Friday, October 22, 2010

மலர் 2 இணைய இதழ் 6 11 ஜனவரி 2010

தலையங்கம்

அன்பு நண்பர்களே,

இம்மாதம் 3 விஷயங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

1.
ஒரு சிந்தனையாள நண்பர் வந்திருந்தார். எவ்வளவோ புத்தகப் படிப்பும், தர்க்கமும், தத்துவமும் படித்துவிட்டேன். இந்த தியானம் என்றால் என்ன என்பதை யாருமே தெளிவாக்கவில்லையே என்றார்.

எல்லோரும் தெளிவாகவே சொல்லியிருக்கிறார்கள். ஆனால் மனம் அதை மாற்றிப் புரிந்துகொள்ளவே தயாராக இருக்கிறது. ஆனாலும் என் பங்குக்கு நான் கூறினேன்.

தியானம் என்பது ஒற்றை வாக்கியத்தில் “உயிரனுபத்தின் கணநேர தரிசனம்”.

அவர் கேட்டார், இதை நான் புரிந்துகொள்ள உயிர் என்றால் என்ன என்பதை விளக்க வேண்டுமென்றார்.

உயிர் பூவின் மணம் போன்றது. மணம் தனித்து இருக்கிறது. மரம் இல்லாமலே மணம் இருக்கிறது. ஆனால் மரமில்லாமல் பூ பிறக்காது. பூ இல்லாமல் மணம் பிறக்காது. அது போலவே உடலில்லாமல் உயிர் பெற முடியாது. அதேசமயம் மணத்தைப் போலவே உயிர் உடல் கடந்தும் இருக்கிறது. எப்படி மரத்தின் வேர், பட்டை, இலை என்று ஒவ்வொன்றும் ஒரு மணம் கொண்டிருந்தாலும் பூவினுடைய மணம் உயர்ந்ததாய் இருக்கிறதோ அது போல உடலின் கோபம், பொறாமை, பாதுகாப்பு, பயம், செக்ஸ், பசி இப்படி உள்ள குணங்களின் மூலம் வெளிப்பட்டுப் பரவும் சக்திகளில் மிக உயர்ந்த குணமாக இருப்பதுதான் உயிர்.

உயிர்குணம் பூவின் மணம் போல சுற்றிலும் பரவி பிரபஞ்ச இருப்போடு கலக்கும் அனுபவம் கொடுக்கிறது. பூ ஆகி மணமாய் பரந்து விரியும் வரை மரம் ஒரு சிறிய தனியான நான்தான். மரத்தின் உயர் குண வெளிப்பாடுதான் அதன் பூ மணம். அதைப் போலவே மனிதனின் உயர் குண வெளிப்பாடுதான் உயிர்குணம். அதுவரை மனிதன் ஒரு சிறிய தனியான நான்தான்.

ஆகவேதான் எல்லா மனிதர்களையும் உயிரோடிருக்கிறார்கள் என்று கூற முடியாது என்றார் குருட்ஜிப் ஞானி. உயிரை அடைய மனிதனுக்கு சாத்தியம் இருக்கிறது. அவ்வளவுதான்.

இதில் விதையாக நின்று விடுபவர்கள் பலர். இவர்கள் கனவிலும் கற்பனையிலும் நேரத்தை வீணடித்து வாழ பயப்படும் வெட்டிப்பேச்சு ரகம். துளிர் விட ஆரம்பிப்பவர்களில் பாறை நிலத்தில், பாலைவனத்தில், சதுப்பு நிலத்தில், விளைச்சல் நிலத்தில் என்று பிறக்கும் சூழலில் சிக்கி வளர முடியாமல் போய்விடுபவர்கள், துளிரின் பயத்தோடு ஒடுங்கிவிடுபவர்கள் உண்டு. சமுதாய போட்டியில் சிக்குண்டு மிதிபட்டும், அடிபட்டும், அமுங்கியும் போய் விடுபவர்களுண்டு. சரியான நிலத்தில் விழுந்து துளிர்விட்டவர்களும் பக்கத்து மரத்தை, அடுத்த வீட்டைப் பார்த்து இயல்பாய், இயற்கையாய் வளர்வதற்கு இடம் கொடாமல் பொறாமையிலும், போட்டியிலும் தம் வாழ்வை சீரழித்து கொள்வோர் பலர்.

இதன் நடுவில் துளிர் விட்டு, தானுண்டு, தன் வேலையுண்டு, தானாய் வளரும் வளர்ச்சியுண்டு என்று சந்தோஷித்து, மற்றவர்களை பார்க்காமல், ஒப்பு நோக்காமல், தன் இயல்பான வளர்ச்சிக்கு எங்கெங்கு வேர்விட வேண்டும் என்று ஆராய மூளையைப் பயன்படுத்தி வளர்வோர் ஒரு சிலரே.

அவர்கள் அன்பிலும், அடக்கத்திலும், அமைதியும், ஆனந்தத்திலும், பகிர்விலும் வேர் விட்டு கிளை விரித்து வளர்கின்றனர். அதில் எல்லாவற்றையும் தாண்டி பூத்து மணமாய் பரவியவர்கள் வெகுவெகு சிலர். அவர்களையே கடவுள் என்று வழிபடுகிறோம் நாம்.

ஆதனால் உண்மையில் செய்ய வேண்டியது வழிபாடு அல்ல. தான் பூக்க செய்ய வேண்டிய ஏற்பாடு. அதற்குத் தேவை ஒருபுறம் விலக்க வேண்டியவற்றை விலக்கல், மறுபுறம் உயிரனுபவத்தின் கண நேர தரிசனம் தரும் தியானம் புரிதல். இவை இரண்டையும் ஒருசேர செய்தவாறு வாழும்போது, அப்படி வாழ்கையில் நாம் வளர்வோம். இது முக்கியம் - மதம் என்ற பெயரில் விலகி நின்று தியானம் செய்துகொண்டு வாழ்வதில் பலனில்லை, அது மறுபடியும் மனதின் தேர்வில் மாட்டிக்கொள்வதுதான்.

இயல்பான வாழ்வை முழுமையாய் தியானத்தோடு வாழும்போது, பூப்போம், மணப்போம், உயிரனுபவம் பெறுவோம். இப்படி மரத்தை தாண்டி மணம் காற்றோடு கலப்பது போல, பிரபஞ்சத்தோடு கலக்கும் அந்த அனுபவம்தான் ஞானம்.

இதனால்தான் உடல் முக்கியம். ஆரோக்கியம் முக்கியம். சரியான வளர்ச்சி முக்கியம். அப்போதுதான் பூ மலரும். உயிர் அனுபவம் கிடைக்கும். ஆகவே உயிர் என்பது ஒரு பிரபஞ்சத்தன்மைதான்.

அதை அடைவதற்கு மனித உடலுக்கு சாத்தியம் அதிகமாக உள்ளது. மனிதன் பூத்தால் உயிர் மணம் பரவும். அந்த உயிரனுபவம் நம்மை புரட்டிப் போடும்.

பிரபஞ்சத்தோடு ஒன்றிணைந்தவனே நான் என்பது நமது உடலில், செய்கையில், மனதில், உணர்வில், பல மாற்றங்களை கொண்டு வரும்.

அதன்பின் நான் அடிக்கடி சொல்வதுபோல
எனக்குத் தெரியாது – I don’t know
வாழ்க்கை ஒரு லீலை – Life is a Play
ஆகட்டும் பார்க்கலாம் – Let us see
என்பதே நமது வாழ்க்கையின் நடைமுறை ஆகி விடும்.

பிரித்துப் பார்க்கும் வாழ்க்கைமுறை போய் ஒருங்கிணைந்த வாழ்வுமுறை மலரும்.

ஆகவே நண்பர்களே, தியானம் என்பது இந்த உயிரனுபவத்தின் கண நேர தரிசனம் பெற நாம் ஏற்படுத்தும் சூழல்தான்.

2.
நமது இந்தியர்களின் அடிப்படை மனநோய் என்ன என்று பார்த்தால் மனப்பிளவுதான். மனப்பிளவுக்கு முதன்மை காரணமாய் இருப்பது செக்ஸ் பிரச்னை. நான் சந்திக்கும் நபர்களில் ஆணில் 50 சதமும் பெண்களில் 70 சதமும் சிறுவயதில் பாலியல் பலாத்காரத்திற்கு அல்லது பயன்பாட்டிற்கு தெரிந்தோ, தெரியாமலோ உட்பட்டிருக்கிறார்கள். இன்னும் அதை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணம் என்ன.

உடம்பு என்றாலே செக்ஸ் என்ற நமது கடந்தகால அணுகுமுறைதான். இன்று அது பெரு நகரங்களில் மாறி வருவது வரவேற்புக்குரியது. நண்பர்கள் வட்டம் நலத்தைத் தரும்.

ஆனால் கடந்தகாலத்தில் உடல் என்றாலே செக்ஸ் என்று செக்ஸை அடக்கி வைத்ததன் மூலம், அது தலையில் ஏறி உட்கார்ந்து கொண்டிருப்பதுதான்.

உடலில் எவ்வளவோ உணர்வுகள் எழும், எழுகிறது. பின் அடங்குகிறது. அதில் எப்போதாவது எழும் ஒரு உணர்வுதான் செக்ஸ். அன்பு, கருணை, படைப்பு போன்று ஆரோக்கியத்தில் வெளிப்படும் உணர்வுகள், கோபம், பொறாமை, பேராசை போன்ற மிருக உணர்வுகள் இப்படி எல்லாம் இருக்கும்போது உடலை வெறும் செக்ஸோடு இணைத்துப் பார்க்கும் மனநோயை நாம் விட வேண்டும்.

நிர்வாணம், உடலை மசாஜ் செய்தல், குளிப்பாட்டுதல், உடலில் பல்வேறு அசைவுகளுடன் நடனமாடுதல், விளையாடல், கட்டியணைத்தல், கதகதப்பாய் சேர்ந்திருத்தல் இவையெல்லாம் உடலின் ஆனந்தங்கள். இவை நட்பு, அழகுணர்ச்சி, தொழில், மகிழ்ச்சியின் வெளிப்பாடு, பகிர்வுணர்வு என பலவிதமாயும் வரலாம். செக்ஸிலும் வரலாம். ஆனால் செக்ஸை செக்ஸ் உணர்வு வரும்போது மட்டும் பாருங்கள்.

மற்ற நேரங்களில் உடலின் மற்ற சுகங்களை உணருங்கள்.. அனுபவியுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் உணர்த்துங்கள்.

சிறு குழந்தைகளின் உடலை எப்போதும் மூடுதல், பிறப்புறுப்பை ரகசியமாக்கல், குழந்தை நிர்வாணமாய் ஆடிப்பாட அனுமதிக்காதிருத்தல், குழந்தைமுன் தாயும் தந்தையும் கூட நிர்வாணத்திற்குக் கூச்சப்படல், இவையெல்லாம் ஆரோக்கியமற்ற மனநோயின் வெளிப்பாடுகளே.

ஆகவே நண்பர்களே

செக்ஸ் ஒரு பிரச்னை அல்ல. தலைக்கேறியுள்ள செக்ஸூம் அது எதையும் செக்ஸாகப் பார்க்கும் நோயும் தான் பிரச்னை.

3.
என்னிடம் வரும் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் தன்னம்பிக்கை குறித்துப் பேசுகின்றனர். ஒரு சாரார் தனக்கு தன்னம்பிக்கை இல்லை என்பதால் கஷ்டப்படுவதாகவும், மற்றொரு சாரார் தனது வளர்ச்சிக்கு தன்னம்பிக்கையே காரணம் என்றும் கூறுகின்றனர்.

அவர்கள் கூறுவதில் உண்மை உள்ளது. சொல்லில்தான் தவறு. தன்மேல் வெறும் நம்பிக்கை மட்டும் வைத்தால் எதுவும் நடக்காது. எதுவும் மாறாது. உடல் உனது நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டது. என்னால் முடியும் என்று நம்பி தீயில் விரலை வைத்தால் எரியாமல் போகுமா – ஆகவே தன்னம்பிக்கை என்ற சொல் தவறு. இந்த உலகமும் யாருடைய நம்பிக்கைப்படியும் இயங்குவதில்லை. உணர்வும் உணர்ச்சியுமே இந்தப் பிரபஞ்சமும் நாமும்.

ஆனால் மனிதர்களில் மாயத்தை விளைவிக்கும் அதற்குப் பெயர் தன்னுணர்வு. உயர்ந்தவர்கள் தன்னுணர்வு அதிகம் பெற்றவர்கள். தாழ்ந்து கிடப்பவர்கள் தன்னுணர்வு இல்லாமல் தன்னைக் குறித்து வேறு யாரோ கூறியதை உண்மையென நம்பி இருப்பவர்கள். ஆகவே தேவை தன்னுணர்வு. அது நம்மை நாம் அறிய, உணர, வெளிப்படுத்த, செயலாக்க, வெளிச்சமாய், சக்தியாய் இருக்கிறது. ஆகவேதான் தன்னுணர்வு கொள்வதை தவிர வேறு எந்த ஒழுக்கமும் மனிதனுக்கு வெளியிலிருந்து தேவையில்லை என்கிறார் ஓஷோ.

நண்பர்களே, ஆகவே இன்றுமுதல் தன்னம்பிக்கை என்பதற்கு பதிலாக தன்னுணர்வு என்ற சரியான அர்த்தமுள்ள சொல்லை எல்லோரும் பயன்படுத்துங்கள்.
நன்றி,
அன்பு,
சித்.

கவிதை

அன்புப் பரவசம்

என் நண்பனே,
அன்புக்கு இல்லை எல்லை,
அன்பு எனும் அணை போடும் வார்த்தையே தொல்லை.

அன்பு இதயத்தின் மொழி
உன் நிறைவில் பொங்கும் உணர்ச்சி.

அன்பு குறிகொண்டு செய்யும் செயல் அல்ல.
தன்னை மறந்து பிறக்கும் நடனம்.

பணம், பகட்டு, அந்தஸ்து, ஆடம்பரம், அதிகாரம், புகழ்
போன்ற ஆணவ மொழிகளில் பேசாது அன்பு,
நாடும் இனமும் மொழியும் சாதியும் கட்சியும் அறியாதது அன்பு.

கருவறை மிதப்பில் நீ கண்டது அது,
அன்னையின் மார்பில் நீ குடித்தது அது,
காதலின் அணைப்பில் நீ காண்பது அது.

அன்பின் நினைவே மனிதனின் தேடல்,
அதன் சுவையே மனிதனின் படைப்பு,
அதன் நிழலே மனிதனின் உறவுகள்.

அருமை நண்பா,
அன்பு ஆளை மாற்றும் இரசாயனம்,
அதில் நீ குதி, குளி, குடி......
பயம் போகும்......பரவசம் பிறக்கும்.

இழக்க என்ன இருக்கிறது உன்னிடம்
போலி அடையாளம், பொய் முகம்.

நண்பா, நேசத்தில் நீ கரைகையில்,
முதன்முறையாக நீ இருப்பாய்,
ஆம்....இருப்பின் இயல்பாய்,
இறப்பெனும் எல்லைகடந்தவனாய்,
இயற்கையின் நடனமாய் நீ இருப்பாய்.

ஓ, என் நண்பர்களே, உறுதி எடுங்கள்.
நாம் நேசத்தில் புதிதாய் பிறப்போம்,
பிரிவும் பயமும் பிடுங்கித்தின்னும் –
இந்த பதுங்கு குழி சமுதாயம் தவிர்ப்போம்,
அன்பின் உச்சியை தேடும் பண்பே – அனைவரின்
ஒழுக்கமாய் அமையும்........
புதிய உலகம் படைப்போம்,
அதன் புதிய மனிதனாய்,
அன்பு வழியில் புறப்படுவோம் இன்றே.

ஓஷோ வீடியோ

1. Osho : If people are happy, Nobody can drag them into war

2. Osho : Intellectual listening is a kind of deafness

3. Osho : Heaven & Hell (Meditation Minutes)


கேள்வி பதில்

இம்மாதமும் ஒரு தியானமுறையையும், புரிதலுக்காக மனம் மற்றும் தியானம் பற்றிய கேள்விகளுக்கு ஓஷோவின் பேச்சுகளிலிருந்து சில பகுதிகளை அளிக்கிறோம்.

ஒரு தியான முறை - சரி என்ற மந்திரம்

எப்போது தினமும் இரவில் தூங்குவதற்கு முன். குறைந்த பட்சம் பத்து நிமிடங்கள். பின் மறுபடியும் காலை கண் விழித்தவுடன் செய்யும் முதல் காரியம் குறைந்த பட்சம் மூன்று நிமிடங்கள். மேலும் பகலில்கூட, எப்போதெல்லாம் எதிர்மறையாக சரியில்லாமல் இருப்பதாக உணர்கிறீர்களோ, அப்போதெல்லாம் உட்கார்ந்து கொண்டு இதை செய்யுங்கள்.

உங்களது சக்தி முழுவதையும் சரி என்று கூறுவதற்கு செலுத்துங்கள். சரி என்பதை ஒரு மந்திரமாக மாற்றுங்கள். உட்கார்ந்து கொண்டு சரி சரி என்று திரும்ப திரும்ப கூற ஆரம்பியுங்கள். அதனுடன் இணக்கம் கொள்ளுங்கள். முதலில் அதை திரும்ப திரும்ப கூறுங்கள். பின் அதை உணர ஆரம்பியுங்கள், அதனுடன் இசைந்து இருங்கள். அது உங்களது இருப்பில் தலையிலிருந்து கால் வரை பரவட்டும். அது உங்களுக்குள் ஆழமாக ஊடுருவட்டும்.

உங்களால் சத்தமாக கூற முடிய வில்லையென்றாலும் மெதுவாகவாவது சரி சரி என்று சொல்லுங்கள்.

ஆமோதிப்பதன் சக்தி

வாழ்க்கையை மறுதலிப்பதன் மூலம் வாழ முடியாது, மறுதலிப்பதன் மூலம் வாழ முயற்சிப்பவர்கள் வாழ்வை தவற விடுகிறார்கள். மறுப்பதன் மூலம் ஒருவர் எதையும் செய்ய முடியாது, ஏனெனில் இல்லை என்பது வெறுமையானது, இல்லை என்பது இருளைப் போன்றது. இருள் உண்மையில் இருப்பதில்லை. அது வெளிச்சம் இல்லாத நிலை. அதனால்தான் நீ இருளை நேரிடையாக எதுவும் செய்ய முடியாது. அதை அறையிலிருந்து வெளியே தள்ள முடியாது. அதை உன் பக்கத்து வீட்டுகாரரின் வீட்டிற்க்குள் தள்ளி விட முடியாது. உன் வீட்டினுள் அதிகமான இருளை கொண்டு வர முடியாது. இருளை நேரிடையாக எதுவுமே செய்து விட முடியாது. ஏனெனில் அப்படி ஒன்று இல்லை.

நீ இருளை ஏதாவது செய்ய விரும்பினால் விளக்கை ஏற்றி வை. இருள் வேண்டாம் எனில் விளக்கை வெளிச்சத்தை கொண்டு வா. ஆனால் நீ செய்யக்கூடியதெல்லாம் வெளிச்சத்தின் மூலம் மட்டுமே செய்யக்கூடும். ஏதாவது செய்ய முடியுமென்றால் அது வெளிச்சத்தை மட்டுமே ஏதாவது செய்ய முடியும்.

அது போன்று சரி என்பது வெளிச்சம், இல்லை என்பது இருள். உன் வாழ்வில் நீ எதையாவது செய்ய விரும்பினால் நீ ஆமோதிக்கும் வழியை கற்றுக் கொள்ள வேண்டும். ஆமோதிப்பது மிகவும் அழகானது. சரி சொல்வதே உன்னை தளர்வுபடுத்தும். அதுவே உனது வாழ்க்கை முறையாகட்டும்.

மரங்களுக்கும், மக்களுக்கும், பறவைகளுக்கும் சரி என்று சொல்லிப் பார். நீயே ஆச்சரியப்படுவாய். வாழ்வே மிகவும் அருள் நிறைந்ததாகி விடும். வாழ்க்கையை எதிர்க்காமல் இருந்தால், வாழ்க்கையை ஆமோதித்தால் வாழ்க்கை ஒரு சாகசமாகி விடும்.
Zorba the Buddha Ch. #5

கேள்வி – நெஞ்சுக்கும் மனதுக்கும் நாபிக்கும் எங்கே வேறுபாடு?

பதில் – மனிதன் மூன்று மையங்களிலிருந்து செயல்படுகிறான். ஒன்று தலை, மற்றொன்று இதயம், மூன்றாவது நாபிக்கமலம்.

நீ தலையிலிருந்து செயல்பட்டால் மேலும் மேலும் எண்ணங்களால் பின்னப்படுவாய். அவை உள்ளீடற்றவை, கனவுகளை கொண்டவை, - சொல்வது அதிகம், செய்வது ஒன்றுமில்லை. மனம் ஒரு மிகப் பெரிய ஏமாற்று வேலை. பொய்யான நம்பிக்கையை தரக்கூடிய அளவற்ற ஆற்றல் அதனிடம் உண்டு, ஏனெனில் அதனால் அதை பெரிது படுத்திக் காட்ட முடியும். மிகப் பெரிய ஆசை ஊட்டி, அளவற்ற நம்பிக்கை ஏற்றி நாளை இது நடக்கக் கூடும் எனக் கூறி ஏமாற்றும், ஆனால் அப்படி நடக்கவே நடக்காது. தலையில் எதுவும் எப்போதும் நடக்காது, எதுவும் நடப்பதற்கான இடம் தலை அல்ல.

இரண்டாவது மையம் இதயம். உணர்வுகளுக்கான மையம் இது. ஒருவர் இதயத்தின் மூலம்தான் உணர்கிறார். நீ வீட்டிற்கு அருகில் இருக்கிறாய் – வீட்டை வந்தடைய வில்லை ஆனால் நெருங்கி விட்டாய். நீ உணரும்போது நீ உயிர்ப்போடிருக்கிறாய், நீ நிலைப்படுகிறாய். நீ உணரும்போது ஏதாவது நிகழக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. மூளையில் அதற்கான வாய்ப்பே இல்லை. இதயத்தில் சிறிதளவாவது வாய்ப்பு உள்ளது.

ஆனால் உண்மையான விஷயம் இதயத்தில் இல்லை – உண்மையானது இதயத்தை விடவும் ஆழமானது – அதுதான் நாபிக்கமலம். அது இருப்பின் மையம்.

நினைப்பு, இருப்பு, உணர்வு இவைதான் மூன்று மையங்கள். ஆனால் நிச்சயமாக உணர்வு எண்ணங்களை விட இருப்புக்கு நெருக்கமானது. மேலும் உணர்வு ஒரு வழிமுறை போல செயல்படுகிறது. நீ மூளையிலிருந்து இறங்கி நாபிக்கு வர வேண்டுமானால் இதயத்தின் மூலமாகத்தான் வர வேண்டும். அதுதான் சாலைகள் பிரியும் முச்சந்தி. இருப்பிற்கு நேரிடையாக போக முடியாது , வழியில்லை. இதயத்தின் வழியாகத்தான் போயாக வேண்டும். அதனால் இதயம் ஒரு வழிமுறையாக செயல்படுகிறது.
அதிகமாக உணர்ந்தால் குறைவாக சிந்திப்பாய்.

எண்ணங்களுடன் சண்டையிடாதே, ஏனெனில் எண்ணங்களுடன் சண்டையிடுவது சண்டையிடும் எண்ணங்களை மேலும் உருவாக்குவதாகும், பின் மனம் ஒருபோதும் தோல்வியுறாது. நீ வென்றால் மனம்தான் வென்றது, நீ தோற்றால் நீதான் தோற்றாய். எப்படியும் நீதான் தோல்வியுறுவாய் – அதனால் எண்ணங்களுடன் சண்டையிடாதே. அதனால் பயனில்லை.

எண்ணங்களுடன் சண்டையிடுவதற்கு பதிலாக, உனது சக்தியை உணர்வுகளுக்கு கொண்டு வா. நினைப்பதற்கு பதிலாக பாடு, தத்துவம் பேசுவதற்கு பதிலாக அன்பு செய், கட்டுரைக்கு பதிலாக கவிதை படி, ஆடு, இயற்கையை பார், என்ன செய்தாலும் அதை இதயத்தின் மூலமாக செய்.
உதாரணமாக, நீ யாரையாவது தொட்டால், இதயத்தின் மூலமாக உணர்வோடு தொடு. உனது இருப்பு துடிக்கட்டும். யாரையாவது பார்க்கும்போது இறுகிய கண்களோடு பார்க்காதே. உனது சக்தியை கண்களில் செலுத்திப் பார், உடனடியாக இதயத்தில் ஏதோ ஒன்று நிகழ்வதை நீ உணர்வாய். அதற்கு முயற்சி செய்வது மட்டுமே வேண்டும்.
இதயம் ஒதுக்கப்பட்ட மையம். ஒருமுறை நீ அதில் கவனம் செலுத்தினால் அது செயல்பட ஆரம்பிக்கும். அது செயல்பட ஆரம்பித்து விட்டால் மனதின் வழி செல்லும் சக்தி இதயத்தின் வழியாக செல்ல ஆரம்பிக்கும். இதயம் சக்தி மூலத்திற்கு அருகில் உள்ளது.

நாபிக்கமலம்தான் சக்தி மூலம். அதனால் சாதாரணமாக அதில் இருந்து தலை வரை சக்தியை செலுத்துவது கடினமான வேலைதான். இதில்தான் அனைத்து கல்விமுறைகளும் உயிர் வாழ்கின்றன. அவை சக்தியை நாபி மூலத்திலிருந்து இதயத்தை தொடாமல் தலை மையத்திற்கு செலுத்துவது எப்படி என்பதை போதிக்கின்றன. எந்த ஸ்கூலும், காலேஜூம், பல்கலைகழகமும் எப்படி உணர்வதென்று உணர்வைப் பற்றி சொல்லிக் கொடுப்பதில்லை. அவை உணர்வை அழிக்கின்றன. ஏனெனில் நீ உணர்ந்தால் உன்னால் நினைப்பில் ஆழ முடியாதென்று அவைகளுக்குத் தெரியும். நீ அதிகமாக உணர உணர சக்தி இருதய மையத்திலேயே நின்று விடும், தலைக்கு போகாது. இருதயமையத்தை கை விட்டால்தான் அது தலைக்கு போகும். சக்தி எங்காவது போயே தீர வேண்டும். அது வெளியேறும் பாதை ஒன்றை கண்டு பிடிக்கும். அது இருதய மையத்தின் வழியாக போக முடியாவிடில் தலைக்கு போகும்.

அதனால் அன்பு மறுக்கப்படுகிறது, உணர்வு மறுக்கப்படுகிறது – தடை செய்யப்படுகிறது – உணர்வது ஒரு பாவமாகவே ஆகி விட்டது. ஒருவர் தர்க்கவாதியாக, பகுத்தறிவுவாதியாக இருக்கலாம், ஆனால் உணர்வுமயமாக இருக்கக் கூடாது. நீ உணர்வுமயமாக இருந்தால் மக்கள் உன்னை குழந்தைதனமாய் இருக்கிறாய் எனக் கூறி விடுவார்கள். ஒருவகையில் அவர்கள் கூறுவது உண்மைதான், ஏனெனில் குழந்தையால் மட்டுமே உணரமுடியும்.

வளர்ந்த, மனக்கட்டுப்பாடு செய்யப்பட்ட, படித்த, நாகரீகமடைந்த ஒரு மனிதன் உணர்வதை நிறுத்திவிடுகிறான். அவன் கிட்டத்தட்ட வறண்டு, இறந்த மரத்தைப் போல ஆகி விடுகிறான். அவனிடமிருந்து சாராம்சம் பெருகுவதில்லை. அதனால்தான் அவ்வளவு துயரம். தலைதான் துயரத்திற்கு காரணம்.

தலையால் கொண்டாட முடியாது, தலைமூலம் கொண்டாட்டம் எதுவும் சாத்தியமில்லை. அதால் கொண்டாட்டத்தை பற்றி நினைக்க முடியும் – அது அதைப்பற்றி, பற்றி, பற்றி என சிந்திக்க முடியும். ஆனால் அதனால் கொண்டாட முடியாது. கொண்டாட்டம் இதயத்தின் மூலமாகத்தான் நிகழும்.

முதலில் அன்பாயிரு. – பாதிப்பயணம் முடிந்தது. தலையிலிருந்து இதயத்துக்கு நகர்வது பின் சுலபமானதாகி விடும். இதயத்திலிருந்து நாபிக்கு செல்வது இன்னும் எளிதானதாகி விடும்.

நாபியில் நீ ஒரு இருப்பு, ஒரு உயிர் – உணர்வில்லை, சிந்தனையில்லை. நீ அசைவதில்லை. அது புயலின் மையம். மற்ற அனைத்தும் நகர்ந்து கொண்டிருக்கும், தலை அசைந்து கொண்டிருக்கும், இதயம் அலைபாய்ந்து கொண்டிருக்கும், உடல் ஆடிக் கொண்டிருக்கும். எல்லாமும் அசைவோடிருக்கும். எல்லாமும் தொடர்ந்த அசைவில் இருக்கும்.
உனது நாபிக்கமலம், இருப்பின் மையம் மட்டுமே அசைவற்றிருக்கும். அது சக்கரத்தின் அச்சாணி போன்றது.

For Madman only Ch. #10

இணைப்புணர்வின் கதை - ஓஷோவின் கதை 18

இந்த குறிப்பிட்ட வகையான சூழ்நிலைகள்தான் முக்தி நிலையை அடைய உதவும் என்று எதுவும் கிடையாது. உன்னுடைய தேடல், உனது ஆழ்ந்த ஏக்கம், அதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் உனது நிலை – இவை அனைத்தும் ஒருங்கிணைந்து உன்னைச் சுற்றி உருவாக்கும் ஒரு சக்தி நிலைதான் அது நிகழக்கூடிய சாத்தியக்கூறை உருவாக்கும்.

அதை நீ உருவாக்க முடியாது. ஒவ்வொரு சாதகனும் ஆரம்ப நிலையில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். இதில் மற்றவரை பார்த்து நீ எதையும் கற்றுக் கொள்ள முடியாது. அப்படித்தான் எல்லா மதங்களும் செய்து கொண்டிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட பிராத்தனை, ஒரு குறிப்பிட்ட விதமாக உட்காருவது, ஒரு குறிப்பிட்ட செயல், ஒரு குறிப்பிட்ட விதமாக சுவாசிப்பது என. ஆனால் எதுவும் உதவப் போவதில்லை.

ஒரு கதை இது எனக்கு எப்போதும் மிகவும் பிடிக்கும்.... ஒரு தீவில் உள்ள மூன்று பேர் மிகவும் சிறந்த புனிதர்கள் என மக்களிடம் பிரபலமடைந்து வந்தனர். இதை அறிந்த ரஷ்யாவின் ஆர்ச் பிஷப் மிகவும் ஆத்திரமடைந்தார். இது கிறிஸ்துவ மதத்துக்கு எதிரானது. மதங்களிலேயே கிறிஸ்துவ மதம்தான் மிகவும் முட்டாள்தனமானது. புனிதர் என்பது ஏதோ ஒரு பட்டம் போல, ஒரு படிப்பு தகுதி போல, அது சர்ச் அமைப்பினால் அங்கீகரிக்கப் பட வேண்டும் என்பர். சர்ச் அங்கீகரிக்கும்போதுதான் ஒருவர் புனிதர் ஆகிறார்.

தன்னிடம் அங்கீகாரம் பெறாமலேயே இந்த மூன்று பேரும் புனிதர்கள் என்று பெயர் பெறுவதை ஆர்ச் பிஷப்பால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. மிகவும் கோபமடைந்தார். ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களிடம் ஆசி பெறவும் காலை தொட்டு வணங்கவும் செல்வது அவருக்கு மிகவும் கோபமூட்டியது. ஒருநாள் அவர்கள் என்ன வகையான புனிதர்கள் என்று பார்ப்பதற்காக நேரில் போய் பார்ப்பது என முடிவு செய்தார்.

அவர் மோட்டார் படகில் சென்று அந்த தீவை அடைந்தார். அது ஒரு மிகச் சிறிய தீவு. இந்த மூவர் மட்டுமே அங்கு வசித்து வந்தனர். அது ஒரு காலை நேரம். இந்த மூவரும் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருந்தனர். அவர்கள் படிப்பறிவற்ற, நாகரீகமற்ற, சாதாரண மனிதர்கள் போல தோன்றினர்.

ஆர்ச் பிஷப் வரும் வழியில் ஆயிரக்கணக்கான மக்களை தன்பால் ஈர்த்த மூன்று பேரை எப்படி சந்திப்பது என்ற பதட்டத்தோடுதான் வந்தார். இப்போது இங்கு எந்த பிரச்னையும் இல்லை என நினைத்தார் – இவர்கள் முட்டாள்கள். அவர் அவர்களிடம் சென்றவுடன் அவர்கள் இவர் காலைத் தொட்டு வணங்கினார்கள். அவர் திருப்தியடைந்தார். நீங்கள் புனிதர்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா என அவர்களிடம் கேட்டார்.

அவர்கள், - நாங்கள் படிக்காத, பாமர மக்கள். எங்களால் எப்படி அவ்வளவு உயர்ந்த விஷயங்களை நினைத்துப்பார்க்க முடியும் – நாங்கள் அப்படி அல்ல. ஆனால் நாங்கள் என்ன செய்வது, மக்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். நாங்கள் அவர்களை தடுக்க முயற்சி செய்தோம், உங்களிடம்தான் போக வேண்டும் எனக் கூறினோம். ஆனால் அவர்கள் கேட்பதே இல்லை - என்றனர்

ஆர்ச் ஆணித்தரமான குரலில், உங்களது பிரார்த்தனை என்ன எனக் கேட்டார்.

மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ஒருவரையொருவர் மறுத்துக் கொண்டனர். ஒருவர் நீ சொல் என்றார். மற்றவர் நீ சொல் என்றார்.

ஆர்ச் பிஷப், யார் வேண்டுமானாலும் சொல்லலாம். அதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் சொல்லுங்கள் என்றார்.

அவர்கள் - உண்மையில் இது ஒரு பிரார்த்தனையே அல்ல. நாங்கள் அதை உருவாக்கிக் கொண்டோம். எங்களுக்கு அதைச் சொல்ல மிகவும் வெட்கமாக இருக்கிறது என்றனர்.

ஆர்ச்பிஷப் உண்மையிலேயே மிகவும் ஆத்திரமடைந்தார். நீங்களே பிரார்த்தனையை உருவாக்கிக் கொண்டீர்களா அது என்ன பிரார்த்தனை – என்றார்.

ஒருவர், நீங்கள் கேட்கிறீர்கள். அதனால் நாங்கள் சொல்லித்தான் தீர வேண்டும். ஆனால் எங்களுக்கு வெட்கமாக இருக்கிறது. ஏனெனில் எங்களது பிரார்த்தனை மிகவும் எளியது, சிறப்பானது அல்ல. “நீங்களும் மூவர், நாங்களும் மூவர் எங்களிடம் கருணை காட்டுங்கள்” என்பதே எங்களது பிரார்த்தனை. என்றார்.

ஆர்ச்பிஷப் கோபத்தில்கூட சிரித்துவிட்டார். இதுதான் உங்களது பிரார்த்தனையா, மிகவும் நன்றாக இருக்கிறது. என்றார்.

அந்த பாமர மக்கள் மூவரும், நாங்கள் கற்க தயாராக உள்ளோம். சரியான பிரார்த்தனையை, வழிபடும் முறையை நீங்கள் சொல்லிக் கொடுத்தால் நாங்கள் முயற்சி செய்கிறோம். ஆனால் அது பெரிதாக இருந்தால் நாங்கள் அதை மறந்து விடுவோம் அல்லது தவறு செய்து விடுவோம் அல்லது குழம்பி போய் விடுவோம். எங்களது பிரார்த்தனை மிகவும் சிறியதாக இருப்பதால் நாங்கள் அதை மறப்பதில்லை, அதில் தவறு எதுவும் செய்வதில்லை. என்றனர்.

ஆர்ச்பிஷப், ரஷ்யாவின் மிகப் பழமையான சர்ச்சின் சம்பிரதாயமான பிரார்த்தனை முழுவதையும் படித்தார். அது மிகப் பெரியது. இந்த பாமர மக்கள் மூவரும், இது மிக நீளமானதாக இருக்கிறது. தயவுசெய்து மறுபடியும் சொல்லுங்கள் என்றனர்.

மூன்று தடவை சொன்ன பின்னும் அவர்கள் தயவுசெய்து மறுபடியும் ஒருமுறை மட்டும் சொல்லுங்கள், அப்போது எங்களால் நினைவு கொள்ள முடியும் என்றனர். ஆர்ச் பிஷப் இவ்ரகள் முட்டாள்கள் என எண்ணி மிகவும் மகிழ்ந்தார். இவர்களுக்கு ஒன்றும் தெரியாது, சர்ச்சின் பிரார்த்தனையை கூட முழுதாக சொல்ல இவர்களால் முடியவில்லை என்பதை எடுத்துக் கூறி மக்களை என்னால் எளிதாக ஏற்றுக் கொள்ள செய்து திசை திருப்பி விட முடியும். அதில் எந்த பிரச்னையும் இல்லை என நினைத்தார்.

அவர்கள் ஆர்ச்பிஷப்பின் காலைத் தொட்டு வணங்கி நன்றி கூறினர். அவர் இனிமேல் வர வேண்டிய தேவையே இல்லை என்றும், அவர் கூறி அனுப்பினால் போதும், தாங்கள் வந்து அவரை சந்திப்பதாகவும் அவர்கள் கூறினர். அவர் எதற்கு சிரமப்பட வேண்டும், எப்போது அவர் சந்திக்க விரும்பினாலும் செய்தி சொல்லி அனுப்பினால் போதும், நாங்கள் சர்ச்சுக்கு வந்து சேருகிறோம் என்று கூறினர்.

சந்தோஷத்தோடும், திருப்தியோடும் ஆர்ச்பிஷப் விடை பெற்றார். அவர் ஏரியின் நடுவில் சென்று கொண்டிருக்கும் போது மூன்றுபேரும் தண்ணீரின் மேல் ஓடி வந்தபடி, நில்லுங்கள், நாங்கள் பிரார்த்தனையை மறந்துவிட்டோம். மறுபடியும் ஒருமுறை சொல்லுங்கள் என்று கேட்டனர்.

ஆர்ச் பிஷப் அவர்கள் தண்ணீரின் மேல் ஓடி வந்ததையும், அவர்கள் பேசும்போது தண்ணீரின் மேல் நின்று கொண்டு அவர்கள் பேசிக் கொண்டிருப்பதையும் பார்த்தார். அவருக்கு சிறிதளவாவது புத்திசாலித்தனம் இருந்திருக்க வேண்டும்.

அவர், என்னை மன்னித்துவிடுங்கள். உங்களுடைய பிரார்த்தனைதான் சரியானது. நீங்கள் உங்களது பிரார்த்தனையையே தொடர்ந்து செய்யுங்கள். உங்களது பிரார்த்தனை சென்றடைந்து விட்டது. எனது பிரார்த்தனை அடைய வில்லை. நீங்கள்தான் உண்மையான புனிதர்கள். உங்களை சர்ச் புனிதர்களாக அங்கீகரித்துள்ளதா இல்லையா என்பது இங்கு ஒரு விஷயமே அல்ல. யார் உண்மையிலேயே புனிதர்கள் இல்லையோ அவர்களுக்குத்தான் அங்கீகாரம் தேவைப்படும். உங்களது இருப்பே அதை உறுதி செய்கிறது. உங்களது வாழ்வில் குறுக்கிட்டதற்காக என்னை மன்னித்து விடுங்கள். என்றார்.

இது லியோ டால்ஸ்டாயின் கதை. இது சாத்தியம்தான். இருதயசுத்தியோடு மனத் தெளிவோடு அமைதியாக செய்யும்போது நீங்களும் மூவர், நாங்களும் மூவர் எங்களிடம் கருணை காட்டுங்கள் என்று கூறுவதுகூட பிரார்த்தனையாக மாறும். அந்த மிகச் சிறந்த எதிர்பாராதது நிகழும். ஆனால் நீ அதை காப்பியடிக்க முடியாது. அதைப் போலவே செய்து பார்க்க முடியாது. அதுதான் பிரச்னை.

Spurce: FROM BONDAGE TO FREEDOM CHAP #32 .

No comments: