்தான் இருக்கும். ஆரம்பத்தில் அது வலிக்கும்.


யுக்தி - ஒரு விலங்காக முழுமையாக மாறு.

முதல் படி – நீ ஒரு மனிதன் அல்ல என்பதுபோல நினைத்துக் கொள். நீ விரும்பும் எந்த மிருகத்தையும் நீ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நீ ஒரு பூனையாக விரும்புகிறாயா நல்லது, நீ ஒரு நாயாக விரும்புகிறாயா நல்லது, அல்லது புலி...... ஆணோ, பெண்ணோ,.......... நீ விரும்பும் வண்ணம். நீ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம், ஆனால் பின் அதிலிருந்து மாறக் கூடாது. அந்த மிருகமாகவே மாறி விடு. நாலு காலில் நடந்து அறையின் எல்லா இடங்களுக்கும் செல். அந்த மிருகமாகவே செயல்படு.

பதினைந்து நிமிடங்களுக்கு உன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு இந்த வினோதத்தை அனுபவி. நாயாக இருந்தால் நாய் போலவே குரை. நாய் செய்யும் விஷயங்களை செய்து பார். உண்மையாகவே செய், கட்டுப்படுத்தாதே. ஏனெனில் நாய்களால் கட்டுப்படுத்த முடியாது. ஒரு நாய் என்றால் முழுமையான சுதந்திரம், இந்த கணத்தில் நிகழ்வது என்னவோ அதை செய். இந்த நேரத்தில் மனிதமனத்தின் குணமான கட்டுப்பாட்டை கொண்டு வராதே. உண்மையான ஒரு நாய் போல இரு. பதினைந்து நிமிடங்களுக்கு அந்த அறையை சுற்றி குலைத்து, குதித்து சுற்றி வா. இதை ஏழு நாட்களுக்கு செய், பின் பார். எப்படி உணர்கிறாய் என்று பார்.

இது உனக்கு உதவக்கூடும். உனக்கு மிருக சக்தி தேவைப்படுகிறது. நீ மிகவும் நாகரீகமடைந்துவிட்டாய், அது உனது தூய்மையை கெடுத்துவிட்டது. உன்னை முடமாக்கி விட்டது. மிகுந்த நாகரீகம் முடக்கி விடும். அது சிறிய அளவில் இருந்தால் நல்லது, அதிகமாகி விட்டால் அதுவே ஆபத்தாகிவிடும். மிருக தன்மை பெறக்கூடிய திறமையை ஒருவர் எப்போதும் காப்பாற்றி வைத்திருக்க வேண்டும். உன்னுடைய மிருகம் வெளிப்பட வேண்டும். நான் பார்க்கும் பிரச்னை அதுதான். ஒரு சிறிதளவு காட்டுத்தனமாக இருக்க நீ கற்றுக் கொண்டு விட்டால் உனது பிரச்னைகள் அனைத்தும் மறைந்துவிடும். அதனால் இன்றிலிருந்தே ஆரம்பி – அனுபவித்து செய்.

The Passion for the Impossible

தியான யுக்தி - 2

உனது பயத்தை எதிர்கொள்ளல்

எப்போது – ஒவ்வொரு நாள் இரவும்
காலம் – 40 நிமிடங்கள்

முதல் படி – மிக மோசமானதை கற்பனை செய்து கொள்
உனது அறையில் விளக்குகளை அணைத்துவிட்டு இருட்டில் அமர்ந்து பயப்பட ஆரம்பி. எல்லா விதமான பயங்கரங்களையும் பற்றி சிந்தனை செய். - உன்னுள் பயத்தை ஏற்படுத்தும் எல்லாவற்றையும் –உன்னுடைய கற்பனையின் மூலம் நீ உண்மையாகவே பயப்பட ஆரம்பி. பேய், பிசாசு என எல்லாவற்றையும் பற்றி கற்பனை செய். அவை உன்னை கொல்வது போலவும், கற்பழிக்க முயற்சி செய்வது போலவும், உன்னை மூச்சு திணற செய்வது போலவும் கற்பனை செய். பயத்தினுள் எவ்வளவு ஆழமாக போக முடியுமோ அவ்வளவு ஆழமாக போ. என்ன நிகழ்ந்தாலும் சரி, அதனுள் செல்.

இரண்டாவது படி – பயத்தை ஏற்றுக் கொள்
பகலிலோ, வேறு நேரத்திலோ எப்போது பயம் ஏற்பட்டாலும் அதை ஏற்றுக்கொள். அதை தவிர்க்காதே. நீ கடந்து வர வேண்டிய தவறான ஒன்று என அதை நினைக்காதே. அது இயல்பானது. அதை ஏற்றுக் கொள்வதாலும் இரவில் அதை வெளிப்படுத்துவதாலும் விஷயங்கள் மாற துவங்கும்.


Don’t Bite My Finger, Look Where I Am Pointingதியான யுக்தி - 3

பயத்திலிருந்து அன்புக்கு

நேரம் – 40 – 60 நிமிடங்கள்

முதல் படி – சக்தியை லயப்படுத்துதல்

வசதியாக அமர்ந்து கொள். கை கோர்த்து வலது கை இடது கையின் அடியில் இருக்கும்படி வைத்துக் கொண்டு கைகட்டை விரல்களை இணைத்துக் கொள். இது சக்தியை ஒரு விதத்தில் குறிப்பிட்ட தொடர்பில் வைத்திருக்கும். இடது கை வலது மூளையுடனும் வலது கை இடது மூளையுடனும் இணைந்துள்ளது. இடது மூளை காரண காரியமுடையது, கோழை. வலது மூளை உள்ளுணர்வுடன் சம்பந்தப்பட்டது. ஒரே மனிதன் அறிவார்த்தமானவனாகவும் வீரனாகவும் இருக்க முடியாது. ஒருவனே இரண்டுமாக இருப்பது சாத்தியமில்லை.

இரண்டாவது படி – வாய் மூலம் சுவாசித்தல்

தளர்வாக இரு, கண்களை மூடிக் கொள். உனது கீழ்தாடை தளர்வாக இருக்கட்டும். அப்போதுதான் நீ உனது வாய் மூலமாக சுவாசிக்க முடியும்.
நீ உனது மூக்கின் மூலமாக சுவாசிக்காமல் வாய் மூலமாக சுவாசிக்கும்போது நீ சுவாசிப்பதற்கு ஒரு புதிய வழிமுறையை உண்டாக்குகிறாய். அதனால் இந்த பழைய முறையை மாற்ற முடியும். மேலும் நீ மூக்கின் மூலமாக சுவாசிக்கும்போது நீ தொடர்ந்து உனது மூளையை தூண்டுகிறாய். மூக்கு பிளவுபட்டது. வாய் பிளவுபடாதது.
அதனால் நீ வாய் மூலமாக சுவாசிக்கும்போது உனது மூளையை இயக்கமுடியாது – சுவாசம் நெஞ்சை வந்தடைகிறது.
இது பிளவற்ற, அமைதியான, புதிய விதமான தளர்வை உருவாக்கும். உனது சக்தி ஒரு புது வழியில் வழிந்தோட ஆரம்பிக்கும்.

The Further Shore


காலிக் கோப்பை - ஓஷோவின் கதை 24

நான்சேன் என்பவர் மிகப் பிரபலமான ஜென் ஞானிகளில் ஒருவர். அவரைப் பற்றி பல கதைகள் கூறப் படுகின்றன. அதில் ஒன்று நான் உங்களுக்கு பல முறை கூறியிருக்கிறேன். நான் அதை திரும்பக் கூறுகிறேன். ஏனெனில் இது போன்ற கதைகளை திரும்ப திரும்ப கூறுவதன் மூலம் நீங்கள் அதை நன்கு உள்வாங்கிக் கொள்ள முடியும். அவை உங்களை வளப்படுத்தும். ஒவ்வொருநாளும் நீங்கள் ஊட்டம் பெற வேண்டும். நேற்று காலை நான் உணவு சாப்பிட்டு விட்டேன், அதனால் இப்போது எனக்கு உணவு வேண்டாம் என்று நீங்கள் கூறுவதில்லை. ஒவ்வொரு நாளும் நீங்கள் சாப்பிட்டாக வேண்டும். நேற்று நான் சாப்பிட்டுவிட்டேன். இப்போது ஏன் சாப்பிடவேண்டும் என்று கேட்பதில்லை.

இந்த வித கதைகள் – இவை உங்களை வளப்படுத்தும் கதைகள். இந்தியாவில் இவற்றைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு ஒரு குறிப்பிட்ட வார்த்தை உண்டு. அதை மொழிமாற்றம் செய்ய முடியாது, ஆங்கிலத்தில் “படிப்பது” என்ற ஒரு வார்த்தை உண்டு. இந்தியாவில் இரண்டு விதமான வார்த்தைகள் உண்டு. ஒன்று படிப்பது, மற்றொன்று படித்ததையே திரும்ப திரும்ப படிப்பது. அதன் ஒரு பாகமாகி விடுவது. ஒவ்வொரு நாளும் காலையில் நீ கீதையை படிக்கிறாய். அது படிப்பது அல்ல. ஏனெனில் நீ அதை பலமுறை படித்திருக்கிறாய். இப்போது அது ஒருவிதமான வளப்படுத்துதல். நீ அதை படிக்கவில்லை. நீ அதை ஒவ்வொரு நாளும் உண்கிறாய்.

அது ஒரு சிறந்த அனுபவமாகும். ஏனெனில் ஒவ்வொரு நாளும் நீ வெவ்வேறு விதமான மனநிலையில் வருவதால் பல்வேறு விதமான அர்த்தங்கள் புரிகின்றன. அதே புத்தகம், அதே வார்த்தைகள் ஆனால் ஒவ்வொரு நாளும் புது ஆழத்தை நீ உணர்கிறாய். ஒவ்வொரு நாளும் புதிதான ஏதோ ஒன்றை படிப்பது போன்று நீ உணர்கிறாய். ஏனெனில் கீதை அல்லது அது போன்ற புத்தகங்களில் ஆழமான உண்மை உண்டு. அவற்றை ஒருமுறை படித்தால் மேலோட்டமாக இருக்கும், இரண்டாவது, மூன்றாவது தடவை படிக்க படிக்க ஆழ்ந்து செல்வாய். ஆயிரம் தடவைகள் படித்தபின் அந்த புத்தகங்களை முழுவதுமாக படிப்பது என்பது சாத்தியமில்லாதது என்பதை புரிந்து கொள்வாய். அதிக அளவு கவனமாக, விழிப்புணர்வுடன் இருக்க இருக்க உனது தன்னுணர்வு ஆழமாகும். இதுதான் இதன் பொருள்.

நான் நான்சேனின் கதையை திரும்பவும் கூறுகிறேன். ஒரு பேராசிரியர், தத்துவ பேராசிரியர் அவரைக் காண வந்தார். தத்துவம் ஒரு நோய், அது கேன்சர் போன்றது. அதற்கு மருந்து கிடையாது, அதை நீ வெட்டிதான் எறிய வேண்டும். ஒரு பெரிய அளவிலான அறுவை சிகிச்சைதான் செய்தாகவேண்டும். தத்துவமும் அப்படிப்பட்ட ஒருவிதமான வளர்ச்சியாகும். ஒருமுறை அது உன்னுள் வந்துவிட்டால் அது உன்னுடைய சக்திகளை எடுத்துக் கொண்டு அது அதன் போக்கில் வளரும். அது ஒட்டுண்ணி. நீ பலவீனமடைந்து கொண்டே போவாய், அது மேலும் மேலும் பலமடைந்து கொண்டே போகும். ஒரு வார்த்தை மற்றொரு வார்த்தையை உருவாக்கும். அது முடிவில்லாமல் போய்க் கொண்டே இருக்கும்.

ஒரு தத்துவவாதி நான்சேனை காண வந்தார். நான்சேன் ஒரு சிறிய குன்றின் மேல் வசித்துவந்தார். அவர் மலைஏறி வந்ததால் மிகவும் வியர்த்து களைத்து வந்தார். அவர் நான்சேனின் குடிசைக்குள் நுழைந்த உடனேயே உண்மை என்பது என்ன எனக் கேட்டார்.

நான்சேன், உண்மை கொஞ்ச நேரம் காத்திருக்கலாம், அதற்கு அவசரமில்லை. இப்போது உங்களுக்குத் தேவை ஒரு கோப்பை டீதான். நீங்கள் மிகவும் களைத்திருக்கிறீர்கள் எனக் கூறி விட்டு டீ தயார் செய்ய சென்றார். இதை ஒரு ஜென்குருவிடம் மட்டுமே காண முடியும். இந்தியாவில் சங்கராசாரியா உனக்காக டீ தயார் செய்வது சாத்தியமில்லாதது – உனக்காக, சங்கராசாரியாவா டீ தயார் செய்வதா, நடக்கவே நடக்காது. அல்லது மகாவீரர் உனக்காக டீ தயார் செய்வது........ மடத்தனம். ஆனால் ஒரு ஜென்குருவிடம் இது நிகழக் கூடும். அவர்களிடம் வித்தியாசமான அணுகுமுறை உள்ளது. அவர்கள் வாழ்க்கையை காதலிக்கின்றனர். அவர்கள் வாழ்க்கைக்கு எதிரி அல்ல. அவர்கள் எளிமையாக வாழலாம், ஆனால் அவர்கள் வாழ்க்கைக்கு எதிர்மறையானவர்கள் அல்ல. அவர்கள் சாதாரண மக்கள். அவர்கள் சாதாரணமாக வாழ்வதுதான் அசாதாரணமான ஒரு விஷயம் என்று கூறுகிறார்கள். அவர்கள் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்கின்றனர். நான் எளிமையானது என்று கூறும்போது உண்மையான எளிமையைதான் குறிப்பிடுகிறேன். திணிக்கப்பட்ட எளிமை அல்ல. இந்தியாவில் அப்படிப்பட்ட திணிக்கப்பட்ட எளிமையை நீ காணலாம். எளிமை திணிக்கப்படுகிறது. அவர்கள் நிர்வாணமாக இருந்தாலும் முழு நிர்வாணமாக இருந்தாலும் அவர்கள் எளிமையானவர்களாக இல்லை. அவர்களது நிர்வாணம் மிகவும் சிக்கலானது. அவர்களது நிர்வாணம் ஒரு குழந்தையினுடைய நிர்வாணம் போன்றதல்ல. அவர்கள் அதை உருவாக்கிக் கொண்டனர். உருவாக்கப்பட்ட ஒரு விஷயம் எப்படி எளிமையானதாக இருக்கமுடியும், தங்களை அவர்கள் அப்படி வரையறுத்துக் கொண்டுள்ளனர், வரையறுத்த ஒரு விஷயம் எப்படி எளிமையானதாக இருக்க முடியும், அது மிகவும் சிக்கலானது.
ஜைன திகம்பர சாமியாரின் நிர்வாணத்தை விட உங்களது ஆடைகள் எளிமையானவைதான். அவர் அதற்காக பல ஆண்டுகள் கஷ்டப்பட்டிருக்கிறார். அதற்கு ஐந்து படிகள் உள்ளன. நீ ஒவ்வொரு படியையும் ஒன்றன்பின் ஒன்றாக பூர்த்தி செய்ய வேண்டும், அதன்பின்தான் நீ நிர்வாணமாக இருக்கமுடியும். அது ஒரு லட்சியம், ஒரு லட்சியம் எப்படி எளிமையானதாக இருக்கும், நீ அதற்காக பல வருடங்கள் உழைத்திருந்தால், அதை அடைவதற்காக நீ பல முயற்சிகள் செய்திருக்கும்போது அது எப்படி எளிமையானதாக இருக்கமுடியும், இப்போதே, இங்கேயே, உடனடியாக கிடைக்கும், அதற்காக உழைக்கவேண்டிய அவசியமில்லாத ஒரு விஷயம் மட்டுமே எளிமையானதாக இருக்க முடியும்.

நிர்வாணம் எளிமையான ஒரு விஷயமாக இருக்கும்போது அது மிக கம்பீரமான காட்சிஅற்புதம். நீ வெறுமனே உடைகளை விட்டுவிடலாம். அது மகாவீரருக்கு நடந்தது. அது எளிமையானது. அவர் அவரது மாளிகையை விட்டு கிளம்பும்போது அவர் ஆடை அணிந்திருந்தார். ஒரு ரோஜாபுதரை தாண்டும்போது அவரது ஆடை அதில் சிக்கிக் கொண்டது. அது ஒரு மாலை நேரம், எனவே அந்த ரோஜாசெடி தூங்கும்நேரம், எனவே அதை பிரித்து எடுத்து அதன் தூக்கத்தை கலைக்கக் கூடாது, எனவே அவர் சிக்கிக் கொண்ட ஆடையை மட்டும் கிழித்து விட்டுவிட்டு பாதி ஆடையுடன் சென்றார். அடுத்த நாள் ஒரு பிச்சைக்காரன் வந்து யாசகம் கேட்டான். அவனுக்கு தர ஏதுவுமில்லை இந்த பாதி ஆடையை தவிர. எனவே இந்த பாதி ஆடையையும் அவனுக்கு கொடுத்துவிட்டு நிர்வாணமாகி விட்டார். அவரது நிர்வாணம் மிகவும் அழகானது, இயற்கையானது, எளிமையானது, அது நிகழ்ந்தது. அது பயிற்சி செய்யப்பட்டதல்ல. ஆனால் ஒரு ஜைனதுறவி அதை பயிற்சி செய்கிறார்.

ஜென்குருக்கள் மிகவும் எளிமையான மக்கள். அவர்கள் மற்றவர்களைப் போலவேதான் வாழ்கிறார்கள். அவர்கள் எந்த வித்தியாசத்தையும் உண்டாக்கிக் கொள்வதில்லை. ஏனெனில் அடிப்படையிலேயே ஆணவம் இருந்தால்தான் வித்தியாசம் வரும். இந்த விளையாட்டை நீ பல வழிகளில் விளையாடலாம், ஆனால் விளையாட்டு ஒன்றேதான். நான் உன்னை விட உயர்ந்தவன். விளையாட்டு ஒன்றுதான், என்னிடம் உன்னைவிட அதிக பணம் இருக்கிறது, நான் உன்னைவிட உயர்ந்தவன், நான் உன்னைவிட படித்தவன், நான் உன்னை விட உயர்ந்தவன், நான் உன்னை விட அதிக மதவாதி, அதனால் நான் உன்னைவிட உயர்ந்தவன், நான் அதிகம் துறந்திருக்கிறேன், அதனால் நான் உன்னைவிட உயர்ந்தவன்,

நான்சேன் உள்ளே சென்று டீ தயாரித்துக் கொண்டு வெளியே வந்தார், கோப்பையை விரிவுரையாளரின் கைகளில் கொடுத்தார், கெட்டிலில் இருந்து டீயை ஊற்ற ஆரம்பித்தார். கோப்பை நிறைந்துவிட்டது. அந்த வினாடி வரை வந்தவர் பொறுத்திருந்தார், ஏனெனில் அதுவரை எல்லாமே சாதாரணமாகதான் நடந்தது, ஒரு களைப்பான மனிதனுக்காக இரக்கப்பட்டு டீ தயாரித்துக் கொண்டு வந்தார். அது அப்படித்தான் இருக்கும். நீ கோப்பையில் டீயை ஊற்றுகிறாய் – அதுவும் சரிதான், ஆனால் பின்தான் அசாதாரணமானது நடந்தது.

நான்சேன் ஊற்றிக் கொண்டே இருந்தார். கோப்பை நிறைந்து வழிந்தது. இப்போது விரிவுரையாளர் சிறிது ஆச்சரியமடைந்தார். இவர் என்ன செய்கிறார், இவருகென்ன பயித்தியம் பிடித்துவிட்டதா, ஆனாலும் பொறுத்தார் – அவர் மிகவும் நாகரீகமடைந்த மனிதர், இது போன்ற சிறிய விஷயங்களை ஒரளவுக்கு தாங்கிக் கொள்ள முடியும். ஒரு சிறிதளவு பைத்தியக்காரத்தனத்தை..... ஆனால் கோப்பையின் கீழே இருந்த தட்டும் நிறைந்து வழிந்தது, நான்சேன் ஊற்றிக் கொண்டே இருந்தார்.
இது மிகவும் அதிகம். இப்போது ஏதாவது செய்தாக வேண்டும், எதையாவது சொல்லியாக வேண்டும், வந்தவர் நிறுத்துங்கள் என கத்தினார். ஏனெனில் இப்போது டீ தரையில் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், கோப்பை இனிமேலும் கொள்ளாது. இதைக்கூட உங்களால் பார்க்க முடியவில்லையா, உங்களுக்கு என்ன பயித்தியமா எனக் கேட்டார்.

நான்சேன் சிரித்துக் கொண்டே, இதைதான் நானும் நினைத்துக் கொண்டிருக்கிறேன், உங்களுக்குகென்ன பயித்தியமா கோப்பை நிறைந்து விட்டது அதில் இன்னும் கொஞ்சம்கூட ஊற்ற முடியாது என்பதை பார்க்க முடிகின்ற உங்களால் உங்களது மூளை நிறைந்து வழிகிறது அதில் சிறிதளவுகூட உண்மை ஏறாது என்பதை ஏன் பார்க்க முடியவில்லை. இந்த டீயைப் போலவே உங்களது மண்டையிலிருந்து நிறைந்து வழியும் தத்துவம் என் குடிசை முழுவதும் பரவி இருப்பதை உங்களால் பார்க்க முடிகிறதா, நீங்கள் ஒரு பொருள்முதல்வாதி, உங்களால் டீயை பார்க்க முடிகிறது. இப்போது அடுத்த விஷயத்தையும் பார்ப்போம் வாருங்கள். என்று கூறினார்.

இந்த நான்சேன் என்பவர் மக்கள் விழிப்புணர்வு பெற பல வழிகளிலும், பல முறைகளிலும், பல விதங்களிலும் பலருக்கு உதவியுள்ளார். வேறுபட்ட பல விதங்களிலும் பல விதமான சூழ்நிலைகளை உருவாக்கி மக்கள் விழிப்புணர்வு பெற உதவியுள்ளார்.


Source : AND THE FLOWERS SHOWERED che #11

No comments: