Friday, October 22, 2010

மலர் 2 இணைய இதழ் 10 11 மே 2010

தலையங்கம்

அன்பர்களுக்கு வணக்கம்.

இருபுறமும் தீபம் ஏற்றப்பட்ட தன்னுணர்வோடு நீ ஒளிர வேண்டும். இதுதான் ஓஷோவின் புதிய பரிமாணம், புதிய மனிதன், ஜோர்புத்தா, ஓஷோவின் மனித குலத்திற்கான பங்களிப்பு.

இதன் பாதிப்பு ஓஷோவிற்குப் பின் வந்த அனைத்து குருமார்கள், போலிகள், உண்மைகள், அரைகுறைகள் என எப்படிப்பட்டவர்களாயினும் அவர்கள் கூட ஓஷோவின் இந்த செய்தியை கடைபிடிக்கின்றனர், மக்களிடம் பேசுகின்றனர். வறட்டு வேதாந்தமே ஆன்மீகம் என்பதை ஓஷோ உடைத்துப் போட்டு விட்டார். இனி அது மக்களிடம் செல்லுபடி ஆகாது. பிச்சை எடுப்பதும், பிரம்மச்சரியம் மேற்கொள்வதுமே ஆன்மீகம் என்ற நிலையை ஏற்கனவே ஓஷோ உடைத்துவிட்டார்.

இப்போதுள்ள எல்லா சாமியார்களும் இதைப் பின்பற்றி வாழ்வோடு இயைந்த ஆன்மீகம் பேச ஆரம்பித்து விட்டார்கள். இதன் பாதிப்பாகத்தான் பழமை சாமியார்களான சங்கராச்சாரியார் போன்றவர்களின் மதிப்பு குறைந்து புதுச்சாமியார்கள் வியாபாரம் வெற்றிநடை போடுகிறது.

ஆனால் ஓஷோவின் பங்களிப்பை சரியாகப் புரிந்து நம் வாழ்வை அப்படி வாழ ஓஷோவின் அன்பர்கள் இதயபூர்வமாக ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் ஜோர்புத்தா எனும் புதிய மனிதனும், தன்னுணர்வின் வெளிச்சத்தில் செயல்படும் ஒரு புதிய கூட்டமைப்பும், அதனால் சொர்க்கமாக மாறும் ஒரு புதிய உலகமும் சாத்தியமாகும்.

இந்த உடலே புத்தர், இந்த புமியே சொர்க்கம் என்கிறார் ஓஷோ. ஆம், அப்படி வாழ்வும், பூமியும் மலர முடியும்.

அதற்கு செய்ய வேண்டியது என்ன, ஆன்மீக நாட்டம் உடையவர்கள் என்று சொல்லிக்கொள்வோர் தன்னுணர்வை வளர்க்க தியானமுயற்சி கடுமையாகச் செய்கின்றனர். ஆனால் அதே தன்னுணர்வோடு தங்கள் உடலில் வாழ்வதில்லை. புலன்களையும், மூளையும் தன்னுணர்வின் வெளிச்சத்தில் முழு வீச்சோடு செயல்படுத்துவதில்லை. வெளி உலகின் நிகழ்வுகளை தன்னுணர்வு வெளிச்சத்தில் பார்த்து ஈடுபாட்டோடு பங்கேற்பதில்லை. உதாரணமாக ஒரு தொழில் செய்வது, ஒரு படைப்பில் ஈடுபடுவது, ஒரு அழகுணர்ச்சியோடு செயலாற்றுவது என்பதில் எல்லாம் தன்னுணர்வு வளர முடியும், அதோடு கூட பழமை மனதின் கட்டுதிட்டங்களை உடைத்து எறிந்து தன்னுணர்வின் வெளிச்சத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு சேவகம் செய்வதாக அந்த மனம் மாற வேண்டுமென்றால் வெளிஉலகில் தன்னுணர்வோடும், விழிப்புணர்வின் கூர்மையோடும் வாழ வேண்டியது அவசியம்.

இப்படி வாழும்போது வெளி உலகும் சொர்க்கமாகிறது, மனமும் சேவகனாகிறது. தன்னுணர்வும் வளர்கிறது.

இதேபோல தொழிலில் வெற்றிக்கொடி நாட்டும் பலருக்கு வெளி விஷயங்களில் விழிப்புணர்வு கூர்மையாக இருக்கிறது. ஆனாலும் அவர்கள் திசைதெரியாமல் ஓடிக் கொண்டிருப்பவர்களாகவே உள்ளனர். முதலிடத்தை நிலைநாட்டிக் கொள்ளும் முயற்சியே வாழ்க்கையாகி விடுகிறது. அவர்களுக்கு கடைசியில் சலிப்பும், ஏமாற்றமுமே மிஞ்சுகிறது. பயித்தியக்காரத்தனமான ஈகோவின் பிடியில் சிக்கி பாழ்பட்டதாக வருத்தப்படுகின்றனர்.

ஆனால் அது அப்படியல்ல. தங்களது விழிப்புணர்வுக் கூர்மையோடு தியானத்தில் அவர்கள் ஈடுபட்டால் உள்ளொளியை அவர்கள் பெற முடியும். தன்னுணர்வின் அமைதியையும் ஓய்வையும், சாந்தத்தையும் அனுபவிக்க முடியும்.

அப்போது உலகம் அழகான மனிதர்களால் நிறையும். இப்படி விழிப்புணர்வை தீயை இருபுறமும் பற்ற வைத்துக்கொண்டு வாழ்வின் சக்தியை எல்லாப் பரிமாணங்களிலும் வெளிப்படுத்தி வாழும் மனிதனே ஓஷோவின் கனவு. இது அவரது கடைசி வாக்கியம், “நான் எனது கனவை உங்களிடம் விட்டுச் செல்கிறேன்.”

அவரது கனவு மெய்ப்பட வேண்டும். அதற்கு நெஞ்சினிலே உறுதி வேண்டும், நேர்மை வேண்டும், உழைப்பு வேண்டும், இயற்கையோடு இணைப்புணர்வு வேண்டும், தியானம் வேண்டும், திறந்த இதயம் வேண்டும், அவ்வளவுதான்.

வாழ்வோம். விழிப்புணர்வோடு வாழ்வோம். உள்ளும் புறமும் விழிப்புணர்வோடு வாழ்ந்தால் அந்தப் பிரிவினை மறைந்துபோகும்.

உள்ளே, வெளியே, அகம், புறம் என்ற பிரிவினையே மனித மனத்தின் மாயைதான். அப்படியொரு பிரிவினையே கிடையாது. இப்படி மனிதன் பிளவுபட்டதே இன்றைய உலகத்தின் வீழ்ச்சிக்கு, மனிதனின் சிதைந்த நிலைக்குக் காரணம். இதை உணர்ந்துதான் ஓஷோ இதை இணைக்கும் ஒரு புதிய மனிதனை, இந்த பிளவே இல்லாத ஒரு புதிய மனிதனை, ஒரு புதிய வாழ்க்கை முறையை, ஒரு புதிய உலகத்தை உருவாக்குவதில் தன் சக்தியைக் கொடுக்கிறார்.

விழிப்புணர்வை உள்ளும் வெளியும் இதயத்திலும், செயலிலும், ஒரு சேரப் பற்றவைத்து வாழும்போது வெகு சீக்கிரமே இந்தப் பிரிவினை உடைந்து வெறும் விழிப்புணர்வாய், தன்னுணர்வாய், சக்தியாய், அன்பாய், அழகாய், ஒளி வெள்ளமாய் வாழும் வாழ்வின் சுவை நமக்குக் கிடைக்கும். அப்படி வாழும் வாழ்க்கைக்கு உடலும், மனமும், தொழிலும், படைப்பும், கலையும், தியானமும் சேவகம் செய்து உயர்த்திப் பிடிக்கும்.

அன்பு
சித்.
கவிதை

ஏமாறாதே

எனதருமை நண்பா!
நீ இலையை நேசிக்கிறாய்,
ஆம்...... உறவை நேசிப்பது நல்லதே!
ஆனால், இலையை மட்டும் எவ்வளவு நாள் நேசிப்பாய்?
இலையைத் தாங்கி இருக்கும் கிளைக்கும் கிளைவிட வேண்டுமல்லவா உன் நேசம்?

கிளையை நேசிப்பவரும் பலர்,
சுற்றத்தையே நேசிப்பது சிறப்பே,
ஆனால் நீங்கள் நேசத்திற்கு உண்மையாக இருக்கும்போது........
கிளையை பரப்பும் மரத்திற்கும் பரவ வேண்டுமல்லவா உங்கள் நேசம்?

மரத்தையே நேசிப்பவன் என்று மார் தட்டுவோர் உண்டு,
கருத்துக்கும் கொள்கைக்கும் காதல்வயப்பட்டு
மதமும் கட்சியுமாய் இதயம் விரிவது நல்லதே.
ஆனால், நேசத்தில் நிறைந்தவராய் நீங்கள் இருக்கும்போது....
மரத்தை தாங்கும் வேரை மறந்திருப்பது எப்படி சாத்தியம்?

எதிர் எதிர் திசையில் வளருவதால் மரத்தின் வேரும் கிளையும் வெவ்வேறா?
இவை நமது பார்வையின் பிரிவுகளே.
இதை உணர்ந்து உயர்வு தாழ்வு கொள்ளாமல்
மனிதனை நேசிக்கும் ஆன்மாக்களும் உண்டு.
இது மிகவும் உயர்வுதான்......
ஆனால் ஊற்றெடுக்கும் நேசத்தில் நிறைந்துவழிபவர்........
எப்படி ஒரு எல்லைக்குள் நிற்க முடியும்?

அன்புக்கு அணை போடலாமா?
அது வெள்ளமாய் பெருக்கெடுத்து எங்கும் உரம் சேர்க்கவேண்டாமா?
அணைகளின் நலன் குறுகியபார்வைதான்,
தொலைநோக்கில் தரிசு நிலங்களையே அவை தரும்,
இதை அறிய வில்லையே இந்த மனிதர்கள்.

என் தோழா,
ஊட்டமளிக்கும் மண்,
உயிரளிக்கும் சூரியன்,
உணர்வளிக்கும் காற்று,
வாழ்வளிக்கும் நீர்,
கூடிவாழும் உயிரினங்கள்......
என்று எல்லையற்ற பிரபஞ்சம் வரை,
உன் நேசம் விரிய வேண்டாமா?
ஆம்.......நீ அன்பின் ஊற்று!
வாழ்வெனும் ஆறு!
இலையில் ஏமாந்து போகாதே!
முழு இயற்கையும் நீயே!!!

ஓஷோ வீடியோ

1. Osho : Love and Loneliness

2. Osho : Ecology

3. Osho : Courge



கேள்வி – பதில்

மனதை அனுபவி

நான் எனது மனதுடன் சலித்து போய் விட்டேன். தியானம் செய்வதற்கும், விழிப்புணர்வுடன் இருப்பதற்கும் எல்லாமும் செய்து பார்த்து விட்டேன். ஆனால் அதை என்னால் உணரவே முடிய வில்லை.


முதல்படி – மனதை நிறுத்த முயற்சி செய்யாதே. சலனம் அதன் இயல்பு. அதை நிறுத்த முயற்சி செய்தால் உனக்கு பைத்தியம் பிடித்து விடும்.

ஒரு மரம் இலை விடுவதை நிறுத்துவதைப் போன்றது இது.. மரத்துக்கு பைத்தியம் பிடித்துவிடும். மரத்துக்கு இலைதான் இயல்பு. நீ மனவயப்பட்ட ஒருவன், நீ இதயப்பூர்வமான மனிதனாக மாற முயற்சி செய்தால் தேவையில்லாமல் உனக்கு நீயே தொந்தரவுகளை உருவாக்கிக் கொள்வாய். ஏனெனில் மனதிலிருந்து நகர்ந்து செல்வதற்கு வழிகள் உள்ளன. உன்னை இதயபூர்வமான ஒருவனாக கட்டாயப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையில்லை. அது உன்னுடைய இயல்புக்கு மாறானது.
உனது இயல்புடன் ஒன்றிவிடுவதற்கு, உனது இயல்பை பின்பற்றுவதற்கு கற்றுக் கொள். இயல்பாக இருப்பதுதான் மத்தன்மை. உனது இயல்புடன் லயப்படுவதுதான் மிக முக்கியமானதேவை. அதனால் உனது சிந்தனையை நிறுத்த முயற்சி செய்யாதே. அது மிகவும் சரியானதே.

இரண்டாவது படி – மனம் தனது வேலையை செய்வதை அனுபவி.
மனது வேலை செய்வதை நிறுத்துவதற்கு முயலாதே. அதை அனுபவி. அதனுடன் விளையாடு. அது மிக அழகான விளையாட்டு. அதனுடன் விளையாடு, அதை அனுபவி, அதை விரும்பு, அதைப் பற்றி விழிப்புடன் இரு, அதை பற்றி கவனம் கொள்.

மனதின் எண்ண ஓட்டத்தை பார். அவை எப்படி ஓடுகிறது, எப்படி ஒன்று ஒன்றுக்கு அழைத்துச் செல்கிறது என்று பார். ஒன்று ஒன்றை எப்படி இழுக்கிறது என்று பார். அது ஒரு அதிசயம். ஒரு சிறிய எண்ணம் எங்கோ இழுத்துச் செல்வதை கவனி. ஆரம்பித்த இடத்துக்கும், முடியும் இடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததை பார்.

ஒரு நாய் குரைக்கும், உனது எண்ண ஓட்டம் தூண்டப்படுகிறது. நாய் மறக்கப்பட்டு விடுகிறது, அழகான நாய் ஒன்றை வைத்திருக்கும் உனது நண்பனின் ஞாபகம் வருகிறது. பின் நீ அங்கு இல்லை. நண்பன் மறந்து போய் அவனின் அழகான மனைவி நினைவுக்கு வருகிறாள், பின் வேறொரு பெண்....... நீ எங்கே போய் முடியப் போகிறாய் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அது ஒரு நாய் குரைப்பதில் ஆரம்பிக்கிறது. கவனி, எண்ணங்களின் தொடர்பை பார். எண்ணங்களின் சங்கிலியை பார்.

எளிதாக எடுத்துக் கொள், ஓய்வாக இரு. விழிப்புணர்வு உன்னுள் வரும், அது மறைமுகமாக வரும். விழிப்புடன் இருப்பது ஒரு முயற்சி அல்ல. அதைத்தான் நீ செய்து கொண்டிருக்கிறாய். விழிப்புணர்வு அடைய முயற்சி செய்து கொண்டிருக்கிறாய். உனது மனம் உன்னை திசை திருப்புகிறது, அதனால் உனக்கு கோபம் வருகிறது. இந்த கேடுகெட்ட மனம் தொடர்ந்து உளறிக் கொண்டேயிருப்பதை நீ உணர்கிறாய். நீ அமைதியாக இருக்க முயற்சி செய்கிறாய், ஆனால் இந்த மனம் அதற்கு அனுமதிப்பதேயில்லை. அதனால் நீ மனதிடம் ஆத்திரம் கொள்கிறாய். அது நல்லதல்ல. இது உன்னை இரண்டாக பிரித்துவிடும். நீயும் உன் மனமும் என இரண்டாக பிரிந்து இருப்பீர்கள்.

எல்லா பிளவுகளும் தற்கொலைக்கான முயற்சியே. ஏனெனில் உனது சக்தி தேவையின்றி வீணாகிறது. நம்முடன் நாமே சண்டையிட்டுக் கொள்ளும் அளவு நம்மிடம் சக்தி இல்லை. அதே சக்தியை நாம் சந்தோஷத்துக்கு செலவிட வேண்டும்.

சண்டையிடுதல் உன்னை அழித்துவிடும். சண்டையிட வேண்டிய அவசியம் இல்லை – அன்பு செய். எல்லா அழிவு சக்திகளும் அன்பு சக்தியாக மாற வேண்டும். அனுபவித்துப்பார் விரைவில் எல்லா விஷயங்களும் மாற ஆரம்பிக்கும்.

தியான முறைகள்

உள்ளுணர்வு தரும் செய்தியை கவனித்தல்

ஆழ்ந்த உறக்கத்திற்குப்பிறகு உன்னுடைய இருப்பின் அடித்தளத்தில் இருந்து தகவல்கள் வருவது சில நேரங்களில் நிகழும்.

முதல் படி – காலை எழுந்தவுடன் உன்னுள் எழும் எண்ணங்களை கவனிக்க ஆரம்பி. உறக்கத்தின் போது நீ உனது இருப்பின் அருகாமையில் இருப்பாய்.
எழுந்த இரண்டு மூன்று நிமிடங்களுக்குள் சில தகவல்கள் உனது இருப்பின் அடித்தளஅனுபவத்தில் இருந்து நீ பெறக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது. இரண்டு மூன்று நிமிடங்களில் அந்த தொடர்பு அறுந்து விடும். நீ திரும்பவும் இந்த உலகத்திற்கு வந்துவிடுவாய். இந்த உலகத்தினுள் வீசப்பட்டு விடுவாய்.


மனப்பதிவை திரும்பி பார்த்தல்

எப்போது – உறங்கப் போகுமுன்

முதல் படி – திரும்பிப்பார் – அன்றைய தினத்தின் எல்லா நினைவுகளுக்குள்ளும் திரும்ப சென்று பார். காலையில் இருந்து ஆரம்பிக்காதே. எங்கிருக்கிறாயோ, அங்கிருந்து, படுக்கையிலிருந்து ஆரம்பி. கடைசி செயல், பின் அதற்கு முந்தினது, பின் அதற்கு முந்தினது, படிப்படியாக காலையில் செய்த முதல் செயல் வரை திரும்ப சென்று பார். அதனுடன் உன்னைத் தொடர்பு படுத்திக் கொள்வதில்லை என்பதை தொடர்ந்து நினைவில் கொண்டபடி அன்றைய நாளின் நிகழ்ச்சிகளை பின்னால் சென்று பார்.
உதாரணத்துக்கு ஒருவர் உன்னை கோபப்படுத்தினார், நீ அவமானப்பட்டதாக உணர்ந்தாய், இப்போது ஒரு பார்வையாளனாக மட்டும் இரு. அதனுடன் ஐக்கியப்பட்டு விடாதே. கோபப்பட்டு விடாதே. அது நிகழ்ந்தால் நீ அதனுடன் இணைந்து விடுவாய். தியானம் செய்கிறோம் என்பதையே தவற விட்டு விடுவாய். அந்த மனிதர் உன்னை அவமதிக்கவில்லை. ஆனால் அந்த நிகழ்வில் உள்ள வடிவம் உன்னுடையதுதான். ஆனால் அந்த வடிவம் இப்போது இல்லை. நீ நதி போல ஓடிக் கொண்டிருக்கிறாய். வடிவங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. குழந்தை பருவத்தில் உன்னிடமிருந்த அந்த வடிவம் இப்போது உன்னிடத்தில் இல்லை. அது போய்விட்டது. நதி போல தொடர்ந்து மாறிக் கொண்டேயிருக்கிறாய்.

காலை எழுந்தவுடன் செய்த முதல் செயல்வரை திரும்ப சென்று பார்த்துவிட்டால் காலை எழுந்த உடன் இருப்பது போன்ற புத்துணர்வை நீ திரும்ப பெறுவாய். பின் ஒரு சிறு குழந்தை போல நீ உறங்கிவிடலாம்.

இது ஒரு ஆழமான தூய்மை படுத்துதல். இதை உன்னால் தினமும் செய்ய முடிந்தால் ஒரு புது இளமை, ஒரு புத்துணர்ச்சி உன்னுள் வருவதை நீ உணரலாம். இதை நாம் தினமும் செய்ய குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டால் அவர்கள் தங்களது கடந்தகாலத்தை சுமந்துகொண்டு திரிய மாட்டார்கள். அவர்கள் எப்போதும் இங்கே இப்போது இருப்பார்கள். எதுவும் விடுபட்டுவிடாது. கடந்தகாலத்திலிருந்து எதுவும் சுமையாக மாறாது.

தியான முறைகளை பற்றிய விளக்கங்கள்

வாழ்வே ஒரு சினிமாதான்

“..........மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழிவகைகளை தேடாதே. நோக்கும் விதத்தை மாற்றிக் கொள். பார்வையை மாற்றிக் கொள். தீவிரமான மனதினால் சந்தோஷமாக இருக்க முடியாது. குதூகலமான மனதுடன் சந்தோஷமாக இருக்க முடியும். வாழ்வை ஒரு கதையாக, இதிகாசமாக எடுத்துக் கொள். இப்படி பார்க்க கற்றுக் கொண்டு விட்டால், பின் உன்னால் சந்தோஷமற்று இருக்க முடியாது. மகிழ்ச்சியற்ற தன்மை தீவிரமான தன்மையால் வருகிறது. ஏழு நாட்களுக்கு முயற்சி செய். ஒன்றை மட்டுமே நினைவில் வை. அதாவது இந்த உலகமே ஒரு நாடகம் என்பதை நினைவில் வைத்திருந்தால் பின் ஒருபோதும் நீ முன்பு இருந்தது போல இருக்கமாட்டாய். ஏழே நாட்கள்! நீ எதையும் இழக்கப் போவதில்லை. ஏனெனில் இழப்பதற்கு உன்னிடம் எதுவுமில்லை.

நீ முயற்சி செய்யலாம். ஒரு நாடகம் போல வாழ்வே ஒரு சினிமாதான் என்பது போல ஏழு நாட்கள் இருந்துபார். உனது உள்ளார்ந்த மாசற்ற தன்மையின், உனது புத்த இயல்பின் சிறிய அனுபவங்களை இந்த ஏழு நாட்கள் உனக்கு கொடுக்கும். ஒருமுறை நீ அனுபவம் பெற்று விட்டால் பின் ஒருபோதும் நீ முன்பு இருந்தது போல இருக்கமாட்டாய். நீ சந்தோஷமாக இருப்பாய். ஆனால் இது எந்தவகையான சந்தோஷம் என்று நீ அறியமாட்டாய். ஏனெனில் சந்தோஷம் என்பதைப்பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது. மகிழ்ச்சியற்ற நிலைகளின் பல படிகள் உனக்குத் தெரியும். சில நேரங்களில் மிகவும் மகிழ்ச்சியற்று இருப்பாய், சில நேரங்களில் மகிழ்ச்சியற்ற நிலை குறைவாக இருக்கும். மகிழ்ச்சியற்ற நிலை குறைவாக இருக்கும் நிலையைத்தான் நீ மகிழ்ச்சி என்று அழைக்கிறாய்.

மகிழ்ச்சி என்றால் என்னவென்று உனக்குத் தெரியாததால், அதை உன்னால் புரிந்து கொள்ள முடியாது. நீ மிகவும் தீவிரத்தோடு இருக்கும் இந்த உலகத்தில் மகிழ்ச்சியைப் பற்றிய ஒரு கருத்து மட்டுமே உள்ளது. அந்த கருத்தின் மூலம் மகிழ்ச்சி எப்படிப்பட்டது என்று உன்னால் புரிந்து கொள்ளவே முடியாது. இந்த உலகமே ஒரு விளையாட்டுதான் என்னும் இந்த நோக்கில் நீ வேரூன்றினால் மட்டுமே மகிழ்ச்சியை உன்னால் பெறமுடியும்.

அதனால் ஒவ்வொன்றையும் மகிழ்வோடு கொண்டாடும் விதமாக, நாடகத்தில் பங்கேற்கும் ஒரு கதைபாத்திரம் போல செய்ய முயற்சி செய். உண்மையென்று கொள்ளாமல் கதாபாத்திரமாக இருக்க முயற்சி செய். கணவன் போல என்றால் கணவன் போல நடி, மனைவி என்றால் மனைவி போல நடி. அதை ஒரு விளையாட்டாக செய். எந்த நாடகம் என்றாலும் கதாபாத்திரங்கள் வேண்டும், நடிப்பதற்கு நடிகர்களும் வேண்டும். திருமணம் என்றாலும், விவாகரத்து என்றாலும் எல்லாமும் நடிப்பதற்கான இடங்களே. ஆனால் எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளாதே. பல விதிமுறைகள் இருக்கின்றன. ஒன்று ஒன்றால் உருவானது, விவாகரத்து மோசமான ஒரு விஷயம். ஏனெனில் அதற்கு முன்பான திருமணமே மோசமானது. ஒன்று ஒன்றால் உருவாகும். அதனால் எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அப்படி எடுத்துக் கொள்ளாமல் இருந்தால், எப்படி உனது வாழ்வின் தன்மை உடனடியாக மாறுகின்றது என்று பார்.

இன்று இரவு உனது வீட்டுக்கு போனபின் கணவனோ, மனைவியோ, குழந்தையோ உனது கதாபாத்திரம் நாடகத்தில் எதுவோ அந்த கதாபாத்திரமாக நடிக்க முயற்சி செய். பின் அது எவ்வளவு அற்புதமாக இருக்கின்றது என்று பார். நீ கதாபாத்திரமாக இருக்கும்போது திறமையோடு நடிக்க முயற்சி செய்வாய். ஆனால் அதனால் தொந்தரவுக்குள்ளாக மாட்டாய். அதனால் பாதிப்படைய மாட்டாய். அதற்கு தேவையிராது. நீ உனது பாகத்தை பூர்த்தி செய்துவிட்டு தூங்கப் போய்விடலாம். ஆனால் ஏழு நாட்களும் தொடர்ந்து இது ஒரு நாடகம் என்ற நினைப்பு உனக்குள் இருக்க வேண்டும்.

பின் மகிழ்ச்சி உன்னுள் மலரும். ஒருமுறை மகிழ்ச்சி என்றால் என்ன என்று நீ தெரிந்து கொண்டு விட்டால், மகிழ்வற்ற தன்மைக்குள் நீ போக வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில் மகிழ்ச்சியோடு இருப்பதா, மகிழ்ச்சியற்று இருப்பதா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் இப்போது உன் கையில் இருக்கிறது.

வாழ்க்கையைப் பற்றிய தவறான நோக்கை நீ தேர்ந்தெடுத்ததால் உன்னால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. ஒரு சரியான பார்வையை தேர்ந்தெடுத்தால் நீ மகிழ்வோடு இருப்பாய்.

சரியான பார்வை என்பதற்கு புத்தர் மிக முக்கியத்துவம் கொடுத்தார். சரியான பார்வை என்பதை ஒரு அடித்தளமாகவே ஒரு அஸ்திவாரமாகவே மாற்றினார். சரியான பார்வை என்பது என்ன? அதை எப்படி அடையாளம் காண்பது? என்னைப் பொறுத்தவரை உன்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் நோக்கு சரியான பார்வை. அது பொருளைப் பற்றியது அல்ல. உன்னைத் துயரத்திலும் துன்பத்திலும் வைத்திருக்கும் நோக்கு தவறான பார்வை. அடையாளம் பொருள் சார்ந்தது அல்ல. உனது மகிழ்வே அதன் அடையாளம்.

உண்மையான ஒன்று

நான் இந்த கணத்தை மட்டுமே வலியுறுத்துகிறேன். ஏனெனில், இந்த கணம் அனைத்தையும் உள்ளடக்கியது. இப்போது என்பது மட்டுமே உண்மையான ஒன்று. மற்றவை யாவும் நினைவுகளாகவோ, கற்பனைகளாகவோ மட்டுமே உள்ளன. கடந்தகாலம் ஒரு நினைவாக தொடர்ந்து இருப்பதற்கு இப்போது தேவைப்படுகிறது. அது கடந்தகாலமாக இருப்பதில்லை. அது நிகழ்காலத்தில் ஒரு நினைப்பாக இருக்கிறது.

இதுதான் எதிர்காலத்திற்கும். எதிர்காலம் எதிர்காலமாக இருப்பதில்லை. அது ஒரு கற்பனையாக இந்த கணத்தில் இருக்கிறது. இருப்பவை யாவும் இப்போது மட்டுமே இருக்கிறது. இருக்கும் ஒரே காலம் நிகழ்காலம்தான்.

பந்தமின்றி இருத்தல் - ஓஷோவின் கதை 22

ஒரு நாட்டின் ராஜா ஒவ்வொரு நாள் இரவும் நகர்வலம் வருவான். அப்போது அவன் தினமும் ஒரு இளைஞன் மரத்தடியில் அசைவின்றி சிலைபோல அமர்ந்திருப்பதை போல பார்ப்பான். அவனுக்கு அமைதியாக அந்த இளைஞன் அமர்ந்திருப்பதை பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.

அவனால் தனது ஆர்வத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதனால் ஒருநாள் தனது குதிரையை நிறுத்தி இறங்கி, “இளைஞனே, உனது தியானத்தைக் கலைத்ததற்காக என்னை மன்னித்துக் கொள்.” என்றான்.

அந்த இளைஞன் தனது கண்களை திறந்து, இங்கே எந்த மன்னிப்புக்கும் இடமே இல்லை, நான் தியானம் செய்யவில்லை, இங்கே தியானம்தான் இருக்கிறது – யாரும் அதை தொந்தரவு செய்ய முடியாது. ஆனால் உனது ஆர்வம் எதுவோ அதை பூர்த்தி செய்துகொள். என்றான்.

அரசன், “நீங்கள் எனது அரண்மனைக்கு வர வேண்டும். நான் உங்களை கவனித்துக் கொள்வேன். இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களது தவத்தினாலும், உங்களது பொலிவினாலும், அமைதியினாலும் நான் ஈர்க்கப்பட்டு விட்டேன். அமைதியாக இந்த மரத்தடியில் நீங்கள் அமர்ந்திருப்பதை பார்த்தால் ஒரு புத்தரை பார்ப்பது போல இருக்கிறது. நான்தான் இந்த நாட்டின் அரசன், நான் உங்களை எனது அரண்மனைக்கு அழைக்கிறேன்.” என்றான்.

இப்படித்தான் காட்டுமிராண்டிதனமான மனம் வேலை செய்கிறது. அரசன் அந்த இளைஞனை தனது அரண்மனைக்கு வருமாறு அழைக்கிறான் – ஆனால் அவனது ஆழ் மனதில் இவர் தனது அழைப்பை ஏற்றுக் கொள்ளக் கூடாதென தோன்றுகிறது. ஏனெனில் அப்போது அவர் அரண்மனையையும் ஆடம்பரத்தையும் விரும்புகிறார் என ஆகி விடுமென பயப்படுகிறான்.

ஆனால் அந்த இளைஞன் எழுந்து நின்று, “போகலாம்” எனக் கூறுகிறான்.

இப்போது உடனடியாக அந்த சூழ்நிலையே மாறுகிறது. அரசனின் மனம், “நான் இப்போது என்ன செய்வது? அரசனின் விருந்தாளியாக இருப்பதற்கு, அரண்மனையில் இருக்கும் சுகங்களை அனுபவிப்பதற்கு இவர் ஆர்வமாக இருப்பது போல தோன்றுகிறதே, இவர் உண்மையான துறவியே அல்ல.” என நினைக்கிறது. எந்த அளவு ஒருவர் தன்னை துன்புறுத்திக் கொள்கிறாரோ அந்த அளவு அவர் ஒரு துறவி என்பது பழமையான ஒரு கருத்து. வசதியின்றி இருப்பது மதம். நோய், பசி, என தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ள ஆயிரம் வழிகள்........ அப்போது ஒரு சிறப்பான துறவி. அரசனின் மனதில் இந்த இளைஞன் தனது துறவிதன்மையிலிருந்து கீழிறங்கி விட்டார். ஆனால் இப்போது ஒன்றும் செய்ய முடியாது. தனது வார்த்தையிலிருந்து மாற முடியாது.

ஆனால் இந்த இளைஞன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் எதுவும் பேசவில்லை. அரசன் அரண்மனையின் சிறப்பான இடத்தை கொடுத்து நல்ல வேலையாட்களை அமர்த்தி இளைஞனை கவனித்துக்கொள்ள இளம்பெண்களை ஏற்பாடு செய்தான். துறவி இது ஒவ்வொன்றையும் ஏற்றுக் கொள்ள கொள்ள அரசனின் மனதில் தனது துறவிதன்மையிலிருந்து கீழிறங்கி கொண்டே வந்தான். என்ன வகையான துறவி இவர்? அழகான மிகப் பெரிய படுக்கையை ஏற்றுக் கொண்டார். அரண்மனையின் சிறப்பான உணவு வகைகளை உண்டார்.

அரசன், “கடவுளே, மடையன் நான். இவன் என்னை ஏமாற்றிவிட்டான். இவன் வலை விரித்து பிடித்துவிட்டான். நான் ஒவ்வொரு நாள் இரவும் போகும் வழி அறிந்து அந்த இடத்தில் ஒரு புத்தரைப் போல அமர்ந்து என்னை ஏமாற்றும் வகை அறிந்து என்னை வீழ்த்தியிருக்கிறான். நானும் ஏமாந்து விட்டேன். இப்போது இவனை மெல்லவும் முடியாது, துப்பவும் முடியாது. அரண்மனைக்குள் வந்துவிட்டான். மிகவும் ஏமாற்றுக்காரன் இவன்.” என்று நினைத்தான்.

ஆனால் இப்படிப்பட்ட மனநிலையோடு எவ்வளவு நாள் தாக்கு பிடிக்கமுடியும்?
ஆறு மாதம் கழித்து ஒருநாள் அதிகாலையில் தோட்டத்தில் உலாவியபடி பேசிக் கொண்டிருக்கையில், அரசன், ஒரு விஷயம் உங்களிடம் கேட்க வேண்டும். அது என்னை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. என்னால் அதிலிருந்து விடுபட முடியவில்லை. அதனால் ஆறு மாதங்களாக சரியாக தூங்கக் கூட முடியவில்லை. என்றான்.

இளைஞன், நீ எதை வேண்டுமானாலும் கேட்கலாம். என்று கூறினான்.

நான் இப்படி உங்களிடம் கேட்கக்கூடாது. ஆனாலும் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று எனக்கு தெரிய வேண்டும். நீங்களும் அரண்மனையில்தான் இருக்கிறீர்கள், எல்லா சுகங்களையும் அனுபவிக்கிறீர்கள், உங்களுக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு என்ன?

என்றாவது ஒருநாள் இந்த கேள்வி வரும் என்று எனக்குத் தெரியும். உண்மையில் நான் இங்கே வருவதற்காக மரத்தடியில் எழுந்து நின்றபோதே அது உன்னுள் எழுந்து விட்டது. நீ தைரியசாலி அல்ல. நீ இந்த கேள்வியை அப்போதே கேட்டிருக்க வேண்டும். ஆறு மாதங்கள் தேவையின்றி உனது தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை, ஆறு மாதங்களை வீணடித்திருத்த வேண்டியதில்லை. நான் உனது கேள்விக்கு பதிலை இங்கு சொல்ல போவதில்லை. நீ என்னுடன் உனது எல்லையை தாண்டி வர வேண்டும்.
என்றான் இளைஞன்.

அந்த இடம் ஒன்றும் அதிக தூரம் இல்லை. சில மைல் தூரத்தில் உள்ள நதிகரைதான் அரசனின் எல்லை.

அரசன், அங்கே போக வேண்டிய தேவை என்ன? நீங்கள் எனக்கு இங்கேயே பதில் கூறுங்கள். என்றார்.

இளைஞன், இல்லை, அவசியம் இருக்கிறது. என்றார்.

இருவரும் நதியை கடந்தனர். கரையை கடந்தவுடன் இளைஞன் நான் தொடர்ந்து போகப் போகிறேன். என்னுடன் வர நீங்கள் தயாரா இதுதான் என் பதில் என்றார்.

அரசன், “என்னால் எப்படி வர முடியும்? என்னுடைய அரண்மனை, என்னுடைய அரசாங்கம், என்னுடைய மனைவி, என்னுடைய குழந்தைகள்....... ஆயிரக்கணக்கான கவலைகளும் பிரச்னைகளும் எனக்கு உள்ளன. என்னால் எப்படி உங்களோடு வர முடியும்?”
என்றான்.

இளைஞன், வித்தியாசத்தை பார்த்தாயா, நான் போகிறேன். எனக்கு அரண்மனை, குழந்தைகள், மனைவி, பிரச்னைகள் என எதுவும் இல்லை. நான் அரண்மனையில் எவ்வளவு மகிழ்வோடு இருந்தேனோ அதே மகிழ்வோடு மரத்தடியிலும் இருப்பேன் – இம்மியளவும் கூடவும் குறைவும் இல்லாமல். நான் காட்டில் இருந்தாலும் சரி, அரண்மனையில் இருந்தாலும் சரி எனது விழிப்புணர்வு அதேதான். என்றார்.

தான் இவ்வளவு மோசமாக நினைத்ததை எண்ணி அரசன் மிக வருந்தினான். அவன் இளைஞனின் காலில் விழுந்து, இப்படி நினைத்ததற்காக என்னை மன்னித்து விடுங்கள். என்னை நினைத்தால் எனக்கே கேவலமாக இருக்கிறது. என்றான்.

இளைஞன், அப்படி நினைக்காதே. நீ மன்னிப்பு கேட்டு கண்ணீர் விடுவதால் திரும்பி வருவதற்கு எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. ஆனால் நீ திரும்பவும் கடவுளே, என்னை இவன் திரும்பவும் ஏமாற்றி விட்டானோ என்று நினைக்க ஆரம்பித்துவிடுவாய். நான் திரும்பவும் வருவதில் எனக்கு எந்த வித கஷ்டமும் இல்லை. ஆனால் உன் மீதுள்ள கருணையால் நான் வரப் போவதில்லை. என்னை போகவிடு. இந்த முழு உலகமும் பரந்து விரிந்திருக்கிறது, எனக்கு எதுவும் பெரிதாக தேவையில்லை. ஒரு மரநிழல் மட்டுமே போதுமானது. எதுவாக இருந்தாலும் சரியே. என்றார்.

ஆனால் அரசன், இல்லை, இல்லை. நீங்கள் வராவிட்டால் நான் மிகவும் கவலைப்படுவேன், காயப்பட்டுப்போவேன், நான் என்ன செய்துவிட்டேன் என வருத்தப்பட்டுப் போவேன். என்று வலியுறுத்திச் சொன்னான்.

அந்த மனிதர், நீ இப்போது என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிட்டாய். நான் வருவதில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை என நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஆனால் நினைவில் வைத்துக் கொள், என்ன வித்தியாசம் என திரும்பவும் உனக்கு தோன்ற ஆரம்பித்துவிடும். என்றார்.


Source: HYAKUJO: THE EVEREST OF ZEN, WITH BASHO’ HAIKUS

No comments: