Friday, October 22, 2010

மலர் 1 இணைய மாதஇதழ் 4 11 நவம்பர் 2008

தலையங்கம்

அன்பும் வணக்கமும்,

நமது இணைய தளத்தை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் பார்த்து ரசித்து பலரும் போன் செய்வதும் பகிர்ந்து கொள்வதும் நாம் செல்லும் திசை சரிதான் என்பதைக் காட்டுகின்றன.
ஓஷோ அன்பர்களின் கருத்துகள், மொழிபெயர்ப்பு மற்றும் பகிர்ந்து கொள்ள விரும்பும் தகவல்கள் வரவேற்கப் படுகின்றன.

இனி...........
ஓஷோவின் சிறப்புகளில், “ஞானமடைய அவரின் புதிய பாதை” என்பதைப்பற்றி சென்ற மாத இதழில் பகிர்ந்து கொண்டேன்.
இந்த மாதம் ஓஷோவின் மற்றும் ஓரு சிறப்பு அம்சமான “ஞான அனுபவம் பெற அவரின் புதிய தியான முறைகள்” பற்றிப் பார்ப்போம்.

யோகா, தந்த்ரா, சரணாகதி, வாழ்வின் போக்கோடு செல்லுதல், சாட்சிபாவம் ஆகிய ஞான வழிகளைப் பற்றியும், ஓஷோவின் புதிய வழி பற்றியும் சென்ற இதழில் படித்திருப்பீர்கள்.

இப்போது இந்த ஒவ்வோரு வழியிலும் கூட பல்வேறு யுக்திகள், முறைகள் பல்வேறு ஞானிகளால் பல்வேறு காலங்களில் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒவ்வோரு ஞானியும் தான் ஞானமடைந்தவுடன் அது தனக்கு எப்படி நிகழ்ந்தது, என்ன நிகழ்ந்தது, அது ஏற்படுத்திய குணமாறுதல்கள் எவைஎவை என ஆராய்ந்தறிகிறார். அதோடு தன்னைச் சுற்றி வாழும் மக்களின் மனம் எதைச் சுற்றி, எதைப் பற்றி ஓடிக் கெரண்டிருக்கிறது, அதன் வேகம் எவ்வளவு இருக்கிறது. அதை விட்டு வெளியேற அவர்களிடம் மிச்சமுள்ள உணர்வுகள் எது எது என்று ஆராய்கிறார்.

பின்னர் அவர்களுக்கான உபாயங்களை, முறைகளை, யுக்திகளை வகுத்தளிக்கிறார். இந்த முறைகளும் முதல் அனுபவத்திற்க்கானவை மட்டுமே. அதன்பின் அவன் சிறிது சிறிதாக அவனது வழியை அவனேதான் கண்டுபிடிக்க வேண்டும். ஆனாலும் அந்த சுவையை தொட்டுக் காட்டும் முறை மிக முக்கியமானது. பலருக்கும் இது பலமுறை மீண்டும் மீண்டும் தேவைப்படுவது.

அவை என்றும் சாசுவதமானவை அல்ல. மேலும் அந்த முறைகள் அந்த ஞானிக்குப் பின் குருக்கள், பூசாரிகள், ஆசான்கள், மதபோதகர்கள், வழிகாட்டிகள் போன்ற தொழில் செய்வோரால் மக்களை ஏமாற்ற, மிரட்ட, பயமுறுத்த, மூடநம்பிக்கைகளை வளர்த்தவே பயன்படுத்தபட்டு வந்துள்ளது. பயன்படுத்த பட்டு வருகிறது.

இதை இன்னும் எளிமையாகச் சொன்னால் உண்மையான ஆரோக்கியத்தைக் கண்டறிந்தவன் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் நோய்களை ஆராய்ந்து, அவர்கள் அதிலிருந்து விடுபட ஒரு மருந்து தயாரிக்கிறான். தியானமுறை என்பது மருந்துதான். ஆனால் அவனுக்குப் பின் வருபவர்கள், மக்களின் நோயை அறியாமல் அதே மருந்தை சகலரோக நிவாரணி என்று சோல்லி விற்பது போலத்தான் இது.

எனவே தியான முறைகள் மாற்றத்திற்க்கு உட்பட்டவை. ஆனால் இதை உருவாக்க முதலில் ஓரு ஞானி வேண்டும், இரண்டாவதாக அந்த ஞானி ஆராய்ச்சி செய்ய, மக்களின் நோய்களை அதன் மூலம் வரை சென்று பகுத்துப் பார்க்க விருப்பம் கொள்ள வேண்டும். மூன்றாவதாக அப்படிக் கண்டு ஆராய்ந்து உருவாக்கும் முறைகளை நடைமுறைப் படுத்துமளவு கல்வியும், உலகியலும் கற்றுணர அந்த ஞானி தலைப்பட வேண்டும். இல்லாவிட்டால் அவருடைய ஆரோக்கியம் மற்றவர்களை ஆச்சரியப்படுத்துவதோடு நின்றுவிடும்.

கடந்த 2500 ஆண்டுகளாக, புத்தருக்குப்பின் ஓரு புதிய வழியை ஓஷோதான் முழுமையாக உருவாக்கியுள்ளார். அதோடு அந்த புதிய வழியில் கடந்த காலத்தை நினைவில் கொண்டு, எந்தவித மத அமைப்பும், எந்த வித பூசாரியும், எந்தவித கட்டாயமான விதிமுறைகளும் ஏற்படுத்தபட்டு விட முடியாதபடியும், அதனால் மனிதனில் உயர்வு தாழ்வும், அடிமைத்தனமும், குற்றவுணர்ச்சியும் ஏற்படுத்தப்பட முடியாமலும், தனது வழியின் அடிப்படையை மிக எளிதான ஒரே சொல்லில் வைக்கிறார். அதுதான் விழிப்புணர்வு (AWARENESS).

விழிப்புணர்வோடு எனது முறைகளை செய்து பார், விழிப்புணர்வோடு என் கருத்துகளை சிந்தித்துப்பார், விழிப்புணர்வோடு உனது வாழ்வை ஆராய்ந்து பார். அப்போது சரியான முறையும், சரியான புரிதலும் சரியான நமது நிலையும் நமக்கே தெரியும். நமக்கு அப்படி தெரிவதுதான் சரி. மற்றவர்கள் நம்மைப் பற்றி சொல்வதோ, கற்றுக்கொடுப்பதோ சரியல்ல. நாம் தவறுகள் செய்தாலும், விழிப்புணர்வோடு இருந்து தவறுகள் மூலம் வளர்வதுதான் வாழ்க்கை என்கிறார்.

மனிதனைத் தவிர ஏனைய இயற்கையிலுள்ள அனைத்துக்கும் தவறு செய்யும் சுதந்திரம் இல்லை. மனிதனுக்கு மட்டுமே அப்படிப் பலதையும் செய்து பார்த்து அடுத்த பரிணாம வளர்ச்சிக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. எனவே நமக்கு அடிப்படைத் தேவையாக அவர் வலியுறுத்தும் ஒரே ஓழுக்கம் விழிப்புணர்வோடு இரு என்பதுதான். விழிப்புணர்வோடு தைரியமாகவும் புத்திசாலித்தனத்துடன் உனது சுதந்திரத்தை வாழ்ந்துபார் என்பதே அவர் கூறுவது.

ஆகவே அவரது தியானமுறைகளின் ஒரே நோக்கம் விழிப்புணர்வை தட்டி எழுப்புவதுதான். அதுவும் கூட உனக்குள் ஏற்கனவே உள்ளதுதான்.
அதற்காக அவர் என்னென்ன தியானமுறைகள் உருவாக்கியிருக்கிறார் என்று பார்ப்போம்.

1. உடலையும் மனதையும் சுத்தப்படுத்தி சக்தியை உண்டாக்கி தன்ணுணர்வு(CONSCIOUSNESS) கொள்ளவைக்கும் தியானப்பயிற்சிகள்.

இதில் டைனமிக், குண்டலினி, நடராஜ், மண்டலா, நாதபிரம்மா, சக்ரா ஒலிகள், சக்ரா மூச்சு, 7 சக்ரா ஒலிகள், தேவவாணி, பரிமாணமில்லா நிலை, கெளரிசங்கர், ஜிப்பரிஷ், சிரிப்பு, சுழலல், போன்று இசையோடு கூடி ஓரு மணி நேரம் செய்யத்தக்கதாக பலவற்றை ஆராய்ந்து வடிவமைத்திருக்கிறார். இவை இன்றைய மனிதனுக்குப் பொருத்தமாக வடிவமைக்கப் பட்டுள்ளன.

பல நாள் செய்யும் தியான பயிற்சிகளாக மனம் கடந்த நிலை, இரகசிய ரோஜா, போன்று பலதையும் ஓஷோ வடிவமைத்திருக்கிறார்.

இன்றைய மனிதன் உடலில், புலன்களில், உணர்வில் வாழ்வது மிகக் குறைவு. மனதிற்காக, மன ஆசைகளுக்காக, மன அழுத்தம், குற்றவுணர்வு, ஆணவம், அவமானம், நிறைவு, பெருமை, அந்தஸ்து, கெளரவம் என மனதில்தான் வாழ்கிறான். அதற்காகவே பெரும்பகுதி சக்தியை செலவழிக்கிறான். இப்படிப்பட்ட இன்றைய மனிதன் அவனுடைய மிக வேகமான அவனது மன ஓட்டத்தை விட்டு ஒரு கணமேனும் வெளியேறி விழிப்புணர்வும், தன்ணுணர்வும் பெற செய்வதே அவரது இந்த தியான முறைகளின் நோக்கம்.

2. பழமையான யோகா, தந்த்ரா, விபாசனா முறைகளை தூசிதட்டி தூய்மைபடுத்தி அதை இன்றைய மனிதன் புரிந்துகொள்வது எப்படி. முயற்சித்துப் பார்ப்பது எப்படி என்று விளக்கியுள்ளார். அதற்கான பயிற்சி முறைகளும், தனியே முயன்று பார்ப்பதற்க்கான வழிமுறைகளும் அவரால் உருவாக்கப்பட்டுள்ளது.

பதஞ்சலியின் யோக சூத்திரம், சிவாவின் 112 தந்திரா யுக்திகள், விபாசனா தியான முறை, மற்றும் ஓஷோவின் பேச்சுகள் முழுவதிலும் பரவிகிடக்கின்ற விளக்கமான பழைய யுக்திகளின் இன்றைய செயல்முறைகள் ஆகியவை விழிப்புணர்வோடு முயற்சி செய்து பார்க்கத் தக்கவை.

3. இன்றைய மனிதனுக்கு வெளிப்படையான வாழ்க்கை முறை இல்லை. போலித்தனம் மிகுந்த நமது வாழ்க்கை முறையில் ஏராளமான அழுத்தங்களை நமது உடலிலும் உள்ளத்திலும் நாம் தேக்கி வைத்துள்ளோம். இதுவே நமது உள்ளம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்க்கு எதிராக உள்ளது. நுண்ணுணர்வு அற்ற நிலைக்கு நம்மை தள்ளியுள்ளது. இவற்றை நீக்க ஓஷோ மேற்கத்திய நிபுணர்களின் ஆராய்ச்சிகளை எடுத்துக் கொண்டு பல்வேறு குழுச் சிகிச்சை, மற்றும் தனிச் சிகிச்சை முறைகளை உருவாக்கியுள்ளார். இவை மூலம் நமது அழுத்தங்கள் நீங்கப் பெற்று தளர்வு நிலையை அடைவது எளிதாகிறது. அந்த நிலையிலிருந்து விழிப்புணர்வு அனுபவத்திற்க்கான முறைகளைச் செய்தால் அதை உணர்வது எளிதாக இருக்கும். இன்றைய மனிதனின், இன்றைய உலகத்தின் பரபரப்பான வாழ்க்கை முறையில், பழைய காலத்தைப் போல பல வருடங்களைப் பக்குவம் பெறுவதற்காக ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையில் வாழ ஒதுக்க முடியாது. மேலும் இன்று மனிதனின் சுய புரிதலும் விஞ்ஞானத்தால் வளர்ந்துள்ளது. நுட்பங்களும் வளர்ந்துள்ளன. எனவே ஓஷோ சில நாட்களில், சில வாரங்களில் மிகப் பெரிய பக்குவத்தை ஏற்படுத்தக் கூடிய குழு மற்றும் தனி மனித சிகிச்சைகளை அறிமுகப்படுத்தியுள்ளார். இதை அந்தந்த சிகிச்சை முறைகளின் நுட்பங்களில் தேர்ச்சி பெற்ற வழிகாட்டி மூலமாக செய்து பயன் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறாக இன்றைய மனிதனின் இன்றைய நிலையில் அவனுக்கு தன்னிடமுள்ள விழிப்புணர்வை தொட்டுக் காட்டவும், அதைத் தெரிந்து கொள்ளப் பக்குவம் பெறவும், தெரிந்தவன் தனது வழியை தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளவும், பழமையான முறைகளின் உண்மை ரகசியங்களை உணர்ந்து பயன்படுத்திக் கொள்ளவும் ஓஷோ பல்வேறு தியானங்களையும், முறைகளையும், பயிற்சிகளையும், விளக்கங்களையும், கொடுத்துள்ளார்.

கவிதைப்பகுதி
தூய்மை

நண்பனை மட்டும் அன்பு செய்வது என்ன அன்பு
அது அனுகூலத்திற்க்கு அனுகூலம்,
அது வியாபாரத்தில் அன்பு.

காதலியை மட்டும் காதலிப்பது என்ன அன்பு
அது உடலை உரிமை கெரள்வது,
அது காமத்தில் அன்பு.

நாடு இன மெரழிப் பற்றுகளா அன்பு
அது பற்றிக் கெரள்ளும் தந்திரம்
அது அரசியலில் அன்பு.

பின் எது தூய்மையான அன்பு
அது விரோதியையும் விலக்கமுடியாத அன்பு.

ஓஷோ வீடியோ

OSHO: I wonder if this could be love


OSHO: Jealousy – Society’s device to divide and rule


OSHO: LOVE and HATE are ONE

கேள்வி பதில் பகுதி

எய்ட்ஸ் நோய் பற்றி ஓஷோ கூறுவது என்ன? என்ற வாசகர் கேள்விக்கு
கீழ்க்கண்ட கேள்வி பதிலை அளிக்கிறோம்.

அன்புள்ள ஓஷோ,
எய்ட்ஸ் நோய் நேருக்கு நேர் இறப்பைச் சந்திக்க வைக்கிறது. மேலும் நமது இறுக்கம் நோயையும், பயத்தையும் அதிகப்படுத்துவதாகவே உள்ளது. இந்நிலையில், பலிகடாவாக உணராமல் அதை எப்படி கொண்டாடத்துடன் சந்திப்பது?

இறப்பு எப்பொழுதும் உள்ளது. நீ அதைப்பற்றிய உணர்வின்றி இருக்கலாம். ஆனால் அது எப்போதும் நேருக்குநேராக உடனடிசாத்தியத்துடன் உள்ளது. அடுத்த நொடியைப் பற்றி உன்னால் நிச்சயமாக கூறமுடியாது.

ஆனால் நாம் வாழ்ந்துகொண்டே இருக்கிறோம். தான் இறந்துவிடுவோம் என்பதை யாரும் நம்புவதில்லை. எப்போதும் அடுத்தவர்தான் இறக்கிறார். நீ எல்லா விதமான மக்களும் — சிறுவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள்-- இறப்பதை பார்த்திருக்கிறாய். ஆனால் நீ இறப்பதை நீ பார்த்ததில்லை. எனவே உன்னுடைய மனதின் ஏதோ ஓர் இடத்தில் மற்றவர்கள்தான் எப்போதும் இறக்கிறார்கள் என்ற கருத்து நிலைப்பெற்றுள்ளது. ஆனால் நினைவில் கொள்! இறந்துபோனவர்களும் இதையேதான் நினைத்துக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு நீதான் அந்த மற்றவர். ஒருநாள் நீ இறந்துவிடுவாய், உன்னை கல்லறைக்கு சுமந்துசெல்லும் மக்கள் இறப்பின் உடனடிதன்மையை சுத்தமாக உணரமாட்டார்கள்.

அது எப்போதும் உள்ளது – உன்னுடைய நிழலைப்போல உள்ளது. உன்னுடைய பிறப்பின் முதல் வினாடியிலிருந்து நீ இறந்து கொண்டிருக்கிறாய். இறப்பு உனக்கு எழுபது, எண்பது, தொண்ணூறு வயதாகும்பொழுது திடீரென விபத்துபோல வருகிறது என நினைக்கிறாய். இறப்பும் வாழ்வும் ஓன்றாகவே உள்ளன. நீ பிறந்தவுடனேயே இறக்கத் தொடங்கிவிடுகிறாய்.

ஆனால் மனிதன் அவனையே ஏமாற்றி கொள்வதில் மிகவும் சாதுரியமானவன்.

உன்னுடைய பிறந்தநாள் ஓவ்வொன்றும் அது உன்னுடைய பிறந்தநாள் அல்ல உன்னுடைய இறந்தநாள் என்பதை மறக்க செய்யும் முயற்சியே, நீ மேலும் ஓரு வருடம் இறந்துவிட்டாய்.

ஆனால் பூக்களுடனும், மெழுகுவர்த்திகளுடனும், கேக்குகளோடும், ஓருவர் இறப்பின் உடனடிதன்மையை மறந்துவிடுகிறார். அது எப்போதும் உன்னுடன் உள்ளது.

பிறப்பு இறப்பின் ஆரம்பம்.

எனவே எய்ட்ஸ் இறுக்கமானவனாக மாற்றகூடாது. அதற்கு பதிலாக அது உன்னை மேலும் விழிப்பு உடையவனாகவும், உணர்வு உடையவனாகவும் மாற்றவேண்டும், ஏனெனில் இறப்பு உறுதி என அறிந்த அபூர்வ மனிதன் நீ, இனிமேலும் நீ உன்னை ஏமாற்றிகொள்ளமுடியாது.

உனக்கு முன்னால் எய்ட்ஸ் இல்லாத பலர் இறப்பார்கள், ஆனால் அவர்களின் இறப்பு அவர்களுக்கு தெரியாமல் வரும். தெரிந்துகொள்வது தெரியாமல் இருப்பதைவிட எப்போதும் சிறந்தது.

நடக்கபோகும் உண்மையை நீ அறிந்தால் அது குறித்து எதையாவது செய்யலாம்.

எய்ட்ஸ் நோயாளி இரண்டு வருடத்திற்குள் இறந்துவிடுவோம் என்பதை அறிவார். இறப்பின் இந்த உடனடிதன்மை உன்னை எழுப்ப வேண்டும். இப்போது ஏமாற்றிகொண்டிருக்க உனக்கு நேரமில்லை, உன்னை நீயே ஏமாற்றிகொள்ள நேரமில்லை. இறப்பு உனக்காக அங்கே காத்துகொண்டிருக்கிறது, உனக்கு அது தெரிவதால் நீ அதிர்ஷ்டசாலி.

உன்னுடைய இறப்பு உனக்கு தெரிவது ஒரு நிலைமாற்றமாக ஆக முடியும்.

நீ இரண்டு வருடங்களுக்குள் இறந்துவிடுவாய் என்பதை நீ அறிந்திருந்தால் அந்த இரண்டு வருடங்கள் தியானத்திற்காக அர்ப்பணிக்கபடலாம். இல்லாவிட்டால் மக்கள் எப்போதும் தள்ளிபோட்டுகொண்டே இருக்கிறார்கள், அவர்கள் நாளை தியானம் செய்ய நினைப்பார்கள் — நாளை ஒருபோதும் வருவதில்லை. செய்வதற்கு வேறு விஷயங்கள் பல உள்ளன, உனக்கு தியானம் செய்ய நேரம் இல்லை.

இப்போது வேறு வழியில்லை, நாளை என்பது முடிந்துவிட்டது, உனது கைகளில் இருப்பது இந்த வினாடி மட்டுமே......இதுதான் உண்மை, எய்ட்ஸ் அல்லது எய்ட்ஸ் இல்லை, ஆனால் எய்ட்ஸ் அதனை ஆழமாக உணரசெய்கிறது, அது மாறுவேடத்தில் வந்த ஆசீர்வாதம். தியானத்திற்குரிய நேரம் வந்துவிட்டது.

இப்போது நீ ஈடுபட்டுகொண்டிருந்த சிறிய, முட்டாள்தனமான விஷயங்களை மறந்துவிடலாம். சீட்டு விளையாடிகொண்டும், கால்பந்து விளையாட்டு போட்டியை பார்த்துகொண்டும், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற உணர்வேயில்லாத மக்கள் கோடிகணக்கில் உள்ளனர்.

நீ அவர்களை கேட்டால், நேரத்தை கழித்து கொண்டிருப்பதாக கூறுவார்கள். சிறந்த செயல்! நேரம் உன்னைக் கழித்துக் கொண்டிருக்கிறது, ஆனால் நீ நேரத்தை கழித்துக் கொண்டிருப்பதாக நினைத்துகொண்டிருக்கிறாய், நீ எப்படி நேரத்தை அழிக்கமுடியும்? நீ அதனை பார்த்தது கூட கிடையாது. உன்னுடைய கத்திகள் அதனை வெட்டமுடியாது, உன்னுடைய அணு ஆயுதங்கள் கூட அதனை தொடமுடியாது. நேரத்தை எவ்வாறு நீ அழிக்கபோகிறாய்?

ஆனால் காலம் ஒவ்வொரு வினாடியும் உன்னை கொன்று கொண்டு இருக்கிறது.

எய்ட்ஸ் ஒரு சிறந்த ஆசீர்வாதமாக புரிந்துகொள்ளப்பட வேண்டும். இப்போது நீ சீட்டு விளையாடுவதை நிறுத்திவிடலாம், நீ இப்போது வெட்டிவேலைகளை விட்டுவிடலாம். முட்டாள்தனமான கால்பந்து போட்டிகளை பார்ப்பதை நீ நிறுத்திவிடலாம். இப்போது எல்லா நேரமும் உன்னுடையதே, இறப்பதற்குள் செய்யவேண்டிய ஒரே காரியம், உன்னை அறிந்துகொள்வதே. இறப்பு இவ்வளவு பக்கத்தில் உள்ளபோது நீ உன்னுடைய சொந்த இருப்பை பற்றி தெரிந்து கொள்ளாமல் இனிமேலும் இருக்கமுடியாது.

இறப்பின் நெருக்கத்தன்மை உனக்குள்ளே இருக்கும் இறப்பற்ற தன்மையை உணர வழி செய்கிறது. அதுதான் தியானத்தின் முழுக் கலை. ஆழமாக உள்ளே உனது இருப்பின் மையம் வரை செல்வது.

நீ ஆச்சரியமடைவாய், வியப்பாய், உனது இருப்பின் மையத்தில் நீ நிரந்தரமானவன். இறப்பு இல்லை, ஓருபோதும் இறப்பு இருந்ததில்லை. எதுவும் உண்மையில் இறப்பதில்லை, உருவங்கள் மட்டுமே மாறுகின்றன.

எய்ட்ஸ் உனது உடலை அழித்துவிடலாம் – ஆனால் அது எப்படியும் அழியபோகிறது. அது பெரிய பிரச்சனை இல்லை. அது எய்ட்ஸினால் அழிவது சிறந்தது, ஏனெனில் நீ தப்பி பிழைக்கமுடியாது, எய்ட்ஸோடு உன்னுடைய நம்பிக்கையும் இறந்துவிட்டது. இப்போது எந்த குணமாக்கும் வழியும் இல்லை,

நீ உண்மையை நேராக சந்தித்தாக வேண்டும். வெளியிலிருந்து எந்த உதவியும் கிடைக்காது, நீ உனது உள் உலகத்தை தான் நம்ப வேண்டும். நீ தனியாக விடப்படுகிறாய்.

உண்மையில் எல்லோரும் எப்போதும் தனியாகவே இருக்கிறார்கள்.
பிறப்பிலிருந்து இறப்பு வரை முழு பயணமும் தனிமைதான். நீ கூட்டத்திற்குள் இருக்கலாம், ஆனால் உனது ஒருமை அழிக்கப்பட முடியாதது. அது அங்கே உள்ளது. நீ உனது தனிமையை அழிக்க எல்லா முயற்சியும் செய்கிறாய், ஆனால் யாரும் எப்போதும் அதில் வெற்றி அடைந்ததில்லை. உண்மை உண்மைதான்.........நீ சிறிது தள்ளிபோடலாம்.

எய்ட்ஸ் எல்லா தள்ளிபோடுதலையும் அழித்துவிடுகிறது.

என்ன செய்யவேண்டுமோ அது இப்போதே செய்யப் படவேண்டும். ஆமாம், ஒரு விஷயம் நிச்சயமானது. அது நீ ஒரு பலி என்பதுதான். உன்னுடைய மதங்களின், தன்னை காப்பாளர்கள் என சொல்லிக்கொள்வோரின், போதகர்களின், கடவுளின் அவதாரங்களின், கடவுளின் பலி. நீ ஒரு பலி. உண்மையை மறைக்க முயற்சி செய்யாதே. அது உதவாது.

ஓரின சேர்க்கையின் இறுதி வெளிப்பாடு எய்ட்ஸ். ஓரின சேர்க்கை ஒரு மத சம்பந்தப்பட்ட வியாதி. அது பெண்கள் அனுமதிக்கப்படாத மடாலயங்களில் பிறந்தது. உலகின் எல்லா மதங்களும் பிரம்மசரியத்தை வலியுறுத்துவதால் அது பிறந்தது. அது முட்டாள்தனம். நீ ஆண்மையற்றவனாக இல்லாவிட்டால் பிரம்மசாரியாக இருக்கமுடியாது.

நினைவில் கொள், ஆண்மையற்ற மக்கள் உலகத்திற்கு எதுவும் அளித்ததில்லை. அவர்களிடம் ஆக்கபூர்வமான சக்தி எதுவும் இல்லை. உன்னுடைய காமசக்திதான் உனது ஆக்கசக்தி. ஆண்மையற்ற மனிதன் ஒரு வெற்றுமூங்கில், உள்ளே எதுவும் இல்லை. அவன் எப்படியோ இழுத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் அவன் வாழவில்லை, அவன் வாழ முடியாது. அவனிடம் வாழ்வதற்கு சக்தி இல்லை. அவனுடைய பிறப்பிலிருந்தே அவன் பழிக்கப் பட்டிருக்கிறான். இப்படிப் பட்ட மக்கள் மட்டுமே இப்படிப்பட்ட துறவிகளாக ஆகமுடியும்.

வாழ்வோடும் முழுசக்தியோடும் இருக்கும் மற்றவர்கள் பிரம்மசாரியானால் தங்களோடு சண்டையிட்டே அவர்கள் அழிந்துவிடுவார்கள். தங்களின் இயல்போடு சண்டையிட்டு அவர்களை அவர்களே அழித்துவிடுவார்கள். அவர்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டார்கள். இயற்கை உன்னைவிட மிகபெரியது. நீ ஒரு மிக சிறிய பகுதி, கிட்டதட்ட கண்ணுக்கு தெரியாதது. இயற்கை வானம் போல பெரியதாகவும், பரந்ததாகவும் உள்ளது. நீ அதனோடு சண்டையிட முடியாது.

மிகவும் ஆச்சரியப்படதக்க விஷயம் என்னவென்றால், பிரம்மசரியம் சட்டவிரோதம் என்றோ, பிரம்மசரியத்தை கடைபிடிக்க முயற்சிப்பவன் பைத்தியகாரன் என்றோ யாரும் கூறுவதில்லை! ஆனால் எல்லா மதங்களும் பிரம்மசரியம் ஆன்மீக சார்புடையது, எனவும் மதிப்பிற்குரியது எனவும் தெய்வீகமானது எனவும் வலியுறுத்துகின்றன.

ஆச்சரியம், கடவுள் இருந்தார் என்றால் ஏன் அவர் உனக்கு காமசக்தியை கொடுத்து இருக்க வேண்டும் கடவுள் உனக்கு காமசக்தியை அளிக்கிறார், பூமியில் அவருடைய பிரதிநிதிகள், காப்பாளர்கள், போதகர்கள், போப்கள், அனைவரும் காமத்திற்க்கு எதிராக உள்ளனர். அதாவது அவர்கள் அனைவரும் அவர்களுடைய கடவுளுக்கு எதிராக உள்ளனர்!. இதுவரை கடவுள் அவர்களுக்கு செவி சாய்க்கவில்லை. ஒவ்வொரு குழந்தையும் முழுமையாக தயாராகிதான் வருகிறது.

பிரம்மசரியம்தான் ஓரின சேர்க்கையின் அடிப்படை காரணம், காமத்தின் மாறுபட்ட அடக்குமுறை வெளிப்பாடுகளுக்கு காரணம். ஆனால் பூசாரிகள் உன்னுடைய அடக்குமுறை வெளிப்பாட்டிலிருந்து நல்ல அறுவடை செய்கின்றனர். நீ எந்த அளவிற்கு கெட்டு போயிருப்பதாக உணர்கிறாயோ அந்த அளவிற்கு நீ பூசாரியின் கைகளில் இருக்கிறாய். நீ குற்ற உணர்ச்சியை உணர்வதே அதன் காரணம்.

இயல்புக்கு மாறாக நடப்பது உனக்கு குற்றஉணர்ச்சியை ஏற்படுத்துகிறது. நீ அருவெறுப்பாக உணர்கிறாய். அது உன்னை நீ ஏற்றுகொள்ள முடியாமல் செய்கிறது. நீ இயல்புக்கு மாறாக நடப்பவனாக இருந்தால் நீ சுயமரியாதை உள்ளவனாக இருக்கமுடியாது. ஒரு மனிதனாக இருப்பதில் உள்ள பெருமைகளை எல்லாம் நீ இழந்துவிடுகிறாய். பரிமாண வளர்ச்சியின் மிக உயர்ந்த வெளிப்பாடு - விழிப்புணர்வு நிலைதான். நீ உனது அடக்குமுறையின் அசிங்கமான வெளிப்பாடுகளை மறைக்கிறாய்.

நினைவில் கொள், காமம் ஓரு பிரச்சனை அல்ல, அடக்குமுறை வெளிப்பாடுகளே பிரச்சனை. ஆண் மற்றொரு ஆணுடன் கலவியில் ஈடுபடுகிறான். மனிதன் மிருகங்களுடன் கலவியில் ஈடுபடுகிறான். நீ மிருகங்களுடன் கலவியில் ஈடுபடுகிறாய் எனும் விஷயத்தை நீ கண்டிப்பாக மறைக்க முயற்சி செய்வாய். நீ உன்னையே தாழ்த்தி கொள்கிறாய். நீ உன்னை மிருகங்களின் தரத்திற்கு குறைத்து கொள்கிறாய்.

கெளதம புத்தர் மத உலகை பொறுத்தவரை மிகவும் புத்திசாலி. அவர்கூட பெண்களை அவரது சங்கத்தில் அனுமதிக்க தயாராக இல்லை. ஏன்? என்ன பயம்? பயம் என்னவென்றால், சங்கத்தில் பெண்கள் இருந்தால் பிறகு சீடர்களின் பிரம்மசரியத்திற்கு ஆபத்து வந்துவிடும். ஆனால் பிரம்மசரியம்தான் இயலாதது, ஆபத்தை பற்றிய கேள்வி அல்ல. பெண்தான் உனது சீடர்களை இயல்பானவர்களாக மாற்றுவாள். இல்லாவிட்டால் அவர்கள் ஒருவருக்கொருவர் கலவியில் ஈடுபடுவர். காலங்காலமாக புத்த பிட்சுகள் அதையேதான் செய்து வருகின்றனர். கிறிஸ்துவ பாதிரிகளும் அதையேதான் செய்து வருகின்றனர்.

இயற்கை வெளிப்படுவதற்க்கு அதற்கென தனிவழி வைத்துள்ளது. நீ இயற்கையான வழியை அடக்கினால், அது இயல்பற்றதை கொண்டு வெளிவரும். அது உன்னை அழித்துவிடும். அதன் உச்சகட்டமே எய்ட்ஸ்.

அரசியல்வாதிகளும் பூசாரிகளும் செய்வது முட்டாள்தனம். இன்னமும் பூசாரிகள் பிரம்மசரியத்தின் அழகையும் ஆன்மீகத்தன்மையையும் பற்றி பிரசாரம் செய்கிறார்கள். சில சமயங்களில் ஏன் இன்னும் சிறுநீர் கழிப்பதை கட்டுபடுத்தும் முறையை பிரசாரம் செய்யும் மதம் உருவாகவில்லை என ஆச்சரியப்படுவேன். நீ ஒன்றை மட்டும் நிச்சயமாக கூறலாம். யாராவது சிறுநீர் கழிப்பதை கட்டுபடுத்தும் முறையை பிரசாரம் செய்தால், அதை பின்பற்றுவதற்கு இந்த பூமியில் போதுமான முட்டாள்தனமான மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அதனை பின்பற்ற தொடங்கி விடுவார்கள். அவர்களால் பின்பற்றாமல் இருக்க முடியாது. அவர்கள் போலிதனமாக இருப்பார்கள்.

பிரம்மசரியம் எல்லா மதங்களையும் போலிதனமானவைகளாக மாற்றி இயல்புக்கு மாறான வழிகளுக்கு அவர்களை மாற்றிவிட்டது. அவர்கள் இன்னமும் பிரம்மசரியத்தைக் கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

எய்ட்ஸ் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும்.

பூசாரிகள் பழிக்கப் பட வேண்டும்.

மதங்கள் எய்ட்ஸ்க்கு பொறுப்பேற்க வேண்டும்.

பாவப்பட்ட இந்த பலிகளின் மீது ஆவேசப் படாதீர்கள். அவர்களுக்கு உதவி செய்யுங்கள். அவர்கள் அதிக நாள் வாழப் போவதில்லை.

என்னுடைய சொந்த கம்யூனில் ஒவ்வொரு சந்நியாசியும் சோதனைக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். ஆனால் ஒருவருக்கு எய்ட்ஸ் இருந்தாலும்கூட அவர் அதற்காக பழிக்கப் பட மாட்டார். அதற்கு பதிலாக அவருக்கு அதிக மதிப்பு, அதிக அன்பு அளிக்கப் படும். அவர் ஒரு பலி.

நாங்கள் சோதனை செய்ததில் இருவர் மட்டுமே எய்ட்ஸ் உடன் கண்டறியப்பட்டுள்ளனர். நாங்கள் அவர்களுக்கு அமைதியான இடத்தில் அழகான வீட்டை அமைத்துள்ளோம். மற்ற எல்லோரையும் விட சிறந்த மதிப்பை நாங்கள் அவர்களுக்கு அளிக்கிறோம். அவர்களுக்கு அது தேவை. அவர்கள் குற்றஉணர்ச்சியை உணரக்கூடாது.

நீங்கள் படிக்க நினைத்த இலக்கியங்களை படியுங்கள். கேட்க விரும்பிய ஆனால் நேரமின்மையால் கேட்காத இசையை கேளுங்கள், திரைப்படங்களை பாருங்கள். .... இப்போது உங்களுக்கு நேரம் உள்ளது. இரண்டு வருடங்கள். தனக்காக மட்டுமே இரண்டு வருடங்களை செலவிடும் அளவிற்கு வசதி படைத்தவர்கள் யாரும் இல்லை. தியானியுங்கள்.

இந்த இரண்டு வருடங்களை ஆழமான தியானத்திற்கு பயன்படுத்துங்கள். பின் இறப்பு வரும் போது நீ மெளனத்தில், அமைதியில், மகிழ்ச்சியில் இறப்பாய். ஏனெனில் உனக்கு அந்த மரத்தின் கனிகளும் தெரிந்திருக்கும். நிரந்தர வாழ்வு.... நீ ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் இறக்கலாம்.

இறப்பு ஓரு பிரச்சனையே அல்ல. இறப்பு ட்யூபர்கோஸிஸ்சினால் வருகிறதா, அல்லது கேன்சரால் வருகிறதா, அல்லது எய்ட்ஸ்சினால் வருகிறதா என்பதில் என்ன விஷயம் இருக்கிறது எய்ட்ஸ்தான் சிறந்தது. ஏனெனில் அதற்குதான் குணமடைய எந்த வழியும் இல்லை.

ஆனால் வெளி உலகத்தில் செய்தி மறைக்கப் படுகிறது. எந்த அரசாங்கமும் உண்மையில் எவ்வளவு மக்கள் எய்ட்ஸ்சினால் அவதி படுகிறார்கள் எனும் செய்தியை கொடுக்க தயாரில்லை. ஏனெனில் அந்த செய்தி அந்த நாடுகளில் ஓரின சேர்க்கை உள்ளது, இயல்புக்கு மாறானது உள்ளது என்பதை வெளிப்படுத்தி விடுகிறது.

“ எய்ட்ஸ் நோய் நேருக்கு நேர் இறப்பைச் சந்திக்க வைக்கிறது...” என நீ கூறுகிறாய். நிச்சயமாக மரணம் இருக்கிறது என்பதை நீ கவனத்தில் வைத்துள்ளாய் என்பது நல்லது. மரணமற்ற ஒன்றை, மரணத்தை கடந்தும் இருக்கும் ஒன்றை உன்னுள்ளே கண்டுபிடிப்பதற்கு இதுவே நேரம்.

தியானத்திற்கு இதைவிட சிறந்த நேரத்தை உன்னால் கண்டறிய முடியாது. என்னுடைய கம்யூனிலாவது இறுக்கமாக உணராதே. ஏனெனில் மரணம் இயற்கையானது. அது எதனால் ஏற்படுகிறது என்பது அர்த்தமற்றது. பய உணர்வில் இருக்காதே. உண்மையில் நீ தேர்ந்தெடுக்கப் பட்ட சிலரில் ஓருவன் என்பதில் மகிழ்வு கொள். மற்றவர் அனைவரும் அவர்களுடைய மரணத்தை பற்றிய இருட்டில் இருக்கிறார்கள். நீ அப்படி அல்ல. இறப்பு வந்து கொண்டிருக்கிறது என்பதை நீ அறிவாய் எனும் உண்மையே உன்னை நீ அறிவதற்கான இடைவெளியை உனக்குள்ளே கண்டிப்பாக உருவாக்கும்.

ஓரினசேர்க்கையை சட்டவிரோதம் என அறிவிக்கும் வெளிஉலகத்தில் இது நடக்காது. ஏனெனில் ஒருவனுக்கு எய்ட்ஸ் இருக்கிறது என கண்டறியபட்டால்கூட அவன் இந்த விஷயத்தை இரகசியமாக வைப்பதற்காக மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுப்பான்.
“நான் உனக்காக இறக்கக்கூட தயார்” என உன் மனைவி உன்னிடம் கூறியிருக்கலாம். ஆனால் உனக்கு எய்ட்ஸ் இருக்கிறது என்பது உன் மனைவிக்கு தெரியவந்தால்........உன்னுடைய குழந்தைகள், உன்னுடைய பொற்றோர், உன்னுடைய நண்பர்கள்......அனைவருமே உன்னுடைய எதிரியாகிவிடுவார்கள். நீ உனது வேலையை இழந்து விடுவாய். நீ உனது குடும்பத்தை இழந்து விடுவாய். நீ உனது சுயமரியாதையை இழந்துவிடுவாய். நீ வெறுமனே ஒரு பழிக்கப்பட்ட மனிதனாக இருப்பாய்.

நாம் மிகவும் போலித்தனமான உலகத்தை உருவாக்கிவிட்டோம். அதனோடு கணக்கை முடிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.!

உண்மையாக இரு நேர்மையாக இரு! உன்னுடைய நிரந்தர இருப்பை அறிவது, நீ எப்போதும் இங்குதான் இருந்தாய், எப்போதும் இங்குதான் இருப்பாய் என்று அறிவது ஒரு மிகப்பெரிய தெளிவு. அந்தத் தெளிவில்தான் கொண்டாட்டம்.

Source: From death to deathlessness # 26

மனதின் கதை – ஓஷோவின் கதை - 4

ஓரு பிரபல திபெத்திய கதை........

ஒரு மனிதன் ஒரு வயதான குருவுக்குத் தினமும் சேவை புரிந்து வந்தான். உணவு தருவது, கிணற்றிலிருந்து நீர் இறைப்பது, கால்களை அமுக்கிவிடுவது போன்ற சேவைகள். வயதான குருவோ, “ஏன் உன் நேரத்தை வீண் செய்கிறாய்“ என்று கூறுவது வழக்கம். ஏனெனில் அந்த குருவுக்கு இந்த சேவையின் நோக்கம் ஏதோ ஆசைதான் என்பது தெளிவாகப் புரிந்திருந்தது.

முடிவில் ஒரு நாள் அந்த மனிதன், “நான் உங்களுக்கு சேவை புரியக் காரணம் – எனக்கு ஏதாவது ஓர் அதிசயம் – ஒரே ஒரு அதிசயமாவது செய்ய கற்றுக் தர வேண்டும்” என்றான்.

அதற்கு அந்த வயதான குரு, “ஆனால் எனக்கு எந்த அதிசயமும் செய்யத் தெரியாது. நீ உன் நேரத்தை தேவையின்றி வீண் செய்து விட்டாய். நீ வேறு யாராவது அதிசயங்கள் செய்ய தெரிந்தவரைப் போய் பார்” என்று கூறினார்.
ஆனால் அந்த மனிதனோ, ”உங்களுக்கு அதிசயம் செய்யத் தெரியாது என்று எப்போதும் நீங்கள் மறுத்து வருகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் எப்போதும் அதிசயங்களை நடத்திதான் வருகிறீர்கள். பிறர் என்னிடம் கூறியுள்ளார்கள் – நீ அவர் கூறுவதைக் கேட்காதே. அவருக்கு சேவை செய்துகொண்டே வா. ஓருநாள் அவர் உனக்கு ஏதாவது ரகசியம் கூறுவார். ஆனால் அதற்கு நீ ஏற்றவனாக இருக்கிறாயா என்று பார்த்துவிட்டுத்தான் கூறுவார் என்று கூறியுள்ளனர். ஒருவேளை நான் இன்னும் அதற்குத் தக்கவாறு கனியவில்லையோ என்னவோ” என்று கூறினான்.

சில நாட்கள் கழித்து, அந்த வயதான குரு, இந்த மனிதன் இன்னும் தேவையேயின்றி வேலை செய்து வருவதைக் கண்டார். யாரோ இவன் மனதில் நான் அதிசயம் புரிபவன் என்ற எண்ணத்தை விதைத்து விட்டனர். “ஒருவேளை அதிசயங்கள் நடக்கலாம். ஆனால் அவை தாமாகவே நடப்பவை. நான் அவற்றை செய்வதில்லை.”

உயர்ந்த தன்னுணர்வு நிலை அடைந்த மனிதர்களிடம், இப்படிப் பல விஷயங்கள் தானாகவே நடக்கும். எப்படி சூரியன் உதிக்கும்போது பறவைகள் பாடுகின்றனவோ அப்படித்தான். சூரியன் இந்த அதிசயத்தை செய்வதில்லை. மலர்கள் தங்கள் இதழ்களை தாமாகவே திறக்கின்றன. சூரியன் இந்த அதிசயத்தை புரிவதில்லை. சூரியன் இருந்தால் போதும், இந்த அதிசயங்கள் தாமே நடக்கும். இப்படி தன்னுணர்வு நிலையில் விழிப்பு பெற்ற ஒரு மனிதனின் இருப்பே பல மலர்கள் இதழ் மலரவும், பல பறவைகள் கானம் பாடவும் போதுமானதாக இருக்கும்.

அந்த வயதான குரு, “நான் உனக்கு ஏதாவது ரகசியத்தைக் கூறினால் அன்றி நீ என்னை விட்டுப் போகமாட்டாய் போலிருக்கிறதே” என்றார். அந்த மனிதன், “அது உண்மைதான்” என்றான். ஆகவே குரு “நான் உனக்கு ஓரு ரகசிய மந்திரம் கூறுகிறேன். ஒரு சிறு மந்திரம். திபெத்திய மந்திரம் “ஓம் மணி பத்மீ ஹம்” என்பதை எழுதித்தருகிறேன்” என்றார். ஓம் என்பது வாழ்விருப்பின் நிரந்தர ஓசை, மணி பத்மீ ஹம் என்றால் தாமரைப் பூவில் இருக்கும் வைரமணி. மணி என்றால் வைரம், பத்மம் என்றால் தாமரை. ஆக அதன் அர்த்தம் நிரந்தர ஓசையும், தாமரை பூவுக்குள் இருக்கும் வைரமும் என்பதாகும். இது முக்தி நிலை என்பதன் அர்த்தமாகும். எங்கும் பரந்து உள்ள நிரந்தர ஓசையும், தாமரையின் அழகும், மேலும் தாமரையின் உள்ளிருக்கும் வைரத்தின் ஒளியும். ஒரு சின்ன மந்திரத்திற்குள் அவர்கள் முக்தி அனுபவத்தின் முழுமையையும் சுருக்கி விவரித்துள்ளனர்.

அந்த வயதான குரு, “இந்த மந்திரத்தை எடுத்துச் சென்று, இதை ஐந்து முறை, வெறும் ஐந்தே ஐந்து முறை கூறு. முதலில் குளி. புத்தாடைகளை உடுத்திக்கொள். கதவுகளை மூடிக்கொண்டு தனியே ஓரிடத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை ஐந்தே ஐந்து முறை கூறு. பிறகு நீ எந்த அதிசயம் வேண்டுமானாலும் செய்யலாம்” என்று கூறினார்.

அந்த மனிதன் வேகமாக வெளியேறத் துவங்கினான். அவன் தன் நன்றி உணர்வைக் காட்டக்கூட முயலவில்லை. நன்றி என்று கூறக்கூட முயலவில்லை. உடனே கோயில் படிகளில் இறங்கி ஓடி விட்டான். அவன் பாதிதூரம் போனபோது, அந்த குரு, “நில்! ஓன்றைக் கூற மறந்து விட்டேன். இந்த மந்திரத்தைக் கூறும்போது ஒன்று நினைவிருக்கட்டும். குரங்கைப் பற்றி நினைக்கவே கூடாது!“ என்று சத்தமாகக் கூறினார்.

அந்த மனிதன், “நான் ஏன் குரங்கைப் பற்றி நினைக்கப் போகிறேன், என் வாழ்வில் இதுவரை நான் நினைத்ததே இல்லை” என்றான். குரு, “சரிதான், ஆனால் நினைவிருக்கட்டும்! குரங்கு மட்டும் கூடவே கூடாது. குரங்கின் நினைவு வந்தால் நீ மறுபடி ஐந்து தடவை மந்திரம் கூற வேண்டும்” என்றார்.

அந்த மனிதன் “குரங்கு எதற்காக வரும்?” என்றான். குரு, “எனக்குத் தெரியாது. நான் உனக்கு இரகசியத்தைக் கூறிவிட்டேன். இதுதான் எனது குரு எனக்குக் கூறிய இரகசியமாகும்.” என்றார்.

ஆனால் அவன் படிகளில் இறங்கத் துவங்கும் முன்பே குரங்குகளைப் பற்றி நினைக்கத் துவங்கி விட்டான். அவன், “அடக் கடவுளே நான் இன்னும் மந்திரம் கூறக் கூட ஆரம்பிக்கவில்லை. ஆனால் குரங்குகள் வந்துவிட்டனவே!” என்று கூறினான். அவன் கண்களை மூடியபோதும் குரங்குகள். குரங்குகள் இளித்துக் கொண்டு, அவனைப் பார்த்து மூஞ்சியைக் காட்டின. அவன், “இது ஓரு விநோத மந்திரம்தான். நான் இன்னும் துவங்கவேயில்லை, அதற்குள்ளா?” என்றான்.

அவன் வீட்டைச் சென்றடைந்தபோது குரங்குகளால் சூழப்பட்டிருந்தான். அவன் எங்குப் பார்த்தாலும் குரங்கைத்தான் கண்டான். உள்ளே சென்று குளித்தான். ஆனால் அதனால் எந்தப் பயனுமில்லை. குளியலறையில் மூடிய கதவிற்குப்பின் குரங்குகள் சுற்றி அமர்ந்திருந்தன. அவன், “அந்தக் கிழவன் ஓரு முட்டாள். இந்தக் குரங்குதான் பிரச்னை என்றால் அவன் இதைப் பற்றி குறிப்பிட்டிருக்கவே கூடாது. யானைகள் வரவில்லை. ஒட்டகங்கள் வரவில்லை. சிங்கங்களும் வரவில்லை. குரங்கைக் தவிர வேறெதுவுமே வரவில்லை.” என்று நினைத்தான்.

பிறகு அவன் கால்களை மடித்து பத்மாசன நிலையில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான். ஆனால் அதற்கு எந்த பயனுமில்லை. குரங்குகள் அவனை இடித்தன. குரங்குகள் மடியில் உட்கார்ந்து கொண்டன. சுற்றிலும் ஓரே குரங்குக் கும்பல்தான். அவனுக்கு மிகவும் கவலையாகி விட்டது. அவன் மனைவி அவனை கடந்து சென்றபோது அவன் பார்த்தான். அப்போது அவளும் கூட ஓரு குரங்கு போல..... இல்லை, இல்லை, அவள் என் மனைவி. அவன் தந்தை கடந்து போனார். பார்த்தால் கிழக் குரங்குபோல...... சிலமுறை அவன் தந்தைபோலத் தெரிந்தார். அந்த மனிதன், “ஐயோ நான் பைத்தியமாகி விடுவேன்” என்று நினைத்துக் கொண்டான்.

ஐந்து தடவை என்பது மிக அதிகம். அந்த மந்திரமான ஓம் மணி பத்மீ ஹம் என்ற நான்கு வார்த்தைகளை ஒரு முறை கூட முடிக்கவிட வில்லை. அத்தனை குரங்குகள். அன்றிரவு முழுவதும் அவன் முயன்றான். நிறைய முறை குளித்தான். ஒருவேளை அவனது உடுப்புகள் போதுமான அளவு தூய்மையாக இல்லையோ என நினைத்துக் கொண்டு நடு இரவில், அந்த குளிர்காலத்தில் அவன் நிர்வாணமாக நின்றான். இப்போது அழுக்கு துணிகள் பற்றியோ, அல்லது வேறு எது பற்றியோ எந்தக் கேள்வியும் இல்லை. ஆனால் குரங்குகளும் சுற்றிலும் காலை மடித்துகொண்டு பத்மாசனம் போட்டு அமர்ந்திருக்கின்றன. அவன் அவற்றைப் பார்த்துச் சப்தமிட்டான். அவை சிரித்தன.

காலையில் அவன் கிட்டதட்ட பைத்தியமாகிவிட்டான். “அந்த கிழவன் தந்திரக்காரன். எத்தனை வருடங்களாக நான் சேவை செய்தேன். முடிவில் அவன் எனக்கு இரகசியத்தையும் தந்து, கூடவே இந்தக் குரங்குகளையும் தந்து அந்த இரகசிய மந்திரத்தை நாசமாக்கி விட்டானே!” என்றான் அவன்.

அவன் அந்த குருவிடம் திரும்பிச் சென்று, அந்த மந்திரத்தை திருப்பி தந்துவிட்டு, “நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அந்தக் குரங்குகள்......” என்றான்.
அந்தக் குரு, “அவை உன்னிடம் வரவே வராது என்றாயே” என்றார். அவன், “நான் இதுவரை என் வாழ்வில் ஒரு குரங்கைப் பற்றிக்கூட எண்ணியதோ, கனவில் கண்டதோ நேரில் கூட கண்டதோ கிடையாது. இலட்சக்கணக்கான விலங்குகளைப் பற்றி நான் யோசித்ததேயில்லை, அவசியமுமில்லை. நீங்கள் அந்த வார்த்தையைக் கூறாமலிருந்திருந்தால் என்னால் அதிசயங்களை நிகழ்த்தி இருக்க முடியும். ஆனால் அது இப்போது நடவாத காரியமாகி விட்டது.” என்றான்.

குரு. “நான் என்ன செய்வது? குரங்கு அந்த மந்திரத்துடன் இணைந்து வரும். குரங்கு இல்லையேல் அந்த மந்திரம் பயனில்லை. குரங்கைத் தவிர்க்கும் வழி தெரியாவிட்டால் உன்னால் அதிசயங்களை நிகழ்த்த முடியாது.” என்றார்.

அந்த மனிதன், “நான் எல்லா அதிசயங்களை பற்றியும் மறந்தே போய்விட்டேன். இந்த மந்திரத்தைத் திருப்பி எடுத்துக் கொண்டு என்னை குரங்குகளிடமிருந்து விடுவியுங்கள். ஏனெனில் எனக்கு மந்திரம் போனாலும் குரங்குகள் போகாதோ என்று பயமாக இருக்கிறது. எனக்கு மனைவியும் வயதான தகப்பனாரும், சிறு குழந்தைகளும் உள்ளனர். நான் அவர்களை கவனித்தாக வேண்டும். என்னால் இரவும் பகலும் அந்த குரங்குகளுடன் சண்டையிட முடியாது.” என்று வேண்டினான்.

குரு, “அந்த மந்திரத்தை நீ என்னிடம் திருப்பி தந்து விட்டதால் இனிமேல் குரங்குகள் வராது. அவை மிகவும் நேர்மையான பக்திமான்கள்.” என்றார்.

அந்த மனிதன் சென்று நாலாபக்கமும் பார்த்தபோது எங்குமே குரங்குகள் தென்படவில்லை. அவன் ஆச்சரியமடைந்தான். வீடு சென்று பார்த்தபோது மனைவி மனைவியாகவே தோற்றமளித்தாள். தகப்பனார் தகப்பனாராகவே தோன்றினார். குழந்தைகள் குழந்தைகளாகவே இருந்தனர். அவன் இது விநோதம்தான் என்று குளித்தான். குளியலறை காலியாகவே இருந்தது! “அந்த மந்திரம் சிறியதுதான், குரு எழுதிக்கொடுத்த மந்திரத்தை நான் திருப்பித் தந்து விட்டாலும் கூட, அதை இரவு முழுவதும் கூறியபடியிருந்ததால் எனக்கு அது நினைவிருக்கிறது. இப்போது எந்த ஆபத்துமில்லை.... நான் கூறிப் பார்க்கிறேன்.” என்று நினைத்தான்.

அவன் ஓம் என்று துவங்கிய கணமே, ஒரு குரங்கு தோன்றிவிட்டது. கூடவே இரண்டு குரங்குகள் சுற்றி அமர்ந்து ஓம் என்றன. அந்த எண்ணம் முழுவதையும் கைவிட்டுவிட்டான். அவன் நான் கடைக்குப் போய் என் வேலையைப் பார்க்கிறேன். இந்த அதிசயங்களை நிகழ்த்தும் எண்ணம் இனிமேல் சரியாக வராது என்று போய்விட்டான்.

Source : Invitation # 19

No comments: