Thursday, October 28, 2010

மலர் 3 இணைய இதழ் 2 11 செப்டம்பர் 2010

ஓஷோ சாஸ்வதம் செய்தி

ஓஷோ சாஸ்வதம் மையத்தில் செப்டம்பர் 25,26 சனி, ஞாயிறு தேதிகளில் – நீயும் நீயும் – என்ற தியான பயிற்சிசாலை நடைபெற உள்ளது. 5 நபர்களுக்கே இடமிருக்கிறது.

மற்ற தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும். எப்போதும் வந்து தங்கி தியானம் செய்யலாம்.

மெளனத்தில் விளைந்த முத்துகள் – ஓஷோ

1.
ஒரு பெண் முடிந்த அளவு அதிக பெண்மை கொண்டவளாக மாற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்போதுதான் அவள் மலர முடியும். ஓர் ஆண் முடிந்த அளவு அதிக ஆண்மை கொண்டவனாக இருக்க வேண்டும், அப்போதுதான் அவன் மலர முடியும். இவர்கள் இப்படி எதிர்நிலை துருவங்களாக மாறும் பொழுது, ஒரு பெரும் கவர்ச்சி, ஒரு பெரும் ஈர்ப்பு அவர்களுக்குள் எழும்புகிறது.

2.
தியானம் என்பது இடத்திலோ காலத்திலோ செய்யும் பயணமன்று, மாறாகச் சட்டென விழித்துக்கொள்வது. இங்கு இப்போது நீங்கள் மௌனமாக இருக்க முடிந்தால், இதுவே மறுகரை. உங்களால் மனம் நின்று விடுவதை, செயலற்று விடுவதை அனுமதிக்க முடிந்தால், இதுவே மறுகரை.

3.
நீங்கள் மனத்திலிருந்து இதயத்தை நோக்கிச் சாயுங்கள். அதுவே முதல் மாற்றம். குறைவாக எண்ணுங்கள், அதிகம் உணருங்கள். அறிவுபூர்வமாக இருப்பதைக் குறையுங்கள், உள்ளுணர்வை அதிகப்படுத்துங்கள். எண்ணிக் கொள்வது மிகப்பெரிய ஏமாற்று வேலை, அது நீங்கள் மாபெரும் காரியங்களைச் செய்வதாக உணரச் செய்யும். ஆனால் உண்மையில் நீங்கள் ஆகாயக் கோட்டைகள்தான் கட்டுவீர்கள். எண்ணங்கள் வெறும் ஆகாயக் கோட்டைகள் அல்லாமல் வேறொன்றும் இல்லை.

தலையங்கம்
அன்பு நண்பர்களே,

இந்த மாதமும் கூட்ட மனப்பான்மை பற்றி திரும்ப விளக்கப் போகிறேன். ஏனெனில், நான் நல்லவன், நல்லவனாய் இருக்கப் பாடுபடுகிறேன், எல்லோரிடமும் அன்பு காட்ட விரும்புகிறேன், முயற்சிக்கிறேன், வயதானவர்களிடம் மரியாதை கொள்கிறேன், என்னை விட உயர்ந்தவர்களிடம் பணிவோடு நடந்து கொள்கிறேன், நடந்து கொள்ள முயல்கிறேன், என்னை விட எளியவர்களிடம் இரக்கம் கொள்கிறேன், தாய், தந்தை, சகோதர, சகோதரிகள், சுற்றம் எல்லோரிடமும் பாசத்துடன் இருக்க விரும்புகிறேன், என் கடமையை சரிவர செய்ய விரும்புகிறேன், பெயரும் புகழும் பெற்று சிறந்த வாழ்க்கை வாழ விரும்புகிறேன், இவையெல்லாம் தவறா, போலியா என்ற கேள்வியை பலர் பலவிதமாக எழுப்பியுள்ளனர்.

இதற்கு நான் ஆரம்பத்திலிருந்து வருகிறேன். மனித நிலை என்பது ஒரு சந்திப்பு. மிருக நிலை பிறகு மனித நிலை பிறகு தெய்வ நிலை. ஆகவே மனித நிலை ஒரு சந்திப்பாக இருக்கிறது. நமக்கு மிருக உணர்வுகள் உள்ளன. அதிகம் அவையே உள்ளன. அவையே நம்மை ஆட்டிப்படைக்கும் உணர்வற்ற மனமாய் உள்ளன. மனிதனின் தன்னுணர்வு சிறிய அளவில் பிறக்கும்போதே இருக்கிறது. இதுதான் மனிதனின் ஆறாவது அறிவு. இதைப் பயன்படுத்தி வாழும் வாழ்க்கை மனித வாழ்க்கை. ஆனால் இதன் சக்தி மிகக் குறைவாகவே பிறக்கையில் உள்ளது.

இந்தத் தன்னுணர்வுக்கு உணர்வற்ற மனத்தில் அடங்கியுள்ள சக்தியை திருப்பி விடும் விதமாய் வாழ்வை அமைத்துக் கொள்ளுதலே வாழ்வியல் நெறி. இந்த வாழ்வியல் நெறி சிறிது காலத்திற்கு ஒரு முறை சரிபார்க்கப்பட்டு, உண்மையிலேயே தன்னுணர்வு வளர உதவுகிறதா என்று பார்த்து அதற்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆனால் நடைமுறையில் ஒவ்வொரு ஞானியும் புதுப்பிக்கும் வாழ்வியல் முறைகள் அவர்களுக்குப்பின் சுயநலக் கும்பல் வியாபாரிகள், அரசியல்வாதிகள், மற்றும் பூசாரிகளால் சடங்குகளாக மாற்றப்பட்டு மக்களை ஏமாற்றவும், அடிமைப்படுத்தவுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தன்னுணர்வு வளர்ந்து பிரபஞ்சத் தொடர்பை உணர்ந்து அதில் மூழ்கி பேரானந்தமாய் வாழ்வது தெய்வ நிலை.

இப்போது நாம் எந்த நிலையில் இருக்கிறோம் கேள்வி கேட்டவர் சொன்ன நிலையிலே இருக்கிறோம். கேள்வி சரியானதுதான், எந்த விதத்தில் என்றால் அது நாம் இன்றிருக்கும் நிலையைத் தெளிவாக விளக்கி விட்டது.
நாம் நல்லவனாய், தியாகியாய், அன்பு காட்டுபவனாய், பாசமுள்ளவனாய், கடமை தவறாதவனாய், நாட்டுப்பற்றும், இனப்பற்றும், மொழிப்பற்றும் உள்ளவனாய் இருக்கிறோம். இந்த நமது உணர்வுகள் எல்லாமே கூட்ட மனப்பான்மை உணர்வுகள் அல்லது சமூக உணர்வுகள் அல்லது சமூக முகங்கள். இவற்றிற்க்கான சமூகக் கருத்துக்கள் நமக்கு குழந்தை பிராயத்திலேயே கொடுக்கப்பட்டு விட்டன. ஆனால் நம்மில் உள்ளது என்ன நம்மில் 90 சதவீதம் விலங்கு மனம்தான். அதன் உணர்வுகளான பேராசை, கோபம், செக்ஸ், வன்முறை, பொறாமை, பயம், பசி இவை போன்றவையே நம்மை ஆட்டுவிக்கின்றன. இதைக் கடந்து நம்மிடமுள்ள சிறிய தன்னுணர்வு வெளிச்சத்தில் அறியும் குணங்களைக் கடைபிடித்து ஒரு மனிதனாய் வாழும் பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. அப்படி மனிதனாய் வாழ கடந்த காலத்தில் காட்டப்பட்ட வாழ்வியல் நெறிகள் இன்று போலித்தனமாய், வியாபாரமாய், சமூக முகமூடிகளாய் மாறிக் கிடக்கின்றன.

ஒரு மனிதனாய் நாம் மாற நாம் விலங்கு உணர்ச்சிகளிலிருந்து விடுபட வேண்டும் என்பது ஒரு புறம். மறுபுறம் மனித உணர்ச்சிகளுடன் வாழ தலைப்பட வேண்டும். அப்படித் தனிமனித உணர்ச்சிகளுடன் வாழ உதவுவதாக நமது சமுதாயம் அமைய வேண்டும். ஆனால் இன்று வரை அந்த முயற்சிகள் தோல்வியடைந்து, ஒரு சில சுயநல வாதிகளுக்காக பெரும்பாலோர் சுரண்டப்படும் சமூகமாகவே நமது சமூகம் இருந்து வருகிறது. முன்னாளில் அரசனுக்கு சேவகம் செய்யும் சமூகம். அரசனின் அதிகாரத்தையும், ஆணவத்தையும், அறியாமையையும், அவன் போடும் ஆட்டங்களையும் நியாயப்படுத்த, அவனுக்கு எதிராக மக்கள் உண்மையைப் புரிந்து உணர்வு கொள்ளாமலிருக்க, உருவாக்கப்பட்ட கருத்துக்கள் - மதவாதிகளால் உருவாக்கப்பட்டன – பூசாரிகளால் பரப்பப்பட்டன. எப்போதோ தோன்றும் ஒரு சில ஞானிகளின் கருத்துகளும் மதவாதிகளால் சுவீகரீக்கப்பட்டு மக்கள் ஏமாற்றத்திலேயே ஆழ்த்தப்பட்டனர்.

ஞானிகள் எல்லோரும் மக்களுக்கு உண்மை நிலையை, உணர்வை ஊட்டவே முனைந்தனர். உதாரணமாக புத்தர் ஒரு புரட்சியாளர். கடவுள் பாஷையான சமஸ்கிருதத்தை மறுத்து மக்கள் மொழியான பாலியில் உண்மைகளை உரைத்தார். அப்போது வைதீக மதம் என்று அழைக்கப்பட்ட இன்றைய இந்து மதம் யாகத்துக்கு உயிர் பலி கொடுத்து வந்தது. மனுவின் சாதிமுறையை கடைபிடித்து வந்தது. முனிவர்களும் குருக்களும் குடும்பத்தோடு இருப்பது மட்டுமின்றி இராஜாக்களுக்கும் குழந்தை கொடுத்து வந்தனர். இதையெல்லாம் எதிர்த்தவர் புத்தர். உண்மையைக் கண்டறிய தன்னை வருத்தும் தவமும், படாடோபமான யாகங்களும் தேவையில்லை, அமைதியும், சாந்தமும், கொண்டவனாய் சாட்சி பாவத்துடன் தன்னை நோக்குதலே போதும் என்றார் புத்தர். உருவ வழிபாட்டின் சீர்கேட்டை 2500 வருடங்களுக்கு முன்பே விளக்கிப் பேசி கடைபிடித்தவர் புத்தர். தன்னையும் உருவ வழிபாடு செய்யக்கூடாது என்று கூறியவர் புத்தர். அதனால்தான் அவர் மறைந்த பின் முதல் 500 வருடங்களுக்கு அவர் ஞானமடைந்த அரச மரம் வழிபடப் பட்டது. அவர் நாயகர்களுடன், கடவுள்களுடன் சேராது எதிர்த்தவர் என்பதால் உன்டான பெயரான விநாயகர் என்ற பெயரில், அவரது முற்பிறவிகளில் ஒன்றில் அவர் யானையாய் இருந்து, காடு தீப்பிடித்துக் கொண்டபோது, தன் காலடியில் அடைக்கலம் புகுந்த ஒரு காட்டு எலியைக் காப்பாற்ற தன் உயிரையே விட்டவர் என்ற அடிப்படையில் உருவம் அமைத்து, அரசமரத்து விநாயகராக வழிபடப் பட்டார். அவரது தியானத்தில் உணர்வோடு நடப்பது என்பது மிக முக்கிய ஒன்று. அதனால்தான் நாம் அரசமரத்தை சுற்றி வருகிறோம்.

பண்டைய தீர்த்தங்கரர்களின் சமணக் கோயில்களே இன்றைய முருகக் கோயில்களும், திருப்பதிக் கோயிலுமாய் இருக்கலாம், ஏனெனில் சித்தர்கள் எல்லாம் இந்து மதமாற்றத்தை ஏற்காமல் மறைந்து வாழ்ந்த சமணத்துறவிகளே. ஆனால் எதையும் ஆராய்வதில்லை நாம். புத்தர் அவரது பேச்சுக்களைக் குறிப்பெடுப்பதைக் கூட அனுமதித்ததில்லை. அவர் மறைவிற்குப் பின்னரே அவரது கருத்துக்கள் தொகுக்கப்பட்டன. எந்த கருத்தும் திணிக்கும் முறை கூடாது, தனிமனிதன் தன்னுணர்வின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பதாலேயே புத்தர் தன் பேச்சை எழுத அனுமதிக்காமல் இருந்தார்.

இதே நோக்கத்திற்க்காகவே ஓஷோ தனது அனைத்துப் பேச்சுக்களையும் ஒலி வடிவத்தில் பதிவு செய்வதை வற்புறுத்தி வந்தார். ஏனெனில் வரி வடிவத்தில் இடைச் செருகல் சாத்தியம். ஒலி வடிவத்தில் செய்வது இயலாது என்பதே காரணம்.

சரி, தனி மனித உணர்வுகள், அல்லது தன்னுணர்வு கொண்ட தனிமனிதனாய் நமக்கு சாத்தியப்படும் உணர்வுகள் எவை எவை – அவைதான் அன்பு, படைப்பு, நிறைவு, அழகு, சிரிப்பு, இசை, நடனம், விளையாட்டு, மகிழ்ச்சி, துணிவு, புத்திகூர்மை, நட்பு, தேடல், வைராக்கியம், சவால், பகிர்வுதன்மை, இப்படி நிறைய உள்ளன. இவற்றில் வாழ்ந்தால்தான் அடுத்த நிலையான தெய்வநிலை என்ற அடுத்த பரிணாமம் மனிதனுக்குச் சாத்தியம். அதே போல் தனிமனிதனாய் தன்னுணர்வு சிறிதே கொண்டு பிறக்கும் மனிதனுக்கு விலங்கைவிட கீழாக, மோசமாக போகும் வாய்ப்பும் உள்ளது. விலங்கு குணங்களை விட மோசமான குணங்கள்தான் துரோகம், வஞ்சகம், ஏமாற்றல், சுரண்டல், பொய், இப்படி உள்ளவை. இவையே இன்று நம் சமூகத்தை ஆள்கிறது.
இதில் நல்ல தனிமனித உணர்வுகளில் வாழும் வாய்ப்பை இன்றைய சமூகம் நமக்கு அளிப்பதில்லை. அதே சமயம் விலங்குணர்வை ஒரு குழந்தை வெளிப்படுத்துவதையும் நாம் அனுமதிக்க தயாராய் இல்லை. இந்த நிலையில் நாம் குழந்தைக்கு போலித்தனமான சமூக முகங்களை உருவாக்குகிறோம். நமது தேவைக்கு ஏற்றபடி, நமது பேராசைபடி, ஒரு குழந்தை அடிமையாகவே, இயந்திரமாகவே வாழ்நாள் முழுவதும் இருக்கும்படியாக சமூக முகத்தை, போலி முகத்தை, முகமூடியை, பொய்யான கருத்துக்களை, அதன் அடிப்படையில் உணர்வுகளை, ஏற்படுத்துகிறோம். இப்படி ஏற்படுத்தப்பட்டவைகளில் வாழும் வாழ்க்கைதான் இன்றைய உலகம். இன்றைய நமது கேள்வி கேட்பவர்கள் வாழ்வது. அங்கீகாரம், பணிவு, மரியாதை, அன்பு காட்டல், வெற்றி, நியாயம், இரக்கம், பல்வேறு பற்றுகள், தியாகம், பாராட்டு இப்படி. இதில் சிக்கி இதற்காகப் போராடி, உழைத்து, இதன்மூலம் அடிமையாய், ஒரு சில சுயநலவாதிகள் இஷ்டம்போல, அடிமை விலங்கு போல, சேவகம் செய்பவர்களாய் உள்ளோம். இப்போது நமக்குள்ள உணர்வுகள் சமூக முகங்களின் வெளிப்பாடு. இவை எந்த உள் வளர்ச்சியையும், உள்நிலை மாற்றத்தையும் கொடுக்க முடியாது.

தெய்வ நிலை குணங்களான கருணை, பிரபஞ்ச உணர்வு, விழிப்புணர்வு, பரவசம், சாட்சிபாவம், அழிவற்ற நிலை, உருக்கடந்த நிலை இப்படி எதற்கும் கூட்டிச்செல்ல முடியாது. மேலும் நாம் இந்த சமூக முகங்களைக் கட்டிக் காக்க நமது விலங்குணர்வுகளை உள்ளே அமுக்கி வைக்கிறோம். இதுவே மேலும் கெட்டு விலங்கை விடக் கீழானதாக மாறி வெளிப்படுகிறது. நமது குற்றவாளிகள், கொலையாளிகள், நக்சலைட்டுகள், எல்லோரின் கதையும் இதுதான்.

இதற்கு பதிலாக குழந்தையின் விலங்குணர்ச்சியை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும், ஒப்புக் கொள்ள வேண்டும். குழந்தை குற்றஉணர்ச்சி அடையாமல் அது அதையும் ஏற்க, பார்க்க. சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும். இது ஒருபுறம், மறுபுறம் சிறு தன்னுணர்வால் காணக்கூடிய மனித குணங்களை வாழ்ந்து காட்ட வேண்டும். அது வாழ ஊக்குவிக்கப்பட வேண்டும். அதற்கு உகந்த சமூக அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அப்போது ஒருவன் சிறிது சிறிதாக விலங்குணர்விலிருந்து விடுபட்டு மனித குணங்களில் மேம்படுவான். பிறகு தெய்வ குணங்களில் தாகம் இயல்பாகவே அங்கு எழும். இதற்கு மாறாக நாம் சமூக முகங்களை திணிப்பதன் மூலம் சமூகத்திற்கு ஒரு நல்ல அடிமை கிடைப்பான். அவன் உள்ளே புழுங்கிக் கொண்டிருப்பவனாகவே, நிறைவு பெறாதவனாகவே, மகிழ்ச்சி கொள்ளாதவனாகவே இருப்பான். அவனிடம் இனந்தெரியாத பதட்டமும், அவசரமும், இறுக்கமும், படபடப்புமே இருக்கும். வேர் இன்றி உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் மரமாகவே இருப்பான். உயிர் இருக்காது. ஆழம் இருக்காது. சமூக முகங்களை முற்றிலும் கடைபிடிக்க முடியாத குற்றவுணர்வும், முடியாத போதும் முடிந்தாத காட்டிக் கொள்ளும் போலித்தனமுமே அவனுள் இருக்கும்.

ஆகவே நண்பர்களே, நம் சமூக வாழ்க்கை என்ற மாயையில் நீங்கள் சிக்கியிருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இந்த உலகம் உண்மை. நீங்கள் உயிரோடிருப்பது உண்மை. ஆனால் தலைக்குள் நாம் கற்பித்துக் கொள்ளும் நம் வீடு, நம் உறவு, நம்நாடு, நம் சொந்தம், நம் சமூகம், என்ற நம் சேர்ந்த உலகம் ஒரு மாயை. மாயை என்றால் உண்மையை உண்மையாக பார்க்க முடியாமல் வேறென்றாகத் திரித்துப் பார்ப்பது. இதில் உங்கள் வாழ்வும், சக்தியும், காலமும், உடலும் விரயமாகிக் கொண்டிருக்கிறது.

ஆகவே மாயையை விடுங்கள். உண்மை உலகில் தனிமனிதனாக வாழுங்கள். மனைவியும் குடும்பமும் தொழிலும் தவறல்ல. தனிமனிதனாய், மாயை இன்றி செயல்படுங்கள். தனிமனிதப் பண்பை வளர்க்க எல்லோரும் ஒருவருகொருவர் உதவிக் கொள்வோம்.
இயல்பாக வாழ்தல் மனித வாழ்வு. இதுதான் ஓஷோவின் ஜோர்பா. அதாவது உணர்வற்ற விலங்கு மனதையும் தன்ணுணர்வுள்ள மனதையும் கொண்டு மனிதனாக வாழ்பவன். இதோடு புத்தா இணையட்டும், விழிப்புணர்வு இணையட்டும். இதுதான் ஜோர்புத்தா. இயல்பாக விழிப்புணர்வோடிரு – ஜோர்பா தி புத்தா இதுதான்.

நாம் மனிதன்தான், அதை ஏற்போம்,
நமக்குள் உள்ள விலங்குணர்வுகளை ஏற்போம்.
தனி மனித உணர்வுகளை வளர்ப்போம்.
தனிமனிதர்கள் வளர உதவும் நல்லதொரு சமூகம் அமைப்போம்.
விழிப்புணர்வோடு வாழ்ந்து தெய்வ நிலை பெறுவோம்.

இதுதான் ஓஷோவின் ‘ இந்த உடலே புத்தர், இந்த பூமியே சொர்க்கம் ’ என்ற அறிக்கையின் வெளிப்பாடு.

அன்பு,
சித்.

கவிதைப் பகுதி

அன்புப் பாலம்

நண்பா!

அன்பு ஒரு பாலம்,
இதயத்திலிருந்து இதயத்துக்கு

இது........
இரு உயிர்களை இணைப்பது,
இரு உணர்வுகளை ஒருமிப்பது,
இரு உடல்கள் சங்கமிப்பது,
இப்படி எப்படியும் இருக்கலாம்!
ஆனால்......
இந்த அன்பு பாலம்
அழியாமல் இருக்க
தேவை இரண்டு......
“ உறுதியான தனித்தன்மை,
போதிய இடைவெளி. ”

ஆம்....
தனிதன்மையே தாங்கிப்பிடிப்பது,
தனித்தன்மையே கவருவது,
இடைவெளியே ஏங்கச் செய்வது,
இடைவெளியே பாலம் அமைப்பது.

நிறைவேறாத காதல்.....
என்றுமே இன்பம் தருவது எதனால் தெரியுமா?

தனித்தன்மை இழக்காமல்
ஒருவரையொருவர் ருசித்தது,
இடைவெளி உடையாமல்
நெருக்கத்தை ரசித்தது,
அன்புப்பாலம் கட்டி
அதன் மேல் சந்தித்தது.
இடைவெளி உடைந்து
இருவரும் இணைந்திருந்தால்
எதிர்பார்ப்பே மிஞ்சியிருக்கும்!

ஆகவே.....
தனித்தன்மையோடு இருப்போம்,
இடைவெளியோடு உறவு கொள்வோம்.

இது.....
சுதந்திரம் காக்கும் அன்பு!
உதவிக் கொள்ளும் அன்பு!
அடிமைத்தனமும் கடமையுணர்வும் கடந்த அன்பு!


ஓஷோ வீடியோ

1. Osho : The Fear of Knowing Oneself

2. Osho : Meditation: The most valuable Contribution the East has made to Humanity

3. Osho : My Teaching is not for Pleasure


கேள்வி – பதில் பகுதி


ஓஷோ உணவருந்துதல் பற்றி கூறியிருப்பது என்ன என்று ஒருவர் கேட்டிருந்தார், அதற்கான பதில் இந்த வார கேள்வி பதிலில் வருகிறது.

1.
ஒரு குழந்தையின் உணவுக்கான முதல் அனுபவமும் அன்புக்கான முதல் அனுபவமும் மிகவும் நெருங்கிய தொடர்புடையவை, அதனால்தான் இந்த பிரச்னை எழுகிறது. அவன் தாயின் மார்பகத்திலிருந்துதான் உணவையும் அன்பையும் பெறுகிறான். ஒரு குழந்தை அன்பை பெறும்போது அவன் பால் குடிப்பதைப் பற்றி அவ்வளவாக கவலைப்படுவதில்லை, தாய் அவனை குடிக்கச் செய்கிறாள்.

ஆனால் குழந்தை அன்பை பெறாத போது அவன் மார்பகத்தை விட்டு நகருவதில்லை, ஏனெனில் அவன் எதிர்காலத்தைக் கண்டு பயப்படுகிறான். அவனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குடிக்கிறான், ஏனெனில் நாளை அம்மா கிடைப்பாள் என்பது நிச்சயமில்லை.

குழந்தைக்கு அன்பு கிடைக்கும்போது அவன் பாதுகாப்பாக உணர்கிறான். அவன் கவலைப்படுவதில்லை. எப்போதெல்லாம் தேவைப் படுகிறதோ அப்போதெல்லாம் அங்கே அம்மா இருப்பாள். அவன் அவளது அன்பை நம்பலாம். ஆனால் தாய் அன்பு செய்யாதபோது குழந்தையால் நம்பிக்கையுணர்வு கொள்ள முடிவதில்லை. அப்போது அவனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குடிக்கிறான்.

அவன் அளவுக்கு அதிகமாக சாப்பிடுகிறான்.

மேலும் இதுதான் சூழ்நிலை..... ஏழை குடும்பத்தில் உள்ள குழந்தைகள் வயிறு பெரிதாக இருப்பதை நீ காணலாம், ஏனெனில் அங்கே உணவு பற்றாக்குறை அதனால் எப்போதெல்லாம் உணவு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் தங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்வர். செல்வந்தர் குடும்பத்தில் உள்ள குழந்தைக்கு வயிறு சிறிதாக இருப்பதை நீ காணலாம். இது நம்ப முடியாததாக தோன்றும், ஏனெனில் வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு அவர்களது முழு உடலும் மெலிந்து இருந்தாலும் அவர்களது வயிறு மட்டும் பெரிதாக இருக்கும். அது சரியாக தோன்ற வில்லை, கணக்குப்படி சரியாக தோன்றவில்லை.

அவர்கள் வறுமையில் வாடும்போது எப்படி அவர்களுக்கு வயிறு அவ்வளவு பெரிது இருக்கும் ஏனெனில் அவர்கள் பட்டினி கிடப்பதால் நாளையை பற்றி அவர்களால் நம்ப முடியாது. அதனால் என்ன கிடைத்தாலும், கிடைப்பது எதுவாக இருந்தாலும் அவர்கள் வயிற்றில் அடைத்துக் கொள்கின்றனர். அவர்களது வயிறுதான் அவர்களது சேமிப்புகிடங்கு.

மேலும் ஒரு குழந்தைக்கு அன்பு கிடைக்க வில்லையென்றால் அது உணவில் நாட்டம் கொள்கிறது. அதற்கு அன்பு கிடைக்கும்போது அதற்கு உணவில் ஆர்வம் இருக்காது அல்லது இயல்பாக எவ்வளவு ஆர்வம் இருக்குமோ – உடலுக்கு தேவையான அளவு உணவு பெறுவதில் – அவ்வளவுதான் இருக்கும்.

இதுதான் உனக்கும் நிகழ்ந்துள்ளது. நீ உனது அன்பு சக்தியை எந்த விதத்திலோ அடைத்துவிட்டாய். அந்த அடைக்கப்பட்ட அன்பு சக்திதான் உணவில் ஆர்வமாக வெளிப்படுகிறது. நீ இதை மாற்ற விரும்பினால் ஒரு சிறிதளவு அன்பில் தளர வேண்டும். நீ இன்னும் சிறிதளவு அன்பானவனாக மாற வேண்டும். உனது உடலை அன்பு செய் – அதிலிருந்து தொடங்கு. உன் உடலை நீ அனுபவி. அது ஒரு அழகான விஷயம், அது ஒரு பரிசு. ஆடு, பாடு, உனது உடலை தொடு, உனது உடலை உணரு.
பிரச்னை என்னவென்றால் நீ உனது உடலை விரும்ப வில்லையென்றால் வேறு யாரும் உடலை விரும்புவதை நீ அனுமதிக்கமாட்டாய். உன்னை விரும்பும் ஒருவர் உனக்கு முட்டாளாக, மடையனாக, கிறுக்கனாக தோன்றுவார். ஏனெனில் நீயே உனது உடலை நேசிக்காதபோது அவர் எதைக் கண்டார் என்றே உனக்குத் தோன்றும். நீ எதையும் காணமாட்டாய். உனது உடலின் அழகை நீ காணாதவரை நீ வேறுயாருடைய நேசிப்பையும் நீ ஏற்றுக் கொள்ளமாட்டாய். அவர் உன்னை நேசிப்பதே உனக்கு அவர் மடையன் என்பதைக் காட்டுவதாகத் தோன்றும், வேறு எதுவும் தெரியாது. அதனால் உனது உடலை நேசி.

கைகளை கோர்த்துக் கொள்ளவும், அணைத்துக் கொள்ளவும், அன்பாய் இருக்கவும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவற்றை தவற விடாதே. நீ அன்பாய் இருக்க ஆரம்பித்தவுடன் உன் உணவு பிரச்னை தானாகவே தீர்வதை கண்டு நீ ஆச்சரியப்படுவாய். அன்பினுள் இருப்பது மிகவும் அருமையான அனுபவம், உணவை அடைத்துக் கொள்வது மிக மோசமான அனுபவம். உணவு அருமையானதல்ல என்பதல்ல, உன்னால் எவ்வளவு எடுத்துக் கொள்ள முடியுமோ அந்த அளவு மட்டும் எடுத்துக் கொண்டால் அது மிகவும் அருமையானது. அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் பின் வாந்தி வந்துவிடும்.

அன்பைப் பற்றிய ஒரு விஷயம் மிகவும் சிறப்பானது, அது அன்பு ஒருபோதும் அளவுக்கு அதிகமாக என்றாகாது. யாராலும் அளவுக்கு அதிகமாக அன்பு செய்ய முடியாது, யாராலும். அதற்கு எல்லையே இல்லை. ஏனெனில் நீ சாப்பிடும்போது, நீ விஷயங்களை உள்ளே திணிக்கிறாய். நீ அன்பு செய்யும்போது, நீ பகிர்ந்து கொள்கிறாய், நீ கொடுக்கிறாய், அது சுமையை குறைக்கும் ஒரு செயல். மேலும் நீ கொடுக்கும் அளவு உனது சக்தி பாய்ந்தோட ஆரம்பிக்கிறது. நீ ஒரு நதியாகிறாய், ஒரு தேங்கிய குளமாக இருப்பதில்லை.

God’s Got a thing About You

Che # 14

2.
நீ மேற்புறத்தில் எதை வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் கீழே வேர்கள் மாற்றமடையாத வரை எதுவும் மாறாது. அதனால் வெளிப்புறத்தை பொறுத்தவரை நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் அதை பற்றிய விழிப்புணர்வு கொள்வது மட்டுமே. மேற்புறத்திலிருந்து வேர்களுக்கு நகரு, வேர்களை கண்டுபிடி – ஏன் பதட்டமாயிருக்கிறாய், ஒருவர் அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிடுகிறார். அதை நிறுத்தமுடியும். அதிகமாக சாப்பிடாமல் இருக்குமாறு நீ உன்னை கட்டாயப்படுத்தமுடியும். ஆனால் ஏன் அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிடுகிறாய், ஏன், ஏனெனில் அது உடலின் தேவை அல்ல, எங்கோ மனது அதில் தலையிடுகிறது. மனதைதான் சீர் செய்ய வேண்டும், அது உடலின் பிரச்னை அல்ல. நீ ஏன் உனக்குள் திணித்துக் கொள்கிறாய்.

உணவின் மீது உள்ள அதீத ஈடுபாடு அன்பு தேவை என்பதையே காட்டுகிறது. நீ நேசிக்கப்பட வில்லையென்றால் நீ அதிகம் சாப்பிடுவாய். நீ நேசிக்கப்பட்டால், நீ நேசித்தால் நீ குறைவாகவே சாப்பிடுவாய். யாராவது உன்னை நேசிக்கும் சமயத்தில் உன்னால் அதிகமாக சாப்பிடமுடியாது. அன்பு உன்னை நிறைவு செய்கிறது, நீ வெறுமையாக உணர்வதில்லை. அன்பு இல்லையென்றால் நீ வெறுமையாக உணர்கிறாய், ஏதாவது இட்டு அதை நிரப்ப வேண்டும், எனவே நீ உணவை திணிக்கிறாய்.

இதற்கு காரணங்கள், அடிப்படையான காரணங்கள் இருக்கின்றன. ஏனெனில் ஒரு குழந்தை அன்பையும் உணவையும் சேர்த்தே எதிர் கொள்கிறது. அதே மார்பகத்திலிருந்துதான், அதே தாயிடமிருந்துதான் அன்பு உணவு இரண்டையும் பெறுகிறது – உணவும் அன்பும் இணைகிறது. தாய் நேசிக்கும்போது குழந்தை ஒருபோதும் அதிக அளவு பால் குடிப்பதில்லை. அதற்கு தேவையுமில்லை. அவன் அனபினால் பாதுகாக்கப்படுகிறான். எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் அம்மா அங்கிருப்பாள், பால் கிடைக்கும், உணவு கிடைக்கும் என்று அவனுக்குத் தெரியும். அவன் பாதுகாப்பாய் உணர்கிறான். ஆனால் தாய் நேசிக்காதபோது அவன் பாதுகாப்பற்று உணர்கிறான். அவனுக்கு பசிக்கும்போது பால் கிடைக்குமா கிடைக்காதா, உணவு கிடைக்குமா கிடைக்காதா என்று அவனுக்கு தெரியாது. ஏனெனில் அங்கு அன்பில்லை. அதனால் அவன் அதிகம் சாப்பிடுகிறான். இது தொடர்கிறது. இது தன்னுணர்வற்றதாக வேரினுள் பதிகிறது.

அதனால் நீ உனது உணவை மாற்றிக் கொண்டே போகலாம், - இதை சாப்பிடலாம், அதை சாப்பிடலாம், இதை சாப்பிடாமல் இருக்கலாம் – ஆனால் இது எந்த மாற்றத்தையும் உண்டாக்கப்போவதில்லை. ஏனெனில் இது வேரில் ஆழமாக உள்ளதொரு விஷயம். பின் நீ உணவை திணித்துக் கொள்வதை நிறுத்திவிட்டு, வேறு எதையோ திணித்துக் கொள்ள ஆரம்பிக்கிறாய். இதில் பல வழிகள் உள்ளன. நீ சாப்பிடுவதை நிறுத்திவிட்டு பணத்தை சேர்க்க ஆரம்பிக்கிறாய். இப்போது மறுபடியும் நீ வேறு ஏதோ ஒன்றால் நிரப்பப்படுகிறாய். பின் நீ பணத்தை சேகரிக்க ஆரம்பிக்கிறாய்.


Vigyan Bhairav Tantra, Vol 2

Che # 10


தியான யுக்தி – 1

பிறப்பிடத்திற்குத் திரும்புதல்

நமக்கு யார் மீதாவது அல்லது எதன் மீதாவது கோபமோ, வெறுப்போ, அல்லது வேறு உணர்வோ அல்லது வேறுபட்ட மனநிலையோ ஏற்படும்போது நாம் அதை மனிதர்கள் மீதோ அல்லது பொருட்கள் மீதோ பிரதிபலிக்கிறோம். ஆனால் தியானத்தின் போது மனநிலையை மற்றவர்கள் மீது பிரதிபலிப்பதற்கு பதிலாக நீதான் அதன் பிறப்பிடம் என்பதை நினைவு கூறுகிறாய். உதாரணமாக, அன்பு எழும் போது, இந்த உணர்வு பிரதிபலிக்கும் ஒரு திரைதான் மற்றவர். அவர்தான் இந்த அன்பின் காரணம் என்ற நினைப்பு எழுகிறது, ஆனால் உண்மை அதுவல்ல. அன்பு சக்தி உள்ளிருந்து எழுகிறது, அது வெளியே பிரதிபலிக்கிறது. அதனால்தான் யார்மீது அன்பாக உணர்கிறாயோ அவர் மிகவும் அன்பானவராக தோன்றுகிறார். ஆனால் வேறு யாராவது இவர்மீது கோபமாக உணரும்போது இவர் அவருக்கு மிகவும் அசிங்கமானவராக தோன்றுவார். இதை நினைவில் கொள்.


எப்போது – ஒரு உணர்வை பற்றியோ அல்லது ஒரு மனநிலை குறித்து
விழிப்படையும்போது

செய்முறை - மையத்தில் இரு, பிறப்பிடத்திற்குச் செல். உன்னுடைய கோபம், வெறுப்பு, அல்லது வேறு எதுவாக இருந்தாலும் உன்னுடைய உள் மையத்திற்குச் செல்லும் பயணத்திற்கு அதை பயன்படுத்து.
நீ அன்பாகவோ வெறுப்பாகவோ கோபமாகவோ இருக்கும் சமயத்தில் பிறப்பிடத்திற்குச் செல்வது எளிதாக இருக்கும் ஏனெனில் அப்போது நீ சூடாக இருப்பாய். அப்போது நகர்வது எளிது. இணைப்பு சூடாக இருக்கும் ஆகவே இந்த சூட்டுடன் உள்ளே நகர முடியும். உள்ளே உள்ள குளிர்ந்த பகுதியை நீ சென்றடைந்தவுடன், திடீரென ஒரு மாறுபட்ட பரிமாணத்தை உணர்வாய். ஒரு மாறுபட்ட உலகம் உன்முன் திறக்கும்.

மூலம்: Vigyan Bhairav Tantra

தியான யுக்தி – 2

மனோநிலைகளின் பதிவு

முதல் படி – உனது மனோநிலைகளை கண்டு வரிசை படுத்து.

உனது நிலைகளை புரிந்துகொள், அதனால் உனது நல்ல மற்றும் மோசமான மனோநிலைகளை குறிப்பெடுக்க ஆரம்பி. ஒவ்வொரு நாளும் காலை, மதியம், மாலை, இரவு ஆகிய 4 தடவை உனது மனேநிலை எப்படி இருக்கிறதென்று குறித்து வை. 3 - 4 மாதங்களுக்குள் நீ ஒருவித லயத்தை காணலாம். உதாரணமாக, நிலவைப் பொறுத்து உன் மனநிலை மாறும்.

இரண்டாவது படி – உனது மனநிலையை சந்திக்க தயாராகு

ஒருமுறை உனது வரைபதிவு எப்படி என்று உனக்கு தெரிந்துவிட்டால் நீ அதற்கேற்ப தயாராகலாம். சோகமாக இருப்பாயானால் சோகத்தை கொண்டாடு. போராட தேவையில்லை.

பிரச்னை எழுவது எங்கென்றால் நாம் மனநிலையை எதிர்க்கிறோம், நாம் அதனுள்ளேயே அமிழ்ந்து விடுகிறோம், இதுதான் போராட்டத்தை உருவாக்குகிறது – ஆனால் எல்லா மனநிலைகளும் அநுபவிக்க கூடியவையே.

மூன்றாவது படி – கவனி, நீ கடந்து போவாய்

உனக்கு நல்ல மனநிலை வரும் என உனக்கு தெரியும்போது நீ மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளலாம், மக்களை சந்திக்கலாம், உருவாக்குபவனாக இருக்கலாம்.
இதேபோல கவனித்து வந்தால் 6 – 8 மாதங்களுக்குள் நீ ஒரு சாட்சியாளனாக மாறி விடுவாய், பின் அப்போது எதுவும் உன்னை பாதிக்க முடியாது. அது இயற்கையின் ஒரு பாகம்தான், உன்னை பொறுத்ததல்ல என்பது உனக்குத் தெரியும். அதை கவனித்தல் மூலமாக நீ கடந்து செல்ல ஆரம்பிப்பாய்.

மூலம்:Just Don’t Do Something, Sit There

நீ யார் ? – ஓஷோவின் கதை 26

நான் என்பது என்ன நீ இதைப் பற்றி அமைதியாக சிந்தித்துப் பார்த்திருக்கிறாயா அது உன்னுடைய காலா, கையா, அல்லது உன்னுடைய இதயமா, தலையா அல்லது இது வெறும் அகங்காரமா?
எது உன்னுடைய ‘ நான் ‘? எங்கே உன்னுடைய ‘ நான் ‘? உன்னுடைய ஆணவமா?
அது அங்கிருத்தலின் உணர்வு இருக்கிறது, ஆனாலும் அதை குறிப்பாக எங்கேயும் காண முடியவில்லை. மௌனமாக ஒரு நிமிடம் அமர்ந்து அந்த ‘ நானை ’ தேடிப் பார். நீ ஆச்சரியமடைவாய். எவ்வளவு ஆழமாக தேடினாலும் உன்னை எங்கும் கண்டு பிடிக்க முடியாது. ஆனால் ஆழமாக தேடும்போது ‘ நான் ‘ என்று ஒன்று இல்லை என்பதை உணர்வாய். அது போல ஆணவம் என்பதும் கிடையாது. சுயத்தின் உண்மை அங்கிருக்கும்போது ‘ நான் ‘ அங்கிருக்காது.

எல்லோராலும் நன்கு மதிக்கப்பட்ட நான்சென் என்ற ஞானியை அப்போதிருந்த மாமன்னன் மாலிண்ட் தனது அரசவைக்கு அழைத்தான்.
தூதுவன் நான்சென்னிடம் சென்று, “குரு நான்சென் அவர்களே, அரசர் உங்களை காண விரும்புகிறார். நான் உங்களை அழைப்பதற்காக வந்திருக்கிறேன்.” என்றான்.

நான்சென், “நீ விரும்பினால் நான் வருகிறேன், ஆனால் நான்சென் என்று யாரும் இங்கு இல்லை. அது வெறும் ஒரு பெயர்தான், ஒரு தற்காலிக குறியீடு.” என்றார்.

தூதுவன் அரசரிடம் சென்று நான்சென் ஒரு வித்தியாசமான மனிதர், அவர் வருவதாக ஒத்துக் கொண்டார், ஆனால் நான்சென் என்று யாரும் இல்லை என்று அவர் கூறியதைக் கூறினான். மாமன்னன் ஆச்சரியமடைந்தான்.
நான்சென் வருவதாக கூறிய நேரத்தில் தேரில் அழைத்து வரப் பட்டார். மன்னன் வாசலில் நின்று அவரை, “குரு நான்சென் அவர்களே, வாருங்கள், வாருங்கள்!” என வரவேற்றான்.

இதைக் கேட்டவுடன், துறவி சிரித்தார். “நான்சென்னாக நான் உன்னுடைய வரவேற்பை ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் நினைவில் கொள், நான்சென் என்ற பெயருடைய யாரும் இங்கு இல்லை.” என்றார்.

அரசன், “நீங்கள் வித்தியாசமாக பேசுகிறீர்கள், நீங்கள், நீங்கள் இல்லை என்றால் யார் என்னுடைய அழைப்பை ஏற்றுக் கொண்டது? யார் என்னுடைய வரவேற்புக்கு பதில் சொல்வது?” என்று கேட்டான்.
நான்சென் பின்னே திரும்பி பார்த்து கேட்டார், “நான் வந்த ரதம் அதுதானே?”

“ஆம், அதுவேதான். இதுதான்”

“தயவுசெய்து குதிரைகளை கழற்றி விடுங்கள்” என்றார்.
அது செய்யப்பட்டது.

குதிரைகளை காட்டி, “அது ரதமா?” என்று கேட்டார் நான்சென்.
அரசர், “குதிரைகளை எப்படி ரதம் என்று அழைக்க முடியும்?” என்று கேட்டார்.

துறவி கூறியதின் பேரில் குதிரைகளை கட்டும் நுகத்தடி கழற்றப்பட்டது.

“அந்த நுகத்தடிதான் ரதமா?” என்று துறவி கேட்டார்.

“அது எப்படி?, அவை நுகத்தடிகள், அது ரதமல்ல.”

துறவி கூற கூற, ஒவ்வொரு பாகமாக கழற்றப்பட்டது, ஒவ்வொரு பாகமாக கழற்றப்பட, பட அரசரின் பதில் ‘ இது ரதமல்ல ‘ என்பதாக இருந்தது.

கடைசியில் ஒன்றும் மிச்சமில்லை.

துறவி, “எங்கே உனது ரதம்? ஒவ்வொரு பாகம் எடுத்துச் செல்லப் பட்டபோதும் இது ரதமல்ல என்று நீயே கூறினாய். ஆகவே இப்போது சொல், உனது ரதம் எங்கே?” என்று கேட்டார்.

அரசரிடம் ஒரு நிலைமாற்றம் நிகழ்ந்தது.

துறவி தொடர்ந்தார், “நான் சொல்வதை புரிந்து கொண்டாயா? ரதம் என்பது ஒரு கூட்டுமுயற்சி. சில குறிப்பிட்ட விஷயங்கள் சேர்ந்த சேகரிப்பு. ரதம் என்பது தனித்து இருப்பதல்ல. இப்போது உள்ளே பார். எங்கே உனது ஆணவம்?, எங்கே உனது ‘ நான் ‘?.

நீ எங்கேயும் ‘ நானை ‘ கண்டு பிடிக்க முடியாது. அது பல சக்திகள் ஒன்று சேர்ந்த ஒருமித்த ஒரு வெளிப்பாடு. அவ்வளவுதான். ஒவ்வொரு உறுப்பையும் எண்ணிப்பார், உன்னுடைய ஒவ்வொரு பார்வையை பற்றியும் நினைத்துப்பார், பின் ஒவ்வொன்றாக வெளியேற்று, இறுதியில் ஒன்றுமற்றது தான் இருக்கும்.

மூலம்-FROM SEX TO SUPERCONSCIOUSNESS CHE # 1

No comments: