Friday, October 22, 2010

மலர் 2 இதழ் 15 11 அக்டோபர் 2009

தலையங்கம்
அன்பு நண்பர்களே,

நண்பர் வந்து கேட்கிறார். எல்லாம் புரியுது, தெரியுது, தியானம் செய்யும் போது அருமையாக இருக்கு. ஆனா வெளியே போன உடனே நான் மாறி விடுகிறேனே, நான் வந்து விடுகிறதே, மனம் ஓட ஆரம்பித்து விடுகிறதே, நாடகம் தொடங்கி விடுகிறதே, காய்ச்சல் வந்து விடுகிறதே, அப்புறம் மறுபடியும் இங்கு வந்து நுழைந்தால்தான் என்னைப் பார்க்க முடிகிறது. செய்த பயித்தியக்காரத்தனமெல்லாம் தெரியுது. என்னதான் செய்யறது.

முதலில் நீ கூட்டத்தைச் சேர்ந்தவனாக இல்லாமல் தனிமனிதன் ஆக வேண்டும். ஏனெனில் தனிமனிதன் தான் வளர முடியும். கூட்டம் உன்னை அதற்கு ஒத்துப் போகச் சொல்லியே அமுத்தும். அப்படி கூட்டத்தை, கூட்டத்தின் கருத்துக்களை, கடந்த கால அறிவுரைகளை, வழிகளை ஏற்று நடப்பதுதான் சரி. இதற்குப் பெயர் வாழ்க்கையை, வருவதை ஏற்றுக் கொள்ளும் உயர்ந்த ஆன்மீகப் பண்பு என்று கூட விளக்கம் சொல்லும். வெங்காயம். இதற்குப் பெயர் ஒத்துப் போதல், ஒத்து ஊதல், பயந்து பின்பற்றுதல், போலி கவுரவத்திற்காக அடங்கிப் போதல், பயன் கருதி தாழ்ந்து போதல் என்றெல்லாம் வேண்டுமானால் சொல்லலாம்.

உண்மையான ஏற்றுக் கொள்ளுதல் என்பது தன்னை ஏற்றுக் கொள்வது. உள்ளிருந்து வரும் வழிகாட்டல்படி நடப்பது. போலித்தனமில்லாமல் தான் தானாயிருப்பது. பகை வரினும், உயிர் விடினும் தன் இயல்பை விடாமல் கைக் கொள்வது. இந்த வீரப் பண்புகள், வைராக்கிய நெஞ்சங்கள் தொலைந்து போய்விட்டன. ஆனால் இதைப் பெறாமல் நீ வளர முடியாது. வளர்ச்சி அனுபவத்தை தக்க வைத்துக் கொள்வது கூட முடியாது. ஏனெனில் இங்கு கூட்டம் அதிகம். மிகவும் பழைய, அழுகிய கூட்டம் என்பதால் அதன் பாதிப்பும் அதிகம்.

அடுத்து நீ மன அமைதியைத் தேடுபவன் என்றால் வளர்ச்சி சாத்தியமில்லை. மன அமைதி என்பது ஒரு மாயைதான். மனமே சலனம்தான். அதில் அமைதி ஏது ஆகவே மனம் தாண்டிய நிலைக்கு கடந்து செல்ல நீ தயாராக வேண்டும்.
அதில் நீ பகுத்தறிவு மனம், பெற்றோர் அல்லது சமுதாய மனம், உன் கட்டுப்பாட்டில் இல்லாத உணர்ச்சி மனம் என மூன்றின் இடை சிக்கித் தவிக்கிறாய். பகுத்தறிவு மனதிலிருந்தே உன் கேள்வி வருகிறது. பகுத்தறிவு மனமே சீர்தூக்கிப் பார்த்து, நான் ஏன் இப்படியெல்லாம் இருக்கிறேன் என்கிறது. ஆராய்ச்சி செய்து விடை காண முயற்சிக்கிறது.

ஆனால் எல்லாமே மனம்தான். உன் பகுத்தறிவு மனம் சமூகத்தைப் பார்த்ததும் பலமிழந்து விடுகிறது. சமூக மனத்தின்படியே உன் உறவும், வியாபாரமும், சொத்தும், மதிப்பும் இருப்பதால் மற்றவர் மத்தியில் அதுதான் உன்னை ஆள்கிறது. ஆனால் உணர்ச்சி மனம் எப்போதும் உன்னை தன் தேவையை பூர்த்தி செய்யச் சொல்லி உந்திக் கொண்டேயிருக்கிறது. அது மேலே வரும்போது நீ மிருகமாகிறாய். அதன் பொறாமை, பேராசை, கோபம், வெறுப்பு, வன்முறை, செக்ஸ் ஆகியவற்றின் அலங்காரமாகவே உன் சமூக மனம் இருக்கிறது. அதைக் கட்டுப்படுத்தி ஒரு கட்டுத்திட்டத்தில் அமுக்கி வைப்பதால் அது உள்ளே எரிமலையாய் குமுறிக் கொண்டிருக்கிறது. ஒரு சிறிய சந்தர்ப்பம் போதும். ரோட்டில் ஒரு சிறிய உரசல் இரண்டு டூ வீலர்கள் இடையே. பிறக்கும் கோபம் ஆச்சரியப்பட வைக்கிறது. காரணம் அடக்கியுள்ள உணர்ச்சி மனம்.

ஆகவே என்னதான் வழி

ஓஷோ கூறுவது போல இந்த மூன்று மனங்களையும் தாண்டி விழிப்புணர்வு நிலை நின்று வாழ்வதுதான்.

அதாவது வெளி வாழ்வில் எந்த மாற்றமும் தேவையில்லை. மனதையும் அமைதிப்படுத்தவோ, போராடவோ அவசியமில்லை. மெதுவாக விழிப்புணர்வுக்குள் நகர்ந்து விடுங்கள். எல்லாவற்றையும் விழிப்புணர்வோடு விலகி நின்று சம்பந்தப்படுத்திக் கொள்ளாமல், எந்த முடிவும் இல்லாமல் வேடிக்கையாய், சாட்சி பாவமாய் பாருங்கள்.

நண்பர் கேட்டார். சரிசார், ஆனால் பலதையும் முடிவு செய்ய வேண்டியிருக்கிறதே. எப்படி முடிவெடுப்பது எந்த முடிவெடுப்பது பார்த்துக் கொண்டேயிருந்தால் பத்தாதே. தினசரி வாழ்வில் செய்ய வேண்டியதை என்ன செய்வது.

சரிதான் – விழிப்புணர்வோடு முதலில் பாருங்கள். அதன் விளைவாய் குழப்பமும், படபடப்பும், இறுக்கமும் முதலில் போய்விடும். பதிலாக தெளிவும், நிதானமும், பிறக்கும். செய்ய வேண்டியது என்ன என்பது தானாகவே தெரியும். டார்ச் ஒளியை அடித்து நாலாபக்கமும் தேடினால் பாதை தானாகவே தெரிவது போல. பிறகு எதில் நடக்க வேண்டும் என்ற குழப்பம் இருக்காது. ஆகவே எந்த சூழலிலும், மனதின் போராட்டம், குழப்பம், படபடப்பு. விழிப்புணர்வுக்கு நகர்ந்துவிட முடிந்தால் அப்போது செய்ய வேண்டியது என்ன என்பது தானாகவே தெரியும். விழிப்புணர்வு வெளிச்சத்தில் எல்லாமும் விளங்கும். இயற்கையின் ஏராளமான ரகசியங்களும் துலங்கும். உன் இயல்பின் மேன்மையும் சக்தியும் தானாகவே வெளிப்படும்.


பிறகு அந்த செய்ய வேண்டியதைச் செய்ய உனது உடல், அறிவு, மூளை, அதன் அனுபவங்கள், புத்திசாலித்தனம் எல்லாவற்றையும் பயன்படுத்து.

ஆகவே இது மிக சுலபம்.

விழிப்புணர்விலிருந்து முடிவு பிறக்கட்டும். முடிவை செயலாக்கும் முயற்சி உன்னிடமிருந்து புறப்படட்டும்.

இதற்கு விழிப்புணர்வில் நிலை கொள்ள வேண்டும். அதற்காகத்தான் தியானப்பயிற்சிகள். அவை உனக்கு விழிப்புணர்வின் முதல் அனுபவத்தைத் தரும். அதாவது உன் மனதைத் தாண்டி உன்னைக் கூட்டிச் செல்லும். மனமில்லாமல் சக்தியோடு கூடி பொங்கி வழிவதுதான் விழிப்புணர்வு, தன்னுணர்வு, தியானம், சாட்சிபாவம் அன்புநிலை எல்லாமே.

எனவே தினமும் தியானப்பயிற்சி செய்யுங்கள். தினசரி வாழ்வில் விழிப்புணர்விலிருந்து முடிவெடுங்கள். செயல்புரிய உங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதுதான் வழி.

இன்னொரு வழியாக வாழலாம். அது இதயபூர்வமாக வாழ்தல் என்பது. இதில் நீங்கள் செய்ய வேண்டியது எதுவுமே இல்லை. எல்லாமே இதயத்தின் விருப்பம். ஆனால் இப்படி முழுதாய் சரணாகதியாய் இதயத்திலிருந்து வாழ்வது இன்றைய நாகரீக மனிதனுக்கு சாத்தியமில்லாமல் இருக்கிறது. இவனுக்கு இதயம் திறந்து சிறகடித்துப் பறந்த கண அனுபவங்களே சிறிதும் கிடைக்காமல் இளம் பிராயத்திலேயே இறுகிக்கொண்டே அல்லவா வருகிறான் இவன். பிறகெப்படி முழுமையாக இதயத்திலிருந்து வாழ்வது சாத்தியப்படும்.

கலைஞர்கள் குறைந்தும் வியாபாரிகள் பெருகியும் வரும் நேரமிது. கலை கூட வியாபாரமாகி விட்ட கொடுமைக் காலம் இது.

எனவே விழிப்புணர்வு வழி செல்வதே சாத்தியமானது. அப்படி விழிப்புணர்வு வளரும் பொழுது இதயமும் மலரும். அப்போது விழிப்புணர்வும் இதயத்திலிருந்து வாழ்தலும் ஒரே நிலையின் இரு வேறு கோணங்களே என்பதும் புரியும்.

அன்பு,
சித்.

கவிதை

நண்பா உஷார்!

அன்பு மனிதனின் சிறகு,
அன்பு அனைவரின் ஊட்டம்,
அன்பின்றி ஓருயிரும் வளராது,
அதன் அனுபவம் அனைவருக்கும் உண்டுதான் !

நீ காதல் வசப்பட்ட கணங்கள்.......
அன்பின் அனுபவம் வந்துபோன கணங்களே!
நீ நன்றியில் தொழுத கணங்கள்.......
அன்பில் நிறைந்து வழிந்த நிலைகள்தான்!
நீ எதிர்பார்ப்பின்றி உதவிய நேரங்கள்.....
உன் இதயம் திறந்த பொழுதுகள்தான்!
நீ படைப்பில் முழ்கி களித்த கணங்கள்.......
அன்பு உன்னை ஆட்கொண்ட சமயங்கள்தான்!
இப்படி எத்தனையோ அனுபவங்கள் உண்டுதான்,

ஆனால்......
நீ மனம் தாண்டிப் பெறும் அந்த அனுபங்களை......
அனுபவக்கணம் முடிந்த அடுத்த வினாடியே........
மனம் தீண்டி, ஆசைக் கறைப்படுத்தி,
பாசச்சாயம் போட்டு, போட்டி பொறாமை முத்திரையிட்டு,
போலித்தன அலங்காரமிட்டு, அகம்பாவக்
கடைச் சரக்காக்கி விடுகிறது !

உண்மை அனுபவத்தின் இதயக்குரல்,
சந்தைக்கடையின் மந்தைக்கூட்டத்தினிடையே
உனக்குக் கேட்பதேயில்லை,

கேட்டாலும் அடையாளம் சரியாக தெரியாத நிலையில்........
உன் அகம்பாவத்தை இழப்பாய் என்ற மனதின் மிரட்டலில்,
நீ இருப்பதையும் இழக்கும் பயத்தில்,
மறக்கவும் தப்பிக்கவுமே விரும்புகிறாய்!

ஆகவே உஷார்! நண்பா, உஷார்!
வாழ்வின் பொருள் மனதிற்குத் தெரியாது,
மனதின் எண்ணங்களுக்கு எட்டாது,
மனதின் கருத்துக்கள் காட்டிக் கொடுக்காது,
மாறாக அன்பைக் கொள்!
அன்பாய் மாறு!
அதில் பொங்கி வழி!
அதுவே வாழும் வழி, துணை, முடிவு, பொருள்!

தியான முறைகள்

இம்மாதத்திலிருந்து பல அன்பர்களுக்கும் பயனளிக்கும் வகையில் தினசரி வாழ்வின் இடையிலும், வேலையின் இடையிலும், இறுக்கம், படபடப்பு, கவலை ஆகியவற்றிலிருந்து விடுபட்டு விழிப்புணர்வுக்கு வர உதவும் ஓஷோவின் தியான பயிற்சி முறைகள் சிலவற்றை கொடுக்கிறோம்.

பெரும் நிறுவனங்களுக்குச் சென்றும், உயர்மட்ட அதிகாரிகள், தொழிலதிபர்களுக்குமான பயிற்சி ஏற்படுத்தியும், மிக அதிக கட்டணத்தில் சொல்லிக் கொடுத்து தொழில் நடத்தும் பல பெரும் சாமியார்கள், வல்லுனர்கள் பயன்படுத்தும் அனைத்து முறைகளும் இதில் வரும்.

இவைகளை நன்றாகப் பயன்படுத்தியும், மற்றவர்களோடு பகிர்ந்தும் பயனடைய அன்பர்களை வாழ்த்துகிறோம்.

இருப்பு நிலைக்கு வர உதவும் தியான முறைகள்.

1. நீ இருக்கிறாயா

எப்போது எப்போதெல்லாம் தூக்கத்தை உணர்கிறாயோ அப்போது,
முதல் படி உன்னையே கேட்டுக் கொள்
நீ இங்கிருக்கிறாயா என உன்னையே நீ கேட்டுக்கொள். திடீரென உன் எண்ணங்கள் நிற்கும்.
இரண்டாவது படி நீயே பதில் கூறு
ஆம் என பதில் கூறு. இது உன்னை கவனத்திற்குள் கொண்டுவரும். எண்ணங்கள் நின்றுவிடும்போது நீ கவனமடைவாய். இந்த கணத்தில் இருப்பாய்.
மூன்றாம் படி தூங்கப் போகும் போது கூட........
தூக்கத்தில் விழப் போகும்போது கூட திடீரென நீ இருக்கிறாயா என கேள். பதிலும் கூறு.
இருளில் நீ விழிப்புணர்வு ஜோதியாக மாறுவாய்.

மேலும் இது உன்னுடைய சொந்த இருப்பை நினைவு கொள்வதாகும். ஒவ்வொரு நாளும் காலையில் உனது வாழ்வில் சூரியன் உதிப்பதை, மலர்கள் மலர்வதை பார்க்க கிடைத்ததற்காக நன்றி கூறி, மதிப்பு தருவதாகும். தியான தன்மையுள்ள, மனதிலிருந்து செயல்படாத ஒரு மனிதன் வாழ்க்கை அவனுக்கு கொடுக்கும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் நன்றியோடு இருப்பான். நீ அதற்கு தகுதியானவனல்ல. யாருக்குமே தகுதியில்லை. ஆனாலும் காரணமேயின்றி வாழ்க்கை பரிசளிக்கிறது. உன்னுடைய வாழ்க்கையை மேலும் ஒரே ஒரு வினாடி கூட அதிகமாக கேட்க முடியாது. நான் தகுதியானவன், எனக்கு உரிமை இருக்கிறது, மேலும் சில வருடங்கள் எனக்குத் தாருங்கள் என கேட்க முடியாது. யாருக்கும் உரிமையில்லை. ஆனால் வாழ்க்கை அதனுடைய அளப்பரிய தன்மையினால் உன்மேல் வாழ்வைச் சொரிகிறது.

2. நிறுத்து

எப்போது குறைந்தபட்சம் ஒருநாளில் 6 தடவை. அதிக பட்சம் எவ்வளவு வேண்டுமானாலும். ஆனால் திடீரெனத்தான் செய்யப்பட வேண்டும்.

தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது, எதையாவது செய்து கொண்டிருக்கும் போது, திடீரென சுய உணர்வு வரும்போது, நிறுத்து – முழுமையாக நிறுத்து, அசைவுகள் இன்றி இரு. என்ன நிகழ்கிறது என்ற உணர்வோடு இரு. பின் நகர ஆரம்பி.

திடீரென நீ தன்னிலை அடையும்போது, சக்தி முழுமையாக மாற்றமடைகிறது. மனதில் ஓடிக் கொண்டிருப்பது நின்று விடும். அவ்வளவு விரைவாக மனதால் உடனே வேறொரு சிந்தனையை உருவாக்க முடியாது. அதற்கு சிறிது நேரம் பிடிக்கும், மனம் முட்டாள் தனமானது, அதற்கு உடனே செயல்பட தெரியாது. அதனால் நீ திடீரென செய்யும்போது........ அந்த நிறுத்து எனும்போது மனம் நிற்கிறது, ஒரு வினாடி எல்லாமும் தெளிவாகிறது. எல்லா எண்ணங்களும் மறைந்து விடும் – அங்கே வெறுமை. அந்த வெறுமையில் ஒரு தெளிவு. நிறுத்தும்போது அதை அதிக நேரம் செய்யாதே. ஏனெனில் அரை நிமிடத்தில் மனம் திரும்ப உயிர் பெற்று அந்த தெளிவை அழித்து விடும்.

மையம் கொள்ளுதல் அல்லது நிலை பெறுதல்.

3. ஹரா தியானம் அல்லது நாபி தியானம்

எப்போதெல்லாம் செய்வதற்கு எந்த வேலையும் இன்றி ஓய்வாக இருக்கிறாயோ அப்போதெல்லாம் அமைதியாக அமர்ந்து தொப்புளுக்கு இரண்டு விரற்கடை கீழே உள்ள இடத்திற்கு சென்று அங்கேயே இரு. இதுதான் ஹரா மையம், நாபிக்கமலம்.

இந்த மையத்தைக் குறித்து விழிப்புணர்வு கொள்வது உனக்கு பேருதவியாக இருக்கப் போகிறது. அதனால் அங்கே எவ்வளவு நேரம் தங்கி இருந்தாலும் அந்தளவு நல்லது. அது உனது வாழ்வுச் சக்திகளுக்கு ஒரு மகத்தான மையத்தை உருவாக்கும். நீ அதை வெறுமனே பார்க்க ஆரம்பித்தால் போதும், அது வேலை செய்ய ஆரம்பித்து விடும். அந்த மையத்தை சுற்றியே வாழ்க்கை சுழலுவதை நீ உணர ஆரம்பிப்பாய். ஹராவிலிருந்துதான் வாழ்க்கை ஆரம்பமாகிறது, அந்த ஹராவில்தான் வாழ்வு முடிகிறது. நமது உடலிலுள்ள மற்ற மையங்கள் எல்லாம் விலகி உள்ளன. நாபிக் கமலம் மட்டும் மிகச் சரியாக நடுவில் உள்ளது. – அங்கேதான் நாம் வேர் கொண்டு நிலை பெறுகிறோம். அதனால் ஒருவர் அந்த மையத்தை பற்றி விழிப்புணர்வு கொண்டால் பல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும்.

உதாரணமாக, எண்ணங்கள் குறையும், ஏனெனில் சக்தி தலைக்கு செல்வதில்லை, அது நாபிக்கு செல்கிறது.

நீ நாபியை பற்றி நினைக்க நினைக்க நீ நாபியில் நிலை பெற,பெற உன்னுள் ஒரு ஒழுங்கு வரும். அது வற்புறுத்தலால் வருவதல்ல, தானே இயற்கையாக வரும். உனக்கு நாபியை பற்றிய விழிப்புணர்வு அதிகமாகுமளவு வாழ்வையும் இறப்பையும் பற்றிய பயம் குறையும் – ஏனெனில் இதுதான் பிறப்பு இறப்பின் மையம். ஒருமுறை நீ நாபி கமலத்துடன் லயப்பட்டு விட்டால், பின் வாழ்வை துணிச்சலுடன் வாழ முடியும். தைரியம் அதிலிருந்துதான் எழுகிறது. மேலும் நிதானமற்ற கணங்கள் குறைதல், எண்ணங்கள் குறைதல், அதிக மௌனம், இயல்பான ஒழுக்கம், துணிச்சல், நிலைபெற்றல், ஆழமாய் இருத்தல் ஆகியன நிகழும்.

தளர்த்திக்கொள்ளும் முறைகள்

4. உன்னை ஏற்றுக் கொள்ளுதல்

நீ போட்டிக்கு நடுவே வாழ்கிறாய். அது பதட்டத்தை உண்டு பண்ணுகிறது. நீ இடைவிடாது ஒப்பிட்ட படியே வாழ்கிறாய். அது பதட்டத்தை உண்டாக்குகிறது.
நீ ஒன்று இறந்தகாலத்தை பற்றி நினைக்கிறாய், அல்லது எதிர்காலத்தை பற்றி நினைக்கிறாய். அதனால் நிகழ்காலத்தை தவற விடுகிறாய். ஆனால் இதுதான் இருக்கும் ஒரே உண்மை. இது பதட்டத்தை உண்டாக்குகிறது.

உன்னுடைய திறமையை கண்டுகொள். இயற்கை யாரையும் தனிப்பட்ட திறமையை பரிசாக அளிக்காமல் பூமிக்கு அனுப்புவதில்லை, ஒரு சிறிய தேடல்தான் தேவை....... உன்னுடைய குணங்களை, உன்னிடமுள்ள தனிப்பட்ட திறமையைக் கண்டு பிடித்து அவற்றை முழுமையாக உபயோகப்படுத்து. பதட்டத்தில் குவிந்திருந்த சக்திகள் எல்லாம் உன்னுடைய மேன்மையாக, உன்னுடைய அழகாக மிளிர ஆரம்பிக்கும்.

5. ஒரு இறகு தொடுவதை போல தொடுதல்

ஒரு நாளைக்கு பல முறை செய்யவும்.

ஒரு வினாடி உணர்தல் கூட நல்லதுதான்.
ஆனால் தியானமாக செய்ய 40 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

முதல் படி ஒரு நாற்காலியில் அல்லது ரயிலில் அல்லது வேறு எங்கோ தளர்வாக உட்கார்ந்து கொண்டு கண்களை மூடி உள்ளங்கையை கண்களின் கருவிழிமேல் மெதுவாக அழுத்தாமல் இறகு தொடுவதைப்போல வைக்க வேண்டும்.

ஒரு ஓய்வான மனதில் எண்ணங்கள் ஓடாது, அவை உறைந்து விடும். அவை பதட்டத்தின் மூலம்தான் உயிர் வாழ்கின்றன. அதனால்தான் கண்கள் அசைவற்று நிலை பெற்ற நிலையில் சக்தி உள் நோக்கி செல்கையில், எண்ணங்கள் நின்றுவிடுகின்றன. நீ உள்மனதில் அளவற்ற சந்தோஷத்தை உணர்வாய். நாள்தோறும் செய்ய செய்ய அந்த சந்தோஷம் ஆழமாகும்.

தன்ணுணர்வின் கதை – ஓஷோவின் கதை - 15

ஒரு உண்மையான ஆன்மீக வாதியின் ஒழுக்கம் எதுவும் அவன்மேல் திணிக்கப்பட்டதாக இருக்காது. அது அவனது தன்னுணர்விலிருந்து எழுந்ததாக இருக்கும். அவன் சரியானதை செய்ய வேண்டும் என்று முயற்சி செய்ய மாட்டான். தவறானது எதையும் செய்துவிடக் கூடாது எனவும் முயல மாட்டான். அவன் எதையும் விழிப்புணர்வோடு பார்ப்பான், அவனது தன்னுணர்விலிருந்து செயல்படுவான். அதனால் அவன் செய்வது எதுவோ அதுவே சரியானது. உண்மையில் தன்னுணர்வோடு இருக்கும்போது தவறானது எதையும் செய்யமுடியாது.

நாகார்ஜூனா என்ற மிகச் சிறந்த ஞானியைப் பற்றி ஒரு அழகான கதை உண்டு.

அவர் ஒரு நிர்வாணமாக திரியும் பக்கிரி, ஆனால் உண்மையான தேடுதல் உடையவர்கள் அனைவராலும் நேசிக்கப்பட்டார். ஒரு நாட்டின் அரசி கூட நாகார்ஜூனா மீது மிகவும் பக்தியோடு இருந்தாள். அவள் ஒருநாள் நாகார்ஜூனாவை அரண்மனைக்கு விருந்தாளியாக அழைத்தாள். நாகார்ஜூனா அரண்மனைக்குச் சென்றார்.

அரசி தனக்கு ஒரு உதவி வேண்டும் எனக் கேட்டாள். அவர் என்ன உதவி வேண்டும் எனக் கேட்டார். அதற்கு அரசி உங்களது பிச்சைப் பாத்திரம்தான் வேண்டும் என்றாள்.
நாகார்ஜூனா கொடுத்துவிட்டார் – அது ஒன்றுதான் அவரிடம் உள்ள பொருள் – பிச்சைப் பாத்திரம். ராணி உள்ளே சென்று வைரங்கள் பதிக்கப்பட்ட தங்கத்திலான பிச்சைப் பாத்திரம் ஒன்றைக் கொண்டு வந்து நாகார்ஜூனாவிடம் கொடுத்தாள்.

அவள், இதை வைத்துக் கொள்ளுங்கள். வருடக் கணக்காக உங்கள் கைகளில் இருந்த அந்த பிச்சை பாத்திரத்தை நான் வழிபட போகிறேன் – உங்களின் துடிப்பில் சிறிதளவாவது அது கொண்டிருக்கும். இனி அது என் கோவிலாக இருக்கும். உங்களைப் போன்ற மனிதர் ஒரு சாதாரண மரத்திலான பிச்சை பாத்திரத்தை ஏந்தக் கூடாது. இந்த தங்க பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். நான் இதை உங்களுக்காகவே விசேஷமாக செய்தேன். என்றாள்.

அது உண்மையிலேயே விலையுயர்ந்தது. நாகார்ஜூனா சாதாரண முனிவர்கள் போல இருந்திருந்தால், நான் இதை தொட மாட்டேன். நான் துறவி. இந்த உலகத்தை துறந்து விட்டேன் என்று கூறியிருப்பார். ஆனால் அவரைப் பொறுத்தவரை எல்லாமும் ஒன்றுதான், அதனால் அவர் அந்த பாத்திரத்தை எடுத்துக் கொண்டார்.

அவர் அரண்மனையை விட்டுப் போகும்போது, ஒரு திருடன் அவரைப் பார்த்தான். அவனால் அவனது கண்களையே நம்ப முடியவில்லை. ஒரு நிர்வாண சந்நியாசியிடம் இவ்வளவு விலையுயர்ந்த பொருளா இவரால் எவ்வளவு காலம் இதை பாதுகாக்க முடியும் அதனால் திருடன் அவரை பின்தொடர்ந்தான்.

நாகார்ஜூனா ஊருக்கு வெளியே உள்ள ஒரு பாழடைந்த கோவிலில் தங்கியிருந்தார் – கதவுகளும் இல்லை, ஜன்னல்களும் இல்லை. மிகவும் பாழடைந்தது. திருடன் அதைப் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். சீக்கிரமே அவர் தூங்கப் போய்விடுவார். பின் எந்த கஷ்டமும் இல்லை. நான் அந்த பாத்திரத்தை எடுத்துக் கொள்வேன் என நினைத்தான்.

திருடன் கதவுக்கு வெளியே ஒரு சுவறின் அருகில் பதுங்கியிருந்தான். நாகார்ஜூனா அந்த பாத்திரத்தை வெளியே விட்டெறிந்தார். திருடனால் நடந்ததை நம்பவே முடியவில்லை.

நாகார்ஜூனா இந்த திருடன் தன்னை பின் தொடர்ந்து வருவதை பார்த்திருந்தார். இவன் தனக்காக வரவில்லை, இந்த பாத்திரத்திற்காகத் தான் வருகிறான் என்பதை நன்கு அறிந்த அவர் அதை வெளியே வீசி விட்டார். எதற்கு அனாவசியமாக அவன் காத்திருக்க வேண்டும் எடுத்துக் கொண்டு அவன் போகட்டும், நானும் ஓய்வெடுக்கலாம் என நினைத்தார்.

இவ்வளவு விலையுயர்ந்த பொருளை நாகார்ஜூனா இவ்வளவு சுலபமாக வீசி விட்டாரே என ஆச்சரியப்பட்ட திருடனுக்கு அது தனக்காகத் தான் வீசப்பட்டது என நன்றாகத் தெரிந்தது. அதனால் அவருக்கு நன்றி சொல்லாமல் அவனால் போக முடியவில்லை.

அவன், தலையை உள்ளே நீட்டி, சாமி, மிகவும் நன்றி. ஆனால் நீங்கள் மிக வித்தியாசமான மனிதர் – என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. மேலும் எனக்கு ஆழமான ஆசை ஒன்று எழுகிறது. ஒரு திருடனாக இருந்து என் வாழ்நாளை நான் வீணடித்துவிட்டேன். ஆனால் உங்களைப் போன்றவர்களும் இருக்கிறார்களா நான் உள்ளே வந்து உங்கள் காலில் விழலாமா எனக் கேட்டான்.

நாகார்ஜூனா சிரித்தார், அவர், வா, அதற்காகத்தான் அந்த பாத்திரத்தை வெளியே வீசினேன். அப்போதுதான் நீ உள்ளே வருவாய். என்றார்.

திருடன் மாட்டிக் கொண்டான். உள்ளே வந்து பாதங்களை தொட்டான். அந்த சமயத்தில் திருடன் மிகவும் வெளிப்படையாக இருந்தான். ஏனெனில் இவர் சாதாரண மனிதர் அல்ல என்பதை அவன் கண்டான். அவன் மிகவும் மென்மையாகவும், திறந்தும், நன்றியோடும், திகைத்தும், உள்வாங்கத்தயாராகவும் இருந்தான். அவன் அவர் காலில் விழுந்து வணங்கிய போது, வாழ்க்கையில் முதன்முறையாக அவன் தெய்வீகத்தை உணர்ந்தான்.

அவன் நாகார்ஜூனாவிடம், நானும் உங்களைப் போல மாற இன்னும் எத்தனை பிறவிகள் ஆகும் எனக் கேட்டான்.

நாகார்ஜூனா, எத்தனை பிறவிகளா அது இங்கேயே இப்போதே, இன்றே நடக்கலாம் என்றார்.

திருடன், நீங்கள் கிண்டல் செய்கிறீர்கள். அது இப்போது எப்படி நிகழமுடியும் நான் ஒரு திருடன், நாடே அறியும். அவர்களால் என்னை பிடிக்க முடிய வில்லை. அரசர் கூட என்னை பார்த்து பயப்படுவார். ஏனெனில் மூன்றுமுறை பொக்கிழத்திற்க்குள் நுழைந்து திருடிக் கொண்டு போயிருக்கிறேன். அவர்களுக்கு அது நான்தான் எனத் தெரியும். ஆனால் அத்தாட்சியில்லை. நான் ஒரு பக்கா திருடன் – நீங்கள் இந்த பகுதிக்கு அன்னியராக இருப்பதால் உங்களுக்கு இவை தெரியாமலிருக்கலாம். இப்போதே நான் எப்படி மாற முடியும் என்றான்.

நாகார்ஜூனா ஆயிரக்கணக்கான வருடங்களாக வெளிச்சமே இன்றி இருண்டு கிடக்கும் ஒரு வீட்டிற்க்குள் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டு வந்தால், இருள் ஆயிரக்கணக்கான வருடங்களாக நான் இங்கே இருக்கிறேன். ஒரு தீபத்தை உள்ளே கொண்டு வந்ததால் மட்டுமே என்னால் வெளியே போக முடியாது. நான் நெடுங்காலமாக இங்கே இருக்கிறேன். எனக் கூற முடியுமா இருள் சண்டையிட முடியுமா ஒருநாள் இருட்டு, ஆயிரக்கணக்கான வருட இருட்டு என இருட்டில் பேதம் உண்டா எனக் கேட்டார்.

திருடனால் அதை புரிந்து கொள்ள முடிந்தது, இருள் வெளிச்சத்தை எதிர்க்க முடியாது. வெளிச்சம் வரும்போது, இருள் மறைந்துவிடும். நாகார்ஜூனா, நீ பல பிறவி பிறவியாக இருளில் இருந்திருக்கலாம். – அது ஒரு பொருட்டேயல்ல. நான் உனக்கு ஒரு ரகசியத்தை கொடுக்கிறேன். அதன்மூலம் நீ உன் இருப்பில் வெளிச்சத்தை கொண்டு வர முடியும். என்றார்.

திருடன், என் தொழில் அதை நான் விட வேண்டுமா எனக் கேட்டான்.

நாகார்ஜூனா அதை நீதான் தீர்மானிக்க வேண்டும். எனக்கு உன் தொழிலைப் பற்றியோ உன்னைப் பற்றியோ அக்கறையில்லை. உன் இருப்பில் வெளிச்சத்தை கொண்டுவரக்கூடிய ஒரு ரகசியத்தை நான் உனக்குத் தருவது மட்டுமே நான் செய்வது. மற்றபடி எல்லாமே உன்னை பொறுத்தது. என்றார்.

திருடன், ஆனால் நான் மற்ற சன்னியாசிகளிடம் சென்றபோது, அவர்கள் எப்போதும், முதலில் திருடுவதை நிறுத்து – பின்புதான் தீட்சையளிக்க முடியும் எனக் கூறுவர். என்றான்.

நாகார்ஜூனா சிரித்து, நீ சன்னியாசிகளிடம் செல்லாமல் திருடர்களிடம் சென்றிருக்கலாம். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது.

நீ வெறுமனே உன் சுவாசத்தை கவனி – இது புத்தரின் முறை – உன் சுவாசம் உள்ளே போவதையும் வெளியேறுவதையும் கவனி. எப்போதெல்லாம் நினைவு வருகிறதோ, அப்போதெல்லாம் உன் சுவாசத்தை கவனி. திருடப் போகும்போது, வேறு யாருடைய வீட்டிற்க்குள் இரவில் நுழையும்போதும், உன் சுவாசத்தை கவனி. பொக்கிஷத்தை திறக்கும்போதும், வைரங்கள் அங்கே இருப்பதை பார்க்கும்போதும் உன் சுவாசத்தை கவனி. என்ன செய்ய விரும்புகிறாயே அதை செய் – ஆனால் சுவாசத்தை கவனிக்க மறந்து விடாதே. என்றார்.

திருடன், இது மிகவும் எளிதானதாக தோன்றுகிறதே. ஒழுக்கம் தேவையில்லையா குணநலன் வேண்டாமா வேறு எதுவும் தேவையில்லையா என்றான்.

நாகார்ஜூனா, நிச்சயமாக வேறு எதுவுமில்லை. உன் சுவாசத்தை கவனி. அவ்வளவுதான் என்றார்.

பதினைந்து நாட்களுக்கு பிறகு திருடன் திரும்ப வந்தான். ஆனால் அவன் முற்றிலும் புதியவனாக இருந்தான். அவன் நாகார்ஜூனாவின் காலில் விழுந்து வணங்கி, என்னை சிக்க வைத்து விட்டீர்கள். நான் ஒரு துளி கூட சந்தேகப் பட முடியாத விதத்தில் மிக அழகாக என்னை சிக்க வைத்து விட்டீர்கள். நான் இந்த பதினைந்து நாட்களாக முயற்சி செய்தேன் – அது நடக்கவே இல்லை. நான் என் சுவாசத்தை கவனித்தால் என்னால் திருட முடியவில்லை. நான் திருடினால், என் சுவாசத்தை என்னால் கவனிக்க முடியவில்லை. சுவாசத்தை கவனித்தால் நான் மிகவும் மௌனமாக, விழிப்போடு, தன்னுணர்வோடு, கவனமானவனாக இருக்கிறேன். அப்போது வைரங்கள் கூட கூழாங்கற்களாக தோன்றுகிறது. நீங்கள் எனக்கு ஒரு கஷ்டத்தை, அலைபாயுதலை உருவாக்கி விட்டீர்கள். நான் இப்போது என்ன செய்வது என்று கேட்டான்.

நாகார்ஜூனா, வெளியே போ – நீ என்ன செய்ய விரும்புகிறாயோ அதை செய். அந்த அமைதி, அந்த மௌனம், அந்த ஆனந்தம் என உன் சுவாசத்தை நீ கவனிக்கும் போது கிடைப்பது வேண்டும் என நினைத்தால் அதை தேர்ந்தெடு. அதை விட வைரமும் தங்கமும் வெள்ளியும் விலைமதிப்புள்ளது என முடிவெடுத்தால் அதை தேர்ந்தெடு. நீதான் தேர்ந்தெடுக்க வேண்டும். உன் வாழ்வில் தலையிட நான் யார் எனக் கேட்டார்.

அந்த மனிதன், என்னால் தன்னுணர்வற்ற நிலையை தேர்ந்தெடுக்க முடியாது. இதுபோன்ற கணங்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என்னை உங்களது சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள். எனக்கு தீட்சையளியுங்கள் என்று கேட்டான்.
நாகார்ஜூனா, நான் உனக்கு ஏற்கனவே தீட்சையளித்து விட்டேன் என்றார்.

மூலம் - The fish in the sea is not thirsty che # 10

No comments: