Friday, October 22, 2010

மலர் 1 இணைய இதழ் 5 11 டிசம்பர் 2008

தலையங்கம்

அன்பு வாசகர்களே!
இந்த மாதம் ஓஷோவின் 3 வது சிறப்பு அம்சமான “மனிதகுலத்தில் முதல்முறையாக ஞானம் பெற்ற பின் உள்ள வாழ்வு, வாழ்வியல் பற்றிய அவரின் அனுபவ பகிர்வு” என்பது குறித்து நான் எழுதுவேன் என நீங்கள் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் இந்த 3வது சிறப்பு அம்சத்தை நீங்களேதான் ஓஷோவிடம் நெருங்கி வந்து உணர்ந்து கொள்ள வேண்டும். அவர் ஒரு “உயிர் துடிப்புள்ள வாழும் சக்தி. “ எனவே அவரைத் தொடர்பு கொள்ளுங்கள். அதற்கு அவரது புத்தகங்களைப் படிப்பதும், அதைவிட அதிகம் அவரது பேச்சைக் கேட்பதும், அதைவிட அதிகம் அவரது வீடியோக்களைப் பார்ப்பதும், அதைவிட அதிகம் அவரது சந்நியாசிகளிடம் பழகுவதும், அதைவிட அதிகம் உங்களுக்குள் ஆழ்ந்து செல்வதும் உதவும்.

அடுத்து இன்றைய தேதியில் மிகவும் கொந்தளிப்பான விஷயமாக தமிழ்நாட்டில் இருக்கும் “இலங்கையில் பிரச்சனை” குறித்து பார்ப்போம். விடுதலைப்புலிகள் ஒரு பக்கம், இலங்கையின் சிங்கள அரசாங்கம் அதன் எதிர் பக்கம், சமாதானதூதுவர்கள் ஒரு பக்கம், வன்முறை போராட்டத்தை ஆதரிப்போர் அதன் எதிர் பக்கம், தமிழ் மக்கள் துயர் துடைக்க நிதி திரட்டும் ஆளும் அரசியல்வாதிகள் ஒரு பக்கம், அவர்களின் இயலாமையை பேசும் அரசியல்வாதிகள் அதன் எதிர் பக்கம், இப்படி பல்வேறு சண்டைகள் அதை ஒட்டி நடந்து கொண்டிருக்கின்றன.

இலங்கைப் பிரச்னையை ஒட்டி இதிலெல்லாம் கலந்து கொள்ளாமல் வழக்கம்போல பெரும்பான்மை மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தினசரி உரையாடும் சுவாரசிய விஷயமாக ரசித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் வெற்றி பெறும் என நிச்சயமாகத் தெரியும் பக்கம் சாய காத்திருக்கின்றனர். மத்திய அரசாங்கம் அன்றாடம் ஒரு நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறது. ஐ.நா. சபை அமெரிக்கா இந்த பிரச்னையை எழுப்பினால்தான் ஏதாவது நடவடிக்கை எடுக்கும். அதுவும்கூட அமெரிக்காவின் நடவடிக்கையை ஆதரித்துப் போடும் தீர்மானமாகவே இருக்கும்.

ஆனால் உண்மை என்னவென்றால், மனிதர்களை மனிதர்களே கொல்கிறார்கள். அருகருகே உள்ள மனிதர்கள், ஒருவரையொருவர் நன்கு தெரிந்த மனிதர்கள், ஒருவரைக் கொல்ல மற்றொருவர் மதம் பிடித்து அலைகிறார். குழந்தைகள், முதியவர்கள், நோயுற்றோர், இப்படி எந்த பாகுபாடும் இல்லாமல் கொன்றுகொள்ளுமளவு கொலைவெறி மனிதனிடம் தாண்டவமாடுகிறது. கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மனிதனிடம் உள்ள மிருகவெறி தூண்டிவிடப் பட்டு மிருகத்தை விடவும் மோசமான நிலைக்கு அவன் தள்ளப் பட்டிருக்கிறான்.

இது எப்படி நடந்தது? இது எப்படி நடக்கிறது? ஏனெனில் உலகின் பல பாகங்களிலும் இது போல நடந்துகொண்டேதான் இருக்கிறது. இதன் அடிப்படை என்ன? தவறு எங்கே இருக்கிறது?

தவறு நமது சமுதாய அமைப்பில் இருக்கிறது. சுயநல கும்பலின் பேராசைக்கு அடிமைபட்டுப்போன நமது சமுதாய அமைப்பில் இருக்கிறது. ஆம். நாடு என்பது என்ன? இயற்கையான எல்லையா? ஆளும் வர்க்கத்தின் அதிகார வரம்புகளே நாட்டின் எல்லைகள். ஆனால் தேசப் பற்று என்ற பெயரால் எனது தேசம் என்ற போலியான, பொய்யான, நம்பிக்கை ஊட்டப்பட்டு மக்கள் வெறியேற்றப் படுகின்றனர். மொழி என்பதென்ன? கருத்துகளை பரிமாறிக் கொள்ள உதவும் சாதனம். அவ்வளவே. ஆனால் எனது தாய்மெரழி என்ற போலியான பொய்யான நம்பிக்கையை ஊட்டி மக்களை மதம் பிடித்தவர்களாக்குகின்றனர். இவை அரசியல் வாதிகளின் தந்திரத்திற்கு உதாரணங்கள். மதவாதிகள் தங்கள் பங்குக்கு “இராமன் என் கடவுள்,” “அல்லா என் கடவுள்,” என்று நம்பவைத்து மக்கள் ஒருவரையொருவர் அழித்துக்கொள்ள வழி செய்கின்றனர். ஆகவே அடிப்படை பிரச்னை மனிதனின் மூடநம்பிக்கை. மூடநம்பிக்கை வளர்க்கும் சுயநல கும்பல்கள், மூட நம்பிக்கையில் மூழ்கி மதம் பிடித்திருக்கும் மக்களுக்கு பகுத்தறிவும் விஞ்ஞானமும் புகட்டாமலிருக்கும் நமது சமூக அமைப்பு.

மொழி, நாடு, மதம் போன்றவை நாம் வளர பயன்படும் சாதனங்கள். அவை பாதுகாக்கப்பட வேண்டியவை, வளர்க்கப்பட வேண்டியவை. ஆனால்
அவை உயிர் உள்ளவை அல்ல. ஆகவே அவற்றிற்காக உயிரும், வாழ்வும் உணர்வும் உள்ள மனிதர்கள் அழிவதும், அழிக்கப்படுவதும் மடமையிலும் மடமை.

நான் ஓரு மனிதன். தமிழனும் முதலில் ஒரு மனிதன். சிங்களவனும் முதலில் ஒரு மனிதன். மனிதன் என்பது மட்டுமே உண்மையும்கூட. மற்றபடி நாடு, மொழி, நம்பிக்கைகளால் நாம் பெறும் உணர்ச்சிகள் உண்மையானவை அல்ல. அவை விளையாட்டாய், ஆனந்தமாய், வளர்ச்சிக்காக, பயன்படுத்தப் பட வேண்டும். ஆனால் அவைகளை உண்மையென நம்பி மதம் பிடிக்கக் கூடாது.

அப்படியானால் அதற்கு அடிப்படையில் நாம் மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும். நம்பிக்கைகள் இல்லாமல் வாழ்வை நேருக்கு நேர் சந்திக்கும் உயிர்துடிப்புள்ள, பகுத்தறிவுள்ள, நம்பகத்தன்மை கொண்ட(அதாவது அகத்திலிருந்து எழும் நம்பிக்கையுணர்வு, இது அடுத்தவர் சொல்லி வரும் நம்பிக்கையல்ல) மனிதர்களை, குழந்தைகளை, சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

இல்லாவிட்டால், காலங்காலமாக நடப்பதுபோல, சுயநல அதிகாரகும்பல், ஏதாவதொரு நம்பிக்கை அடிப்படையில் மனிதர்களிடையே பிளவை ஏற்படுத்தி, அவனை மோதவிட்டு, அவன் அடிமையாகவும் இவர்கள் தலைவர்களாகவும் இருப்பது தொடரவே செய்யும்.

“புரிந்து கொள்ளும்வரை கேள்வி கேள், அனுபவத்தை அறியும்வரை நம்பாதே”
என்ற அடிப்படையில் நமது குழந்தைகளை வளர விடுங்கள். அது போதும், இந்த அராஜகங்கள் ஒழிய.

அன்பும் வணக்கமும்.
சித்.

கவிதைப்பகுதி

தியானமும் அன்பும்!

தியானம் என்பது உன்னை அறிந்து கொள்வது.
அன்பு என்பது உன்னை அனுபவிப்பது.

ஆகவே அன்பு தியானத்தைக் கொடுக்கும்,
தியானம் அன்பைக் கொடுக்கும்.

அப்படி நடக்காவிட்டால்...............
உங்கள் அன்பு அன்பல்ல,
உங்கள் தியானம் தியானமல்ல,
இதுவே உரைகல்.

உன் குணம்

இரக்கம், பாசம் இவை பெண்மை குணங்கள்,

வீரம், நட்பு இவை ஆண்மை குணங்கள்,

காமம், பயம், பசி இவை உடலின் குணங்கள்,

அன்பு உயிரின் குணம்,
உன் குணம்.

ஓஷோ வீடியோ

1. OSHO: ZEN & the art of escaping the circle of life & death

2. OSHO: Sensitivity Can Be Shared

3. OSHO: Marriage and Children

கேள்வி பதில் பகுதி

பணத்தை பற்றி ஓஷோ என்ன கூறுகிறார் ?

1.
நீ பணத்தை ஒரு பிரச்சனையாக்கினால் ஒழிய அது ஓரு பிரச்சனையே அல்ல, காலங்காலமாக, தன்னை மதவாதிகள் என கூறிகொள்ளும் மக்கள், பணத்தைப் பற்றி மிகவும் கவலை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள், பணம் பற்றி கவலைப் படுவது ஒரு முட்டாள்தனமான விஷயம்! அதனோடு விளையாடுங்கள் ! அது உன்னிடம் இருந்தால் அதை ஆனந்தமாக அனுபவி! அது உன்னிடம் இல்லாவிட்டால் அது இல்லாத சுதந்திரத்தை ஆனந்தமாக அனுபவி! அது இல்லாதபோது நீ வேறு என்ன செய்யமுடியும் ? ஆனந்தமாக அனுபவி! அது உன்னிடம் இருக்கும்பொழுதும் வேறு என்ன செய்யமுடியும்? ஆனந்தமாக அனுபவி! அதைப் பற்றி தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்காதே. பணம் ஒரு பொம்மை. சில சமயங்களில் உன்னிடம் அது இருக்கும், அப்போது அதனோடு விளையாடு.

ஆனால் என்னுடைய உணர்வு என்னவென்றால் : பணத்தோடு விளையாடமுடியாத மக்களே, பணத்தை துறக்கிறார்கள்- அவர்கள் அதைப்பற்றி மிகவும் இறுக்கமாக இருக்கிறார்கள். அவர்கள் பணத்தைப் பற்றி மிகவும் பயப்படுகிறார்கள், ஏனெனில் ஆழமாக அடியில் அதனை பிடித்துகொண்டிருக்கிறார்கள்.

உனக்கு தெரியுமா? மகாத்மா காந்தியின் தலைமை சீடர் வினோபா பாவேவால் பணத்தை பார்க்க இயலாது. நீ வெறும் ஒரு ரூபாய் தாள் - மதிப்பற்றது, அதை அவர் பார்வைக்கு கொண்டுவந்தால் – அவர் தனது கண்களை மூடிக்கொள்வார். இது எந்த வகையான மனோபாவம்? இது துறவியின் செய்கையாக கருதப்படுகிறது ; நாடு முழுவதும் இவர் பணத்தை துறந்தவர் என பாராட்டபடுகிறார். நீ உண்மையிலேயே பணத்தை துறந்திருந்தால், எதற்காக நீ கண்களை மூடவேண்டும்?

நீ கண்களை மூடும் அளவிற்கு அந்த ஒரு ரூபாய் தாள் ஈர்ப்பு உடையதாகவா உள்ளது? நீ கண்களை மூடாவிட்டால் அந்த ஆளின் மீது குதித்துவிடுவாய் என பயமாக உள்ளதா? கண்டிப்பாக ஏதோ ஒன்று இருக்கவேண்டும். இது சிறிது அதிகப்படியாக தோன்றுகிறது. அதிக பயம் உள்ளது – இல்லாவிட்டால் எதற்காக உன் கண்களை மூடவேண்டும்? பல விஷயங்கள் கடந்து செல்கின்றன, ஆனால் நீ உனது கண்களை மூடுவதில்லை – இது வெறும் பணம்.

பணம் என்பது ஒன்றுமில்லை – பொருட்களை பரிமாற உதவும் வெறும் ஒரு கருவி. ஆனால் மக்கள் உண்மையிலேயே அடி ஆழத்தில் கஞ்சர்கள். பிடித்து தொங்குபவர்கள், அவர்களின் பிடித்துவைக்கும் தன்மையாலும், அவர்களின் கஞ்சதனத்தாலும், அவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள், துன்பப்படுகிறார்கள். முடிவில் ஒருநாள் அவர்கள் பணம்தான் அவர்களுக்கு துன்பத்தை விளைவிக்கிறது என நினைத்துக் கொள்கிறார்கள். பணம் உனக்கு துன்பத்தை விளைவிப்பதில்லை, பணம் எப்படி உனக்கு துன்பம் விளைவிக்கமுடியும்? கஞ்சத்தனம்தான் உனது துன்பத்தை விளைவிக்கிறது. பணம்தான் துன்பத்தை விளைவிக்கிறது என நினைத்துக்கொண்டு, அவர்கள் பணத்தை துறக்கிறார்கள். அவர்கள் பண உலகிலிருந்து தப்பி செல்கிறார்கள், பிறகு அவர்கள் தொடர்ந்து பயந்துகொண்டிருக்கிறார்கள், அவர்களின் கனவுகளில் அவர்கள் வங்கிகளுக்குள் நுழைந்து பெட்டகத்தை திறப்பது போன்ற விஷயங்கள் நடக்கும் – பணத்தின் மீது இச்சை கொள்வதால் – அது கண்டிப்பாக நடக்கும்.

பணம் ஒரு பிரச்சனை அல்ல! அதனை உபயோகபடுத்தலாம்.
உன்னிடம் அது இருந்தால் உபயோகப்படுத்து ; உன்னிடம் பணம் இல்லாவிட்டால், பணம் இல்லாதபோது உனக்கு இருக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்து. இதுதான் என்னுடைய வழிமுறை. நீ பணக்காரனாக இருந்தால் ஆனந்தமாக அனுபவி. ஏழை மனிதன் அனுபவிக்கமுடியாத சில இன்பங்களை செல்வம் கொண்டுள்ளது. நான் செல்வத்தோடும் இருந்திருக்கிறேன், ஏழையாகவும் இருந்திருக்கிறேன், நான் உண்மையாக கூறுகிறேன், பணக்காரர்கள் மட்டுமே அனுபவிக்ககூடிய ஒரு சில விஷயங்கள் இருக்கின்றன. உன்னிடம் செல்வம் இருக்கும்பொழுது ஆனந்தமாக அனுபவி. நான் திரும்பவும் உன்னிடம் கூறுகிறேன், நான் செல்வத்தோடும் இருந்திருக்கிறேன், ஏழையாகவும் இருந்திருக்கிறேன், ஏழை மக்கள் மட்டுமே அனுபவிக்ககூடிய விஷயங்கள் சில இருக்கின்றன. இரண்டையும் ஒரே சமயத்தில் அனுபவிக்கமுடியாது.

எனவே எப்போதானாலும், நடப்பது என்னவாக இருந்தாலும், ஆனந்தமாக அனுபவி. ஏழை மனிதன் ஒரு வகையான சுதந்திரத்தைக் கொண்டுள்ளான். வறுமை ஒரு வகையான தூய்மையை, ஒரு ஓய்வுதன்மையை, திருப்தியான தன்மையை கொண்டுள்ளது. மனம் மிகவும் கவலைபடுவதில்லை. கவலைபட ஏதுமில்லை, நீ நிம்மதியாக உறங்கலாம். ஏழை மனிதனுக்கு தூக்கமின்மை இயலாதது. எனவே குறட்டை விட்டு நன்றாக தூங்கு. ஏழ்மையிலிருந்து வரும் சுதந்திரத்தை ஆனந்தமாக அனுபவி.

சில சமயங்களில் நீ செல்வந்தனாக இருந்தால், செல்வத்தை அனுபவி, ஏனெனில் பணக்காரர்கள் மட்டுமே அனுபவிக்ககூடிய சில விஷயங்கள் இருக்கின்றன. சிறந்த ஓவியங்களை உனது சுவற்றில் நீ மாட்டலாம். ஏழை அவ்வாறு செய்ய இயலாது. உனது வீட்டில் நீ சிறந்த இசையை வைத்திருக்கலாம். ஏழை அவ்வாறு செய்ய இயலாது. உன்னுடைய வீட்டை சுற்றி நீ ஜென் தோட்டம் அமைக்கலாம், ஏழை அவ்வாறு செய்ய இயலாது. நீ கவிதை படிக்கலாம், நீ வரையலாம், நீ கிதார் வாசிக்கலாம், நீ ஆடலாம், பாடலாம், தியானம் செய்யலாம் ஆயிரக்கணக்கான விஷயங்கள் கிடைக்கின்றன.

என்னுடைய வழி: எது எப்படியிருந்தாலும், நீ அதன் மூலம் என்ன செய்யமுடியும் என்று பார். அது வறுமையாக இருக்குமானால் புத்தராக ஆகிவிடு. ஊர் சுற்றத் தொடங்கு, ஓரு பிச்சை பாத்திரத்தை எடுத்து கொள். பிச்சைக்காரருக்கு மட்டுமே இருக்ககூடிய அந்த அழகை அனுபவி. அவர் எந்த இடத்தையும் சேர்ந்தவரல்ல, இன்று இங்கே இருக்கிறார், நாளை அவர் போய்விடுவார். அவர் ஒரு ஓட்டம். அவருக்கு எந்த வீடும் இல்லை. மழை வரபோகிறது கூரையை சரிசெய்யவேண்டும் என்ற கவலை அவருக்கு இல்லை. யாராவது எதையாவது திருடிவிடுவார்களோ என்னும் பயம் அவருக்கு இல்லை. அவரிடம் எதுவும் இல்லை.

வறுமையாக இருக்கும்பொழுது வறுமையை ஆனந்தமாக அனுபவி. செல்வம் இருக்கும்பொழுது ஜனகராக ஆகிவிடு, அரசனாக ஆகிவிடு, பணத்தினால் கிடைக்கும் அனைத்து அழகுகளையும் அனுபவி.

என்னுடைய வழி முழுமையானது. நான் உனக்கு தேர்ந்தெடுக்க கற்றுத் தரவில்லை, நான் வெறுமனே ஒரு புத்திசாலியான மனிதன் எது எப்படியிருந்தாலும் அதனை அழகாக்கிவிடுவான் என கூறுகிறேன். புத்தியில்லாத மனிதன் சிரமப்படுகிறான். அவனிடம் பணமிருந்தால் அவன் சிரமப்படுகிறான் ஏனெனில் பணம் கவலைகளை கொண்டுவருகிறது. அவன் பணம் கொண்டுவரக்கூடிய இசையை, நடனத்தை, ஓவியத்தை இரசிப்பதில்லை. அவனிடம் பணம் இருந்தால் அவன் ஓய்வெடுக்க, தியானம் செய்ய, பள்ளதாக்குகளில் கத்திப் பாட, மற்றும் நட்சத்திரங்களோடு பேச அவன் செல்வதில்லை, அவன் கவலைபடுகிறான், தனது உறக்கத்தை இழந்துவிடுகிறான், பசியை இழந்துவிடுகிறான். பணம் இருக்கும்பொழுது அவன் தவறானதை தேர்ந்தெடுக்கிறான். இந்த மனிதன் எப்படியோ ஏழையானால், கடவுளின் அருளால் ஏழையானால், பிறகு அவன் ஏழ்மையில் சிரமப்படுகிறான், பிறகு அவன் தொடர்ந்து “அது இல்லை, இது இல்லை” எனக் கவலைப்படுகிறான். உன்னிடம் வறுமை உள்ளது!
அதனை ஆனந்தமாக அனுபவி!

Source: Take It Easy vol # 1 Chapter # 8 Question # 7

2.
நான் பணத்தை எதிர்க்கவில்லை. பணப்பிடிப்புள்ள மனத்தன்மையை தான் எதிர்க்கிறேன்! பொருட்களை வைத்திருப்பதை நான் எதிர்ப்பதில்லை.
நான் பிடித்து வைத்துக் கொள்ளும் தன்மையையே எதிர்க்கிறேன். இவை இரண்டும் முற்றிலும் வேறுபட்ட பரிமாணங்கள், ஒன்றுக்கொன்று எதிரானவை.

பணத்திற்கு எதிராக இருப்பது முட்டாள்தனம். பணம் ஒரு அழகான கருவி- பரிமாற்ற கருவி. பணம் இல்லாமல் முன்னேற்றம் அடைந்த கலாச்சாரமோ, சமுதாயமோ, பண்பாடோ, இருக்கமுடியாது.

பணம் உலகில் இருந்து மறைந்துவிட்டது என கற்பனை செய்து பாருங்கள். பிறகு வசதி, வாய்ப்பு அனைத்தும் அதனோடு சேர்ந்து மறைந்துவிடும். மக்கள் மிகவும் வறுமையில் தள்ளப்படுவார்கள். பணம் மிகப்பெரிய பணியை செய்துள்ளது. ஒருவர் அதனை பாராட்ட வேண்டும்.

ஆகவே நான் பணத்திற்கு எதிரியல்ல, ஆனால் நான் பணப்பிடிப்புள்ள மன தன்மைக்கு எதிரானவன்.- மக்கள் வேறுபடுத்துவதில்லை. முழு மனித சமுதாயத்தின் கடந்த காலமும் குழப்பத்திலேயே இருந்து வந்துள்ளது.

பணப்பிடிப்புள்ள மன தன்மையை விட்டுவிடுங்கள். ஆனால் பணத்தை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. பணம் உருவாக்கப்பட வேண்டும், செல்வம் உருவாக்கப்படவேண்டும். செல்வம் இல்லாவிடில் எல்லா அறிவியலும் மறைந்துவிடும், எல்லா தொழில்நுட்பங்களும் மறைந்துவிடும், மனிதனின் சிறந்த சாதனைகள் அனைத்தும் மறைந்துவிடும். மனிதனால் நிலவுக்கு செல்லமுடியாது, மனிதனால் பறக்க இயலாது. பணம் இல்லாவிடில், மொழி இல்லாவிடில் எல்லா கலைகளும், எல்லா இலக்கியங்களும், எல்லா கவிதைகளும், எல்லா இசையும் அழிந்துவிடுவதைப் போல, வாழ்வு உற்சாகம் இழந்துவிடும். மொழி உனக்கு எண்ணங்களை பரிமாறிக்கெரள்ள, தெரிவிக்க உதவுவதைப் போல, பணம் உனக்குப் பொருட்களை பரிமாறிக்கொள்ள உதவுகிறது. அதுவும் ஓருவகை தொடர்புபடுத்திக் கொள்ளுதலேயாகும்.

ஆனால் பண-மனம் படைத்த மக்கள் பணத்தை பிடித்து வைத்து கொள்கிறார்கள். அவர்கள் பணத்தின் முழு பயனையும் அழித்துவிடுகிறார்கள். அதன் பயன் ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு செல்வதே. அதனால்தான் அது கரன்சி என அழைக்கபடுகிறது, அது மின்சாரத்தைப்(கரண்ட்) போல, இருக்கவேண்டும், நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும். அது எவ்வளவு நகர்கிறதோ, அவ்வளவு நல்லது. சமுதாயம் அந்த அளவிற்கு செல்வச்செழிப்பு அடைகிறது.

என்னிடம் ஒரே ஒரு ரூபாய் இருந்தாலும் அது நகர்ந்துகொண்டே இருக்கிறது. அது ஐயாயிரம் சந்நியாசிகளிடம் நகரும்பெரழுது அந்த ஒரு ரூபாய் ஐயாயிரம் ரூபாய் ஆகிறது. அது அதிகமாக நகர்ந்தால் அதிக பணம் உருவாக்கப்படுகிறது. அது ஐயாயிரம் ரூபாய் இருந்ததை போல செயல்பட்டுள்ளது- வெறும் ஒரு ரூபாய்! ஆனால் பண-மனம் படைத்த மனிதன் அதனைப் பிடித்துகொள்கிறான். அவன் அது கரன்சியாக இருப்பதை நிறுத்திவிடுகிறான். அவன் அதனை பிடித்து வைத்து கொள்கிறான். அதனிடம் அவன் பிடிப்பு கொள்கிறான், அவன் அதனை உபயோகப்படுத்துவதில்லை.

Source: Philosophia Ultima Chapter # 12 Question # 2

வேரும் இறக்கையும் – ஓஷோவின் கதை - 5

நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு முறை பணக்கார கெளரவமான குடும்பத்தை சேர்ந்த ஒரு இளைஞன், ஒரு ஜென் குருவிடம் வந்தான். அவன் எல்லாவற்றையும் அனுபவித்தவன். எல்லா ஆசைகளிலும் ஈடுபட்டவன். அவனிடம் போதுமான பணம் இருந்தது. எனவே பிரச்சனை இல்லை.

ஆனால் பிறகு அவனுக்கு சலித்து விட்டது. காமத்துடன், பெண்களுடன், மதுவுடன் சலித்துவிட்டது. அவன் ஜென்குருவிடம் வந்து, எனக்கு உலகம் சலித்து போய்விட்டது. நான் யார் என்பதை நான் அறிந்து கொள்ள ஏதாவது வழி உள்ளதா என கேட்டான்.

தொடர்ந்து அந்த இளைஞன், ஆனால் நீங்கள் ஏதும் சொல்வதற்க்கு முன்னால் நான் என்னைப் பற்றி ஒன்றை சொல்லி விடுகிறேன். என்னால் முடிவெடுக்க இயலாது. என்னால் எதையும் நீண்டகாலம் செய்ய முடியாது. எனவே நீங்கள் எனக்கு ஏதாவது முறையை கொடுத்தால் அல்லது என்னை தியானிக்கும் படி கூறினால் நான் ஒரு சில நாட்கள் செய்யக் கூடும். அதன் பின் நான் உலகில் ஒன்றுமில்லை என நன்றாக தெரிந்திருந்தும், அங்கு துன்பம், மரணம் மட்டுமே காத்திருக்கிறது என நன்றாக தெரிந்திருந்தாலும், தப்பித்துக் கொள்வேன். இதுதான் என் மனதின் வழி. என்னால் தொடர்ந்து செய்யமுடியாது, என்னால் எந்த காரியத்திலும் ஆழ்ந்து ஈடுபட முடியாது, எனவே நீங்கள் எதையாவது தேர்ந்தெடுப்பதற்க்கு முன், இதனை நினைவில் கொள்ளுங்கள். எனக் கூறினான்.

குரு, நீ ஆழமாக ஈடுபடாவிட்டால் பிறகு அது மிகவும் கடினம். ஏனெனில் நீ கடந்த காலத்தில் செய்த அனைத்தையும் அழிப்பதற்க்கு நீண்ட முயற்சி தேவைப்படும். நீ பின்புறமாக பயணிக்க வேண்டும். அது திரும்பி செல்லுதலாக இருக்கும். நீ புதிதாக, இளமையாக, பிறந்த கணத்திற்கு செல்ல வேண்டும். அந்த புத்துணர்வை மீண்டும் அடைய வேண்டும். அது முன்னால் செல்வதல்ல, நீ பின்னால் செல்ல வேண்டும். திரும்பவும் குழந்தையாக வேண்டும். ஆனால் நீ என்னால் எதிலும் ஆழமாக ஈடுபட முடியாது எனக் கூறினால் சில நாட்களுக்குள் நீ தப்பி சென்று விடுவாய். அது கஷ்டமாக இருக்கும். ஆனால் நான் உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன், எப்போதாவது நீ உன்னை முழுமையாக மறந்து போகும் அளவிற்க்கு ஆர்வத்துடன் ஆழமாக எதையாவது செய்ததுண்டா?

இளைஞன் சிந்தித்து பார்த்துவிட்டு, ஆமாம், சதுரங்கத்தில் மட்டுமே அது நடந்துள்ளது. சதுரங்க விளையாட்டில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எனக்கு அது மிகவும் பிடிக்கும். அது மட்டுமே என்னை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. மற்றவை அனைத்தும் வீழ்ந்து விட்டன. சதுரங்கம் மட்டுமே இன்னும் என்னுடன் உள்ளது. அதன்மூலம் நான் எப்படியோ என்னுடைய நேரத்தை கடத்திக் கொண்டிருக்கிறேன், எனக் கூறினான்.

குரு அப்படியென்றால் ஏதாவது செய்யலாம். நீ காத்திரு எனக் கூறிவிட்டு அவர் தன் உதவியாளனை அழைத்து பணிரெண்டு வருடங்களாக மடாலயத்தில் தியானம் செய்து கொண்டிருக்கும் ஒரு துறவியை சதுரங்க அட்டையோடு அழைத்து வரும்படி கூறினார். சதுரங்க அட்டை கொண்டு வரப் பட்டது. துறவி வந்தார். அவருக்கு சிறிது சதுரங்கம் தெரியும், ஆனால் பணிரெண்டு வருடங்களாக அவர் ஒரே அறையில் தியானித்துக் கொண்டிருந்தார். அவர், உலகம், சதுரங்கம் அனைத்தையும் மறந்து விட்டார்.

குரு அவரை பார்த்து, துறவியே கேள், இது ஓரு ஆபத்தான விளையாட்டாக இருக்கப் போகிறது. நீ இந்த இளைஞனால் தோற்கடிக்கப் பட்டால், இதோ இந்த வாளால் நான் உனது தலையை வெட்டி விடுவேன். ஏனெனில் நான் தியானதன்மையுள்ள ஒரு துறவி, பணிரெண்டு வருடங்களாக தியானித்துக் கொண்டிருக்கும் ஒருவர், ஒரு சாதாரண இளைஞனிடம் தோற்றுப்போவதை விரும்பமாட்டேன். ஆனால் நீ என்னுடைய கையால் இறந்தால் பிறகு நீ மிக உயர்ந்த சொர்க்கத்தை அடைவாய். எனவே கவலைப் படாதே, எனக் கூறினார்.

இளைஞன் சிறிது சங்கடமடைந்தான். பிறகு குரு அவனிடம் திரும்பி, இதோ பார், நீ சதுரங்கத்துள் மூழ்கி விடுவாய் என நீ கூறியுள்ளாய். எனவே இப்போது முழுமையாக முழ்கிவிடு – ஏனெனில் இது வாழ்வா சாவா என்பதற்க்கான கேள்வி. நீ தோற்றுவிட்டால் நான் உன்னுடைய தலையை வெட்டிவிடுவேன். நினைவில் கொள். ஆனால் நான் உனக்கு சொர்க்கத்தை பற்றி உறுதியளிக்க முடியாது. அந்த துறவி எப்படியிருந்தாலும் போய்விடுவார். ஆனால் நான் உனக்கு எந்த சொர்க்கத்தைப் பற்றியும் உறுதியளிக்க முடியாது. நீ இறந்தால் நரகம்தான்.- உடனடியாக நீ ஏழாவது நரகம் சென்று விடுவாய் எனக் கூறினார்.

ஒரு நொடி இளைஞன் தப்பி செல்ல நினைத்தான். இது ஆபத்தான விளையாட்டாக இருக்கப் போகிறது, இதற்காக அவன் இங்கு வரவில்லை. ஆனால் பிறகு அது கெளரவ குறைச்சலாக தெரிந்தது. அவன் ஓரு சாமுராய், ஓரு வீரனின் மகன். மரணத்தின் காரணமாக தப்பிச் செல்வது அவன் இரத்தத்தில் இல்லை. எனவே அவன் சரி எனக் கூறினான்.

விளையாட்டு தொடங்கியது. இளைஞன் வேகமான காற்றினால் ஆடும் இலையைப் போல நடுங்கத் தொடங்கினான். முழு உடலும் நடுங்கியது. அவனுக்கு வியர்க்க, விறுவிறுக்க தொடங்கியது. அவனுக்கு தலைமுதல் பாதம் வரை வியர்த்துக் கொட்டியது. அது வாழ்வா, சாவா என்பதற்குரிய கேள்வியல்லவா?

சிந்தனை நின்றுவிட்டது. ஏனெனில் இப்படிப் பட்ட ஒரு அவசரத்தில் நீ சிந்திக்க முடியாது. சிந்தனை ஓய்வு நேரத்திற்கு உரியது. எந்த பிரச்னையும் இல்லாத போது நீ சிந்திக்கலாம். உண்மையிலேயே ஒரு பிரச்னை எழும்போது சிந்தனை நின்றுவிடுகிறது. ஏனெனில் மனதிற்கு நேரம் தேவை. அபாயம் உள்ளபோது நேரம் இருப்பதில்லை. உடனடியாக நீ ஏதாவது செய்தாக வேண்டும்.

ஒவ்வொரு நொடியும் இறப்பு அருகில் வந்து கொண்டிருக்கிறது. துறவி விளையாடத் தொடங்கினார். அவர் சாந்தமாகவும் அமைதியாகவும் காட்சியளித்தார். இளைஞன், தனது சாவு நிச்சயம் என நினைத்துக் கொண்டான். ஆனால் எண்ணங்கள் மறைந்த பிறகு, அவன் அந்த நொடியில் முழுமையாக முழ்கி விட்டான். எண்ணங்கள் மறைந்த பிறகு, அவன் இறப்பு காத்திருக்கிறது என்பதையும் மறந்து விட்டான். ஏனெனில் மரணம் கூட ஓரு எண்ணமே. அவன் மரணத்தை மறந்து விட்டான். அவன் வாழ்க்கையை பற்றி மறந்துவிட்டான். அவன் விளையாட்டின் ஒரு பகுதியாகி விட்டான். ஆட்கொள்ளப் பட்டு அதில் முழுமையாக முழ்கி விட்டான்.

போக, போக மனம் முழுமையாக மறைய, மறைய அவன் அருமையாக விளையாடத் தொடங்கினான். அவன் அதுபோல இதுவரை விளையாடியதேயில்லை. ஆரம்பத்தில் துறவி வெற்றி பெற்றுக் கொண்டிருந்தார். ஆனால் இளைஞன் அதில் முழ்கிய ஒரு சில நிமிடங்களில் அருமையாக காய்களை நகர்த்த தொடங்கினான். துறவி தோற்றுப் போக ஆரம்பித்தார். அந்த நொடி மட்டுமே இருந்தது. நிகழ்காலம் மட்டுமே இருந்ததால் அங்கு எந்த பிரச்னையும் இல்லை. உடல் சரியாகி விட்டது, நடுக்கம் நின்றுவிட்டது. வியர்வை ஆவியாகி விட்டது. லேசானவனாக, இறக்கை போல எடையற்றவனாக உணர்ந்தான். வியர்வை கூட உதவியது. அவன் எடையற்றவனானான். அவனுடைய முழு உடலும் பறந்துவிடலாம் போல இருந்தது. அவனுடைய மனம் இல்லை. பார்வை தெளிவடைந்தது. மிகவும் தெளிவடைந்தது. அவனால் முன்னால் பார்க்க முடிந்தது. ஐந்து நகர்தல் முன்பே பார்க்க முடிந்தது. அவன் இதுவரை இவ்வளவு அழகாக விளையாடியதேயில்லை. மற்றவரின் விளையாட்டு குலையத் தொடங்கியது. ஒரு சில நிமிடங்களில் துறவி தோற்றுவிடுவார். அவனுடைய வெற்றி நிச்சயமாகி விட்டது.

அப்போது திடீரென அவனுடைய கண்கள் தெளிவாக இருந்த போது, கண்ணாடி போல பார்வை கச்சிதமாக, ஆழமாக இருந்தபோது, அவன் அந்த துறவியை பார்த்தான். அவர் மிகவும் வெகுளித்தனமாய் இருந்தார். பணிரெண்டு வருட தியானம் அவரை மலர் போல ஆக்கியிருந்தது.

பணிரெண்டு வருட எளிமை – அவர் மிகவும் தூய்மையடைந்திருந்தார். ஆசைகளற்று, எண்ணங்களற்று, இலக்கற்று, காரணமற்று இருந்தார். அவர் எவ்வளவு வெகுளியாக இருக்கமுடியுமோ அவ்வளவு வெகுளியாக இருந்தார்......ஓரு குழந்தை கூட அவ்வளவு வெகுளியாக இல்லை. அவருடைய அழகிய முகம், அவருடைய தெளிந்த வான்நீலம் கொண்ட கண்கள்.......இந்த இளைஞன் அவரிடம் கருணை கொண்டான். இப்போதோ, பிறகோ அவருடைய தலை வெட்டப்படும். அவன் இந்த கருணையை உணர்ந்த அந்த நொடியில், தெரியாத கதவுகள் திறந்தன. தெரியவே தெரியாத ஏதோ ஒன்று அவனுடைய இதயத்தை நிரப்பத் தொடங்கியது. அவன் மிகவும் பரவசமாக உணர்ந்தான். அவனுடைய உள்ளிருப்பு முழுவதிலும் மலர்கள் கொட்டத் தொடங்கின. அவன் மிகவும் பரவசமாக உணர்ந்தான். அவன் இதுவரை இந்த பரவசத்தை, இந்த அழகை, இந்த ஆசீர்வாதத்தை அறிந்ததேயில்லை.

பிறகு அவன் தெரிந்தே காய்களை தவறாக நகர்த்தினான். ஏனெனில் நான் இறந்தால் எதுவும் இழப்படையப் போவதில்லை. என்னிடம் மதிப்புக்குரியது ஏதுமில்லை. ஆனால் இந்த துறவி கொலை செய்யப் பட்டால் அழகான ஒன்று அழிந்துவிடும். ஆனால் நான் பயனற்றவன். துறவியை வெற்றி பெறச் செய்வதற்க்காக தெரிந்தே அவன் தவறாக காய்களை நகர்த்தத் தொடங்கினான். அந்த நொடியில் குரு மேசையை தலைகீழாக கவிழ்த்துவிட்டு சிரிக்கத் தொடங்கினார். அவர், இங்கு யாரும் தோற்கவில்லை. நீங்கள் இருவரும் வென்று விட்டீர்கள். எனக் கூறினார்

இந்த துறவி ஏற்கனவே சொர்க்கத்தில் இருக்கிறார். அவர் செழிப்பாக இருக்கிறார். அவருடைய தலையை வெட்ட வேண்டிய தேவை இல்லை. “உன்னுடைய தலை வெட்டப் படும்” என குரு கூறிய போது அவர் கவலைப் படவே இல்லை. ஒரு எண்ணம் கூட அவர் மனதில் உதயமாகவே இல்லை. தேர்ந்தெடுக்கும் கேள்வியே இல்லை.- குரு இது இப்படித்தான் எனக் கூறினால் அது சரி. துறவி அவருடைய முழு இதயத்துடன் “சரி“ எனக் கூறிவிட்டார். அதனால்தான் வியர்வையோ, நடுக்கமோ இல்லை. துறவி சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தார். இறப்பு ஓரு பிரச்சனையே அல்ல.

குரு நீ வெற்றி பெற்றுவிட்டாய். உன்னுடைய வெற்றி இந்த துறவியின் வெற்றியை விடவும் பெரியது. நான் இப்போது உன்னை சீடனாக்கி கொள்கிறேன். நீ இங்கு இருக்கலாம். விரைவில் நீ ஞானமடைவாய் எனக் கூறினார்.

இரண்டு அடிப்படையான விஷயங்களும் நடந்து விட்டன, தியானம் மற்றும் கருணை. இவை இரண்டையும் புத்தர் அடிப்படையானவை எனக் கூறியுள்ளார். பிரக்ஞை, கருணை. தியானம் மற்றும் கருணை.

இளைஞன் எனக்கு விளக்கமளியுங்கள் எனக் கேட்டான். எனக்கு தெரியாத ஏதோ ஒன்று நடந்துள்ளது. நான் ஏற்கனவே நிலைமாற்றம் அடைந்துவிட்டேன். நான் ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னால் உங்களிடம் வந்த அதே இளைஞன் அல்ல. அந்த மனிதன் ஏற்கனவே இறந்துவிட்டான். ஏதோ ஓன்று நடந்தது. நீங்கள் அதிசயம் நிகழ்த்தி விட்டீர்கள். எனக் கூறினான்.

குரு, இறப்பு மிக விரைவில் நேரிடக்கூடியதாக இருந்ததால், உன்னால் சிந்தனை செய்ய முடியவில்லை. எண்ணங்கள் நின்றுவிட்டன. இறப்பு மிகவும் பக்கத்தில் இருந்ததால் சிந்தனை இயலாத காரியமாகி விட்டது. இறப்பு மிக அருகில் இருந்ததால் உனக்கும் இறப்புக்கும் இடையே இடைவெளி இல்லை. எண்ணங்கள் நகர இடம் தேவை. இடம் இல்லை, எனவே சிந்தனை நின்றுவிட்டது. தியானம் தன்னிச்சையாக நிகழ்ந்தது. ஆனால் அது போதுமானதல்ல. ஏனெனில் அபாயத்தில் நடைபெறும் இந்த வகையான தியானம் தொலைந்து விடும். அபாயம் போனவுடன் தியானமும் போய்விடும். எனவே நான் சதுரங்க அட்டையை எறிய முடியாது. நான் காத்திருக்க வேண்டியிருந்தது. எனக் கூறினார்.

உண்மையிலேயே தியானம் நிகழ்ந்தால் காரணம் என்னவாக இருந்தாலும் கருணை பின் தொடர வேண்டும். தியானத்தின் மலர்ச்சி கருணை. கருணை வரவில்லை எனில் உனது தியானம் ஏதோ ஒரு இடத்தில் தவறாகவே உள்ளது.

பிறகு நான் உனது முகத்தை பார்த்தேன். நீ பரவசத்தில் திளைத்திருந்தாய். உன்னுடைய கண்கள் புத்தரைப் போல இருந்தன. நீ துறவியை பார்த்து இந்த துறவிக்காக என்னை தியாகம் செய்வது சிறந்தது. இந்த துறவி என்னை விட மதிப்பு வாய்ந்தவர். என உணர்ந்து நினைத்துக் கொண்டாய்.

இதுதான் கருணை. உன்னை விட மற்றவர் முக்கியமாக படும்போது, நீ மற்றவருக்காக உன்னை தியாகம் செய்யும் பொழுது அது அன்பு. நீ வழியாகவும், மற்றவர் குறிக்கோளாகவும் ஆகும்போது அது அன்பு. நீ குறிக்கோளாகவும், மற்றவர் வழியாகவும் ஆகும்போது அது காமஇச்சை. காமஇச்சை எப்போதும் தந்திரமானது. அன்பு எப்போதும் கருணை மயமானது.

பிறகு நான் உனது கண்களில் கருணை எழுவதை கண்டேன். பிறகு நீ தோற்றுப் போவதற்க்காகவே காய்களை தவறாக நகர்த்தினாய். எனவே நீ கொல்லப்பட்டு இந்த துறவி காப்பாற்றப்படுவார். அந்த வினாடியில் நான் சதுரங்க அட்டையை கவிழ்த்தாக வேண்டும். நீ வெற்றி பெற்றுவிட்டாய். இப்போது நீ இங்கே இருக்கலாம். நான் உனக்கு தியானம் கருணை இரண்டையும் கற்றுக் கொடுத்துவிட்டேன். இப்போது இந்த வழித் தடங்களை பின் தொடர். அவை உனது தன்னிச்சையான நிலையாகட்டும். – சூழ்நிலையை பொறுத்தோ, எந்த அபாயத்தையும் சார்ந்தோ அல்ல. அவை உனது இருப்பின் ஒரு இயல்பாகட்டும்.

இந்த கதையை உனக்குள் சுமந்து கொள். உனது இதயத்தில் சுமந்திரு. அது உனது இதயத்தின் துடிப்பாகட்டும். நீ தியானத்தில் வேர் கொண்டு கருணையின் இறக்கைகளை கொண்டிருப்பாய். அதனால்தான் நான் உனக்கு இரண்டு விஷயங்களை கொடுக்க விரும்புகிறேன் எனக் கூறுகிறேன். இந்த பூமியில் வேர்களும் அந்த சொர்க்கத்தில் இறக்கைகளும். தியானம் இந்த பூமி, இது இப்போது இங்கே, இந்த நொடியில் நீ உனது வேர்களைப் பரப்பலாம் அதனைச் செய். வேர்கள் இருக்குமானால் உனது இறக்கைகள் உயர்ந்த வானத்தை அடையும். கருணை என்பது வானம், தியானம் என்பது பூமி. தியானமும், கருணையும் சந்திக்கும்பொழுது ஒரு ஞானி பிறக்கிறார்.

தியானத்திற்குள் மிக மிக ஆழமாக செல், அப்போதுதான் நீ கருணையில் மிக மிக உயரமாக செல்லமுடியும். எவ்வளவு ஆழமாக மரத்தின் வேர் இருக்கிறதோ, அந்த அளவிற்கு உயரமான சிகரங்களை மரம் அடையும். நீ மரத்தை பார்க்கமுடியும், நீ வேர்களை பார்க்க இயலாது, ஆனால் அவை எப்போதும் ஒரே விகிதத்திலேயே இருக்கும். மரம் வானத்தை அடைந்தால் வேர்கள் கண்டிப்பாக பூமியின் இறுதிவரைச் சென்றிருக்கும். விகிதாச்சாரம் ஒன்றே. உன்னுடைய தியானம் எவ்வளவு ஆழமாக உள்ளதோ, அதே ஆழத்தை உனது கருணையும் கொண்டிருக்கும். எனவே கருணைதான் அளவுகோல். உன்னிடம் கருணை இல்லை, ஆனால் நீ தியானத்தன்மையுடன் இருப்பதாக நீ நினைத்துகொண்டிருந்தால் பிறகு நீ உன்னையே ஏமாற்றிக்கொள்கிறாய். கருணை கண்டிப்பாக நடைபெறவேண்டும், ஏனெனில் அதுவே மரத்தின் மலர்தல்.

தியானம் கருணையை அடைவதற்குரிய வழிமுறை. கருணைதான் வாழும்வழி.

Source : A BIRD ON THE WING - CHAPTER # 11

No comments: