Friday, October 22, 2010

மலர் 1 இணைய இதழ் 9 11 ஏப்ரல் 2009

தலையங்கம்

அன்பு நண்பர்களே!

ஓஷோ சொல்கிறார், “வாழு!” “உணர்வோடு வாழு”.
நாம் என்ன உணர்வில்லாமலா வாழ்கிறோம்? என்று ஒருவர் கேட்கிறார்.
ஆம். அதிலென்ன சந்தேகம்?
எப்படி அது? மறுபடியும் கேள்வி.
நமக்கு இயற்கையோடு என்ன தொடர்பு இருக்கிறது?
பிரபஞ்ச இயக்கத்தோடு என்ன தொடர்பு இருக்கிறது?
உலகின் இயக்கத்தோடு, உலக வாழ்வின் உண்மை நிலையோடு என்ன தொடர்பு இருக்கிறது?
அப்படியானால் தொடர்பு எதுவும் நமக்கு இல்லை என்கிறீர்களா?
கேள்வி மறுபடியும்.

அப்படியல்ல தொடர்பு இருக்கிறது! நல்லவேளையாக நாம் இன்னும் நூறு சதவீதம் இயந்திரங்களாகவில்லை. ஆனால் அந்தத் தொடர்பு பற்றிய உணர்வு ஒரு சிறிதும் நமது நடவடிக்கைகளில், வாழ்க்கையில் இல்லை என்பதே உண்மை.

நமது வாழ்க்கையாக இருப்பது என்ன?
பணம் சம்பாதிக்கும் குறிக்கோள்
பக்கத்து வீட்டுக்காரனை மிஞ்சும் வேகம்
சமுதாய மதிப்பு பெறுவதற்கான நடிப்பு.
போலி கௌரவத்தை பாதுகாக்கும் முயற்சி
தலைவனை எதிர்பார்க்கும் அடிமைத்தனம்
கட்டுப்பாட்டை மீறும் தயக்கம்
சொல்லிக்கொடுத்த படி வாழும் பணிவு
இப்படி ஒரு இயந்திர மனிதனின்(ROBOT) அனைத்து குணாதிசயங்களும் கொண்டது நமது நல்ல பொறுப்புள்ள
சமூக மனிதனின் வாழ்வு.

ஒரு கம்யூட்டர் எப்படி தனியாக இயங்குகிறதோ, எப்படி அதன் திட்டஅமைப்போ(PROGRAMME) அதன்படி இயங்குகிறதோ, எப்படி அதைவிடப் பெரிய கம்யூட்டருக்குக் கட்டுப்படுகிறதோ, எப்படி அதற்கு அதன் திட்டஅமைப்பிற்கு மேல் எதையும் உணரும் சக்தியில்லையோ, அப்படித்தான் இன்றைய மனிதனின் வாழ்க்கை இருக்கிறது.

தனது குடும்பம் என்ற ஒரு பத்து பேர்
தனது நண்பனும் பகைவனும் என்ற பத்து பேர்
தனது தொழிலில் ஒரு பத்து பேர்
தனது வீதியில் ஒரு பத்து பேர்
தனது ஜாதியில் ஒரு பத்து பேர்
இந்த ஐம்பது பேரின் நடுவில் தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதும், பாசமாக, நட்பாக, அன்பாக, வீரனாக, நல்லவனாக, என்று காட்டிக் கொள்வதுமே வாழ்வின் குறிக்கோளாக இருக்கிறது.

இந்த ஐம்பது பேரின் நடுவில் ஏற்படும் அவமானமும், கோபமும், கௌரவமும் மட்டுமே அவனை பாதிக்கின்றன.

மற்றபடி,
உலகின் வெப்பம் உயர்வதோ, கதிர்வீச்சின் ஆபத்தால் கான்ஸர் பெருகிவரும் அபாயமோ, அரசியல்வாதிகள் சுயநலத்தால் உலகத்தின் அழிவு நெருங்கி வருவதோ, அண்டார்டிகாவில் பனி முழுவதும் இவ்வருடம் உருகிய ஆபத்தோ, இலங்கையில் தினமும் பல்லாயிரம் பேர் பரிதவிப்பதோ, அவனுக்கு உரைப்பதில்லை. அவனுக்கு அவனை குழந்தை, கணவன் அல்லது மனைவி மட்டுமே பாதிக்கின்றனர்.

சுவிஸ் வங்கியில் 72 லட்சத்து 80 ஆயிரம் கோடி இந்திய அரசியல்வாதிகளின் சுருட்டல் பணம் சேமிப்பாக இருக்கிறதாம்.
இதில் ஒரு சிறு பங்கே இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடன். இந்தப் பணம் இந்திய மக்கள் பணம். இது வந்தால் இந்த பஞ்சமும், பட்டினியும், பள்ளியில்லாக் குறையும் போய்விடும்.

ஆனால் நாம் இதை சிந்தித்துப் பார்த்து போராட மாட்டோம். நமது அறிவில் பக்கத்து வீட்டுக்காரன் நம் வீட்டில் எறிந்த குப்பைக்கு நியாயம் தேடுவதே முக்கியமாக இருக்கிறது.

அதே போல் சூரிய உதயமோ, மறையும் மாலைப் பொழுதின் அழகோ, பௌர்ணமி பிம்பமோ, பூக்களின் மணமோ, அருவிகளின் அழகோ, கடலின் ஆர்ப்பரிப்போ, மனிதனை தொடுவதில்லை. போகுமிடத்திலெல்லாம் போட்டோ எடுத்துக் கொண்டு அடுத்தவரிடம் காட்டி பெருமைப் படும் சிறுமையே அவனிடம் உள்ளது.

பாதையில் அப்போதுதான் கடந்து வந்த ஒரு மரத்தைப் பற்றிக் கேட்டால் அவனுக்குத் தெரியாது. காலையில் சாப்பிட்ட டிபனை மதியம் கேட்டால் தெரியாது. ஆனால் சாகும் வரை போட்டுள்ள திட்டம் பற்றி, கனவு பற்றி, குறிக்கோள் பற்றி, துல்லியமாகத் தெரியும். அதோடு எப்போதும் அதைப் பற்றிய கவலை வேறு அவனுக்கு.

இந்த முழு பிரபஞ்சத்திலும் மனிதனைத் தவிர மற்ற அனைத்தும் பேராசையும், குறிக்கோளும், திட்டமிடலும், முடிவுகளும் இல்லாமலேயே இருக்கின்றன. அவை செய்வது வாழ்தல் மட்டுமே. எந்த குறிப்பிட்ட பாதையும் அமைத்துக்கொள்ளாமல், கருத்தும், கொள்கையும், உயர்வும், தாழ்வும், குறிக்கோளும், கோட்பாடும் இல்லாமல் கணத்துக்கு கணம் வாழ்கின்றன. ஆனாலும் அழகாய் இருக்கின்றன. இசைவாய் இருக்கின்றன. உயிர்துடிப்போடு இருக்கின்றன.

ஏன் மனிதன் மட்டும் தனக்குக் கிடைத்த தன்னுணர்வோடு வாழ்வை நேரடியாக சந்தித்து வாழக் கூடாது?
ஏன் அடிமையாய், தலைவனுக்கோ, கடவுளுக்கோ, கொள்கைக்கோ, குடும்பத்திற்கோ அடிமையாய் வாழ வேண்டும்?

ஏன் பெரும்பான்மை பெண்கள் டிவி சீரியலுக்கும், இளைஞர்கள் சினிமாவுக்கும், ஆண்கள் பணப் போராட்டத்துக்கும், அரசியல்வாதிகள் அதிகார வெறிக்கும், குழந்தைகள் புத்தகச் சுமைக்கும், அடிமையாய் இருந்து மடிய வேண்டும்?

இது ரோபோ வாழ்க்கையல்லவா?
இது இயந்திரமாக வாழ்வது அல்லவா?

இடையில் ஒரு சில கணங்கள் மட்டுமே, அதுவும் வேறு வழியின்றி செக்ஸ், பசி, பயம் எனும் இயற்கை தன் கட்டுப்பாட்டை விட்டுவிடாமல் வைத்திருக்கும் உணர்வுகளால் மட்டுமே மனிதன் இயற்கையோடு இணைந்திருக்கிறான். இதிலிருந்து விடுபட்டு முழு இயந்திரமாகிப் போகும் முயற்சியும் நடக்கிறது.

மூச்சு விடுவது மனிதனின் கையில் இல்லை.
இரத்த ஓட்டம் மனிதனின் கையில் இல்லை.
ஜீரணம் நடப்பது மனிதனின் கையில் இல்லை.
சுரப்பிகள் சுரப்பது மனிதனின் கையில் இல்லை.
இறப்பு மனிதனின் கையில் இல்லை.
இதனால் மட்டுமே இந்தத் தொடர்புகள் தொடர்கின்றன.
மற்றபடி எல்லா உணர்வுகளும் மனதின் கட்டுப்பாட்டில் நடக்கும் நடிப்பாக மாறுகின்றன.
இப்படி மனிதன் இயந்திரமாகிவிட்ட நிலையில் வளர்ச்சியோ, ஆன்மீகமோ, நிலைமாற்றமோ ஏது?
இயந்திரங்கள் மேலும் மேலும் சுறுசுறுப்பாக தனது திட்ட அமைப்புபடி செயல்படுமே அல்லாது அதற்கு உணர்வுநிலை வளர்ச்சி ஏது? உணர்வே அற்றதல்லவா அது !
இப்படி இறந்துபோன மனித கூட்டத்திற்கு எதிரானவர் ஓஷோ.

மற்ற சாமியார்களுக்கும் ஓஷோக்கும் என்ன வேறுபாடு என்று ஒரு கேள்வி.
பதில் இதுதான்
மற்ற எல்லா சாமியார்களும், மதங்களும், அமைப்புகளும், உங்கள் திட்ட அமைப்பை(PROGRAMME) உயர்த்த உதவும், அல்லது இருக்கும் திட்ட அமைப்புக்கு பதிலாக வேறு ஒன்றை கொடுக்கும். அவரவர்களுடையதே உயர்ந்ததென்று விளம்பரம் செய்யும், வியாபாரம் செய்யும்.
அந்த திட்ட அமைப்பின் எல்லைகள், படிகள், அதனால் அடையும் குறிக்கோள்கள் எல்லாம் தெளிவாய் இருக்கும்.
ஆனால்
ஓஷோ,
எல்லா திட்ட அமைப்புகளையும் உடைத்தெறி, என்னிடம் எந்த திட்டஅமைப்பும், வழியும், குறிக்கோளும், கட்டுப்பாடும் இல்லை. என்னையும் சேர்த்து விலக்கிவிட்டு உன் வாழ்வை வாழு, என்கிறார்.

இதை தெளிவாக்க ஒரு சம்பவம் சொல்கிறேன்.
ஒரு அன்பர் என்னிடம் வந்து, “எனது நெருங்கிய நண்பன் முதலில் குடிப்பான், செக்ஸில் ஈடுபாடு, கோபப் பட்டு விடுவான், செலவழிக்க தயங்க மாட்டான். அதனால் குடும்பத்தில் பிரச்னை, மற்றவர்களுக்கும் கஷ்டம். மனைவிக்கு நிம்மதியில்லை. உடம்பு கெட்டுபோகிறதே என்ற பயமும், கவலையும் வேறு. இப்படிபட்ட சூழ்நிலையில் இருந்தவன் ஒரு நல்ல ஆன்மீக அமைப்பில் சேர்ந்தான். ரெகுலராக தியானமும் யோகாவும் கற்று வந்தான். இப்போது முற்றிலுமாக மாறிவிட்டான். குடி இல்லை, கோபம் இல்லை. குடும்பத்தில் நிம்மதி. அவனே சந்தோஷமாயிருக்கிறான். தான் இப்படி மாறியதற்கு யோகாசனம் செய்ததும், அவர்கள் கற்றுத் தந்த தியானமுமே காரணம் என்று பலரையும் அந்த அமைப்பில் சேர்த்துவிடுகிறான். தான் இப்போது சந்தோஷமாயிருப்பதாக அவனே கூறுகிறான்.

ஆனால் நீங்கள் யோகா, டாய் சி, தியானம், இயற்கை உணவுமுறை என்று மனிதனின் வாழ்வு வளத்திற்கும், தேக ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும், திருப்தியான குடும்பத்திற்கும், அதிக திறமைக்கும் உதவும் அமைப்புகள் அனைத்தையும் ஆன்மீகமே அல்ல என்றும், உண்மையில் மனிதனுக்கு உதவுபவை அல்ல என்றும், ஓஷோ சுட்டிக் காட்டுவது முற்றிலும் மாறுபட்டது என்றும் கூறுகிறீர்கள். அது எப்படி?” என்றார்.

“சரியான கேள்வி என்பது போலத்தான் தெரிகிறது அல்லவா,” என்று கூறிய நான், “ஓஷோவின் ஒரு பதில் எனக்கு ஞாபகம் வருகிறது. அதாவது ஒரு மனிதனுக்கு அவனது குடும்பம், சமூகம், நண்பர்கள், வீடு, சொத்து, பணம், வியாபாரம், எல்லாம் மறைந்து விட்டதாக வைத்துக் கொள்வோம். அதோடு செடி, பாறை, நதி என உள்ள இந்த உலகமும் மறைந்து விட்டது. வெளி உலகமே இல்லை. அவன் மட்டும் தன்னந் தனியாக இருக்கிறான். அப்போது அவன் மகிழ்ச்சியாக உணர்வானேயானால் அதுதான் உண்மையான மகிழ்ச்சி. ஆனந்தம். உண்மையான ஆன்மீகத்தில் பிறக்கும் அனுபவம்.
மற்றதெல்லாம் தவறே, போலியே, கெடுதலே என்கிறார்.

இப்போது உங்கள் நண்பரின் சந்தோஷம் என்பது என்ன? சமூகத்தில் நல்ல பெயர், மற்றவர்களை விட அதிக ஆயுள் வாழ்வோம் என்று வந்துள்ள நம்பிக்கை, தவறு செய்கிறோம் என்ற குற்றவுணர்வுலிருந்து விடுதலை, இப்படி மற்றவர்களை ஒப்பிட்டுப் பார்த்து கிடைக்கும் சந்தோஷம், தனது பேராசை நிறைவேறும் என்ற நம்பிக்கை, சமூக மதிப்பீட்டில் உயர்ந்துவிட்ட ஆணவம் இவைகளே அவரது சந்தோஷம். உள்ளிலிருந்து வந்திருப்பதல்ல இது.

இவர் கற்ற தியானமும், யோகமும், அவரை இந்த சமூகத்திற்குப் பொருத்தமானவனாக சமூகத்தையும், அதன் நம்பிக்கைகளையும், மதிப்பீடுகளையும் மதித்து கடைபிடிப்பவனாக, அதற்காக பெருமைப் படுபவனாகவே மாற்றியுள்ளன. ஆரோக்கியமான உடம்பு பெறுவதும் தன்னை சூழ்ந்துள்ளவர்களை விட நீண்ட ஆயுள் வாழும் பேராசையின் விளைவேயன்றி உடலைக் கொண்டாடி அனுபவப்படுவதற்கு அன்று”. என்றேன்.

“சரி சார். ஆனால் அவருக்கு இப்போது முன்பு போல கோபம் வருவதில்லையே. அது ஒரு உள் வளர்ச்சியில்லையா?” என்றார்.
“உங்கள் நண்பரை விசாரியுங்கள். கூர்ந்து கவனியுங்கள். ஆபீஸ் பையனோ, கூட்டும் பணியாளோ தவறு செய்தாலும் கோபப் படுவதில்லையா? அல்லது சமூகத்தில் சொல்வது போல் அனாவசியமாகக் கோபப் படுவதில்லையா?” என்றேன்.

“தப்பு செய்தால் கோபப்படத்தான் செய்வார், ஆனால் முன்போல அனாவசியமாகக் கோபப் படுவதில்லை.” என்றார்.

அப்படியானால் அவர் உள்ளே கோபம் அப்படியேதான் இருக்கிரது. அதை எப்படி கட்டுப்படுத்துவது, கையாளுவது என்பதையே உங்கள் தியானமும், யோகமும் கற்றுத் கொடுத்திருக்கின்றன.
இதைத் தான் ஓஷோ சொல்கிறார். எல்லா அமைப்புகளும் உன் திட்ட அமைப்பை, கட்டமைப்பை, கட்டுப்பாடுகளை, கோட்பாடுகளை, வரையறைகளை, அணுகுமுறைகளை, சுருக்கமாகக் கூறினால் உன் மனதை சமூகத்தின் மதிப்பீட்டுப்படி அதற்குப் பொருந்தும்படியாக, ஏற்றபடியாக, உயர்வும், பாராட்டும் கிடைக்கும்படியாக, திருப்தி கிடைக்கும்படியாக மாற்றி அமைப்பதையே செய்கின்றன. ஆகாதவற்றை நீக்கி, வைரஸ்களை களைந்து, ஓவர்ஆயில் செய்து, சமூகத்திற்குத் தகுந்தபடி வேலைசெய்யுமாறு மாற்றியமைத்துத் தருகின்றன.

ஆனால் ஆன்மீகம் என்பது உள்உணர்வுப்படி வாழ்வது!
உணர்வின் தெளிவில் வாழ்வது!
இயற்கையுணர்வில் ஐக்கியப்பட்டு வாழ்வது !
தன்னுணர்வோடு வாழ்வது.!

அப்படி வாழும் போது உடலில் பிறப்பது யோகாசனம், டாய் சீ.
இதயத்தில் பிறப்பது அன்பு, கருணை.
அறிவில் பிறப்பது கலை, விஞ்ஞான கண்டுபிடிப்புகள்.
ஆகவே ஓஷோவின் செயல்முறைகளும், தியானங்களும், சுட்டிக்காட்டுதல்களும் ஒருவரை உள்ளே மாற்றுவது.
உள்ஒளி தருவது.! மற்றவையெல்லாம் உன்னைக் குருடனாகவே வைத்திருந்து வழிகாட்டும், திறமையைக் கொடுக்கும், அமைப்புகளே.” என்றேன்.

ஒரு மரம் என்ன செய்கிறது?
கணத்துக்குக் கணம் வாழ்கிறது.
வாழ்வை முழுமையாக சந்திக்கிறது.
நேர்கொள்கிறது.
அப்படி வாழ்வின் எல்லாப் பருவங்களையும், காலங்களையும், பஞ்சபூதங்களையும், இந்த உலக நடப்புகளையும் நேர்கொண்டு
கணத்துக்குக் கணம் வாழும்போது அதன் வளர்ச்சி தானாய் நடக்கிறது. திடீரென துளிர்கள். ஒருநாள் மலர்கள்.
பின்பு கனி.

இது போலவே மனிதன் வாழ்வை தன்னிடமுள்ள தனித்தன்மையான தன்னுணர்வுடன் நேர்கொண்டு வாழும்போது வாழ்க்கை அவனை பக்குவப்படுத்தும். அப்படி வாழ்ந்து கிடைக்கும் கனியான அனுபவம் எதுவானாலும் அதுவே உண்மை. அதுவே சத்தியம். அதுவே மேன்மை. அதுவே அடைய வேண்டியது. அதுவே வாழ்வின் அர்த்தம். அதுவே வாழ்வின் பயன். அதுவே வாழும் வழி.

ஆகவே இயந்திரத்தனத்தை உடையுங்கள். இறந்தவனாய் இருக்காதீர்கள்.
அதைவிட விலங்காய் இருப்பது முற்றிலும் மேலானது. ஏன்? ஏனெனில் இயந்திரத்திற்கும், இறந்தவனுக்கும் உணர்வு இல்லை.
வாழ்க்கை இல்லை. உணர்வு நிலை வளர்ச்சி சாத்தியமில்லை.
ஆனால் விலங்காய் இருந்தாலும் வாழ்வின் அம்சமாய், உணர்வின் வெளிப்பாடாய் உள்ள நிலை அது. அங்கிருந்து தன்னுணர்வு பெற்ற வளர்ச்சியடைந்த உணர்வுநிலைதான் மனிதன். அப்படி மனிதனாய் மனித உணர்வுகளோடு வாழ்ந்த சிலர் அடைந்த உணர்வுநிலை உயர் அனுபவம்தான் புத்தா.

ஒரு நதி வரைபடத்தைப் பார்த்து வழி கண்டுபிடித்து கடலை அடைவதில்லை.
பறவைகள் கருவியால் இடம் கண்டு கூடுகட்ட வருவதில்லை.
இயற்கையோடு இணைந்திருக்கின்றன. அவ்வளவே. உணர்வுப்படி நடக்கின்றன. அவ்வளவே.
இயற்கை உணர்வை, பிரபஞ்சத்தொடர்பை விட்டுவிட்ட மனிதனை, இயந்திரமாகிவிட்ட மனிதனை, உணர்வுள்ள, தன்ணுணர்வோடு கூடிய மனிதனாக்குவதே முதலில் செய்ய வேண்டியது என்கிறார் ஓஷோ.

ஆகவேதான் ஆரம்ப காலங்களில் லட்சக்கணக்கானோர் முன் பேசிய ஓஷோ அவர்களை லட்சியம் செய்யாமல் வடிகட்டத் துவங்கினார்.

உணர்வோடு கூடிய மனிதர்களே எனக்குத் தேவை. பழைய மனிதனை, அவனது திட்ட அமைப்பை முன்னேற்றுவதோ, மாற்றுத் திட்டஅமைப்பு கொடுப்பதோ எனது வேலை அல்ல.
மாறாக அதைச் செய்யும் சாமியார்கள், மதங்கள், மதநூல்கள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், கடவுள்கள், அரசியல்வாதிகள், கோட்பாடுகள் எல்லாவற்றையும் நான் எதிர்க்கிறேன்.

மனித உணர்வோடு கூடியவர்கள் என்னுடன் வாருங்கள். ஒவ்வொருவரும் சுதந்திரத்தோடும், முழு உணர்வோடும், கிடைத்த வாழ்க்கையை வாழ்வோம். வளர்வோம், பக்குவமாவோம். இதுவே எனது அறைகூவல்.
இப்படி தனித்தன்மையோடும், தன்னுணர்வோடும் முழுசுதந்திரத்தோடும் வாழும் மனிதனே என் புதிய மனிதன். என் ஜோர் புத்தா. அப்படி மனிதன் வளரும்படியாக வாழும் சூழ்நிலையை உருவாக்குவதே என் கம்யூன் என்கிறார் ஓஷோ.

எனவே நமக்கு இறந்த சமூகம் வேண்டாம். உயிருள்ள கம்யூன் வேண்டும். அதை நோக்கி வழி நடப்போம்.

அன்பு,
சித்.


ஓஷோ வீடியோ

1. OSHO: Why do I get so sensitive?

2. OSHO: Strange Consequences

3. OSHO: Being in Love


கவிதைப்பகுதி

உயிர்த்தெழு

அவமானத்தில் அகந்தையை இழக்கும்போதெல்லாம்,
ஆபத்தில் அடிவயிற்றை உணரும்போதெல்லாம்,
அன்பிற்குரியவர் இறக்கும்போதெல்லாம்,
தோல்வியில் ஆணவம் அழியும்போதெல்லாம்,

மனிதன் ஒருமுறை மரணத்தை தொடுகிறான்.

ஆனால் நண்பா!
அன்பும் இதே அனுபவத்தை தருவதுதான்!
ஏன்? இதைவிட ஒருபடி மேலே போய்............

‘உன்’ மரணத்தோடு நிற்காமல்,
‘நீ’ விரிந்து மற்றொன்றில்,
உயிர்த்தெழும் அனுபவமும் காட்டுவது அது!

மரணத்தை மட்டும் உணர்ந்தவர் கண்டது துறவறம்,
உயிர்த்தெழும் அனுபவமும் உணர்ந்தவர் கொண்டது
அன்பான வாழ்வு.
ஆகவே நண்பா!
அன்பில் இற!
புதிதாய் பிற!


அன்பின் எல்லை

ஆஹா! அன்பின் எல்லை கண்டேன்,
அளவிலா ஆனந்தம் கொண்டேன்,
அதை..............
உங்களுக்கு சொல்ல வந்தேன்,
இதோ அந்த அடையாளம்.

இலக்கிழந்த மனம்,
எரிமலையாய் குளிர் தீ உமிழும் இதயம்,
எப்போதும் மிதக்கும் உடல்,
வானமும் பற்றாத பொருள்
வரம்பிழந்த பரிமாணம்.

இப்போது புரிகிறதா?
புரிந்து பயனில்லை,
புறப்படுங்கள்............நேசக்கரம் நீட்டி!

கேள்வி பதில் பகுதி

ஓஷோவின் செய்தி என்ன? என்ற கேள்விக்கு பதிலாக இரு
கேள்வி பதில்களை வெளியிடுகிறோம்.

அதில் ஒன்று இம்மாதம் வெளியாகிறது.
அடுத்தது அடுத்தமாதம்.

மேற்கிற்கு விரைவில் திரும்பி செல்கிறேன். நான் உங்களுடன் இருந்த ஐந்து மாதங்களை திரும்பி பார்த்து யோசிக்கிறேன். நான் பகவானுடன் இருந்திருக்கிறேன் மற்றும் நான் பகவானுடன் இருக்கவில்லை. நான் அவரை பார்த்திருக்கிறேன் ஆனாலும் ஏதோ ஒன்று பார்க்கப் படாமல் உள்ளது. நான் அவரை கேட்டிருக்கிறேன் ஆனாலும் இன்னமும் நான் அவர் கூறுவதை கேட்காமல் செவிடாகவே இருக்கிறேன்.

நான் எந்த பாதுகாப்புணர்வும் இல்லாமல், நிச்சயத்தன்மை பற்றிய எந்த உணர்வும் இல்லாமல், பிடிமானம் கொள்வதற்கு ஏதுமின்றி செல்கிறேன். நான் உங்களை தவற விட்டு விட்டேனா ?

இந்த கேள்வி சுவாமி ஆனந்த் சுபூதியிடமிருந்து வந்துள்ளது. இல்லை – நீ என்னை கண்டிப்பாக தவற விடவில்லை. என்னை விட்டு செல்லும்போது நிச்சயதன்மை பாதுகாப்பு இவைகளுடன் செல்லும் மக்கள்தான் என்னை தவற விட்டவர்கள்.

உனக்கு ஒரு கோட்பாடு கொடுப்பதற்க்காக நான் இங்கு இல்லை. ஒரு கோட்பாடு ஒருவருக்கு நிச்சயதன்மையை அளிக்கிறது. எதிர்காலத்தை குறித்து எந்த உறுதிமொழியையும் அளிப்பதற்காக நான் இங்கு இல்லை. எதிர்காலத்தை குறித்த எந்த உறுதிமொழியும் ஒருவருக்கு பாதுகாப்பு உணர்வு அளிக்கிறது.

உன்னை துடிப்புணர்வுள்ளவனாகவும், விழிப்புணர்வுள்ளவனாகவும் மாற்றுவதற்காகவே நான் இங்கே இருக்கிறேன். அதாவது வாழ்வில் இருக்கும் எல்லா பாதுகாப்பற்ற தன்மையோடும், வாழ்வில் இருக்கும் எல்லா நிச்சயமற்ற தன்மையோடும், வாழ்வில் இருக்கும் எல்லா ஆபத்துகளோடும் இப்போது இங்கே இருப்பது.

எனக்கு தெரியும் நீ ஏதோ ஒரு நிச்சயதன்மை, ஏதோ ஒரு ‘இசம்’ சேர்ந்துகொள்ள ஏதாவது ஒரு இடம், நம்புவதற்கு யாரோ ஒருவரை தேடி இங்கே வந்துள்ளாய். நீ உனது பயத்தின் காரணமாக இங்கே வந்துள்ளாய். நீ ஒரு விதமான அழகான சிறையை தேடுகிறாய் – எனவே எந்த விழிப்புணர்வுமின்றி நீ வாழலாம்.

நான் உன்னை இன்னும் பாதுகாப்பற்றவனாக, இன்னும் நிச்சயமற்றவனாக ஆக்குவேன். ஏனெனில் அப்படித்தான் வாழ்வு உள்ளது, அப்படித்தான் கடவுள் உள்ளார். எங்கு அதிக பாதுகாப்பற்ற தன்மை, அதிக ஆபத்து உள்ளதோ, அப்போது விழிப்புணர்வுடன் மட்டுமே செயல்பட முடியும்.

இரண்டு வாய்ப்புகள் உள்ளன. நீ உன் கண்களை மூடிக்கொண்டு கோட்பாட்டின்படி வாழ்பவனாகலாம்.---- ஒரு கிறிஸ்துவனாகி விடு, அல்லது ஒரு இந்துவாகிவிடு, அல்லது ஒரு முகம்மதியனாகி விடு..... பிறகு நீ ஒரு நெருப்பு கோழியை போல ஆகிவிடுவாய். அது வாழ்வை மாற்றுவதில்லை. அது வெறுமனே உனது கண்களை மூடிவிடுகிறது. அது உன்னை மடையனாக்கி விடுகிறது. அது உன்னை புத்திசாலிதனமற்றவனாக்கி விடுகிறது. உனது புத்தியற்ற தன்மையில் நீ பாதுகாப்பாக உணர்கிறாய்.--- எல்லா முட்டாள்களும் பாதுகாப்பாக உணர்கின்றனர். உண்மையில், முட்டாள்கள் மட்டுமே பாதுகாப்பாக உணர்கின்றனர். ஒரு உண்மையான உயிரோட்டமுள்ள ஒரு மனிதன் எப்போதும் பாதுகாப்பற்ற தன்மையை உணர்வான். என்ன பாதுகாப்பு இருக்கமுடியும்?

வாழ்வு இயந்திரதனமான செயலல்ல. அது நிச்சயதன்மையோடு இருக்க இயலாது. அது ஒரு கணிக்க இயலாத மர்மம். அடுத்த நொடி என்ன நடக்க போகிறது என்பதை அறிந்தவர் எவருமில்லை. ஏழாவது சொர்க்கத்தில் எங்கோ இருக்கிறார் என நீ நினைக்கும் கடவுள்கூட, அவர்கூட,..... அவர் அங்கு இருந்தால் ---அவருக்கு கூட என்ன நடக்கப்போகிறது என தெரியாது, ஏனெனில் என்ன நடக்கப்போகிறது என்பது அவருக்கு தெரிந்திருந்தால் பிறகு வாழ்க்கை போலியானது, பிறகு எல்லாம் ஏற்கனவே எழுதிவைக்கபட்டு விட்டது. எல்லாவற்றின் இறுதி முடிவும் முன்பே உள்ளது. எதிர்காலம் திறந்திருக்குமானால், அடுத்து என்ன நடக்கபோகிறது என்பது அவருக்கு எப்படி தெரியும்? அடுத்தநொடி என்ன நிகழபோகிறது என்பதை கடவுள் அறிந்திருப்பாரேயானால், பிறகு வாழ்வு வெறும் ஒரு இறந்த இயந்திரதனமான நிகழ்வு, பிறகு சுதந்திரம் இல்லை. சுதந்திரம் இல்லாமல் வாழ்வு எப்படி இருக்கமுடியும்? பிறகு வளர்வதற்கு அல்லது வளராமல் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. எல்லாமும் ஏற்கனவே முடிவு செய்யபட்டிருந்தால் பிறகு எந்த பிரகாசமும் இல்லை, எந்த கம்பீரமும் இல்லை. பிறகு நீங்கள் வெறும் இயந்திர மனிதர்கள்.

இல்லை..... எந்த பாதுகாப்பும் இல்லை. அதுவே என்னுடைய செய்தி. எதுவும் பாதுகாப்பாக இருக்க இயலாது, ஏனெனில் ஒரு பாதுகாப்பான வாழ்வு இறப்பை விட மோசமானதாக இருக்கும்.

எதுவும் நிச்சயமில்லை. வாழ்வு நிச்சயமற்ற தன்மையில் நிறைந்துள்ளது. ஆச்சரியங்களால் நிறைந்துள்ளது. அதுதான் அதன் அழகு! இப்போது நான் நிச்சயமாக கூறுகிறேன் என கூறும் நொடிக்கு வர இயலாது. நான் நிச்சயமாக கூறுகிறேன் என நீ கூறும்போது நீ வெறுமனே உனது இறப்பை அறிவிக்கிறாய். நீ தற்கொலை செய்து கொள்கிறாய்.

வாழ்க்கை ஆயிரத்தோரு நிச்சயமற்ற தன்மைகளோடு நகர்ந்துகொண்டே இருக்கிறது. அதுதான் அதன் சுதந்திரம். அதனை பாதுகாப்பற்ற தன்மை என கூறாதீர்கள். மனம் ஏன் சுதந்திரத்தை பாதுகாப்பற்ற தன்மை என கூறுகிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

நீ சிறைசாலையில் ஒரு சில மாதங்கள் அல்லது ஒரு சில வருடங்கள் வாழ்ந்திருக்கிறாயா? நீ சிறைச்சாலையில் ஒரு சில வருடங்கள் வாழ்ந்திருந்தால், விடுதலையாகும் நாள் வரும்போது கைதி எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற தன்மையை உணரத் தொடங்குகிறான். சிறையினுள் அனைத்துமே நிச்சயமானவை. அனைத்தும் இறந்த பழக்க வழக்கமே. உணவு அவனுக்கு கொடுக்கப் படுகிறது. அவனுக்கு பாதுகாப்பு கொடுக்கப் படுகிறது. அடுத்தநாள் பசியுடன் இருக்கும்போது உணவு இல்லாமல் போய்விடகூடும் என்ற பயமில்லை. – எதுவுமில்லை. அனைத்தும் நிச்சயமானவை. இப்போது திடீரென, பல வருடங்களுக்கு பிறகு சிறைச்சாலை அதிகாரி அவனிடம் வந்து இப்போது நீ விடுதலையடைய போகிறாய் என கூறுகிறார். அவன் நடுங்க தொடங்குகிறான். சிறைச்சாலையின் சுவர்களுக்கு வெளியே, திரும்பவும் நிச்சயமற்ற தன்மைகள், திரும்பவும் அவன் தேட வேண்டியிருக்கும், அலைய வேண்டியிருக்கும் திரும்பவும் அவன் சுதந்திரத்தில் வாழ வேண்டியிருக்கும்.......

சுதந்திரம் பயத்தை உருவாக்குகிறது. மக்கள் சுதந்திரத்தை பற்றி பேசுகிறார்கள் ஆனால் அவர்கள் பயப்படுகிறார்கள். ஒரு மனிதன் சுதந்திரத்தை கண்டு பயப்பட்டால் அவன் இன்னும் மனிதனாகவில்லை. நான் உங்களுக்கு சுதந்திரத்தை அளிக்கிறேன். – நான் உனக்கு பாதுகாப்பை கொடுப்பதில்லை. நான் உனக்கு புரிந்துகொள்ளுதலை தருகிறேன். – நான் உனக்கு அறிவை தருவதில்லை. அறிவு உனக்கு நிச்சயதன்மையை அளிக்கிறது. நான் உனக்கு ஒரு சூத்திரத்தை அளிக்க முடிந்தால், ஒரு அமைப்பான நிச்சயத்தை அளித்து ஒரு கடவுள், ஒருபுனித ஆவி, ஒரே கடவுளின் மைந்தன், ஏசு, சொர்க்கமும் நரகமும் உள்ளது, மற்றும் இவையெல்லாம் கெட்ட செயல்கள். பாவம் செய்தால் நரகம் செல்வாய். புண்ணிய செயல்கள் என நான் கூறுவதை செய்தால் நீ சொர்க்கத்தில் இருப்பாய் --- முடிந்தது – பிறகு நீ நிச்சயதன்மையடைவாய்.

அதனால்தான் பல மக்கள் கிறிஸ்துவனாக இருப்பதையும், இந்துவாக இருப்பதையும், முகமதியர்களாக இருப்பதையும் ஜைனர்களாக இருப்பதையும் தேர்ந்தெடுக்கிறார்கள். – அவர்களுக்கு சுதந்திரம் தேவையில்லை. அவர்களுக்கு நிலையான சூத்திரங்கள்தான் தேவை.

ஒரு யூதன் இறந்து கொண்டிருந்தான். – திடீரென சாலையில் அவனுக்கு ஒரு விபத்து. அவன் ஒரு யூதன் என்பதை அறிந்தவர் யாருமில்லை. ஒரு பாதிரியார் அழைக்கப்பட்டார். ஒரு கத்தோலிக்க பாதிரியார். அவர் யூதனுக்கு பக்கத்தில் குனிந்து – மனிதன் இறந்து கொண்டிருந்தான். இறப்பின் விளிம்பில் இருக்கிறான். பாதிரியார், “நீ கடவுளாகிய தந்தை, புனித ஆவி, மகன் ஏசு எனும் மூவரை நம்புகிறாயா” என கேட்டார்.

அந்த யூதன் அவனுடைய கண்ணை திறந்து, இங்கே பார். நான் இறந்துகொண்டிருக்கிறேன். – இவர் விடுகதை போட்டுக் கொண்டிருக்கிறார். என்றான்.

இறப்பு உனது கதவை தட்டும்போது, உன்னுடைய எல்லா நிச்சயதன்மைகளும் வெறும் விடுகதையாகவும், முட்டாள்தமாகவும் இருக்கும். எந்த நிச்சயதன்மையையும் பிடித்துத் தொங்காதே. வாழ்வு நிச்சயமற்றது.....அது அதன் இயல்பிலேயே நிச்சயமற்றது. ஒரு புத்திசாலி மனிதன் எப்போதும் நிச்சயதன்மை அற்றவனாகவே இருக்கிறான்.

இந்த நிச்சயமற்ற தன்மையில் இருக்க தயாராக இருக்கும் தன்மையே துணிச்சல். இந்த நிச்சயமற்ற தன்மையில் இருக்க தயாராக இருக்கும் தன்மையே நம்பகத்தன்மை. எப்போதும் உணர்வோடு இருக்கும் மனிதனே எந்த சூழ்நிலையிலும் முழு இதயத்தோடு செயல்படுபவனே புத்தி கூர்மையுள்ள மனிதன். என்ன நடக்கப் போகிறது என்பதை அவன் அறிவான் என்று அதற்கு பொருளல்லை. இதை செய்தால் அது நடக்கும் என அவன் அறிவான் என்பதும் பொருளல்ல. வாழ்வு ஒரு அறிவியலல்ல. அது செயல் விளைவு சங்கிலியல்ல. தண்ணீரை நூறு டிகிரி சுட வைத்தால் அது ஆவியாகிறது.--- அது நிச்சயமானது. ஆனால் அதுபோல உண்மையான வாழ்க்கையில் எதுவும் நிச்சயமானதல்ல.

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சுதந்திரம், என்னவென்று தெரியாத சுதந்திரம், அது கணிக்க இயலாதது, எதிர்பார்க்க இயலாதது. ஒருவர் விழிப்புணர்விலும், புரிந்து கொள்ளுதலிலும் வாழ வேண்டும். நீ அறிவை தேடி என்னிடம் வருகிறாய். நீ ஒரு அமைக்கப் பட்ட கோட்பாடு வேண்டுமென எண்ணுகிறாய். எனவே நீ அவற்றை பிடித்து தொங்கலாம். நான் எதையும் உனக்கு தருவதில்லை. உண்மையில் நீ எதையாவது வைத்திருந்தால் நான் அதை எடுத்து விடுகிறேன். மெதுமெதுவாக நான் உனது நிச்சயதன்மையை அழித்துவிடுகிறேன். மெதுமெதுவாக நான் உன்னை மேலும்மேலும் தயக்கமுள்ளவனாக ஆக்குகிறேன். மெதுமெதுவாக நான் உன்னை மேலும்மேலும் பாதுகாப்பற்றவனாக ஆக்குகிறேன்.

செய்யப்பட வேண்டிய ஒருவிஷயம் அதுதான். அதுதான் குரு செய்ய வேண்டிய ஒரே விஷயம்.—முழுமையான சுதந்திரத்தில் உன்னை விட்டு விடுவது. முழுமையான சுதந்திரத்தில் எல்லா வாய்ப்புகளும் திறந்திருப்பதோடு எதுவும் அமைக்கப்படாமல்...... நீ விழிப்புணர்வோடு இருந்தாக வேண்டும். வேறு எதுவும் சாத்தியமில்லை.

இதைத்தான் நான் புரிந்துகொள்ளுதல் என கூறுகிறேன், பாதுகாப்பற்ற தன்மை என்பது வாழ்வின் உள்ளார்ந்த பகுதிகளில் ஒன்று என்பதை நீ புரிந்து கொண்டால், ---- அப்படி இருப்பது நல்லதுதான். ஏனெனில் அது வாழ்வை ஒரு சுதந்திரமாக ஆக்குகிறது. வாழ்வை அது தொடர்ந்த ஒரு ஆச்சரியமாக மாற்றுகிறது. என்ன நடக்கப்போகிறது என்பதை யாரும் தெரிந்து கொள்ள முடியாது. அது உன்னை தொடர்ந்து ஆச்சரியத்திலேயே வைத்துள்ளது.

அதனை நிச்சயமற்ற தன்மை என அழைக்காதீர்கள் ----- ஆச்சரியம் என அழையுங்கள். பாதுகாப்பற்ற தன்மை என அழைக்காதீர்கள் – சுதந்திரம் என அழையுங்கள்.

நான் உன்னை பாதுகாப்பு உணர்வு ஏதுமின்றி, நிச்சயதன்மை உணர்வு ஏதுமின்றி, நம்பி பிடிப்பதற்கு பிடிப்பு இன்றி விட்டு விடுகிறேன். சரியாக அதுதான் நடக்கவேண்டும் என நான் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளேன். நான் உங்களை தவற விட்டு விட்டேனா இல்லை கணடிப்பாக இல்லை. நீ என்னை நன்றாக புரிந்து கொண்டுள்ளாய். இந்த நிச்சயமற்ற தன்மையுடன் உலகினுள் செல். பாதுகாப்பு இல்லை எனும் இந்த உணர்வுடன் உலகினுள் செல். ஒருபோதும் ஒரு கோழையாக இருக்காதே. ஏதோ ஒரு கோட்பாட்டின் பின்னால் செல்லாதே.

“நான் பகவானுடன் இருந்திருக்கிறேன் மற்றும் நான் பகவானுடன் இருந்ததில்லை”.

ஆமாம், அது அப்படித்தான். இதுதான் அன்பின் முரண்பாடு. உன்னுடைய அன்பரின் மீது உரிமை கொண்டுள்ளாய். ஆனால் நீ உரிமை கொள்ளவில்லை. நீ உனது அன்பருடன் இருக்கிறாய் ஆனாலும் நீ அவருடன் இல்லை. இதுதான் அன்பின் முரண்பாடு.
நீ உனது அன்பரை ஒரு பொருளை போல வைத்துகொள்ள இயலாது. நீ அன்பரை சொந்தமாக்கிகொள்ள முடியாது. ஆனாலும் ஒரு குறிப்பிட்ட முறையில் நீ உனது அன்பரை சொந்தமாக்கிக் கொள்கிறாய். ஒரு குறிப்பிட்ட வகையில் நீ அவரை சொந்தம் கொண்டாடுவதில்லை. உண்மையில் நீ எவ்வளவு அதிகமாக நேசிக்கிறாயோ அவ்வளவு தூரம் உனது அன்பருக்கு நீ சுதந்திரம் அளிக்கிறாய். உண்மையில் நீ எவ்வளவு சுதந்திரம் அளிக்கிறாயோ அவ்வளவு சொந்தம் கொண்டாடுகிறாய். எவ்வளவு அதிகம் சொந்தம் கொண்டாடுகிறாயோ அவ்வளவு குறைவாக சொந்தம் கொள்கிறாய். இதுதான் அன்பின் முரண்பாடு.

என்னுடன் இருப்பது அன்பின் செய்கையாகும். என்னிடம் உனக்கு கொடுப்பதற்கு என்னுடைய அன்பை தவிர வேறு எதுமில்லை. என்னிடம் உங்களோடு பகிர்ந்து கொள்வதற்கு என்னுடைய அன்பை தவிர வேறு எதுவுமில்லை. நீ என்னுடன் இங்கு இருக்கும் பொழுது இந்த முரண்பாட்டில் நீ தொடர்ந்து இருப்பாய். நீ என்னுடன் இருப்பதை போல உணர்வாய், நீ என்னுடன் இல்லாததை போலவும் உணர்வாய். இரண்டும் உண்மைதான்.........இரண்டும் ஒரே நேரத்தில் உண்மைகள். அதுதான் அன்பின் முரண்பாடு.

நீ என்னுடன் எவ்வளவு அதிகமாக இருக்கிறாயோ, அவ்வளவு தூரம் என்னுடன் இருக்கவில்லை என உணர்வாய். நீ எவ்வளவு குறைவாக என்னுடன் இருக்கிறாயோ அந்த அளவு என்னுடன் இருப்பதாக உணர்வாய்.

முட்டாள்தனமாக மனிதர்கள் இருக்கிறார்கள், அன்பற்ற மக்கள். அவர்கள் வந்து ஒருமுறை அல்லது இருமுறை நான் பேசுவதை கேட்டுவிட்டு, அவர்களுக்கு என்னை தெரியும் என நினைத்து கொள்பவர்கள். அவர்கள் நிச்சயதன்மையோடும், முடிவுகளோடும், வரையறையோடும் செல்வார்கள். அவர்களுக்கு அன்பு என்றால் என்ன என்று தெரியாது. அவர்களுக்கு உண்மை என்றால் என்னவென்று தெரியாது. அவர்கள் ஒரு குறிப்பிட்ட கருத்துக்களோடு வருகின்றனர். அவர்களின் கருத்துகளோடு நான் ஒத்து போவதாக அவர்கள் உணர்ந்தால், அவர்கள் என்னை புரிந்துகொண்டதாக நினைத்து கொண்டு நான் சொல்வது சரி என கூறுவர்.

அவர்களின் கருத்துகளுக்கு நான் ஒத்துபோகவில்லையெனில் அவர்கள் என்னை புரிந்துகொண்டதாக நினைத்துகொண்டு இவன் தவறான மனிதன் என கூறுகின்றனர்.

நீ இங்கு அதிகநாள் இருந்திருக்கிறாய், ஆனால் காலம் உறவின் ஆழத்தைவிட முக்கியமானதல்ல. அதுதான் சந்நியாசத்தின் பொருள். அது ஒரு ஆழமான நெருக்கத்தில் ஈடுபடுதல். அது ஒரு ஆழமான ஏற்றுக்கொள்ளுதல்.

அன்றொரு நாள் ஒரு பெண் கேட்டிருந்தாள் நான் சந்நியாசம் எடுக்கவில்லை எனில் நீங்கள் என்னை ஏற்றுகொள்ள மாட்டீர்களா? நான் அவளிடம் கூறினேன். நான் உன்னை ஏற்றுக் கொள்வேன் – நீ சந்நியாசம் எடுத்துக்கொள்கிறாயா இல்லையா என்பது பொருட்டேயல்ல. – ஆனால் சந்நியாசம் எடுக்கவில்லை எனில் உன்னால் என்னை ஏற்றுக் கொள்ள இயலாது.

உன்னால் என்னை ஏற்றுக்கொள்ள முடிந்தால், பிறகு சந்நியாசம் என்பது நீ ஏற்றுகொள்கிறாய் என்பதை காட்டும் ஒரு செயல்தான் வேறொன்றுமில்லை. நான் உங்களுடன் வருகிறேன் நான் உங்களுடன் இருப்பதற்கு தயாராக இருக்கிறேன். நான் தனியாக சொர்க்கத்திற்கு செல்வதை விட நீங்கள் நரகத்திற்கு சென்றாலும் உங்களுடன் இருப்பதையே விரும்புகிறேன் என்பதை காட்டும் ஒரு செய்கை. அவ்வளவுதான். நான் உன்னை சொர்க்கத்திற்கு அழைத்துசெல்கிறேன் என உறுதிமொழி அளிக்கவில்லை – அதை போல எதுவும் எதுவும் கிடையாது. யாரும் அவ்வாறு நம்பக்கூடாது. நான் அதைபோல எதுவும் உங்களுக்கு உறுதிமொழி அளிக்கவில்லை. ஒருவேளை நான் நரகத்திற்கு போகலாம்.

ஒரு சந்நியாசி என்பவன் என்மீது நம்பகத்தன்மை கொண்டவன், சரி, பரவாயில்லை நானும் வருகிறேன். ஆனால் நான் உங்களோடுதான் வருகிறேன் எனக் கூறுபவன். பிறகு ஏதோ ஒன்று உங்களுக்கும் எனக்கும் இடையில் தானாகவே பரிமாற்றமாகிறது. அது உங்கள் உடைகளை மட்டும் மாற்றுவதில்லை. அது உங்கள் பெயரை மட்டும் மாற்றுவதில்லை. அது உன்னுடைய முழு கடந்த காலத்தையும் வெறுமனே விட்டுவிட்டு அ, ஆ விலிருந்து துவங்குவது. அதனால்தான்.......ம்...ம்.... நீங்கள் புதிதாக மறுபடியும் பிறந்ததை போன்ற புதிய தொடக்கத்தை தருவதற்காகவே நான் உங்கள் பெயரை மாற்றுகிறேன்.

நீ சந்நியாசியாகி தீட்சை பெறும் நாள் உன்னுடைய உண்மையான பிறந்த நாளாகிறது. நீ கடந்த காலத்தை உதறிவிட்டு நான் ஒரு புதிய எதிர்காலத்திற்கு தயாராக இருக்கிறேன், நான் என்னுடைய கடந்த காலத்தை தொடர மாட்டேன், அதனுடன் தொடர்பை அறுத்துக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன், நான் என்னுடைய கடந்த காலத்தை குறித்து முக்கியத்துவம் அளிக்க மாட்டேன், நான் அதனை உதறிவிட்டேன், நான் முற்றிலுமாக திறந்திருக்கிறேன், நீங்கள் எங்கு அழைத்து செல்கிறீர்களோ அங்கு வர நான் தயாராக இருக்கிறேன், எனக்கு எந்த நம்பிக்கைகளும் இல்லை என நீ என்னிடம் கூறுகிறாய்.

நீ என்னுடன் இங்கு ஆழமான நெருங்கிய உறவுடன் இருந்திருந்தால் நீ என்மீது அன்பு செலுத்தியிருந்தால், நீ என்னுடைய அன்பை சுவைத்திருந்தால் இது கண்டிப்பாக இப்படித்தான் நடக்கும்.

நான் பகவானுடன் இருந்திருக்கிறேன் நான் பகவானுடன் இருந்ததில்லை. ஆமாம், இந்த முரண்பாட்டை நீ உணர்வாய். நான் அவரை பார்த்திருக்கிறேன் ஆனாலும் ஏதோ ஒன்று தெரியாததாகவே இருக்கிறது, அறியாததாகவே இருக்கிறது, பார்க்காததாகவே இருக்கிறது. நீயும் ஒரு பகவானாக ஆகும்வரை அது எப்போதும் இருக்கும். நீயும் உன்னுடைய தெய்வீகத்தை திரும்ப உரிமை கொண்டாடும்வரை, நீயும் ஒரு கடவுளாக ஆகும்வரை ஏதோ ஒன்று தெரியாததாகவே இருக்கும். ஏனெனில் நம்மால் முடிந்த ஒன்றை மட்டுமே நாம் தெரிந்து கொள்ள முடியும்.

இன்னொரு பெண் நேற்று இரவு என்னிடம் வந்து நான் உங்கள்மீது அன்பு செலுத்துகிறேன், ஆனால் நான் உங்களை தெய்வீக மனிதராக அன்பு செலுத்த முடியாது. நான் உங்களை ஒரு மனிதராகவே அன்பு செலுத்துகிறேன் என்றாள். அது சரி உண்மையில் உன்னுடைய இதயத்தில் தெய்வீகமான ஏதோ ஒன்று நுழையா விட்டால் எப்படி உன்னால் தெய்வீக தன்மையை பார்க்க முடியும் உன்னால் எப்படி உன்னை தாண்டி பார்க்க முடியும்.

இதை சொன்ன அந்த பெண் சமய பற்றுள்ள ஒரு கிறுஸ்துவள். ஒருவேளை தன்ணுணர்வு இல்லாமல் உணர்வற்ற நிலையில் ஏசு ஒருவரே இருக்கும் ஒரே கடவுள் என இன்னமும் உண்மையில் அவள் நினைக்கிறாள். ஆனால் நிச்சயமாக ஏசு சிலுவையில் அறையப் பட்டார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அவரை சிலுவையிலிட்ட மக்கள், அவரை கடவுளாக நினைக்கவில்லை. அவர்கள் ஒரு கடவுளை சிலுவையிலிடவில்லை. – அவர்கள் ஒரு ஊதாரியை, ஒரு குற்றவாளியை சிலுவையிலிட்டார்கள். அவர்கள் வம்பு செய்யும் ஒரு மனிதனை சிலுவையிலிட்டார்கள்.
ஏசுவை சிலுவையிலிட்ட மக்களால் ஏசுவின் இறை தன்மையை பார்க்க இயலவில்லை. அவர்களால் அவரின் குறும்புதனத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. எனவே ஏசு கடவுளா இல்லையா என்பது கேள்வி அல்ல.- உன்னால் அதனை பார்க்க முடிகிறதா இல்லையா என்பதே கேள்வி. நீ எப்படி இருக்கிறாயோ அதை மட்டுமே உன்னால் பார்க்க இயலும். உன்னை தாண்டி உன்னால் பார்க்க இயலாது.

நீ என்னில் கடவுளை பார்க்கும் அந்த கணத்தில் கடவுளின் ஏதோ ஒன்று உன்னுள் பிறக்கிறது. பிறகு அது என்னை குறித்து மட்டுமே இருக்க போவதில்லை. நீ என்னில் கடவுளை பார்க்க தொடங்கினால், மெது, மெதுவாக ஏசுவில், புத்தரில், கிருஷ்ணரில் கடவுளை காண்பாய். மெதுமெதுவாக மற்ற மக்களில் கடவுளை காண்பாய். மெதுமெதுவாக உன்னால் பறவைகளில்,, மரங்களில், பாறைகளில் கடவுளை காண முடியும். – ஒருநாள் நீ கடவுள் மட்டுமே இருக்கிறார். வேறு ஏதுமில்லை என்பதை காண்பாய். உண்மையில் கடவுள் மட்டுமே இருக்கிறார் வேறு எதுவுமில்லை.

நீ அதிகமாக நான் பேசுவதை கேட்டால், ஏதோ ஒன்று கேட்க படவில்லை என்னும் உணர்வு உனக்கு அதிகமாக தோன்றும். நீ என்னை பார்க்கும் அளவிற்கு, ஏதோ ஒன்று தவற விடபடுவதாக என்னை முழுமையாக பார்க்கவில்லை என நீ உணர்வாய். நீ எனக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறாயோ, அவ்வளவு தீவிரமானதாக தாகம் இருக்கும். நீ எவ்வளவு என்னை நேசிக்கிறாயோ, அந்த அளவிற்கு உனது நேசிப்பில் நீ ஆழமாவாய். நீயே கடவுளாக வேண்டும் எனும் ஆசை உன்னுள் எழுந்து சுட்டெரிக்கும் தனலாய் மாறும்.

கிறிஸ்துவர்கள், முகமதியர்கள், யூதர்கள் இவர்களிடம் ஒரு பிரச்னை உள்ளது. – கடவுளை ஒரு ஆளாக பார்க்கின்றனர். – அங்கு ஒரு பிரச்னை உள்ளது. அவர்கள் கடவுள் இந்த உலகத்தை படைத்ததாக நினைக்கின்றனர். கிழக்கில் நாங்கள் கடவுளை பற்றி அதைவிட ஆழமான புரிதலை கொண்டுள்ளோம். உருவாக்குதல் என்பது கடவுளை விட்டு வேறுபட்டதல்ல. அது அவருடைய லீலை. அது அவர் பல உருவங்களில் தன்னைத் தானே மறைத்துக் கொள்கிறார். இங்கு அவர் ஒரு பாறையாகிறார், அங்கு அவர் ஒரு மலராகிறார். இங்கு அவர் ஒரு பாவியாகிறார், அங்கு அவர் ஒரு துறவியாகிறார். முழு லீலையும் அவருடையதே. அவர் ஒருவரே நடிகர். அவர் பல்வேறு பாத்திரங்களை ஏற்றுக் கொண்டேயிருக்கிறார். அவர் ஏசுவிடம் இருக்கிறார், மற்றும் அவர் ஜூதாஸிடமும் இருக்கிறார்.

கிழக்கில் கடவுள் ஒரு ஆளல்ல.... பிரபஞ்சம் கடவுளாகவே இருக்கிறது. கடவுள் உருவாக்கியவரல்ல, கடவுளே உருவக சக்தி. உருவாக்குபவர், உருவாக்கப்படுவது என்பவை வெறும் ஒரே உருவக சக்தியின் இரு பரிமாணங்கள்.

மேற்கின் கருத்து ஒரு படம் வரைபவர் படம் வரைவதை போன்றது. படம் நிறைவடையும் நேரத்தில், படம் அந்த படத்தை வரைந்தவரிடமிருந்து வேறுபட்டு விடுகிறது. பிறகு அந்த படத்தை வரைந்தவர் இறந்துவிடலாம். ஆனால் படம் இருக்கும். கிழக்கில் நாங்கள் கடவுளையும் உலகத்தையும் படம் படத்தை வரைந்தவர் எனும் கோணத்தில் கருதுவதில்லை. நாங்கள் கடவுளை ஒரு நடனமாடுபவராக கருதுகிறோம். நடராஜர். நீ நடனம் ஆடுபவரை நடனத்திலிருந்து பிரிக்கமுடியாது. நடனமாடுபவர் போய்விட்டால் நடனமும் போய்விடுகிறது. நடனம் நின்றால் அந்த மனிதர் நடனமாடுபவர் அல்ல. நடனமும் நடனமாடுபவரும் இணைந்தே இருக்கின்றன. அவை தனியாக இருக்க முடியாது. நீ அவைகளை பிரிக்க முடியாது.
கடவுள் ஒரு நடனமாடுபவரை போன்றவர். நான் அவரின் அசைவுகளில் ஒன்று. நீயும் அவரது அசைவுகளில் ஒன்று. நீ அதனை அறிந்திருக்கலாம் அல்லது அறியாமல் இருக்கலாம். உலகில் ஒரே வித்தியாசம் என்னவென்றால் ஒரு சில மக்கள் தங்களை கடவுள் என்பதை அறிந்து கொள்கின்றனர். ஒரு சில மக்கள் தங்களை கடவுள் என்பதை அறிந்து கொள்வதில்லை. வித்தியாசம் உனது இருப்பில் இல்லை. நீ அடையாளம் கண்டு கொள்வதில்தான் இருக்கிறது. நீ அதிகமாக நேசிக்க, நேசிக்க உனக்கு புரிதலும் விழிப்புணர்வும் அதிகமாக ஏற்பட ஏற்பட ஏதோ ஒன்று கம்மியாக இருக்கிறது என்பதை மேன்மேலும் உணர தொடங்குவாய்.

நான் அவரை கேட்டிருக்கிறேன், ஆனாலும் அவர் சொல்லும் முறைக்கு நான் செவிடாக இருக்கிறேன். நீ உண்மையிலேயே என்னை கேட்டிருக்கிறாய். பிறகு மட்டுமே இந்த உணர்வு எழும். என்னை கேட்டுவிட்டு நீ என்னை புரிந்து கொண்டதாக நீ எண்ணினால் நீ உண்மையிலேயே செவிடு, செவிடு மட்டுமல்ல நீ ஒரு முட்டாளும் கூட.

நான் வெளிப்படுத்த முடியாத ஒன்றை பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான் முடிவான மர்மத்தை பற்றி ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீ அதனை புரிந்து கொள்ளலாம். ஆனாலும் நீ அதனை ஒருபோதும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. அது நழுவக் கூடியது. அது தப்பிச் சென்று விடுகிறது. அது அடையக் கூடிய தூரத்திலேயே இருக்கிறது. ஆனால் அதனை பிடிக்க முடியாது. நீ எப்போதும் அதனை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறாய். ஆனால் நீ ஒருபோதும் அடைவதில்லை. நீ அடையும் நாளில் நீ அங்கு இருப்பதில்லை.
தேடுபவரும் தேடப் படுவதற்குமான பிரிவினை மறைந்து விடுகிறது. பிறகு நீதான் அது. அதுதான் நீ. நீதான் அது. அந்த கணம்தான் உச்ச கணம்.

ஆனந்த சுபூதி, சந்தோஷமாக செல், பாதுகாப்பற்ற தன்மையோடு செல், சுதந்திரத்தோடு செல், சார்பற்ற நிலையில் செல், எதன்மீதும் அல்லது யார்மீதும் சாய வேண்டிய தேவை இல்லை. என்னை ஒரு பிடிப்பாக உபயோகப் படுத்தாதே. நீ மேலும் சார்பற்ற நிலையில் இருக்கவும், என்னிடமிருந்து சுதந்திரமாக இருக்கவும், மற்ற எல்லாவற்றிலிருந்தும் சுதந்திரமாக இருக்கவும் உனக்கு உதவ என்னை அனுமதி. நீ என்னை தவற விடவில்லை. நான் உனது இதயத்தில் ஒரு விதையை போல விழுந்துள்ளேன். வெறுமனே பிரார்த்தனையோடு பார்த்துக் கொண்டிரு. ஆழமான நன்றி உணர்வோடு காத்துக் கொண்டிரு. சரியான நேரத்தில் விதை முளைக்கும்.

Source : A Sudden Clash of Thunder Ch.6 # 1.

குரு செய்யும் வேலை – ஓஷோவின் கதை - 9

கர்ண பரம்பரை கதை ஒன்று உண்டு. ஒருமுறை ஒரு நிறை கர்ப்பிணியான பெண் சிங்கம் ஒரு மலை உச்சியிலிருந்து மற்றொரு மலை உச்சிக்கு தாவும்போது அதன் வயிற்றிலிருந்த குட்டி கீழே விழுந்து விட்டது. அந்த குட்டி அந்த சமயத்தில் அந்த இடத்தில் போய்கொண்டிருந்த ஆட்டு மந்தைக்குள் போய் விழுந்துவிட்டது. அதனால் அது ஆடுகளுடன் கலந்து, ஆடுகளுடன் வாழ்ந்து, ஆடுகளைப் போலவே இருந்து கொண்டிருந்தது.

தான் ஒரு சிங்கமாக இருக்கக் கூடும் என்ற ஒரு நினைப்பு அதன் கனவில் கூட இல்லை. எப்படி இருக்க முடியும்? அதைச் சுற்றி இருந்த அனைத்தும் ஆடுகளே. அது ஒரு சிங்கம் போல ஒருபோதும் கர்ஜித்ததே இல்லை. ஒரு ஆடு கர்ஜிப்பது இல்லை. அது ஒரு சிங்கம் போல தனித்து இருந்ததே இல்லை. ஒரு ஆடு ஒருபோதும் தனித்து இருக்காது. அது எப்போதும் கூட்டத்தில்தான் இருக்கும். – கூட்டம் கதகதப்பானது, உத்தரவாதமானது, பாதுகாப்பானது. ஆடுகள் நடப்பதை நீ கவனித்து பார்த்தால் அவை ஒன்றையொன்று உரசிக்கொண்டு நெருக்கமாகத்தான் நடக்கும். அவை தனித்திருக்க மிகவும் பயப்படும்.

இந்த சிங்கம் வளர்ந்தது. இது மிகவும் மாறுபட்ட ஒரு நிகழ்வு. அது மனதளவில் தன்னை ஒரு சிங்கமாக நினைக்கவில்லை என்றாலும் கூட உடலியல் அதனுடன் ஒத்துப் போகவில்லை. இயற்கை உன்னை பொருட்படுத்துவது இல்லை.

அது மிகவும் அழகான இளைய சிங்கமாக உருவெடுத்தது. ஆனால் வளர்ச்சி மிகவும் மெதுவானதாக இருந்ததால் சிங்கம் ஆடுகளுடன் ஒத்து போனதைப் போலவே ஆடுகளும் இந்த சிங்கத்தை ஏற்றுக் கொண்டு விட்டன. ஆடுகள் இது ஒரு சிறிதளவு வளர்ச்சியில் வேறு பட்டது என நினைத்தன. அது வேறுபட்டு நடந்து கொள்ளவில்லையே – ஒரு சிறு உடலியல் மாறுதல் தானே – சிங்கம் வளர்ந்து கொண்டே வந்தது.

அப்படி வளரக் கூடாது. சிங்கத்தைப் போல தோற்றமளிக்கக் கூடாது........ ஆனால் இது சிங்கமல்ல. இது பிறந்ததிலிருந்தே அவை பார்த்துக் கொண்டிருக்கின்றன, அவை தான் இதை வளர்த்தன, அவைதான் இதற்கு பால் கொடுத்தன. இந்த சூழ்நிலையில் வளர்ந்த இது சைவமாகதான் இருந்தது. எந்த சிங்கமும் சைவமல்ல. ஆனால் இந்த சிங்கம் சைவமாக இருந்தது, ஏனெனில் ஆடுகள் சைவமே. இது புல்லை மிகவும் மகிழ்ச்சியோடு சாப்பிட்டது.

ஆடுகள் இது மிகவும் பெரிதாகவும் சிங்கத்தை போல இருப்பதையும் ஏற்றுக் கொண்டன. ஒரு அனுபவசாலியான ஆடு, இது இயற்கையின் தவறு. எப்போதாவது ஒருமுறை இப்படி நடப்பது இயல்புதான். என்றது. அதுவே அதுதான் உண்மை என நினைத்துக் கொண்டது. சிங்கத்தின் நிறம், உடல் எல்லாமே வேறுபட்டுள்ளது – சாதாரணமானதாக இல்லாமல் வித்தியாசமானதாக – ஆனால் இது ஒரு சிங்கமாக இருக்கக் கூடும் என்ற நினைப்பே சாத்தியமில்லை. அது எப்போதும் ஆடுகளால் சூழப் பட்டிருந்தது. அவை இதனிடம், கவலைப்படாதே, நீ ஒரு சிறிதளவு வித்தியாசமானவனாக இருக்கிறாய் அவ்வளவே. நாங்கள் உன்னை பார்த்துக் கொள்கிறோம். என்றன.

ஆனால் ஒருநாள் ஒரு வயதான சிங்கம் ஆட்டுமந்தைகளுக்கிடையில் இந்த இளைய சிங்கம் இருப்பதை பார்த்தது. அதனால் அதன் கண்களையே நம்ப முடியவில்லை. ஒரு சிங்கம் ஆட்டுமந்தைகளுக்கிடையில் இருப்பதையோ, அதை பார்த்து எந்த ஆடும் பயப்படாததையோ சரித்திரத்திலேயே கேள்வி பட்டதுமில்லை, பார்த்ததுமில்லை. சிங்கம் ஆட்டைபோலவே நடந்தது, புற்களை கொறித்தது.
வயதான சிங்கத்தால் தனது கண்களையே நம்ப முடியவில்லை.

தன்னுடைய காலை உணவாக ஒரு ஆட்டை பிடிக்கவேண்டும் என்பதையே முற்றிலுமாக மறந்து அது அந்த சிங்கத்தை பிடிக்க பாய்ந்தது. ஆனால் இதற்கு வயதாகிவிட்டது. அதற்கோ சிறு வயது. – அதனால் வேகமாக ஓடியது. அது தான் ஒரு ஆடு என நினைத்தாலும் கூட, ஆபத்து வரும்போது மனதின் அடையாளம் மறந்துபோய் விடுகிறது.

அது ஒரு சிங்கம் போல ஓடியது. வயதான சிங்கத்திற்கு அதை பிடிப்பது மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால் இறுதியில் அதை பிடித்தபோது அது அழுதுகொண்டே என்னை மன்னித்து விட்டுவிடு, நான் ஒரு ஆடு என்றது. வயதான சிங்கம், முட்டாளே, அழுவதை நிறுத்து, என்னுடன் குளக்கரைக்கு வா என்றது.

அருகிலேயே ஒரு குளம் ஒன்று இருந்தது. இது அதை அங்கே கூட்டி சென்றது. இளைய சிங்கத்திற்கு போக விருப்பமேயில்லை
விருப்பமேயில்லாமல்தான் சென்றது. நீ ஒரு ஆடாக இருக்கும் பட்சத்தில் ஒரு சிங்கத்தை எதிர்த்து என்ன செய்ய முடியும். நீ அதன் பேச்சை கேட்காவிட்டால் அது உன்னை கொன்றுவிடும். அதனால் இது அதனுடன் சென்றது. குளம் மிகவும் சலனமின்றி, அலைகளில்லாமல், ஒரு கண்ணாடி போல இருந்தது.
வயதான சிங்கம் இதனிடம், பார், என் முகத்தை பார், உன் முகத்தையும் பார். என் உடல் பார், உன் உடலையும் பார். தண்ணீரில் பார். என்றது.

ஒரு விநாடியில் அங்கே ஒரு கர்ஜனை எழுந்தது. அது எல்லா மலைகளிலும் எதிரொலித்தது. ஆடு மறைந்து அங்கே சிங்கம் எழுந்தது. அவன் வேறுபட்டவன். அவன் தன்னை அறிந்து கொண்டான். தான் ஒரு ஆடு என்று கொண்ட அடையாளம் உண்மையல்ல, அது ஒரு கருத்து மட்டுமே. அவன் இப்போது உண்மையை கண்டுகொண்டான்.

வயதான சிங்கம், இப்போது நான் எதுவும் கூற வேண்டியதில்லை, நீ புரிந்து கொண்டு விட்டாய். என்றது.

இளைய சிங்கம் இதுவரை அறிந்திராத வேறுபட்ட வலிமையை உணர்ந்தது...... அந்த வலிமை இதுவரை தடைபட்டிருந்தது. அது இப்போது அளவற்ற சக்தியை உணர்ந்தது. அது இதுவரை ஒரு வலிமையற்ற, பணிவான ஆடாக இருந்தது. அந்த பலமற்ற, வலிமையற்ற தன்மை காற்றில் கரைந்துவிட்டது.

Source : The Path of the Mystic Ch.#40

No comments: