Friday, October 22, 2010

மலர் 1 இணைய இதழ் 10 11 மே 2009

தலையங்கம்

அன்பு நண்பர்களே!

தேர்தல்! தேர்தல்! தேர்தல்!
முன்பெல்லாம் தேர்தல் காய்ச்சல் எல்லோருக்கும் வரும்.
ஒரு படபடப்பு, ஒரு டென்ஷன், ஒரு உஷ்ணம், ஒரு வேகம் இப்படி!.

இப்போது என்னைச் சுற்றிலும் பார்க்கிறேன். பொது மக்களிடம் அது மிஸ்ஸிங். கொஞ்சம் கூட இல்லை. பலரையும் கேட்டேன்.
தலைவலி என்கின்றனர் பலர்.
பொழுதுபோக்கு என்கின்றனர் சிலர்.
வீண்வம்பளப்பு என்கின்றனர் உழைப்போர்.
வீண் செலவு என்கின்றனர் கணக்கர்.
நல்ல வருமானம் என்கின்றனர் வெட்டிகள்.
நல்ல வேலை என்கின்றனர் குண்டர்கள்.
நடிக்கும் நேரம் என்கின்றனர் அரசியல்வாதிகள்
நாய் அலைச்சல் என்கின்றனர் அரசாங்க ஊழியர்.

இதிலிருந்து விலகி ஒரு சில படித்த பணம் படைத்த மாநகர வாசிகள், அதுவும் மும்பை குண்டுவெடிப்பால் ஆடிப்போன மேல்தட்டுவாசிகள், அரசியல்வாதிகளுக்கு பொறுப்பில்லை, அரசியல் கட்சிகள் வரி கட்டுவோருக்கு பாதுகாப்பு கொடுப்பதில் அக்கறை காட்டுவதில்லை என்று விழித்தெழிந்து முதல்முறையாக ஓட்டுப் போடுவதில் அக்கறை காட்டுகின்றனர்.

ஆனால் எப்போதும் ஓட்டுப் போடும் நடுத்தர மக்கள், கீழ்த்தட்டு மக்கள், மிகவும் பிற்பட்டோர், விவசாயிகள், தொழிலாளிகள் ஆகியோருக்கு இந்த தேர்தல் திருவிழாவும் இதில் கிடைக்கும் வம்பும், இலவசமும், கவனிப்பும் நன்கு தெரியும். தேர்தலுக்குப் பின் நடக்கப் போவதும் நன்கு தெரியும். அதனால்தான் இந்தத் தேர்தலில் இவர்களுக்கு அக்கறை மிகவும் குறைந்து விட்டது. வாக்குறுதிகளை ஜோக்குகள் போலவே கேட்கிறார்கள்.

இந்த விதமான அக்கறையற்ற தன்மை எப்படி வந்தது? சலிப்பில் வந்தது. எல்லாக் கட்சி ஆட்சியும் பார்த்தாகி விட்டது. எல்லா அரசியல்வாதியும் எல்லாக் கட்சியும் எல்லாத் தலைவர்களும் எல்லாக் கொள்கையும் ஒன்றுதான். வெறும் நடிப்புதான்.! சுவிஸ் கணக்கு வைத்திருப்பவர் என்பதே அரசியல்வாதிகளின் ஒரே தரம்.
நிறம். மணம். தனக்கென்று ஒரு அடியாள் கூட்டம். அதை மேய்க்க ஒரு கட்டைப் பஞ்சாயத்து செட்டப். கறுப்பு பணத்தை சுருட்டிப் போட என்ன திட்டங்கள் போடலாம் என்ற ஆலோசனை. இப்படியாகி விட்டனர் இந்திய அரசியல்வாதிகள் மக்கள் மனதில்.

ஆகவே சலிப்பு.! தேர்தல் குறித்து மக்களிடம் சலிப்பு.! இதுதான் இன்று எங்கும் பார்க்கிறேன்.

அரசாங்க செலவே இந்தத் தேர்தலுக்கு 2000 கோடி ரூபாயைத் தாண்டி ஆகிக் கொண்டிருக்கிறதாம். கட்சிகள் செலவு 20000 கோடி இருக்கும். இதில் கட்சிக்குள்ளேயே கணக்கெழுதி சுருட்டும் பித்தலாட்டம் வேறு!.

இலங்கையில் உள்நாட்டுப்போர். நமது மொழி பேசுபவர் ஒரு பக்கம். ஆனால் இரு பக்கமும் இருப்பது மனிதர்கள்தாம், நமது மனித இனம்தான். அதை எப்படி நிறுத்துவது என்ற சிந்தனைப் போக்கே எவருக்கும் உதிக்கக் காணோம்.!

தவறு ஒருவர் முதலில் செய்திருப்பார். பிறகு அதற்கு எதிராக அடுத்தவர் தவறு செய்திருப்பார். பிறகு இருவரும் மேலும் மேலும் தவறுகள் செய்வர். இதுதான் சண்டை பிறக்கும், நடக்கும் விதம். சிறு குழந்தைகளிடம் இதை நாம் பார்ப்பதில்லையா?

இதில் சண்டையை நிறுத்துவதல்லவா முதலில் முக்கியம். ஆனால் அதற்கு வழி காண எவரும் தயாரில்லை. மாறாக நமது அரசியல்வாதிகளின் நாடகங்கள் எத்தனை?

உண்ணாவிரதமிருந்து உயிர் கொடுக்க துணிந்தவர் தேர்தல் வரை காத்திருந்தது ஏன்? தனி ஈழமே தீர்வு என்பவர் தேர்தல்வரை என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்? எல்டிடிஈ என் உயிர் என்றவர் நான்கு எம்.பி சீட்டுக்காக எல்டிடிஈ யின் பரம எதிரியோடு கூட்டு சேர்ந்தது எப்படி? எந்த பிரச்னையிலும் கொள்கை ரீதியாக முடிவெடுக்கும் கம்யூனிஸ்ட் தோழர்கள் திடீரென்று தமிழின உணர்வு கொண்டது எப்படி? கடைசிநாள் வரை மகனை அமைச்சராக பார்க்க ஆசைப்பட்டு அடக்கி வாசித்தவர் திடீரென வீறு கொண்டு எழுந்தது எவ்வாறு?

இதன் நடுவே குட்டி குட்டி கறுப்புப் பண முதலைகள் தங்கள் தங்கள் சாதியினரைத் தூண்டிவிட்டு கட்சிசேர்த்து பாதுகாப்புத் தேடும் அவலம் வேறு.

இதில் எம்.ஜீ.ஆரின் பாதிப்பால் சினிமாவைப் பார்த்து ஏமாறும் கூட்டம் இன்னும் இருக்கிறதென்று நம்பிப் போராடும் நமது கதாநாயகர்கள்.

சாகக் கிடக்கின்ற தேசீயக் கட்சிகளின் கேவலமான கூட்டணிகள்.

பிரதமராகும் கனவிலிருக்கும் மாநிலக் கட்சித் தலைவர்களின் கூட்டணி என்று ஒன்று.

இப்படி தேடித் தேடிப் பார்த்தாலும், இயல்பாய், இயற்கையாய், மக்களோடு பின்னிப் பிணைந்து வாழ்ந்து அதிலிருந்து எழுந்த தலைவர்கள் என்று ஒருவரும் இல்லாமல் சூனியமாய், சலிப்பாய் ஆகிவிட்டது தேர்தல்களம்.

இது மிகவும் ஆபத்தான விஷயம். மக்களின் அக்கறையற்ற தன்மை அரசியல் திருடர்களுக்கு மேலும் மேலும் தைரியத்தையே தரும். இதனால் மேலும் மேலும் பொறுப்பற்ற தான்தோன்றிச் செயல்களும், திருட்டும், வன்முறையுமே மிகும். இந்தியாவை துணடு போட்டுக் கொள்ள முயற்சிகள் நடக்கும்.

இவை தடுக்கப் படவேண்டும் என்றால் அரசியலற்ற மக்கள் அமைப்புகள் எங்கும் தோன்றி பலம் பெற வேண்டும். அந்தந்தப் பகுதியில் உள்ள தொழிலதிபர்கள் தங்கள் கறுப்புப் பணத்தைப் பதுக்கிக் கொள்ள ஏதாவது ஒரு சாமியாரை பெரிய ஆளாக்கி, அவர் பெயரால் ஆசிரமம், கல்வி நிலையங்கள், ஆஸ்பத்திரி இத்யாதிகள் என்று ஏற்படுத்தி தன் கைக்குள் போட்டுக் கொள்ளும் வழக்கத்தை விட்டொழித்துவிட்டு அரசியலும் மதமும் சாராமல் நிகழ்கால பிரச்னைகளுக்கு முன்னுரிமை தரும் சுதந்திர அமைப்புகளை வளர்க்க பொருளுதவி செய்ய வேண்டும்.

ஏனெனில் அப்படி நிகழ்கால பிரச்னைகள், உதாரணமாக மின்சார தட்டுப்பாடு, சாலை வசதியின்மை போன்றவற்றால் தொழில்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. மக்களும் பாதிக்கப் படுகின்றனர்.

எம்.பி. க்களை விலைக்கு வாங்கி காரியம் சாதிப்பதை விட்டு விட்டு சுதந்திர மக்கள் அமைப்புகளை பலப்படுத்த தொழிலதிபர்களும், அதில் பங்கேற்றுச் செயலாற்ற படித்தவர்களும், அதிகாரிகளும் முன்வந்தால் மட்டுமே, முன்வருவது மட்டுமே இன்றைய இந்தியாவை வளர்த்தும். அழிவிலிருந்து காப்பாற்றும்.

அன்பு,
சித்.


கவிதைப்பகுதி

தந்த்ரா

அருமை நண்பா!

கற்பனை மனிதனின் தனித்திறனில் ஒன்று!
முக்கியமான ஒன்று!
கற்பனை மூலம் உணர்ச்சிகளை தட்டி எழுப்பலாம்,
புலன்களை சீவிவிடலாம்,
இல்லாத உலகத்தில் உல்லாசம் கொள்ளலாம்,
இந்த சக்தி உணர்ந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று!

தொடர்ந்து ஒன்றைக் கற்பனை செய்தால்,
ஒரு கட்டத்தில் கற்பனை உன்னை.......
உன் புலன்களை, உன் உணர்வுகளை......
ஆட்சி செய்ய ஆரம்பித்துவிடும்,
நீ கற்பனை செய்வதுபோய்.......
கற்பனை உன்னை வயப்படுத்தும், செதுக்கும்!
உணர்வு உலகத்தில் உன்னை உயர்த்தும்,
அல்லது தாழ்த்தும்.
ஆம். உன்னை இழந்து வெறும் உணர்ச்சியாய்,
அல்லது உன்னை கடந்த கடவுள் உணர்வாய்!

இந்த உளவியல் ரகசியத்தைப் பயன்படுத்தி
உலகையே ஆள்கின்றனர்,
மக்களின் கற்பனையைத் தட்டி விட்டு
தங்களிஷ்டப்படி சமுதாயக் கூட்டமாக
செதுக்கி எடுக்கின்றனர்.........
அரசியல்வாதிகள், மதவாதிகள், வியாபாரிகள்,
கொள்கை வெறியர்கள், சினிமா கலைஞர்கள்.

ஆகவே நண்பா!
இந்த திறனை சரியாக திசைப்படுத்தி,
வாழ்க்கையை வாழ வேண்டியது...................
தனிமனிதப் பொறுப்பு!!!!

கற்பனைபோதையில் கட்டுண்ட வாழ்வைப் பார்த்து
பகுத்தறிவுப் பாசறை என்ற பெயரில்
கற்பனைத் திறனை மறுப்பதும் மடமை.

கற்பனைத் திறனை சரியாக வழிப்படுத்துதல் வேண்டும்......
ஆம் நண்பா!
அது மிக எளிது!
கடைபிடிக்க வேண்டிய விதி சுலபம்.

அது
“நீ மறந்து போன உனது உண்மை இயல்புகளை,
நுண்ணிய உணர்வுகளை நோக்கி கற்பனை செய்”!
ஆம்! இதயத்தில் வாழ்வதே உன் இயல்பு,
அதிலிருந்து பிறக்கும் எதையும் கற்பனை செய்!
புலனில் துவங்கினாலும் இதயம் உன்னை
பரவசத்திற்கு இட்டுச் செல்லும்.
இதயமே மனிதனின் தனி இயல்பு,
அது இல்லாத கற்பனை மனதின் சேட்டை மட்டுமே!

இதயத்தின் இனிமைதானே
தாய்மையின் சுகம்,
காதலின் துணிவு,
பக்தியின் பெருமை,
கருணையின் மாட்சி,
ஆகவே கற்பனைத் திறனை இதயத்திலிருந்து வாழு!

ஒரு கட்டத்தில் கற்பனையின் கட்டுப்பாடு
விட்டுப்போகும்!
“நான்” என்பது நழுவிப் போகும்!
ஆம், ஆனால் அன்பு இருக்கும்.

கற்பனை சக்தி கடந்து,
நான் என்ற உன் நிலை கடந்து,
அன்பாய் நீ பரிணமிப்பாய்! உயிர்த்தெழுவாய்!

இது வாழ்வின் உச்சத்தை வாழ்ந்து தொடும் வழி!.
அன்பு வழி! தந்த்ரா வழி!

ஓஷோ வீடியோ

1. OSHO: Science and the Inner Journey

2. OSHO: Dreams are your unlived Life

3. OSHO: Love is like a Spring Breeze.

கேள்வி – பதில்

எல்லோரும் தனிச்சிறப்பு கொண்டவர்கள் என்று ஓஷோ எப்படிக்
கூறுகிறார் என்ற கேள்விக்கு பதிலாக கீழ்க்கண்ட பதிலை அளிக்கிறோம்.

நான் தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவனாக(SPECIAL) மாற வேண்டும் என்பதை எப்படி நிறுத்துவது?

ஏற்கனவே நீ தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவன்தான். எனவே தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவனாக மாற வேண்டிய அவசியமில்லை. நீ தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவன். நீ தனித்தன்மை கொண்டவன். – கடவுள் அதைவிட குறைவாக எதையும் எப்போதும் உருவாக்குவதில்லை. ஒவ்வொருவரும் முழுமையாக தனித்தன்மை கொண்டவர்கள். உன்னைப் போன்ற ஒரு மனிதன் முன்பும் இருந்ததில்லை. உன்னைப் போன்ற ஒரு மனிதன் உனக்கு பின்பும் ஒருபோதும் இருக்க போவதில்லை. கடவுள் இந்த வடிவத்தை முதலும் கடைசியுமாக எடுத்திருக்கிறார். எனவே தனிப்பட்ட சிறப்பு உடையவனாக மாற முயற்சி செய்ய வேண்டியதில்லை. நீ ஏற்கனவே அப்படித்தான் இருக்கிறாய். நீ தனிப்பட்ட சிறப்புடையவனாக மாற முயற்சி செய்தால் நீ சாதாரணமாகி விடுவாய். உன்னுடைய முயற்சி தவறான புரிதலில் வேர் கொண்டுள்ளது. அது குழப்பத்தை உண்டு பண்ணும். ஏனெனில் நீ தனிப்பட்ட சிறப்புடையவனாக முயற்சி செய்யும்போது நீ ஒரு விஷயத்தை ஏற்கனவே முடிவு செய்துவிட்டாய். அது என்னவெனில் நீ தனிப்பட்ட சிறப்புடையவன் அல்ல என்பதே. நீ ஏற்கனவே சாதாரணமானவனாகி விட்டாய். நீ அந்த புள்ளியை தவற விட்டுவிட்டாய்.

நீ சாதாரணமானவன் என்பதை நீ ஒருமுறை முடிவு செய்து விட்டால், நீ எப்படி தனிப்பட்ட சிறப்புடையவனாக முடியும்?
நீ அதையும், இதையும் முயற்சி செய்வாய்! நீ சாதாரணமானவனாகவே இருப்பாய். ஏனெனில் உனது அடித்தளம், உனது அஸ்திவாரம் தவறானது. நீ தையல்காரனிடம் சென்று மேலும் சிக்கலான ஆடைகளை தைத்துக் கொள்ளலாம். உன்னுடைய தலை அலங்காரத்தை நீ திரும்பவும் செய்து கொள்ளலாம். நீ அழகு பொருட்களை உபயோகப்படுத்தலாம். நீ ஒரு சில விஷயங்களை கற்றுக் கொண்டு மேலும் அறிவாளியாகலாம். நீ வரைந்துவிட்டு நீ ஒவியன் என எண்ணிக் கொள்ளலாம். நீ ஒரு விஷயத்தை செய்து புகழடையலாம். ஆனால் அடி ஆழத்தில் நீ சாதாரணமானவன் என்பதை நீ அறிவாய். இவை அனைத்து விஷயங்களும் வெளியில் உள்ளன. நீ எப்படி உனது சாதாரண ஆத்மாவை அசாதாரண ஆத்மாவாக மாற்றமுடியும்? அதற்கு வழியே இல்லை.

கடவுள் எந்த வழியும் கொடுக்கவில்லை. ஏனெனில் அவர் ஒருபோதும் சாதாரண ஆத்மாக்களை படைத்ததில்லை. எனவே அவர் உன் பிரச்சனையை குறித்து யோசிக்க இயலாது. அவர் உனக்கு தனிப்பட்ட அசாதாரணமான ஆத்மாவை அளித்துள்ளார். அவர் ஒருபோதும் வேறுயாருக்கும் அதனை அளித்ததில்லை. இது உனக்காகவே உருவாக்கப்பட்டது.

நான் உன்னிடம் சொல்ல விரும்புவது என்னவென்றால் உன் தனிப்பட்ட சிறப்பை சரியாக அடையாளம் கண்டுகொள். அதனை பெற வேண்டிய அவசியமில்லை, அது ஏற்கனவே அங்கு உள்ளது. அதனை அடையாளம் கண்டுகொள். உனக்குள் சென்று அதனை உணர். யாருடைய கைரேகையும் உன்னுடைய கைரேகை போன்றதல்ல. கைரேகை கூட இல்லை! யாருடைய கண்ணும் உன்கண்களை போன்றதல்ல, யாருடைய குரலும் உன்னைப் போன்றதல்ல, யாருடைய வாசனையும் உன்னை போன்றதல்ல. நீ ஒரு அப்பட்டமான தனிவிதி. உன்னை போன்ற இரண்டாவது ஆள் எங்கும் இல்லை. இரட்டை குழந்தைகள்கூட வித்தியாசமாகத்தான் இருக்கின்றன. எவ்வளவுதான் ஒன்றுபோல தெரிந்தாலும், அவர்கள் வித்தியாசமாக இருக்கிறார்கள். அவர்கள் வெவ்வேறு வழிகளில் செல்கிறார்கள். அவர்கள் மாறுபட்ட வழிகளில் வளர்கிறார்கள். இவர்கள் மாறுபட்ட தனித்தன்மையை பெறுகின்றனர்.
இந்த அடையாளம் காணுதல் தேவை.

நீ கேட்கிறாய்! நான் தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவனாக மாறவேண்டும் என்பதை எப்படி நிறுத்துவது,

வெறுமனே உண்மையை கேள். உன்னுடைய இருப்பினுள் சென்று பார். தனிப்பட்ட சிறப்புடையவனாய் இருக்கும் முயற்சி மறைந்துவிடும். நீ தனிப்பட்ட சிறப்புடையவன் என்பதை நீ அறியும்பொழுது முயற்சி நின்றுவிடும். நீ “நான் ஏதாவது ஒரு முறையை கொடுக்கவேண்டும். அதன்மூலம் தனிப்பட்ட சிறப்புடையவனாக இருப்பதை நிறுத்திவிடலாம்” என விரும்பினால், பிறகு அந்த முறை தொந்தரவு ஏற்படுத்தும். திரும்பவும் நீ ஏதோ ஒன்று செய்ய முயற்சிக்கிறாய். திரும்பவும் நீ ஏதோ ஒன்றாக முயற்சிக்கிறாய். முதலில் தனிப்பட்ட சிறப்புடையவனாய் இருக்கமுயற்சி செய்தாய். இப்போது தனிப்பட்ட சிறப்புடையவனாய் இல்லாதிருக்க முயற்சி செய்கிறாய். ஆனால் முயற்சிக்கிறாய்....முயற்சிக்கிறாய். ஏதோ ஒரு வழியில் மேம்படுத்த முயற்சிக்கிறாய். ஆனால் நீயாக இருப்பதை நீ ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை.
என்னுடைய முழு செய்தியும் நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே உன்னை ஏற்றுக் கொள். ஏனெனில் கடவுள் அதனை ஏற்றுக்கொள்கிறார். கடவுள் உனக்கு மதிப்பளிக்கிறார், நீ உனது இருப்பிற்கு இன்னும் மதிப்பளிக்கவில்லை. கடவுள் உன்னைப் போல இருப்பதை தேர்ந்தெடுத்திருக்கிறார் என அதிக ஆனந்தம் கொள். கடவுள் இருப்பதற்கு உன்னை தேர்ந்தெடுக்கிறார், அவருடைய உலகத்தை பார்ப்பதற்கு, அவருடைய இசையை கேட்பதற்கு, அவருடைய நட்சத்திரங்களை பார்ப்பதற்கு, அவருடைய மக்களை பார்ப்பதற்கு, நேசிப்பதற்கு, நேசிக்கப்படுவதற்கு – இன்னும் உனக்கு என்ன வேண்டும்? கொண்டாடு! நான் திரும்ப திரும்ப கூறுகிறேன், விழிப்புணர்வுடன் அதனை கொண்டாடு.! அந்த விழிப்புணர்வுடன் கூடிய கொண்டாட்டத்தில் மெதுமெதுவாக, நீ தனிப்பட்ட சிறப்புடையவன் என்பது உனக்குள் மின்னலைப் போல வெடிக்கும்.

ஆனால் நினைவில் கொள். அது மற்றவர்களோடு ஒப்பிட்ட அகங்காரமாக இருக்காது. இல்லை - அந்த நொடியில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட சிறப்புடையவர்கள் என்பதை நீ அறிவாய். யாரும் சாதாரணமானவர்கள் அல்ல.

எனவே இதுதான் வரையறை. நீ நான் தனிப்பட்ட சிறப்புடையவன் என நினைத்தால், அந்த ஆணை விடவும், அந்த பெண்ணை விடவும் சிறப்புடையவன் என நினைத்தால் நீ இன்னும் புரிந்துகொள்ளவில்லை. அது ஆணவத்தின் விளையாட்டு. ஒப்பிட்டு பார்த்துவருவது தனிப்பட்ட சிறப்பல்ல. யாரோடும் ஒப்பிடுவதால் வருவது சிறப்பல்ல. நீ இருப்பதை போலவே இருப்பதுதான் தனிப்பட்ட சிறப்பு.

ஒரு ஜென் குரு கேட்கப்பட்டார். ஒரு பேராசிரியர் அவரை பார்ப்பதற்கு வந்திருந்தார். அப்போது கேட்டார், “நான் ஏன் உங்களை போல இல்லை? இதுதான் என்னுடைய ஆசை! நான் ஏன் உங்களை போல இல்லை? நான் ஏன் உங்களை போல மெளனமாக இல்லை? நான் ஏன் உங்களை போல ஞானம் பெறவில்லை?”

குரு, “காத்திரு, மெளனமாக அமர்ந்திரு. கவனி, என்னை கவனி, உன்னை கவனி, மற்ற அனைவரும் சென்றபிறகு அப்போதும் கேள்வி இருந்தால் நான் அதற்கு பதிலளிக்கிறேன்.” என கூறினார். முழுநாளும் மக்கள் வந்து சென்றவண்ணம் இருந்தனர், சீடர்கள் கேள்வி கேட்டனர். பேராசிரியர் மிக மிக அமைதியிழந்துகொண்டிருந்தார். – நேரம் வீணாகிக் கொண்டிருக்கிறது. இந்த மனிதர் எல்லோரும் சென்றபிறகு என்று கூறியுள்ளார். பிறகு சாயங்காலம் வந்து விட்டது. இப்போது யாருமில்லை.

போராசிரியர் இப்போது, “இதுபோதும், நான் நாள் முழுவதும் காத்துக் கொண்டிருந்தேன். என்னுடைய கேள்வி என்னவாயிற்று?” எனக் கேட்டார்.
நிலவு வெளிவந்துகொண்டிருந்தது, அது ஒரு பௌணர்மி இரவு. குரு, “இன்னும் உனக்கு விடை கிடைக்கவில்லையா?” எனக் கேட்டார்.
பேராசிரியர், “ஆனால் நீங்கள் இன்னும் என் கேள்விக்கு பதிலளிக்க வில்லையே” எனக் கேட்டார்.

குரு சிரித்தார், “நான் பலரும் கேட்ட கேள்விக்கு முழு நாளும் விடையளித்துக் கொண்டிருந்தேன். நீ கவனித்திருந்தால் புரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் வா, நாம் தோட்டத்திற்கு போகலாம். தோட்டத்தில் முழு நிலவு உள்ளது. மற்றும் இது ஒரு அழகான இரவு,”. அங்கு குரு அவரை பார்த்து கூறினார். “இந்த மரத்தை பார், ஒரு மரம் ஓங்கி உயர்ந்து வளர்ந்துள்ளது, கிட்ட தட்ட நிலவை தொடும் அளவிற்கு வளர்ந்துள்ளது. நிலவு அதன் கிளைகளுடன் பின்னியுள்ளது. இந்த சிறிய குத்து செடிகளை பார்.”

ஆனால் பேராசிரியர், “நீங்கள் எதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் என்னுடைய கேள்வியை மறந்து விட்டீர்களா?” எனக் கேட்டார்.

குரு, “நான் உங்களுடைய கேள்விக்குதான் பதிலளித்து கொண்டிருக்கிறேன். என்னுடைய தோட்டத்தில் இந்த மரமும் இந்த குத்துசெடியும் வருடகணக்காக இருக்கின்றன. இந்த குத்துசெடி, இந்த மரத்தை பார்த்து நான் ஏன் உன்னைப் போல இல்லை என்றோ, இந்த மரம் இந்த குத்துசெடிகளை பார்த்து நான் ஏன் உன்னைப் போல இல்லை என்றோ கேட்டு நான் பார்த்ததில்லை. மரம் மரமாக இருக்கிறது. குத்துசெடி குத்துசெடியாக இருக்கிறது. அவை இரண்டும் அவைகளாக இருப்பதிலேயே மகிழ்ச்சியாக இருக்கின்றன.” எனக் கூறினார்.

நான் நானாக இருக்கிறேன், நீ நீயாக இருக்கிறாய். ஒப்பிடுதல் பிரிவினையை கொண்டுவருகிறது. ஒப்பிடுதல் குறிக்கோளை கொண்டு வருகிறது, ஒப்பிடுதல் நகல் தன்மையை கொண்டு வருகிறது. நான் ஏன் உங்களைப் போல இல்லை என நீ கேட்டால் பிறகு நீ என்னைப் போல இருக்க தொடங்குவாய். அது உனது முழு வாழ்க்கையையும் வாழாமல் இருப்பதாகும். நீ நகல்தன்மை உடையவனாகிறாய், ஒரு நகலாக ஆகிவிடுவாய். நீ நகல்தன்மை உடையவனாக ஆகும்போது நீ உன்மேல் உனக்கு இருக்கும் எல்லா சுயமரியாதையையும் இழந்துவிடுவாய்.
தன்னை மதிக்கும் ஒரு மனிதரை கண்டுபிடிப்பது மிகவும் அபூர்வம். ஏன் அது மிகவும் அபூர்வமாக உள்ளது ஏன் வாழ்வுக்கு மதிப்பு இல்லை – உன்னுடைய சொந்த வாழ்விற்க்கு மதிப்பு இல்லை உன்னுடைய சொந்த வாழ்க்கைக்கு நீயே மதிப்பளிக்கவில்லை எனில் மற்றவர்களுக்கு எப்படி மதிப்பு இருக்கும் உன்னுடைய சொந்த இருப்பை நீ மதிக்கவில்லை எனில் நீ எப்படி ரோஜா இதழை, பைன் மரத்தை, மற்றும் நிலவை, மக்களை மதிக்க முடியும்?

நீ எப்படி உன்னுடைய குருவை, தந்தையை, தாயை, நண்பரை, உனது மனைவியை, கணவரை மதிக்க முடியும்? நீ உன்னை மதிக்காதபோது, உனது குழந்தைகளை எப்படி மதிக்கமுடியும்?

தன்னை மதிக்கும் ஒரு மனிதரை காண்பது மிகவும் அபூர்வம்.
ஏன் அது மிகவும் அபூர்வமாக உள்ளது? – ஏனெனில் உனக்கு நகலாக இருக்க சொல்லிக் கொடுக்கப் பட்டுள்ளது – சிறு வயதிலிருந்தே ஏசுவைப் போல இரு அல்லது புத்தரைப் போல இரு என சொல்லிக் கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் ஏன் புத்தரைப் போல ஆக வேண்டும்? புத்தர் உன்னைப் போல ஆக வில்லை, புத்தர் புத்தராக இருந்தார். ஏசு ஏசுவாக இருந்தார். கிருஷ்ணர் கிருஷ்ணராக இருந்தார். நீ ஏன் கிருஷ்ணரைப் போல ஆக வேண்டும்? நீ என்ன தவறு செய்தாய்? நீ என்ன பாவம் செய்தாய்? நீ ஏன் கிருஷ்ணரைப் போல ஆக வேண்டும்? கடவுள் ஒருபோதும் இன்னொரு கிருஷ்ணரைப் படைக்கவில்லை. அவர் ஒருபோதும் இன்னொரு புத்தரைப் படைக்கவில்லை. இன்னொரு ஏசு - ஒருபோதும் இல்லை ஏனெனில் அவர் திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை படைக்க விரும்புவதில்லை. அவர் ஒரு படைப்பாளி. அவர் ஒரு வரிசைகிரமமாக படைப்பவர் அல்ல – ஒரு கார் வருகிறது, அதே கார் இன்னொன்று, இன்னொன்று என கார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. எல்லாம் ஒன்று போலவே வரிசைகிரமமாக வருகின்றன. கடவுள் வரிசைகிரமமாக படைப்பவர் அல்ல. அவர் உண்மையான படைப்பாளி. அவர் ஒருபோதும் அதே விஷயத்தை திரும்ப படைப்பதில்லை.

அதே விஷயம் மதிப்புடையதாக இருக்காது. நினைத்துப் பாருங்கள். ஒரு கிருஷ்ணர் திரும்பவும் நடக்கிறார். அதே விதமான மனிதன். அவர் ஒரு கோமாளியை போல தோற்றமளிப்பார். அவர் ஒரு சர்க்கசில் மட்டுமே இடம் பெறுவார். வேறு எங்குமல்ல, ஏனெனில் திரும்ப படைக்கப் பட்டவர். அவர் திரும்பவும் கீதையை கூறுவார் – அர்ச்சுனன் இருக்கிறானோ, இல்லையோ, மகாபாரத போர் நடக்கிறதோ இல்லையோ – ஆனால் அவர் கீதையை திரும்ப சொல்லியாக வேண்டும். அவர் அவருடைய ஆடைகளோடு நடப்பார். அது மிகவும் பொருத்தமற்று காட்சியளிக்கும்.

ஏசு உங்களிடையே இருந்தால், திரும்பவும் வந்தால் எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள். அவர் பொருந்த மாட்டார். அவர் காலாவதியானவராக இருப்பார். அவர் காட்சிப் பொருளாக இருப்பார். அவர் அருங்காட்சியகத்தில் மட்டுமே உபயோகமாக இருப்பார். வேறு எங்குமல்ல.

கடவுள் ஒருபோதும் ஒரு விஷயத்தை திரும்ப செய்வதில்லை. ஆனால் நீ எப்போதும் வேறொருவராக மாற கற்றுக் கொடுக்கப் படுகிறாய். வேறொருவராக மாறு, பக்கத்து வீட்டுப் பையனை போல மாறு எவ்வளவு புத்திசாலிதனமாக இருக்கிறான் அவன் என்று பார். அந்த பெண்ணை பார் எவ்வளவு அழகாக நடக்கிறாள்! அதுபோல இரு. நீ எப்போதும் மற்றவரை போல இருக்கவே கற்றுக் கொடுக்கப் படுகிறாய். நீ நீயாக இரு என யாரும் உனக்கு சொன்னதில்லை. உன்னுடைய இருப்பின் மேல் மரியாதை கொள். அது கடவுளின் பரிசு!

ஒருபோதும் நகலாகாதே. அதைத்தான் நான் உனக்கு சொல்கிறேன். ஒருபோதும் நகலாகாதே. நீ நீயாக இரு! அந்த அளவிற்கு கடவுளிடம் நீ கடன் பட்டிருக்கிறாய். நீ நீயாக இரு. நீ ஆணித்தரமாக நீயாக இரு. பிறகு நீ தனிச் சிறப்பு வாய்ந்தவன் என்பதை நீயே அறிவாய். கடவுள் உன்னை அளவுக்கதிகமாக நேசிக்கிறார். அதனால்தான் நீ இருக்கிறாய். அதனால்தான் நீ உருவாகி இருக்கிறாய். இல்லாவிடில் நீ உருவாகி இருக்க மாட்டாய். அவர் உன்னை மிகவும் நேசிக்கிறார் என்பதற்கு அடையாளம் அது.

ஆனால் உன்னுடைய தனிச்சிறப்பு மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்ப்பதனால் வருவதல்ல. நீ உன்னுடைய பக்கத்து வீட்டுக் காரர்களை விடவும், நண்பர்களை விடவும், உன்னுடைய மனைவி அல்லது கணவனை விடவும், சிறந்தவன் என்று பொருளல்ல. நீ தனிச்சிறப்பு கொண்டவன். ஏனெனில் நீ தனித்தன்மை கொண்டவன். ஏனெனில் நீ மட்டுமே இருக்கிறாய். உன்னைப் போல நீ மட்டுமே இருக்கிறாய். அந்த விதத்தில் அந்த புரிதலில் தனித்தன்மை கொண்டவனாக மாறும் முயற்சிகள் மறைந்து விடும்.

நீ தனிச்சிறப்பு கொண்டவனாக மாற மேற்கொள்ளும் உன்னுடைய முயற்சிகள் அனைத்தும் ஒரு பாம்பிற்கு கால் வைப்பதைப் போன்றது. நீ பாம்பை கொன்று விடுவாய். நீ நினைக்கிறாய், உன்னுடைய கருணையின் காரணமாக நீ பாம்பிற்கு கால்களை பொருத்துகிறாய். பாம்பு பாவம்! காலில்லாமல் அது எப்படி நடக்கும்? பாம்பு பூரானின் பார்வையில் விழுந்ததை போல! பூரான் பாம்பை பார்த்து கருணை கொள்கிறது. அது நினைக்கிறது. எனக்கு நூறு கால்கள் உள்ளன. பாம்பு பாவம் பாம்பிற்கு கால்களே இல்லை! அது எப்படி நடக்கும்? அதற்கு ஒரு சில கால்களாவது தேவை. பூரான் அறுவை சிகிச்சை செய்து ஒரு சில கால்கள் பாம்பிற்கு பொருத்தினால் பாம்பை அது கொன்றுவிடும். பாம்பு அது இருப்பதை போலவே நன்றாக இருக்கிறது. அதற்கு கால்கள் தேவை இல்லை.

நீ எப்படி இருக்கிறாயோ, அதுவே நல்லது. இதைத்தான் நான் தன்னுடைய இருப்பிற்கு தரும் மரியாதை என்று கூறுகிறேன். தனக்கு மரியாதை தருவது என்பது ஆணவத்தோடு எந்த சம்பந்தமும் இல்லாதது. நினைவில் கொள். தனக்கு மரியாதை செலுத்துவது சுய மரியாதை அல்ல. தனக்கு மரியாதை செலுத்துவது என்பது கடவுளுக்கு மரியாதை. அது படைத்தவனுக்கு மரியாதை செலுத்துவது. ஏனெனில் நீ ஒரு ஓவியம். ஓவியத்திற்கு மரியாதை செலுத்துவதன் மூலம் நீ ஓவியம் வரைந்தவருக்கு மரியாதை செலுத்துகிறாய்.

மரியாதை செலுத்து, ஏற்றுக் கொள்.! அடையாளம் கண்டு கொள்! இந்த முட்டாள் தனமான தனிச்சிறப்பு வாய்ந்தவனாக மாறும் முயற்சிகள் அனைத்தும் மறைந்து விடும்.

Source: I SAY UNTO YOU vol # 2 che # 4 Ques 4

ஆன்மீக வியாபாரம் - ஓஷோவின் கதை - 10

நிரந்தரத்திற்காக படும் இந்த ஆசை எப்படியும் ஆரோக்கியமானதல்ல. ஆனால் அது உள்ளது. எனவேதான் ஆன்மீக நிறுவனங்கள் – ஆம், நான் அவற்றை நிறுவனங்கள் என்றே அழைக்கிறேன். – கிறிஸ்துவ, இந்து, முகம்மதிய நிறுவனங்கள் நூற்றாணடுகளாக மிகப் பெரிய வியாபாரத்தை நடத்தி வந்திருக்கின்றன. இன்னும் செய்கின்றன....... அவர்களது வியாபாரத்திற்கு முடிவே கிடையாது, ஏனெனில் அவர்களது வியாபாரப் பொருள் பார்க்கக்கூடிய விஷயமல்ல என்பதுதான் ஒரே காரணம். அவர்கள் உங்களிடமிருந்து பார்க்கக்கூடிய பொருட்களை எடுத்துக் கொண்டு நீ நம்ப மட்டுமே கூடிய விஷயத்தை உனக்கு கொடுக்கின்றனர்.

எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு ராஜா முழு உலகத்தையே ஜெயித்துவிட்டான். ஆனாலும் அவன் அமைதியின்றி இருந்தான் – இப்போது, என்ன செய்வது உலகத்தையே ஜெயித்தபின் நிம்மதியாக ஓய்வாக இருக்கலாம் என அவன் நினைத்திருந்தான். தான் அமைதியின்றி இருப்போம் என அவன் ஒருபோதும் நினைத்ததே இல்லை. அவன் அமைதியின்றி இருந்ததே இல்லை. போரிடும்போது, தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கும்போது – ஏனெனில் எப்போதும் ஜெயிக்க வேண்டிய எதிரி, பிடிக்க வேண்டிய தேசம், போக வேண்டிய இடம் இருந்து கொண்டே இருந்தது – சிந்திக்க காலமோ, நேரமோ அவனுக்கு இருந்ததேயில்லை. அவன் எப்போதும் ஆக்ரமிக்கப் பட்டு இருந்தான். ஆனால் இப்போது அவன் இந்த முழு உலகத்தையும் ஜெயித்து விட்டான் – ஆனாலும் அமைதியின்றி இருக்கிறான் – என்ன செய்வது இப்போது.

ஒரு ஏமாற்றுக்காரன் இதைக் கேள்விப் பட்டான். அவன் அரணமனைக்கு வந்து, அமைதியின்றி இருப்பவர்களுக்காக தேவையான மருந்து என்னிடம் இருக்கிறது எனக் கூறி அரசனை சந்திக்க அனுமதி கேட்டான். உடனடியாக அவன் உள்ளே அழைத்துச் செல்லப் பட்டான். ஏனெனில் எல்லா மருத்துவர்களும் தோற்றுப் போய்விட்டனர். அரசனால் உட்கார முடியவில்லை, தூங்க முடியவில்லை, அமைதியின்றி கவலையோடு அலைந்துகொண்டே இருந்தான். அவன், “இனி என்ன செய்வது? வேறு ஏதாவது உலகம் இருக்கிறதா? கண்டுபிடியுங்கள், அதையும் நாம் ஜெயிப்போம்.” எனக் கேட்டான்.

இந்த ஏமாற்றுக்காரன் அரசவைக்கு வந்து, “கவலைப்படாதீர்கள் அரசே, இந்த உலகையே ஜெயித்த முதல் மனிதர் நீங்கள்தான் – கடவுள் தானே அணியும் ஆடைகளை பெற தகுதியுடையவர் தாங்கள்தான். என்னால் இதை பெற்றுத்தர முடியும்” என்றான்.

இது ஒரு சிறப்பான யோசனையாக இருந்தது. அரசன் உடனடியாக ஆர்வம் கொண்டான். அவன், “நீ இந்த வேலையை செய்ய ஆரம்பித்து விடு. கடவுளின் சொந்த ஆடைகள்......... அவை ஏற்கனவே இந்த பூமிக்கு வந்திருக்கின்றனவா?” எனக் கேட்டான்.

அந்த மனிதன், “இல்லை, ஏனெனில் அவைகளை பெறகூடிய தகுதியை யாரும் இதுவரை பெறவில்லை. நீங்கள்தான் முதல் மனிதர். அதனால் முதல்தடவையாக, சொர்க்கத்திலிருந்து நான் உங்களுக்காக அந்த உடைகளை தருவிக்கிறேன்.” என்றான்.
அரசன், “எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிடு....... எவ்வளவு செலவாகும்?” எனக் கேட்டான்.

அந்த மனிதன், “அவை விலைமதிப்பற்றவை. ஆனாலும் கோடிக்கணக்கான ரூபாய்கள் தேவைப்படும் – ஆனால் அதன் மதிப்பிற்கு முன் இந்த செலவு ஒன்றுமேயில்லை.” என்றான்.

அரசன், “கவலைப்படாதே. பணம் ஒரு பொருட்டல்ல. ஆனால் என்னை ஏமாற்ற முயற்சி செய்யக் கூடாது.” என்றான்.

அந்த மனிதன், “ஏமாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் அரண்மனையிலேயே தங்குவேன். நீங்கள் உங்கள் படையை அரண்மனையை சுற்றி நிறுத்தி வைத்து விடுங்கள். நான் இங்கேயேதான் வேலை செய்வேன். ஆனால் நான் உள்ளிருந்து தட்டும்வரை எனது அறை திறக்கப்படக் கூடாது. நீங்கள் அந்த அறையை வெளியே பூட்டிவிடலாம், அப்போதுதான் நான் தப்ப முடியாது என்று நீங்கள் திருப்தியோடு இருக்கலாம். ஆனால் நான் கேட்கும் பணத்தை நான் கூறும் நபர்களுக்கு நீங்கள் அனுப்பி விடவேண்டும். மூன்று வாரங்களுக்குள் இந்த வேலை முடிந்து விடும்.” என்று கூறினான்.

மூன்று வாரங்களுக்குள் அவன் கோடிக்கணக்கான ரூபாய்களை வாங்கி விட்டான். ஒவ்வொரு நாளும் ஒரு பெயர் – காலை, மாலை, மதியம், இரவு – உடனடியாக அவசரம்.

இந்த வேலை அப்படிப் பட்டது என்பதை அரசன் அறிவான். ... இந்த மனிதன் அரசனை ஏமாற்ற முடியாது. அவன் எங்கே போக முடியும்? ஏனெனில் அவன் உள்ளே பூட்டப் பட்டிருக்கிறான். உறுதியாக அவன் தப்பிப் போக முடியாது.

மூன்று வாரங்களுக்குப் பின் அவன் உள்ளிருந்து கதவை தட்டினான். கதவு திறக்கப் பட்டது. அவன் ஒரு அழகான மிகப் பெரிய பெட்டியுடன் உள்ளிருந்து வந்தான். அவன் உள்ளே போகும்போது, “நான் உங்களுக்காக தருவிக்கப் போகும் ஆடைகளுக்காக இந்த பெட்டியை உள்ளே என்னுடன் எடுத்துச் செல்கிறேன்.” எனக் கூறி அந்த பெட்டியை உள்ளே எடுத்துச் சென்றிருந்தான். ஏமாறாமல் இருப்பதற்க்காக அரசன் அந்த பெட்டியினுள் ஏதாவது ஆடை இருக்கிறதா எனப் பார்த்தான். இல்லை, அது காலியாக இருந்தது, அதில் ஏமாற்ற எதுவும் இல்லை. அந்த பெட்டி அவனிடம் கொடுக்கப் பட்டது.

இப்போது அந்த ஏமாற்றுக் காரன் வெளியே வந்து, “இந்த பெட்டி அனைவரின் – கற்றவர்கள், பண்டிதர்கள், அறிவாளிகள், ராணி, ராஜா, இளவரசன், இளவரசி – முன்னிலையிலும் திறக்கப்பட வேண்டும். இது ஒரு தனித்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகையால் அனைவரும் வர வேண்டும்.” என்றான்.

அந்த மனிதன் உண்மையிலேயே மிகவும் தைரியசாலி. ஏமாற்றுக் காரர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அவன் அரசரிடம், “அருகில் நெருங்கி வாருங்கள். நான் இந்தப் பெட்டியை திறக்கப் போகிறேன். உங்களுடைய தலைப்பாகையை கொடுங்கள். அதை நான் இந்த பெட்டியினுள் போட வேண்டும். இப்படித்தான் செய்ய வேண்டும் என எனக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. முதலில் உங்களுடைய இந்த தலைப்பாகையை உள்ளே போட்டு விட்டு, கடவுள் அளித்திருக்கும் தலைப்பாகையை வெளியே எடுத்து உங்களிடம் கொடுப்பேன். நீங்கள் அணிந்து கொள்ளலாம்.” என்றவன், ராஜசபையிடம் திரும்பி, “ஒரே ஒரு நிபந்தனை. இந்த உடைகள் தெய்வீகமானவை, அதனால் யார் தங்களது சொந்த தகப்பனுக்கு பிறந்தவர்களோ அவர்கள் கண்ணுக்கு மட்டுமே இந்த உடை தெரியும். யார் அப்படி இல்லையோ, அவர்கள் கண்களுக்குத் தெரியாது. இதில் நான் எதுவும் செய்ய முடியாது.” எனக் கூறினான்.

ஆனால் ஒவ்வொருவரும், “இதில் பிரச்னை எதுவும் இல்லை. நாங்கள் எங்கள் சொந்த தகப்பனாருக்கு பிறந்தவர்கள்தான்”. என்றனர்.

அரசரின் தலைப்பாகை உள்ளே சென்றது, ஏமாற்றுக்காரனின் வெறுமையான கை வெளியே வந்தது, அவன் அரசரிடம், “தலைப்பாகையின் அழகைப் பாருங்கள்” என்றான். அவனது கைகளில் ஏதுமில்லை. ஆனால் ராஜசபை முழுவதும் கைதட்டியது. ஒவ்வொருவரும் இதுபோன்ற அழகான ஒன்றை இதுவரை பார்த்ததேயில்லை என மற்றவரை மிஞ்சும் வண்ணம் சத்தமிட்டனர்.

இப்போது அரசன், நான் இவனது கைகளில் ஏதுமில்லை என்று சொன்னால் நான் மட்டுமே வேசி மகன் என ஆகி விடுவேன். இந்த வேசி மகன்கள் அனைவரும் தங்களது சொந்த தகப்பனாருக்கு பிறந்தவர்களாகி விடுவர். அதனால் பேசாமலிருப்பதே சிறந்தது என நினைத்தான். உண்மையில் இதுதான் ஒவ்வொருவரின் நிலையும். எல்லோரும் அந்த மனிதனின் கைகளில் ஏதுமில்லை எனக் கண்டனர். ஆனால் யார் இதை வெளியே சொல்வது? எல்லோரும் எதையோ பார்ப்பது போல நடிக்கும்போது யார் அங்கு ஒன்றுமில்லை என்பதை சொல்வது? ஒவ்வொருவரும், “நான் வேசி மகனாக இருக்கக்கூடுமோ, அதனால் பேசாமலிருப்பதே சிறந்தது. தேவையில்லாமல் ஏன் இவர்களால் இகழப் பட வேண்டும்?” என சந்தேகப் பட்டனர். அதனால் அவர்கள் அதனுடைய அழகைப் பற்றி அதிக சத்தமாக கூற ஆரம்பித்தனர்.

அரசன் இல்லாத தலைப்பாகையை தனது தலையில் அணிந்தான். ஆனால் தலைப்பாகை மட்டுமல்ல, மற்ற உடைகளும் மறைய ஆரம்பித்தன. கடைசியில் அவனது உள்ளாடை மட்டுமே எஞ்சியது. அரசன் ஒரு விநாடி, “என்ன செய்வது இப்போது” என யோசித்தான். ஆனால் காலம் கடந்து விட்டது. “தலைப்பாகையை பார்த்தாயிற்று, மேலாடையை பார்த்தாயிற்று, சட்டையை பார்த்தாயிற்று, பின் எப்படி உள்ளாடையை பார்க்க முடியாது இப்போது பார்க்கத்தான் வேண்டும். திரும்பி போக முடியாது. இந்த மனிதன்..........”

அந்த மனிதன் இல்லாத உள்ளாடையை அவனது கைகளில் ஏந்தி, எல்லோரிடமும் காட்டினான். “பாருங்கள், எத்தனை வைரங்கள் இந்த உள்ளாடையில் என்று பாருங்கள்”. என்றான்.

முழு அரசவையும் கைதட்டி பாராட்டி, “மனித வரலாற்றிலேயே இப்படி ஒரு அனுபவம் நிகழ்ந்ததேயில்லை.” என்றது.

அரசனின் உள்ளாடையும் உள்ளே சென்றது. ஆனால் அந்த ஏமாற்றுக்காரன் வித்தியாசமானவன். அவன், “நான் இதை பெறும்போது, கடவுள் என்னிடம், ‘இந்த உடைகள் முதன்முறையாக உலகத்திற்கு வருகின்றன, அதனால் அரசர் இந்த உடைகளை போட்டுக் கொண்ட பின் இந்த தலைநகரத்தை ஒருமுறை சுற்றி வரச் சொல்லி நான் சொன்னதாக அவரிடம் சொல். அப்போதுதான் எல்லா மக்களும் இந்த உடைகளை பார்க்க முடியும். இல்லாவிடில் ஏழை மக்களால் இந்த உடைகளை ஒருபோதும் பார்க்கவே முடியாது’ என கூற சொன்னார். அதனால் ரதம் தயாராக இருக்கிறது வாருங்கள்.” என்றான்.

இப்போது முடியாது என மறுப்பது சாத்தியமில்லை. அரசன் “இந்த விஷயத்தை தலைப்பாகையோடு நிறுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் – ஆனால் இப்போது காலம் கடந்துவிட்டது. நான் நிர்வாணமாக இருக்கிறேன் என்பதை நான் கூறினால்.....முழு அரசவையும் சிரிக்குமே.” என நினைத்தான்.

மற்றவர்கள், “ஆமாம், அரசே அதுதான் சரி. கடவுள் கூறியிருந்தால் அப்படியே நடந்தாக வேண்டும். அதுவே இந்த உடைகளுக்கு நாம் அளிக்கும் மிகச் சரியான வரவேற்பாகும்.” என்றனர்.

பாதை நெடுக மக்கள் கூட்டம் அலைமோதியது. கடவுளின் ஆடைகளை பற்றிய செய்தி நாடு முழுக்க பரவியிருந்தது. அரசன் சம்மதித்தான். அவன் நிர்வாணமாக தனது தேரில் ஏறி நின்றான். தேருக்கு முன் சென்ற இந்த மனிதன் எல்லோருக்கும் கேட்கும்படியாக, “இந்த கடவுளின் உடைகள் யார் தங்களது சொந்த தகப்பனாருக்கு பிறந்தவர்களோ அவர்களுக்கு மட்டுமே தெரியும்”. என அறிவித்தான்.

அதனால் பார்த்த அனைவரும் எதுவுமே கூறவில்லை. ஆனால் ஒரு சிறிய குழந்தை, தனது தந்தையின் தோளின் மீது அமர்ந்திருந்த அது, “அப்பா, அரசர் அம்மணமாக இருக்கிறார்” என்றது.

அந்த தந்தை, “முட்டாளே, வாயை மூடு நீ வளர்ந்த பிறகு உன்னால் அந்த உடைகளை பார்க்க முடியும். அதற்கு ஒருவிதமான பக்குவம் தேவைப் படுகிறது. உன்னைப் போன்ற குழந்தையால் அதைப் பார்க்க முடியாது. நீ அதை பார்க்க விரும்பினால் சும்மாயிரு. ஆரம்பத்திலிருந்தே உன்னை கூட்டிக் கொண்டு வருவதில் எனக்கு விருப்பமில்லை”. என்றார்.

ஆனால் அந்த குழந்தையால் சும்மாயிருக்க முடியவில்லை. திரும்ப திரும்ப அது, “நான் அவர் அம்மணமாக நிற்பதை தெளிவாக பார்த்தேன்”. என்றது. அந்த தந்தை அந்த குழந்தையுடன் கூட்டத்திலிருந்து விலகி சென்றார். ஏனெனில் அந்த குழந்தை சொல்வது மற்றவர்கள் காதில் விழுந்துவிட்டால் அந்த குழந்தை அவனுடையது அல்ல, வேறு யாருக்கோ பிறந்தது என அர்த்தமாகி விடுமே.

பார்க்க முடியாத பொருட்களை விற்பனை செய்யும்போது மிக சுலபமாக மக்களை ஏமாற்றலாம், அவர்களுக்கு எதிரான விஷயங்களை அவர்களையே செய்ய கட்டாயப் படுத்தலாம். – அதுதான் துறவறம்.

கடவுளின், உண்மையின், மோட்சத்தின், நிர்வாணாவின் பெயரால் போலி பூசாரிகளால் செய்யப் படுவது மனித தன்மையுடையதே அல்ல.

அவர்களது பெயர்கள் மாறுபடலாம். ஆனால் இந்த உலகத்தில் பூசார்கள்தான் மிகப் பெரிய ஏமாற்றுக்காரர்கள். மற்ற ஏமாற்றுக்காரர்கள் எல்லோரும் திருடர்கள், அவ்வளவுதான். அவர்கள் வேறு என்ன உன்னை ஏமாற்ற முடியும் ஆனால் பூசாரிகள், குறி சொல்பவர், மத போதகர், குருக்கள், தீர்த்தங்கரர்கள் – இவர்கள்தான் மிகப் பெரிய ஏமாற்றுக் காரர்கள்.

அவர்கள் இதுவரை யாரும் பார்த்திராத, யாரும் பார்க்கவே முடியாத விஷயங்களை விற்பனை செய்கின்றனர். இதுவரை பார்த்த சாட்சி ஒன்று கூட இல்லை.

மரணத்திலிருந்து திரும்பி வந்து யாரும், “ஆம், இது அழிவற்ற அழகு, அழிவற்ற சந்தோஷம், முடிவற்ற அமைதி, அழியாத மெளனம்”. எனக் கூறியதில்லை.

அந்த வியாபாரம் நடந்து கொண்டே இருக்கிறது. ஏனெனில் யாரும் இதுவரை அதற்கு மாற்றுக் கூறியதில்லை – நீ அதை மறுத்து கூறினால் நீதான் தவறானவன். ஏனெனில் இந்த முழு உலகமும் அதை நம்புகிறது.

Source : From Ignorance to Innocence Ch. #5


இம்மாதச் செய்திகள்

திருப்பூர் ஜோர்புத்தா தியான சங்கத்தில் தினசரி தியானங்கள் நடைபெறுகின்றன.
முழுநிலவு அன்று ஒரு புது சந்நியாசி பிறந்த கொண்டாட்டம் ஜோ.தி.ச.த்தில் நடந்தது.

No comments: