Friday, October 22, 2010

மலர் 2 இணைய இதழ் 7 11 பிப்ரவரி 2010

தலையங்கம்

அன்பு நண்பர்களே,

வணக்கம்.

1.
பல புதிதாய் திருமணமான ஜோடிகள் என்னிடம் வந்து அவர்களின் தினசரி சண்டைக்கு தீர்வு கேட்கிறார்கள். இவர்களின் பொதுத்தன்மையாக நான் பார்ப்பது இதைத்தான்.

ஆண்களுக்கு கௌரவப் பிரச்னை. ஈகோ பிரச்சனை. பெண்களின் உலக அறிவுக் குறைவு. அதனால் உள்ள தேவையற்ற பயம், சந்தேகம், கற்பனை. மேலும் இந்த உலகஅறிவும், அனுபவமும் இல்லாமையால் ஏற்பட்டுள்ள குடும்ப பிடிப்பு, குறுகிய வட்டப்பிடிப்பு.

ஆண்களின் பிரச்னைக்கு விளக்கம் தேவையில்லை. சமூக அந்தஸ்து, அதற்கான போட்டி, அதில் ஏற்படும் அழுத்தம், சிக்கல். வெற்றியில் கிடைக்கும் பெருமிதம், புகழ்ச்சி இவைதான்.

இதற்கான தீர்வு, அவர்கள் தன்னுணர்வு பெற விரும்ப வேண்டும். சமுதாய மதிப்பீட்டின் மாயையை உணர வேண்டும். தன்னை உணர்வுபூர்வமான வாழ்க்கைக்கு, இயந்திரத் தனத்திலிருந்து விடுபட்ட இயற்கை வாழ்வுக்கு திருப்பிக் கொள்ள முயல வேண்டும். வாழ்தல் என்பது உணர்வு சம்பந்தபட்டதேயன்றி பொருள் சம்பந்தப்பட்டதல்ல என்பதை அவர்கள் ஆழ்ந்து உணர்ந்து மனைவியின் உணர்வுக்கு மதிப்புக் கொடுத்துப் பழக வேண்டும்.

பெண்கள் ஆண்களை விட உணர்வு பூர்வமானவர்கள். இயற்கையே அப்படியே அவர்களைப் படைத்திருக்கிறது. ஏனெனில் ஆண்களைப் போல தலைக்கு முதலிடம் கொடுப்பவர்களாய் அவர்களும் மாறிவிட்டால் பின் குழந்தை பெற்றுக் கொள்வதை அவர்கள் நிறுத்தி விடுவார்கள். இந்த உணர்வுபூர்வமான, உணர்ச்சி பூர்வமான, இதயபூர்வமான நிலை அவர்களிடம் இருப்பதால் அவர்கள் அதன் மூலமே வாழ்வைப் பார்க்கின்றனர். அறிவைப் புறக்கணிக்கும் இயல்பை வளர்த்து வந்துவிட்டனர்.

ஆனால் ஆண் 51 சதவீதம் தலை 49 சதவீதம் உணர்வு அல்லது இதயம், பெண்கள் 51 சதவீதம் இதயம் 49 சதவீதம் தலை என்பதுதான் உண்மை.


ஆகவே பெண்கள் 49 சதவீதமுள்ள பகுத்தறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். உலக அறிவு, உலக நடைமுறை, விஞ்ஞானப்பார்வை, தொலைநோக்கு திட்டங்கள், உலகாதயப் பார்வை, சிந்தித்து முடிவு எடுத்தல் போன்ற குணங்களை வெளி உலகத் தொடர்பிற்குப் பயன்படுத்திக் கொண்டால் அவர்களால் ஒரு ஆணை, இந்த சமூகத்தை, அதன் நடவடிக்கைகளை, வியாபாரத்தை, சமூக மதிப்பீட்டுப் பிரசனைகளை புரிந்து கொள்ள முடியும்.

இதயத்தில், உணர்வில், வாழத் தகுந்த கணங்களில் அப்படி வாழ வேண்டும். பகுத்தறிவை பயன்படுத்த வேண்டிய கணங்களில் விஞ்ஞான பூர்வமாக விஷயங்களைப் பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது ஆண் பெண் உறவில் சிக்கல் வருவதில் 90 சதவீதம் காணாமல் போய்விடும். இப்படி ஆண் பெண் இருபாலரும் தங்களது மற்றொரு பக்கத்தையும் வளர்த்துக் கொண்டால் உறவு நட்பாக மலரும்.

ஆண் என்பது மேற்கத்தியப் பார்வை பெண் என்பது கிழக்கித்தியப் பார்வை ஆண் என்பது பகுத்தறிவு. பெண் என்பது உணர்வு. ஆண் என்பது சமூக மதிப்பீடு. பெண் என்பது உறவு. ஆண் என்பது அரசியல். பெண் என்பது மததன்மை. ஆண் என்பது ஆள நினைப்பது. பெண் என்பது பெற்றுக்கொள்ளும் தன்மை.

ஒவ்வொரு ஆண் உள்ளும் பெண் இருக்கிறாள். ஒவ்வொரு பெண்ணுள்ளும் ஆண் இருக்கிறான்.

நமக்குள் உள்ள மற்றொருவரைக் கண்டு பிடித்து அவரையும் சேர்த்து வாழ ஆரம்பிக்கும் போது ஆண் பெண் உறவு நட்பாக மலரும். அழுகிய நிலையிலுள்ள பழைய மனிதன் அழகிய ஜோர்பாவெனும் புத்தாவாக மாறுவான்.

உணர்ச்சி என்பது மிருகத்திடமிருந்து வந்தது. உணர்வு என்பது மனிதனின் தனிச் சொத்து. உணர்ச்சிகரமாக வாழ்வது மிருகமாக வாழ்வது. அது தவறல்ல. அது நமது இயல்பில், உடலில் இருப்பதுதான். அதை முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை அனுமதிக்க வேண்டும். அடக்கி வைக்கக்கூடாது. அதை அடக்கி வைப்பதால்தான் மனிதன் மிருகத்தைவிடவும் கேவலமானவனாக மாறி விடுகிறான். மிருகத்திடம் பயம், செக்ஸ், பொறாமை, பேராசை, வன்முறை, எல்லாம் இருந்தாலும் அந்தந்தக் கணத்தில் வந்து போய்விடுகிறது. வாழ்வுக்கு, தப்பிப் பிழைத்தலுக்குத் தேவையான அளவு மனமும் அதன் தந்திரமும் கூட மிருகங்களுக்கு வந்து போகத்தான் செய்கிறது. அவைகளுக்கு தன்னுணர்வு இல்லாமையால் அடிப்படை உணர்ச்சியான உயிர் வாழ்தல் என்பதை ஒட்டி தானாகவே உணர்ச்சியும் மனமும் வேலை செய்கின்றன.

ஆனால் மனிதனின் 10 சதவீத தன்னுணர்வால் மனிதன் ஒரு 10 சதவீதம் சுதந்திரமாக தேர்ந்தெடுத்து வாழும் வாய்ப்பை பெற்றுள்ளான். இதைப் பயன்படுத்தி பகுத்தறிவு வளர்த்தவர் சிலர். தந்திரம் வளர்த்தவர் பலர். தன்னுணர்வை மேலும் வளர்க்கவே தன்னுணர்வை பயன்படுத்தியவர் மிகச்சிலர்.

பகுத்தறிவால் விஞ்ஞான வளர்ச்சி கிடைத்தது. தன்னுணர்வு பெருகியவர்களால் அன்பு மலர்ந்தது. ஆனால் தந்திரம் வளர்த்து மேலும் மிருகமானவர்கள் கைகளில் இந்த சமூகம் சிக்கி விட்டது. மூடநம்பிக்கை, வீண்பயம், தேவையற்ற கட்டுத்திட்டம், பழமைவாதம், இவற்றை வளர்க்கும் இவர்கள், மக்களில் யாரெல்லாம் தங்களிடம் மிருகவுணர்ச்சி உள்ளதை அறிகிறார்களோ அவர்களிடம் அது மிகவும் கேவலமானது என்று வலியுறுத்துவதன் மூலம் போலித்தனத்தையும், அமுக்கி வைத்தலையும், குற்றவுணர்வையும் ஏற்படுத்தி மக்களை கீழானவர்களாக்கி அடிமை கொள்கிறார்கள்.

2.
என்னிடம் வரும் பலர் தியானம் புரிவதால் எண்ணங்கள் ஓடுவதும் அதில் நமது தன்னுணர்வை இழப்பதும் தெரிகிறது, ஆனாலும் தன்னுணர்வை வளர்க்கும் வழி தெரியவில்லையே, எத்தனை நாட்களுக்கு தியான யுக்திகளை கடைபிடிப்பது என்று கேட்கிறார்கள்.

தியானயுக்திகள் தியானமல்ல. தியானம் நிகழ நாம் ஏற்படுத்தும் ஒரு சூழல், ஒரு யுக்தி, அவ்வளவுதான். நீங்கள் 24 மணி நேரமும் செய்யும் செயலாக தியானம் மாற வேண்டும். எது செய்தாலும் தன்னுணர்வை இழக்காமல் செய்வதுதான் தியானம். அப்போதுதான் நிலைமாற்றம் சாத்தியம்.

இதற்கு முதலில் எண்ணம் வரும்போதே ஒரு எண்ணம் வருகிறது என்று தெரிகிறதோ, அப்போது அதன் கூடவே போகாமல் அதன் பின்னால் பாருங்கள். பின்னால், பின்னால், பின்னால் என்று போனீர்களானால் ஒரு கருத்து அங்கு உங்களுக்குள் உட்கார்ந்திருக்கும். எங்கோ, யாராலோ, யாரோ உங்களுக்குள் போட்டது அல்லது நீங்கள் எங்கிருந்தோ, எந்த வயதிலோ, ஏற்பட்ட தாக்கத்திலிருந்து பொறுக்கி எடுத்துக் கொண்டது அங்கு இருக்கும்.

அதைப் பிடித்துவிட்டால், பார்த்துவிட்டால், புரிந்துகொண்டுவிட்டால், அதிலிருந்து ஊறும் எண்ண ஓட்டம் நின்றுவிடும். ஆனால் இது முதல்படிதான். தன்னுணர்வு முழுதாய் மலர்ந்து விடாது. அதற்கு மேலும் பின்னே போங்கள். அந்தக் கருத்து உங்களுக்குள் வரும் வாசலாக ஒரு உணர்ச்சி நிகழ்வு இருந்திருக்கும். அதைப் பிடியுங்கள். புரிந்து கொள்ளுங்கள். அப்போது அதையும் தாண்டி நீங்கள் கடந்து போகலாம்.

உதாரணம் ஒன்று சொல்கிறேன். ரோட்டில் வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கையில் ஒரு சினிமா போஸ்டரைப் பார்க்கிறீர்கள். உடனே அந்த சினிமாவுக்குப் போகும் எண்ணம் வருகிறது. உடனே யாரோடு போகலாம், எப்போது போகலாம், எந்த தியேட்டர், அதற்கு பைசா இருக்கிறதா, அவனைக் கூப்பிட்டால் வருவான், இவனைக் கூப்பிட்டால் டிக்கெட் இவன் எடுப்பானா என்று கிளை பரப்புகிறது எண்ணம். இது செயலுக்கு அழைத்துச் செல்லும் வழி. மாறாக இந்த எண்ணம் ஏன் வருகிறது, என்று சிந்தித்தால் அப்போது இது விஜய் படம், விஜய் எனக்குப் பிடிக்கும், ஏன் பிடிக்கும், எங்கு அந்த பிடிப்பு ஆரம்பித்தது, விஜய் பிடிக்கும் என்ற கருத்து எப்படி வந்தது என்று மறுபடி பின்னால் பார்த்தால் நம் உணர்ச்சியை பாதிக்கும் விதமாக வந்த ஏதோ ஒரு படத்தில் விஜய் நடித்தது காரணமாயிருக்கலாம். அதைப் பிடியுங்கள். அந்தப் படம் எப்படி நம்மை பாதித்தது, எந்த உணர்ச்சி மூலம் நம்மை தொட்டது, என்று பார்த்து அந்த உணர்ச்சியை பிடியுங்கள். அந்த உணர்ச்சி முடிச்சு நம்முள் எப்படி வந்தது, ஏன் வந்தது, எந்த நிகழ்வின் மூலம் வந்தது என்று பாருங்கள். அந்த நிகழ்வை தன்னுணர்வோடு எந்த ஈடுபாடும், நிலையும் எடுக்காமல் பாருங்கள். அந்த முடிச்சு அவிழ்ந்து விடும். வெறும் தன்னுணர்வு மட்டுமாய் இருப்போம்.

எல்லா உணர்ச்சிகளும் அந்தந்த வினாடி வெளிப்பாடுகளாய் கடந்து போவதில் தவறில்லை. அதுதான் வாழ்க்கை. ஆனால் ஏதோ ஒரு உணர்ச்சி முடிச்சாய் தங்கிப் போனால், நம்மால் தாண்ட முடியாமல் தொண்டை முள்ளாய் சிக்கிப் போனால் அது நம்மை நிகழ்காலத்தில் வாழ விடாமல் நிகழ்காலத்தை உணர விடாமல் தடுத்து பாதை மாற்றி விடுகிறது.

இப்படி எண்ணம், கருத்து, உணர்ச்சி, எல்லாவற்றிலும் சாட்சியாய் நின்று கண்டு, தெளியும்போது தன்னுணர்வு பெருகும். இதில் அடக்குதலோ, கண்டித்தலோ, குற்றம் சாட்டுதலோ, மறுத்தலோ இல்லை. மாறாக நம்மை நாம் முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம்.

நன்றி,
சித்.
கவிதை

கூடிக் குலாவ வா

நண்பா,

அன்பு அறிவில் பிறப்பதில்லை,
அது உழைத்துச் சேர்ப்பதில்லை,
அது தேடி அடைவதில்லை,
அது அதிர்ஷ்டப் பரிசுமில்லை,
அது கொடுத்துப் பெறுவதில்லை,
அது வயதில் வளர்வதில்லை.

அன்பு நீ பிறக்கும்போதே இருந்தது,
நீ மூச்சு விடுவதில் வாழ்வது,
உன் இதயத் துடிப்பில் ஒலிப்பது,
உன் இன்பச் செயல்களில் ஒளிர்வது.

அன்பு உன் மென்மையின் உறுதி,
உன் படைப்பின் பெருமிதம்,
உன் இருப்பின் அழகு.

அன்பு வாழ்வின் பயிர்,
அதில் வாழ்வதே உயிர்.

நண்பனே, ஆகவே நண்பனே,

அன்பைத் தேடாதே,
தயவுசெய்து அதைப் பழகாதே,
அதைப் பற்றிப் படிக்காதே,
அன்பைப்பற்றி அறிவுரை கேட்காதே,
அது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறையல்ல.

நண்பா, இப்படித்தான் அன்பு அழிந்தது, அழிகிறது.

குழந்தையிடம் நிறைந்திருக்கும் அன்பை முறைப்படுத்தும் முயற்சியில்,
அறிவுச்சிறையிலிட்டுத்தான் அன்பு அடியோடு அழிகிறது.
அன்பு அழிந்ததால்.....வாழ்வு அர்த்தம் இழந்தது,
இயற்கை அழகு குலைந்தது.
மனிதன்....... வெறும் இயந்திரமாகிப் போனான், தந்திரமாகிப் போனான்.

எனதருமை நண்பனே,
அன்பில் நீ
அமிழலாம், கரையலாம், உணரலாம், இருக்கலாம்,
ஆனால்..... சொல்ல முடியாது.
அது சொற்சிறை கடந்த அனுபவம்,
காட்ட முடியும்......ஆம்.....தொட்டுக் காட்டலாம்.

என் இதயமே
எட்ட இருந்து பார்க்கக்கூடிய பொருளல்ல அன்பு,
கிட்டே நெருங்கி வா,
கூடிக் குலாவி அன்பில் குதூகலிப்போம்.

ஓஷோ வீடியோ

1. Osho : . . . for thirty two years I have been absolutely nothing. . . .

2. Osho : The philosophical frog and the centipede

3. Osho : Life (Meditation Minutes)


கேள்வி பதில்

இம்மாதமும் ஒரு தியானமுறையையும், புரிதலுக்காக மனம் மற்றும் தியானம் பற்றிய கேள்விகளுக்கு ஓஷோவின் பேச்சுகளிலிருந்து சில பகுதிகளை அளிக்கிறோம்.

மிகச்சரியானதும் முழுமையானதும்

ஒவ்வொருவரும் தான் முக்கியமானவராக இருக்கும்படிதான் வளர்க்கப்பட்டிருக்கிறார். இங்கு யாரும் உண்மையானவராக இருக்க முடியாது. முக்கியமானவராக மாறுவது மனித இனத்தின் பொதுவான வியாதியாக இருக்கிறது.

ஒவ்வொருவரும் எதிர்காலத்தில் எங்காவது, எதாவதொன்றில் முக்கியமானவராக ஆக வேண்டும் என்பதற்காக அதன்படிதான் வளர்க்கப்படுகிறார்கள். ஒரு மாடல் கொடுக்கப்படுகிறது, நீ அதுபோல மாற வேண்டும். அது உனக்கு ஒரு இறுக்கத்தைக் கொடுக்கிறது, ஏனெனில் நீ அதுபோல இல்லை. நீ வேறுமாதிரி இருக்கிறாய், இருப்பினும் நீ அதுபோல ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தப் படுகிறாய்.

அதற்காக உண்மையானதை உண்மையற்றதற்க்காக கண்டனம் செய்கிறாய் – உண்மையற்றது உண்மையற்றதுதான். எதிர்காலத்திற்கான வடிவமைப்பு உன்னை நிகழ்காலத்திலிருந்து வெளியே இழுக்கிறது.

மாடல் ஒரு பயங்கர கனவாக துரத்துகிறது, அது தொடர்ந்து உன்னைத் துரத்துகிறது. நீ எதை செய்தாலும் அது சரியானதாக இருக்கப் போவதில்லை. ஏனெனில் சரியானது என்பதை குறித்து உனக்கு ஏற்கனவே ஒரு கருத்து உள்ளது. நீ ஏற்படுத்துவது எதுவாக இருந்தாலும் அது நிறைவாக இருக்கப் போவதில்லை, ஏனெனில் நிறைவடைய முடியாத ஒரு மடத்தனமான எதிர்பார்ப்பை நீ கொண்டிருக்கிறாய்.

நீ ஒரு மனிதன். ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட காலநிலையில் ஒரு குறிப்பிட்ட எல்லையில் இருக்கிறாய். அவற்றை ஒத்துக் கொள்.
மிகச்சரியாக செயல்களை செய்ய வேண்டுமென நினைப்பவர்கள் பைத்தியகாரத்தனத்தின் எல்லையில் இருக்கிறார்கள். அவர்கள் மடத்தனமானவர்கள் – அவர்கள் செய்வது எதுவாக இருந்தாலும் அது நல்லதல்ல. எதையும் மிகச்சரியாக செய்வதற்கு வழியேயில்லை. –
மிகச்சரியானது மனித இனத்திற்கு சாத்தியமில்லை. உண்மையில் சரியில்லாமல் இருப்பதுதான் ஒரே வழி.
அதனால் நான் சொல்வது என்னவென்றால், நான் உனக்கு மிகச்சரியானதை சொல்லித்தரப் போவதில்லை. நான் உனக்கு முழுமையை சொல்லித் தருகிறேன். அது முற்றிலும் வேறு விதமான ஒரு விஷயம். முழுமையாக இரு. சரியாக இருப்பதை பற்றி கவலைப்படாதே.

நான் முழுமை என்று கூறும்போது, நான் உண்மையானதைத்தான், நிகழ்காலத்தைத்தான் கூறுகிறேன். நீ எதைச் செய்தாலும் முழுமையாக செய். நீ மிகச்சரியானவனாக இருக்கமுடியாது, ஆனால் உன் சரியற்ற தன்மை முற்றிலும் அழகானதாக, அது உனது முழுமையில் நிரம்பி இருக்க முடியும். மிகச்சரியானவனாக இருக்க ஒருபோதும் முயற்சி செய்யாதே, இல்லாவிடில் நீ மேலும் மேலும் வேதனையைதான் உருவாக்குகிறாய். இங்கு ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்னைகள் உள்ளன. மேலும் உனக்கு பிரச்னைகளை உருவாக்கிக் கொள்ளாதே. முழுமையாக இரு. நீ எங்கே இருந்தாலும் என்ன செய்தாலும் முழுமையாக செய். அதனுள் செல். அது உனது தியானமாகட்டும். அது சரியானதா இல்லையா என்று கவலை படாதே. அது சரியானதாக இருக்காது. அது முழுமையானதாக இருந்தால் போதுமானது. அது முழுமையானதாக இருந்தால் நீ அதை செய்யும்போது விருப்பபட்டு செய்யலாம். நீ அதன்மூலம் ஒரு நிறைவை உணரலாம், நீ அதனுள் செல்லலாம். நீ அதனுள் ஆழ்ந்து விடலாம், நீ அதிலிருந்து வெளியே வரும்போது புதிதாக இளமையாக புத்துணர்வோடு வரலாம்.

புத்துணர்வோடு முழுமையாக செய்யப்படும் எல்லா செயல்களும் முழுமையோடு செய்யப்படும் எந்த செயலும் தளைகளை கொண்டு வருவதில்லை. முழுமையாக அன்பு செய்யும்போது அங்கு பந்தம் எழுவதில்லை. அன்பு அரைகுறையாகும் போதுதான் அங்கு பந்தம் உருவாகிறது. முழுமையாக வாழ், சாவைக் கண்டு பயப்பட மாட்டாய். வாழ்வை பிளந்தால் அங்கே சாவை கண்டு பயம் வரும்.

ஆகவே மிகச்சரியாக என்ற சொல்லை மறந்து விடு. அது மிகவும் வன்முறையான சொற்களில் ஒன்று. இந்த சொல் உலகத்திலுள்ள அத்தனை மொழிகளிலிருந்தும் நீக்கப்பட வேண்டிய ஒன்று. இது மனித மனத்திலிருந்து எடுக்கப்பட வேண்டிய ஒரு சொல். இதுவரை யாரும் அப்படி இருக்க முடிந்ததில்லை, அப்படி யாரும் இருக்கவும் முடியாது.

எல்லாமும் சரியானதாக இருக்கும் ஒரு ஓமாகா பாயிண்ட் உண்டு என்று டெலிஹார்ட் டீ சார்ட்டின் கூறுவார். அப்படி ஒரு ஓமாகா பாயிண்ட் கிடையாது. அப்படி இருக்கவே முடியாது. உலகம் நகர்ந்து கொண்டே இருக்கிறது, பரிணாம வளர்ச்சி நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் நெருங்கிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் நாம் அடையவேயில்லை. ஏனெனில் நாம் அடைந்து விட்டால் முடிந்தது. ஆனால் கடவுள் இன்னும் வேறுபட்ட விதங்களில் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

ஒரு விஷயம் உறுதி. அவர் தனது வேலையில் சந்தோஷமாக இருக்கிறார். இல்லாவிடில் அவர் இதை எப்போதோ கைகழுவி விட்டிருப்பார். அவர் இன்னும் தனது சக்தியை இதில் செலுத்திக் கொண்டே இருக்கிறார். கடவுள் உன்னால் மகிழ்ச்சி அடையும்போது நீ உன்னைப் பற்றி மகிழ்ச்சியற்று இருப்பது மடத்தனமானது. நீ மகிழ்வோடு இரு. மகிழ்ச்சியே நிறைவான எல்லையாக இருக்கட்டும். நான் புலனுர்ச்சியை ஆதரிப்பவன். அதுதான் மகிழ்ச்சியின் வெளிப்பாடு என்பதை நினைவில் கொள். நீ என்ன செய்தாலும் மகிழ்வோடு இரு. அவ்வளவுதான். அது சரியானதா இல்லையா என்பதைப்பற்றி கவலைப படாதே.

சரியானதாக இருக்க வேண்டும் என்ற முனைப்பு எதற்கு. அந்த முனைப்பினால் நீ இறுக்கமாக, வேதனையோடு, தவிப்போடு இருக்கிறாய். அதனால் நீ எப்போதும் பிளவுபட்டவனாக, தளர்வாக இல்லாமல் சிக்கலில் சிக்கி தவிக்கிறாய்.

வேதனை என்ற பொருள் தரும் ஆங்கில வார்த்தை ஆகோனி(Agony) பிளவுபட்டிருப்பது என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். எப்போதும் தொடர்ந்து தன்னுடன் மல்யுத்தம் செய்துகொண்டே இருப்பது. இதுதான் ஆகோனி என்ற ஆங்கில வார்த்தையின் பொருள். நீ உன்னில் திருப்தியாக இல்லையென்றால் நீ வேதனையில்தான் இருப்பாய் – நடக்க முடியாததை கேட்காதே. உன்னை நேசி. அடுத்தவர்களாயும் நேசி, இயல்பாக இரு. ஓய்வாக இரு.

மிகச்சரியாக செயலை செய்ய நினைப்பவன் ஒரு பைத்தியக்காரன். அவன் தன்னை சுற்றிலும் அந்த பைத்தியக்காரத்தனத்தை உருவாக்குவான். அதனால் மிகச்சரியான முறையை கடை பிடிப்பவனாக இருக்காதே. யாராவது உன்னைச் சுற்றி அப்படி இருந்தால், அவர்கள் உனது மனதையும் கெடுப்பதற்கு முன் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவர்களிடமிருந்து தப்பி போய் விடு.

எல்லோரும் ஒருவிதமான ஆழமான ஆணவத்தில் சிக்கி விடுகின்றனர். உனது கருத்துகளும் உனது செயல்கள் சரியானவை எனக் கூறுவதும் நீதான் சிறந்தவன் எனக் கூறும் ஒரு வகையான ஆணவம்தான். ஒரு தாழ்மையான மனிதன், தன் வாழ்க்கை மிகச்சரியானதாக இருக்காது என்பதை ஏற்றுக் கொள்வான். ஒரு உண்மையான ஆன்மீக வாதி நாம் எல்லைகுட்பட்டவர்கள், நமக்கு வரையறைகள் உண்டு என்பதை உணர்ந்து கொள்வான்.

மிகச்சரியானவனாக இருக்க முயற்சி செய்யாதவனே அடக்கமானவன் என்பதே என்னுடைய வரையறை. ஒரு அடக்கமானவன் மேலும் மேலும் முழுமையானவனாக மாறுவான். ஏனெனில் மறுப்பதற்க்கோ, தவிர்ப்பதற்க்கோ எதுவும் இல்லை. அவன் எப்படியோ அதை அப்படியே அவன் ஏற்றுக் கொள்வான்......நல்லதோ, கெட்டதோ..... ஒரு அடக்கமான மனிதன் மிகவும் செழிப்பானவன், ஏனெனில் அவன் அவனை முழுமையாக ஏற்றுக் கொண்டவன். அவனது கோபம், செக்ஸ், பேராசை, எல்லாமும் ஒத்துக் கொள்ளப்படுகிறது. அந்த ஆழ்ந்த ஏற்றுக் கொள்தலில் ஒரு ரசாயன மாறுதல் நிகழ்கிறது. எல்லா அசிங்கங்ளும் தானாகவே மறையத் தொடங்கும். மேலும் மேலும் முழுமையாக, மேலும் மேலும் லயப்படுதல் நிகழ்கிறது.

உன்னுடைய கருத்துக்களால் உன்னுடைய துயரத்தை நீயே உற்பத்தி செய்து கொள்கிறாய் என்பதை நீ புரிந்து கொள்ளும் நாளில் எல்லா கருத்துக்களையும் உடைத்து விடுவாய். அப்போது நீ அது என்னவாக இருந்தாலும் அதன்படியே உண்மையாகவும் இயல்பானவனாகவும் இருக்க ஆரம்பிப்பாய் – அதுதான் மிகச் சிறந்த நிலைமாறுதலாகும்.

DANG DANG DOKO DANG
CHA # 10 3rd question

ஒரு தியான முறை

தன்னிச்சையான பழக்கத்தை மாற்றுதல்

டிரைவிங் பழக ஆரம்பித்தால், ஆரம்பத்தில் நீ மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சக்கரம், ஆக்ஸிலேட்டர், பிரேக், கிளட்ச், பாதையில் நடக்கும் மக்கள் என பல விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மெதுமெதுவாக நீ டிரைவிங் பழகி விட்டால் எதை பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. எல்லாமும் தன்னிச்சையாகி விடும்.
இது வாழ்க்கைக்கு தேவையான ஒன்று. இல்லாவிடில் நீ பல விஷயங்களை செய்யவே முடியாது. இப்படி பழக்கப்பட்ட விஷயங்கள் ரோபோட்டாக மாறி விடும். பின் அதை அந்த ரோபோட் செய்யும் நீ வேறு எதையாவது கற்கலாம். இது அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமானது., ஆனால் மெதுமெதுவாக அந்த ரோபோட் பெரிதாகி விடும். உனது சிறிய அளவிலான தன்னுணர்வு சிறிய அளவிலேயே நின்று விடும்.

ஒருவர் தன்மீது கவனம் செலுத்தி செய்ய வேண்டிய செயல் எதுவென்றால் தன்னிச்சையான ரோபோட் பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும். நீ உனது பழக்கத்திலிருந்து விடுபட்டால் மிக விழிப்புணர்வு பெறுவாய்.

கவனத்தோடு அரைமணி நேரம் நடந்தால் எவ்வளவு அமைதியாக எவ்வளவு சாந்தமாக எவ்வளவு நிம்மதியாக நீ உணர்கிறாய் என்று பார். ஒரு மணி நேரம் அமர்ந்து சுவாசத்தை கவனித்தால் உன் வாழ்க்கையில் நீ இதுவரை உணர்ந்திராத அளவு மிகுந்த மௌனத்தையும், கவனத்தையும் அது உன்னுள் கொண்டு வரும். அதுதான் வித்தியாசத்தை கொடுக்கிறது.
அந்த வித்தியாசம்தான் உன் வாழ்க்கை முழுமையையும் மாற்றுகிறது. பின் நீ சாப்பிடுவது, நடப்பது, சுவாசிப்பது என எல்லாவற்றையும் மாற்ற முடியும். அன்பு செய்வதைக்கூட மிகவும் தன்னுணர்வுடன் மிகவும் கவனமாக செய்ய முடியும்.

பின் எல்லா இடத்திலிருந்தும் தன்னுணர்வு மழையாய் பொழியும், மெதுமெதுவாக சமநிலை வரும். நீ தன்னுணர்வு அற்ற நிலையிலிருந்து தன்னுணர்வோடு இருக்கும் நிலை பெறுவாய்.

THE PERFECT MASTER VOL 1 CHE# 7

இருப்பின் புனிதம் - ஓஷோவின் கதை 19

கோமோரா மற்றும் சோடாம் நகரங்களை பற்றிய ஒரு அழகிய கதை ஹசிடீஸ் மக்களிடம் உண்டு. அதற்கு பழைய ஏற்பாட்டிலோ வேறு எந்த பழைமையானவற்றிலோ எந்த ஆதாரமும் கிடையாது. அதனால் நிச்சயமாக அது ஒரு ஹசிடீஸ் மக்களின் கண்டுபிடிப்பு, கற்பனை, ஒரு உருவாக்கம்தான். ஆனால் எனக்கு அந்த கதையை மிகவும் பிடிக்கும். அதை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கடவுள் - யூத மக்களின் கடவுள் மிகவும் கோபக்காரர். – ஒருநாள் அவர் கோமோரா மற்றும் சோடாம் நகர மக்கள் மீது கோபம் கொண்டு அந்த நகரங்களை அழிக்க முடிவு செய்கிறார்.

அப்போது ஒரு ஹசிடீஸ் ஞானி கடவுளை அணுகி, சோடாம் நகரத்தில் ஒரு நூறு நல்லவர்களும் ஒரு ஆயிரம் கெட்டவர்களும் இருப்பதாக வைத்துக்கொண்டால் நீங்கள் அந்த நகரத்தை அழிக்கும்போது அந்த நூறு நல்லவர்களும் சேர்ந்து அழிந்து போவார்கள் அல்லவா, எனக் கேட்டார்.

கடவுள் யோசித்தார். நான் இப்படி சிந்திக்கவில்லை. சரி போகட்டும், நான் அழிக்காமல் விடுகிறேன், ஆனால் நீ எனக்கு நூறு நல்லவர்களை காட்ட வேண்டும். என்றார்.

ஞானி, பொறுங்கள். என்னால் நூறு பேர்களை காட்ட முடியாமல் போகலாம், ஆனால் பத்து நல்லவர்கள் மட்டும் இருந்தால் அந்த நகரத்தை அழிப்பது முறைதானா நீங்கள் அந்த நகரத்தை அழிக்கும்போது அந்த பத்துபேரும் சேர்ந்து அழிந்து போவார்களே என்று கேட்டார்.

கடவுள் நான் இதைப்பற்றி சிந்திக்க வேண்டும். சரி நூறோ பத்தோ எண்ணிக்கை முக்கியமல்ல. ஆனால் நீ எனக்கு பத்து நல்லவர்களை காட்ட வேண்டும்.

ஞானி, சிறிது பொறுங்கள். இன்னும் ஒரே ஒரு கேள்வி பாக்கியிருக்கிறது. ஒரே ஒரு நல்லவன் இருந்தால் நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், நூறாயிரம் மக்களின் கெட்டதனத்தை விட ஒரே ஒரு நல்லவனின் நல்லதன்மை மதிப்பு வாய்ந்தது அல்லவா, கேடு நினைப்பது ஒரு எதிர்மறையான குணம் அதற்கு மதிப்பு கிடையாது, ஆனால் நல்லதன்மைக்கு மதிப்பு உண்டல்லவா, நீங்கள் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்கக்கூடாது. அந்த ஒரு நல்லவனை நீங்கள் ஒதுக்கி விட முடியாது என்றார்.

கடவுள், உன்னுடைய தர்க்கம் சரியானதுதான். ஆயிரமோ, நூறோ, ஒரே ஒருவனோ, நான் நல்லவர்கள் பக்கம்தான். ஆனால் நீ ஒரு நல்லவன் இருக்கிறான் என்பதை நிரூபித்தாக வேண்டும். என்றார்.

ஞானி, இதோ நானிருக்கிறேன், நான் வேறு எங்கும் போக வேண்டிய அவசியமில்லை. அதனால்தான் நான் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டே வந்தேன். என்னால் ஆயிரம் பேர்களையோ, நூறு பேர்களையோ கண்டு பிடிக்க முடியாமல் போகலாம். எப்படி அடையாளம் காண்பது. நான் நல்லவனான கணத்திலிருந்து யாரையும் நல்லவன் கெட்டவன் எனப் பிரிப்பதுப் பார்ப்பதை நான் நிறுத்திவிட்டேன். என்னைப் பொறுத்தவரை எல்லோரும் நல்லவரே. நான் யாரிடமும் கெட்டதனத்தை பார்ப்பதில்லை. ஏனெனில் கெட்டதன்மை என்பது ஒரு நிழல் போன்றது. மேலும் அது ஒரு மனிதனின் உண்மை தன்மை ஆகாது. கெடுதல் உண்டாக்கும் செயல்களை அவன் செய்திருக்கலாம். ஆனால் அது அவனது இருப்பையே கெடுத்திருக்காது. ஒரு செயல், இரண்டு செயல், மூன்று செயல் ஏன் நூறு செயல் கூட கெட்டதை செய்திருக்கலாம், ஆனால் அவனது இருப்பு எப்போதும் தூய்மையானதாகவே இருக்கிறது.

இருப்பு தனது செயல்களிலிருந்து வெளியே வர முடியும். அது தனது செயல்களை விட்டு விட முடியும். அது தனது கடந்த காலத்தை உதறி விட முடியும். அப்போது அந்த வினாடியிலிருந்து அந்த மனிதன் புனிதன் ஆகிறான். யாரும் அவனை தடுக்க முடியாது. நல்லவன் கெட்டவன் என்பதை எப்படி தீர்மானிக்க முடியும், தீர்மானிக்க வழியே இல்லை. அதனால்தான் நான் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டே வந்தேன். அந்த நகரங்களில் நல்லவர்களே இல்லை என்று அர்த்தமல்ல. உண்மையில் நான் இரண்டு நகரங்களிலும் இருந்திருக்கிறேன், நான் நல்லவர்களை மட்டுமே பார்த்திருக்கிறேன். என்றார்.

நீ நல்லவனாகும்போது, நீ தீர்மானிப்பதை விட்டு விடுகிறாய் மக்களை எடை போடுவதை விட்டு விடுகிறாய். ஏனெனில் எடை போடுவது செயல்கள் மூலம்தான். ஆனால் செயல் என்பது வெளி விஷயம்தான். நீர்குமிழ் மூலம் கடலை எடை போட முடியுமா, அது மடத்தனம். நீர்குமிழ் என்பது கடலின் மேல் பரப்பில் உருவாவது.

செயல்கள் நீர்மேல் வரையும் கோலம் போன்றது, அதை நீ முடிக்கும் முன்னே அது அழிந்து விடும். இருப்பு செயல்களை கடந்தது. அது அழியாதது. நீ செய்வதை பொறுத்தது அல்ல அது. நீ யார் என்பதே கேள்வி.

ஹசிடீஸ் ஞானி, நான் மக்களின் இருப்பை மட்டுமே பார்க்கிறேன். சில நேரங்களில் மிக அழகானவர்களாக, நல்லவர்களாக, புனிதர்களாக இருக்கும் மக்கள் செய்யும் செயல் கெடுதலாக தோன்றுகிறது. மன்னிக்க முடியாத விஷயமாக ஆகிறது. ஆனால் அந்த செயல் மூலம் அவர்களை மதிப்பிடமுடியாதல்லவா, அதனால்தான் நான் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டே வந்தேன், என்றார்.

இதோ நானிருக்கிறேன். நான் இரண்டு நகரங்களிலும் இருக்கிறேன். வருடத்தில் பாதி நாள் அந்த நகரத்திலும் மீதி நாள் இந்த நகரத்திலும் இருப்பேன். என்னையும் சேர்த்து நீங்கள் அழித்து விடப் போகிறீர்களா எனக் கேட்டார்.

இதன்பின் கடவுள் அந்த இரண்டு நகரங்களையும் அழிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டதாக ஹசிடீஸ் கதை கூறுகிறது.

FROM PERSONALITY TO INDIVIDUALITY CHAPTER #30

No comments: