Friday, October 22, 2010

மலர் 2 இணைய இதழ் 5 11 டிசம்பர் 2009

தலையங்கம்

அன்பு நண்பர்களே,

சக்தி என்கிற சொல் மிக முக்கியமானது. சக்திதான் இந்த உலகத்தின் மூலம். சக்தியால் ஏற்படும் சலனமே இந்த மாயை. சிவம் என்பது சாட்சிபாவம். மையம். சக்தி என்பது எலக்ரான் உலகம்.

பாரதி சக்திகொடு, சக்தி கொடு என்று பாடுகிறார். பராசக்தி என்று எங்கும் பரவியுள்ள சக்தியை வழிபடுகிறார்.

தங்குதடையற்ற பிளவற்று ஒருமித்து பாயும் சக்திதான் வாழ்வு. குழந்தையிடம் அப்படித்தான் இருக்கிறது சக்தி.

சக்தி குறைந்தால் அத்துணை நோயும் வரும். ஆகவே நோயின் மூலகாரணம் சக்தி குறைவு. மனிதனின் கெட்ட குணங்கள், தீய பழக்கங்கள், எல்லாம் நோய்களே. கெட்டவன் என்று எந்த மனிதனும் இல்லை. கெட்டவன் நல்லவனாவதும், நல்லவன் கெட்டவனாவதும் சக்தி நிலை பொறுத்து மாறும்.

பொங்கிப் பெருகும் சக்தியே அன்பு. பயத்தில், ஆபத்தில், சக்தியை அடக்கி, ஒடுக்கி உடலின் மூலமோ, மனதின் மூலமோ மட்டும் பாய்ச்சுகையில் ஏற்படுபவையே கோபம், வன்முறை, ஆத்திரம், மூர்க்கத்தனம், பொறாமை வெறி போன்றவை.

இவை தற்காப்புக்காக மிருகங்களுக்குக் கண நேரம் நிகழ்கிறது. பிறகு அவைகளின் சக்தி இயல்பாக தங்குதடையற்று பிளவற்று ஒருமித்துப் பாய்கிறது. ஆகவேதான் அவை அழகாக, ஆனந்தமாய், தளர்வாய், இருக்கின்றன.

ஆகவே கெட்டவர் என்பவரிடம் சக்தி பிளவுபட்டு கிடக்கிறது. ஏதோ பயத்தில், தற்காப்பில், அது ஒடுங்கி மனத்திடம் சிக்கி உணர்ச்சிப் பந்தாக மாட்டிக் கிடக்கிறது. அதிலிருந்து மீளாமல், மீள முடியாமல் திரும்ப திரும்ப அந்த சுழல் வரும்போது அந்த நோய் தலைகாட்டுகிறது. ஆகவே கெட்டவர் கிடையாது. கெட்டது என்பது கெட்டவர் செய்வதுதான். நல்லது என்பது நல்லவர் செய்வதுதான்.

தீமை என்பது தீ போல சுட்டெரிக்கும் செயல்கள். கெட்டவராக மாறும் சமயத்தில் ஒரு மனிதனிடம் பிறக்கும் செயல்கள் இது.

ஆகவே மனிதர்களைப் பிரிக்காதீர்கள். அதுவும் குழந்தைகளுக்கு முத்திரை குத்தாதீர்கள்.

சக்தி ஒவ்வொருவரிடமும் எங்கு முடிச்சாகி சிக்கிக் கிடக்கிறது, எங்கு பிளவுபட்டுப் போகிறது, அது எந்த சூழலில் ஏற்பட்டது, என்று அவரவரே கண்டு பிடிக்க உதவி செய்து அவர்களது சக்தி இயல்பாக தங்குதடையின்றி பிளவுபடாமல் ஒருமித்து பிரபஞ்ச இருப்போடு ஓடச் செய்தால் எல்லோரும் நல்லவரே. தற்காப்புக்காக கண நேரம் எழும் மிருக உணர்ச்சிகள் கூட விழிப்புணர்வு வளர வளர மனிதனிடம் மாறிப் போகும்.

விழிப்புணர்வோடு உங்களை நீங்கள் உள்முகமாக ஆராயுங்கள். கணத்துக்குக் கணம் எழும் எண்ணங்களின் பின்புறம் சென்று பாருங்கள். எந்தக் கருத்து, சிந்தனை, கொள்கை, கோட்பாடு, தத்துவத்திலிருந்து அந்த எண்ணம் வருகிறது என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். கவனமும் பார்த்தலும்தான் இதற்குத் தேவை. சிந்திப்பதும் எண்ணிப்பார்த்தலும் தேவையில்லை. எனது எண்ணம் இது என்ற பிடிப்பு இல்லாமல் விலகி நின்று சாட்சி பாவத்தோடு பார்ப்பதே தேவை இதற்கு.

இதைக் கண்டுகொண்டால் பின் அந்தக் கருத்தை, அந்த கட்டுத்திட்டத்தை நீங்கள் எந்த சூழலில் எந்த மன நிலையில், ஆபத்தில், பயத்தில் யாரிடமிருந்து அல்லது எங்கிருந்து எடுத்துக் கொண்டீர்கள் என்பதையும் பார்க்க முடியும். இதற்கு இன்னும் கொஞ்சம் விழிப்புணர்வு வெளிச்சம் தேவை. அவ்வளவுதான்.

இப்படி எந்த உணர்ச்சியில் இந்தக் கட்டுத்திட்டம் ஏற்பட்டது நம் மனதில் என்பதைக் கண்டுகொள்ள உதவுவதே அகச்சிகிச்சை முறைகள். அந்தக் கணத்தை, கண நேர உணர்ச்சியை விழிப்புணர்வோடு நம்மால் பார்க்க முடியும்போது, அதனால் நம் மனதில் ஏற்படுத்திக் கொண்ட பிளவும் கட்டுத்திட்டமும் உடைந்து விடும்.

திரும்பவும் நாம் குழந்தை போல ஆவோம்.

இப்படி கணநேர உணர்ச்சியை கண நேரம் மட்டுமே வாழ்ந்து கடந்து விடுபவை மிருகங்கள். நாம் கண நேர உணர்ச்சிகளை வாழ்ந்து கடக்காமல் அதையொட்டி ஒரு கட்டுத்திட்டத்தை, அதற்கான ஒரு கருத்தை, கொள்கையை, கோட்பாட்டை, ஏற்படுத்தி அதையொட்டி எண்ணங்களை வைத்து கோட்டை கட்டி அதன்படி செயல்பட்டு உலகத்தையே நமக்குத் தகுந்தாற்போல மாற்றும் விளையாட்டை மிகவும் பதட்டத்துடனும் இறுக்கத்துடனும் செய்து வருகிறோம். இங்குதான் மனிதன் தன் பகுத்தறிவால் வழி தடுமாறியது நிகழ்ந்தது.

மனிதனுக்கு இயற்கையிலேயே உள்ள விழிப்புணர்வால் அடைந்த பரிசு பகுத்தறிவு. ஆனால் நமது பகுத்தறிவு நமது புலன்களின் எல்லைக்கு உட்பட்டதே. நமது பார்வை என்பது நமது கண் பார்ப்பதே. ஆனால் உலகம் உண்மையில் எப்படி இருக்கிறது என்றறிய நமக்கு ஒரு வழியும் இல்லை. நமது கண்ணுக்குத் தெரியும் வண்ணமே நமது உலகம். இதனால்தான் வள்ளுவரும்கூட
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றமென்று ஐந்தின்
வகை தெரிவான் கட்டே உலகு.
என்று கூறுகிறார்.

அப்படியானால் நாம் எப்படி வாழ வேண்டும் பகுத்தறிவைப் பயன்படுத்தக் கூடாதா தாராளமாக பயன்படுத்தலாம். நமக்குக் கிடைத்துள்ள பகுத்தறிவை அதன் பயன்பாட்டு எல்லைக்கு உட்பட்ட விஷயங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதனால் விஞ்ஞானப் பார்வை கிடைக்கும். வாழ்வு வளம் பெறும். வசதி பெறும். இதுதான் புத்திசாலித்தனம்.

ஆனால் விழிப்புணர்வோடு இருந்து கடந்து செல்ல வேண்டிய, வாழ்ந்து வளர வேண்டிய மிருக உணர்ச்சிகளைப் பகுத்தறிவு கொண்டு அடக்கியாளப் புறப்பட்டதுதான் மனிதனின் மிகப் பெரும் தவறு. பகுத்தறிவால் கட்டுதிட்டமும், கொள்கை, கோட்பாடும் கொண்டு உணர்ச்சிகளை வெல்ல நினைத்த மனித சமுதாயத்தால் ஏற்பட்ட விளைவுதான் இன்றைய பிளவுபட்ட மனிதகுலம்.

சக்தி குன்றிய மனநோய் பீடித்த மனிதகுலம்தான் இன்றைய நிதர்சனம்.
வாழ துடிக்கும் இளமை போய், பாதுகாப்புக்குள் பதுங்க நினைக்கும் இளமை. வீரம் விளைந்தது போய், தந்திரம் முளையிலேயே முளைவிடும் குழந்தைப் பருவம். காதல் மலர்ந்தது போய், காமம் மட்டுமே கோலோச்சும் காலம் இது.

இதற்கெல்லாம் முடிவுதான் என்ன தியானம் செய்யுங்கள் ஓஷோவின் பேச்சுக்களை கேளுங்கள். விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். அகசிகிச்சை செய்து கொள்ளுங்கள்.

பிளவுபட்ட மனிதனாக இல்லாமல் ஒருவனாக மாறுங்கள். வாழ்ந்து பார்ப்பதே வாழும் வழி. வளரும் வழி. கிணற்றில் குதிக்காமல் நீச்சல் பழக நினைக்காதீர்கள். நல்லதும், கெட்டதும் நினைத்து வாழ பயம் கொள்ளாதீர்கள். இயல்பான தங்குதடையற்ற பிளவுபடாத பிரபஞ்ச இருப்போடு ஒருமித்துப் பாயும் சக்திப் பெட்டகம் நீங்கள்.

உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்திறன், உங்களால் இந்த பிரபஞ்சத்தில் ஒரு நிகழ்வு, உங்களால் மட்டுமே இந்த பிரபஞ்சத்தில் இட்டு நிரப்பக்கூடிய ஒரு இடம் உங்கள் ஒவ்வொருவரிடமும் உள்ளது.

நீங்கள் முழுமையாக வாழுங்கள். வளருங்கள். பகுத்தறிவோடும், விழிப்புணர்வோடும் வளருங்கள். உங்கள் மணம்தான் உங்கள் பேரின்ப நிலை. உங்கள் சுவைதான் உங்கள் வாழ்வின் உச்சம்.

அன்பு,
சித்.

கவிதை

இதயம் திற

நண்பா,
அன்பு அம்பு போன்று இருக்கக் கூடாது,
அது ஆன்மநேயமாக பொங்கிப்பெருக வேண்டும்,
இந்த ஆன்ம நேயமே ஆலயம்.

இந்த ஆலயத்தில் நுழைய, எந்த அறிவும் பயிற்சியும் திறமையும் தேவையில்லை. இதயம் திறந்தால் போதும்.

ஆகவே எனதருமை நண்பனே,
உன் பொறாமை, பேராசை, பொய், போலித்தனம்..........
இப்படி ஒவ்வொன்றோடும் சண்டையிட்டு
உன் வாழ்நாளை தண்டித்துக்கொள்ளாதே.

அடுத்தவர் உன் முதுகில் ஏற்றியுள்ள சுமை அதிகம்தான்
சொந்தமும் பந்தமும் சுற்றமும் ஊரும் கொடுத்துள்ள
தொற்றுநோய் முற்றித்தான் உள்ளது.

ஆனால்......நம்பிக்கை இழக்க தேவையில்லை........

இதயத்தைத் திறக்க விடாவிட்டாலும்,
இருக்க விட்டிருக்கிறார்கள் உன்னிடமே

திற அதை
பிறக்கும் குளிர்நெருப்பு,
ஆம்......அன்பின் கதகதப்பு.

அதில் எரியும் உன் சுமைகள்,
அதில் இறக்கும் உன் கிருமிகள்,
நீ பிறப்பாய் நீயாக.
ஆம்.......நீ மலர்வாய் வாழ்வாக....

ஓஷோ வீடியோ

1. Osho : If somebody creates Anger in you

2. Osho : I am a threat – Certainly

3. Osho : The God Conspirasy

கேள்வி பதில்

இம்மாதமும் மனம் மற்றும் தியானம் பற்றிய கேள்விகளுக்கு ஓஷோவின் பேச்சுகளிலிருந்து சில பகுதிகளை புரிதலுக்காக அளிக்கிறோம்.

1. அடையாளப்படுத்திக்கொள்ளாமலிருத்தல்

ஆணவம் ஒரு செயலுடன், ஒரு குணநலனுடன், தன்னை அடையாள படுத்திக் கொள்கிறது. ஒருவர் கிளார்க், ஒருவர் கமிஷ்னர், ஒருவர் தோட்டக்காரர், ஒருவர் கவர்னர் என இருந்தால் அவை யாவும் செயல்கள். நீங்கள் செய்பவை அவை, நீங்கள் அல்ல.

யாராவது ஒருவர் நீங்கள் யார் என உங்களிடம் கேட்டால் நீங்கள் உடனே நான் ஒரு என்ஜினீயர் என்று கூறுகிறீர்கள். உங்களது கூற்று மிக தவறானது. நீங்கள் எப்படி என்ஜினீயராக முடியும். அது நீங்கள் செய்வது, நீங்களல்ல. உங்களது செயல்களுடன் மிகவும் ஆழ்ந்த தொடர்பு கொள்ளாதீர்கள். ஏனெனில் அந்த செயல் உங்களை அடிமைபடுத்திக் கொண்டு விடும். நீங்கள் ஒரு டாக்டரின் வேலையையோ, என்ஜினீயரின் வேலையையோ, கவர்னரின் வேலையையோ செய்யலாம். ஆனால் அதனால் அதுதான் நீங்கள் என்றாகிவிடாது. நீங்கள் என்ஜினீயர் வேலையை விட்டுவிட்டு ஒரு பெயிண்டர் ஆகலாம், பெயிண்டர் வேலையை விட்டுவிட்டு ஒரு தெரு கூட்டுபவராக மாறலாம். நீங்கள் அளவற்ற ஆற்றலுடையவர்.

ஒரு குழந்தை பிறக்கும்போது இருக்கும் அளவற்ற ஆற்றல் மெதுமெதுவாக குறைந்து, அது ஒரு குறிப்பிட்ட திசையில் நின்றுவிடுகிறது. ஒரு குழந்தை பிறக்கும்போது பல்வேறு பட்ட ஆற்றலுடன் இருந்தாலும் விரைவில் அது தேர்ந்தெடுக்க துவங்கி விடுகிறது. நாம் அது அதுபோல தேர்ந்தெடுக்க துணை புரிகிறோம். அப்போதுதான் அது புகழடைய முடியும்.

அளப்பரிய ஆற்றலுடன்தான் எல்லோரும் பிறக்கின்றனர், ஆனால் ஒரு சிலர் மட்டுமே அளப்பரிய ஆற்றலுடன் இறக்கின்றனர் என்ற ஒரு சீனப் பழமொழி உண்டு. மனிதன் அளவற்ற ஆற்றலுடன் பிறந்தாலும் இறக்கும்போது குறுகி விடுகிறான். நீ பிறக்கும்போது பிரபஞ்சமாக இருக்கிறாய், இறக்கும்போது ஒரு டாக்டராக, ஒரு விரிவுரையாளராக, ஒரு என்ஜினீயராக இறக்கிறாய். வாழ்வை நீ இழந்து விடுகிறாய். எல்லா சாத்தியங்களும் உள்ள திறந்துள்ள நிலையில், எல்லா ஆற்றல்களும் கிடைக்கக் கூடிய நிலையில் நீ பிறக்கிறாய். ஒரு விரிவுரையாளராகவும், ஒரு விஞ்ஞானியாகவும், ஒரு கவிஞனாகவும், மாறலாம். கோடிக்கணக்கான வாய்ப்புகள் உள்ளன. எல்லா கதவுகளும் திறந்துள்ளன.

பின் மெதுமெதுவாக, ஒரு விரிவுரையாளராக – கணக்கு பேராசிரியராக, ஒரு தேர்ச்சி பெற்ற பேராசிரியராக, அதில் நிபுணத்துவம் பெற்றவராக மாறி விடுகிறாய். நீ குறுகி கொண்டே சென்று விடுகிறாய். நீ குறுகி கொண்டே செல்லும் ஒரு குகை வாயில் போல மாறி விடுகிறாய். ஆகாயத்தை போல பிறந்து ஒரு குகை போல மாறி, பின் அதிலிருந்து நீ வெளியே வருவதேயில்லை.

அந்த குகைதான் ஆணவம். அது செயலுடன் அடையாளப்படுத்திக் கொண்டு விடுகிறது. மனிதன் தன்னை ஒரு கிளார்க்காக நினைத்துக் கொள்வது மிகவும் அவமானமானது. உன்னை நீ ஒரு கிளார்க்காக நினைத்துக் கொள்வது உன்னை நீயே தாழ்த்திக் கொள்வது, உன்னை நீயே அவமானப்படுத்திக் கொள்வது. நீங்கள் தேவதைகள், தேவர்கள். அதுதான் உண்மை. அதைவிட மேலானவர்களாக இருக்கலாம், ஆனால் அதைவிட தாழ்ந்தவர்கள் அல்ல. நீங்கள் தேவதைகள், தேவர்கள் என நான் கூறும்போது உங்களது ஆற்றல் அளப்பரியது, உங்கள் சாத்தியக்கூறு அளவில்லாதது என்பதைத்தான் கூறுகிறேன்.

உங்களது முழு திறமையையும் உங்களால் வெளிக் கொண்டுவர முடியாமல் இருக்கலாம். – யாராலும் முடியாது. ஏனெனில் அது மிகப் பரந்து விரிந்தது. அதனால் யாராலும் அதை செய்ய முடியாது. நீதான் இந்த முழு பிரபஞ்சமும். இந்த காலவரையற்ற நேரத்தினால்கூட நீ உனது முழு திறமையும் வெளிக் கொணர இயலாது. நீ கடவுள் என நான் கூறும்போது நீ தீராத ஆற்றலுடையவன் என்பதை தான் கூறுகிறேன்.

ஆனால் சில திறமைகள் வெளிப்படலாம். நீ ஒரு மொழியை கற்றுக்கொண்டு அதில் பேச்சாளராக மாறலாம். அதில் புலமை பெறலாம். உனக்கு வார்த்தைகளைப்பற்றிய உணர்வு அதிகமாக இருக்குமானால் நீ கவிஞனாகலாம். உனக்கு இசையை உணரக்கூடிய இயல்பு இருக்குமானால், இசையை பிரித்து கேட்க்கூடிய செவிப்புலன் இருந்தால் நீ இசைக் கலைஞனாகலாம்.

ஆனால் இவையெல்லாம் மிகமிகச் சிறிய சாத்தியக்கூறுகள்தான். அதனுடன் நமது வாழ்வு முடிந்துவிட்டது என நினைக்காதே. யாரும் எதனுடனும் நின்று போய் விடுவதில்லை. நீ செய்தது எதுவாக இருந்தாலும் நீ என்ன செய்ய முடியும் என்பதுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது செய்தது ஒன்றுமில்லாமல் போய்விடும். நீ யார் என்பதை பார்க்கும்போது நீ செய்தது மிகவும் சாதாரணமானதாகி விடுகிறது.

ஆணவம் என்பது செயலுடன் அடையாளப்படுத்திக் கொள்வது. ஒரு கவர்னருக்கு தான் கவர்னர் என்ற ஆணவம் இருக்கும். அவர் உயர் நிலையை அடைந்து விட்டதாக அவர் நினைக்கிறார். ஒரு பிரதம மந்திரிக்கு நான் உள்ளது. அவர் உயர்ந்து விட்டதாக அவர் நினைக்கிறார். இதற்கு மேல் என்ன இருக்கிறது என அவர் நினைக்கிறார். இது மடத்தனம். முட்டாள்தனம். வாழ்க்கை மிகப் பெரியது, அதைக் கடக்க வழியேயில்லை. வழி கிடையாது. நீ அதில் நுழைய நுழைய அதிகமான வாய்ப்புகள் தங்களது கதவுகளை திறக்கும். ஆம் – நீ ஒரு மலை உச்சியை அடையும்போது திடீரென மற்றொரு மலை உச்சியை காண்பாய். – முடிவேயில்லை. மனிதன் தனது இருப்பு ஆற்றலோடு இருக்கும் ஒவ்வொரு கணமும் புதிதாய் பிறக்கிறான்.

தான் என்பதன் அழுத்தம் செயலிலும், தன்னுணர்வின் அழுத்தம் இருப்பிலும் இருக்கும். ஜென் இருப்பை சார்ந்தது. நாம் செயலை சார்ந்து இருக்கிறோம். நமது இருப்பு மிகப் பெரியது. நாம் அதை மிகச்சிறிய குகைக்குள் அடைக்க முயற்சிக்கிறோம். அதனால் நாம் துயரம் அடைகிறோம். இதுதான் துயரத்தை உண்டாக்குகிறது, தடையை உருவாக்குகிறது. சுதந்திரம் பறிபோய் விடுகிறது. எல்லா இடத்திலிருந்தும் நீ தடுக்கப்படுவதாக, நிறுத்தப்படுவதாக, இடிக்கப்படுவதாக, சுருக்கப்படுவதாக உணர்கிறாய். எல்லா இடத்திலிருந்தும் தடுத்து நிறுத்தப்படுவதாக உணர்கிறாய். ஆனால் அதற்கு உன்னைத்தவிர வேறு யாரும் காரணமல்ல.

செயல்களை பற்றிய புரிதல் உள்ள ஒரு மனிதன் ஆயிரத்தோரு செயல்களை செய்வான். ஆனால் எப்போதும் அதிலிருந்து வெளியே வந்து விடுவான். அவன் ஆபிஸில் இருக்கும்போது ஒரு கவர்னராக இருக்கலாம், ஆனால் ஆபிஸிலிருந்து வெளி வந்த உடனேயே அவன் கவர்னராக இருக்க மாட்டான். திரும்பவும் ஒரு கடவுள் போல, முழு ஆகாயமாகி விடுவான். வீடு வந்து சேர்ந்தவுடன் தந்தையாகி விடுவான். ஆனால் அதனுடன் ஒன்றி விட மாட்டான். அவன் தனது மனைவியை நேசிப்பான், அவன் ஒரு கணவனாகி விடுவான். ஆனால் அதனுடன் ஒன்றி விட மாட்டான். ஆயிரத்தோரு வேலைகள் செய்தாலும் அவை அனைத்திலிருந்தும் ஒன்றி விடாமல் சுதந்திரமாகவே இருப்பான்.

அவன் ஒரு தந்தையாகவோ, தாயாகவோ, சகோதரனாகவோ, கணவனாகவோ, குழந்தையாகவோ, ஆசிரியராகவோ,கவர்னராகவோ,பிரதம மந்திரியாகவோ, ஜனாதிபதியாகவோ, கூட்டுபவராகவோ, பாடகராகவோ, இன்னும் ஆயிரத்தோரு விஷயங்களில் இருக்கலாம் – ஆனாலும் அவன் அத்துணை விஷயங்களில் இருந்தும் விடுபட்டே இருப்பான். அவன் கடந்து செல்பவனாகவே இருப்பான், அவன் கடந்து நிற்பான. எதுவும் அவனை கட்டுபடுத்த முடியாது. அவன் அத்தனை இடங்களுக்கும் சென்று வருவான். ஆனால் அவன் எந்த இடத்திலும் சிறை பட வில்லை. உண்மையில் எந்த அளவு அவன் அதிக இடங்களுக்கு சென்று வருகிறானோ அந்த அளவு அவன் விடுதலையடைகிறான்.

நீ ஆபிஸில் இருக்கும்போது ஒரு கிளார்க்காகவோ, ஒரு கமிஷ்னராகவோ, ஒரு கவர்னராகவோ இரு. அது மிகவும் சரியானது. ஆனால் நீ ஆபிஸை விட்டு வெளியே வந்தவுடன் கிளார்க்காகவோ, கமிஷ்னராகவோ, கவர்னராகவோ, இருக்காதே. அந்த வேலை முடிந்தது. எதற்கு அதை சுமக்கிறாய். – ஒரு கவர்னர் போல தெருவில் நடக்காதே. நீ அதல்ல. அந்த கவர்னர்தனம் உன் தலைமேல் ஒரு பாரமாக உட்கார்ந்து இருக்கும் . அது உன்னை சந்தோஷமாக இருக்க விடாது. மரத்தின் மீதுள்ள பறவைகள் பாடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஒரு கவர்னரால் எப்படி கூட பாட முடியும் – ஒரு கவர்னரால் எப்படி பறவைகள் பாட்டுக்கு ஆட முடியும் – மழை வருகிறது. மயில் ஆடுகிறது எப்படி ஒரு கவர்னரால் கூட்டத்தில் நின்று அதை ரசிக்க முடியும். முடியவே முடியாது. ஒரு கவர்னர் ஒரு கவர்னராகத்தான் இருக்க முடியும். அவர் வழியில் போய்கொண்டே இருப்பார். அங்குமிங்கும் பார்க்கவே மாட்டார். மரங்களின் பசுமையை, நிலாவை ரசிக்க மாட்டார். அவர் ஒரு கவர்னராகவே இருப்பார்.

இந்த அடையாளப்படுத்திக் கொள்ளுதல் உன்னை கொன்று விடுகின்றன. நீ உன்னை அடையாளபடுத்திக் கொள்ளும் அளவு நீ உயிரற்று போய் விடுகிறாய். இது நினைவில் கொள்ள வோண்டிய ஒன்று. நீ செய்வது எதனுடனும் உனக்கு சம்பந்தமில்லை. உனது இருப்பிற்கும் உனது வேலைக்கும் தொடர்பில்லை. நீ செய்யும் வேலை எதுவாக இருப்பினும் அது உனது இருப்பை தொடாது.

உன் மனைவியுடன் இல்லாத போது நீ கணவனல்ல. மனைவி இல்லாதபோது நீ எப்படி கணவனாக இருக்க முடியும். இது மடத்தனம். உன் குழந்தையுடன் நீ இல்லாதபோது எப்படி நீ ஒரு தாயாகவோ தந்தையாகவோ இருக்க முடியும் அது இயலாது. நீ கவிதை எழுதாத போது நீ கவிஞனல்ல. நடனமாடாதபோது நீ டான்ஸர் அல்ல. நீ நடனமாடும்போதுதான் நீ டான்ஸர். அந்த நேரத்தில் உனது உடலின் நிலை, நாடித்துடிப்பு நடனமாடுவதற்கு ஏற்றாற் போல ஒரு குறிப்பிட்ட விதமாக இருக்கும். ஆனால் அது அந்த நேரத்திற்கானது மட்டுமே. நடனத்தை நிறுத்தியவுடன் டான்ஸர் மறைந்து விடுவார். நீ அதிலிருந்து வெளியே வந்து விடுவாய். இது போன்று இருந்தால் நீ சுதந்திரமாக இருக்க முடியும். சுமையின்றி இருக்க முடியும், பொங்கி பெருகி வழிந்தோடலாம்.

கணவனாக இரு, ஆனால் எப்போதும் கணவனாக இருக்காதே. சன்னியாசி ஒரு மிகச் சிறந்த நடிகனாக இருக்க வேண்டும் என நான் கூறும்போது இதைதான் குறிப்பிடுகிறேன். தாயாக இரு, ஆனால் எப்போதும் தாயாகவே இருக்காதே. அந்த குணநலனுடன் உன்னை அடையாளப்படுத்திக் கொண்டு விடாதே. அது ஒரு செயல், அதை எவ்வளவு நிறைவாக செய்ய முடியுமோ, எவ்வளவு ஆணித்தரமாக செய்ய முடியுமோ, எவ்வளவு அன்பாக செய்ய முடியுமோ, எவ்வளவு அனுபவித்து செய்ய முடியுமோ, அப்படி செய். ஆழமாக செய். அது ஒரு கலையாகட்டும். ஒரு அழகான மனைவியாக, அன்பான அம்மாவாக, சிறந்த கணவனாக, அழகான காதலனாக இரு. ஆனால் அதனுடன் ஒன்றாகி விடாதே. ஒன்றி விட்ட கணமே நீ பிரச்னையில் மாட்டிக் கொண்டாய்.

செயல்கள் உன்னுள் நிலைபெற விட்டுவிடாதே. அந்த வேஷமாகவே நீ மாறி விடாதே. ஒரு தேர்ந்த நடிகனாக இரு. நடிகன் பல பாத்திரங்களில் நடிக்கலாம். ஒரு தாயாக, தந்தையாக, கொலைகாரனாகக்கூட, மிக முக்கியமான பாத்திரத்தில், நகைசுவையாக, எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவன் எந்த பாத்திரத்தில் நடிக்கிறான் என்பது முக்கியமில்லை. அதில் சிறப்பாக நடிக்க வேண்டும். அதில் தேர்ச்சி பெற வேண்டும். அவனிடம் உள்ள திறமைகள் அனைத்தையும் அதில் கொண்டு வர வேண்டும். அவனுக்கு கொலைகாரன் வேஷம் கொடுத்தால் உலகிலேயே வல்லமை வாய்ந்த கொலைகாரனாக இருப்பான். அவனுக்கு சாது வேஷம் கொடுத்தால் மிகச் சிறப்பான சாதுவாக அவன் இருப்பான். அவனால் மாற முடியும். ஒரு வேஷத்தில் சாதுவாக இருப்பான், மற்றொரு வேஷத்தில் கொலைகாரனாக இருப்பான். ஆனால் இரண்டிலும் அவனது வேஷப் பொருத்தம் கனகச்சிதமாக இருக்கும்.

இந்த இலகு தன்மை வாழ்விலும் வேண்டும். வாழ்க்கையே ஒரு நாடகம்தான். ஆனால் மேடைதான் மிகப் பெரியது. இந்த முழு உலகமும் மேடையாக இருக்கிறது. உலகத்திலுள்ளவர்கள் அனைவரும் நடிகர்கள்தான். முழுமை எங்கே போகிறது, அதன் முடிவு என்ன என்பது யாருக்கும் தெரியாது. கதை கொடுக்கப்பட வில்லை. அது உருவாக்கப்பட வேண்டும். கணத்துக்கு கணம் அது உண்டாகும்.

ஜென்னில் ஒருவகையான நாடகம் உண்டு. அதன் பெயர் நோ நாடகம். கதை கிடையாது, நடிகர்கள் மட்டுமே உண்டு. திரை உயர்த்தப்பட்ட பின் அவர்களே கதையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். மக்கள் இருக்கும்போது ஏதாவது நடந்துதானே தீரும். அவர்கள் வெறுமனே உட்கார்ந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தாலும்கூட ஏதோ நடக்கும். ஒத்திகை இன்றி, தயாரிப்பு இன்றி ஏதோ ஒன்று நடக்கும்.

வாழ்க்கையும் அதே போலத்தான் – அது கணத்துக்கு கணம் உருவெடுக்கும். கடந்த காலத்திலிருந்து வெளியே வந்துவிடு. எந்த குறுக்கீடும் இல்லாமல், எந்த தடையும் செய்யாமல் நடப்பதை அப்படியே அனுமதித்து விடு. எவ்வளவு முழுமையாக இருக்கமுடியுமோ அவ்வளவு முழுமையாக அதனுள் இரு. உனது சுதந்திரம் அதிகமாகும்.

ZEN: The Path of Paradox vol.1 Ch. #5

வாழ்வின் உண்மை - ஓஷோவின் கதை 17

நான் ஒரு பழமையான சூபி கதையை உங்களுக்கு கூறுகிறேன்........

ஒரு அரசர் தனது அரசவையிலுள்ள அறிஞர்களிடம், நான் எனக்காக ஒரு அழகான மோதிரம் செய்யப் போகிறேன். அதில் மிகச்சிறந்த வைரங்கள் பதிக்கப் போகிறேன். அந்த மோதிரத்திற்க்குள் மிக மோசமான சமயத்தில் படித்தால் எனக்கு உதவக்கூடிய ஒரு செய்தியை வைத்திருக்க விரும்புகிறேன். அது மிகவும் சிறியதாக இருக்கவேண்டும். அப்போதுதான் அதை மோதிரத்தில் பதிக்கும் வைரத்தின் கீழே மறைத்து வைக்கமுடியும். அப்படி ஒரு செய்தி வேண்டும். என்று கேட்டான்.

அவர்கள் யாவரும் அறிஞர்கள், மிகச்சிறந்த பண்டிதர்கள். அவர்களால் மிகச்சிறந்த உபதேசங்களை எழுத முடியும். ஆனால் மிக மோசமான தருணத்தில் உதவக்கூடிய இரண்டு அல்லது மூன்று வார்த்தைகளுக்குள் அடங்கும் ஒரு செய்தியை எழுதுவது என்றால்...... அவர்கள் சிந்தித்தனர், தங்களது புத்தகத்தில் தேடிப்பார்த்தனர், ஆனால் அவர்களால் அப்படி ஒன்றை கண்டு பிடிக்கவே முடிய வில்லை. அரசரிடம் ஒரு வயதான வேலையாள் இருந்தான். அவனுக்கு அவரது தந்தையின் வயது. அவன் அரசரது தந்தையின் வேலையாள். அரசி சிறுவயதிலேயே மரணமடைந்து விட்டதால் இந்த வேலையாள்தான் அரசரை பாதுகாப்பாக வளர்த்தான். அதனால் அரசர் இவனை ஒரு வேலையாளாக கருதுவதில்லை. அவனிடம் மிகவும் மதிப்பு வைத்திருந்தான்.

அந்த வயதானவன், நான் அறிவாளியுமல்ல, பண்டிதனுமல்ல, படித்தவனுமல்ல, ஆனால் எனக்கு அந்த செய்தி என்னவென்று தெரியும் – அப்படி பட்ட செய்தி ஒன்றே ஒன்றுதான் உள்ளது. இவர்களால் அதை உங்களுக்கு கொடுக்கமுடியாது. ஏனெனில் தன்னை உணர்ந்த ஒரு மனிதனால்தான், ஒரு ஞானியால்தான் அது போன்ற ஒரு செய்தியை கொடுக்கமுடியும். என்றான்.

இவ்வளவு காலம் இந்த அரண்மனையில் இருந்ததால் நான் பல்வேறு தரபட்ட மக்களை சந்தித்திருக்கிறேன். அதில் ஒருமுறை ஒரு ஞானியை சந்தித்திருக்கிறேன். அவர் உனது தந்தையின் விருந்தாளியாக வந்திருந்தார். அவருக்கு சேவை செய்வதற்காக உனது தந்தை என்னை அனுப்பினார். அவர் விடைபெறும்போது, நான் அவருக்கு செய்த பணிவிடைகளுக்கு நன்றியுரைக்கும் விதமாக அவர் இந்த செய்தியை எனக்கு அளித்தார். எனக்கூறி அந்த செய்தியை ஒரு சிறுதாளில் எழுதி அதை சுருட்டி அரசரிடம் கொடுத்து, இதை படிக்க வேண்டாம். மோதிரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். எல்லாமும் முடிந்து விட்டது, வேறு வழியேயில்லை எனும் சமயத்தில் இதை திறந்து பாருங்கள் என்றார்.

அந்த சமயமும் விரைவிலேயே வந்தது. அந்த நாட்டின்மீது படையெடுப்பு நடந்தது. அரசர் தனது நாட்டை போரில் இழந்தார். அவர் தனது குதிரையில் தப்பித்து ஓடினார். அவரது பின்னால் அவரது எதிரி படை வீரர்கள் குதிரையில் துரத்தி வந்தனர். அவர் ஒரு ஆள், அவர்கள் பலர். அவர் ஒரு பாதை முடிவுக்கு, அதற்கு மேல் பாதையில்லை என்ற இடத்திற்கு, ஒரு மலைமுகடுக்கு வந்து விட்டார். கீழே பெரும் பள்ளத்தாக்கு, அதில் விழுந்தால் முடிந்தது. அவரால் திரும்பியும் போக முடியாது, எதிரிகள் வந்து கொண்டிருந்தனர், குதிரைகளின் குளம்படி சத்தம் கேட்டது. – முன்னேயும் போக முடியாது, அங்கே வழியில்லை.

திடீரென அவருக்கு மோதிரத்தின் நினைவு வந்தது. அவர் அந்த மோதிரத்தை திறந்து, அந்த பேப்பரை எடுத்தார், அதில் மிகச் சிறந்த பொருளுடைய ஒரு வாசகம் இருந்தது. அது இதுவும் கடந்து போகும் அந்த வாசகத்தை படித்தவுடன் அவருக்குள் மிகப் பெரும் அமைதி வந்தமர்ந்தது. இதுவும் கடந்து போகும், அதுவும் கடந்து போயிற்று.
எல்லாமும் கடந்து போகும், எதுவும் இந்த உலகில் தங்காது. அரசரை பின்தொடர்ந்து வந்த எதிரிகள் வழி மாறி போய் விட்டனர், வேறு வழியில் அவரை தேடி சென்று விட்டனர். குதிரைகளின் குளம்பொலி படிப்படியாக குறைந்து தேய்ந்து போய் விட்டது. அரசருக்கு அந்த ஞானியிடமும், அந்த வேலையாளிடமும் அளப்பரிய நன்றியுணர்வு தோன்றியது. இந்த வார்த்தைகள் அபூர்வ சக்தி படைத்தவை. அவர் அந்த தாளை மடித்து, திரும்பவும் அந்த மோதிரத்தினுள் வைத்தார்.

பின் தனது படைகளை திரட்டிக் கொண்டு வந்து, திரும்பவும் போராடி தனது அரசை வென்றார். அவர் தனது தலைநகரத்தில் வெற்றியோடு நுழையும்போது, ஆடல்பாடலோடு கோலாகலமாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அரசர் தன்னைப் பற்றி பெருமையாக உணர்ந்தார். அந்த வேலையாள் அவரது ரதத்தின் கூட நடந்து வந்து கொண்டிருந்தார். அவர், இதுவும் சரியான தருணம். அந்த வாசகத்தை திரும்பவும் பாருங்கள். என்றார்.

அரசர், என்ன சொல்கிறீர்கள், இப்போது நான் வெற்றி பெற்று இருக்கிறேன். மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள், நான் தோல்வியுற்ற நிலையில் இல்லையே. வேறு வழியே இல்லை என்ற நிலையில் நான் இப்போது இல்லையே. எனக் கேட்டார்.

அந்த வயதானவன், பாருங்கள், இதைத்தான் ஞானி என்னிடம் கூறினார். அந்த செய்தி கையறு நிலைக்கானது மட்டுமல்ல, அது சந்தோஷ தருணங்களுக்கானதும்தான். நீங்கள் தோல்வியுற்ற நிலையில் மட்டுமல்ல, வெற்றி பெற்ற நிலையில் கூட அந்த செய்தி உண்மையானது தான். நீ தொலைந்து போன சமயத்தில் மட்டுமல்லாமல் முதல் ஆளாக நீ இருக்கும் நேரத்தில்கூட அது தேவைதான். என்று கூறினார்
அரசர் தனது மோதிரத்தை திறந்து, இதுவும் கடந்து போகும் என்ற செய்தியை படித்தார். உடனே திடீரென அந்த கூட்டத்தினுள்ளும், மகிழ்ந்து கூத்தாடிக் கொண்டிருக்கும் அந்த நேரத்திலும் அதே அமைதி, அதே மௌனம் கவிழ்ந்தது. அந்த பெருமை, அந்த ஆணவம் அகன்றது. எல்லாமும் கடந்து போகும்.

Source: SOCRATES POISONED AGAIN AFTER 25 CENTURIES Ch #17

No comments: