Friday, October 22, 2010

மலர் 1 இணைய இதழ் 6 11 ஜனவரி 2009

தலையங்கம்

அன்பு நண்பர்களே!
பல அன்பர்கள் என்னை சந்திக்க வரும்போது பிரச்னையாக பேசுவது இன்றைய இளைஞர்கள்.

அவர்களின் செல்போன் மோகம், சினிமா மோகம், டி.வி. மோகம், சேட்டிங் மோகம், டேட்டிங் மோகம் பற்றி பேசுகிறார்கள். நானும் பார்க்கிறேன்.
ஆனால் அவர்களின் அறிவும், திறமையும், பணம் சம்பாதித்தலும், படிப்பும் பெற்றோர்களை விட அதிகமிருப்பதால் பெற்றோர்களால் அவர்களை குறை கூற முடிவதில்லை. பலப் பல குடும்பங்களில் பெற்றோர்க்கு இளைஞர்களின் குறைகளே தெரிவதில்லை. அவர்கள் பணம் சம்பாதிப்பதும், சமூகத்தில் அங்கீகாரம் பெறுவதும் கொடுக்கும் மகிழ்ச்சியில் பல பெற்றொர்கள் மயங்கிக் கிடக்கின்றனர்.
யாருக்கும் இன்றைய இளைய சமுதாயம் தவறு செய்வதாக தெரியவில்லை. ஆனால் அவர்களின் பரபரப்பையும் பதட்டத்தையும் பார்க்கையில் ஏதோ தவறு நடப்பது போல தெரிகிறது. இன்றைய இளைய சமுதாயத்தின் நிலைதான் என்ன?

கடந்த காலத்தில் இளைஞர்கள் பொழுதுபோக்கில் அல்லது காதலில் மூழ்கிக் கிடந்தனர். சினிமா, சீட்டாட்டம், சிகரெட், வம்பளப்பு, சைட் விடுதல், சீரியஸாய் காதலித்தல் இதுதான் இளமை. இதில் சிந்திக்கும் கொஞ்சம் பேர் அரசியலில், இலக்கியத்தில் எழுத்துக்களில், கவிதையில், புதிய சிந்தனையில் ஆர்வம் கொண்டவர்கள். அதன் விளைவே மாணவர்களால் அந்நாட்களில் கட்சி வளர முடிந்தது. இன்றைய மூத்த கட்சி தலைவர்கள் எல்லாம் இளைஞராய் இருந்த காலத்திலேயே அரசியலோ, இலக்கியமோ, கவிதையோ, எழுத்தோ ஏதாவது ஒன்றில் ஈடுபாடு கொண்டவர்களே. இன்னும் சொல்லப் போனால் அரசியலும், இலக்கியமும்,எழுத்தும், கவிதையும் கலந்தே இருந்தன.
புதுக்கவிதை என்பது வளர்ந்தது இந்த காலக் கட்டத்தில்தான். புதிய சிந்தனை புதிய பார்வைகள் மலர்ந்ததும் இப்போதுதான். ஜெயகாந்தன் போன்ற உலகத்தின் தலைசிறந்த ஒரு சிந்தனையாளனும் தி. ஜானகிராமன் போன்ற உலகத்தின் தலைசிறந்த ஒரு படைப்பாளியும் தோன்ற வாய்ப்பளித்தது அது. அசோகமித்திரனும், இந்திரா பார்த்தசாரதியும், லா.சா.ராமாமிர்தமும், சுந்தர ராமசாமியும் என பலர் இளைஞர்களை ஆகர்ஷித்தனர். மேடைப் பேச்சு, பட்டிமன்ற நாகரீகம், கவியரங்கம், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என ஒவ்வொன்றிலும் பற்பல எழுச்சியாளர்கள் தோன்ற வாய்ப்பளித்த காலம் அது. பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கை முழுமையானதாக இல்லாவிடினும் புதுமையானது, பழமையை விட உண்மையானது என இளைஞர்களால் வரவேற்கப்பட்ட காலம் அது.

ஒரு இளைஞன் காதலனாய், கட்சி அபிமானியாய், ஒரு குறிப்பிட்ட எழுத்தாளனின் ரசிகனாய், ஒரு குறிப்பிட்ட நடிகனின் அபிமானியாய், ஒரு கவிஞனை பாராட்டுபவனாய், கம்யூனிசத்தை அலசுபவனாய், பட்டிமன்றம் இசைமேடை என கூட்டங்களுக்கு சென்று கேட்பவனாய், இருந்த காலம் அது.

சுருங்கச் சொன்னால் இளைஞன் என்பவனுக்கு இளமைப் பருவம் என்பது உணர்வு மிகுந்த, உணர்ச்சி வசப்பட்ட நிலையாக இருந்த காலம் அது.
ஆகவே உணர்ச்சியை, உணர்வை தூண்டக் கூடியவர்கள் கோலோச்சிய காலம் அது.

அதனால்தான் சாண்டில்யன், கல்கி, நா.பா. அகிலன், சுஜாதா என பல்வேறு எழுத்தாளர்கள், அண்ணா, நெடுஞ்செழியன், கலைஞர், குமரிஅனந்தன், சத்தியசீலன், குன்றக்குடி அடிகளார் போன்று பல பேச்சாளிகள், மு.மேத்தா, புவியரசு, சிற்பி போன்ற கவிஞர்கள், வாரியார், காஞ்சிப் பெரியவர் போன்ற மதப் பிரசாரகர்கள், மதுரை சோமு, வலையப்பட்டி சண்முகசுந்தரம், நாதஸ்வரம் ஷேக் சின்ன மெளலானா, வயலின் குன்னக்குடி வைத்தியநாதன், புல்லாங்குழல் மாலி மற்றும் ஏராளமான இசைக் கலைஞர்கள், சிவாஜி, எம்.ஜி.ஆர்., சரோஜா தேவி, சாவித்திரி போன்ற நடிகர்கள் இப்படி உணர்ச்சியையும் உணர்வையும் தொடும் எல்லோரும் எல்லாமும் புகழ் பெற்று விளங்க முடிந்தது.

திருப்பு முனைகள் இலக்கியத்தில் புதுமை எழுத்தாளர்கள், கவிதையில் புதுக்கவிதை, கட்சியில் புதுக் கட்சி ஆட்சி, சினிமாவில் புதுமை திருப்பமாய் பாலச்சந்தர், பாரதிராஜா என எல்லாமே சாத்தியமாயின. இளைஞர்கள் பங்கெடுப்பு இல்லாவிடில் இவை சாத்தியமில்லை.
இளைஞன் என்ற நிலை கடந்து திருமணமாகி விட்டால் பிறகு ஜீவனும் தைரியமும் இல்லாமல் போய் விடுகிறது. சமுதாயத்திற்கு பயப்பட ஆரம்பிக்கிறான். ஆனால் இளைஞனாய், மாணவனாய் இருக்கும் காலம் என்பது ஒரு எழுச்சி மிக்க உணர்வுள்ள காலமாய் இருந்தது.
இன்றைய இளைஞர்களுக்கு என்ன குறைச்சல் என்று பார்க்கும்போது, அந்த உணர்வும் உணர்ச்சியும் குறைகிறது. அறிவு அதிகம்தான், திறமை அதிகம்தான், ஆனால் வாழ்வோடு உள்ள தொடர்பு, உணர்ச்சி வசப்படும் அந்த இளகிய நிலை இன்றைய இளைஞனிடம் குறைந்துகொண்டே வருகிறது. பேராசையும், போட்டியும், வெற்றி பெற வேண்டுமென்ற வெறியும், சமூக அங்கீகாரத்திற்காக திறமை வளர்த்துக்கொள்ளலும், பணம் சம்பாதிப்பதிலேயே முழு நாட்டமும் வேண்டும் என்பதும் இன்று இளைஞனாகும் முன்பே அவனது LKG, UKG யிலேயே விதைக்கப் பட்டு விடுகிறது.

அன்று அது கல்லூரி விட்டு வெளிவந்த பின் படும் கவலையாக இருந்தது.
இன்று அது இரண்டரை வயதிலேயே ஆரம்பித்து விடுகிறது.
அதனால்தான் காதல் கூட குறைந்து விட்டது. சைட் அடித்து வீண் பொழுது போக்க இளைஞர்களுக்கு நேரமில்லை.

பணம். பணம், பணம். போட்டி, போட்டி, போட்டி. உயரே, உயரே, உயரே. இதுதான் இன்று நம் இளைஞர்களின் உலகம்.

புத்தகக்கடைக்கு போனால் அது ஆவது எப்படி, இது ஆவது எப்படி தான் அதிகம். சுய முன்னேற்ற புத்தகங்களுக்குதான் கிராக்கியாம் இன்று.
இன்று காதல் இல்லை. டேட்டிங்தான். திருமணம் என்பது வருமானம் பார்த்து செய்வது என்பதில் இளைய சமுதாயம் தெளிவாக இருக்கிறது.

இது என்ன?
இதுதான் மேற்கில் நடந்தது.

இன்று இங்கு நடக்கிறது. பொருள் முதன்மை வகிக்கும், பணம் முதன்மை வகிக்கும் சமுதாயம்.

இதனால் பலன் உண்டு. இந்தியாவின் பொருளாதாரம் கண்டிப்பாய் உயரும். பணம் பெருகும்.

ஆனால் கூடவே மனிதனுக்கு உணர்வு பூர்வமான வாழ்வு, உணர்ச்சிகரமான வாழ்வின் தொடர்பு விட்டுப்போகும். போலித்தனமும், பாசாங்கும், பேராசையுமே மனிதர்களை ஆட்சி செய்யும். மேற்கத்திய நாடுகளின் நிலை இதுதான்.

பணம் வந்தவுடன் வெறுமை கூடிப்போகும். வெறுமையைப் போக்க குடியும், சூதும், காமமும், களியாட்டமுமே வடிகாலாய் போகும். சந்தேகமும், பயமும், வியாபாரத்தனமும் வீட்டிலும், வெளியிலும் நிறைந்து விடும். வன்முறையும், இரக்கமற்ற தன்மையும், சுயநலமுமே மனிதர்களை ஆட்சி செய்யும். ஆனால் பணமும், வசதியும் இருக்கும்.
ஆகவே என்ன செய்வது?
வசதியும் பணமும் அடைவது குற்றமல்ல. ஆனால் வாழ்வை பறிகொடுத்து அல்ல. அன்பும், நேசமும், பரிவும், பகிர்வும், அழகும், நளினமும், கலையும், கவிதையும், இழக்காமல் உணர்வோடு உன்னதமாய் வாழ, துணைக்கு வசதியும், பணமும் தேடலாம். தவறில்லை.
ஆனால் இப்படி ஜடமாய் இளைஞர்கள் ஆக மூலகாரணம் பேராசை பிடித்த பெற்றோர்கள்தான். அவர்கள் குழந்தைகளின் மனதில் விவரம் தெரியா வயதிலேயே விதைக்கும் பேராசையும், பொறாமையும், வெறியும்தான் காரணம். மேலும் அவனது சுயசம்பாத்தியம் வரை அவன் தனது பெற்றோரின் பிடியிலேயே இருக்கிறான். ஆகவே தன்னை உணர்ந்தாலும் இந்த பிடியிலிருந்து வெளியேற வழியில்லை.

உடனடியாக நாம் நமது அணுகுமுறையை LKG யிலிருந்து PHD வரை மாற்றுவது மட்டுமே இளைஞர்களை விடுவிக்கும்.

ஆம். குழந்தைகளை குழந்தைகளாய் இருக்க விடவேண்டும். அப்படி இருக்க உதவ வேண்டும்.

இளைஞன் இளைமைதுடிப்புடன் இருக்க ஆதரவளிக்க வேண்டும். தன்னை உணர, ரசிக்க, உலகைத் தெரிந்துகொள்ள வாய்ப்பளிக்க வேண்டும்.
ஆனால் 3 வயது குழந்தை 6 மணிக்கு எழுப்பப் படுகிறது. ஆனால் அதற்கு தூக்கம் தெளிவதில்லை. அப்படியே வாய் கழுவி பால் கொடுத்து, இட்லி கொடுத்து, வயிற்றை கட்டாயமாக நிறைத்து பழயதை சிறிதே வெளியேற்றி பின் குளிப்பாட்டி தலைவாரி யூனிபார்ம் மாட்டி பவுடர் அடித்து பூட்ஸ் போட்டு டை கட்டி அதை ஒரு கையில் புத்தகப்பை மறு கையில் எடுத்துக்கொண்டு 7 1/2 மணிக்கு வரும் ஸ்கூல் பஸ்ஸூக்கு கூட்டிப்போகிறார்கள் தாய்மார்கள். ஸ்கூலில் ஏற்படும் எல்லா அழுத்தங்களுக்கும் ஈடு கொடுத்துவிட்டு சோர்வோடு 3 மணிக்கு திரும்பும் குழந்தைக்கு சோறு கொடுத்து தயார் செய்து ட்யூஷன், ஹிந்தி கிளாஸ், பாட்டுகிளாஸ், இப்படி ஏதோ ஒன்று பிறகு வீட்டுப்பாடம் , நடுவில் 1/2 மணி TV பார்க்க அனுமதி.

இப்படி வளரும் குழந்தை இளைஞனாகும்போது என்ன வாழ்வுணர்வு அவனுக்கு மிச்சமிருக்கும்?

அவனுடைய உணர்வும், உணர்ச்சியும் பணம், போட்டி, வெற்றி, அந்தஸ்து, பெருமை போன்ற போலித்தனங்களை ஒட்டியே இருக்கும். வாழ்வைப் பற்றியோ, அதன் உயர்ந்த நிலைகளைப் பற்றியோ, அதன் உயிர் துடிப்பைப் பற்றியோ அவனுக்கு எந்த அனுபவமும் இராது.
எல்லோரிடமும் பயமும், சந்தேகமும் உள்ளவனாய் அதே சமயம் போலியான நட்பும் அகந்தையால் வரும் தைரியமும் என எல்லாமே இடம் மாறி இருக்கவே செய்யும்.

ஆகவே இளைஞர்களே!
விழிப்பு கொள்ளுங்கள்.
வாழுங்கள்! சூரிய உதயத்தை, மாலைப்பொழுதை, தென்றலை, வானவில்லை, ஆற்றை, மலையை, பூ மணத்தை, மரங்களை, இசையை, அழகை, அன்பை, கருணையை, குழந்தைத்தனத்தை வாழுங்கள்.

வாழ ஆரம்பித்து விட்டால் எவ்வளவு போலித்தனங்கள் சேர்ந்திருந்தாலும் அவை கழன்று விடும். விலகி விடும்.
வாழ்வோடு செல்வம் சேருங்கள். வாழ்வோடு விஞ்ஞானமும்,
தொழில்நுட்பமும் சேரட்டும்.!
ஏனெனில் நாம் வாழ்பவர்கள்,
இயந்திரங்களல்ல.!

அன்பு,
சித்.

கவிதைப்பகுதி

உயிரூட்டும் அன்பு.

கஷ்டப்பட்டு படைத்தாலும்,
கணக்கிட்டுப் படைத்தாலும்,
உயிரிருப்பதில்லை.....ஆம்,
அழகிருந்தாலும் உயிரிருப்பதில்லை,
சுவையிருந்தாலும் சக்தி தருவதில்லை,
சிறப்பிருந்தாலும் வாழ்விருப்பதில்லை.

அன்பில் படைப்பவன்,
எதை படைத்தாலும்,
அழகைப் படைக்கிறான்
அமிர்த்தைப் படைக்கிறான்,
ஆன்மாவைப் படைக்கிறான்!

ஆகவே.........
எது செய்தாலும் அன்பாயிருந்து செய்,
அதுவே தெய்வப் பண்பு !
உச்சம்

அன்பு உன் ஆற்றலின் உச்சம்,
அதற்கு மேல் வாழ்வதற்கு இல்லை மிச்சம்!

ஓஷோ வீடியோ

1. OSHO: Selling Bliss

2. OSHO: What is the Need of Nations?

3. OSHO: Compassion - The Ultimate Flowering of
Love

4. OSHO: The Rule of a Barbarous Society

கேள்வி பதில் பகுதி

கேள்வி : ஓஷோ குடும்பத்தைப் பற்றியும், அதன் எதிர்காலம் பற்றியும் என்ன கூறுகிறார்?

இந்தக் கேள்விக்கான பதில் 3 பகுதிகளாக
வெளிவரும். இம்மாதம் 1-ம் பகுதி.:

மிகவும் அதிகமாக காலாவதியாகிபோன விஷயம் குடும்பம். அது அதன் வேலையை செய்துவிட்டது, அது இனிமேல் தேவையில்லை. உண்மையில் அது இப்போது மனித வளர்ச்சிக்கு மிகவும் தடையாக உள்ள விஷயமாக உள்ளது. குடும்பம் தேசங்கள், மாநிலங்கள், கிறிஸ்துவ மடாலயங்கள், ஆகியவற்றின், அசிங்கமான எல்லாவற்றின் ஒரு பகுதி.

ஒரு விதத்தில் போப் குடும்பம் மறைந்துவிட்டால் கிறிஸ்துவ மடாலயதிற்கு எதிர்காலம் இல்லை என்று கூறுவது சரிதான் — ஏனெனில் குடும்பமும் அதன் ஆழ்மன கட்டுபாடுகளும் இன்றி நீங்கள் எங்கிருந்து கிறிஸ்துவர்களையும், இந்துகளையும், முகமதியர்களையும் உருவாக்குவீர்கள்?

அதனால்தான் குடும்பம் மறைந்தாக வேண்டும் என நான் கூறுகிறேன். குடும்பம் மறையாமல் இருந்தால் இந்த அசிங்கமான எல்லா பூதங்களும் தொடர்ந்து கொண்டிருக்கும். குடும்பமே நமது எல்லா மனநோய்களுக்கும் மூலகாரணம். நாம் குடும்பத்தின் மனோரீதியான கட்டமைப்பை, அது மனித விழிப்புணர்வை என்ன செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

முதல் விஷயம்: குழந்தையை குடும்பம் ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கைகளுக்குள், அரசியல் கருத்துக்குள், ஏதோ ஒரு தத்துவத்திற்குள் பொருத்துகிறது. குழந்தை மிகவும் வெகுளியாகவும், மிகவும் ஏற்றுகொள்ளகூடியதாகவும், மிகவும் திறந்த தன்மையுடனும் உள்ளது, அதன்மேல் அதிகாரம் செலுத்தபடமுடியும். அவன் இன்னமும் முடியாது என கூறமுடியாது, முடியாது என்று சொல்வதைப் பற்றிய யோசனைகூட அவனுக்கு இன்னும் வரவில்லை, மேலும் அவன் முடியாது என்று சொல்லமுடியும் என்றாலும் கூட அவன் அதனைச் சொல்லமாட்டான் ஏனெனில் அவன் முழுமையாக, முழுவதுமாக குடும்பத்தைச் சார்ந்துள்ளான். அவன் மிகவும் உதவியற்றவனாக உள்ளதால் குடும்பம் எந்த முட்டாள்தனத்திற்கு அவன் ஒத்துபோக வேண்டும் என நினைக்கிறதோ அதற்கு அவன் குடும்பத்துடன் ஒத்துபோயாக வேண்டும்.

குடும்பம் குழந்தை விசாரிக்க உதவுவதில்லை, அது நம்பிக்கைகளை தருகிறது, நம்பிக்கைகள் விஷம். ஒருமுறை குழந்தை நம்பிக்கைகளால் சுமையேற்றப் பட்டுவிட்டால் அவனுடைய விசாரிப்பு ஊனமுற்றதாகிவிடும், இயங்காது. அவனுடைய இறக்கைகள் வெட்டபட்டுவிட்டன. அவன் தானாகவே விசாரித்தறியும் நேரம் வரும்பொழுது அவன் ஏற்கனவே சமூக கட்டுதிட்டங்களை பெற்றிருப்பான். அவன் எல்லா விசாரிப்பையும் ஒரு குறிப்பிட்ட கருத்துடனே செய்வான்- ஒரு கருத்தோடு செய்யும்பொழுது உனது விசாரிப்பு உண்மையானதல்ல. நீ ஏற்கனவே செய்யபட்ட ஒரு முடிவை சுமந்துகொண்டுள்ளாய். நீ வெறுமனே உனது உணர்வற்ற முடிவுக்கு துணை செய்யும் சாட்சிகளை தேடுகிறாய். நீ உண்மையை கண்டறிய முடியாதவனாகிவிட்டாய்.

அதனால்தான் உலகில் ஒரு சில ஞானிகளே உள்ளனர். அடிப்படை காரணம் குடும்பம். இல்லாவிடில் ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும்போதே ஞானிதான், உச்ச உணர்வு நிலையை அடையும் சக்தியோடு, உண்மையை கண்டறியவும், பரவச வாழ்க்கையை வாழவுமே வருகிறது. ஆனால் குடும்பம் இந்த பரிமாணங்களை எல்லாம் அழித்துவிடுகிறது. அது அவனை சமதரையாக ஆக்கிவிடுகிறது.

ஒவ்வொரு குழந்தையும் மிகவும் புத்திகூர்மையோடு வருகிறது ஆனால் குடும்பம் அவனை மந்த புத்தியுள்ளவனாக்கிவிடுகிறது. ஏனெனில் ஒரு புத்திகூர்மையுள்ள குழந்தையோடு வாழ்வது பிரச்சனைக்குரியது. அவன் சந்தேகப்படுவான், அவன் கேள்வி கேட்பான், அவன் விசாரிப்பான், அவன் சொல்வதை கேட்கமாட்டான், அவன் ஒரு புரட்சியாளன் – குடும்பத்திற்கு சொல்வதை கேட்கும், பின்தொடர தயாராக இருக்கும், காப்பியடிக்கும் ஒருவன் தேவை. எனவே மிகவும் ஆரம்பத்திலேயே புத்திகூர்மையின் விதை அழிக்கபட வேண்டும். கிட்டதட்ட முழுவதும் எரிக்கபட வேண்டும், எனவே அதிலிருந்து எந்த முளைவிடுதலுக்கும் வாய்ப்பு இல்லாமல் இருக்க வேண்டும்.

ஜரதுஷ்ட்ரா, ஜீசஸ், லாவோட்சு, புத்தர் போன்ற ஒரு சில மக்கள் சமுதாய கட்டுமானத்திலிருந்து, குடும்ப கட்டுபாட்டிலிருந்து தப்பியது ஒரு அதிசயமே. அவர்கள் உணர்வுநிலையின் உயர்ந்த சிகரங்களாக தெரிகிறார்கள், ஆனால் உண்மையில் எல்லா குழந்தைகளும் இதே குணத்துடனேயே அதே சக்தியுடனேயே பிறக்கின்றனர்.

தொண்ணூற்று ஒன்பது புள்ளி ஒன்பது சதவீத மக்கள் புத்தர்களாக முடியும். வெறுமனே குடும்பம் மறைய வேண்டும். இல்லாவிடில் கிறிஸ்துவர்கள் மற்றும் முகமதியர்கள் மற்றும் இந்துகள் மற்றும் ஜைனர்கள் மற்றும் புத்தமதத்தை சார்ந்தவர்கள் இருப்பார்கள். ஆனால் புத்தர்கள் அல்ல, மகாவீரர்கள் அல்ல, முகமதுகள் அல்ல, அதற்கு சாத்தியமில்லாமல் போய்விடும். முகமது அவரது பின்புலத்தை எதிர்த்து எழுச்சி கொண்டார், புத்தர் அவரது பின்புலத்தை எதிர்த்து எழுச்சி கொண்டார், ஏசு அவரது பின்புலத்தை எதிர்த்து எழுச்சி கொண்டார். இவர்கள் அனைவரும் எழுச்சியாளர்கள் – குடும்பம் எழுச்சிகரமான ஆத்மாவிற்கு முற்றிலும் எதிரானது.

நான் கம்யூனை கற்பிக்கிறேன். குடும்பத்தை அல்ல. கம்யூன் குடும்பத்திற்கு மாற்று. குடும்பம் குழந்தையை முதலில் கட்டமைக்கிறது. அதுவே எல்லாவிதமான பைத்தியகாரதனங்களுக்கும் காரணம்.

ஒரு குழந்தை ஒரே ஒரு பெண்ணினால், தாயால், ஒரே ஆணால், தந்தையால், வளர்க்கபடுகிறது. குழந்தை ஒரு பையனாக இருந்தால் தாயின்மீது பிணைப்பு கொள்கிறான், குழந்தை ஒரு பெண்ணாக இருந்தால் தந்தையின் மீது பிணைப்பு கொள்கிறாள். இப்போது இவை மனோரீதியாக நிருபிக்கபட்ட உண்மைகள். பையனின் மனதில் தாயின் உருவம், குணம்.......பதிந்துவிடுகிறது.....இப்போது அவன் தன்னுடைய வாழ்க்கை முழுவதிலும் அப்படியே அவனுடைய தாயை போலவே உள்ள பெண்ணை தேடிகொண்டிருப்பான். இதே விஷயம் பெண்ணை பொறுத்தவரையிலும் உண்மையே, அவள் அப்படியே தன்னுடைய தந்தையை போலவே உள்ள காதலனை கண்டுபிடிக்க முயல்வாள். இப்போது இது சாத்தியமற்றது – அவர்கள் ஒருபோதும் வெற்றியடையப் போவதில்லை.

அதனால்தான் எல்லா காதல்களும் தோல்வியடைகின்றன. அவைகள் தோல்வியடைந்தே ஆகவேண்டும். மிகவும் தொடக்கத்திலிருந்தே காதல் வெற்றியடைய முடியாத வண்ணம் எல்லாவற்றையும் நாம் சமாளித்துள்ளோம். நீ எங்கு உன்னுடைய தாயையோ, அல்லது தந்தையையோ, கண்டுபிடிக்கமுடியும்? அது முடியாத காரியம். ஏனெனில் யார் இருவரும் ஒருவரை போலவே ஒருவர் இருப்பதில்லை. ஆனால் இதுவே உணர்வற்ற நிலையின் தேடலாக இருக்கிறது. ஒவ்வொரு முறை நீ ஒரு ஆணுடனோ அல்லது ஒரு பெண்ணுடனோ காதல் வயப்படும்பொழுது நீ திரும்பவும் இந்த பெண் உனது தாயாக இருப்பாள் என நம்புகிறாய். இது சுயஉணர்வு நிலையில் அல்ல, இது ஒரு ஆழமான உணர்வற்ற நிலையின் பதிவு. ஆனால் விரைவில் நீ உன்னுடைய உணர்வற்ற நிலையின் பதிவுடன் அவள் பொருந்துவதில்லை என கண்டறிவாய் – போராட்டம் துவங்குகிறது நீ உடைய தொடங்குகிறாய். எந்த ஆணும் உனது தந்தையாக முடியாது, எந்த பெண்ணும் உனது தாயாக முடியாது. இப்போது இந்த குடும்பம் என அழைக்கப்படுவது தொடர்ந்தால், பிறகு காதல் உலகில் வெற்றிபெறமுடியாது. அன்பு இல்லாமல், அங்கு பரவசம் இருக்கமுடியாது, அன்பு இல்லையெனில் துன்பம்தான் நமது விதி. நாம் குடும்பத்தை தேர்ந்தெடுத்தால் நாம் துன்பத்தை தேர்ந்தெடுத்துவிட்டோம்.

ஒரு கம்யூன் முற்றிலும் மாறுபட்ட ஒரு விஷயம். ஒரு கம்யூனில் குறிப்பிட்ட மனிதர்களோடு பிணைப்பு இருக்காது. இங்கே குறைந்தபட்சம் முன்னூறு சிறு சந்நியாசிகள் ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும் உள்ளனர் பல சிறு பையன்களும் பெண் குழந்தைகளும் தந்தை, தாயுடன் தங்குவதற்கு இரவில் வருவதில்லை – அவர்களுக்கு பல அங்கிள்களும், ஆன்ட்டிகளும் உள்ளனர். முழு கம்யூனும் அவர்களுடையது! இந்த கம்யூனில் சிறு குழந்தைகள் அவர்களுக்கென தனித்தன்மை கொண்டுள்ளனர், அவர்கள் தனியாக செல்ல தொடங்குகின்றனர். அவர்கள் தாயுடன், தந்தையுடன், குடும்பத்துடன் பிணைப்பு கொள்வதில்லை, அவர்கள் வேறுபட்ட மக்களுடன் பழகுகின்றனர். அவர்களுடைய தந்தையும், தாயும் கூட ஒருவர் மீது ஒருவர் பிணைப்பு கொண்டவர்கள் அல்ல.

திருமணம் இறந்துவிட்டது. அது ஒரு மாறாத விஷயம். அது வாங்கபடுவது, அது ஒரு பொருளை போன்றது.....அது சாமானை போன்றது. அது ரோஜா இதழ் வளர்வதைப் போன்றதல்ல, இன்று செடி முழுவதும் மலர்களால் நிறைந்துள்ளது. நாளை எல்லா மலர்களும் போய்விடும், இன்று அது மிகவும் பசுமையாக உள்ளது, நாளை இலைகள் மஞ்சளாக தொடங்குகின்றன, அவை விழ தொடங்குகின்றன. இங்குள்ள ஒருவன் எல்லா பருவங்களையும் காண்பான், எல்லா உணர்வுகளையும் காண்பான், எல்லா சண்டைகளையும், எல்லா துன்பங்களையும், எல்லா இன்பங்களையும் காண்பான். அவன் மிகவும் மையம் கொண்டவனாகவும், நிலை கொண்டவனாகவும் இருப்பான், வாழ்வு மாறாத தன்மை கொண்ட விஷயமல்ல என்பதை அவன் அறிவான். அவன் எதையும் எதிர்பார்க்கமாட்டான், ஏனெனில் வாழ்வு பொருத்தபட்டதல்ல. எல்லாவிதமான மாறுதல்களுக்கும் அவன் தயாராக இருப்பான். வாழ்வோடு சேர்ந்து அவனால் மாறமுடியும். அவன் ஒருபோதும் அடி தவறமாட்டான். அவன் எப்போதும் வாழ்வின் இலயத்தோடு இணைந்திருப்பான்.

மனித இனத்தை மேலும் முழுமையானதாக்க, மேலும் ஆரோக்கியமானதாக்க, மேலும் அன்புடையதாக்க, மேலும் பரவசமுடையதாக்க, அதுதான் தேவை. தேவாலயம் மறைந்துவிடும், தேசங்கள் மறைந்துவிடும், இனங்கள் மறைந்துவிடும், மேலும் அவை மறைய வேண்டியவை – அவை ஏற்கனவே மிக அதிக காலம் வாழ்ந்துவிட்டன. அவை இறப்பிற்கு பின் வாழ்வதைப் போன்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுள்ளன.

அவை எரிக்கப்பட வேண்டும். புதைக்கப்பட வேண்டும். நாம் பிணங்களை சுமந்து கொண்டிருக்கிறோம், அந்த பிணங்கள் நாற்றமடிக்கின்றன. நீ அவைமீது வாசனை திரவியத்தை அடித்துகொண்டே, வீட்டில் பிணங்களோடு வாழ்வதை சமாளித்துக்கொண்டே இருக்கலாம். அவை கடந்தகாலத்தில் ஏதோ ஒரு அர்த்தத்தோடுதான் இருந்தன என்பதை நான் அறிவேன். உன்னுடைய தந்தை உயிரோடு இருந்தபொழுது அது ஒரு விஷயம். ஆனால் இப்போது உனது தந்தை இறந்துவிட்டார். எனவே சிறிது அழுது புலம்பு. ஆனால் சுமையை எறிந்துவிடு, ஆனால் பிணத்தை உனது வாழ்நாள் முழுவதும் உனது தோள்களில் சுமக்க வேண்டிய தேவை இல்லை. ஒரே ஒரு பிணம் மட்டும் இல்லை, பல பிணங்கள் உள்ளன, உனது வீட்டில் இறந்துபோன மக்கள் பலர் உள்ளனர். அதனால் உயிரோடு இருப்பவர்கள் வாழ இடம் இல்லை. உயிரோடு இருப்பவர்கள் வீட்டிற்கு வெளியே வாழ்கிறார்கள். இறந்து போனவர்கள் முழு இடத்தையும் பிடித்து கொண்டிருக்கிறார்கள். நமக்கு இடம் தேவை.

குடும்பம் இறந்துபோன ஒரு விஷயம், ஆனால் நாம் எப்படியோ அதற்கு ஒட்டு போட்டு கொள்கிறோம். விவாகரத்து என்றால் என்ன? அது ஒரு ஒட்டு போடுதல்.

நான் மக்கள் அடையமுடியாத இலட்சியங்களில் ஆர்வம் கொள்வதை விரும்பவில்லை. நான் இலட்சியவாதியே அல்ல. நான் பூமியில் இருப்பவன். நடைமுறையாளன், ஒரு உண்மையாளன்.

மக்கள் ஆழ்ந்த நெருக்கத்தில் ஒருங்கிணைந்து வாழ விரும்பினால் அவர்கள் பிடித்து வைத்து கொள்பவர்களாக இருக்ககூடாது. அவர்கள் சுதந்திரத்தை அனுமதிக்க வேண்டும்.
அதுதான் திருமணம் அற்ற உறவு என்பது – சுதந்திரம். ஆனால் மக்கள் மிகவும் மாறுபட்டவர்கள்.

யாரும் யாருக்கும் சுதந்திரம் தர தயாராக இல்லை. மக்கள் அழகான வார்த்தைகளை கூறுகிறார்கள், இனிப்பானவை, அர்த்தமற்றவை. அவை மிகவும் நல்லதாக காட்சியளிக்கின்றன, முழு சுதந்திரம், நிபந்தனையற்ற அன்பு, பிடித்துவைத்துகொள்ளும் தன்மையற்ற நெருக்கம். என்று சத்தம் நன்றாக உள்ளது, ஓம்..... என்பதைப் போல அது நல்ல சத்தமாக உள்ளது, ஆனால் நீ அதை வைத்துகொண்டு வேறு என்ன செய்யமுடியும் ?

திருமணம் – தாண்டிய உறவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை, மன வளர்ச்சிக்கும், முதிர்ச்சிக்கும் மிகவும் உதவிகரமானவை, ஏனெனில் நீ வேறொரு ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ ஒருநாள், அல்லது இரண்டு நாள், அல்லது சில நாட்கள் பழக தொடங்கும் பொழுது உனக்கும் உனது பழைய காதலனுக்கும் ஒரு தொலைவு உண்டாகிறது. அந்த தொலைவு மிகவும் உதவிகரமானது. நீ ஒருவருக்கொருவர் காதல் வயப்படுவதற்கு முன் இருந்த அதே தொலைவு வந்தால், மீண்டும் ஒரு தேனிலவு சாத்தியம். அந்த தொலைவு புதிய தேனிலவை அனுமதிக்கும், நீ மீண்டும் ஆர்வம் கொள்வாய், நீ திரும்பவும் வாய்ப்பளிக்க தொடங்குவாய். முழு விஷயத்தையும் திரும்பவும் யோசிப்பாய்.

புதிய ஆணுடன் புதிய பெண்ணுடன் இருக்கும் பொழுது அவர்கள் அவ்வளவொன்றும் வித்தியாசமாக இல்லை என்பதை நீ காண்பாய். எனவே ஏற்கனவே உருவான ஒரு குறிப்பிட்ட நெருக்கத்தை அழிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? எந்த காம உறவை விடவும் நெருக்கம் மிகவும் அதிக நிறைவளிக்ககூடியது.

உண்மையிலேயே இருவர் நெருக்கமாக இருந்தால் அவர்கள் பரிபூரண சுதந்திரத்தை அனுமதிப்பர், ஏனெனில் நெருக்கம் அதிகமான அழகுடையது, அதிக முக்கியத்துவமானது – என்பதை அவர்கள் அறிவர். அவர்கள் அதனை அனுபவித்துள்ளனர். எனவே எந்த காம உறவாக இருந்தாலும் அது வெறும் திருப்பம் மட்டுமே அதனால் மட்டுமே எதுவும் தவறாக போய்விடமுடியாது.

ஆனால் திருமணத்தை பற்றிய பழைய கருத்து பிடித்து வைத்துகொள்ளும் தன்மை உடையது. தங்களுடைய எண்ணிக்கை குறைந்துவிடும் என்ற எளிமையான காரணத்திற்காக எல்லா மதங்களும் கருத்தடை முறைகளுக்கு எதிராக உள்ளன. இது ஒரு அரசியல் விளையாட்டு. யாரிடம் அதிக எண்ணிக்கை உள்ளது ? கத்தோலிக்கர்களிடமா அல்லது ப்ரோடஸ்டண்ட்களிடமா, இந்துகளிடமா அல்லது ஜைனர்களிடமா அல்லது முகமதியர்களிடமா? இந்துகள் முகமதியர்கள் அதிகரித்துகொண்டேயிருந்தால், விரைவிலோ அல்லது அப்புறமாகவோ இந்தியா இரண்டு பகுதிகளாக மறுபடியும் பிரிக்கபடவேண்டும் என்ற காரணத்தால் கருத்தடை முறைகளுக்கு எதிராக உள்ளனர். முகமதியர்கள் எண்ணிக்கையில் அதிகமானால் அவர்கள் இது வேண்டும், அது வேண்டும் என கேட்க தொடங்குவர். அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக வளரமுடியும் ஏனெனில் முகமதியர்கள் அவர்களுடைய மதத்தால் நான்கு பெண்கள் வரை மணந்துகொள்ள அனுமதிக்கபட்டுள்ளனர்.

இது இப்படியே போனால், இயற்கையாகவே, அவர்கள் எண்ணிக்கையில் அதிகரித்துவிடுவர் என இந்துகள் பயப்படுகின்றனர். இந்துகள் கருத்தடை முறைகளை பயன்படுத்தும்படி கட்டாயப்படுத்தபட்டால் அவர்கள் எண்ணிக்கையில் குறைந்துவிடுவர். முக்கியமாக ஐனநாயகத்தின் காரணமாக முழு அரசியலும் எண்ணிக்கையினாலானது. ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு ஓட்டு கொண்டுவருகிறான். நீ எவ்வளவு குழந்தைகளை பெற்றிருக்கிறாயோ அவ்வளவு ஓட்டுகளை நீ வைத்திருக்கிறாய். யாரிடம் அதிக ஓட்டுகள் உள்ளனவோ, அவர் தேசத்தை ஆள்வார், உலகத்தை ஆள்வார். எனவே எல்லா மத தலைவர்களும், எல்லா மத அமைப்புகளும், எல்லா மதவாதிகளும் கருத்தடைக்கு எதிராக உள்ளனர்.

ஆனால், உண்மையில், கருத்தடை என்பது முழு மனித வரலாற்றிலேயே மனித இனத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்று. அது மிகப்பெரிய புரட்சி. கருத்தடை சாதனங்களை கண்டுபிடித்ததை ஒப்பிடும்பொழுது அதைவிட சிறந்த புரட்சி ஏதுமில்லை. ஏனெனில் கருத்தடை சாதனங்களின் வாயிலாக பெண் ஆணுக்கு இணையாக முடியும். கருத்தடை சாதனங்களின் வாயிலாக மட்டுமே ஆண் எப்போதும் தனக்குரியது என கூறிவந்த உரிமைகளை எல்லாம் பெண் பெறமுடியும். இல்லாவிடில் அவள் கிட்டதட்ட எப்போதும் கர்ப்பமாகவே இருந்தாள்.

அவள் தொழிற்சாலையில் வேலை செய்யமுடியாது. அவள் அலுவலகத்தில் வேலை செய்யமுடியாது. அவள் ஒரு மருத்துவராக முடியாது. அவள் ஒரு பேராசிரியராக இருக்கமுடியாது. அதிகபட்சமாக அவள் ஒரு வீட்டிலிருக்கும் மனைவியாக முடியும், அப்படி என்றால் அது வீட்டு–வேலைக்காரி என்று பொருள். அவளுடைய முழு வாழ்க்கையும் குழந்தைகளை பெற்றெடுப்பதற்கே வீணாக போகிறது. அவள் வேறு எதுவும் செய்ய முடியாது – அவள் வரையமுடியாது, அவள் கவிதை எழுத முடியாது, அவள் வாத்தியம் வாசிக்க இயலாது, அவள் நடனமாடமுடியாது. நீ தொடர்ந்து கர்ப்பமாகவே இருந்தால் நீ எவ்வாறு நடனமாடமுடியும்? அது மிகவும் அருவருக்கதக்கது, மிகவும் வயிற்றை குமட்டக்கூடியது.

ஆனால் கடந்த காலத்தில் அவளுடைய முழு வேலையும் ஒரு தொழிற்சாலையைப் போலவே இருந்தது – குழந்தைகளை பெற்றெடுத்துகொண்டே இருக்கவேண்டியது. அது பதினான்கு வயதிற்கு அருகில் தொடங்கி ஆணிற்கு குழந்தை பெற தகுதி உள்ளவரை தொடர்ந்தது. இருபத்து நான்கு குழந்தைகள் என்பது விதிவிலக்கல்ல, பணிரெண்டு குழந்தைகள் என்பது மிகவும் சாதாரணம். ஒரு டஜன் குழந்தைகளையோ அல்லது இரண்டு டஜன் குழந்தைகளையோ பெற்று உலகிற்கு தரும் ஒரு பெண்ணிற்கு வேறு எதற்கும் நேரம் இருக்காது.

அதுதான் பெண்ணின் அடிமைத்தனத்திற்கு மூல காரணம். அவள் தொடர்ந்து கர்ப்பமாகவும், கர்ப்பத்தினால் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்பொழுதும், அவள் ஆணை சார்ந்தே இருந்தாகவேண்டும் – பொருளாதார ரீதியாக ஆணை சார்ந்திருக்கவேண்டும். நீ பொருளாதார ரீதியாக ஒரு ஆணை சார்ந்திருந்தால் நீ சுதந்திரமாக இருக்கமுடியாது. பொருளாதாரம் மிகவும் அடிப்படையான விஷயங்களில் ஒன்று. பணம் ஆணிடமிருந்து வந்தால், பிறகு பணம் நிபந்தனைகளுடனேயே வருகிறது.

ஆணும் பெண்ணும் சமமாக இருக்கும் ஒரு சமுதாயம் நமக்கு தேவை என்றால், பிறகு கருத்தடை சாதனங்கள் எவ்வளவு பரவலாக முடியுமோ அவ்வளவு பரவலாக பயன்படுத்தபட வேண்டும். அவை சாதாரணமாக வேண்டும். பிறகு மட்டுமே திருமணத்திற்கு பிறகு வரும் தொடர்புகள் மிகவும் எளிமையான விஷயமாகும். நீ திருமணத்திற்கு முன்பு உறவு கொண்டு பெண் கர்ப்பமுற்றால், அது பெரிய பிரச்சனை என்பதே முழு பிரச்சனையாக இருந்தது. கருத்தடை சாதனங்கள் அந்த பிரச்சனையை முழுவதும் போக்கிவிட்டன. கருத்தடை சாதனங்கள் உபயோகபடுத்தபட்டால் திருமணத்திற்கு முந்தைய உறவுகளை தடுக்கமுடியாது. அவற்றை தடுப்பது சோகமயமானது, ஒரு பெண் கர்ப்பமானால் எல்லா கெளரவத்தையும், மரியாதையையும் இழந்துவிடுவோம் என மிகவும் பயப்பட்டாள். பெண் ஒரு ஆணால் கர்ப்பமானால் அந்த ஆண் அவளை மணந்துகொண்டேயாக வேண்டும் என ஆண் மிகவும் பயப்பட்டான். ஒருவேளை அவன் அதற்கு தயாராகாமல் இருக்கலாம். அது வெறும் நொடி நேர விஷயமாக இருக்கலாம். அது வெறும் ஒரு விளையாட்டாக இருக்கலாம், ஆனால் இப்போது அது ஒரு மிகப்பெரிய பொறுப்பாகிவிடும், முழு வாழ்க்கையின் பொறுப்பாகிவிடும்.

கருத்தடை சாதனங்கள் காமத்தின் தன்மையையே மாற்றிவிட்டன, காமம் விளையாட்டாகிவிட்டது. காமம் முன்னால் இருந்ததை போல ஒரு மிக இறுக்கமான விஷயமல்ல. அது வெறும் ஒரு விளையாட்டுதன்மை நிறைந்ததாகிவிட்டது – இரு உடல்கள் ஒருவருக்கொருவர் விளையாடுவது, அவ்வளவுதான். அதில் தவறு ஏதுமில்லை. நீ கால்பந்து விளையாடுகிறாய் – அதில் என்ன தவறு இருக்கிறது?

இரு உடலின் சக்திகள் பங்கேற்கின்றன.

காமமும் கூட ஒரு விளையாட்டுதான், ஆனால் முன்பு அது ஒரு விளையாட்டல்ல. கருத்தடை சாதனங்களுக்கு முன்பு அது ஒரு இறுக்கமான விஷயம். கருத்தடை சாதனங்கள் காமத்தை பற்றிய முழு இறுக்கதன்மையையும் போக்கிவிட்டன. இப்போது மதங்கள் பயப்பட்டாக வேண்டும், ஏனெனில் அவர்களுடைய கட்டமைப்பு கருத்தடை சாதனங்களினால் குலைந்துவிடக்கூடும். நாத்திகர்கள் நூற்றாண்டுகளாக செய்யமுடியாததை, கருத்தடை சாதனங்கள் பத்தாண்டுகளுக்குள் செய்துவிடும். அவை ஏற்கனவே செய்துவிட்டன. கருத்தடை சாதனங்கள் மனிதனை பூசாரிகளிடமிருந்து விடுவித்துவிட்டன.

கருத்தடை சாதனங்கள் ஒரு ஆசீர்வாதம், ஆனால் போப் அதனை ஆதரிக்க இயலாது ஏனெனில் போப்புடையது மட்டுமின்றி மற்ற எல்லா மத தலைவர்களின், சங்கராசாரியார் மற்றும் அயதுல்லா, மற்றும் இமாம் எல்லாருடைய முழு அதிகாரமும் ஆபத்தில் உள்ளது. அவர்கள் அனைவரும் கருத்தடை சாதனங்களுக்கு எதிராகத்தான் இருப்பார்கள், அவர்களுடைய முழு வியாபாரமும் ஆபத்தில் உள்ளது.

நான் கருத்தடை சாதனங்களை முழுமையாக ஆதரிக்கிறேன், அவை பரவலாக உபயோகபடுத்தபடவேண்டும். குழந்தைகள் பெற்றோர்களாலும், பள்ளிகளாலும், கருத்தடை சாதனங்களை எப்படி உபயோகபடுத்துவதென சொல்லிகொடுக்கபட வேண்டும், அப்போது காமம் வெறும் விளையாட்டாகிவிடும். அதன் இறுக்கம் அனைத்தையும் அது இழந்துவிடும். பிறகு மட்டுமே பெண் விடுதலையடைய முடியும். கருத்தடை சாதனங்கள் இன்றி பெண் அடிமையாகத் தான் இருந்தாக வேண்டும், பாதி மனித இனம், அடிமைத்தனத்தில் வாழ்வது பார்ப்பதற்கு நல்ல காட்சி அல்ல. மதங்கள் கரு கலைப்புக்கு எதிராக உள்ளன. ஏன் இந்த மக்கள் கரு கலைப்புக்கு எதிராக உள்ளனர் ? ஒரு பக்கம் அவர்கள் ஆத்மாவின் அழிவற்ற தன்மை குறித்து பேசிக்கொண்டே இருக்கின்றனர். பிறகு ஏன் கருக்கலைப்பை கண்டு பயப்படவேண்டும்? – ஆத்மா அழிவற்றது எனவே அதில் எந்த பாவமும் இல்லை. கருக்கலைப்பு மூலம் நீ செய்ததெல்லாம் ஆத்மா இந்த உடலுக்குள் நுழைவதை தடுத்தது மட்டுமே. ஆத்மா மற்றொரு உடலை கண்டுபிடித்துகொள்ளும், இந்த பூமியில் இல்லாவிட்டால், பிறகு வேறு ஏதாவது பூமியில், ஏனெனில் குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் கிரகங்கள் இருப்பதாக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள் -- குறைந்தபட்சம். வாழ்க்கை உள்ள கிரகங்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை இது. ஒருவேளை அதிகமாக இருக்கலாம், ஆனால் ஐம்பதாயிரம் என்பது கிட்டதட்ட உறுதியான ஒன்று. எனவே இந்த கிரகத்தில் இல்லாவிட்டால் பிறகு வேறு ஏதாவது கிரகத்தில்....மக்களை மாற்றுவது நல்லது....அதில் தவறு என்ன இருக்கிறது ? இந்த கிரகத்தில் கூட்டம் அதிகமானால், ஒரு சில மக்களை மற்ற கிரகங்களுக்கு மாற்றுவது......அதுதான் கருக்கலைப்பு. ஆத்மா நான் உள்ளே வரலாமா மேடம் என கேட்கிறது நீ இல்லை இங்கே அதிக கூட்டமாக உள்ளது. வேறு ஏதாவது கதவை தட்டு என கூறுகிறாய்.

இந்துகள் இப்போது கிருஷ்ணரையும் அவருடைய ஸ்ரீமத் பகவத் கீதையையும் வழிபடுகின்றனர். அவர் ஸ்ரீமத் பகவத் கீதையில் நீ உடலை வெட்டினால் கூட ஆத்மா வெட்டபடுவதில்லை எனவும், நீ உடலை எரித்தால் கூட ஆத்மா எரிவதில்லை எனவும் கூறுகிறார்.....உடலை அழித்தால் கூட எதுவும் அழிவதில்லை— நீ அதனை வாளால் வெட்டமுடியாது......நீ அதனை தீயால் எரிக்கவும் முடியாது. இந்துகள் கருக்கலைப்புக்கு எதிராக உள்ளனர்- ஏன்? -- ஏனெனில் நீ ஒரு உயிரைக் கொல்கிறாய். எதுவும் கொல்லப் படவில்லை. எதுவும் கொல்லப்படமுடியாது. அங்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன, ஒன்று ஆத்மா அழிவற்றது, பிறகு எதுவும் கொல்லப்படவில்லை. அல்லது ஆத்மா அழிவுறகூடியது, பிறகும் எதுவும் கொல்லபடவில்லை. இவை இரண்டு மட்டுமே வாய்ப்புகள். நீ ஆத்மா அழிவற்றது என்பதை நம்பினால், பிறகு எதுவும் கொல்லப்படவில்லை, ஏனெனில் எதுவும் கொல்லப்படமுடியாது – அல்லது நீ ஆத்மா இல்லை என நம்பினால், பிறகு கொல்வதற்கு எதுவும் இல்லை. உண்மையில் அங்கு எந்த ஆத்மாவும் இல்லை, உடல் மட்டுமே உள்ளது.
இந்த கிரகத்தில் எத்தனை மக்கள் ஆனந்தமாக வாழமுடியும் என நாம் முடிவெடுத்தாகவேண்டும். ஆனால் அதன் பின்னால் ஒரு மறைக்கபட்ட திட்டமும் உள்ளது. மத பூசாரிகள், போப் மற்றும் மற்றவர்கள், மக்கள் ஆனந்தமாக, மகிழ்ச்சியோடு, பரவசமாக வாழ தொடங்கினால் அவர்களுடைய சொர்க்கலோகத்தை பற்றி யார் அக்கறைபடுவார்கள் என்ற எளிமையான காரணத்தால் மனிதன் ஆனந்தமாக வாழ்வதை விரும்பமாட்டார்கள். மக்கள் மிகவும் துன்பகரமான நிலையில் வாழவேண்டும், பிறகு மட்டுமே அவர்கள் பார் இந்த வாழ்க்கை துன்பமயமானது. அடுத்த வாழ்வை தேடு. கடந்த வாழ்வை தேடு. இந்த வாழ்க்கை நரகம், எனவே இந்த வாழ்க்கையை வாழ்வதில் உனது நேரத்தை வீணடிக்காதே. மற்றொரு வாழ்வை, தெய்வீக வாழ்வை கண்டறிய உனது நேரத்தை பயன்படுத்து என அவர்கள் கற்று தர இயலும்.

உலகம் துன்பத்தில் இருந்தால் அது அவர்களுக்கு வசதியாக இருக்கும். மனோரீதியாக உன்னை துன்பத்தில் வைத்திருப்பதை அவர்கள் சமாளித்துவிட்டனர். உலகரீதியாக உன்னை துன்பத்திலேயே வைக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். உடல்ரீதியாகவும்...... சாத்தியமாகும் அனைத்து வழிகளிலும் நீ மிகவும் துன்பத்தில் இருக்கும்படி செய்யும்போது அவர்களிடம் அறிவுரை கேட்க நீ சென்றாக வேண்டும். நீ அவர்களை நிமிர்ந்து பார்க்கும்போது அவர்கள் உன்னை காப்பாற்றுபவர்களாக உனக்கு தெரிய வேண்டும்.

என்னுடைய முழு பார்வையும் மாறுபட்டது.

இப்போது இங்கே வாழ்வதன் மூலம், இந்த கிரகத்தில் எந்த துன்பமும் இல்லை, அன்பு பொங்கி வழிகிறது, மக்கள் மலர்ந்து கொண்டிருக்கிறார்கள், மக்கள் தாமரைகளாக இருக்கின்றனர், என்னும் நிலையைக் கொண்டு வாருங்கள்.

Source : Philosophia Ultima Ch. #3

அடக்கி வைத்தலின் விளைவு – ஓஷோவின் கதை - 6

எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு ஞாயிற்றுக்கிழமை ஏழைவிவசாயி ஒருவன் வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது அவனது பால்யபிராயத்து நண்பன் அவனை காண வந்தான்.

விவசாயி,“வா!வா! இத்தனை வருடங்களாக எங்கே போயிருந்தாய்? உள்ளே வா, நான் சிலரை சந்திக்க போய்க்கொண்டிருக்கிறேன். இப்போது விட்டுவிட்டால் அவர்களை திரும்ப பிடிப்பது கஷ்டம். அதனால் நீ வீட்டில் சிறிதுநேரம் ஓய்வெடுத்து கொண்டிரு. ஒரு மணிநேரத்தில் நான் திரும்பி வந்து விடுவேன். வந்தபின் நாம் பேசலாம்.” என்றான்.

அந்த நண்பன், “இல்லையில்லை, நானும் உன்னுடன் வருகிறேன். ஆனால் என்னுடைய உடை மிகவும் அழுக்காக இருக்கிறது. நீ எனக்கு வேறு மாற்றுடை கொடு. நான் மாற்றிக் கொண்டு உன்னுடன் வருகிறேன்,’’ என்றான்.

பல நாட்களுக்கு முன், அரசர் சில விலை மதிப்பான ஆடைகளை விவசாயிக்கு பரிசாக கொடுத்திருந்தார். அவன் அதை விசேஷ காலங்களில் அணிய என்று பாதுகாப்பாக வைத்திருந்தான். அதை எடுத்து சந்தோஷமாக நண்பனிடம் கொடுத்தான்.

நண்பன் மேல்அங்கி, தலைப்பாகை, வேட்டி, அழகான ஆடம்பரமான செருப்பு என எல்லாவற்றையும் போட்டுக் கொண்டான். அவன் இப்போது அரசனைப் போல காட்சியளித்தான். தன்னுடைய நண்பனை பார்த்த விவசாயிக்கு சிறிது பொறாமை ஏற்பட்டது. ஒப்பிடும்போது இவன் ஒரு வேலைக்காரன் போல தோன்றினான். தன்னுடைய அழகிய ஆடைகளை கொடுத்து, தான் தவறு செய்துவிட்டோமோ என்று வருத்தப்பட்டான். தன்னை தாழ்வாக உணர்ந்தான். இப்போது எல்லோரும் தன் நண்பனையே பார்ப்பார்கள், தான் ஒரு வேலைக்காரன் போல தோன்றுவோம் என நினைத்தான்.

அவன் தன்னை நல்ல நண்பன் என்றும் தெய்வம் போன்றவன் என்றும் தன் மனதை தேற்றிக் கொள்ள முயற்சித்தான். தெய்வத்தைப் பற்றியும் நல்ல விஷயங்களை பற்றியும் மட்டுமே நினைப்பதாக முடிவு செய்தான். `நல்ல அங்கி, விலையுயர்ந்த தலைப்பாகையில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது? இதனாலென்ன?’ என நினைத்தான். ஆனால் அவன் என்ன முயற்சி செய்தாலும் திரும்ப திரும்ப அங்கியும் தலைப்பாகையும் தான் அவன் மனதில் அலை மோதின.

அவர்கள் நடந்து செல்லும்போது வழியில் கடந்து செல்வோர் அனைவரும் நண்பனையே கவனித்தனர். யாரும் விவசாயியை கவனிக்க வில்லை. அதனால் அவன் வருத்தமடைந்தான். தன் நண்பனுடன் பேசிக் கொண்டே இருந்தாலும் அவனுள்ளே அங்கியும் தலைபாகையுமே ஓடிக்கொண்டிருந்தன.

போகவேண்டிய வீட்டிற்கு போய் சேர்ந்தவுடன் அவன் தன் நண்பனை அறிமுகம் செய்தான். “இவன் என் நண்பன், சிறுவயதுமுதல் நண்பன், மிகவும் அன்பானவன்.’’ என்றவன் திடீரென, ``ஆனால் இந்த துணிமணிகள் என்னுடையவை’’ என்றான்.

நண்பன் திகைத்து நின்றான். வீட்டிலுள்ளவர்கள் ஆச்சரியப் பட்டனர். இதை சொல்லியிருக்கக் கூடாது என உணர்ந்தான். ஆனால் காலம் கடந்து விட்டது. அவன் தனது தவறுக்காக வருத்தப்பட்டான், உள்ளுக்குள்ளே தன்னை கடிந்து கொண்டான்.

அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தபின், தன் நண்பனிடம் அவன் மன்னிப்பு கேட்டுக் கொண்டான். நண்பன், “நான் திகைத்துவிட்டேன். அந்தமாதிரி ஏன் சொன்னாய்’’ எனக் கேட்டான்.

விவசாயி, “மன்னித்துவிடு, வாய் தவறி விட்டது. நான் தப்பு செய்து விட்டேன்.’’ என்றான்.

ஆனால் நாக்கு பொய் சொல்லாது. மனதில் இருப்பது மட்டுமே வாயிலிருந்து குதித்து வெளி வரும். நாக்கு ஒருபோதும் தவறு செய்யாது. விவசாயி, “என்னை மன்னித்து விடு. நான் எப்படி அந்தமாதிரி சொன்னேன் என எனக்கு தெரியவில்லை’’ என்றான். ஆனால் அந்த எண்ணம் தனது மனதிலிருந்து தான் வெளி வந்தது என்பது மிக நன்றாக அவனுக்குத் தெரியும்.

மற்றோர் நண்பனின் வீட்டிற்கு போனார்கள். இப்போது விவசாயி இந்த துணிமணிகள் தன்னுடையது என சொல்லக்கூடாது என்று உறுதியான தீர்மானம் செய்துகொண்டான். தனது மனதை நிலைப் படுத்திக் கொண்டான். அந்த நண்பனின் வீட்டு கேட்டை அடையும் போது அந்த துணிமணிகள் பற்றி எதுவும் பேசக் கூடாது என மாற்றமுடியாத தீர்மானம் செய்துகொண்டான்.

அந்த அப்பாவி மனிதனுக்கு, எதுவும் சொல்லக் கூடாது என தீர்மானம் செய்ய செய்ய, அந்த உறுதியான தீர்மானமே இந்த துணிமணிகள் என்னுடையவை என்பதை உள் மனதில் ஆழமாக கொண்டு செல்லும் என்பது தெரியாது. மேலும் இந்த உறுதியான தீர்மானம் எங்கு செய்யப் படுகிறது.

ஒருவன் பிரம்மச்சரிய விரதம் பூணும்போது அவன் தன்னுடைய காம உணர்ச்சியை வலுக்கட்டாயமாக உள்நோக்கி தள்ளுவது போல, உணவு கட்டுப்பாட்டில் இருப்பதாகவோ, பட்டினி கிடப்பதாகவோ முடிவு செய்தால் அவன் அதிகமாக சாப்பிடும் ஆசையை அடக்கி வைப்பது போல, இது போன்ற முயற்சிகள் உள்ளே தவிர்க்கமுடியாத பின்விளைவுகளை ஏற்படுத்தும். எதிர்விளைவை ஏற்படுத்தும். நமது பலவீனம் எதுவோ அதுவே நாம். ஆனால் நாம் அதை அடக்கி ஆள முடிவு செய்கிறோம். அதை எதிர்த்து போராட தீர்மானிக்கிறோம். – இது தானாகவே ஆழ்மனதில் தகராறு உருவாக ஒரு அடிப்படையாக அமைகிறது.

ஆகவே உள்ளே இந்த சச்சரவுடன், நமது விவசாயி அந்த வீட்டிற்க்குள் சென்றான். அவன் மிகவும் ஜாக்கிரதையாக, ‘இவன் எனது நண்பன்.’ என்றான். யாரும் அவன் சொல்வதை கவனிக்கவில்லை. எல்லோரும் நண்பனையும் அவன் துணிமணியையுமே ஆச்சரியத்தோடு கவனித்தனர். இது என்னுடைய அங்கி இது என்னுடைய தலைப்பாகை என அவனுக்கு தோன்றியது. ஆனால் உடையை பற்றி பேசுவதில்லை என்ற தீர்மானத்தை நினைவு படுத்திக் கொண்டான். அவன் உறுதி எடுத்திருந்தான்.

எல்லோரிடமும் எளிமையானதோ அழகானதோ உடைகள் உண்டு. இது ஒரு விஷயமே அல்ல என தனக்குதானே விளக்கம் கூறிக் கொண்டான். ஆனால் அந்த உடைகள் அவனது கண்களுக்கு முன் பெண்டுலம் போல ஆடிக் கொண்டிருந்தது.

அவன் மறுபடியும் அறிமுகம் செய்தான். “இவன் எனது நண்பன். சிறுவயது முதலே நண்பன். நாணயமானவன். ஆனால் இந்த உடைகள் அவனுடையவைதான், என்னுடையவை அல்ல”

எல்லோரும் ஆச்சரியமடைந்தனர். யாரும் இப்படி ஒரு அறிமுகத்தை கேட்டதேயில்லை. “உடைகள் அவனுடையவைதான், என்னுடையவை அல்ல.”

அங்கிருந்து வந்தபின் திரும்பவும் மனபூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டான். ‘மிகப் பெரிய தப்பு!’ என்று அவன் ஒத்துக்கொண்டான். இப்போது அவன் என்ன செய்யக்கூடாது, என்ன செய்ய வேண்டும் என்பதில் குழப்பமடைந்தான். ‘உடைகள் இதற்கு முன் இதுபோல நினைவில் இருந்ததேயில்லை. கடவுளே எனக்கு என்ன நடந்தது.?’

அவனுக்கு என்ன நடந்தது ? அவன் தன்னைக் கட்டுப் படுத்திக்கொண்ட முறையை கடவுளே முயற்சி செய்தால் கூட அந்த உடைகளை பற்றிய நினைப்பு கடவுளையும் பற்றிக்கொண்டு விடும். அந்த செயல்முறை அப்படிப் பட்டது என்பது அந்த அப்பாவி விவசாயிக்குத் தெரியாது.

நண்பன் மிகுந்த மன வருத்தத்துடன், “இனி நான் உன்னுடன் வரவில்லை” என்றான். விவசாயி அவன் தோளைப் பற்றி, “அப்படிச் செய்யாதே! என் வாழ்நாள் முழுவதும் ஒரு நண்பனிடம் இப்படி நடந்து கொண்டேனே என சங்கடத்துடனேயே நான் இருக்க நேரிடும். நான் சத்தியமாக திரும்பவும் இந்த உடைகளை பற்றி குறிப்பிட மாட்டேன். இதயபூர்வமாக, கடவுள் சத்தியமாக நான் உடைகளை பற்றி எதுவும் கூறவே மாட்டேன்.” என்றான்.

ஆனால் ஒருவர் சத்தியம் செய்யும்போது அதைப் பற்றி அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு உறுதியான முடிவு எடுக்கும்போது அடி ஆழத்தில் வேறு ஏதோ அதனுடன் இணைந்துள்ளது. உறுதியான முடிவு மேல் மட்ட மனதில் எடுக்கப் படுகிறது, அதற்கு எதிரானது உள் மனதில் எங்கோ செருகப் படுகிறது. மனம் பத்து பிரிவுகளாக இருந்தால், மேற் பகுதியில் உள்ள ஒரு பிரிவு மட்டுமே முடிவு செய்கிறது. ஆனால் மீதி உள்ள ஒன்பது பிரிவுகளும் அந்த முடிவுக்கு எதிராக உள்ளன. பிரம்மச்சரியம் ஒரு பிரிவால் எடுக்கப் படும் முடிவு எனில் மீதி உள்ள மனம் அனைத்தும் உடலுறவுக்கு அலைகின்றன. இறைவனால் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட ஈடு செய்யமுடியாத அந்த முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்துக்காக ஏங்குகின்றன.

அவர்கள் மூன்றாவது நண்பனின் வீட்டிற்கு சென்றனர். விவசாயி தன்னை மிகவும் கட்டுப் படுத்திக் கொண்டான். இறுக்கமானவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். ஏனெனில் ஒரு எரிமலையே அவர்களுக்குள் குமுறிக் கொண்டிருக்கிறது. வெளிப்பார்வையில் அவர்கள் கண்டிப்பானவர்களாக, கட்டுபாடானவர்களாக, இருப்பார்கள். ஏனெனில் அவர்களது இயல்பான போக்கை தன்னிச்சையாக விடாமல் உள்ளே பிடித்துவைத்து சிரமப் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.


நினைவில் கொள், கட்டாயமாக திணிக்கப்படும் எதுவும் தொடரவும் முடியாது, நிறைவு பெறவும் முடியாது. ஏனெனில் அதில் அளவற்ற சிரமம் ஏற்படுகிறது. நீ சில சமயங்களில் ஓய்வாக இருக்கவேண்டும். சில சமயங்களில் தளர்வு கொள்ள வேண்டும். உன்னுடைய முஷ்டியை நீ எத்தனை நேரம் இறுக்க மூடி வைத்திருக்க முடியும் 24 மணி நேரமுமா? நீ இறுக்க இறுக்க அது சோர்வடைந்து விடும். அதனால் அந்த அளவு வேகமாக அது திறந்து விடும். கடின வேலை செய்தால் அதிக சக்தி செலவாகி சீக்கிரத்தில் சோர்வாகி விடுவாய். எப்போதும் ஒரு செயலுக்கு ஒரு எதிர்செயல் இருக்கும், அந்த எதிர்செயல் எப்போதும் உடனடியாக நிகழும். உனது கைகள் எல்லா நேரமும் திறந்தே இருக்கலாம், ஆனால் முஷ்டியை இறுக்கமாக எல்லா நேரமும் வைத்திருக்க முடியாது. அது உன்னை சோர்வடைய செய்யும் அதன்பின் எந்த விஷயமும் வாழக்கையின் இயற்கையான பாகமாக இருக்க முடியாது. எப்போதெல்லாம் நீ கட்டாயப்படுத்துகிறாயோ, அப்போதெல்லாம் ஓய்வு நேரம் தொடர்ந்து வந்தே தீரும். அதனால் ஒரு துறவி எந்த அளவு கட்டுப்பாடானவனோ, அந்த அளவு அவன் ஆபத்தானவன். இருபத்தி மூன்று மணி நேரம் இறுக்கமாக சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் பின்பற்றிய பின், குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் தன்னை தளர்த்திக் கொள்ள வேண்டும். அந்த ஒரு மணி நேரத்திற்க்குள் அவன் தன்னுள் அடக்கிவைத்த அத்தனை தேவையற்றவைகளையும் வெளியேற்றியாக வேண்டிய அவசரம் ஏற்படுகிறது.

இந்த விவசாயி உடைகளை பற்றி பேசக் கூடாது என்ற கட்டுப்பாட்டை இறுக்கமாக வைத்துக் கொண்டான். அவனது நிலையை கற்பனை செய்து பார். உனக்கு ஒரு சிறிதளவு மத அனுபவம் இருந்தால் போதும், அவனது மனநிலையை உன்னால் கற்பனை செய்து பார்க்க முடியும். சத்தியம் செய்திருந்தாலோ அல்லது சபதம் எடுத்திருந்தாலோ அல்லது விரதம் என்பதற்க்காக உன்னை கட்டுப் படுத்தி வைத்திருந்தாலோ உனக்கு அனுபவம் இருக்கும். இப்போது அந்த விவசாயியின் பரிதாபத்துக்குரிய மனம் என்ன பாடுபடும் என்பதை உன்னால் நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

அவர்கள் மற்றொரு வீட்டிற்க்கு சென்றனர். அந்த விவசாயி களைத்துபோய்விட்டான், வியர்த்துக் கொட்டியது அவனுக்கு. அந்த நண்பன் கவலைப் பட்டான். விவசாயி வேதனையால் உறைந்து போய்விட்டான். மெதுவாகவும் ஒவ்வொரு வார்த்தையையும் ஜாக்கிரதையாகவும் பேசியவாறே அவன் அறிமுகம் செய்தான். ‘இவன் எனது நண்பன், சிறு வயது நண்பன், மிகவும் நல்லவன்.’

ஒரு வினாடி அவன் தடுமாறினான். அவன் உள்ளிருந்து ஒரு உந்துதல் வந்தது. தான் மதியிழப்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. அவன் சத்தமாக, “இந்த உடைகள் என்னை மன்னித்து விடுங்கள். நான் அதைப் பற்றி எதுவும் சொல்லமாட்டேன். ஏனெனில் நான் அதைப் பற்றி எதுவும் சொல்லமாட்டேன் என சத்தியம் செய்திருக்கிறேன்.!”

இந்த மனிதனுக்கு என்ன நிகழ்ந்ததோ, அதுவேதான் மனிதஇனம் முழுமைக்கும் நிகழ்கிறது. ஏனெனில் கட்டுப்படுத்தப்படுவதால், காமம் என்பது ஒரு வெறியாக, ஒரு நோயாக, நெறி தவறிய ஒன்றாக மாறிவிட்டது. அது விஷமாகி விட்டது.

Source: From Sex to Superconscious

No comments: