Friday, October 22, 2010

மலர் 1 இணைய இதழ் 7 11 பிப்ரவரி 2009

தலையங்கம்

அன்பு நண்பர்களே,
திருமணமான பல ஆண்களும் என்னிடம் தங்கள் அந்தரங்கத்தைப் பகிர்ந்து கொள்கையில், தங்கள் மனைவிகளைக் குறித்த ஆதங்கம் பெரிதும் வெளிப்படுகிறது. தாங்கள் அவர்களுக்காக பணம்,புகழ், அந்தஸ்து, வசதி எல்லாம் சேர்க்க இரவும் பகலும் உழைத்தும் அவர்கள் அனுசரணையாக இல்லை என்று குற்றம் கூறுகின்றனர். தங்கள் நிம்மதியை வீட்டில் குலைப்பதாகவும் தேவையில்லாமல் பிரச்சனை பண்ணுவதாகவும் கூறுகின்றனர். ஆனால் உண்மையான பிரச்னையை சொன்னால் ஏற்க முடியுமா இவர்களால்

உண்மையான பிரச்சனை இன்னும் ஆண்கள் மனைவிகளை தங்கள் உடமைகளாக கருதுவதுதான். அந்த சொந்தம் கொண்டாடுதல்தான். அதனால் எழும் எதிர்பார்ப்புதான். தங்களின் கெளரவத்தை வெளிக்காட்டும் உடமையாக மனைவியை நடத்துவதுதான்.

நீங்கள் நீங்களாக மட்டும், சுதந்தரமாக, உங்களைப் பற்றி முதன்மை அக்கறை உள்ளவனாக மட்டும் இருப்பீர்களேயானால், யாரும் உங்களை தொந்தரவு செய்ய முடியாது, உங்கள் நிம்மதியை குலைக்கவும் முடியாது.
அன்பாக இருங்கள், ஆனால் தனித்தன்மையுடன் இருங்கள், குறிப்பிட்ட இடைவெளியை வைத்துக் கொள்ளுங்கள். இப்படி நீங்கள் இருப்பதுடன் இதைப்போல மற்றவர்களும் இருக்க அனுமதியுங்கள்.
இது இன்னொரு பிரச்சனை

சில மனைவிமார்கள் கணவனை மீறி நடக்கிறார்கள். இந்த ஆண்கள் படும் துன்பம் சொல்லி மாளாது. இது எதனால் -
முதல் காரணம் காலங் காலமான ஆண் ஆதிக்க சமுதாய அமைப்பு.
இரண்டாவது காரணம் தனித்தன்மை கொண்டு வாழும் வாழ்வின் சுவையே இல்லாத வளர்ப்பு.
மூன்றாவது காரணம் தற்போதய சமூகத்தில் ஆண்களிடம் தைரியம் இல்லாதது
ஆண்கள் கோழைகளாக, தந்திரசாலிகளாக, வெறும் வியாபாரிகளாக, நேர்மையற்றவர்களாக மாறிவிட்டது.

ஆண்களிடம் இருந்த நேர்மையும் தைரியமும் மறைந்து விட்டது.
முன்பெல்லாம் ஆண்மகன் என்றால் அதிக வாழ்வு அனுபவம் இருக்கும். ஆகவே தைரியமும், நேர்மையும், அந்த நேர்மை வாழ்வால் வரும் சுயமரியாதையும் இருக்கும்.
இப்போது வெறும் புத்தகப் படிப்பால் ஆண்கள் அந்தகால பெண்கள் போலவே ஆகிவிட்டனர்.

வீரம் என்பதும் தைரியம் என்பதும் வாழ்க்கையை நேருக்கு நேர் சந்திப்பது என்பதே. ஆனால் பின்னர் அவை வன்முறையோடு சம்பந்தப் பட்டு விட்டன.

வன்முறை என்பது துன்புறுத்துவது, காயப்படுத்துவது, கொடுமைப்படுத்துவது, தீங்கு விளைவிப்பது. இன்றோ வீரம் தொலைந்துவிட்டது, வன்முறை மட்டுமே இருக்கிறது. ஆனால் வீரம் என்பதும் தைரியம் என்பதும் எது நடந்தாலும், எது நடக்கும்போதும் தனது தனித்தன்மையை, நேசத்தை விடாமல் நேர் கொள்வது, இறப்பே வந்தாலும் அதனைக் கண்டு அஞ்சி, பயந்து தனது தனித்தன்மையை விட்டுக் கொடுக்காமல் வாழ்வது என்றே இருந்தது. இன்னும் ஒருபடி மேலே வர்த்தமானர் என்ற ஜைன தீர்த்தங்கரர் மகாவீரர் என்று அழைக்கப்பட்டார்.

உலகின் துன்பங்களையும், துயரங்களையும் தனது தவ வலிமையால் வென்றவர் என்று இதற்குப் பொருள். பொய்யும், சூதும், தந்திரமும், ஏமாற்றலும், பித்தலாட்டமும், வஞ்சகமும், சோம்பேறித்தனமும், அரசியலும் இல்லாமல் வாழ்வில் எது வந்தாலும் சந்தித்து தான் மாறாமல், வைராக்கியத்துடன் தன் வழியில் நின்று வாழ்ந்து வாழ்வில் வெற்றி பெறும் தன்மையை குறிப்பதுதான் நெஞ்சுறுதி, வீரம், தைரியம் ஆகியவை. இது ஆணின் லட்சணமாக புருஷலட்சணம் என்று போற்றப் பட்டது. அக்காலத்தில் பெண்கள் இதற்கு நேர்மாறானவர்களாக சித்திரிக்கப்பட்டனர். உறுதியும், வீரமும், தைரியமும் இல்லாமல் தந்திரம் செய்பவர்களை பெண்களைப் போல என குறிப்பிடுவது போல பொட்டைப் பயல் என்று கூறுவது வழக்கமாக இருந்தது. ஆனால் பெண்களும் எல்லோரும் அப்படி இருக்க வேண்டியதில்லை.

அவர்களுடைய உடல் பலவீனமானது, அதுவும்கூட அக்காலத்தில் குழந்தை பெற்றுக் கொண்டே இருக்க வேண்டிய சூழல் இருந்ததால். ஆகையால் அவர்கள் ஆண்களால் அடிமைப் பட்டு கிடந்தனர். அது மட்டுமல்ல, நாம் அடிமையாய் வாழ்வதே நமக்கு சிறந்தது. அடிமையின் குணங்களாகிய பணிவு, எஜமானனை தெய்வமாய் மதித்தல், கடும் உழைப்பு, தியாகம், அடக்கம் போன்றவையே பெண்களின் குணங்களாக சித்தரிக்கப்பட்டு பெண்களும் அவற்றை ஏற்று வாழ பழக்கப் படுத்த பட்டனர். பெண் ஆணின் முன் வருவதே அடக்கமின்மை. பேசுவது அத்துமீறல் என்ற அளவிற்கு அடக்கி வைக்கப் பட்டனர்.

ஆனால் இன்று பெண்களின் நிலை பெரிதும் முன்னேறியுள்ளது. என்னிடம் தனது அந்தரங்கம் பகிர்ந்துகொள்ளும் பெண்கள் கணவன் பற்றி பெரிதாக குறை படுவதில்லை. அதிக அறிவு, அதிக செல்வம், பிள்ளைகளின் உயர்ந்த எதிர்காலம், தங்கள் ஆரோக்கியம், குடும்ப ஆரோக்கியம் என பெரிதும் உண்மையான பிரச்னைகளை பேசுகின்றனர்.

ஜோசியம் மட்டுமே நம்பி உள் அறையில் உட்கார்ந்து ஆண்களை மயக்கும் தந்திரம் பேசும் பெண்ணுலகம் மறைந்துவிட்டது. கல்வி பெண்களுக்கு விடுதலை கொடுத்து வருகிறது.

உலகத்தை வென்று செல்வமும், புகழும், பேரும், பெருமையும், உயர்வும் அடைய வாய்ப்பு கிடைத்தவுடன் அதிவேகத்தில் இருக்கின்றனர் நம் பெண்கள். அப்படித்தான் இருப்பார்கள் ஆரம்பத்தில். இதுவரை கிடைக்காத பணம், அதனால் கிடைத்த சுதந்திரம் என்று வாழ்வை தொடங்கும், தன் தனித்தன்மையை வாழ்ந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ள பெண்கள். சுதந்திரத்தில் தவறு செய்வதும் நிகழும்தான். ஆனால் அதற்காக சுதந்திரமே தவறல்ல.

பெண்களிடம் தன்னம்பிக்கையும், அறிவும் பெரிதும் வளர்ந்துள்ளன. ஆண்டாண்டு காலமாய் அடக்கி வைத்திருந்த ஆசைகள் வெளி வருகின்றன. அவர்கள் ஆசையோடு வாழ்கிறார்கள் இன்று. இது மிகவும் வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் ஆண்கள் அதிகம் சலிப்பும், குறையும், லஞ்சமும், பொய்யும், தொந்தியும், குடியும், அரசியலும் என வாழ்விலிருந்து விலகி சென்று விட்டனர். நல்லவைகளான தைரியம், விவேகம், நேர்மை, அனுபவம் போய் அதேசமயம் தீயவையான போலி கெளரவம், அந்தஸ்து, பேராசை, உழைக்காமல் வாழ வழி பார்ப்பது, ஏமாற்று, அரசியல் என்பவை ஆணிடம் அதிகரித்துவிட்டன.

பொது அறிவில் கூட இன்று பெண்கள் பெரிதும் முன்னேறி வருகின்றனர். அவர்கள் வளர்ச்சியில் வருத்தமளிக்கும் விஷயம், அவர்கள் ஆணைப் பார்த்து அதே பாதையில் வெற்றியடைய பாடுபடுவதுதான். அவர்களது சக்தி முழுவதையும், கிடைக்கும் சுதந்திரம் முழுவதையும் வெறும் வெளி விஷயங்களுக்கே பயன்படுத்தாமல், தங்கள் தனித்தன்மையை கண்டுகொண்டு தங்களது சிறப்பு குணங்களாகிய பொறுமை, நேசம், தாய்மை ஆகியவற்றை பயன்படுத்தினால் அது நல்லுலகைப் படைக்கும். ஆண் சிக்கிக்கொண்ட அதே போலிகெளரவம், போலி அந்தஸ்து, ஆணவம், அடுத்தவரை சொந்தம் கொள்ளுதல் ஆகியவற்றில் சிக்கிக் கொண்டால் பிறகு அவனது சலிப்பும், பொய்யும், போலித்தன வாழ்வுமே அவர்களுக்கு மிஞ்சும்.

அன்பு
சித்.

கவிதைப்பகுதி
அன்புப் படிக்கட்டு

அன்புப் படிக்கட்டின்...................
அடித்தட்டு காதல் – உடலின் வேகம்
அடுத்ததட்டு பாசம் – மனதின் பிடிப்பு
அதற்கடுத்தது நட்பு – பகுத்தறிவின் துணை
அதற்கு மேலே இரக்கம் – இதயத்தின் துடிப்பு
இன்னும் ஒருபடி மேலே தாய்மை – பலன் கருதா அன்பு
அதற்கும் மேல்படி கருணை – உணர்வோடு கூடிய அன்பு
இந்தப் படிகலேறி அடைகின்ற இடம்.........
அருள் – உயிரின் இயல்பாய் ஒளிவிடும் அன்பு!

ஓஷோ வீடியோ

1. The Joy is in Finding

2. Meditation Watching Without Judgement

3. OSHO: Silence Over Tibet - the music of OM

கேள்வி பதில் பகுதி

கேள்வி : ஓஷோ குடும்பத்தைப் பற்றியும், அதன் எதிர்காலம் பற்றியும் என்ன கூறுகிறார்?

இந்தக் கேள்விக்கான பதில் 3 பகுதிகளாக
வெளிவரும். இம்மாதம் 2-ம் பகுதி.:

பாரம்பரிய குடும்பம் ஏற்கனவே காலாவதியாகி விட்டது. அது அதன் தேவையை பூர்த்தி செய்து விட்டது. அதற்கு எதிர்காலம் இல்லை. இரு பெற்றோர்களுக்குள் மட்டுமே அடைபடுவது குழந்தைக்கு மனோரீதியாக ஆபத்தானது.

இரு பெற்றோர்களும் தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டே, ஒருவரையொருவர் நச்சரித்துக்கொண்டே இருக்கின்றனர். ஒருவரையொருவர் ஆளுமைக்குள்ளாக்க முயற்சிக்கின்றனர். குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர். – ஏனெனில் வேறு வழியில்லை. இதுதான் அவர்களின் முதல் பள்ளி. இது கணிதத்தையோ, பூகோளத்தையோ, வரலாற்றையோ பற்றிய கேள்வி அல்ல. இது வாழ்க்கையை பற்றிய கேள்வி. அவர்கள் வாழ்க்கையின் ABC யை கற்றுக் கொள்கிறார்கள்.

அவர்கள் தாய் தொடர்ந்து தந்தையை நச்சரித்து கொண்டிருப்பதை பார்க்கிறார்கள். தந்தை தொடர்ந்து ஆளுமைக்கு உட்படுத்த, அடிமைபடுத்த முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்.
குழந்தைகள் மிகவும் கவனிக்கும் தன்மை கொண்டவை. ஏனெனில் அவர்கள் இந்த உலகத்திற்கு புதியவர்கள். அவர்களுடைய கண்கள் தெளிவாக உள்ளன. அவர்களுடைய பார்வையில் அனுபவத்தின் அழுக்கு படவில்லை. அவர்கள் அதன் போலிதனத்தை முழுவதும் பார்க்கமுடியும். – ஏனெனில் யாராவது பக்கத்துவீட்டுக்காரர் இவர்கள் சண்டை போட்டுக் கொள்ளும்போது வந்தால் இவர்கள் உடனடியாக சண்டையை நிறுத்திவிட்டு ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொள்கின்றனர். அழகான விஷயங்களை பேசத் தொடங்கி விடுகின்றனர். பக்கத்து வீட்டுக்காரரை உள்ளே அழைக்கின்றனர். அவர்கள் சண்டை போடுவதேயில்லை போன்ற தோற்றத்தை பக்கத்துவீட்டுக்காரரிடம் உருவாக்குகின்றனர்.

குழந்தையும் போலித்தனத்தை கற்றுக் கொள்கிறது. நீ என்ன என்பது வேறு விஷயம். நீ எப்படி இருக்கவேண்டும் என சமுதாயம் எதிர்பார்க்கிறதோ அப்படி நீ சமுதாயத்திடம் இருக்கவேண்டும். – நீ தேவையில்லை. ஆனால் சமுதாயம் நீ என்னவாகவேண்டும் என விரும்புகிறதோ அப்படி நீ மாற வேண்டும்.

மிகச் சிறிய குழந்தை பருவத்திலிருந்தே நாம் ஒரு பிளவுபட்ட குணாதிசியத்தை, இருமையை, இரு இருப்புகளை உருவாக்குகிறோம்.
அவர்கள் வழிகளை கற்றுக் கொள்கிறார்கள். – பெண்குழந்தை மனைவி எவ்வாறு இருக்கவேண்டும் என தாய் தந்தையிடம் நடந்துகொள்வதை வைத்து கற்றுக் கொள்கிறாள். பையன் தந்தை நடந்துகொள்வதை வைத்து கணவன் எவ்வாறு இருக்கவேண்டும் என கற்றுக்கொள்கிறான்.
இதனால்தான் பரம்பரை பரம்பரையாக அதே முட்டாள்தனங்கள் திரும்ப திரும்ப செயல் படுகின்றன. முழு உலகமும் துன்பத்தில் வாழ்கிறது, போலித்தனத்தில் வாழ்கிறது. அடிப்படை காரணம் பாரம்பரிய குடும்பம். குழந்தை தாய் தந்தையை மட்டுமே –இருவரை மட்டுமே பார்க்கிறது.
எதிர்காலத்தில் இது மாற்றப்பட வேண்டும். ஏனெனில் கிட்டதட்ட தொண்ணூறு சதவிகித மனோவியாதிகள் இந்த குடும்பத்தின் காரணமாகவே ஏற்படுகின்றன. நாம் பெரிய குடும்பத்தை உருவாக்க வேண்டும். நான் அதை கம்யூன் என அழைக்கிறேன். அங்கு பலர் ஒன்று கூடி வாழ்வர்.

அமெரிக்காவில் நம்முடைய கம்யூனில் ஐயாயிரம் மக்கள் – ஒன்றாக வாழ்ந்தனர். ஒன்றாக வேலை செய்தனர். ஒரே ஒரு சமையலறையில் ஐயாயிரம் மக்கள் ஒன்றாக உணவு உண்டனர். அவர்களுடைய குழந்தைகள் பல மக்களுடன் பழகினர். தந்தையின் வயதுடைய அனைவரும் மாமன்கள். தாயின் வயதுடைய அனைவரும் அத்தைகள். அவர்கள் அனைவரிடம் இருந்தும் கற்றுக் கொண்டனர்.
அவர்களுக்கு அனுபவத்திற்கு பரந்த வாய்ப்பு இருந்தது. இதுதான் ஆண், அதுதான் பெண் என வரையறுக்கப் பட்ட கருத்து அவர்களிடம் ஏற்பட வழியில்லை. ஏனெனில் அவர்கள் பல பெண்களிடம் பழகினர். அவர்கள் அனைவரும் இவர்களிடம் அன்புடன் இருந்தனர். பல ஆண்களும் இவர்களிடம் அன்புடன் இருந்தனர். அவர்கள் அவர்களுடைய பெற்றோருடன் வாழவில்லை. அவர்களுக்கென ஒரு பகுதி இருந்தது. பெற்றோர் அங்கு சென்று அவர்களை சந்தித்தனர். அவர்கள் பெற்றோரிடம் வந்து ஒருநாள் இரண்டு நாள் தங்கலாம். அவர்கள் விரும்பினால் மற்றவர்களுடன் தங்கலாம். குழந்தை இல்லாதவர்கள் அவர்களை அழைத்தனர். அவர்கள் கம்யூன் முழுவதும் சுற்றினர்.

முழு கம்யூனும் அவர்களுடைய குடும்பமாக இருந்தது.
மனோரீதியாக இது பெண்ணை பற்றிய லேசான தோற்றத்தை மட்டுமே பையனின் மனதில் ஏற்படுத்தியது. ஆணைப் பற்றிய லேசான தோற்றத்தை மட்டுமே சிறுமியின் மனதில் ஏற்படுத்தியது.

இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் பல பெண்களின் பல குணங்களால் பிம்பம் மெலிதாக உருவாக்கப் பட்டதால், நீ சுலபமாக உனக்கு பொருத்தமான பெண்ணை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் உன்னிடம் வரையறுக்கப் பட்ட கருத்து இல்லாத காரணத்தால், உன்னிடம் மெலிதான பிம்பம் மட்டுமே இருப்பதால், ஏதாவது ஒரு பெண் அல்லது ஏதாவது ஒரு ஆண் அதனை நிறைவேற்ற முடியும்.

நீ பெற்றோருடன் வாழாவிட்டால், உனக்கு மனைவி எப்படி நடந்துகொள்ள வேண்டும், கணவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தெரியாது. நீ வெகுளித்தனமாக,அன்புடன் தொடங்குவாய். நீ ஆணை காதலித்தாய் அதனால்தான் அவனை திருமணம் செய்துகொண்டாய். நீ பெண்ணை காதலித்தாய் பெண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற குறிப்பிட்ட கருத்து உன்னிடம் இல்லை.

இந்துகளால் துறவி என அழைக்கப்படும் துளசிதாஸ், இந்தியாவில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற இந்து துறவி. அவருடைய புத்தகம் படிக்கப் பட்ட அளவு வேறு எந்த புத்தகமும் படிக்கப்படவில்லை. அவருடைய புத்தகம் இந்துக்களின் பைபிள். அவருடைய புத்தகத்தில் அவர், “நீ மனைவியை அடிக்காவிட்டால், தொடர்ந்து அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்.” என்கிறார்.

உன்னுடைய ஆண்மை பெண்மையை அடிப்பதன் மூலமே நிரூபிக்கப்படுகிறது. ஆனால் நீ பெண்ணை அடித்தால், பெண்ணும் உன்னை சித்ரவதை செய்ய ஆயிரம் வழிகளை கண்டுபிடிப்பாள். நீ அவளுடன் உடலுறவு கொள்ள விரும்பும்போதெல்லாம் அவள் தனக்கு தலையை வலிப்பதாக கூறுவாள். உங்கள் இருவருக்கும் இடையில் தொடர்பே இல்லை. எப்படி இருக்க முடியும் நீ அவளை அடிமைப் படுத்தியுள்ளாய். எந்த அடிமையாலும் தன்னுடைய சுதந்திரத்தை அழித்தவனை மன்னிக்க முடியாது. எந்த பெண்ணாலும் அவளுடைய சுதந்திரத்தை பறித்த எந்த ஆணையும் மன்னிக்க முடியாது. ஆனால் இந்துகள் இந்த துறவியின் அறிவுரையை பின்பற்றி வருகின்றனர். – இது புதிதல்ல. ஐயாயிரம் வருடங்கள் பழமையான மனுநீதி, இந்துக்களின் ஒழுக்க சாஸ்திரம், இதையே கூறுகிறது. மனோவியலாலர்களால் ஆண்—பெண் உறவை பற்றி எழுதப்பட்ட புத்தகம் ஒன்று உள்ளது. அந்த புத்தகத்தின் தலைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. நெருக்கமான எதிரி அப்படித்தான் நெருக்கமான எதிரிகளாக ஆணும் பெண்ணும் இதுவரை வாழ்ந்து வந்துள்ளனர். குழந்தைகள் கற்றுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அதனை மறுபடியும் செய்வார்கள். அவர்களுக்கு வேறுவழி தெரியாது.

குடும்பம் ஒரு கம்யூனாக மாறவேண்டும். ஐயாயிரம், பத்தாயிரம் மக்கள் ஒன்றாக வாழ்வது, ஐயாயிரம் குடும்பங்கள் தனியாக வாழ்வதை விட பொருளாதார அடிப்படையில் சிறப்பானது. நம்முடைய கம்யூனில் பதினைந்துபேர் ஐயாயிரம் பேருக்கான சமையலை கவனித்துக் கொண்டனர். இல்லாவிடில், இரண்டாயிரத்தி ஐநூறு பெண்கள் அவர்களுடைய சமையலறையில் அமுக்கப்பட்டு, அழிக்கப்பட்டிருப்பர்.
யாரும் குழந்தையின் உள்ளார்ந்த திறமையைப் பற்றி கவலைப் படுவதேயில்லை. எல்லோரும் தன்னுடைய இலட்சியத்தைப் பற்றியே யோசிக்கின்றனர். – தன்னுடைய மகன் முதலமைச்சர் ஆவதையோ, பிரதமர் ஆவதையோ காண ஆசைப் படுகின்றனர்.

அந்த பையன் தனது உள்ளார்ந்த திறமையால் இசைக்கலைஞன் ஆகவோ, ஒரு ஓவியன் ஆகவோ, ஒரு கணிதமேதை ஆகவோ, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகவோ மாறக்கூடும் என்பது குறித்து யாரும் கவலைப்படுவதேயில்லை. குழந்தை குறித்து யாரும் அக்கறைபடுவதில்லை. அவனை பொருட்படுத்துவதேயில்லை.

வாழ்க்கையில் ஒரே ஒரு ஆனந்தம் மட்டுமே உள்ளது. அது உனக்குள் நீ எதை சுமந்துகொண்டிருக்கிறாயோ அதுவாகவே நீ மாறுவது. – உள்ளார்ந்த தன்மை – அதனை முழுமையாக மலரச்செய்வது. ஒரு ரோஜா மொட்டு ரோஜாவாக வேண்டும். அதுவே அதன் மகிழ்ச்சி.

ஓய்வு பெறப் போகும் ஒரு சிறந்த அறுவை சிகிச்சை நிபுணரின் வழியனுப்பு விழாவை கொண்டாடுவதற்க்காக அவருடைய நண்பர்கள் அவரை அழைத்தனர். அவர் நாட்டின் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக திகழ்ந்தார். மக்கள் அவரை கொண்டாடினர்.
ஆனால் அவர் மிகவும் சோகமாக காணப்பட்டார். ஒரு நண்பர் “ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறீர்கள்” எனக் கேட்டார்.

அவர், “நான் சோகமாக இருக்கக் காரணம், நான் அறுவை சிகிச்சை நிபுணராக ஒருபோதும் விரும்பியதேஇல்லை. நான் ஒரு இசைக் கலைஞனாக விரும்பினேன். நான் என்னுடைய சித்தார் எனது கைகளில் இருக்கும்போது தெருக்களில் பிச்சைகாரனாக இறக்க நேர்ந்திருந்தாலும்கூட நாட்டின் தலைசிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக இருப்பதை விட அதிக மகிழ்ச்சி அடைந்திருப்பேன். ஏனெனில் இது என்னுடைய தாகமாக இருந்ததில்லை, இது என்னுடைய குறிக்கோள் அல்ல.” என்றார்.

உலகம் மிகவும் துன்பமயமாக உள்ளது. அடிப்படைக்காரணம் மக்கள் தங்களுடைய குறிக்கோளை நோக்கி நகர அனுமதிக்கப்படுவதில்லை. எல்லோரும் திசைதிருப்பப் படுகின்றனர்.

குடும்பம் இனிமேல் தேவையில்லை என்பது மிகவும் ஆசீர்வாதமாக இருக்கப்போகிறது. – குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும்கூட. இப்போது பெற்றோர்களிடையே அன்பில்லை என்றாலும் கூட குழந்தைகளுக்காக இணைந்திருக்கிறார்கள்.

மனைவியை காதலிக்காத கணவனும் கணவனை காதலிக்காத மனைவியும் ........ அவர்கள் காதலிப்பதைப்போல நடித்துக் கொண்டிருக்கின்றனர். இது விபசாரத்தை தவிர வேறில்லை, நிலையான விபச்சாரம். குழந்தைகள்தான் காரணம். இல்லாவிடில் குடும்பம் உடைந்துவிட்டால், குழந்தைகள் என்ன ஆவார்கள்

கம்யூனில் பிரச்னை இல்லை. நீ அன்பு செலுத்தும்வரை ஒரு பெண்ணுடன் இருக்கலாம். அன்பு மறைந்து விட்டது என நீ அறிந்த கணத்தில்.......
வாழ்வில் எதுவும் நிரந்தரமல்ல. நிரந்தரமாக எதுவும் இருக்கமுடியாது. எதையும் நிரந்தரமாக்குவது உன் கையில் இல்லை. இறந்த விஷயங்கள் மட்டுமே நிலையாக இருக்கமுடியும். எந்தஅளவு ஒரு விஷயம் உயிர்துடிப்போடு இருக்கிறதோ அந்தஅளவிற்கு மாற்றமடையும்.
கற்கள் நிலையாக இருக்கக் கூடும்.

மலர்கள் நிலையாக இருக்க முடியாது.

அன்பு ஒரு கல் அல்ல, அது ஒரு மலர். அதுவும் அபூர்வ தன்மை கொண்டது.

அன்பை நிலையான விஷயமாக்கியது மனித குலத்தின் மிகப் பெரிய தவறு.
காதல் திருமணமாக முடியாது. திருமணம் என்பது சட்டம். அன்பை எந்த சட்டத்திற்க்குள்ளும் அடக்க முடியாது. அது காட்டுத்தனமானது. அது வந்துபோகும் தென்றலை போன்றது. அது போய்விடும் என பயந்துகொண்டு நீ எல்லா ஜன்னல்களையும் கதவுகளையும் மூடிவிட்டாய். – ஆனால் பிறகு தென்றல் இல்லை, வெறும் காற்று. திருமணம் வெறும் காற்று வேறு ஒன்றுமில்லை. உணரப்பட்ட தென்றல் – உன்னை திருமணத்திற்கு கொண்டுவந்தது. இனிமேல் அது அங்கு இல்லை. ஆனால் குழந்தைகளின் காரணமாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு நீ நடிக்க வேண்டும் – துன்பப்படு, நடி. அது எல்லா விதமான அடக்குதல்களையும் உருவாக்குகிறது.

கணவன் மனைவியை காதலிக்கவில்லை எனில் அவன் வேறு பெண்ணுடன் பழக தொடங்குவான். அலுவலகத்தில் அவனுடைய காரியதரிசி. பெண் கணவனை காதலிக்கவில்லை எனில் இயற்கையாகவே அவள் வேறு யாரையாவது கண்டு பிடிப்பாள். ஓட்டுனர். தயாராக இருக்கும் மக்கள் – காரியதரிசி, ஓட்டுனர். வேறு என்ன செய்வது? எங்கு செல்வது?

இது தேவையில்லாத பிரச்னைகளை, அசிங்கமான சண்டைகளை உருவாக்குகிறது. முழு குடும்பமும் இறுக்கமடைகிறது. அலைகள் அமைதியாகவும் மெளனமாகவும் சமமாகவும் இல்லை. நீ உன்னுடைய பெண்ணோடு திருப்தியாக இல்லாத காரணத்தால் நீ விபசாரிகளை உருவாக்கியுள்ளாய். மனிதன் செய்த மிகவும் அசிங்கமான செயல்களில் ஒன்று அது. – வெறும் பணத்திற்காக அவர்களின் உடலை விற்கும்படி பெண்ணை கட்டாயப்படுத்துவது. நன்றாக நினைவில் கொள். நீ பணத்திற்காக உடலை பெறலாம். ஆனால் நீ பணத்திற்காக காதலை பெற முடியாது.

அன்பு விற்பனைக்கானதல்ல!.

இதுவரை பெண் விபசாரிகள் மட்டுமே இருந்தனர். – ஏனெனில் பல ஆயிரம் வருடங்களாக இது ஆண் ஆதிக்க சமுதாயம். ஆனால் இப்போது பெண் விடுதலை இயக்கம் உள்ளது. இந்த விடுதலை இயக்கம் மேலும் பல முட்டாள்தனங்களை உருவாக்கியுள்ளது. ஏனெனில் அது ஆணை பிரதிபலிக்க முயற்சிக்கிறது. அது பெண்களின் உணர்வை உயர்த்த முயற்சிக்க வில்லை. அது ஆணை போலவே ஆக முயற்சிக்கிறது. ஆணை வெறுப்பாக பார்க்கிறது. அது வெறுப்பை உண்டாக்கிவிட்டது.

இப்போது இலண்டன் அல்லது நியூயார்க் அல்லது சான் பிரான்சிஸ்கோ போன்ற பெரு நகரங்களில் நீ ஆண் விபசாரிகளை காணலாம். இயர்கையாக – பெண்ணும் சம உரிமை கொண்டவள். பெண் விபசாரிகள் இருந்தால் பிறகு ஆண் விபசாரிகளும் இருக்க வேண்டும்.
பெண் விடுதலை இயக்கம் மிக அதிக வெறுப்பை ஆண்கள் மீது ஏற்படுத்த முயற்சித்து வருகிறது. அந்த இயக்கத்தில் சில தலைவர்கள் லெஸ்பியன் முறையை வலியுறுத்தி வருகின்றனர். பெண் பெண்ணின் மீது மட்டுமே காதல் கொள்ள வேண்டும். – ஆணை முழுவதுமாக வெட்டிவிட வேண்டும். அது நடந்து வருகிறது. ஓரினச் சேர்க்கை நடைபெறுகிறது. ஆண்கள் பெண்களிடம் ஓய்ந்துவிட்டனர். பெண்களால் நச்சரிக்கப் பட்டு, தொந்தரவடைந்து, அவர்கள் ஏதாவது ஒரு மாற்றை தேடத் தொடங்கி விட்டனர். அவர்கள் ஆண் ஆணை அன்பு செலுத்துவது சிறந்தது என கண்டறிந்துள்ளனர்...........குறைந்தபட்சமாக அது துன்பமயமானதல்ல. ஓரின சேர்க்கையாளர்கள் (GUY) கே என அழைக்கப்படுவது விபத்தல்ல. அவர்கள் (GUY) கே தான். ஆனால் இது முழு சமுதாயத்தையும் பைத்தியகார விடுதியாக மாற்றுகிறது. இந்த உடலுறவின் அடக்குதல் மிகப்பெரிய தொந்தரவுகளை அளிக்கப்போகிறது. ஓமோசெக்ஸ் ஏற்கனவே பயங்கர வியாதி

எய்ட்ஸ்சை கொண்டுவந்துவிட்டது. அது குணமடைவதற்கு வழியே இல்லை போல தெரிகிறது.

லெஸ்பினிசம்கூட.......! அது புதிதாக இருக்கும் காரணத்தால் அதற்கு சிறிது காலம் ஆகலாம், ஆனால் அதுவும் ஏதாவது ஒன்றை ஏற்படுத்தும். அவர்கள் ஏதாவது ஒன்றை ஏற்படுத்தவேண்டும். இல்லாவிடில் பெண்கள் விடுதலை இயக்கம் ஆணிடம் இருக்கும் ஏதோ ஒன்று நம்மிடம் இல்லை, அவர்களிடம் எய்ட்ஸ் உள்ளது நம்மிடம் எதுவுமில்லை என உணரத் தொடங்கும்.

பெண் விடுதலை இயக்கம் பெண்ணை அசிங்கப் படுத்துகிறது. அவர்கள் புகை பிடிக்கிறார்கள். ஏனெனில் ஆண் புகை பிடிக்கிறான். கெட்ட வார்த்தை பேசுகிறார்கள். ஏனெனில் ஆண் கெட்ட வார்த்தை பேசுகிறான். ஆண்கள் உபயோகப் படுத்தும் அதே விதமான உடைகளை அவர்களும் உபயோகப்படுத்துகிறார்கள். ஆனால் யாராவது இந்த பெண்களுக்கு இது பெண் விடுதலையல்ல, நீங்கள் வெறும் இரண்டாம் ரக ஆணாகிறீர்கள், இது மிகவும் தரம் தாழ்த்துவதாக அவமானபடுத்துவதாக உள்ளது என்பதை சொல்லவேண்டும். இவை அனைத்தும் குடும்பத்தின் காரணமாகவே நடக்கின்றன. குடும்பத்தை விட பெரியதொரு விஷயத்தில் குடும்பத்தை நாம் கரைக்காவிட்டால் இந்த விஷயங்கள் மறையாது. அன்பு மறைந்துவிட்ட பிறகு ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ வாழ வேண்டிய கட்டாயம் இல்லாவிட்டால் விபச்சாரம் என்பதே மறைந்துவிடும்.

சண்டையிட்டுக் கொண்டு நெருக்கமான எதிரிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நெருக்கமான நண்பர்களாக இருக்க முடியாவிட்டால், நெருக்கமான எதிரிகளாக இருக்கவேண்டிய தேவை இல்லை. – அதைவிட விலகிவிட்டு தெரியாதவர்களாக ஆகிவிடுவது சிறந்தது.
வாழ்க்கை மிகவும் சிறியது. தேவையற்ற முட்டாள்தனங்களால் அது வீணடிக்கப்படக்கூடாது.

வாழு – அன்பு செய் – முழுமையாகவும் ஆழமாகவும் அன்பு செலுத்து. ஆனால் ஒருபோதும் சுதந்திரத்திற்கு எதிராக அல்ல. சுதந்திரம்தான் உயர்ந்த மதிப்புடையதாக இருக்கவேண்டும்.

குடும்பம் அந்த சுதந்திரத்தை அழித்துவிட்டது.

என்னுடைய பார்வையில் எதிர்காலம் குடும்பத்திற்கானதல்ல. எதிர்காலம் கம்யூன்களுக்கானது. கம்யூன் சீரமைக்கப்பட்ட பெரிய குடும்பம். சிறிய குடும்பம் உருவாக்கிக் கொண்டிருந்த அழுத்தங்கள் எதையும் கம்யூன் உருவாக்காத அளவு மிகப் பெரியது. குழந்தைகள் கம்யூனால், வல்லுநர்களால் கவனித்துக் கொள்ளப்பட வேண்டும். முதலில், உனக்கு மனைவி இருப்பதால் தந்தை,தாய் ஆகும் உரிமை உனக்கு உள்ளது என்று பொருள் இல்லை. கம்யூனில் பயிற்சி இருக்க வேண்டும். தந்தை தாயாக விரும்பும் யாராக இருந்தாலும் கண்டிப்பாக அந்த பயிற்சியை எடுத்துக் கொள்ளவேண்டும். நீ திருமணம் செய்து கொண்டிருக்கலாம், நீங்கள் சேர்ந்திருக்கலாம். – அது உங்கள் இருவர் சம்பந்தப்பட்ட விஷயம் – ஆனால் அதற்காக நீ மூனறாவது நபரின் வாழ்க்கையில் விளையாடக் கூடாது. குழந்தையை வளர்ப்பதற்கு சரியான பயிற்சி இல்லாவிட்டால் உனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள உரிமை கிடையாது. அவன் ஆனந்தமான மனிதனாக மலர நீ உதவ வேண்டும். மனோவியலாளர்கள் கண்டறிவர்., மருத்துவர்கள் யோசிப்பார்கள், மரபியலாளர்கள் விவாதிப்பர். இந்த வல்லுநர்களிடமிருந்து அனுமதி பெறும்வரை நீ குழந்தை பெற்றுக் கொள்ளக்கூடாது.

மனிதன் சிரமமின்றி குழந்தை பெற்றுக்கொள்ளலாம். அதன் பொருள் நீ தாய் தந்தை ஆகலாம் என்பதல்ல. இவை திறமைகள், கலைகள். ஒரு வாழும் உயிரை வளர்ப்பதற்கு சில திறமைகள் (வல்லமைகள்) தேவை.
எவ்வளவு குழந்தைகள் தேவை என்பதை சமுதாயம் – கம்யூன் – முடிவு செய்யும். எனவே குழந்தைகள் சக்தி உள்ளவர்களாக நன்றாக படித்தவர்களாக ஆக முடியும். எனவே அதிக மக்கள் தொகை தொந்தரவு செய்யாது. எனவே வேலையற்றவர் யாரும் இல்லை. ஏழ்மையானவர்கள் யாரும் இல்லை. படிக்காதவர்கள் யாரும் இல்லை.

இப்போது குழந்தை உருவாவதைப் பற்றி கர்ப்பகாலத்தை குறித்து பல விஷயங்கள் தெரிந்து விட்டன. அந்த அறிவியல் அறிவை பயன்படுத்தாமல் இருப்பது வெறும் முட்டாள்தனமாக இருக்கும். நாம் அதனை விலங்குகளில் பயன்படுத்துகிறோம்.ஆனால் அதனை நாம் மனிதர்களில் பயன்படுத்துவதில்லை. நாம் இன்னும் விபத்து போன்ற வழிகளிலேயே குழந்தை பெற்றுக் கொள்வதை தொடர்கிறோம்.
இந்தியாவின் சிறந்த கவிஞர்களில் ஒருவரான இரவீந்திர நாத் தாகூர் அவருடைய பெற்றோருக்கு பதிமூன்றாவது குழந்தை. அந்த சமயத்தில் குடும்ப கட்டுபாட்டு முறை இல்லாமல் இருந்தது நல்லதே. இல்லாவிடில் உலகம் இரவீந்திரநாத் தாகூரை தவற விட்டிருக்கும். இன்னும் எவ்வளவு பேரை நாம் தவறவிட்டுக் கொண்டிருக்கிறோம் என நமக்கு தெரியாது. ஏனெனில் மனிதர்களை பொறுத்தவரை நாம் மூடநம்பிக்கை கொண்டவர்களாகவே நடந்து வருகிறோம்.

ஒரு உடலுறவில் மனிதன் கோடிக்கணக்கான விந்துகளை வெளியிடுகிறான். அந்த நொடியில் அரசியல் தொடங்குகிறது. ஒரு பெரிய ஓட்ட பந்தயம் ஒரு போட்டி பெண்ணின் கருமுட்டையை அடைய நடக்கிறது. நமக்கு அந்த தூரம் மிகவும் சிறியதாக தெரிகிறது. ஆனால் ஒரு வித்திற்கு, அதன் அளவிற்கு அது இரண்டு மைல் தூரம் போன்றது. அதன் வாழ்நாள் இரண்டு மணி நேரம் மட்டுமே.
இரண்டு மணி நேரத்தில் கோடிக்கணக்கான விந்துகள் பெண் முட்டையை அடைய ஓடிக் கொண்டிருக்கின்றன. ஒன்றே ஒன்றுதான் வெற்றி பெறும். எப்போதும் சிறந்த மக்கள் ஒதுங்கி நின்றுவிடுவர் என்பதை நீ உறுதியாக எடுத்துக் கொள்ளலாம். ரொனால்ட் ரீகன்கள் முதலில் சென்றடைவர். சிறந்த மக்கள் முதலிலிருந்தே சிறந்த மக்கள்தான். அவர்கள் மற்றவர்களுக்கு வழி விட்டுவிடுவர்.

இப்போது உன்னுடைய விந்தை மருத்துவமனைக்கு கொடுப்பது சாத்தியம். அவர்கள் எந்த விந்து அறிவுஜீவிகளாகும், எவ்வளவு விந்துகள் சாதாரண மனிதர்களாகும் – இந்துகள், கிறிஸ்துவர்கள், முகமதியர்கள், யூதர்கள் – எந்த விதமான மனிதர்கள் என கண்டறிய முடியும். அவர்களை முதலிலிருந்தே களைய முடியும்.

சிறந்ததை தேர்ந்தெடுக்க முடியும். நீ அவர்களை கண்டறிய முடியும். அந்த கூட்டத்தில் மிதப்பவர்களில் சாக்ரடீஸ், பித்தாகோரஸ், மோசஸ், ஜீஸஸ், ஹராகளட்டஸ் போன்றவர்கள் இருப்பார்கள். எதற்கு சாதாரண மக்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்? அறிவியல் உண்மைகள் தெளிவாக அறியப்பட்டு, நிருபிக்கபட்ட பிறகு, எதற்கு அது விபத்தாகவே இருக்க வேண்டும்?

ஏனெனில் இந்த கூட்டம் – இது சிறிய கூட்டம் அல்ல – நகர தொடங்கும்போது அவர்கள் முன்னால் சென்று அடைந்துவிட்டனர் என்ற காரணம் ஒன்றை தவிர வேறு காரணம் ஏதுமின்றி அவர்கள் அடால்ப் ஹிட்லர்களாகவும் முசோலினியாகவும் ஜோசப் ஸ்டாலினாகவும் இருக்கக் கூடும். ஏன் இந்த மக்களை உருவாக்க வேண்டும்? நீ சரித்திரம் திரும்ப திரும்ப நடக்கிறது என கூறிக் கொண்டே இருக்கிறாய். நீ விபத்தாகவே இருந்துகொண்டே இருக்கும் காரணத்தால்தான் அது திரும்ப திரும்ப நடக்கிறது. காரணம் நீதான். சரித்திரம் முழுமையாக, திரும்ப எதுவும் நடக்காதபடி மாற்றப் பட முடியும்.

ஒருவர் சிறிதளவு அறிவை பயன்படுத்த வேண்டும், அவ்வளவே.
கோடிக்கணக்கான மக்களால் பூமியை நிரப்புவதை விட சிறந்தவர்களை தேர்ந்தெடுங்கள். இப்போது ஐம்பது கோடி மக்கள் உள்ளனர். அதைவிட பத்து கோடிபேர் மட்டும் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்க முடியும். அப்போது நாம் ஒரு சூப்பர் மனிதனை உருவாக்க முடியும். நாம் நமது பழைய முறையிலான யோசனைகளை மட்டும் மாற்ற வேண்டும். நாம் அறிவியலை மனிதனுக்கு வேலை செய்ய பயன்படுத்த வேண்டும். அறிவியல் குழந்தைகளுக்காக பயன்படுத்தப் படவேண்டும்.
குடும்பங்கள் மிகவும் தளர்வானவைகளாக, ஓய்வானதாக, பெரிதாக மாற வேண்டும். நாம் பூமியில் ஒரு சொர்க்கத்தை உருவாக்க முடியும்.

SOURCE: The Transimission of the lamp Chepter # 31

மனிதனின் முடிவுகள் – ஓஷோவின் கதை - 7

நான் ஒரு சிறு கதை கூறுகிறேன். இது சீனாவில் லாவோட்சு வாழ்ந்த காலங்களில் நிகழ்ந்தது. இந்த கதையை லாவேட்சு மிகவும் விரும்பினார். லாவேட்சுவை பின்பற்றியவர்கள் பல தலைமுறையாக இந்த கதையை திரும்ப திரும்ப கூறி வந்தனர். இந்த கதையில் மேலும் மேலும் அதிக அர்த்தத்தை அவர்கள் உணர்ந்தனர். இந்த கதை தொடர்ந்து வந்தது. இது ஒரு வாழும் உண்மையென மாறி விட்டது.

கதை மிகவும் எளிமையானது. ஒரு கிராமத்தில் வயதான ஏழை ஒருவன் இருந்தான். ஆனால் அரசர்களே பொறாமை கொள்ளுமளவு அழகான வெண் குதிரை ஒன்று அவனிடம் இருந்தது. யாரும் அப்படிப்பட்ட அழகான, வலிமை பொருந்திய, அம்சமான. கம்பீரமான குதிரையை அதற்குமுன் பார்த்திருக்க முடியாது. அரசன் அந்த குதிரையை என்ன விலை கொடுத்தாவது வாங்க தயாராக இருந்தான். ஆனால் அந்த மனிதன், “இந்த குதிரை என்னை பொருத்தவரை வெறும் குதிரையல்ல, என் குடும்பத்தில் ஒருவன். நான் எப்படி மனிதர்களை விற்கமுடியும்? அவன் ஒரு நண்பன். அவன் ஒரு உடமையல்ல, உன்னால் நண்பனை விற்க முடியுமா? அது சாத்தியமில்லை.” என்று கூறி விட்டான். அவன் மிகவும் ஏழை, எல்லா வழியிலும் சபலம் வர வாய்ப்பிருந்தது. ஆனால் அவன் அந்த குதிரையை விற்கவில்லை.

ஒருநாள் காலை லாயத்தில் குதிரை இல்லை என்பதை அவன் கண்டான். முழு கிராமமும் ஒன்று திரண்டு, “நீ ஒரு முட்டாள் கிழவன். இப்படி நடக்குமென்று – என்றாவது ஒருநாள் யாராவது குதிரையை திருடி விடுவார்கள் என – எங்களுக்கு முன்பே தெரியும். நீயோ மிகவும் ஏழை – இப்படிப் பட்ட அரிதான ஒன்றை உன்னால் எப்படி பாதுகாக்க முடியும்? இதற்கு பதிலாக அதை நீ முன்பே விற்றிருக்கலாம். நீ என்ன விலை கேட்கிறாயோ அந்த விலைக்கு விற்றிருக்கலாம். நினைத்து பார்க்க முடியாத விலை கிடைத்திருக்கும். இப்போது குதிரை போய்விட்டது. உனக்கு இது ஒரு கெட்டநேரம், இது ஒரு சாபம்” என்றனர்.
அந்த கிழவன், “அதிகம் பேச வேண்டாம் – குதிரை லாயத்தில் இல்லை என்று மட்டும் கூறுங்கள். இதுதான் உண்மை மற்ற அனைத்தும் அனுமானங்களே. இது அதிர்ஷ்டமா இல்லையா என்பது யாருக்கு தெரியும்? எப்படி உங்களால் முடிவு செய்ய முடியும்?” என்றான்.
மக்கள், “எங்களை முட்டாளாக்காதே. நாங்கள் சிறந்த தத்துவவாதிகளல்ல, ஆனால் இதற்குத் தத்துவம் எதுவும் தேவையில்லை. அரிதான ஒன்று காணாமல் போய்விட்டது. அது கெட்டநேரம் என்பது மிக சாதாரண உண்மை.” என்றனர்.

அந்த கிழவன், “லாயம் காலியாக உள்ளது, குதிரை போய்விட்டது என்பது உண்மை என நானும் ஒத்துக்கொள்கிறேன். மற்றபடி எதுவும் எனக்குத் தெரியாது – அது கெட்டநேரமா நல்லநேரமா – ஏனெனில் இது நிகழ்வின் ஒரு பகுதியே. இதை தொடர்ந்து என்ன நடக்குமென்பது யாருக்கு தெரியும்?” என்றான்.

மக்கள் சிரித்தனர். கிழவனுக்கு புத்தி பிசகிவிட்டதென அவர்கள் நினைத்தனர். அவன் எப்போதும் கொஞ்சம் கிறுக்கனாகவே இருப்பான். அது எல்லோருக்கும் தெரியும். இல்லாவிடில் இந்த குதிரையை நல்ல விலைக்கு விற்று பணக்காரனாகி இருக்கலாம். ஆனால் அவன் விறகுவெட்டியாகவே வாழ்ந்துவந்தான். அவனுக்கும் மிக வயதாகிவிட்டது. இருப்பினும் காட்டுக்கு சென்று மரங்களை வெட்டி கொண்டுவந்து விற்றுக் கொண்டிருந்தான். அவன் சம்பாதிப்பது கைக்கும் வாய்க்குமே போதவில்லை. அவன் வறுமையிலும் வேதனையிலும் வாடிக் கொண்டிருந்தான். இப்போது அவன் ஒரு கிறுக்கன் என்பது மிகவும் ஊர்ஜிதமாகிவிட்டது.

பதினைந்து நாட்களுக்கு பிறகு, திடீரென ஒரு இரவில் அந்த குதிரை திரும்பி வந்துவிட்டது. இது திருடப்பட வில்லை. அது காட்டுக்கு தப்பி ஓடிவிட்டது. இப்போது தான் மட்டுமின்றி அது தன்னுடன் கூட தன் இனத்தைச் சேர்ந்த ஒரு டஜன் குதிரைகளையும் கூட்டிக் கொண்டு திரும்பி வந்துள்ளது. திரும்பவும் கிராமத்து மக்கள் திரண்டு வந்து, “அந்த கிழவனிடம், பெரியவரே, நீங்கள் சொன்னது சரிதான், நாங்கள் கூறியது தவறாகிவிட்டது. அது கெட்டநேரமல்ல. அது நல்லநேரம்தான் என்பது நிருபணமாகிவிட்டது. நாங்கள் வலியுறுத்தி கூறியதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள்.” என்றனர்.
அந்த கிழவன், “மறுபடியும் நீங்கள் அதிகமாக யோசிக்கிறீர்கள். அந்த குதிரை திரும்ப வந்துவிட்டது என்றும் அதனுடன் இன்னும் பனிரெண்டு குதிரைகள் வந்துள்ளன என்று மட்டும் கூறுங்கள்.- ஆனால் தீர்மானிக்காதீர்கள். இது ஆசீர்வாதமா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. இது ஒரு நிகழ்வின் ஒரு பகுதியே. முழு கதையும் தெரியாமல் எப்படி உங்களால் முடிவு செய்ய முடிகிறது? ஒரே ஒரு பக்கத்தை படித்துவிட்டு முழு புத்தகத்தையும் எப்படி விமர்சனம் செய்ய முடியும்? ஒரு பக்கத்தில் ஒரே ஒரு வரியை படித்துவிட்டு எப்படி அந்த பக்கத்தை பற்றி பேச முடியும்? ஒரே ஒரு எழுத்தை மட்டும் பார்த்துவிட்டு எப்படி அந்த வரியை பற்றி கூற முடியும்? நமது கையில் அந்த எழுத்து அளவு கூட இல்லை, வாழ்வு மிகப் பெரியது – எழுத்தின் பகுதிதான் இருக்கிறது. நீங்கள் முழு வாழ்வையும் பற்றி முடிவெடுக்கிறீர்கள். இது ஒரு ஆசீர்வாதம் எனக் கூற வேண்டாம், யாருக்கும் தெரியாது. முடிவெடுக்காமல் இருப்பதே எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அதனால் என்னை தொந்தரவு செய்யாதீர்கள்.” என்றார்.

இந்த முறை மக்கள் எதுவும் கூறவில்லை. அந்த பெரியவர் சொல்வது சரியாக இருக்கலாம். அதனால் அவர்கள் மெளனமாக இருந்துவிட்டனர், ஆனால் உள்ளே இவன் கூறுவது தவறு என நினைத்துக் கொண்டனர். பனிரெண்டு குதிரைகள் அந்த குதிரையுடன் வந்திருக்கின்றன. சிறிதளவு பயிற்சி கொடுத்தால் போதும் அவைகளை விற்று ஏகப்பட்ட பணம் சம்பாதிக்கலாம் என நினைத்தனர்.

அந்த பெரியவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவன் இளஞன். இவன் அந்த குதிரைகளுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தான். ஒரு வாரத்திற்க்குள் ஒரு குதிரை மேலிருந்து விழுந்து அவனது கால் எலும்பு முறிந்துவிட்டது. மக்கள் திரும்பவும் கூடி – மக்கள் எப்போதும் எங்கும் ஒரே மாதிரிதான், உங்களைப் போலவே தான் – தீர்மானித்தனர். அவர்களின் முடிவு மிக எளிதாக வந்துவிடக் கூடியது. அவர்கள், “நீங்கள் கூறியது சரிதான். மறுபடியும் நீங்கள் சொல்வதுதான் சரி என நிருபணமாகியிருக்கிறது. இது ஒரு வரப்பிரசாதமல்ல, இது ஒரு கெட்டகாலம்தான். உனது ஒரே மகன் தனது கால்களை இழந்துவிட்டான். உன்னுடைய வயதான காலத்தில் அவன்தான் உனக்கு ஒரே ஆதரவு. இப்போது நீ மிகவும் கஷ்டப் படப் போகிறாய்.” என்றனர்.

அந்த வயதானவன், “நீங்கள் முடிவெடுப்பதற்க்கு மிகவும் ஆவலாக உள்ளீர்கள். வெகுதூரம் நினைப்பை ஓடவிட வேண்டாம். எனது மகன் தனது கால்களை ஒடித்துக் கொண்டான். என மட்டும் கூறுங்கள். இது ஒரு சாபமா வரமா என யாருக்குத் தெரியும்? – யாருக்கும் தெரியாது. மறுபடியும் இது நிகழ்வின் ஒரு பகுதியே, முழுமையாக கொடுக்கப்படவில்லை. வாழ்க்கை பகுதிகளாகத்தான் நிகழ்கிறது, முடிவு முழுமையை ஒட்டித்தான் எடுக்க முடியும்.” என்றான்.

இது நிகழ்ந்து சில வாரங்களுக்குப் பின் இந்த நாடு பக்கத்து நாட்டுடன் சண்டையிட சென்றது. நகரத்தின் அனைத்து வாலிபர்களும் படைக்கு வலுக்கட்டையமாக அழைத்து செல்லப்பட்டனர். அந்த பெரியவரின் மகன் மட்டும் விட்டுவைக்கப் பட்டான். ஏனெனில் அவன் முடமானவன். மக்கள் எல்லோரும் அழுது அரற்றினர். ஏனெனில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இளைஞர்கள் வலுக்கட்டாயமாக கூட்டிச் செல்லப் பட்டனர். அவர்கள் திரும்பி வருவதற்க்கான சாத்தியக் கூறே இல்லை, ஏனெனில் அவர்கள் சண்டையிடப் போகும் நாடு மிகப் பெரியது. இந்த சண்டை தோல்வியுறப் போகும் சண்டைதான். அவர்கள் திரும்பி வரப் போவது இல்லை. அந்த நகரம் முழுவதும் அழுது கொண்டும், அரற்றிக் கொண்டும் விம்மிக் கொண்டும் இருந்தது. அவர்கள் அந்த வயதானவனிடம் வந்து, “நீங்கள் சொன்னது சரியே பெரியவரே! கடவுளுக்குத்தான் தெரியும்! நீங்கள் கூறியது மிகவும் சரிதான் – இது வரம்தான் என்பது நிருபணமாகிவிட்டது. உனது மகன் முடமாகி இருக்கலாம், ஆயினும் அவன் உன்னுடன் இருப்பான். எங்களது மகன்கள் ஒரேயடியாக போகப் போகிறார்கள். குறைந்தபட்சம் இவன் உயிருடன் உன்னோடு இருப்பான், மெது மெதுவாக நடக்கக் கூட ஆரம்பிக்கலாம், சிறிதளவு நொண்டி நடப்பானாக இருக்கலாம், ஆனாலும் அவன் சரியாகி விடுவான்.” என்றனர்.

அந்த வயதானவன், “உங்களுடன் பேசவே முடியாது. நீங்கள் மேன்மேலும் கற்பனை செய்துகொண்டே போகிறீர்கள். – முடிவெடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள். யாருக்கும் தெரியாது உங்களது மகன்கள் வலுக்கட்டாயமாக படைக்கு போர்முனைக்கு இழுத்துச் செல்லப் படுகிறார்கள்., என்னுடைய மகன் இழுத்துச் செல்ல பட வில்லை என்பதை மட்டும் கூறுங்கள். இது வரமா சாபமா என்பது யாருக்கும் தெரியாது. யாராலும் தெரிந்து கொள்ளவும் முடியாது. கடவுளே அறிவார்.” என்றார்.
நாம் கடவுளே அறிவார் எனக் கூறுவதன் அர்த்தம் முழுமைக்கு மட்டுமே தெரியும் என்பதுதான். முடிவெடுக்காதே, முடிவெடுத்தால், தீர்மானித்தால், ஒருபோதும் உன்னால் முழுமையுடன் ஒருங்கிணைய முடியாது. நிகழ்வின் பகுதிகளால் கவரப்பட்டு விடுவீர்கள். சிறிய விஷயங்களின் மூலம் முடிவெடுக்கவும் தீர்மானிக்கவும் ஆரம்பித்து விடுவீர்கள்.

SOURCE: UNTILL YOU DIE Che # 2

செய்திகள்
1.
ஓஷோ அன்பர்களின் செய்திகள்.
சென்னை புத்தகக் கண்காட்சியில் ஓஷோ பிரேம் வீணா தியான மையம் ஓஷோவின் படைப்புக்களுக்கான விற்பனை மையம் திறந்திருந்தது. இதில் ஓஷோவின் படைப்புகளுக்கு வரவேற்புக் கிடைத்தது என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.
2.
கவிதா பப்ளிகேஷன்ஸ் வெளியீடாக ஓஷோவின் விடுதலை மற்றும் விழிப்புணர்வு ஆகிய இரு புத்தக தொகுப்புகள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு கையும் ஏந்த வேண்டிய, கண்களைத் தாண்டி, இதயத்தில் இடம் பெற வேண்டிய பொன்னான புத்தகங்கள் இவை. அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டும்.
3.
ஓஷோ , ஓஷோ செயல்பாட்டு தியானங்கள் , ஓஷோ குண்டலினி தியானம், ஓஷோ நாதபிரம்மா தியானம், ஓஷோ டாட், போன்ற ஓஷோ சொல் மற்றும் வார்த்தைகளுக்கான சட்டச் சண்டையில் ஓஷோ இணடர்நேஷனல் பவுண்டேஷன்னின் டிரேட் மார்க் உரிமையை அமெரிக்க கோர்ட் ரத்து செய்து 13.01.09. ல் ஆணை பிறப்பித்துள்ளது.

No comments: