Thursday, October 28, 2010

மலர் 3 இணைய இதழ் 1 11 ஆகஸ்ட் 2010

ஓஷோ சாஸ்வதம் செய்தி

அவினாசி 2 கோவை NH – 47-ல், கந்தம்பாளையம் சாலையில் உள்ள ஓஷோ சாஸ்வதம் மையத்திற்கு சென்ற மாதம் கிருஷ்ணகிரியிலிருந்தும், மேட்டுப்பாளையத்திலிருந்தும், மேட்டூரிலிருந்தும், வந்து தங்கி தியானம் கற்றுச் சென்ற அன்பர்கள் பலரும், பலநாள் தியானமுகாம் நடத்தமாறு கோரினர். அதற்கிணங்கி செப்டம்பர் மாதத்தில் பலநாள் முகாம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. விரும்பும் அன்பர்கள் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளவும். தனிநபர் அகநலபகுத்தாய்வும் நடைபெறுகிறது.

மற்ற தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும். தங்கி தியானம் செய்யலாம்.

மெளனத்தில் விளைந்த முத்துகள் – ஓஷோ

1.
நீங்கள் உண்மையிலேயே உங்களுக்குச் சத்திய தரிசனம் நிகழ விரும்பினால், தனி மனிதனாய் இருங்கள். தனிமனிதனாய் இருப்பதற்குத் தேவைப்படும் எல்லா ஆபத்துகளையும் எதிர்கொள்ளுங்கள். அதற்கான அறைகூவல்களை ஏற்றுக்கொள்ளுங்கள். அதன்மூலம் அவை உங்களைக் கூர்மையடையச் செய்யும். உங்களுக்கு நுண்ணறிவையும்,ஜொலிப்பையும் கொடுக்கும்.

2.
சமரசம் செய்துகொண்ட வாழ்வை வாழ்வது இறப்பைவிட மோசமானது. சத்தியமான வாழ்வை வாழ்வது, அது ஒரு கண நேரமேயானாலும்கூட, பொய்யில் நிரந்தரமாக வாழ்வதை விட மிகமிக மதிப்பு மிக்கது. பொய்யில் வாழ்வதைவிடச் சத்தியத்திற்காக இறப்பது மிகவும் மதிப்பு மிக்கது.

3.
வாழ்வு ஒன்றையொன்று சார்ந்தது. ஒருவரும் தனித்தவரல்ல. ஒரு கண நேரம் கூட உங்களால் தனியாக இருக்கமுடியாது. உங்களுக்கு இந்த முழு பிரபஞ்ச இருப்பின் உதவியும் வேண்டும். ஒவ்வொரு கணமும் அதை நீங்கள் சுவாசிக்கிறீர்கள். இது ஓர் உறவல்ல. இது சுத்தமான ஒன்றோடொன்று சார்ந்த நிலை.

தலையங்கம்

அன்பு நண்பர்களே,

கூட்ட மனப்பான்மை பற்றியும் அதன் பாதிப்பு பற்றியும் தனிமனிதனாதல் பற்றியும் எழுதுங்கள், அது என்னைப் போன்று பலருக்கும் உதவியாய் இருக்கும் என்று ஒரு அன்பர் அவரது பிரச்னையை விளக்கும்போது கூறினார்.

அது உண்மைதான். ஓஷோவிடம் வருவதற்கு முதலில் ஒரு தனிமனிதனாய் இருக்க வேண்டும் என்று நான் எப்போதுமே கூறுவேன். ஆன்மீக வளர்ச்சிக்கு இது மிக மிக அவசியம். மேலும் இதுதான் இந்தியர்களிடம் இல்லாத, இன்னும் வளர்ச்சியடைய வேண்டிய ஒரு பண்பாக இருக்கிறது.

நாம் இன்னும் ஒரு கூட்டமாகத்தான், அதாவது கூட்டத்தில் ஒருவராகத்தான், கூட்டத்தின் பகுதியாகத்தான் இருக்கிறோம். இதை நான் பூனாவில் இருந்தபோது அங்கு வரும் நண்பர்கள் அனைவரிடமும் சுட்டிக்காட்டுவேன். வருபவர்கள் தங்களது ஊரைப்பற்றி சிறப்பாகப் பேசுவார்கள். அங்குள்ள சிறப்பைப் பற்றி பேசுவதில் தவறில்லை. ஆனால் நான் அவர்கள் ஊரைக் குறை சொன்னால் அவர்கள் முகம் வாடிவிடும். ஒரு சங்கடம் வரும். இது தவறு. இப்படி நமது ஊரோடு ஒரு உணர்ச்சிப் பிணைப்பு நமக்குள் இருக்கிறது. நாம் ஊரின் ஒரு பகுதியாக நம்மை உணர்ந்து கொண்டிருக்கிறோம்.

என்னைக் கேட்பார்கள், நீங்கள் எந்த ஊர் என்று – நான் திருப்பூர் என்றால், அதுதான் சொந்த ஊரா என்று கேட்பார்கள். எனக்குச் சொந்தமான ஊர் எதுவும் இல்லை, அது நான் இருக்குமிடத்தின் பெயர் மட்டுமே என்று சொல்வேன். ஊரில் என்ன இருக்கிறது, இது நம் அறிவுக்குப் புரியலாம். ஆனால் நாம் உணர்ச்சி பூர்வமாக ஒரு பிணைப்பு கொண்டிருக்கிறோம். இப்படி நமது ஊரோடு மட்டுமல்ல, நமது நாடு, நமது மொழி, ஏன் நமது பூமி தொடங்கி நமது ஊர், நமது வீதி, நான் படித்த பள்ளிக்கூடம், எனது இனம், எனது ஜாதி, எனது மதம், பிறகு எனது குடும்பம், என் சுற்றத்தார் என்று எவ்வளவாய் நாம் வாழ்கிறோம் என்று பாருங்கள். இந்த உணர்ச்சிப் பிடிப்புதான் கூட்ட மனப்பான்மை.

கூட்டம் கூட்டமாய் விலங்குகள் வாழ்கின்றன. தனது இடம், ஜாதி, சொந்தம் என்று கூட்ட உணர்வில்தான் அவை இருக்கின்றன. இந்த கூட்ட மனப்பான்மை நம்மிடமும் இருக்கிறது. இதன் அடிப்படை பாதுகாப்பு. இந்த சமூகம்தான் நமக்கு பாதுகாப்பு என்ற உணர்வு. நாம் எந்த சமூகக் கூட்டத்தில் பிறக்கிறோமோ அதன் அங்கமாக ஆகிப் போகிறோம். இது நமது உள்ளே அடி ஆழத்தில் குழந்தை பருவத்திலேயே பதிந்து போய் விடுகிறது. வளர வளர நாமும் நமது சமூகத்தைப் பார்த்து அவர்களைப் போலவே நமது சமூக கூட்டத்தில் மேலும் மேலும் அடையாளங்களை, பிணைப்பை வளர்த்துக் கொள்கிறோம். இதனால் நமக்குள் ஏற்படும் உளமனப்பான்மை, மனப்பாங்கு, பார்வை, அணுகுமுறைதான் கூட்ட மனப்பான்மை.

இதன்பின் நமது வாழ்வின் போராட்டம் முழுவதுமே நமது கூட்டத்தால் மதிக்கப்படும், போற்றப்படும், பாராட்டப்படும், அங்கீகரிக்கப்படும் ஒருவனாக ஆவதுதான். உங்களது போராட்டங்களை, முயற்சிகளை, ஈடுபாடுகளை, இலக்குகளை லட்சியங்களை, செயல்பாடுகளை கூர்ந்து பாருங்கள். அனைத்தும் எதை நோக்கி எதன் விளைவு கூட்ட மனப்பான்மையின் விளைவு, கூட்டத்தின் அங்கீகாரம் தேடல்.

ஓஷோவிடம் அவரது பேச்சால், பேச்சைப் படிப்பதால் ஈர்க்கப்பட்டு வருபவர்களுக்கு முதலில் பிடிபடாமல் போவது இதுதான். அவர்களுக்கு ஓஷோ சொல்வதெல்லாம் பிடிக்கிறது. தான் இன்னும் உயர, வளர, ஓஷோ சொல்வதெல்லாம் சரியாகவே படுகிறது. ஆனால் வந்து பார்த்தால் ஓஷோவின் படி வாழ்பவர்களுடன் சேர்ந்து இருக்க முடிவதில்லை, அவரது தியானம் நடக்கும் இடங்களில் அவர்களால் பொருந்த முடிவதில்லை. ஓஷோவின் பேச்சு ஈர்த்த அளவு அவரது வாழ்க்கைமுறை ஈர்ப்பதில்லை, மாறாக பயமாகத் தெரிகிறது, தவறாகத் தெரிகிறது. மேலும் ஓஷோ தவிர மற்ற எல்லா சாமியார் கூட்டம் நடத்தும் ஆசிரமங்களுக்கும் அவர்கள் செல்லும்போது மிக நன்றாக உணர்கிறார்கள். பொருத்தமாக இருக்கிறது. சரியாகப் படுகிறது. அந்த சாமியார்கள் பேச்சு ஓஷோ அளவு உண்மையில்லாமல், தெளிவும் ஆழமும் இல்லாமல் இருப்பது அவர்களுக்குத் தெரிகிறது. ஆனால் அவர்களது வாழ்க்கை முறை பிடித்திருக்கிறது.

ஏகப்பட்ட நண்பர்கள் இப்படி இருக்கிறார்கள். படிப்பது ஓஷோ. எண்ணங்களாலும், கருத்தாலும், ஓஷோவால் ஈர்க்கப்படுகிறார்கள். அவரையே படிக்கிறார்கள், அவரது பேச்சையே கேட்கிறார்கள். அவரையே மேற்கோள் காட்டிப் பேசுகிறார்கள். ஆனால் போவது ஏதோ ஒரு ஆசிரமத்துக்கு, ஏதோ ஒரு கோவிலுக்கு, ஏதோ ஒரு சர்ச்சுக்கு. இது ஏன், கூட்ட மனப்பான்மைதான் காரணம். எல்லா கோயில்களும் ஆசிரமங்களும் பேசுவது எதுவாக இருந்த போதிலும் நடைமுறையில் உன் கூட்டமனப்பான்மைக்கு எதிரான வாழ்வியலை கொண்டதாக இருப்பதில்லை. உனது கூட்ட மனப்பான்மை ஏற்றுக்கொள்ளப் படுகிறது. கூட்டத்தில் அங்கீகாரம் எனும் உனது இலக்கு முயற்சிக்கு உதவி செய்வதாகவே அவர்களது நடைமுறை இருக்கிறது. அங்கும் உனக்கு ஒரு அங்கீகாரம். எங்கள் கூட்டத்தில் இணைந்தவன், சிறப்பானவன் என்ற வரவேற்பு. மேலும் மேலும் அந்த கூட்டத்தில் இணைந்தவனாய் செயல்பட ஊக்கம். கூட்டத்திற்கு ஆள் சேர்க்கும் பொறுப்பு, இப்படி உன் கூட்ட மனப்பான்மை வலுப்படுத்தவே படுகிறது. இது வேறு கூட்டமாக இருக்கலாம். ஆனால் உனது கூட்ட மனப்பான்மை உடைக்கப்படுவதில்லை, சிதறடிக்கப்படுவதில்லை. தனிமனிதனாய் வாழும் பொறுப்பு உனக்கு கொடுக்கப்படுவதில்லை.

ஆனால் ஓஷோ பேச்சு உங்கள் கூட்டமனப்பான்மையை பாதிப்பதில்லை. ஏனெனில் கூட்ட மனப்பான்மைப்படியே நீங்கள் அவரைப் புரிந்து கொள்கிறீர்கள். பாதித்தாலும் அது வெறும் எண்ணங்களை பாதிப்பதாகவே உள்ளது. ஆனால் அவரது வாழ்வியலைப் பார்க்கும்போது உங்களால் ஏற்க முடிவதில்லை. ஏனெனில் ஓஷோ கூட்ட மனப்பான்மையை உடைத்துவிட்டு தனிமனிதனாய் வாழ சொல்கிறார். அப்படி தனிமனிதனாய் வாழ ஆரம்பிக்கும்பொழுதுதான் நமக்கு உள்ளே உள்ள பிரச்னைகளைப் பார்க்க முடியும். கூட்ட மனப்பான்மையின் வாழ்க்கையில் பிரச்சனை எப்போதும் வெளியேதான். வெளியேதான் ஏதாவது செய்ய வேண்டும். ஆனால் தனிமனிதப் பண்போடு வாழ ஆரம்பிக்கையில் பொறுப்பு நம்மிடம் வருகிறது. நமது பங்களிப்பை நாம் பார்க்க ஆரம்பிக்கிறோம். நமது நோயை, நமது தன்னுணர்வற்ற நிலையை உணர ஆரம்பிக்கிறோம். இங்கிருந்துதான் ஆன்மீக வளர்ச்சி சாத்தியம்.

அதற்காக ஓஷோ கூட்டத்திற்கு, சமூகத்திற்கு எதிராக இருக்கச் சொல்வதில்லை. மாறாக சமூகத்தைப் பயன்படுத்திக்கொள். கூட்டமாக வாழ்வதன் வசதிகளை பயன்படுத்து. ஆனால் உனக்குள் தனிமனிதனாய் இரு. உள்ளே கூட்ட மனப்பான்மையுடன் இருக்காதே. உள்ளே ஒரு கூட்டமாய், ஒரு கும்பலாய், பலராய் இருந்தால் ஆன்மீகவளர்ச்சி சாத்தியமில்லை. நாம் சேர்ந்து கூட்டமாய் இருப்பது நமது நன்மைக்கே, நமது வளர்ச்சிக்கே. அது ஒரு ஏற்பாடு. ஆனால் அதை மறந்து அதன் பாகமாய் நாம் ஆகிவிட்டால் அப்போது நாமே அங்கு இல்லாமல் போய்விடுகிறோம். அப்போது அங்கு வளர்ச்சிக்கு என்ன இருக்கிறது.

இங்குதான் ஓஷோ கம்யூனிஸத்தைக் கண்டிக்கிறார். பொதுவுடமை நல்லதுதான். ஆனால் தனிமனிதனை அழிக்கும் பொதுவுடைமை நல்லதல்ல. தனிமனிதனை வளர்க்கும் பொதுவுடைமையை தான் நான் கூறுகிறேன் என்கிறார். தனிமனிதன் என்பவன் இல்லை, வெறும் சமூகமே இருக்கிறது என்பது தவறு. தனிமனிதன்தான் உண்மையில் இருப்பவன், உயிரோடு இருப்பவன். சமூகம் என்பது வெறும் ஒரு ஏற்பாடு. தனிமனிதர்களாகிய நாம் கூடி திட்டமிட்டுக் செய்துகொள்ளும் ஒரு நடைமுறை ஏற்பாடு, அது நம் வளர்ச்சிக்கு, நம் வசதிக்குத்தான். ஆனால் மாறாக இன்று மனிதன் தன்னை இழந்து கூட்ட மனப்பான்மைக்கு அடிமையாய் வாழ்கிறான்.

இதற்கு வறுமையும், பயமும் ஒரு காரணம்தான். அதனால்தான் இந்தியாவில் இது அதிகமிருக்கிறது. செல்வச் செழிப்படைந்த நாடுகளில் குறைகிறது. செல்வசெழிப்பில் உன் பயம் போகிறது. அப்போது கூட்ட மனப்பான்மையை உதறித்தள்ளிவிட்டு தனிமனிதனாய் வாழ்ந்து பார்க்கும் தைரியம் வர வாய்ப்பு ஏற்படுகிறது.

ஆனால் இந்தியாவில் பணமுள்ளவர்களும் தன்னைச் சுற்றி பணமில்லாத ஏராளமானபேரைப் பார்த்து பயம் கொள்வதால், பணத்தை இறுக்கிப் பிடித்துக் கொள்கின்றனர். வாழ்ந்து பார்ப்பதில் செலவாகி நாமும் மற்றவர்கள் போல ஆகிவிடுவோமோ என்ற பயம் வந்துவிடுகிறது. அதற்கு பதிலாக கூட்டத்தில் கிடைக்கும் போலி மரியாதை என்ற போதையில் வாழ்வதையே தேர்ந்தெடுக்கின்றனர்.

ஓஷோ வாழ்முறையில் முதலில் நீ தனிமனிதன். தனிமனிதனாய்தான் பிறக்கிறாய், இறக்கப்போகிறாய், வலியும் மகிழ்ச்சியும் பசியும் தனியாகத்தான் உனக்குள் வருகிறது. ஆகவே இந்தப் பிரச்னைகளை உள்ளேதான், தனியாகத்தான் சந்திக்க வேண்டும். அதற்குரிய சூழலை ஏற்படுத்த, உதவிகரமான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள ஒருவருக்கொருவர் உதவும் ஒரு கூட்டம் நல்லதுதான். ஆனால் அது தனிமனிதர்கள், தனிமனிதர்களாய் இருக்க சேர்ந்திருக்கும் கூட்டம். சமூகத்திலிருப்பதைப் போல கூட்ட மனப்பான்மையுடன், கூட்டத்திற்காக, கூட்டத்தின் அங்கமாய் இருக்கும் கூட்டமல்ல இது.

ஆகவே ஓஷோ தியானத்தில் ஆழமாகச் செல்பவர்கள், ஓஷோ வழி வாழ விரும்புபவர்களுக்கு மிகப் பெரும் குழப்பம் சமூகத்தில் வாழும்போது ஏற்படுகிறது. ஏனெனில் தியானம் செய்ய, செய்ய ஓஷோ வழியில் வாழ முற்பட, முற்பட அவர்களின் கூட்ட மனப்பான்மை உடைகிறது. தனிமனிதனாய் வாழ முற்படுகிறார்கள். அப்படி முற்படுகையில் சமூகத்திற்கு, அவர்களது சொந்தங்களுக்கு, நண்பர்களுக்கு, ஊருக்கு, கோபம் வருகிறது. அவர்களை அறியாமலேயே கோபம் அல்லது பொறாமை வருகிறது. ஏனெனில் ஒருவன் தனிமனிதனாய் மாறி வாழ்வது அவர்களை இடித்துக் காட்டுகிறது. சமூகத்தில் சலசலப்பை, சங்கடத்தை ஏற்படுத்துகிறது. சமூகக் கட்டமைப்பை, கூட்ட மனப்பான்மையை அதனால் குளிர்காயும் சுயநலவாதிகளை பாதிக்கிறது. இது ஒருபுறம்.

தான் தனிமனிதனாய் உணர்வு பெற்று வாழும் ஒரு வாழ்க்கை, தான் கூட்ட மனப்பான்மையுடன் வாழும் ஒரு வாழ்க்கை என்று ஓஷோ அன்பர்கள் இரண்டுபட்டு இருப்பது மறுபுறம். இப்படி ஆற்றில் ஒருகால், சேற்றில் ஒருகால் என்பதுபோல, கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பது போல, ஓஷோ வழி பிடிக்கிறது, ஆனால் சமூகத்தை விடுவது மிரட்டுகிறது என்ற நிலை ஓஷோ அன்பர்களுக்கு ஏற்படுகிறது. இந்த நிலையில் சமூகம் கோபப்பட்டு மிரட்டுகையில் ஏராளமானோர் பாதுகாப்புக்கு பயந்து சமூகத்திடமே தஞ்சம் கொண்டுவிடுகின்றனர். ஓஷோவை மெதுவாக விலக்கி, ஆர்வக்கோளாறை அடக்கி, பெரும்பாலோர் பேச ஒரு நல்ல விஷயமாக மட்டும் ஓஷோவை ஆக்கிக் கொள்கின்றனர். நானும் ஒரு சிறிது காலம் ஓஷோ வழியை முயன்றேன் என்ற பெருமை மட்டும் வேறு சேர்ந்து கொள்ளும்.

இதற்கு மாற்றாகத்தான் ஓஷோ மிகச்சிறு குழுக்களாக, ஒரு 10 நபர்களுக்கு உட்பட்ட குழுக்களாக, சேர்ந்து சிறு சிறு கம்யூன்களாக வாழுங்கள் என்று அறிவுறுத்தினார்.

ஏனெனில் பெரிய கம்யூன்கள் சமூகத்தின் கோபத்தையும், பொறாமையையும் சந்தித்து சமூகத்தால் பயனடையும் அரசியல்வாதிகளால் அழிக்கப்பட்டுவிடும். இது ஓஷோ அமெரிக்காவில் அனுபவித்தது.

அதேசமயம் தனிநபராய் இருந்தாலும் சமூகத்தை சந்திப்பது மிகவும் சிரமம். வசதிகள் எல்லாவற்றையும் இழந்து வாட வேண்டும்.

ஆகவேதான் சிறு கம்யூன் ஏற்பாடே இன்றைய நிலையில் உகந்தது என்கிறார் ஓஷோ.

நண்பர்களே, ஆன்மீக வளர்ச்சிக்கு, உருகடந்த உணர்வு நிலை அறிதலுக்கு, ஞானத்திற்கு செல்லும் வழி நடக்க விரும்பினால் வாழ்க்கை முறை மாறுதலுக்கு, மாற்று ஏற்பாட்டிற்கு உங்களை தயார் செய்து கொள்ளுங்கள். கூட்ட மனப்பான்மையினால் உள்ளே எழும் பயங்களை, தயக்கங்களை, சந்தேக உணர்வுகளை, பார்த்து, அவைகளை தன்னுணர்வோடு சந்தியுங்கள். அப்போது அவை போய்விடும். தன்னுணர்வின் முன் உண்மையான உணர்வுகள் மட்டுமே, தனிமனித உணர்வுகள் மட்டுமே நிலைத்திருக்கும். கூட்ட மனப்பான்மை உணர்வுகள் தானாகவே காணாமல் போய்விடும்.

வாருங்கள். வழி நடப்போம். வழி நடப்பதே புனிதப்பயணம். சேருமிடம் ஏதுமில்லை.


அன்பு,
சித்.

கவிதைப் பகுதி

எது வேண்டும் உனக்கு

நண்பா!

ஆயிரம் முறை அன்பில் விழுந்தேன்,
ஆயிரம் முறை அதை விலக்கி எழுந்தேன்.

ஆயிரம் முறை நெக்குருகி நின்றேன்,
ஆயிரம் முறை தப்பித்து ஓடினேன்.

ஆயிரம் முறை கருணையால் நனைந்தேன்,
ஆயிரம் முறை முகம் திருப்பி ஒதுங்கினேன்.

ஆயிரம் முறை என் இதயம் திறந்தது,
ஆயிரம் முறை கல்லாகி மூடிக்கொண்டேன்.

ஆனால்.......
ஆயிரம் முறை ஆணவம் பிறந்தபோது,
ஆயிரம் முறையும் அணைத்து தலைக்கனம் கொண்டேன்.

என் பிரிய நண்பா!
அதனால் விளைந்தது என்ன தெரியுமா

எல்லாம் தெரிந்தவனாய் கண்மூடிப் போனேன்,
எதுவும் முடியுமென்ற பித்துப் பிடித்தது,
கழுத்து வரை இழுத்துப் போட்டு சிக்கலில் சிக்கிக் கொண்டேன்,
காலை முதல் மாலை வரை கணக்குப் போட்டு வாழ வேண்டியதாயிற்று!

நல்லவேளை,
எங்கோ அடியில்......... இதயத்தின் ஆழத்தில்.......
பொங்கு பொங்கென்று உயிர்த்திருந்த உயிரின்குரலால்......

ஒரே தாவாய் திசை மாற்றிக்கொண்டேன்,
தலையிலிருந்து இதயத்தை நோக்கி பயணப்பட்டேன்.

ஆஹா!
எத்தனை நிறங்கள்!
எத்தனை விதங்கள்!
எத்தனை மணங்கள்!

எல்லையில்லா விளையாட்டு
காலமில்லா தொடர்நிகழ்வு!

இந்த இயற்கையின் கூத்தில்.......
எனக்கும் ஒரு பங்கு........
என்ற ஒரு ஆனந்தம்,
ரசிப்பு, அழகு, குதூகலம்,
ஏற்பு, படைப்பு, ஈடுபாடு,
இத்தனையும் கிடைத்தது!

ஆகவே நண்பா!
தலையின் ஆணவம் தருவது போராட்டம்,
இதயத்தின் வாழ்வில் பிறப்பது விளையாட்டு!
எது வேண்டும் உனக்கு?

ஓஷோ வீடியோ

1. Osho : The Fear of the unknown

2. Osho : Meditation a dancing silence

3. Osho : Make your belly your best friend

மூன்று தியான யுக்திகள்

தியான யுக்தி - 1

ஹராவில் செய்யும் இரவு நேர யுக்தி

ஓஷோ கூறுகிறார், “தொப்புளுக்கு இரண்டு இன்ச் கீழே உள்ள மையமான ஹரா எனப்படும் மையத்தில் சக்தியை குவி. இந்த மையம்தான் ஒருவர் வாழ்வில் நுழைவதற்கும் இறக்கும்போது வாழ்வை விட்டு போவதற்க்குமான மையம். அதனால் இந்த மையம்தான் உடலுக்கும் ஆன்மாவுக்குமான தொடர்பு மையம். இடமும் வலமுமாக நீ அலை பாய்ந்தால் அப்போது உனக்கு உன் மையம் எங்கு இருக்கிறதென்று தெரியாது என்று அர்த்தம். நீ உன் மையத்துடன் தொடர்பில் இல்லை என்று அர்த்தம். ஆகவே உன் மையத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்.”

எப்போது – இரவில் நீ தூங்கப் போகும் போது மற்றும் காலையில் எழுந்தவுடனேயே செய்யும் முதல் செயல்
நேரம் – 10 -15 நிமிடங்கள்.

முதல் படி – ஹராவை கண்டு பிடிப்பது
படுக்கையில் படுத்துக் கொண்டு உனது கரங்களை தொப்புளுக்கு இரண்டு இன்ச் கீழே வைத்து சிறிது அழுத்தம் கொடுக்கவும்.

இரண்டாவது படி – ஆழமான சுவாசம்
சுவாசிக்க ஆரம்பி, ஆழமாக சுவாசிக்கவும். உனது மையம் உனது சுவாசத்துடன் மேலும் கீழும் போய் வருவதை நீ உணரலாம். உனது முழு சக்தியையும் நீ அங்கே உணரு, நீ சுருங்கி சுருங்கி சுருங்கி அந்த சிறு மையமாக மட்டுமாக ஆவது போல உனது சக்தியை நீ அங்கே குவி.

மூன்றாவது படி – நீ தூங்கும் போது அங்கேயே மையம் கொள்.
இப்படி செய்துகொண்டிருக்கும் போதே தூங்கி விடு – அது உனக்கு உதவும். இரவு முழுவதும் அங்கேயே மையம் கொண்டிருப்பது தொடரும். தன்னுணர்வற்ற நிலை திரும்ப திரும்ப வந்தாலும் மையத்தில் நீ இருப்பது தொடரும். அதனால் முழு இரவும் உன்னை அறியாமலேயே பல வழிகளிலும் நீ மையத்துடன் ஆழ்ந்த தொடர்பு கொள்வாய்.

நான்காவது படி – ஹராவுடன் மறுபடி தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளல்
காலையில் தூக்கம் கலைந்ததாக நீ உணர்ந்தவுடன் கண்களை திறந்து விடாதே. மறுபடி உனது கரங்களை அங்கே வைத்து, ஒரு சிறிது அழுத்தம் கொடுத்து, சுவாசிக்க ஆரம்பி. மறுபடி ஹராவை உணர்ந்து பார். இதை 10 அல்லது 15 நிமிடங்களுக்கு செய். பின் எழுந்திரு.
இதை ஒவ்வொரு நாள் இரவும் காலையிலும் செய். மூன்று மாதங்களுக்குள் நீ மையப்பட்டு விட்டதை உணர்வாய்.

ஓஷோ கூறுகிறார், “மையம் கொள்ளுதல் ஒருவருக்கு மிகவும் முக்கியமானதாகும், இல்லாவிடில் அவர் துண்டாக உணர்வார். ஒன்றாக இருப்பதாக உணர மாட்டார். அவர் துண்டாடப்பட்ட புதிராக இருப்பார் – துண்டுகளாக இருப்பார், இணைந்து முழுமையானதாக, ஒன்று சேர்ந்த உருவமாக இருக்கமாட்டார். அது ஒரு மோசமான இணைப்பாக இருக்கும், மையமின்றி இருக்கும் மனிதனால் அன்பு செய்ய முடியாது, அவன் இழுத்துக் கொண்டு அலையலாம். மையமின்றி இருக்கும்போது நீ உன் வாழ்வில் தினசரி செயல்களை செய்யலாம், ஆனால் உன்னால் உருவாக்குபவனாக இருக்க முடியாது. நீ குறைந்த பட்சம் மட்டுமே வாழ முடியும். அதிக பட்சம் உனக்கு சாத்தியமே அல்லை. மையத்தின் மூலம் மட்டுமே ஒருவர் அதிக பட்சமாக, சிகரத்தில், உச்ச கட்டத்தில், முடிந்த வரை முழுமையாக வாழ முடியும். அதுதான் உண்மையான வாழ்க்கை, அதுதான் வாழ்வது.

A Rose is a Rose is a Rose

தியான யுக்தி - 2

உனது பாதங்கள் மூலமாக சுவாசி

“பாலுணர்வு மையத்தை தாண்டி கீழே செல்ல மக்கள் பயப்படுகிறார்கள். உண்மையில் பலர் தங்களது தலையில் வாழ்கிறார்கள், ஒரு சிறிது தைரியமுள்ள மக்கள் தங்களது உடலில் வாழ்கிறார்கள். அதிக பட்சமாக மக்கள் நாபிக்கமலம் வரை செல்கிறார்கள், அதை தாண்டி செல்வதில்லை, அதனால் உடலின் பாதி செயலற்றதாகி விடுகிறது, அதன் விளைவாக வாழ்வின் பாதி செயலற்றதாகிறது. பின் பல விஷயங்கள் சாத்தியமற்றதாகி விடுகிறது, ஏனெனில் உடலின் கீழ் பாகம் வேர் போன்றது. அவைதான் வேர். கால்கள்தான் வேர்கள், அவை உன்னை பூமியுடன் இணைக்கின்றன. கால்களை உணராத மக்கள் பூமியுடன் தொடர்பின்றி ஆவிகளைப் போல அலைகின்றனர். ஒருவர் பாதத்துக்கு திரும்ப வந்தாக வேண்டும்.

உனது சுவாசத்தின் எல்லைதான் உனது இருப்பின் எல்லை என்பது கிட்டதட்ட உண்மைதான். உனது எல்லை கால்கள் வரை அதிகரித்து விடும்போது உனது சுவாசமும் கால் வரை செல்கிறது. உடல் ரீதியாக அல்ல, ஆனால் மிக ஆழமான மனோரீதியாக செல்கிறது. பின் உனது முழு உடலையும் சொந்தம் கொண்டாடலாம், முதன் முறையாக நீ முழுமையானவனாக, ஒன்றாக, இணைந்திருப்பவனாக இருப்பாய்.

செய்முறை

பாதங்களை மேலும் மேலும் அதிகமாக உணர்ந்து பார், சில நேரங்களில் செருப்பின்றி பூமியின் மீது நின்று அதன் குளிர்ச்சியை, மிருது தன்மையை, கதகதப்பை உணர்ந்து பார். அந்த நேரத்தில் பூமி கொடுப்பது எதுவோ அதை உணர்ந்து அது உன் வழியே கடந்து செல்ல அனுமதி. பூமியுடன் தொடர்பு கொள்.

பூமியுடன் தொடர்பு கொண்டால், நீ வாழ்வுடன் தொடர்பு கொள்கிறாய். பூமியுடன் தொடர்பு கொண்டால் நீ உனது உடலுடன் தொடர்பு கொள்கிறாய், நீ பூமியுடன் தொடர்பு கொண்டால் நீ மையம் கொண்டவனாகவும் மிகுந்த உணர்வுள்ளவனாகவும் மாறிப் போவாய். அதுதான் தேவையானது.

A ROSE IS A ROSE IS A ROSE

தியான யுக்தி - 3

பாதத்திலிருந்து சிரி

எப்போது – இரவின் கடைசி செயலாகவும் காலையின் முதல் செயலாகவும்

முதல் படி – உட்கார்ந்து கொண்டு ஆரம்பி......
அறையின் நடுவில், கண்களை மூடிக் கொண்டு தரையில் உட்கார்.

இரண்டாவது படி – பிறகு...........
உனது பாதத்திலிருந்து சிரிப்பலைகள் கிளம்பி வருவதாக உணரு. அவை மிகவும் மெலிதானவை. பின் அவை உனது வயிற்றை அடையும் போது அவை தெரிய வரும், உனது வயிறு குலுங்கி அதிரும். இப்போது அந்த சிரிப்பை உனது இதயத்துக்கு கொண்டு வா. இதயம் நிரம்பி வழியும். பின் அதை உனது தொண்டைக்கும் பின் உதடுகளுக்கும் கொண்டு வா.
சிரிப்பு உனது பாதத்திலிருந்து ஆரம்பிக்க பட வேண்டும், பின் மேலெழ வேண்டும். சிரிப்பினால் உனது முழு உடலும் அதிர அனுமதி. ஆரம்பத்தில் நீ அதை ஒரு சிறிது மிகைப்படுத்தினால் கூட பரவாயில்லை, அது உதவும்.

THE GREAT NOTHING

கூட்டத்தின் பலம் – ஓஷோவின் கதை 25

உனது மனதின் உள்ள விஷயங்கள் அனைத்தும் கட்டுதிட்டத்தினாலும் திட்டமிடுதலாலும் உருவாக்கப்பட்டவைதான். சமுதாயம் இதைத்தான் செய்கிறது. நாம் கடந்த காலம் முழுவதும் இது போன்ற அசிங்கமான வகையில்தான் வாழ்ந்து வந்திருக்கிறோம்.

அங்கு அப்படி எதுவும் இல்லாத போதும் மற்றவர்களால் அது உருவாக்கப்படுகிறது என்ற கருத்தை எனது பேராசிரியர்களில் ஒருவர் ஏற்றுக் கொள்ள வில்லை. நான் இதை நிருபிக்கிறேன் என்று நான் கூறினேன்.. அவருக்கு என்னை மிகவும் பிடிக்கும், அவரது மனைவியும் என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார். நான் அவரது மனைவியிடம் சென்று, நாளை காலை பேராசிரியர் எழுந்தவுடன், நீங்கள் அதிர்ச்சியடைந்தது போல காட்டிக் கொண்டு அவரிடம் சென்று, என்னாயிற்று உங்களுக்கு? இரவு படுக்கைக்கு செல்லும்போது நன்றாகத்தானே இருந்தீர்கள்! இப்போது உங்களது முகம் வெளுத்தாற்ப்போல இருக்கிறதே, உடம்பு சரியில்லையா உங்களுக்கு? எனக் கேட்க வேண்டும் எனக் கூறினேன்.

அடுத்த நாள் காலை பேராசிரியர் இதை உடனே மறுத்து விட்டார். அவர் “என்ன உளருகிறாய்? நான் நன்றாகத்தான் இருக்கிறேன்”. என்று கூறி விட்டார்.

நான் அடுத்ததாக அவரது தோட்டக்காரரிடம், “அவர் தோட்டத்துக்கு வந்தவுடன் நீங்கள், என்னவாயிற்று? கடவுளே! என்ன நிகழ்ந்தது? உங்களால் நடக்க முடிய வில்லை, நீங்கள் நடுங்குகிறீர்கள். உங்களுக்கு என்னவோ நடந்து விட்டது, உள்ளே சென்று உட்கார்ந்து ஓய்வு எடுங்கள். நான் போய் டாக்டரை கூப்பிடுகிறேன் என்று கூற வேண்டும்.” என்று கூறினேன்.

மேலும் நான் இவர்கள் இருவரிடமும் அவர் என்ன கூறினாரோ அதை அப்படியே அவரது வார்த்தைகளிலேயே எழுதி வையுங்கள். நான் வந்து பெற்றுக் கொள்கிறேன். என்று கூறினேன்.

அவர் தோட்டக்காரரிடம், “ஆமாம், என்னவோ போல இருக்கிறது, நான் ஓய்வு எடுக்க வேண்டும், என்னால் பல்கலைகழகத்துக்கு போக முடியாது. ஆனால் டாக்டரை கூப்பிட வேண்டிய அவசியம் இல்லை.” எனறார். அவர் முழு ஆரோக்கியத்துடன் இருந்தார். எந்த பிரச்னையும் இல்லை. அதனால் அவர் பல்கலைகழகத்துக்கு அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ போவதாக முடிவெடுத்தார்.

அவர் செல்லும் வழியில் நான் நம்பும் பலரிடமும் சொல்லி வைத்தேன்.... அடுத்ததாக வழியில் ஒரு போஸ்ட் மாஸ்டர் இருந்தார், நான் அவரிடம், “நீங்கள் மிகவும் வேலையாக இருந்தால் கூட தவற விட்டு விடாதீர்கள். பேராசிரியர் உங்களை கடந்து செல்லும் போது எங்கே செல்கிறீர்கள்?, என்ன செய்கிறீர்கள்?, உங்களுக்கு பயித்தியமா? உங்களுக்கு உடம்பு சரியில்லை, நீங்கள் என் வீட்டிற்கு வந்து ஓய்வு எடுங்கள், நான் டாக்டரை கூப்பிடுகிறேன் என்று சொல்லுங்கள். அவர் கூறுவதை குறித்துக் கொள்ளுங்கள்.” என்றேன்.

நான் குறிப்புகளை சேகரித்து கொள்கிறேன் என்று கூறினேன்.
பேராசிரியர், “ஆமாம், நேற்று இரவிலிருந்து என்னவோ தவறாகிப் போனது போல ஒரு உணர்வு. என்ன தவறாகிப் போனது என்று எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் என்னவோ சரியில்லை. நான் இன்னும் நெடுநாள் வாழப் போவதில்லை என்பது போன்ற ஒரு அச்சம், ஒரு நடுக்கம் உள்ளே ஓடுகிறது.” என்றார்.

அவரது வீடும் பல்கலைகழகமும் கிட்டதட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும். அவர் எப்போதும் நடந்துதான் போவார். ஆனால் அன்று அவர் வழியில் வந்த மற்றொரு பேராசிரியரின் காரை நிறுத்தி, “என்னால் நடந்து பல்கலைகழகத்தை வந்தடைய முடியுமா என்று தெரியவில்லை”. என்றார்.
பல்கலைகழகம் இருந்த இடம் மலைப்பகுதி, மேடும் பள்ளமுமானது. இவரது வீட்டிலிருந்து அவரது தத்துவ பிரிவு இருந்த இடம் மேடானது. அந்த பிரிவு மலைஉச்சியின் மீது அமைந்திருந்தது. அவரது வீடு கீழே பள்ளத்தில் இருந்தது.

பேராசிரியர், “எனக்கு மூச்சு வாங்குகிறது... உடம்பு நடுங்குகிறது. எனக்கு காய்ச்சல் என்று நான் நினைக்கிறேன். என்ன என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. எனக்கு என்னமோ போல் இருக்கிறது”. எனக் கூறி லிப்ட் கேட்டார்.

அவரை கடந்து போன பேராசிரியரும் என்னால் அனுப்பி வைக்கப்பட்டவரே. அவர் மிக மோசமான நிலையில் இருப்பதைப் போல நீங்கள் காரை நிறுத்தி, என்ன பிரச்னை என கேட்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.. காருக்குள் இவர், “நீங்கள் வந்திருக்கக் கூடாது, நீங்கள் டாக்டரிடம் போயிருக்க வேண்டும். உங்களது கண்கள் பஞ்சடைத்துப் போயிருக்கிறது, உங்களது முகம் வெளுத்துப் போயிருக்கிறது, பழுதாகிப்போன ஓவியம் போல இருக்கிறீர்கள். ஒரே நாள் இரவு என்னவாயிற்று? இரவில் ஹார்ட் அட்டாக் வந்ததா என்ன? அது மிகவும் மோசமாக பாதித்திருக்கும் போலிருக்கிறதே.” என்று கூறினார்.
அதற்கு அவர், “நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது ஹார்ட் அட்டாக் வந்திருக்கும்போல இருக்கிறது. அப்போது எனக்குத் தெரியவில்லை, இப்போது என்னால் உணர முடிகிறது. எல்லா விதமான அறிகுறிகளும் எனது வாழ்வு முடிவுக்கு வந்து விட்டது போல காட்டுகிறது”. என்றார்.
அவர், தத்துவ பிரிவுக்குள் நுழையும் போது அங்கு வாசலில் உட்கார்ந்திருக்கும் பியூனிடம் நான், அவர் வந்தவுடன் நீ உடனே எழுந்து அவரை தாங்கிப் பிடித்துக் கொள் என்று கூறியிருந்தேன்.
அவன், “ஆனால் அவர் மிகவும் கோபப்படுவாரே, நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்றே எனக்குப் புரியவில்லை. நீங்கள் இதுபோல இதற்கு முன் கேட்டதே இல்லையே.” என்றான்.

அதற்கு நான், “நானும் பேராசிரியரும் ஒருவிதமான பரிட்சார்த்தமான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறோம். நீ, நான் சொல்வதை மட்டும் செய். குறுக்கிடாதே. நீ அவரை பிடித்துக் கொண்டு, நீங்கள் விழ இருந்தீர்கள் என்று சொல்.” என்றேன்.

அவனும் அப்படியே செய்தான். பேராசிரியர் அவனுக்கு நன்றி கூறினார். அநத பியூன் அவரிடம் நீங்கள் கீழே விழ இருந்தீர்கள் என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அவரே அவனிடம், “நீ இங்கில்லையென்றால் நான் கீழே விழுந்திருப்பேன்!” என்று கூறினார்.
பிரிவினுள்ளே நான் அவருக்காக காத்துக் கொண்டிருந்தேன். நான் அவரைப் பார்த்தவுடன், “கடவுளே, நீங்கள் ஆவி போல காணப்படுகிறீர்கள், உங்களுக்கு என்ன நடந்தது?” என்று கேட்டேன். அவரைப் பிடித்து, ஒரு சாய்வான நாற்காலியில் உட்கார வைத்தேன்.

அவர், “ஒரு விஷயம் நான் உன்னிடம் சொல்ல வேண்டும். என்னுடைய குழந்தைகள் மிகவும் சிறியவர்கள். – அவருக்கு இரண்டு குழந்தைகள் – என்னுடைய மனைவி அனுபவமற்ற சிறிய பெண். என் தாயும் தந்தையும் இறந்து விட்டனர். வேறு யாரும் எனக்கு கிடையாது. நான் போய் விட்டால் அவர்களை காப்பாற்ற கூடிய வேறு யாரையும் எனக்குத் தெரியாது. நான் உன்னைத்தான் நினைத்தேன்” என்றார்.
நான், “நீங்கள் கவலைப்படாதீர்கள். நான் உங்கள் குழந்தைகள் மற்றும் உங்கள் மனைவி ஆகியோரை உங்களை விட நன்றாக வைத்துக் காப்பாற்றுவேன். ஆனால் நீங்கள் இந்த உலகத்தை விட்டு போவதற்கு முன் நான் உங்களிடம் சில குறிப்புகளை காண்பிக்க விரும்புகிறேன்.” என்றேன்.
அவர், “சில குறிப்புகளா என்ன?” என்றார்.

“நான் போய் அவற்றை சேகரித்துக் கொண்டு வருகிறேன்” என்றேன்.

அவர், “யாரிடமிருந்து?” என்று கேட்டார்.

நான், “உங்கள் மனைவி, உங்கள் தோட்டக்காரர், போஸ்ட் மாஸ்டர், உங்களை இங்கே இறக்கி விட்ட பேராசிரியர், நீங்கள் விழாமல் உங்களை பிடித்த பியூன்.” என்றேன்.

அவர், “இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டார்.
நான், “இதெல்லாமே ஏற்கனவே திட்டமிடப்பட்டதுதான். இல்லாத ஒன்றை வைத்து மனிதனை ஏமாற்ற முடியாது என நீங்கள் சொல்ல வில்லை?” என்றேன்.

நான் சென்று எல்லா குறிப்புகளையும் பெற்று வந்தேன். அதை ஒவ்வொன்றாக அவரிடம் காண்பித்தேன். மேலும் நான் அவரிடம், “எப்படி நீங்கள் சிக்கிக் கொண்டீர்கள் என்று நீங்களே பாருங்கள். ஒன்றுமில்லை என்பதை உங்கள் மனைவியிடம் முற்றிலுமாக மறுத்தீர்கள். தோட்டக்காரரிடம், ஒரு வேளை ஏதாவது இருக்கலாம் என்று கூறியுள்ளீர்கள். ஆனால் அது ஒருவேளை என்றுதான் இருக்கிறது. அதில் உங்களுக்கு உறுதி இல்லை. ஆனால் அந்த எண்ணம் வந்து விட்டது. போஸ்ட் மாஸ்டரிடம், ஆமாம், ஏதோ ஆகி விட்டது. காலையிலிருந்து ஏனோ நான் மிகவும் நன்றாக இல்லாமல்தான் இருக்கிறேன், மிகவும் சோர்வாக இருக்கிறது என்று கூறி இருக்கிறீர்கள். பேராசிரியரிடம் காரில் வரும்போது நீங்களே தூங்கும்போது ஹார்ட் அட்டாக் வந்துவிட்டதாக ஒத்துக் கொண்டு இருக்கிறீர்கள். மிகவும் சோர்வாக உணர்ந்திருக்கிறீர்கள் – அவர் மிகவும் வலிமையுள்ள மனிதர் – தத்துவ பிரிவு வரை நடந்து வர முடியாது என நீங்களே நினைத்தீர்கள். மேலும் அந்த பியூன் குதித்து உங்களை தாவிப் பிடித்துபோது, நீங்கள் நான் விழ இருந்தேன், பிடித்துவிட்டாய், மிகவும் நன்றி என்று கூறியிருக்கிறீர்கள். இது உங்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு கருத்து. அவ்வளவுதான்.” என்று கூறினேன்.
என்ன நிகழ்ந்தது பார்த்தீர்களா? இதை தொடர்ந்து நிகழ்த்தியிருந்தால் இந்த மனிதன் இறந்து போகக்கூடும். ஒரு தர்க்க வாதத்தில் அவர் ஒத்துக் கொள்ளாத ஒரு நிலையை நான் நிரூபிக்க முயன்றேன், அவ்வளவுதான். அவர் இறந்து போவதை நான் விரும்ப வில்லை. இல்லாவிடில் டாக்டரிடம் பேசி, அவர், “உனது நாட்கள் எண்ணப்படுகின்றன, அதனால் என்ன செய்ய விரும்புகிறாயோ – உயில் எழுதுவது மற்றும் வேறு ஏதாவது – அதை செய். நான் உதவக்கூடியது எதுவுமே இல்லை, உனது இதயத்தின் வாழ்நாள் முடிந்து விட்டது. அது எந்த நிமிடமும் ஓய்வெடுத்துக் கொள்ளக்கூடும்.” என்று அவரை சொல்ல சொல்லியிருக்கலாம். நான் அவரை ஒரு கருத்தின் மூலமாக கொன்றிருக்க முடியும். இந்த குறிப்புகளை பார்த்த உடனேயே அவர் சரியாகி விட்டார், மிகவும் ஆரோக்கியமாகி விட்டார். அவர் சிரித்துக் கொண்டே பியூனைப்பார்த்து, “அவர் சொல்வதை கேட்காதே, அவர் மிகவும் அபாயகரமான மனிதர், அவர் கிட்டதட்ட என்னை கொன்று விட்டார்,” என்றார், மேலும் அவர் அந்த மற்றொரு பேராசிரியரிடம், “இது சரியல்ல, நீ எனக்கு ஹார்ட் அட்டாக் என்று பரிந்துரை செய்தாய்” என்று கூறினார். போஸ்ட் மாஸ்டரிடம், “நீங்கள் எனது பக்கத்து வீட்டுக்காரர், என்னை இறப்பு வரை தள்ளுவது சரியா” என்று கேட்டார்,

அவர் மிகவும் கோபமடைந்தது தனது மனைவியிடம்தான். அவர், “அவன் மற்ற எல்லோரையும் சரி கட்டிவிட்டான். – அவர் எல்லோருடைய மதிப்பையும் பெற்றிருந்தார் – ஆனால் என்னுடைய மனைவியே என்னை ஏமாற்றி விட்டாள், அவன் பேச்சைக் கேட்டாள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. நாங்கள் ஒரு வாத போட்டியில் இருந்தோம், அது என்னுடைய மதிப்பு மரியாதை சம்பந்தப்பட்டது, நீ அதை கெடுத்துவிட்டாய்” எனக் குற்றஞ்சாட்டினார்.

ஆனால் அவரது மனைவி, “நீங்கள் அவருக்கு நன்றி செலுத்தவேண்டும், இல்லாத ஒன்றிற்காக மனிதனை கட்டுதிட்டம் செய்ய முடியும் என அவர் உங்களுக்கு நிரூபித்ததற்காக நீங்கள்தான் நன்றி சொல்ல வேண்டும்.” என்றார்.

நீ கிறிஸ்துவன் என நீ உன்னை பற்றி நினைக்கிறாயா? அது உன் மேல் திணிக்கப்பட்டது. நீ உன்னை கடவுள் என நினைக்கிறாயா? ஒரு கருத்து உன்மேல் திணிக்கப்பட்டது. சொர்க்கம் நரகம் என்பது உண்டென்று நினைக்கிறாயா? அது வேறொன்றுமில்லை, திட்டமிட்டதுதான். உன்னுள் உள்ள அனைத்தும் திட்டமிட்டதுதான்.

From the False to the Truth che #19

No comments: