Friday, October 22, 2010

மலர் 2 இணைய இதழ் 13 11 ஆகஸ்ட்2009

தலையங்கம்

ஒரு தியானம் புரியும் அன்பருக்கு மனமற்ற நிலை அனுபவம் சென்ற மாதம் ஏற்பட்டது. அவர் 13 வயதிலிருந்து ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டு, கடைசியாக ஓஷோவிடம் வந்து, அவரின் டைனமிக் தியானத்தை முழுமூச்சுடன் 1 ½ வருடமாகச் செய்து வந்தவர். திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றன. தொழில் நல்லபடி செய்கிறார், ஆனாலும் குறி ஆன்மீகம்தான், ஞானமடைதல்தான்.

ஒரு சின்ன தட்டல் – மனமற்ற நிலை என்பதன் முதல் அனுபவம் – சடோரி என்று இதைக் கூறுவார் ஓஷோ – ‘சடோரி’ நிகழ்ந்து விட்டது.

ஆனால் அது நிகழ ஆரம்பித்த உடனேயே மனிதர் பயந்து நடுங்குகிறார். அதைத் தடுக்க போராடுகிறார்

அந்த போராட்டத்தின் விளைவாக அவருக்கு காய்ச்சல், உடல் தடுமாற்றம், வியர்வை இன்னும் ஏதேதோ செய்தது. தடுக்க முடியவில்லை. அது முடியாது. ‘சடோரி’க்குள் போய்விட்டார். திரும்பியவுடன் அதைப் பற்றி விளக்கிச் சொன்னபின்பு அவருக்கு பயம் போய்விட்டது. ஆனாலும் பலப் பல கேள்விகள்!.

அது ஆனந்தமாக இல்லையே?

அது மிகவும் பயமாக அல்லவா இருக்கிறது! இதற்கா இவ்வளவு முயற்சி செய்தேன்? நினைத்துப் பார்த்தால் திரும்பவும் உள்ளே போக பயமாகத்தானே இருக்கிறது? எதையும் நான் அடையவில்லையே? நான் இல்லாமல் அல்லவா போகிறேன்? நான் அழிந்தல்லவா போகிறேன்?

அவரின் கேள்விகள் அனைத்தும் உண்மையான கேள்விகள்தான். அவருக்கு ‘சடோரி’ ஆனந்த அனுபவமாக இல்லை என்பது உண்மைதான்.

இதைப் பற்றி கூறுமுன் சில உதாரணங்களைக் கூறுகிறேன்.

நீச்சல் பழகும்போதோ, சைக்கிள் ஓட்டும்போதோ, ஜெயண்ட்வீல் முதல் சுற்று சுற்றும்போதோ, முதல் பனிசறுக்கின் போதோ யாருக்காவது அந்த அனுபங்கள் ஆனந்தமாகத் தெரியுமா? பயமாகத் தான் இருக்கும்!. ஏனெனில் அவை புதிய அனுபவங்கள். புதிய அனுபவங்களின் முதல் தடவை மனம் இருப்பதில்லை. ஏனெனில் மனம் என்பது பழைய பதிவுகளின் படி நடக்கும் ஒரு இயக்கமே. ஆகவே அது நின்று விடுகிறது. அப்போது பயம் ஏற்படுகிறது. மனத்தின் துணையின்றி வாழ்வை சந்திக்கும்போது மனம் ஏற்படுத்தும் உணர்ச்சிதான் இந்த பயம்.

எனவே சாதாரணமான புதிய அனுபவங்களுக்கே மனம் பயமுறுத்துகிறது. ‘சடோரி’ என்பது என்றுமே மனதினால் பதிவு செய்து கொள்ள முடியாத அனுபவம். அது படிப்படியாக முற்றிலுமாக மனதை அழித்துவிடப் போகிறது. மேலும் மற்ற சாதாரண அனுபவங்களை மனம் பதிவு செய்துகொண்டு மறுமுறையிலிருந்து அதை அனுபவிக்கத் தயாராகி விடுகிறது. ஆனால் சடோரியில் அது படிப்படியாக தானே அழிகிறது. அனுபவிக்க அதுவே இல்லாமல் போகிறது. ஆகவேதான் இந்த பயம்.

ஆனால் இந்த பயம் இல்லாமல் சடோரிக்குள் குதித்து பரவசமாகி ஆனந்தமாய் மாறலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும்?. முதலில் இந்த பயம் ‘மனமற்ற நிலை’ என்ற அனுபவத்தால் ஏற்படுகிறது. அதாவது நாம் நம் மனதை இழக்கிறோமே என்ற பயம். அதனால் மனம் இழப்பதை காண முடிகிற உன்னால் பிரபஞ்சத்தோடு நீ ஒன்றிப் போவதை காண முடியாமல் இந்த பயம் தடுத்து விடுகிறது.
அதற்கு தயார் செய்யும் வாழ்வைத் தான் ஓஷோ, ‘எழுச்சியாளனாய் வாழ்தல்’ என்கிறார். அவரது “ஜோர்புத்தா” வாக வாழ்ந்தால் அது பரவச அனுபவமாய் இருக்கும்.

ஆம் ஓஷோவின் தியான முறைகளை கடுமையாய் பயிற்சி செய்வதால் இந்த ‘சடோரி’ என்கிற முதல் அனுபவம் கிடைக்கும்.

ஆனால் அவர் கூறும் வாழ்க்கை முறைக்கு மாறாதவருக்கு அது பயனளிக்காமல் போகலாம், பயம் ஏற்படலாம்.

நாம் ஆயிரத்தெட்டு பிடிப்புகளோடு ஆசைகளோடு கட்டுண்டு கிடக்கிறோம். என் வீடு, என் கார், என் தொழில், என்படிப்பு, என் திறமை, என் மனைவி, என் சொந்தம், என் குடும்பம், என் மொழி, என் ஜாதி, என் இனம், என் தெரு, என் ஊர், என் உடம்பு, என் அழகு, என் அறிவு,.............. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதோடு பிறப்பிலேயே இருக்கும் விலங்கு உணர்ச்சிகளை வேறு அமுக்கியே வைத்திருக்கிறோம்.

இதோடு இவையெல்லாம் இல்லாதது போன்ற போலித்தனம், பொய்நடிப்பு, கௌரவம், அந்தஸ்து, மரியாதை இத்யாதிகள் வேறு.

இத்தனையையும் வைத்துக் கொண்டு அதோடு எவனோ சொல்லி வைத்ததை, யாரோ எதிர்பார்ப்பதை, யாரிடமிருந்தோ பெற்ற கருத்தை, தன்னுடையது என்று நினைத்து அதன்படி சாதிக்க வாழ்ந்து காட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள போராட்டம் வேறு.

இத்தனை இறுக்கங்கள்,
இத்தனை அமுக்கங்கள்,
இத்தனை சுமைகள்,
இத்தனை பதட்டங்கள்,
இத்தனை பயங்கள்
ஆனால் இதுதான் ‘நான்’. இந்தக் குப்பைகளின் நிறத்தில் தரத்தில் வடிவில் இருக்கும் வித்தியாசம்தான் நமது ‘நான்’ எனும் தனித்துவமான நினைப்பு.
ஆகவேதான் ஓஷோ என்னைப் பொறுத்தவரை, “சுதந்திரமாய் வாழ்வதுதான் வாழ்வின் மிக முக்கிய பண்பு” என்கிறார். ஆனால் அவர் கூறும் சுதந்திரம் ‘மனம் போனபடி’ வாழும் சுதந்திரம் அல்ல. எல்லா ஞானிகளும் ‘துறவு நிலை’ என்றும் ‘பற்றற்ற நிலை’ என்றும் ‘பிடிப்பற்ற நிலை’ என்றும் ‘இயல்போடு தடையற்று பொருந்திப் போதல்’ என்றும் சொன்ன சுதந்திர நிலைதான் ஓஷோ கூறுவது. அதாவது ‘நான்’ என்பதிலிருந்து, மனதிற்கு அடிமையாய் இருப்பதிலிருந்து, இயந்திரத் தனமாய் இருப்பதிலிருந்து, சுதந்திரம். ரோபோ போல கொடுக்கப் பட்ட திட்ட அமைப்புப் படி (programme) செயல்படாமல் இயற்கையின் அங்கமாய் உணர்வு பூர்வமான வாழ்க்கை வாழுதல். அப்படி வாழ மனதையும் பகுத்தறிவையும் விஞ்ஞானத்தையும் பயன்படுத்துதல். ஆகவே ஓஷோவின் புதிய மனிதன் “ஜோர்புத்தா” என்பவன் சுதந்திரமாக இவ்வுலகை, இப்பிரபஞ்சத்தை, தன்உடலை, தன்னுணர்வோடு சுதந்திரமாக வாழ்ந்து பார்ப்பவன்.

அப்பிடி வாழ்பவனுக்கு மனமற்ற நிலையைத் தாண்டி உள்ள ஆனந்தமும், படைப்பின் பரவசமும், அன்பின் புரிதலும் தெரிந்திருக்கும்.

தியானம் செய்து ‘சடோரி’ ஏற்படும்போது அதனுள் மேலும் மூழ்கி கரைந்து விடும் துணிவும் தாகமும் அவனுக்கிருக்கும். வாழ்வில் கரையும்போது கிடைத்த பரவச அனுபவங்களால் அவன் தியானத்தில் மௌனத்தில் அமைதியில் ஒருமையில் இருக்கையில் அது கிடைக்கையில் அதற்குள் ஆழ்ந்து சென்று அடுத்தடுத்த நிலைகளை பெற முடியும்.

அப்படி ஓஷோ கூறும் “ஜோர்புத்தா”வாக வாழ தன்னுணர்வும் தைரியமும் வேண்டும். தன் மனம், திறன், உடல் பற்றிய தெளிவு வேண்டும். தன்னுணர்வோடு சிந்தித்து இதயத்தை உணர்ந்து பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதற்கு முதலில் தன் மனதை அக்குவேறாக ஆணிவேறாக அலசிப் பார்க்க வேண்டும். தேடுவது எது? செய்வது என்ன? எதற்காக செய்கிறோம்? ஒவ்வொரு செயலுக்குமான சுயநலக் காரணம் ஒன்று இருக்கும். அதுவரை சென்று அதைப் பார்க்க வேண்டும். உதவி செய்கிறேன், தியாகம் செய்கிறேன், பாசத்திற்காக செய்கிறேன், பற்றுக்காக செய்கிறேன், கடனுக்காக செய்கிறேன், கட்டுண்டதால் செய்கிறேன், என்று கூறும் ஏமாற்றுத்தனங்களை விட்டுவிட்டு நம் மனதை நம் இருப்புவரை தோலுரித்துப் பார்க்க வேண்டியது அவசியம். பிறகு அப்படிப் பார்த்து உணர்ந்து கொண்டபடி நடக்கும் துணிவு.

மந்தைக் கூட்டம், சந்தைக் கூட்டம், இனக் கூட்டம், சாதிக் கூட்டம், கட்சிக் கூட்டம், மதக் கூட்டம். ஸ்ரீஸ்ரீஸ்ரீக்கள், சத்குருக்கள், மகரிஷிகள், பரமஹம்சர்கள் என்று உதிக்கும் புதுப்புது கூட்டங்கள் இப்படி எல்லாக் கூட்டத்திலிருந்தும் விலகி வர வேண்டும் என்ற தெளிவு பிறக்க வேண்டும். கூட்டம் தரும் அணைப்பும் சுகமும் கௌரவமும் உண்மையல்ல என்பது புரிய வேண்டும்.

இப்படி உள்ளே புரிதலும், தெளிவும், தியானப் பயிற்சியுடன் சேர்ந்து நடக்க வேண்டும். நமது புரிதலும் தெளிவும் தன்னுணர்வு சார்ந்ததாக இருக்கையில் வாழும் வாழ்வு “ஜோர்புத்தா” வாழ்வாக அமையும். அப்படி பட்ட வாழ்க்கையில் நிகழும் ‘சடோரி’ அனுபவம் ஞான நிலைக்கான முதல் படியாக இருக்கும்.

அதற்குப்பின் தான் உண்மையான பயணம். அதற்கு முழு அர்ப்பணிப்பும் தேவை. ‘சடோரி’ என்பது ஒரு துளிச் சுவைதான்.

ஆகவே சமுதாய வாழ்வுக்கு உறுதுணை வேண்டுவோர் ஓஷோவிடம் வந்தால் அது தவறாகவே முடியும். ஓஷோ புதிய மனிதனை, சுதந்திரமான புதிய மனிதன் வாழும் வகையிலான புதிய சமுதாயத்தை சிந்திப்பவர். புதிய சமுதாயத்தின் முன்னோட்டமாக 5000 தனி நபர்கள் சேர்ந்து வாழ்ந்த கம்யூனை நடத்திக் காட்டியவர். அவரது கூற்றுப்படி சிறுசிறு கம்யூன்களாக புதிய சமுதாயங்கள் மலர்ந்து வருகின்றன. ஆகவே புதிய மனிதனாக, “ஜோர்புத்தா”வாக வாழத் தலைப்படுவது ஓஷோ அன்பர்களுக்கு மிகவும் அவசியம்.

அன்பு,
சித்.


கவிதை
அன்பு ஏழாவது அறிவு

என் இதய நண்பா!
பகிர்வதே அன்பு,
பொங்கிப்பெருகும் சக்தியே அன்பு,
திறந்த இதயத்திலிருப்பதே அன்பு,
எதிர்பார்ப்பற்ற இன்செயல்களே அன்பு,
ஆகவே இது, இங்கேயே இருப்பதுதான்!
இது உன் ஏழாவது அறிவு!

எனது சக தோழர்களே!
வாழ்வில் கணக்கை விட்டு விடுங்கள்,
வாருங்கள் வெளியே!
திறந்தவெளி வாழ்க்கையின் அடியில்,
புதிதாய்ப் பிறந்த குழந்தைபோல!
இது ஆபத்தே,
நடுக்கமும் பயமும் இருக்கும், ஆனால் நாட்பட அல்ல,
அன்பின் சிறகுகள் விரியும்வரை மட்டுமே!
நான் உறுதியளிக்கிறேன்,
நீங்கள் நிலத்தை மோதுமுன் பறக்க கற்றுவிடுவீர்கள்,
கூட்டை விட்டு வெளியில் வா!
அதன்பின்..................
அன்பு ஆகாயத்தில் சுதந்திரப்பறவை நீங்கள்,
சுற்றிலும் பார்த்தால்..................
எல்லோரும் அந்த அன்பு ஆகாயத்தின் பாகம்தான், எல்லாமும் வளர்வது அதனுள்ளே மட்டும்தான்!

எனக்கு நெருக்கமானவனே!
இந்த அன்பு ஆகாயத்தில்......................
தாய்தந்தை எனும் பூமியிருக்கிறது,
குரு என்ற சூரியனிருக்கிறார்,
ஞானிகள் என்ற நட்சத்திரங்கள் சுடர் விடுகின்றன,
காதல் என்ற நிலவும் வருகிறது,
நட்பு எனும் வானவில் உதிக்கிறது,
நேசம் என்ற மழைக்காலம் பொழிகிறது,
புயல் என்ற உணர்ச்சி கொந்தளிப்பும் வீசுகிறது,
புரிதல் என்ற தென்றலும் தவழ்கிறது,
பிரிவு என்ற இலையுதிர்காலமும் நிகழ்கிறது!

எனதன்பே!
ஒருநாள்............................ஒருகணத்தில்.........................
இந்த அன்பு ஆகாயம் விட்டு,
இன்னும் உயர்ந்த அழிவற்ற ஆகாயம் நோக்கி
பறக்கும் தருணம் வரும்,
அது.......................உன் அன்புச்சிறகுகள்..........................
வளர்ந்து கருணையாய் வலிமை பெற்றுவிட்ட கணம்!

ஆனாலும் நண்பனே!
இந்த அன்பு ஆகாயமே நீ வளருமிடம்,
இங்குதான் அழிவற்ற கணங்களை நீ அறிகிறாய்,
கூடு விட்டு நீ பறக்க ஆரம்பிக்கிறாய்,
சுதந்திரக்காற்றை நீ சுவாசிக்கத் துவங்குகிறாய்,
இது அமரத்துவத்தின் கருவறை!

இந்த அன்பு ஆகாயத்தில்..........................
நீ பறக்கிறாய் பறக்கிறாய் பறக்கிறாய்,
பின் நீ மிதக்கிறாய் மிதக்கிறாய் மிதக்கிறாய்,
உன் பார்வை நீள்கிறது,
உன் பயணம் தொடர்கிறது,
எல்லோரும் எல்லாமும் சுவாசிப்பது இங்குதான்
என்பதை நீ அறிந்து கொள்கிறாய்,
இதற்கு வெளியில் எதுவும் இல்லை,
இதனால் தொடப்படாதது எதுவும் இல்லை,
இது பூமியில் புறப்பட்டு சொர்க்கம் போகும் பாதை,
இது உடலையும் வெளியையும் இணைக்கும் பாலம்!

எனதருமை சகபயணிகளே! தயங்காதீர்கள்!
முளைவிட்டு வளரத் துவங்குங்கள்,
அன்பாய் மலர விதைக்கு பயம்தான்,
ஆம், வளர்வது விதைக்கு மரணம்தான்!
ஆம், அன்பு இறந்துகிடப்பதின் இறப்புத்தான்,
ஆனால் இதயத்துடிப்பின் பிறப்பு!

அருமை நண்பா!
அன்பே வாழ்வின் சாறு!
அன்பே இயற்கைப் பெருவழியின் முடிவில்லா
ரகசியங்களின் நுழைவாயில்!
அன்பு அநேக இறப்புக்களைக் கொண்டுவரும்
அதிக உயரங்களில் பிறக்க!
இப்படி அன்பில் இறக்கும்போதுதான்,
இறப்பும் கொண்டாட்டமாகிறது!
பிறப்பு புதிய விழிப்பைக் கொடுக்கிறது!
நீ ஒவ்வொரு கணமும் இறக்கும் சாதனை
செய்ய ஆரம்பிக்கிறாய்,
உயர உயரப் பிறக்கிறாய்!

ஆம், இந்தப்பயணம்............
ஒரு விதை,
ஒரு முளை,
ஒரு செடி,
ஒரு மலர்,
பிறகு..........பிறகு.........
ஒரு நறுமணம்!
இப்போது நீ நேசிப்பவனோ நேசிக்கப்படுபவனோ அல்ல,
இப்போது நீ இறப்பதோ மீண்டும் பிறப்பதோ அல்ல,
இப்போது நீ இறந்தகாலமோ எதிர்காலமோ அல்ல,
இப்போது நீ அழிவற்ற அமரத்துவத்தில் கரைந்துவிட்டாய், இப்போது................ நீயே அழிவற்றவன்!

ஓஷோ வீடியோ

1. OSHO : Waking Up the World

2. OSHO : Life Is a Flux

3. OSHO : Awareness – Being in the Moment

விழிப்புணர்வு பற்றி பல கேள்விகள். எனவே கீழ்க்கண்ட
ஓஷோ பதில்களை 3-ம் மாதமாக தொடர்ந்து அளிக்கிறோம்.

மன இறுக்கமும் ஓய்வும்

இப்போது ஒரே ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். மனோவசியம் செய்பவர்கள், ஒரு அடிப்படை விதியைக் கண்டு பிடித்துள்ளார்கள். அவர்கள் அந்த விதியை, எதிரிடை விதி என்று அழைக்கிறார்கள். ஒன்றின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாமல் நீங்கள் ஏதாவது செய்வதற்கு, நீங்கள் கடின முயற்சி மேற்கொண்டால், வெறுமனே அதற்கு எதிரான முடிவுதான் ஏற்படும்.

இது, நீங்கள் ஒரு சைக்கிளை முதன்முதலாக ஓட்டுவதற்கு கற்றுக் கொள்வதைப் போன்றது. அப்படிக் கற்றுக் கொடுக்கும்போது நீங்கள் ஒரு அமைதியான, போக்குவரத்து இல்லாத சாலையில், அதிகாலையில் ஓட்டக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது நீங்கள் சாலையின் ஓரத்தில் சிவப்பு நிறத்தில் நிறுத்தப் பட்டுள்ள மைல்கல்லைப் பார்க்கிறீர்கள். சாலையோ அறுபது அடி அகலம் இருக்கும். ஆனால், அந்த மைல்கல் மிகவும் சிறியதாக சாலை ஓரத்தில் நிற்கும். ஆனால் நீங்கள் அதைப் பார்த்து பயப்படுவீர்கள். நீங்கள் சைக்கிளில் அந்த மைல்கல்லில் மோதிவிடுவோமோ என்று பயப்படுவீர்கள். இப்போது நீங்கள் அந்த அறுபது அடி சாலையை மறந்துவிடுவீர்கள். உண்மையில் கண்ணைக் கட்டிக் கொண்டு சென்றாலும்கூட அந்த மைல்கல்லில் மோதுவதற்கு அதிக சந்தர்ப்பம் கிடையாது. ஆனால் இப்போதோ, கண்களை திறந்து கொண்டு இருக்கும்போதே அந்த அறுபது அடி சாலை மறக்கப் பட்டு உங்களது மனம் அந்த மைல்கல்லில்மீது குவிக்கப்பட்டு விட்டது. முதலில் அதன் சிவப்பு நிறம் மனதில் குவிகிறது. எனவே நீங்கள் அதைப் பார்த்து பயப்படுகிறீர்கள். எனவே அதன்மீது மோதுவதைத் தவிர்ப்பதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்கள் ஒரு சைக்கிளின் மீது இருப்பதையும் மறந்துவிடுவீர்கள். நீங்கள் எல்லாவற்றையும் மறந்துவிடுவீர்கள். இப்போது உங்களுக்கு உள்ள ஒரே பிரச்னை அந்த மைல்கல்லில் மோதாமல் இருப்பது எப்படி என்பதுதான். இல்லையெனில் அதன்மீது மோதி உங்களது கை காலை உடைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

இப்போது நீங்கள் அந்த மைல்கல்லின் மீது மோதுவது தவிர்க்கமுடியாமல் போய்விடும். நீங்கள் நிச்சயம் அந்த கல்லின்மீது மோதிவிடுவீர்கள். அதன்பிறகு நீங்களே, நான் இந்தக் கல்லின் மீது இடிக்காமல் இருப்பதற்கு கவனமாக முயற்சி செய்தேன். என்றாலும் தோற்று விட்டேன் என்று நினைத்து ஆச்சரியப்படுவீர்கள். உண்மையில் நீங்கள் கடினமாக முயற்சி செய்ததால்தான் நீங்கள் அந்த கல்லின்மீது மோதினீர்கள். நீங்கள் அதை நெருங்கி வர வர, அதன்மீது மோதாமல் இருப்பதற்கு நீங்கள் கடினமாக முயற்சி செய்தீர்கள். ஆனால் நீங்கள் எந்த அளவுக்கு அந்த கல்லை தவிர்த்துவிட முயற்சி செய்தீர்களோ அந்த அளவுக்கு உங்களது மனம் அதன்மீது குவிந்துவிட்டது. அது ஒரு மனோவசிய சக்தியாக ஆகிவிட்டது. அது உங்களை மனோவசியம் செய்துவிட்டது. அது ஒரு காந்தம் போல் ஆகிவிட்டது.

இது வாழ்க்கையின் ஒரு அடிப்படை விதி. அநேக மக்கள், அநேக விஷயங்களை தவிர்ப்பதற்கு விரும்புகின்றனர். ஆனால், அவர்கள் அதே விஷயங்களில் விழுந்து விடுகிறார்கள். அதிக முயற்சி செய்து, ஏதாவது ஒன்றை தவிர்த்துவிடப் பாருங்கள். நிச்சயமாக நீங்கள் அதே குழியில் விழுந்துவிடுவீர்கள். அதை நீங்கள் தவிர்க்கமுடியாது. அதை தவிர்ப்பதற்கான வழி அது அல்ல.

ஓய்வாக இருங்கள். கடின முயற்சி செய்யாதீர்கள். ஏனெனில் ஓய்வாக இருப்பதன் மூலமே நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க முடியும். கடினமாக முயற்சி செய்வதால் இருக்க முடியாது. எனவே, அமைதியாக, ஓய்வாக, அடக்கமாக இருங்கள்.

பதற்றம் என்பது என்ன, பதற்றம் என்பது நீங்கள் உங்களது எண்ணங்கள் பயங்கள் இவற்றோடு உங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதாகும். மரணம், திவால், டாலர் மதிப்பு வீழ்ச்சி இப்படி எல்லாவிதமான பயமும் இருக்கிறது. இவைகள்தான் உங்களது பதற்றம் மேலும், இவை உங்களது உடலையும் பாதிக்கின்றன. உங்களது உடலும் பதற்றம் அடைகிறது. ஏனெனில் உடல் மற்றும் மனம் என்பது, இரண்டும் தனித்தனியாக இருப்பவை அல்ல. உடல் மனம் என்பது ஒரே அமைப்புதான். ஆகவே மனம் பதற்றம் அடையும்போது உங்களது உடலும் பதற்றம் அடைகிறது.

நீங்கள் முதலில் விழிப்புணர்வுடன் ஆரம்பிக்கலாம். அதன்பின்னர் இந்த விழிப்புணர்வு உங்களை உங்களது மனத்திலிருந்தும், மனதோடு உங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதில் இருந்தும் வெளியே எடுத்துவிடுகிறது. உடனே இயல்பாக உங்களது உடல் ஓய்வுடன் இருக்க ஆரம்பித்துவிடும். அப்போது நீங்கள் எதோடும் பற்றிக் கொண்டு இருக்க மாட்டீர்கள். மேலும் விழிப்புணர்வு என்னும் வெளிச்சத்தில் பதற்றம் என்பது இருக்கமுடியாது.

அதே போன்று, நீங்கள் அடுத்த பக்கத்தில் இருந்தும் ஆரம்பிக்கலாம். வெறுமனே தளர்வுடன் இருங்கள். ஓய்வுடன் இருங்கள். அப்போது தானாகவே எல்லாப் பதற்றமும் விட்டு விலகிவிடும். மேலும், நீங்கள் ஓய்வாக இருக்க ஆரம்பித்துவிட்டால், உங்களுக்குள் ஒரு குறிப்பிட்ட விழிப்புணர்வு எழுவதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அவைகள் பிரிக்கமுடியாதவை. ஆனால் விழிப்புணர்வில் இருந்து ஆரம்பிப்பது சுலபம், ஓய்வாக இருப்பதில் இருந்து ஆரம்பிப்பது கொஞ்சம் கடினம். ஏனெனில் நீங்கள் ஓய்வாக இருக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் எடுக்கின்ற முயற்சியே ஒரு குறிப்பிட்ட பதற்றத்தைக் கொடுத்துவிடும்.

அமெரிக்காவில் ஒரு புத்தகம் உள்ளது – நீங்கள் முட்டாள்தனமான புத்தகங்களை காண விரும்பினால் அதற்கான இடம் அமெரிக்காதான். அந்த புத்தகத்தின் தலைப்பைப் பார்த்த மாத்திரத்திலேயே என்னால் அதை நம்ப முடியவில்லை. அந்த புத்தகத்தின் தலைப்பு You must Relax ( நீங்கள் கண்டிப்பாக ஓய்வுடன் இருக்க வேண்டும்) இப்போது அங்கே must ( கண்டிப்பாக ) என்பது இருந்தால், உங்களால் எப்படி ஓய்வுடன் இருக்கமுடியும், அந்த கண்டிப்பாக என்பதே உங்களைப் பதற்றமாக்கி விடும். அந்த வார்த்தையே உடனடியாக உங்களிடம் பதற்றத்தை ஏற்படுத்திவிடும். அந்த கண்டிப்பாக என்னும் வார்த்தை, ஏதோ கடவுளிடம் இருந்து வந்த வார்த்தை போல பதற்றம் அடைந்துவிடுவீர்கள். ஒருவேளை, அந்தப் புத்தகத்தை எழுதியவர், ஓய்வாக இருப்பது என்பதைப் பற்றியும், ஓய்வாக இருப்பதில் உள்ள சிக்கல்கள் பற்றியும் ஒன்றுமே அறியாதவர் போல் தெரிகிறது.

கீழைநாடுகளில் நாங்கள் ஓய்வாக இருப்பதில் இருந்து ஒருபோதும் தியானத்தை ஆரம்பித்ததில்லை. நாங்கள் விழிப்புணர்வில் இருந்துதான் தியானத்தை ஆரம்பிக்கிறோம். அதன்பிறகு, ஓய்வு என்பது அதுவாகவே, தானாகவே வந்து விடுகிறது. நீங்கள் ஓய்வை கொண்டு வர வேண்டியதில்லை. நீங்கள் அதைக் கொண்டு வர வேண்டுமெனில் அங்கே ஒருவித பதற்றம் இருக்கும். அது தானாகவே வரவேண்டும். அப்போதுதான் அது சுத்தமான ஓய்வு நிலையாக இருக்கும். மேலும் அது வரும்.

நீங்கள் விரும்பினால், நீங்கள் முதலில் ஓய்வாக இருப்பதில் இருந்தே கூட ஆரம்பிக்கலாம். ஆனால் அந்த அமெரிக்க அறிவுரையாளர்களைப் போல இருக்காதீர்கள். நமது உள் உலக அனுபவத்தைப் பொருத்தமட்டில் இந்த பூமியில் அமெரிக்கா மிகவும் குழந்தைதனமான இடத்தில் உள்ளது. ஐரோப்பா கொஞ்சம் வயதானதாக உள்ளது. ஆனால் கீழைநாடுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த அக ஆன்மாவின் தேடுதலில் வாழ்ந்து வருகிறது.

அமெரிக்காவானது நாடு என்று பார்த்தால் அதற்கு 300 வருடங்கள் மட்டுமே ஆகிறது. எனவே அந்த 300 வருடங்கள் என்பது பெரிய விஷயம் அல்ல. எனவே அமெரிக்காதான் இந்த உலகின் மிகப்பெரிய அபாயம். குழந்தைகளின் கையில் அணுஆயுதங்கள்........ ரஷ்யா கொஞ்சம் அதிக பகுத்தறிவுடன் நடந்து கொள்ளும். அது ஒரு வயதான பழமை வாய்ந்த நாடு. மேலும் அதற்கு ஒரு நீண்ட வரலாற்றின் அனுபவமும் உள்ளது. அமெரிக்காவிற்கு என்று எந்த சரித்திரமும் கிடையாது. அங்குள்ள ஒவ்வொருவரும் அவர்களின் தந்தையின் பெயர், தந்தையின் முன்னோர்கள் பெயர் ஆகியவைதான் தெரியும். அவ்வளவுதான். அங்கே அவர்களின் குடும்ப மரத்தின் கிளைகள் நின்று விடும்.

அமெரிக்கா வெறும் கைக்குழந்தைதான். சரியாக சொன்னால் கைக்குழந்தை கூட அல்ல. அது இன்னும் கருவறையில்தான் உள்ளது. இந்தியா மற்றும் சீனாவில் உள்ள சமுதாயங்களோடு ஒப்பிடும்போது, அமெரிக்கா இப்போதுதான் கருவுற்றிருப்பது போன்றது. எனவே, இந்த மக்களிடம் அணு ஆயுதங்களைக் கொடுப்பது மிகவும் ஆபத்தானது.

இங்கே அரசியல், மத, சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகள் உள்ளன. அவைகள் எல்லாம் உங்களை துன்புறுத்திக் கொண்டிருக்கின்றன. ஆகவே முதலில் ஓய்வுடன் இருப்பதில் இருந்து ஆரம்பிப்பது கடினமானது. அதனால்தான் கீழைநாடுகளில் நாங்கள் முதலில் ஓய்வுடன் இருப்பதில் இருந்து ஆரம்பிப்பதில்லை. ஆனால் நீங்கள் அப்படி ஆரம்பிக்க விரும்பினால், நீங்கள் எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்று என்னிடம் சில கருத்துக்கள் உள்ளன. நான் மேலைநாட்டு மக்களிடம் பழகி வந்துள்ளேன். மேலும் அவர்கள் இந்த கீழைநாட்டிற்குச் சொந்தமானவர்கள் அல்ல என்பதையும், அவர்களுக்கு நமது கீழைநாட்டின் தன்னுணர்வு என்னும் சக்தியினைப் பற்றி தெரியாது என்பதையும் நான் அறிவேன். விழிப்புணர்வு என்று எதையும் ஒருபோதும் அறிந்திராத ஒரு வித்தியாசமான பாரம்பரியத்தில் இருந்து அவர்கள் வந்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட மேலைநாட்டினருக்காக, நான் Dynamic Meditation (டைனமிக் தியானம்) போன்ற தியானங்களை உருவாக்கி இருக்கிறேன். மேலும் தியான முகாம்களை நான் நடத்தி வந்தபோது, நான் ஜிப்ரிஷ் தியானம் மற்றும் குண்டலினிதியானம் ஆகியவற்றையும் பயன்படுத்தியுள்ளேன். எனவே, நீங்கள் ஆரம்பத்தில் ஓய்வாக தியானம் செய்வதை ஆரம்பிக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் மேற்கூறிய தியானங்களை நீங்கள் செய்ய வேண்டும். அவைகள் உங்களது மனதிலும், உடலிலும் உள்ள பதற்றத்தை எடுத்துவிடுவதால், அதன்பிறகு நீங்கள் ஓய்வுடன் இருப்பது சுலபம். நீங்கள் உங்களுக்குள் எவ்வளவு விஷயங்களை உள்ளடக்கி வைத்திருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. எனவே, அந்த விஷயங்கள்தான் உங்களின் பதற்றத்திற்கு காரணங்கள்.

நான் மலைப்பிரதேசங்களில் ஜிப்ரிஷ் தியானத்தை நடத்தும்போது ..........இந்த தியானத்தை நகரங்களில் அனுமதிப்பது கடினம். ஏனெனில் உங்களுக்குப் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிடும். அவர்கள் உடனே காவல்துறைக்கு தொலைபேசியில், எங்களது முழு வாழ்க்கையும் நாசமாகிக் கொண்டிருக்கிறது. என்று புகார் கொடுத்துவிடுவார்கள். அவர்களும் அவர்களுடைய வீடுகளில் இந்த தியானத்தைச் செய்தால், இப்போது அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த பைத்தியகாரத்தனத்திலிருந்து வெளிவந்து விடலாம் என்பதை அந்த பக்கத்து வீட்டு மக்கள் அறிய மாட்டார்கள். அவர்களது பைத்தியகாரத்தனமே முதலில் அவர்களுக்குத் தெரியாது.

ஜிப்ரிஷ் தியானம் என்பது ஒவ்வொருவரும் தங்களது மனதிற்குள் என்னவெல்லாம் வருகிறதோ, அதையெல்லாம் சத்தமாக வெளியே சொல்வதற்கு அனுமதிப்பதாகும். மேலும், இப்படி மக்கள் சம்பந்தம் இல்லாமல் முட்டாள்தனமாக உளருவதைக் கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஏனெனில் அப்போது நான் மட்டுமே சாட்சியாக இருப்பேன். மக்கள் எல்லாவிதமான விஷயங்களையும் செய்து கொண்டிருப்பார்கள். மேலும், இதில் உள்ள ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால், நீங்கள் வேறு யாரையும் தொடக் கூடாது என்பதுதான். நீங்கள் என்னவெல்லாம் செய்ய விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்கள் செய்யலாம் – சிலர் தலைகீழாக நின்றுகொண்டிருப்பார்கள், சிலர் தங்களது ஆடைகளை கழற்றி எறிந்துவிட்டு நிர்வாணமாக இருப்பார்கள், சுற்றிலும் ஓடிக் கொண்டும் இருப்பார்கள். அந்த ஒருமணி நேரமும் இப்படி இருப்பார்கள்.

அப்போது, ஒருவர் எனது முன்னால் உட்கார்ந்திருப்பது வழக்கம். அவர் ஒரு பங்குச் சந்தை தரகரோ அல்லது வேறு எதுவோ தெரியாது. ஆனால், தியானம் ஆரம்பித்த உடன், முதலில் அவர் சிரிப்பார். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை நினைத்து அவரே சிரிப்பார். அதன்பின்னர், தனது தொலைபேசியை எடுத்து ஹலோ, ஹலோ.... என்று பேசுவார். அவரது ஓரக்கண்ணால் என்னையும் பார்த்துக் கொண்டே இருப்பார். நானும், அவரது தியானத்தை தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காக அவரைப் பார்ப்பதைத் தவிர்த்து விடுவேன். அவர் தொலைபேசியில் அவரது பங்குச் சந்தை பங்குகளை விற்பார், வாங்குவார்..... அந்த ஒருமணி நேரமும் அவர் தொலைபேசியில் பேசிக் கொண்டே இருப்பார்.

ஒவ்வொருவரும் இதுவரை தாங்கள் உள்ளடக்கி வைத்திருந்த விநோதமான செயல்களைச் செய்வார்கள். அந்த தியானம் முடியும்போது, அதில் பத்து நிமிட ஓய்வு இருக்கும். மேலும், அப்போது அந்த பத்து நிமிடத்தில் அந்த மக்கள் முற்றிலும் களைப்பாக இருப்பதால் எந்தவிதமான முயற்சியும் இல்லாமல் கீழே படுத்துக் கிடப்பதைக் காண முடியும். எல்லா குப்பைகளும் வெளியேற்றப் பட்டு விட்டதால், அவர்களுக்குள் ஒரு சுத்தமான தன்மை உருவாகிவிடுவதால், அவர்கள் ஓய்வுடன் இருப்பார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் இருப்பார்கள். ஆனால், உங்களால் அங்கு ஆயிரகணக்கானவர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது.

மக்கள் என்னிடம் வந்து, அந்த பத்து நிமிடத்தை இன்னும் கொஞ்சம் நீட்டியுங்களேன். ஏனெனில் எங்களது வாழ்நாளில் இதுபோன்ற ஒரு ஓய்வு நிளையை நாங்கள் ஒருபோதும் பார்த்ததில்லை. அந்த அளவுக்கு சந்தோஷமாக இருந்தது. விழிப்புணர்வு என்றால் என்னவென்று நாம் எப்போதாவது புரிந்துகொள்வோம் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததேயில்லை. ஆனால் அந்த விழிப்புணர்வு வருவதை எங்களால் உணர முடிந்தது. என்று கூறுவார்கள்.

ஜிப்பரிஷ் என்கிற இந்த வார்த்தை எங்கிருந்து வந்தது என்று நீங்கள் அறியாமல் இருக்கலாம். இது ஜாப்பர் என்னும் சூபி ஞானியின் பெயரில் இருந்து வந்தது. மேலும் அதுதான் அந்த ஞானியின் தியானமாகவும் இருந்தது. யார் அவரிடம் வந்தாலும், அவர்களிடம் அவர், கீழே உட்காருங்கள் இப்போது ஆரம்பியுங்கள் என்று கூறுவார். மேலும் மக்களுக்கும் அவர் என்ன அர்த்தத்தில் கூறுகிறார் என்று புரியும். அவர் ஒருபோதும் பேசியதில்லை. ஒருபோதும் சொற்பொழிவாற்றியதில்லை. அவர் வெறுமனே மக்களிடம் ஜிப்ரிஷ் தியானத்தை கற்பித்து வந்தார்.

உதாரணத்திற்காக, எப்போதாவது அவர் அந்த தியானத்தை எப்படிச் செய்ய வேண்டும் என்று செய்து காட்டுவார். அரைமணி நேரம் அவர் எல்லாவிதமான அர்த்தமற்ற வார்த்தைகளையும், யாருக்கும் என்ன பாஷை என்று புரியாத ஒரு பாஷையில் பேசுவார். அது ஒரு பாஷை கிடையாது. அவர் மனதில் என்னவெல்லாம் வருகின்றதோ, அதையெல்லாம் அவர் பேசிக் கொண்டே போவார். அதுதான் அவரது ஒரே போதனையாக இருந்தது. மேலும், அதைப் பற்றி புரிந்தவர்களிடம் அவர், கீழே உட்கார்ந்து ஆரம்பியுங்கள் என்று கூறுவார்.

ஆனால் ஜாப்பர், அநேக மக்கள் முழுமையான அமைதியுடன் இருப்பதற்கு உதவினார். உங்கள் மனதால் எவ்வளவு நேரம்தான் பேசமுடியும் எனவே அது காலியாகிவிடும். கொஞ்சம் கொஞ்சமாக ஒரு ஆழ்ந்த வெறுமை மேலும் அந்த ஆழ்ந்த வெறுமையில் விழிப்புணர்வு என்னும் ஒரு ஒளிச்சுடர். அது எப்போதும் இந்த ஜிப்பரிஷ்ஷால் சூழப்பட்டு தான் இருந்தது. இந்த ஜிப்ரிஷ்ஷை நீங்கள் வெளியே எடுத்துவிட வேண்டும். அதுதான் உங்களின் விஷம்.

இதே உண்மை, உங்களது உடலுக்கும் பொருந்தும். உங்களது உடலிலும் பதற்றங்கள் உள்ளன. உங்களது உடல் எந்தவிதமான அசைவுகளைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறதோ, அந்தவிதமான அசைவுகளை வெறுமனே செய்ய ஆரம்பியுங்கள். நீங்கள் அதை செய்யும்படி தூண்டக்கூடாது. அது நடனமாட விரும்பலாம். அது குதிக்க விரும்பலாம், அது ஓடுவதற்கு விரும்பலாம், அது தரையில் உருள விரும்பலாம், எதுவாக இருந்தாலும் நீங்களாக அதைச் செய்யக் கூடாது. நீங்கள் வெறுமனே அதைச் செய்வதற்கு அனுமதியுங்கள். உங்களது உடலிடம், நீ சுதந்திரமடைந்துவிட்டால் என்னவெல்லாம் விரும்புகிறாயோ அதையெல்லாம் செய் என்று மட்டும் கூறிவிடுங்கள். அப்போது நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். அடக் கடவுளே, இப்படிப்பட்ட விஷயங்களை எல்லாம் எனது உடல் செய்வதற்கு ஆசைப் பட்டுள்ளது. ஆனால், நான் அதை எனக்குள் அடக்கி வைத்திருக்கிறேன். மேலும், அதுதான் எனது உடல் முறுக்கேறி இருப்பதற்கான காரணம். என்று அறிந்து ஆச்சரியப்படுவீர்கள்.

ஆகவே இரணடு வகையான பதற்றங்கள் இருக்கின்றன. உடல் பதற்றம், மற்றும் மனப்பதற்றம். நீங்கள் ஓய்வுடன் தியானம் செய்வதற்கு முன்பு இந்த இரண்டும் வெளியேற்றப்பட வேண்டும். அப்போதுதான் விழிப்புணர்வு கொண்டு வரப்படும். ஆனால், விழிப்புணர்வில் இருந்து ஆரம்பிப்பது ரொம்பவும் சுலபமானது. அதிலும் குறிப்பாக, மிகவும் எளிமையான விழிப்புணர்வு என்னும் செயல்முறையைப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் அதிலிருந்து ஆரம்பிப்பது நல்லது. நாள் முழுவதும் நீங்கள் சில விஷயங்களில் அதை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறீர்கள். போக்குவரத்து நெரிசலிலும் கூட நீங்கள் உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறீர்கள் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் பைத்தியகாரத்தனமாக உள்ளது.

சில தினங்களுக்கு முன்பு, நான் ஏதென்ஸ் நகரத்தைப் பற்றி படித்துக் கொண்டிருந்தேன். அங்கே டாக்ஸி ஓட்டுபவர்களுக்காக அரசு ஏழு நாட்கள் கொண்ட ஒரு சிறப்பு போட்டியை நடத்தியது. அதில் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதில் மிகச் சிறந்த மூன்று ஓட்டுநர்களுக்கு, அவர்கள் தங்கக் கோப்பைகளை கொடுப்பதாக அறிவித்தனர். ஆனால், அவர்கள் ஏதென்ஸ் நகர் முழுவதிலும் ஒருவரைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே காவல்துறையினர் மிகுந்த கவலை அடைந்தனர். அந்த ஏழு நாட்களும், கிட்டத்தட்ட முடியும் நிலைக்கு வந்துவிட்டது. எனவே, கடைசி நாளில், எப்படியாவது மூன்று ஓட்டுநர்களை அவர்கள் முற்றிலும் பின்பற்றாவிட்டாலும் கூட அவர்களுக்கு அந்தப் பரிசை கொடுப்பதற்கு நினைத்தனர்.

ஒரு ஆள் மிகவும் சரியாக போக்குவரத்து விதிகளை பின்பற்றி ஓட்டினார். அவரைக் கண்டவுடன் காவல்துறையினர் சந்தோஷம் அடைந்தனர். அப்போது அவருக்கு அந்த கோப்பையைக் கொடுப்பதற்காக காவல்துறையினர் ஓடினார்கள். ஆனால் காவல்துறையினர் அவரை நோக்கி ஓடி வருவதைப் பார்த்த அந்த மனிதர் சிவப்பு விளக்கு எரிந்தாலும்கூட டாக்ஸியை ஓட்டிக் கொண்டு ஓடியே போய்விட்டார். யார்தான் தேவையில்லாமல் சங்கடத்தில் மாட்டிக் கொள்ள விரும்புவார்கள் காவல்துறையினர் பொறு பொறு என்று கத்தினார்கள். ஆனால் அவர் அதை கவனிக்கவில்லை. அவர் உடனடியாக சிவப்பு விளக்கிற்கு எதிராக ஓட்டிக் கொண்டு போய்விட்டார். மேலும், இரண்டு மனிதர்களிடமும் அந்த காவல்துறையினர் முயற்சி செய்தார்கள். ஆனால் அந்த காவல்துறையினரைப் பார்த்தவுடன் யாரும் நிறுத்தவில்லை. எனவே ஏழு நாட்கள் முயற்சிக்குப் பிறகு அந்த மூன்று பரிசுகளும் இன்னமும் காவல்துறையினரின் அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறது. மேலும் ஏதென்ஸ் நகரமோ எப்போதும் போல மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருக்கிறது......

உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் விழிப்புணர்வை பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறீர்கள். ஆனால் அதை வெளியில் உள்ள விஷயங்களில் மட்டுமே பயன்படுத்துகிறீர்கள்.

அதே விழிப்புணர்வைத்தான் நீங்கள் உங்களது மனதிற்குள் நடக்கின்ற போக்குவரத்து நெரிசலுக்கும் பயன்படுத்த வேண்டும். நீங்கள் கண்களை மூடியவுடன், அங்கே எண்ணங்கள், உணர்ச்சிகள், கனவுகள், கற்பனைகள் இப்படி ஏகப்பட்ட போக்குவரத்து உள்ளே நடக்கிறது. எல்லா வகையான விஷயங்களும் வெளிச்சம் போட ஆரம்பிக்கின்றன. நீங்கள் வெளி உலகில் உள்ள போக்குவரத்திற்கு என்ன செய்தீர்களோ அதே செயலை சரியாக உங்களது உள் உலகத்திலும் செய்யுங்கள். அப்போது நீங்கள் ஒரு சாட்சியாக மாறிவிடுவீர்கள். மேலும் இதை நீங்கள் ஒருமுறை ருசித்துவிட்டால் போதும், சாட்சியாக இருப்பதில் கிடைக்கின்ற இந்த மகிழ்ச்சி மிகவும் பெரியதாகவும், அடுத்த உலகத்தை சேர்ந்ததாகவும் இருப்பதால், நீங்கள் இன்னும் அதிகமான அளவு உள்ளே போவதற்கு விரும்புவீர்கள். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீங்கள் மேலும் மேலும் உங்களுக்குள் செல்ல விரும்புவீர்கள்.

இதற்கு எந்த ஆசனத்தில் உட்கார வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. எந்த கோவிலுக்குப் போக வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. அல்லது தேவாலயத்திற்கோ யூதமத கோவிலுக்கோ போக வேண்டியதில்லை. பொதுமக்கள் பயணம் செய்கின்ற ஒரு பஸ்ஸில் உட்கார்ந்திருக்கும்போதோ அல்லது ரயில் வண்டியில் பயணிக்கும்போதோ நீங்கள் செய்வதற்கு ஒன்றும் இல்லாதபோது வெறுமனே உங்களது கண்களை மூடிக் கொள்ளுங்கள். அப்படி மூடிக் கொள்வதால் வெளியில் பார்த்துக் கொண்டே செல்வதன்மூலம் உங்களது கண்கள் களைப்படைவதில் இருந்து அது பாதுகாக்கும். மேலும் அது உங்களுக்குள் நீங்கள் கவனிப்பதற்கு போதுமான நேரத்தையும் கொடுக்கும். அத்தகைய தருணங்கள் மிகவும் அழகான அனுபவங்கள் ஏற்படுகின்ற தருணங்களாக ஆகிவிடும்.

மேலும், இப்படி கொஞ்சம் கொஞ்சமாக உங்களது விழிப்புணர்வு வளர்ச்சி அடையும்போது உங்களது தனிமனிதப் பண்பு மாற்றம் காண ஆரம்பிக்கும். விழிப்புணர்வு அற்ற நிலையில் இருந்து விழிப்புணர்வு உள்ள நிலைக்குச் செல்வதுதான் மிகப் பெரிய தாவுதல் ஆகும்.

மூலம்: விழிப்புணர்வு - நோய்கள் பல மருந்து ஒன்று - பக்கம் 115

ஆன்மீகத்தேடல் – ஓஷோவின் கதை - 13

ஒரு பழைய கதை .... எனக்கு இந்த கதை எப்போதும் மிகவும் பிடிக்கும். ஒரு விறகுவெட்டி வயதானவன், ஏழை, அனாதை. அவன் சாப்பாட்டிற்கு ஒரே வழி நாள்தோறும் காட்டிற்கு வந்து விறகு வெட்டி கொண்டு சென்று விற்று வரும் பணத்தில் சாப்பிடுவதுதான். காட்டிற்குள் நுழையும் இடத்தில் ஒரு அழகிய அரசமரம் இருந்தது. கௌதம புத்தர் ஞானமடைந்த மரம் அதுதான். அதனால்தான் அது அரசமரம் என்றழைக்கப் படுகிறது.

ஒரு விஷயம் தெரியுமா உனக்கு? மரங்களிலேயே அரசமரம்தான் மிகவும் உணர்வுபூர்வமானதும் மிக புத்திசாலியான மரமும் கூட. அந்த மரத்தில் மற்ற மரங்களில் இல்லாத ஒருவகையான அமிலம் சுரக்கிறது. அந்த அமிலம் புத்திசாலித்தனம் வளர மிக அத்தியாவசியமான ஒன்று என்பதை மிக சமீபத்தில்தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் என்பதை அறிந்தால் நீ மிகவும் வியப்படையக்கூடும். புத்தர் அந்த மரத்தின் கீழ் ஞானம் பெற்றது ஒரு தற்செயலான செயல் அல்ல!

இந்த விறகுவெட்டி அந்த மரத்தின் கீழ் ஒரு வயதான ஞானி உட்கார்ந்திருப்பதை பார்ப்பான். அவர் இரவு, பகல், வெயி்ல், மழை, குளிர் என எல்லாநேரங்களிலும் எல்லா காலங்களிலும் அங்கே இருப்பதை பார்ப்பான். அதனால் காட்டிற்குள் நுழையும் முன் அவர் காலில் விழுந்து வணங்குவான். அவன் வணக்கம் சொல்லும் ஒவ்வொரு முறையும் அவர் அவனைப் பார்த்து, சிரித்தபடி, ‘நீ ஒரு முட்டாள்’ எனக் கூறுவார்.

விறகுவெட்டி ஆச்சரியமடைவான். ஒவ்வொரு முறை வணங்கும்போதும் அவர் ஆசி கூறுவதற்கு பதிலாக முட்டாள் எனக் கூறுகிறாரே என நினைத்துக் கொண்டு போவான்.

ஒருநாள் தைரியத்தை வளர்த்துக் கொண்டு அவரிடம், “ஏன் இப்படி கூறுகிறீர்கள்?” என்று கேட்டான்.
அதற்கு அவர், “நீ தினமும் இந்த காட்டினுள் சென்று விறகு வெட்டி கொண்டு வருகிறாய். ஆனால் இதனுள் இன்னும் சிறிது தூரம் சென்றால் செம்பு சுரங்கம் உள்ளது. அங்கு சென்று செம்பு எடுத்து சென்றால் ஏழு நாட்களுக்கு கவலையில்லாமல் உட்கார்ந்து சாப்பிடலாம். ஒரு முட்டாளுக்கு மட்டுமே அது தெரியாமல் போகும். உனது வாழ்நாள் முழுவதும் நீ இந்த காட்டினுள் சுற்றிக் கொண்டு இருக்கிறாய். நீ அதை பார்த்திருந்தால் இப்படி தினமும் வந்து விறகு வெட்டிகொண்டு செல்ல வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது.” என்றார்.

விறகுவெட்டியால் அவர் சொல்வதை நம்ப முடியவில்லை. ஏனெனில் அவனுக்கு அந்த காடு முழுவதும் நன்றாகத் தெரியும். அவர் ஏதோ கேலி செய்கிறார் என நினைத்தான். ஆனாலும் அவர் சொல்வதில் ஏதேனும் உண்மை இருக்குமானால்..............சரி, சிறிதுதூரம் போய் தேடுவதால் என்ன தீங்கு வந்துவிடப் போகிறது என நினைத்துகொண்டு இன்னும் சிறிது தூரம் காட்டினுள் சென்று ஏதேனும் செம்பு சுரங்கம் இருக்கிறதா என்று கவனமாகவும் விழிப்போடும் தேடினான்.

அங்கே அவன் செம்பு சுரங்கத்தை கண்டான். அவர் எப்போதும் நீ ஒரு முட்டாள், தேவையில்லாமல் இந்த வயதான காலத்திலும் தினமும் வேலை செய்துகொண்டிருக்கிறாய் என ஏன் சொல்லிக் கொண்டு இருந்தார் என்பது இப்போது அவனுக்கு புரிந்தது.

இப்போது அவன் வாரத்திற்கு ஒருமுறைதான் சென்றான். ஆனாலும் அந்த பழைய வழக்கம் தொடர்ந்தது. அவர் காலை தொட்டு வணங்கினான். அவர் மறுபடியும் அதேபோலவே சிரித்தபடி, “நீ ஒரு முட்டாளேதான்” என்றார்.

அவனுக்கு குழப்பமாக இருந்தது. “ஏன்? நான்தான் செம்பு சுரங்கத்தை கண்டுபிடித்து விட்டேனே! பிறகும் ஏன் இப்படி கூறுகிறீர்கள்?” எனக் கேட்டான்.

அவர் இன்னும் சிறிது தூரம் சென்றால் வெள்ளி சுரங்கம் இருக்கிறது என்று கூறினார்.

விறகுவெட்டி அதிர்ச்சியுற்றான். “ஏன் இதை முதலிலேயே கூறவில்லை?” எனக் கேட்டான். அதற்கு அவர், “நீ என்னை செம்பு சுரங்கம் பற்றி கூறியபோதே நம்பவில்லை. பிறகு எப்படி வெள்ளி சுரங்கம் பற்றி கூறினால் நம்புவாய்? இன்னும் சிறிது தூரம் உள்ளே செல்” எனக் கூறினார்.

அது எப்படி இருக்கும் என்ற சந்தேகம் தோன்றினாலும் இந்த தடவை ஒருவிதமான நம்பிக்கையுணர்வு அவனுள் தோன்றியிருந்ததால் அவன் இன்னும் சிறிது தூரம் உள்ளே தேடிச் சென்ற போது வெள்ளி சுரங்கத்தை கண்டறிந்தான்.

வெள்ளியை எடுத்துக் கொண்டு அவரிடம் திரும்பி வந்து, “இப்போது மாதத்திற்கு ஒருமுறை வந்தால் எனக்கு போதும். ஆனால் எனக்கு உங்களை பிரிவது மிகவும் கடினமானதாக இருக்கிறது. உங்களை பார்க்காமல் நான் எப்படி இருக்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. உங்களிடமிருந்து நீ ஒரு முட்டாள் என்பதை இனி நான் கேட்க முடிய போவதில்லை என்பது எனக்கு மிகவும் வருத்தமானதாக இருக்கிறது. நீங்கள் என்னை நீ ஒரு முட்டாள் என்று கூறுவதை நான் விரும்ப தொடங்கி விட்டேன்.” என்றான்.

அதற்கு அவர், “நீ சர்வ நிச்சயமாக முட்டாளேதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.

அதற்கு அவன், “நான் வெள்ளி சுரங்கத்தை கண்டு விட்டபிறகுமா இப்படிக் கூறுகிறீர்கள்?” எனக் கேட்டான். “ஆம், இதன் பின்னும் நீ முட்டாள்தான்! அதைத் தவிர வேறில்லை. ஏனெனில் இன்னும் சிறிது தூரம் சென்றால் அங்கு தங்க சுரங்கம் இருக்கிறது. அதனால் இன்னும் ஒரு மாதம் வரை காத்திருக்கத் தேவையில்லை. நாளையே வா.” என்றார்.

இந்த முறை அவர் நிச்சயமாக கிணடல் செய்கிறார் எனத் தோன்றியது. ஏனெனில் அப்படி அங்கே தங்கம் இருந்திருக்குமானால் இவர் ஏன் இப்படி இந்த மரத்தடியில் மற்றவர்கள் கொணடு வந்து தரும் உணவை நம்பி, -அவர்கள் கொண்டு வருகிறார்கள் பலதடவை கொண்டு வருவதில்லை.- இதுபோல வெயிலுக்கு ஒரு மறைப்பின்றி, மழைக்கு குடையின்றி குளிருக்கு போதுமான கம்பளியின்றி கஷ்டப் பட வேண்டும். அதனால் அவர் இந்த தடவை கேலிதான் செய்கிறார். ஆனால் அவர் சொல்வது எப்போதும் உண்மையாகத் தான் இருந்திருக்கிறது. மேலும் இதில் என்ன தீங்கு இருக்கிறது. யாருக்குத் தெரியும்? இந்த கிழவன் ஒரு புதிரான ஆளாகத் தான் இருக்கிறார்!

இன்னும் சிறிது தூரம் சென்றபின் அங்கே மிகப் பெரிய தங்க சுரங்கத்தைக் கண்டான். அவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. இந்த காட்டில்தான் அவன் தன் வாழ்நாள் முழுவதும் விறகுவெட்டி கழித்து வந்தான். அந்த கிழவன் இந்த காட்டின் ஆரம்பத்தில் உள்ள மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு இருக்கிறான். ஆனால் அவனுக்குத் தெரிந்தது, தனக்குத் தெரியவில்லை.

பை நிறைய தங்கத்தை எடுத்துக் கொண்டுவந்தவன் ஞானியிடம் வந்து, “இனிமேலும் நீ ஒரு முட்டாள் என்று சொல்ல மாட்டீர்கள் என நினைக்கிறேன்.” என்றான்.

அதற்கு அவர், “அப்படியேதான் தொடர்ந்து சொல்லுவேன். இது ஆரம்பம்தான். முடிவல்ல, அதனால் நாளை வா.” என்றார்.

அவன், “என்னது தங்கம் கிடைத்தது முடிவல்லவா, ஆரம்பம்தானா! என வியந்தான். அதற்கு அவர், “ஆம், நாளை இன்னும் சிறிது தூரம் உள்ளே சென்றால் அங்கே வைரங்களைக் காண்பாய். ஆனால் அதுவும் முடிவல்ல, ஆனால் நான் உனக்கு அதிகப்படியாக எதுவும் சொல்லமாட்டேன். ஏனெனில் சொல்லிவிட்டால் உன்னால் இன்று இரவு தூங்க முடியாது. அதனால் வீட்டிற்குப் போ. நாளை காலை முதலில் காட்டிற்குள் போய் வைரங்களை எடுத்துக் கொண்டு பின் வந்து என்னை சந்தி.” என்றார்.

அவனால் இரவு முழுவதும் தூங்கவே முடியவில்லை. ஒரு ஏழை விறகுவெட்டி அவனுக்கு செம்பு, வெள்ளி, தங்கம், மற்றும் வைர சுரங்கமும் கூட சொந்தமாகப் போகிறது என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. ஆனால் அவர் இதை ஆரம்பம் என்றல்லவோ கூறுகிறார், வைரத்திற்கு மேல் என்ன இருக்கமுடியும் என்பது அவனுக்கு புரியவில்லை. யோசித்து, யோசித்து பார்த்தபோதும் அவனுக்கு விளங்கவேயில்லை.

அடுத்தநாள் காலை அதிகாலையிலேயே அவன் அங்கே வந்துவிட்டான். அவர் உறங்கிக் கொண்டு இருந்தார். அவர் காலைத் தொட்டு வணங்கினான். அவர் கண் விழித்து அவனைப் பார்த்தார். “வந்து விட்டாயா? எனக்குத் தெரியும். உன்னால் இரவு முழுவதும் உறங்கியிருக்க முடியாது. போய் அந்த வைரங்களை பார்த்துவிட்டு வா.” என்றார்.

அவன் “வைரங்களை விட உயர்வானவையாக என்ன இருக்க முடியும் எனச் சொல்லுங்கள்.” எனக் கேட்டான். அதற்கு அவர் முதலில் வைரங்கள், பின்பு அடுத்தது, ஒன்றன் பின் ஒன்று! இல்லாவிடில் உனக்கு பைத்தியம் பிடித்துவிடும்.” என்றார்.

அவன் சென்று வைரங்களை எடுத்துக் கொண்டு சந்தோஷத்தில் நடனமாடிக் கொண்டே வந்து அவரிடம், “நான் வைரங்களை கணடுவிட்டேன், இப்போது நீங்கள் என்னை முட்டாள் என சொல்லமுடியாது.” என்றான்.

அவர் சிரித்துக் கொண்டே, “இன்னும் நீ முட்டாள்தான்.” என்றார்.

அவன், “இதை நீங்கள் விளக்கிச் சொல்லாவிட்டால் நான் இங்கிருந்து போகப் போவதில்லை” என்றான். அதற்கு அவர், இந்த செம்பு, வெள்ளி, தங்க, வைர சுரங்கங்களைப் பற்றி எனக்குத் தெரியும். ஆனால் நான் அவைகளைத் தேடி போவதில்லை. நான் அவைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஏனெனில் அவைகளை விட மதிப்புள்ள விஷயம் சிறிது தூரத்தில், வெளியே காட்டின் உள்ளே அல்ல – உள்ளே சிறிது தூரத்தில் உள்ளது. அதை நான் கண்டு விட்டதால் வெளியே உள்ள வைரங்களைப் பற்றி கவலைப் படுவதில்லை. இப்போது நீதான் முடிவெடுக்க வேண்டு்ம். உன்னுடைய பயணம் இந்த வைரங்களோடு முடிவடைந்து விட்டது என்றால் என்னைப் பொறுத்தவரை நீ இன்னும் முட்டாள்தான். எனக்கு இந்த சுரங்கங்களைப் பற்றித் தெரியும், ஆனால் நான் அவற்றைப் பற்றிக் கவலைப் படவில்லை. எவ்வளவுதூரம் வெளியே போனாலும் கிடைக்காத ஏதோ ஒன்று உள்ளே கிடைக்கிறது என்பதற்கு நானே சிறந்த சாட்சி. அது உன் உள்ளேதான் கிடைக்கும்,” என்றார்.

அவன் வைரங்களை கீழே போட்டான். “நான் உங்கள் அருகே உட்காரப் போகிறேன். நான் ஒரு முட்டாள் என்ற உங்களுடைய எண்ணத்தை நீங்கள் மாற்றிக் கொள்ளும்வரை நான் இங்கிருந்து நகரப் போவதில்லை.” என்றான்.

அவன் ஒரு அப்பாவி, வெகுளித்தனமான விறகுவெட்டி.

தகவல் அறிவுநிரம்பிய ஆசாமிகளுக்கு உள்ளே செல்வது கடினம். அந்த விறகு வெட்டிக்கு அது கடினம் அல்ல.

விரைவிலேயே அவன் ஒரு ஆழ்ந்த அமைதிக்கு, ஒரு ஆனந்தத்திற்கு, ஒரு உள்ளார்ந்த மௌனத்திற்கு ஆளானான்.

ஞானி அவனை உலுக்கி, “இதுதான் அது! இனி நீ காட்டிற்குள் போக வேண்டிய அவசியம் இல்லை. நான் உன்னை சொன்ன முட்டாள் என்ற வார்த்தைகளை விலக்கிக் கொள்கிறேன். நீ ஒரு விவேகி. இப்போது நீ உன் கண்களைத் திறக்கலாம். இந்த உலகம் முன்பு எப்படி எந்த கலரில் இருந்ததோ, அப்படி இல்லாமல் புது விதமாக புது மாதிரியாக, தோன்றுவதைப் பார்க்கலாம். மக்கள் என்பு தோல் போர்த்திய உடம்பாக இல்லாமல், அவர்களும் ஒளிவிடும் ஆன்மீக உயிர்களாக ......... இந்த பிரபஞ்சத்தில் தன்னுணர்வு எனும் கடலாக பார்க்கலாம்.” என்றார்.

விறகுவெட்டி கண்களைத் திறந்தான்.

அவன் ஞானியைப் பார்த்து, “நீங்கள் மிகவும் வித்தியாசமானவர். இதை நீங்கள் முன்பே கூறியிருக்க வேண்டும். நான் கிட்டதட்ட என் வாழ்நாள் முழுவதும் இந்த காட்டிற்கு வந்து கொண்டு இருக்கிறேன்.. நீங்கள் இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஏன் இவ்வளவு நாள் காத்திருந்தீர்கள்?” என்று கேட்டான்.

அதற்கு அவர். “நான் சரியான தருணத்திற்கு காத்திருந்தேன். காலம் கனிவது என்பதன் பொருள், கேட்பது மட்டுமல்லாமல் புரிந்து கொள்ளப்படவும் வேண்டும். பயணம் மிகச் சிறியதுதான். ஆனால் ஒவ்வொரு அடியும் ஒரு சென்றடைதல்தான். அதையும் தாண்டி செல்லலாம் என்பதை கற்பனைகூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு அந்த சென்றடைதல் மிகவும் நிறைவானதாக இருக்கும். எனவே சரியான காலம் முக்கியம்” என்றார்.

Source : Beyond Enlightenment ch. 27 Question no. 1

No comments: