Friday, October 22, 2010

மலர் 1 இணைய இதழ் 12 11 ஜூலை 2009

தலையங்கம்

அன்பு நண்பர்களே

ஓஷோவின் பாதை, சிறப்பு, தியானம் பற்றியெல்லாம் நான் கூறியதைப் படித்த நண்பர் பலர் ஓஷோவின் ‘கெத்தாரிஸிஸ்’ அதாவது “தன்ணுணர்வோடு உணர்ச்சிகளை வெளியே வீசுதல்” என்பது பற்றி எங்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும் என்று கேட்டார்கள். அதற்காகத்தான் இதைக் கூறுகிறேன்.

ஓஷோ பல புதிய யுக்திகளை இன்றைய மனிதனின் நோயறிந்து புகுத்தினார். அதில் ஒன்று இந்த ‘கெத்தாரிஸிஸ்’. அடிப்படையில் தியானம் என்பது “சும்மாயிருப்பது தான்”, “தானாயிருப்பதுதான்”, “சலனமற்று அமர்ந்து எதுவும் செய்யாதிருத்தல் தான்”,(simply sitting doing nothing) “தடையற்று வாழ்வோடு செல்லல் தான்”,( let go ) “சலனமற்ற நிலை தான்” (silence).

ஆனால் புலன்களின் எல்லைகளால் “நான்” என்ற மாயை உருவாகிறது என்பதை அறியாமல் அதையே உண்மை என நம்பி “நான்” என்று தனியாக இருப்பதாக கற்பனை செய்து கொண்டு அதற்கு பிடிப்புகளையும் வளர்த்துக் கொண்டு, அந்தப் பிடிப்புகளை நிரந்தரமாக்கிக் கொள்ள தனது மன இயக்கத்தைப் பயன்படுத்தி போராட ஆரம்பித்த மனிதன், இன்று நவீன யுகத்தில் மனத்தில் வெகுவாக விரிந்து “ மனம்” என்பது விசுவரூபமெடுத்து அதன் பதட்டத்திலும், படபடப்பிலும் வாழ்கிறான்.

“நான்” என்பது மாயை எனும்போது, மாயை என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மாயை என்றால் அதற்கு
சித்தர் பாடல்களில் வருவதுபோல், வாழ்வு பொய் – என்று அர்த்தம் அல்ல. உண்மை திரிந்து தோன்றுகின்ற நிலை என்றே பொருள். கயிற்றை தூக்கக் கலக்கத்தில், நிலவொளியில், பாம்பு என்று எண்ணிவிடுவதுதான் மாயை.

இந்த மாயையில் சிக்குண்டு அவசர யுகத்தில், பதட்டத்தில் வாழும் ஒருவன் எப்படி சட்டென்று சும்மாயிருக்க முடியும்? அமைதியாக அமர முடியும்? அவனுள் ஆயிரம் பிடிப்புகள், அதற்கான போராட்டங்கள், அதற்காக அமுக்கி வைக்கப்பட்ட உணர்ச்சிகள், அடக்கி வைக்கப் பட்ட உணர்வுகள். சிறுவயது முதலே “இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே” “இப்படி இரு, அப்படி இரு” “இப்படி உயர வேண்டும், அப்படி வீணாகி விடாதே” “இது தவறு, அது சரி” “டாக்டராகு, எஞ்சினியராகு” “நம்பாதே, ஜாக்கிரையாயிரு” “இடத்துக்குத் தகுந்தபடி நடி, உண்மையாயிருக்காதே” “காரியத்தில் கண் வை, சமார்த்தியசாலியாய் இரு” என்று அடக்கி அடக்கி வளர்க்கும் வளர்ப்பு ஒருபுறம். இயற்கையின் தொடர்பாக மண்ணோ மலையோ, நதியோ, பிராணிகளோ, கடலோ, மழையோ, மரமோ, செடிகொடிகளோ இப்படி எந்த தொடர்பும், அனுபவமும் இல்லாமல் கான்கிரீட் காட்டில் தீப்பெட்டி வீட்டில் தும்மலுக்கும், தூக்கத்துக்கும் டாக்டர், எப்போதும் தலைமாட்டில் புத்தக மூட்டை, ஓய்வு கொள்ள அந்த பேய்பெட்டி T.v., விளையாட கம்யூட்டர் கேம்ஸ் என்று வளர்க்கப்படும் வளர்ப்பு மறுபுறம். இப்படி வளரும் ஒருவனுக்கு எப்போதும் பயமும், குழப்பமும், படபடப்பும், இறுக்கமும், உள்ளே ஆட்டிப் படைக்கும். இல்லையெனில் மூர்க்கத்தனமும் வெறியும் நிரம்பும். இதுதான் மாயையில் இருப்பதன் விளைவு.

இப்படி இருப்பவனுக்கு எப்படி தியானம் சாத்தியம்? முதலில் அவர் தளர்வாக, இயல்பாக, சுதந்திரமாக, விடுபட்டவனாக உணர வேண்டும். அதற்கு அவனை தூய்மைப்படுத்த வேண்டும். அதற்கான முறைதான் இந்த ‘கெத்தாரிஸிஸ்’ . ஓஷோவின் தியான யுக்திகளில் இவை முக்கியப் பங்காற்றுகின்றன. ஓஷோ சொல்வது போல தியானம் என்பது செய்வது அல்ல, “அது ஒரு நிகழ்வு, அது ஒரு உணர்தல், அது ஒரு முழு தன்னுணர்வு நிலை. அது நிகழ நாம் நம்மை தூய்மைப்படுத்தி தயார் செய்து அதற்குரிய சூழலை உருவாக்கிக் கொள்வதே என் தியான யுக்திகள்” என்கிறார்.

இன்றைய மனிதன் தன் இறுக்கங்களைக் குறைத்துக் கொள்ள அவனை அறியாமலேயே பல வகைகளில் முயல்கிறான். அவனது இந்த அழுத்தச் சுமையை வைத்து பலரும் வியாபாரம் செய்கின்றனர். நமது ‘நவீன இசை’, ‘நவீன ஓவியம்’, ‘நவீன நடனங்கள்’, ‘கடி ஜோக்குகள்’, ‘நவீன இலக்கியப் படைப்புகள்’, ‘நமது சினிமா’, ‘நமது பேய்பெட்டி’, இவை எல்லாம் என்ன? ஒரு வகை ‘தன்ணுணர்வற்ற கெத்தாரிஸிஸ்’ தான்.

நமது குடும்பச் சண்டைகள், பெண்களின் வம்பு (அவர்கள் சிகரெட் குடிக்க, தண்ணி அடிக்க அனுமதியில்லை எனும்போது இதுதான் அவர்களது வடிகால்) அழுகை, நமது ஊர் கலவரங்கள், டிராபிக் சண்டைகள், நமது புலம்பல்கள், சுயபுராணம் பேசுதல் இவையெல்லாம் என்ன? ஒருவகை ‘தன்ணுணர்வற்ற கெத்தாரிஸிஸ்’ தான்.

நமது கனவுகள், பகல்கனவு, தனக்குத் தானே பேசிக் கொள்ளல், ஏன் நமது விளையாட்டுக் கூட இன்று ஒரு தன்ணுணர்வற்ற கெத்தாரிஸிஸ் ஆகவே உள்ளது. இயல்பு நிலை வாழ்வாக, தளர்வாக, குழந்தை போல இல்லை. ஆனால் யாருக்கும் இயல்பான வாழ்வுக்கு, தன்னுணர்வோடு கூடிய வாழ்வுக்கு செல்லும் அளவு கெத்தாரிஸிஸ் நடப்பதில்லை. பயித்தியமாக மாறிவிடாத அளவில் காப்பாற்றி வைக்க தன்ணுணர்வற்ற நிலையில் இவை நடக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் ஒரே அளவு பைத்தியமாக எல்லோரும் இருக்க உதவும் முயற்சியே ஆன்மீகம் என்ற பெயரிலும் நமது சமூகத்தில் நடந்து வருகிறது. தன்ணுணர்வற்ற கெத்தாரிஸிஸ் இது என்று தெரியாமல், ஏராளமான சடங்குகள், செயல்களை எல்லோரும் செய்து வருகின்றனர். அதனால்தான் ஒரு பக்கம் அவை மடத்தனமாய் தெரிந்தாலும், அதை அவர்கள் விடமுடிவதில்லை.

விஞ்ஞானிகள் ஆய்வுப்படி, இன்று ஒரு மனிதனை தனியாக 3 வாரம் இந்த சமூகத்திலிருந்தும் அது ஏற்படுத்தியுள்ள இந்த இயந்திர வாழ்விலிருந்தும் பிரித்து ஏகாந்தத்தில் வைத்தால் அவன் பைத்தியமாகி விடுவான். அதிக பட்சம் இந்த 3 வாரம். மூன்று வாரம் தாங்குவதே மிகமிகச் சிரமம் என்கின்றனர்.

அவ்வளவு ஏன்?

இன்று நான் சொல்கிறேன். செல்போனை பிடுங்கிவிட்டாலே பயித்தியமாகி விடும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறான் மனிதன். தொடர்ந்து தன்ணுணர்வற்ற கெத்தாரிஸிஸ் செய்துகொண்டே இருக்க வேண்டும் இன்றைய மனிதனுக்கு. பேச ஆள் இல்லையென்றால் சிகரெட், ஓய்வு கொள்ள வேண்டுமென்றால் மது, தளர்வாக இருப்பதென்றால் சீரியல் பார்ப்பது, இப்படி தன்னிலிருந்து தன்னுணர்விலிருந்து தப்பி ஓடும் மனிதனைத்தான் எங்கும் பார்க்கிறோம் இப்போது.

என்னிடம் வருபவர்களில் பேச விரும்புபவர்கள், பேச்சைக் கேட்க விரும்புபவர்கள் என்ற இரண்டு ரகம் பேர்தான் மெஜாரிட்டி. தான் இருக்கும் நிலை குறித்து கேள்வி கேட்பவர்கள் கூட யாரும் இல்லை. மேலும் மேலும் குப்பையைத் தேடுபவர்கள் அல்லது தன் குப்பை குறித்து அலசி ஆராய்ந்து அதன் உயர்வை காட்ட விரும்புபவர்கள். ஏன் இந்த நிலை?
காரணம் மன அழுத்தங்கள், மக்கிக் கிடக்கும் குப்பைப் பிடிப்புகள், பழகிவிட்ட பழக்க நாற்றங்கள், அடக்கி வைத்துள்ள சொந்த உணர்வுகள், ஆணவம் பட்ட காயங்கள், அவமானங்கள், ஏமாற்றங்கள் இப்படி உள்ளே தேங்கி உள்ளவைதான்.

ஓஷோ கெத்தாரிஸிஸ் பற்றி கூறும்போது

பாதிப்புகளிலிருந்து விடுபடல்,
உணர்ச்சிகளை விடுவித்தல்,
உன்னை வெளிப்படுத்தல்,
தன்னுணர்வோடு பயித்தியமாய் மாறுதல்,
உள்ளிருக்கும் நரகத்தை திறந்துவிடுதல்,
உன் சுமையை இறக்கிவிடுதல்,
தலைக்கனத்திலிருந்து விடுபடல்,
இதயம் திறத்தல்,
நீ அமர்ந்துள்ள எந்த வினாடியும் வெடிக்கத் தயாராயிருக்கும் உள் எரிமலையின் வாயைத் திறத்தல்,
உள்ளே சேகரித்துள்ள குப்பைகளை வீசிஎறிதல்,
சமூகம் கொடுத்தவைகளை வெளியே வீசுதல்,
வன்முறையை கைவிடுதல்,
உனது சலிப்புகளை, உனது இறுக்கங்களை, உனது அவசரத்தை, உனது பதட்டத்தை, உனது அழுத்தங்களை வெளிவிடல்
உனது எல்லா கருத்துக்கள், கொள்கைகள், பார்வைகள், கண்ணோட்டங்கள், பழக்கங்கள் ஆகிய எல்லாவற்றையும் வெளியே வீசுதல்,

என்று பலவாறாகக் கூறுகிறார். இப்படி எல்லாவற்றையும், வெளியே இருந்து சேகரித்த எல்லாவற்றையும் முதலில் வெளியே வீசி எறிந்தபின் மிச்சமிருப்பதுதான் நீ. அங்கிருந்துதான் நீ வளர முடியும்.

நமக்குள் ஒன்றும் இல்லை, நாம் அமைதியானவன் என்று நினைக்காதீர்கள். சீண்டிப்பார்த்தால்தான் தெரியும், உள்ளே இருப்பது. உங்களுக்கு சாதாரணமாக கோபம் வராது, தப்பு செய்பவரைப் பார்த்தால் தான் கோபம் வரும், இடம் பொருள் ஏவல் பார்த்துத்தான் வரும், சமய சந்தர்ப்பம் அறிந்துதான் வெளிக்காட்டுவீர்கள் என்றால் நீங்கள் சிறந்தவர் என்றோ, அமைதியானவர் என்றோ அர்த்தமல்ல. உள்ளிருக்கும் கோபத்தை அடக்க ஆளும் சாமர்த்தியசாலி என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் தியானம் நிகழ, அமைதியில் வாழ, இயல்பான பரவசம் பெற, சேர்த்து வைத்துள்ளவற்றை, அது எதுவானாலும் அதை கண்டிப்பாக விட்டொழிக்க வேண்டும். சுமையற்று, திறந்த கரங்களும், விரிந்த இதயமும் கொண்டவர்களாய், மீண்டும் குழந்தை உள்ளம் கொள்ள வேண்டும். அதற்குத்தான் இந்த கெத்தாரிஸிஸ் என்ற முறையை ஓஷோ கண்டு பிடித்தார்.

புரியாத மொழியில் பேசுதல், உளறுதல், குழந்தை போல மழலை, காட்டுக் கத்தல், இப்படி உள்ளிருப்பது எப்படி வெளிப்பட விரும்புகிறதோ அப்படி அதை தன்ணுணர்வோடு வெளிப்படுத்த உதவுவதே கெத்தாரிஸிஸ். வேகமாகவும், முழு வீச்சிலும் வெளிப்படுத்தும் ஜிப்பரிஷ் என்ற முறையை இப்போது பல சாமியார்கள் காப்பியடித்து கதையை ஓட்டினாலும் கண்டுபிடித்து வழங்கியவர் ஓஷோதான்.

“தேவவாணி” என்று ஒரு முறை.
சிரிப்பும் அழுகையும் கொண்ட
“சூட்சம ரோஜா” என்று ஒரு முறை.
தியான யுக்தியில் “விருப்பம் போல ஆடும்” முறையை புகுத்தியவரும் ஓஷோதான்.

இவை எல்லாமே ஒருவகை கெத்தாரிஸிஸ். இதன்பின் அவரது தியானயுக்தியில் “சலனமற்ற நிலை” என்ற பகுதி வரும்.

கெத்தாரிஸிஸ் இல்லாத தியானம் இன்றைய மனிதனுக்கு பலனளிக்காது என்று கண்டுணர்ந்து அதற்கான பல வழிகளை ஓஷோ உருவாக்கினார்.

ஓஷோ சொல்லும் அனைத்து ஜோக்குகளும் கேட்பவர்கள் கெத்தாரிஸிஸ் செய்வதற்காகவே, கொஞ்சமேனும் சிரித்து தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காகவே.
இதன்பின்தான் ஒரு கணமேனும் “ சலனமற்ற நிலை “ சாத்தியம்.

இந்த கெத்தாரிஸிஸ் யுக்தியினால் சமூகத்திடமும், அறியாமை மக்களிடமும் அவருக்கு அவப்பெயர். அதே சமயம் இதனால் தூய்மையுற்ற ஏராளமான “ஜோர்புத்தா” க்கள் உருவாகினர்.

ஆகவே கெத்தாரிஸிஸ் அதாவது “தன்னுணர்வோடு தன்னை தூய்மைப் படுத்திக் கொள்ளல்” என்ற ஓஷோவின் யுக்தி உண்மை வாழ்வை உணரத் துடிப்பவர்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய முதல்படி, முக்கியமான படி.

அன்பு,
சித்.

கவிதைப்பகுதி

அன்பு உன் இயல்பு
என் இனிய நண்பா!

ஒருமுகப் பட்ட மனம் இலக்குநோக்கியது,
பேராசை கொண்டது,
அழுத்தத்தில் உள்ளது,
சுட்டுப்பொசுக்குவது,
இது குறுகிய மனத்தன்மை.

இதுதான் அன்பின் எதிரி,
நேசத்தின் கொலையாளி,
கருணையை அழிப்பது.

ஓ! என் களைத்துப் போன நண்பனே!

இந்த குறுகிய மனத்தன்மையை விடு,
எடைப் போடும் மனத்தைவிட்டு வெளியில் வா
நீ அன்பைப் பார்ப்பாய்!
நீ நேசத்தை நுகரவும், தொடவும், சுவைக்கவும் முடியும்!
அது எல்லா இடத்திலும் இருக்கிறது – எப்போதும்!

என் அன்பே!

அன்பு இந்த பூமியின் அடி நீரோட்டம்,
அது மாசுபடாமல் எப்போதும் புதிதாய்,
வாழ்வையும் வளத்தையும்,
வாரி வழங்குவதாய் இருக்கிறது!

நீ உணர்ச்சிகர வாழ்வு என்ற வேரை வளர்த்துக் கொள்,
அதை நீட்டி அடிநீரைத் தொட்டுவிட்டால் போதும்!

அன்பு ஒளி வீசும் சூரியன்,
அடுத்தவர் போற்றும் அலங்கார வாழ்வு எனும்.......
சிறைக்கூட இருட்டில் நீ இருக்கிறாய்,
மற்றப்படி வெளியே....................
அன்பு அங்கிங்கெணாதபடி எங்குமிருக்கிறது.

என் இதயமே!

அன்பின் காற்றை கடுகடுப்பால் மாசுபடுத்தாதே!
அன்பு உன் வெகுவெகு இயல்பு,
தயவுசெய்து அதைத் தேடாதே!
வாழு, சிரி, விளையாடு –
எவ்வளவு ஆழமாக முடியுமோ அந்தஅளவு –
அது அங்கு இருக்கும்!

மலைக்குப் போ,
சோலைக்குப் போ,
கடலுக்குப் போ,
குழந்தையிடம் போ,

நீ அந்தப் புதிய காற்றை,
அந்த வளம் கொடுக்கும் காற்றை,
அந்த குளிர்ந்த காற்றை,
அந்த மகிழ்ச்சிக் காற்றை,
உணரவில்லையா?

இதுதான் அது,
அந்த அன்புக்காற்று.

ஓஷோ வீடியோ

1. OSHO : No faith on Nostradamus

2. OSHO : I Live Spontaneously

3. OSHO : Emotional Wellness – Almost Drunk with Emotion

விழிப்புணர்வு பற்றி பல கேள்விகள். எனவே கீழ்க்கண்ட
ஓஷோ பதில்களை 2-ம் மாதமாக தொடர்ந்து அளிக்கிறோம்.

துன்பத்தின் வேர்கள்

துன்பம் என்பது, தன்னுணர்வற்ற மனதின் ஒரு நிலை. நாம் என்ன செய்கிறோம், நாம் என்ன நினைக்கிறோம், நாம் என்ன உணர்கிறோம் என்கின்ற விழிப்புணர்வு இல்லாததால், நாம் துன்பம் அடைகிறோம். அதனால்தான் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நாம் நம்முடனேயே முரண்பட்டுக் கொண்டிருக்கிறோம். நமது செயல் ஒரு திசையில் செல்கிறது, சிந்தனை மற்றொரு திசையில் செல்கிறது, உணர்வுகள் வேறு எங்கோ செல்கிறது. நாம் பிரிந்து பிரிந்து செல்கிறோம். நாம் மேலும் மேலும் பிளவுபட்டுச் செல்கிறோம். அதுதான் துன்பம் ஆகும். – நாம் நமக்குள் ஒருங்கிணைந்து இருப்பதில்லை. நாம் நமக்குள் ஒற்றுமையை இழந்து விட்டோம். நாம் முற்றிலுமாக மையத்தில் இல்லாமலும், வெறுமனே வெளிவட்டத்திலுமாக இருக்கிறோம். எனவே, இயல்பாகவே ஒத்திசைவு இல்லாததொரு வாழ்க்கை துன்பம் நிறைந்ததாகவும், துக்கமானதாகவும், ஏதோ ஒருவித சுமை போன்றும், ஒரு கஷ்டமாகவும் இருக்கிறது. அதிகபட்சமாக, ஒருவர் இந்த துன்பத்தை கொஞ்சம் வேதனை குறைந்ததாக ஆக்கிக் கொள்ளலாம். மேலும், வாழ்க்கையில் ஆயிரக்கணக்கான வலி நிவாரணிகள் கிடைக்கின்றன.

வெறும் போதைப் பொருளும், மது வகைகளும் மட்டுமல்ல; இந்த மதங்களும் கூட ஒருவிதத்தில் போதை தரக்கூடிய அபின் போன்றதுதான். மேலும், இயல்பாகவே எல்லா மதங்களும் போதைப் பொருட்களுக்கு எதிராக உள்ளன. ஏனெனில் அவைகளும் அதே சந்தையில்தான் தங்கள் பொருட்களை விற்கின்றனர். எனவே, அவர்கள் தங்களின் போட்டியாளர்களுக்கு எதிராக உள்ளனர். மக்கள் அபின் போன்ற போதைபொருட்களை எடுக்க ஆரம்பித்தால், அவர்கள் சமயவாதிகளாக இருக்க மாட்டார்கள். அவர்கள், சமயவாதிகளாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அவர்கள், தங்களின் போதைப்பொருளைக் கண்டு கொண்டுவிட்டனர். மேலும், அபின் போன்ற போதைப்பொருட்கள் விலை மலிவானவை. அதில் நமது ஈடுபாடு கொஞ்சம் இருந்தால் போதுமானது. மக்கள் மரிஜூவானா, எல்.எஸ்.டி போன்ற மிகவும் நேர்த்தி செய்யப்பட்ட போதைப்பொருட்களை உபயோகிக்கும்போது, இயல்பாகவே அவர்கள் சமயவாதிகளாக இருக்கப் போவதில்லை. ஏனெனில் சமயம் என்பது மிகவும் ஆதிகாலத்து போதை மருந்து. எனவேதான் எல்லா மதங்களும் போதைப் பொருட்களுக்கு எதிராக உள்ளன.

அதற்குக் காரணம், உண்மையிலேயே அவைகள் போதைப்பொருட்களுக்கு எதிரானதாக இல்லை. அதற்குக் காரணம், போதைப் பொருட்கள், மதங்களின் போட்டியாளர்கள் என்பதுதான்; எனவே மக்கள், போதைப் பொருட்களை உபயோகிப்பதற்கு தடை ஏற்படுத்திவிட்டால், அவர்கள் நிச்சயமாக இந்த மதகுருக்களின் வலையில் விழுந்துதான் தீர வேண்டும். ஏனெனில், அப்போது மதங்களை விட்டால், வேறுவழி கிடையாது. அது ஒருவித ஏகபோகத்தின் வழி. அதாவது அவர்களின் மதம் என்னும் போதைப் பொருள் மட்டுமே சந்தையில் இருக்க வேண்டும் என்பதும், மற்றவையெல்லாம் சட்டவிரோதமானவை என்பதுமாகும்.

மக்கள் துன்பத்தில் வாழ்கிறார்கள். அதில் இருந்து விடுபட இரண்டு வழிகள்தான் உள்ளன. அவர்கள் தியானம் செய்பவர்களாக, உஷாரானவர்களாக, விழிப்புணர்வு உள்ளவர்களாக, தன்னுணர்வு பெற்றவர்களாக ஆக முடியும். ஆனால், அது மிகவும் கடினமான வேலை. அதற்கு தைரியம் தேவை. அல்லது இன்னொரு மலிவான வழி என்னவென்றால், நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்களோ, அதைவிட இன்னும் அதிகமான தன்னுணர்வு இழந்த நிலைக்கு நீங்கள் சென்றுவிட்டு, அந்த நிலையில் நீங்கள் அந்த துன்பத்தை உணராமல் இருக்க முடியும். உங்களை முற்றிலும் புலன்நுகர்ச்சி அற்றவர்களாக ஆக்குகின்ற ஒரே ஒரு பொருளை, ஏதோ ஒரு மயக்க மருந்தை, ஏதோ ஒரு வலி நிவாரணியை எடுத்துக் கொள்வதால், அது உங்களை தன்னுணர்வு இழந்த நிலைக்கு கொண்டு சென்றுவிடுவதால், நீங்கள் அந்த தன்னுணர்வு அற்ற நிலையில் உங்களது கோபம், துன்பம், அர்த்தமற்ற தன்மை இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

இந்த இரண்டாவது வழி, உண்மையான வழி அல்ல. இந்த இரண்டாம் வழி, உங்களது துன்பத்தை கொஞ்சம் சௌகரியமானதாகவும், கொஞ்சம் தாங்கக்கூடியதாகவும், கொஞ்சம் வசதியானதாகவும் மட்டுமே ஆக்கக் கூடியது. ஆனால் இது உங்களுக்கு உதவிகரமாக இருக்காது. – இது, உங்களை மாற்றியமைக்காது. உங்களுக்குள் மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால், அது தியானத்தால் மட்டுமே முடியும். ஏனெனில் தியானம் ஒன்றுதான் உங்களை விழிப்புணர்வு உள்ளவர்களாக ஆக்குகின்ற வழி. என்னைப் பொருத்தவரையில், தியானம் ஒன்று மட்டுமே உண்மையான மதமாகும். மற்றவையெல்லாம் ஏமாற்று வித்தை. மேலும், கிறிஸ்துவம், இந்து, முகமதியர், சமணம், பௌத்தம் என வெவ்வேறு பெயர்களில் அபின் உள்ளது. ஆனால் அவைகள், வெறும் தொழிற் சின்னங்கள் மட்டுமே. பாத்திரங்கள் தான் வேறு வேறானவை. ஆனால் அவற்றில் உள்ள பொருட்கள் ஒன்றுதான். அவைகள் எல்லாம், நீங்கள் உங்கள் துன்பத்தில் எப்படியோ உங்களை சரி செய்து கொண்டு செல்கின்றதொரு வழிக்கு உதவுகின்றன.

இங்கு, என்னுடைய முயற்சி என்னவென்றால், உங்களை இந்த துன்பத்தைக் கடந்து அதற்கு அப்பால் கொண்டு செல்வதுதான். நீங்கள் துன்பத்தை நீங்கள் விரும்பிய வகையில் மாற்றி அமைத்துக் கொள்ள மட்டுமே முடியும் என்பது கிடையாது. நீங்கள் இந்த துன்பத்திலிருந்து முற்றிலும் விடுதலை பெறுகின்ற ஒரு சாத்தியம் உள்ளது. ஆனால், அந்தப் பாதை கொஞ்சம் கடினமானது. ஆனால் அந்தப் பாதை சவாலானது.

அதில் நீங்கள், உங்களது உடல் குறித்த விழிப்புணர்வுடன் மட்டுமல்ல; அதனால் நீங்கள் செய்கின்ற காரியங்கள் குறித்தும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

ஒருநாள் புத்தர் தனது காலை சொற்பொழிவை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அந்த நாட்டின் அரசரும் அதைக் கேட்பதற்கு வந்திருந்தார். அவர், புத்தரின் முன்னால் உட்கார்ந்து கொண்டிருந்தார். மேலும் அவர், தனது பெருவிரலை ஆட்டிக் கொண்டே இருந்தார். புத்தர், பேசுவதை நிறுத்திவிட்டு, அரசரின் பெருவிரலைப் பார்த்தார். புத்தர் தனது பெருவிரலைப் பார்ப்பதைக் கண்டவுடன், அரசர் தனது பெருவிரல் அசைப்பதை நிறுத்திவிட்டார். புத்தர் தனது பேச்சை தொடர்ந்தார். அரசரும் மீண்டும் தனது பெருவிரலை அசைக்க ஆரம்பித்தார். உடனே புத்தர் அவரிடம், “ நீங்கள் ஏன் அப்படிச் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு அரசர், “நீங்கள் பேசுவதை நிறுத்திவிட்டு, எனது பெருவிரலை பார்க்கும்போதுதான் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்கின்ற விழிப்புணர்வு எனக்கு வருகிறது. மற்றபடி நான் எனது தன்னுணர்வுடன் இருப்பதே இல்லை.” என்று பதில் கூறினார்.

அதைக் கேட்ட புத்தர், “அது உங்களது பெருவிரல்தானே! அப்படியிருக்கும்போது, அது அசைவதைக் கூட உங்களால் தன்னுணர்வுடன் கவனிக்க முடியாதா? இப்படியிருந்தால், நீங்கள் ஒருவரைக் கொலை செய்துவிட்டும் கூட அதைப் பற்றி எந்தவிதமான விழிப்புணர்வும் இல்லாமலும்கூட இருக்கலாமே!”என்றார்.

மேலும், இது போன்றதொரு வழியில் தான் மக்கள் கொலை செய்யப் படுகின்றனர். மேலும், கொலைகாரர்களும், தாங்கள் என்ன செய்கிறோம் என்கின்ற தன்னுணர்வு இல்லாமல் செய்கின்றனர். நீதிமன்றங்களில் அநேகமுறை கொலை செய்தவர்கள் தாங்கள் கொலை செய்ததை முழுமையாக மறுத்துள்ளனர். ஆரம்பத்தில் அவர்கள் நீதிமன்றத்தை ஏமாற்றுவதாகத் தான் எண்ணப் பட்டது. ஆனால் சமீபகால கணடுபிடிப்புகள் மூலம், அவர்கள் ஏமாற்றவில்லை என்றும், அவர்கள் அதை தங்களது சுயநினைவு இழந்த நிலையில் செய்து விடுகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. அந்த நொடிப் பொழுதில், அவர்கள் அந்த அளவுக்கு ஆக்ரோஷத்துடனும், அந்த அளவுக்கு கோபத்துடனும் இருந்துவிட்டதால், அவர்கள் அந்த ஆக்ரோஷத்தின் பிடியில் அகப்பட்டுக் கொள்கின்றனர். மேலும் நீங்கள் ஆக்ரோஷம் அடையும்போது உங்களது உடலில் சில வெறியூட்டும் விஷங்கள் சுரக்கின்றன. அதனால் உங்களது இரத்தம் வெறியூட்டப் படுகிறது. ஆக்ரோஷத்தில் இருப்பது என்பது தற்காலிகமாக புத்தி சுவாதீனம் இல்லாமல் இருப்பதைப் போன்றது. இதனால் அந்த மனிதர் அந்த சம்பவத்தைப் பற்றி முழுமையாக மறந்துப் போய்விடுவார். ஏனெனில் அவருக்கு அந்த சம்பவம் எப்படி நடந்தது என்கின்ற விழிப்புணர்வு இருக்காது. இப்படித்தான் மக்கள் காதல் வசப்படுவதும், ஒருவரை ஒருவர் கொலை செய்வதும், தற்கொலை செய்து கொள்வதும், இது போன்ற காரியங்களைச் செய்வதும் நடக்கிறது.

எனவே, நீங்கள் உங்களது உடல்குறித்து நிறைகவனத்துடன், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது தான் முதல்படி. கொஞ்சம் கொஞ்சமாக ஒருவர் தனது ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு நகர்வையும் குறித்து விழிப்புணர்வு கொள்ள முடியும். மேலும் இப்படி நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க ஆரம்பித்துவிட்டால், ஒரு அதிசயம் நடக்கும்; இதற்கு முன்புவரை நீங்கள் செய்துவந்த அநேக காரியங்கள் வெறுமனே மறைந்து போகும். உங்களது உடல் ஓய்வுடன் இருக்கும். உங்களது உடல் ஒத்திசைந்துவிடும், உங்களது உடலில் ஒரு ஆழ்ந்த அமைதி நிலவும், உங்களது உடலில் ஒரு மெல்லிய சங்கீதம் துடிக்கும்.

அதன்பின்னர், உங்களது எண்ணங்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க ஆரம்பியுங்கள். நீங்கள், உங்களது உடல் மீது செலுத்திய விழிப்புணர்வை இப்போது அப்படியே உங்களது எண்ணங்களின் மீது செலுத்த வேண்டும். உங்களது எண்ணங்கள், உங்களது உடலைவிட மிகவும் கண்ணுக்கு புலப்படாதவை. மேலும், அவை அபாயகரமானதும்கூட. மேலும், நீங்கள் உங்களது எண்ணங்கள் குறித்து விழிப்புணர்வு பெற்றுவிட்டால், அதன்பின்னர் உங்களுக்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து, நீங்கள் ஆச்சரியமடைவீர்கள். எந்த நேரத்திலும் உங்கள் மனதினில் ஓடிக் கொண்டிருக்கும் எண்ணங்களை எழுத ஆரம்பித்தால், உங்களுக்கு அது மிகப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுக்கும். “இதுதான் எனக்குள் நடந்து கொண்டிருக்கிறதா?” என்று நீங்கள் அதை நம்ப மாட்டீர்கள். வெறும் பத்து நிமிடங்கள் வரை உங்களுக்குள் என்னென்ன எண்ணங்கள் ஓடுகின்றன என்று வெறுமனே குறித்து வைத்துப் பாருங்கள். அப்போது வேண்டுமானால், யாரும் உள்ளே வராதபடிக்கு கதவை மூடி தாழிட்டுக் கொள்ளுங்கள். எனவே, அப்போது நீங்கள் நேர்மையுடன் உங்களுக்குள் ஓடுகின்ற எண்ணங்களை எழுத முடியும். மேலும் எழுதி முடித்து அதை படித்த பின்னர், அதை தீயிட்டுக் கொளுத்துவதற்கு ஒரு தீப்பெட்டியையும் தயாராக வைத்திருங்கள். எனவே உங்களைத் தவிர வேறு யாரும் அதில் உள்ளதை அறிய முடியாது. அதனால் அப்போது நீங்கள் நேர்மையுடன் இருந்து, உங்களுக்குள் என்னென்ன எண்ணங்கள் வருகின்றனவோ, அதையெல்லாம் எழுதி விட வேண்டும். அதை திரித்துக் கூறாதீர்கள், அதை மாற்றி விடாதீர்கள், அதை வெட்டிச் சுருக்கிவிடாதீர்கள். அதை அப்படியே நிர்வாணமானதாக காகிதத்தில் எழுதுங்கள். சரியாக அப்படியே எழுதுங்கள்.

அதன்பிறகு, பத்து நிமிடங்கள் கழித்து அதைப் படித்துப் பாருங்கள். அப்போது நீங்கள் உங்களுக்குள் ஒரு பைத்தியக்கார மனம் இருப்பதைக் காண்பீர்கள். இப்படிப்பட்ட முழு பைத்தியக்காரத்தனம் ஒன்று நமக்குள் ஒரு அடி நீரோட்டம் போல் ஓடிக் கொண்டிருப்பதை நாம் ஒருபோதும் கவனிப்பதில்லை. உங்களது வாழ்க்கையின் முக்கியமான விஷயங்களை அது பாதிக்கும். அது எல்லாவற்றையும் பாதிக்கும். ஆனால், இதுதான் உங்களது ஒட்டுமொத்த வாழ்வாகவும் இருந்துவருகிறது!

ஆகவே, இந்த பைத்தியக்காரத்தனம் மாற்றப்பட வேண்டும். மேலும், விழிப்புணர்வின் அற்புதம் என்னவென்றால், நீங்கள் விழிப்புணர்வுடன் இருப்பதைத் தவிர வேறு எதுவும் நீங்கள் செய்ய வேண்டியதில்லை என்பதுதான். நீங்கள் அதை கவனிக்கின்ற விஷயமே அதை மாற்றிவிடும். கொஞ்சம் கொஞ்சமாக உங்களது எண்ணங்கள் ஒரு குறிப்பிட்ட வகைக்குள் விழ ஆரம்பித்து விடும். அதன் பின்னர், அவைகளில் குழப்பம் இருக்காது. அவைகள் குழப்பங்கள் இல்லாத இந்த பிரபஞ்சம் போல ஆகிவிடும். எனவே அதன்பிறகு மீண்டும் அங்கே ஒரு ஆழ்ந்த அமைதி நிலவும்.

மேலும், இவ்வாறு உங்களது உடலும், உங்களது மனமும் அமைதியடைந்து விட்டால், அப்போது அவைகள் இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒத்திசைந்து செல்வதையும் நீங்கள் காண்பீர்கள். அங்கே ஒரு பாலம் அமைந்து விடும். இப்போது உங்களது உடலும் மனமும் வெவ்வேறு திசையில் ஓடாது. அவைகள் வெவ்வேறு குதிரைகளில் சவாரி செய்யாது. முதல் முறையாக அவைகள் இரண்டும் ஒத்துப் போகும். மேலும், அவைகளின் இந்த ஒத்து போகும் செயலானது நீங்கள் அதற்கடுத்த மூன்றாவது படிக்கு செல்வதற்கு மிகவும் உதவும். அதாவது, மூன்றாவதாக நீங்கள் உங்களது உணர்வுகள், மனக் கிளர்ச்சிகள், மனநிலைகள் ஆகியவைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பதற்கு ஏதுவாக இருக்கும். இந்த உணர்வுகள்தான் உங்களுக்குள் உள்ள கண்களுக்குப் புலப்படாத, அதேசமயம் மிகவும் கடினமானதொரு அடுக்கு. ஆனால் நீங்கள் உங்களது எண்ணங்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க முடியுமெனில், அதன்பின்னர் இது இன்னும் ஒரே ஒரு படிதான் அதிகம். உங்களது மனநிலையை, உங்களது மனக்கிளர்ச்சியை, உங்களது உணர்வுகளை பிரதிபலிக்கும்போது, நீங்கள் கொஞ்சம் விழிப்புணர்வுடன் இருந்தால் போதும்.

இப்படி நீங்கள் இந்த மூன்று நிலைகளிலும் விழிப்புணர்வுடன் இருந்துவிட்டால், அவைகள் எல்லாம் ஒரே விஷயமாக ஒன்று சேர்ந்துவிடும். மேலும், இவைகள் மூன்றும் இப்படி ஒன்றாக ஆகிவிட்டால், முற்றிலும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டால், உங்களால் இந்த மூன்றின் சங்கீதத்தையும் உணரமுடியும். – அவைகள் ஒரு இசைக்குழு போல ஆகிவிடும். –அதன்பின்னர்தான் நான்காவது விஷயம் நடக்கும். இந்த நான்காவது விஷயத்தை, நீங்கள் ஏதாவது செய்வதால் கொண்டு வரமுடியாது. அது தானாகவே நிகழ்வது. அது பூரணத்தின் வரமாகும். இந்த மூன்றையும் செய்தவர்களுக்கு கிடைக்கின்ற வெகுமதியாகும்.

மேலும் இப்படி நான்காவதாக எழுகின்ற அந்த விழிப்புணர்வுதான் உங்களை ஞானமடைந்த ஒருவராக ஆக்கும். அப்போது ஒருவர் தனது விழிப்புணர்வு குறித்தே விழிப்புணர்வுடன் இருப்பார். இதுதான் நான்காவது படி. அது ஒருவரை புத்தராக ஆக்கிவிடும். ஞானமடைந்தவராக ஆக்கிவிடும். மேலும் இப்படி ஒருவர் விழிப்படைந்தால் மட்டுமே ஒருவர் பேரானந்தம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ள முடியும். உடல் அறிவது சுகம், மனம் அறிவது சந்தோஷம், உள்ளம் அறிவது மகிழ்ச்சி, நான்காவதாக அறியப்படுவது பேரானந்தம். எனவே பேரானந்தம்தான் நமது லட்சியம்; விழிப்புணர்வுதான் அதற்கான பாதையாகும்.

மூலம் – விழிப்புணர்வு(தமிழ்) 1 - 2

இரவு அரசன் – ஓஷோவின் கதை - 12

ரவீந்திரநாத் தாகூரின் மிக அழகான கவிதைகளில் ஒன்று ‘இரவு அரசன்’.

மிகப் பெரிய பழமை வாய்ந்த இரவு அரசனின் கோவில் ஒன்று இருந்தது. அதில் ஆயிரம் மதகுருக்கள் இருந்தனர். ஒருநாள் தலைமை பூசாரியின் கனவில் இரவு அரசன் தோன்றி, “நாளை நான் கோவிலுக்கு விஜயம் செய்யப் போகிறேன். சுத்தப் படுத்தி தயாராக வைத்திருங்கள். நான் அங்கு பல நூற்றாண்டுகளாக வரவில்லை. நான் வேறு பல கோவில்களுக்கும் போக வேண்டும்” என்று கூறினார்.

தலைமை பூசாரி வேர்த்துக் கொட்டியபடி விழித்து எழுந்தார், ‘நீங்கள் வர வேண்டும், தரிசனம் தர வேண்டும், உங்களுடைய ஒளி பொருந்திய தரிசனத்தை நாங்கள் பெற வேண்டும்.’ என்றுதான் தினமும் வேண்டிக் கொண்டிருக்கிறார்.

இப்போது இந்த மாதிரி கனவு வந்துள்ளது. ஆனால் இந்த கனவு- - - -. நடு இரவில் அவர் மற்ற அனைத்து மதகுருக்களையும் எழுப்பி அழைத்து, “உங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். ஆனால் இந்த பிரச்னை உண்மையிலேயே சிக்கலானது. என் கனவில் இரவு அரசன் தோன்றி கோவிலை சுத்தம் செய்து தயார் படுத்துங்கள் நாளை நான் கோவிலுக்கு வரப் போகிறேன் என்றார்.” என்று கூறினார்.

மற்ற குருக்கள் அனைவரும் சிரித்தனர். “உங்களுக்கு மிகவும் வயதாகிவிட்டது என்பது தெரிகிறது. ஒரு கனவிற்காக அனாவசியமாக எங்கள் எல்லோரையும் தொல்லைப் படுத்தி விட்டீர்கள்”. என்றனர். அதற்கு அவர், “நீங்கள் எதனால் என்னைப் பார்த்து சிரிக்கிறீர்கள் என எனக்குப் புரிகிறது. நீங்கள் சிரிக்கிறீர்கள். எல்லோரையும் எழுப்புவதற்கு முன்னால் நான் இதைப் பற்றி யோசித்தேன். ஆனால் தயாராக வைப்பதில் தப்பில்லையே. எப்படியும் இந்த கோவிலுக்கு வெள்ளையடித்து சுத்தம் செய்தாக வேண்டும். நீண்ட நாட்களாக எதுவுமே செய்யவில்லை”. என்றார்.

இந்த கோவிலை மக்கள் முற்றிலுமாக புறக்கணித்து விட்டனர். இது அடர்த்தியான வனத்திற்கு நடுவில், மக்கள் நடமாட்டத்திற்கு வெகு தொலைவில் தள்ளி இருக்கிறது. மதகுருக்களும் கொஞ்சம் கொஞ்சமாக சந்தேகப் பட ஆரம்பித்துவிட்டனர். பலர் பிரார்த்தனை செய்வதைக் கூட நிறுத்தி விட்டனர்.
பலர் நாத்திகர்களாகி விட்டனர். “இரவு அரசன் இருக்கிறாரா இல்லையா என்பது யாருக்குத் தெரியும்? நாம் இங்கேயேதான் இருக்கிறோம். நாம் அவரை பார்த்ததேயில்லை. நமது பெற்றோர்களும் இங்கேயேதான் இருந்தனர். அவர்களும் அவரைப் பார்த்ததேயில்லை. அவர்களது பெற்றோர்களும் இங்கேயேதான் இருந்தனர். அவர்கள் கூட அவரை பார்க்க முடிந்தது இல்லை. நூற்றாண்டுகள் கடந்து விட்டன. நாம் இந்த சிலைகளுக்கு சேவை செய்துகொண்டே இருக்கிறோம், இப்போது திடீரென நீங்கள் உங்கள் கனவை நம்ப சொல்லி சொல்கிறீர்கள்.” என்றனர்.

தலைமை குரு, “நானே அந்த கனவை நம்பவில்லை, ஆனால் அதில் தவறேதும் இல்லையே! ஒருகால் இது உண்மையாக இருந்து அவர் வந்து விட்டால்......... என்று நினைத்துப் பாருங்கள். அதற்கு வாய்ப்பில்லை என எனக்குத் தெரியும், ஆனால் ஒரே ஒரு சதவிகிதம் சாத்தியக் கூறு உள்ளது. அவர் வருவதற்கான வாய்ப்பு 99 சதவிகிதம் இல்லை. அது ஒரு கனவு! ஆனால் அப்படி நடந்துவிட்டால்.... அவர் வந்து, அவரை வரவேற்க இனிப்புகள் இன்றி மலர்கள் இல்லாமல் இசையோ, நடனமோ, தீபமோ இல்லாமல், நாம் தயாராக இல்லாமல் மோசமாக இருப்பதை பார்த்தால் என்ன நினைப்பார்? ஆயிரம் பேர்! எல்லோரும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என கேட்கமாட்டாரா?

நாம் கோவிலை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து தீபங்கள் ஏற்றி வைத்திருந்தால் அவர் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி அதனால் ஒன்றும் தப்பில்லை. இது நமது கோவில், நாம் இங்கே வாழ்கிறோம், நாம் இதை கொண்டாடுவோம். விருந்தாளி வருகிறேன் எனக்கூறி வராமல் போய்விடலாம், அலங்கரிப்பதில் எதுவும் தப்பில்லையே! ஆனால் தயார் படுத்தாமல் இருந்தால் மிகப் பெரிய இழப்பாகிவிடும். அதற்கு நான் தயாரில்லை.” என்றார்.

இந்த கூட்டம் முடியும்போது கிட்டத்தட்ட விடிந்து விட்டது. தலைமைகுரு சொல்வது சரி என எல்லோரும் நினைத்தனர். கோவில் சுத்தப்படுத்தப் பட்டது. நூற்றுக்கணக்கான சிலைகள் பல ஆண்டுகளாக கவனிக்கப் படாமல் அழுக்கோடும் தூசியோடும் இருந்தன. கோவிலை சுத்தப்படுத்தி மலர்களாலும் தீபங்களாலும் அலங்கரித்து, வாசனை திரவியம் உபயோகப்படுத்தி மணம் வீசுமாறு செய்து சிறப்பான உணவும் இனிப்பும் தயாரித்து காத்திருந்தனர். பாதிநாள் கடந்தது. உடனே சந்தேகம் எழுந்தது. நண்பகலாகி விட்டது, அவர் இதுவரை வரவில்லை. ‘நாம் இந்த கிழவனின் கனவால் தேவையில்லாமல் அல்லல் படுகிறோம். எந்த கோவிலுக்காவது எந்த கடவுளாவது வந்ததாக யாராவது கேள்வி பட்டதுண்டா? நடைமுறையிலேயோ, சரித்திரித்திலேயோ அப்படிக் கிடையாது. நாம் கனவை நம்பி வீணாக அவதிப் படுகிறோம். விருந்தாளி வராமல் நாம் சாப்பிடவும் முடியாது’ என எல்லோரும் பொருமினர்.

இது அந்த கோவிலில் உள்ள விதி. முதலில் கடவுளுக்கு படைக்கப் பட வேண்டும். பின் அந்த குருவினர் அந்த உணவை பகிர்ந்து கொள்ளலாம். இதுவரை அது மிகவும் சுலபமான விஷயமாக இருந்தது. ஏனெனில் கடவுள்கள் அனைத்தும் கல்சிலைதான். இன்று அது கடினமான ஒன்றாகி விட்டது. மிகவும் நேரமாகி விட்டது. சூரியன் இறங்க துவங்கிவிட்டான். ஒவ்வொருவரும் அந்த வயதான குரு மீது கோபப்பட்டனர். ‘இது மிகவும் பெரிய கோவிலாகையால் சுத்தப்படுத்த நிறைய ஆட்களை வைத்தும் சுத்தப்படுத்தவும் மலர்களுக்காகவும் ஏகப்பட்ட பணத்தை வீண் செலவு செய்துவிட்டோம்.’ வயதான குரு, “என்னை மன்னித்துவிடுங்கள். நான் வேறு என்ன சொல்வது? இனிமேலும் அவர் வரக்கூடும்.” என்றார்.

இரவாகி விட்டது. வயதான குருவின் பேச்சை கேட்பதில்லை என அவர்கள் முடிவெடுத்தனர். “இனிமேலும் காத்திருப்பது வீண்! சூரியன் மறைந்து விட்டது. நாள் முழுவதும் வேலை செய்து பட்டினி கிடந்திருக்கிறோம். அதனால் சோர்வாக இருக்கிறது சாப்பிட்டு படுக்கப் போகலாம்!”. என்றனர்.

அந்த வயதான குரு, “ஒரு இரவு காத்திருக்கலாம். ஏனெனில் அவர் இரவு அரசர் – நாம் அதை முற்றிலுமாக மறந்து விட்டோம். அவர் பகலில் வரமாட்டார். வருவதாக இருந்தால் இரவில்தான் வருவார்”. என்றார்.

அதற்கு அவர்கள், “உங்களுடைய கனவை நம்பி பசியுடன் முழு இரவும் காத்திருப்பது முட்டாள்தனம். நாங்கள் அப்படி நம்ப தயாரில்லை”. என்றனர்.

அவர்கள் கலகம் செய்ய ஆரம்பித்தனர்.

அதற்கு அந்த வயதான குரு, “கலகம் செய்ய தேவையில்லை. நானும் பசியோடு சோர்வாக இருக்கிறேன், நானும் உங்களோடு சேர்ந்து கொள்கிறேன். அது ஒரு கனவாக மட்டுமே கூட இருக்கலாம்”. என்றார்.

அவர்கள் அந்த கோவிலின் இறைவனுக்காக தயார் செய்து வைத்திருந்த சுவையான உணவுகளை சாப்பிட்டுவிட்டு சோர்வாக இருந்ததால் முன் இரவிலேயே தூங்க சென்று விட்டனர்.

நடு இரவில் அந்த கோவிலின் இறைவனான இரவு அரசர் தங்க ரதம் அங்கு வந்தது. ரதம் மண் பாதையில் வந்ததால் அதன் சுவடுகள் கோவிலின் முகப்பில் பதிந்தன. அந்த கோவிலின் கதவை அடைய ஆயிரம் படிகள் ஏறி வர வேண்டும். இறைவன் ஆயிரம் படிகளையும் கடந்து கதவருகில் வந்து நின்றார்.
ரதம் மண் பாதையில் வந்த சத்தம் கேட்ட போது, பாதி தூக்கத்தில் இருந்த ஒருவர், “எனக்கு மிகப் பெரிய ரதம் வரும் சத்தம் கேட்கிறது. அவர் வந்து விட்டார் போல இருக்கிறது”. என்றார்.

அதற்கு வேறொருவர், “தொந்தரவு செய்யாதே, ரதமும் கிடையாது, ஒன்றும் கிடையாது! ஒரு மேகம் இடிக்கிறது, அவ்வளவுதான்! போதும் கற்பனை”. என்றார்.

கடவுள் கதவருகில் வந்து நின்ற போது மற்றொருவர், “ஆனால் நான் காலடி சத்தத்தை கேட்டேன், யாரோ கதவருகில் வந்திருக்கிறார்”. என்றார்.

பலர் ஒன்று சேர்ந்து, “சத்தம் போடாமல் அமைதியாக இரு, அது பலமான காற்றடிக்கிறது. அதனால் கதவு சத்தமிடுகிறது. ஏமாந்து போகாதே! கடவுள் கதவை தட்டுவார் என நினைக்காதே”. என்றனர்.

காலையில் மண்பாதையில் ரதம் வந்துபோன தடயத்தையும் ஆயிரம் படிகளில் யாரோ ஏறி வந்த காலடி சுவடையும் பார்த்துவிட்டு அவர்கள் கதறினர். “கடவுள் வந்திருக்கிறார் – ஆனால் நாம் தூங்கி விட்டோமே”!

உன்னை தட்டி எழுப்பக்கூடிய குருவை கண்டுபிடிப்பது சாத்தியம்தான், ஆனால் நீ தூங்கிக் கொண்டிருந்தால் அந்த தூக்கத்தில் ஆயிரத்தோரு காரணங்களை தூங்கிகொண்டே இருப்பதற்கு கண்டு பிடிப்பாய். தவிர்ப்பதற்க்காக ‘அது காற்றாக இருக்கும், மேகமாக இருக்கும்’ என ஏதாவது ஒரு காரணத்தை கண்டு பிடிப்பாய். யாரும் வரவில்லை என கூறிக் கொண்டு திரும்பி படுத்து மறுபடியும் தூங்க ஆரம்பித்து விடுவாய்.

விருந்தாளி வருவதற்காக கதவருகில் முழு விழிப்போடு ஆழமான நம்பிக்கை உணர்வோடும் அளப்பரிய அன்போடும் காத்திருக்கும் உனது உள்ளுணர்வை பொறுத்தது அது.
உண்மையில் உனது நேசிப்பும் நம்பிக்கை உணர்வும்தான் உருவாக்குகிறது – யாரும் வருவதில்லை.

உனது நேசம் உருவாக்குகிறது, உனது நம்பிக்கையுணர்வு உருவாக்குகிறது - வேறு யாரும் வரப் போவதில்லை
உனது நேசமும் நம்பிக்கையுணர்வும் மலர்ந்து உன்னைச் சுற்றி மணம் வீசும்.
உன்னைச் சுற்றி ஆயிரத்தோரு தீபங்கள் ஒளி வீசும்! அது உனது சக்திதான்! உனது அளப்பரிய சக்திதான்! அதைத் தவிர வேறு கடவுள் என எதுவுமில்லை.

SOURCE: LIVE ZEN - Chap # 3

No comments: