Friday, October 22, 2010

மலர் 2 இணைய இதழ் 9 11 ஏப்ரல் 2010

தலையங்கம்

அன்பர்களுக்கு வணக்கம்.

ஒரு நண்பர் என்னைப் பார்க்க வந்திருந்தார். பல மாதங்களாக என்னை சந்திக்க முயற்சிப்பதாகவும் என் இருப்பிடம் தெரியாமல் அலைக்கழிந்ததாகவும் கூறினார். ஓஷோவின் அன்பர் என்று கூறினார். ஓஷோ புத்தகங்கள் பலவும் படித்திருப்பதாகக் கூறினார். தியானம் செய்கிறீர்களா இப்போது என்றேன். பதிலில்லை. தினசரி எப்போது வேண்டுமானாலும் வந்து ஓஷோவின் தியானங்களை நீங்கள் இங்கு செய்யலாம். நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் செய்யலாம். நான் இருந்தாலும்கூட என்னை சந்திக்க வேண்டியதில்லை. நீங்கள் தியான ஹாலுக்கு சென்று உங்களுக்கு விருப்பமான தியானத்தை செய்துவிட்டு போகலாம் என்றேன். அதற்கும் ஒன்றும் பதிலில்லை.

மற்றொரு ஓஷோ நண்பர் பற்றியும், ஒரு இடத்தை அவர் உருவாக்கியிருப்பது பற்றியும் அங்கு ஒரு ஜே.கே அபிமானி வந்து தங்கிப் பேசுவார், சிறப்பாயிருக்கும் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். பிறகு சென்றுவிட்டார். சில நாள் கழித்து எனக்கு ஒரு போன் வந்தது. நான் அப்போது கோவையில் இருந்தேன். அவர்தான் பேசினார். எனது வீட்டில் அவர் இப்போது இருப்பதாகவும் தான் அந்த ஜே. கே அபிமானி எழுதிய ஒரு புத்தகத்தை கொண்டு வந்திருப்பதாகவும் அதைக் கொடுத்துவிட்டு போவதாகவும் கூறினார். அவர் இதை ஏன் கொண்டுவந்து என்னிடம் கொடுக்கிறார் என்று புரியாத குழப்பத்துடன் சரி என்று மட்டும் சொல்லி போனை வைத்து விட்டேன்.

பலநாள் கழித்து ஒருநாள் என் துணைவி என்னிடம் ஒரு புத்தகத்தை நீட்டினாள். ஒருநாள் உங்களை வந்து சந்தித்தவர், சிலநாள் கழித்து இதைக் கொண்டுவந்து கொடுத்தார், அவரே போன் செய்து உங்களிடமும் அப்போதே பேசியதால் நான் நீங்களே இந்த புத்தகத்தை பார்த்துக் கொள்வீர்கள் என விட்டுவிட்டேன். இன்று ஞாபகம் வந்தது. மறந்து விட்டீர்களே என எடுத்துக் கொடுக்கிறேன் என்றாள். நான் மறக்கவில்லை. வீடு திரும்பியவுடனேயே பார்த்தேன். புத்தகத்தின் தலைப்பு “தியானத்தை விடு. ஞானத்தை பெறு” என்று இருந்தது. சிரித்துவிட்டு விட்டுவிட்டேன்.

இப்போது தலையங்கம் எழுத வேண்டிய நேரம் அந்த புத்தகம் தட்டுப்பட்டது. அதனால் மறுபடியும் சிரித்துவிட்டு இதை எழுதுகிறேன்.

முதலில் இந்த புத்தகத்தை எழுதிய அந்த ஜே.கே. அபிமானி தியானத்தையே விடச் சொல்லும் இந்த நபர், மனதின் செயல்பாடாக உள்ள படிப்பது, அறிவு சேர்ப்பது, ஆராய்ச்சி செய்வது, கவர்ச்சியாக தலைப்பு வைத்து வியாபாரம் செய்வது என்ற அடிப்படையில் இந்த புத்தகத்தை சிரமப்பட்டு எழுதியுள்ளாரே, இவர் ஞானம் எப்படி பெறுவார் என்று சிரித்துவிட்டேன்.

புரிதல்தான் வேண்டும், தியானம் வேண்டாம் என்று இந்தப் புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார். ஆனால் புரிதல் என்ற சொல்லைப் படித்தால் என்ன புரிந்து கொள்ள முடியும்?. புரிதலுக்கு உன்னை தயார்படுத்திக் கொள்ளும் யுக்திகள்தான் தியானம் என்பது, தியானம் எதுவும் செய்து பார்க்காததால் அவருக்கு புரியவில்லை.

புரிதல் மூலமே ஞானம் பிறக்கிறது என்பதையே ஓஷோவும் வலியுறுத்துகிறார். ஆனால் புரிதல் என்றால் என்ன, புரிதலுக்கான சாத்தியத்திற்கு என்ன செய்வது என்று யோசித்துத்தான் தியானமுறைகளை ஓஷோ வகுத்தார்.

புரிந்துகொள் என்று ஜே.கே.யும் யு.ஜி. யும் வாயால் சொல்லிக் கொண்டே இருந்ததால்தான் அவர்கள் மூலம் புரிந்தவர் எவருமே உருவாகவில்லை என்று ஓஷோ தெளிவாகக் கூறுகிறார்.

பள்ளிக்கூடக் குழந்தைகளிலிருந்தே இன்று வெறும் வாய்ச்சொல் பயனற்றது. ஆகவே செயல்முறை கல்வி வேண்டும் என்று மாறிக் கொண்டிருக்கிறோம் நாம்.

ஞானம் ஆரோக்கியம் போன்றது. நோய் வந்தவனிடம் போய் மருந்து சாப்பிடுவதால் பயனில்லை. மருந்துக்கும் ஆரோக்கியத்துக்கும் சம்பந்தமில்லை. ஆரோக்கியமாய் இருப்பவன் மருந்து சாப்பிட மாட்டான். மருந்தால் ஆரோக்கியம் வராது என்று முழங்கும் ஆரோக்கியமானவனது பேச்சு பொய்யல்ல. ஆனால் அப்படிப் பேசுபவன் தன்னைப் பற்றி மட்டுமே பேசுகிறான். நோயுள்ளவன் நிலையை உணரும் சக்தி அவனிடமில்லை. அவன் வெறும் ஆரோக்கியமானவன் மட்டும்தான், ஒரு வைத்தியனாக இல்லை.

ஆனால் குரு என்பவர் ஒரு வைத்தியரைப் போல. அவர் தனது ஆரோக்கியத்தைப் பற்றி பேசுவதை விட அதிகமாக நோயுள்ளவனை ஆராய்ந்து நோயைத் தீர்க்க மருந்து தயாரித்துக் கொடுக்க முயல்கிறார். ஓஷோவைப் போல. இதை ஓஷோ பலமுறை பலவிதமாக விளக்கியிருக்கிறார்.

புரிதல் என்ற ஒரு முடிச்சு கூட போடாமல் வெறும் வாழ்தல், தனித்து வாழ்தல், வருவதை ஏற்று வாழ்தலே போதும் என்று லா வோட்ஸூ கூறுகிறார்.

ஆனால் வெறும் சொல்லை மட்டும் பிடித்துக்கொண்டு புரிதல், புரிதல் என்று சொல்லிக்கொண்டும், விளக்கிக் கொண்டும், விவரித்துக் கொண்டும், வார்த்தை ஜாலம் ஆடிக் கொண்டும் இருப்பதை விட தன்னுணர்வை அதிகரிக்கும் மருந்தைக் கொண்டு ஓஷோ எல்லோருக்கும் பயன்தருகிறார்.

ஓஷோ தியானத்தைப் பற்றி ஒரு இடத்தில் தியானம் என்பது மருந்து போலத்தான். நோய் தீர்ந்தவனுக்கு மருந்து தேவையில்லை. பின் அவன் வாழ்வே போதும் என்று தெளிவாகக் கூறுகிறார். ஆனால் அப்போதும் ஓஷோ வாழ்வைப் பேசுபவர்.

விழிப்புணர்வை உள்ளும் புறமும தன்னைக் குறித்தும் வெளிஉலகைக் குறித்தும் என இருபக்கமும் எரிந்து ஒளி வீசும் தீப்பந்தமாக வாழ்வை ஆழமாக, முழுமையாக, ஆபத்தாக, தன்னுணர்வை இழக்காமல், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என எல்லாப் பரிமாணங்களிலும் வாழச் சொல்கிறார்.

அப்போதுதான் புரிதல் நிகழும் சாத்தியம் இருக்கிறது.

புரிதல் மட்டுமே உண்மை. மற்ற அனைத்தும் வீண் என்று பேசிக் கொண்டிருப்பவருக்கு அது நிகழும் வாய்ப்பு மிகமிகக் குறைவு மட்டுமல்ல. வெறும் வாய்ப்பேச்சில் நின்றுவிடும் ஒருவருக்கு மன இயக்கமே அதிகம் இருக்கும். ஆகவே எதிர்பாராமல் இருப்பை சந்திக்கும் புரிதல்-கணம் வாய்த்தால்கூட நழுவவிடும் வாய்ப்பே அவருக்கு அதிகம்.

உதாரணத்திற்கு சர்க்கரையின் சுவை எப்படி இருக்கும் என்று கேட்டால் அதை சுவைத்துப்பார்த்தால்தான் தெரியும், அதைப் பற்றி பேசுவதோ, விளக்குவதோ, விவாதிப்பதோ பயனற்றது. சர்க்கரையை சுவைத்தவன் சுவைக்காதவனிடம் சொல்லும்போது அந்த சுவையை விளக்க முடியாது. நீ அறிந்த எதுவாகவும் அது இல்லை. அதை சுவைக்கும்போது ஒரு புரிதல் உனக்குள் நிகழும். பிறகு இந்த கேள்வி மறைந்துவிடும் என்று சொல்வதுபோலத்தான் ஜே.கே. கூறுகிறார். அது உண்மைதான். ஆனால் சுவைப்பது முக்கியம். சுவைக்கும்போதுதான் புரிதல் நிகழ முடியும்.
வாழ்வின் சுவையை பெற நமது விழிப்புணர்வை, தன்னுணர்வை, சக்தியை அதிகரித்துக்கொள்ளும் வழிதான் தியானம். ஆகவே தியானத்துக்கும் சத்தியத்துக்கும் தொடர்பு நேரடியாக இல்லை. ஆனால் இருக்கிறது.

ஓஷோ தியானம் பற்றி கூறும்போது அது வாழ்வோடு இரண்டறக் கலந்தது, 24 மணி நேரமும் செய்வது, ஏதோ ஒரு மணி நேரம் செய்துவிட்டு மறந்துவிடும் தியான யுக்திகள் தியானமல்ல, அவை அந்த சுவை பெற ஏற்படுத்தப்படும் சூழல்களே என்று கூறுகிறார். தியானம் செய்வது அல்ல, அது நிகழ்வது. தியானம் நடந்தால் அங்கு நீ இல்லை. நீ செய்தால் அங்கு தியானம் நிகழாது என்கிறார். ஆனால் அதற்காக தியான யுக்திகள் செய்வதை விட்டுவிடச் சொல்வதில்லை ஓஷோ. மாறாக செய்வதையெல்லாம் தியானமாக மாற்றும் வழியை கற்றுத்தருகிறார் ஓஷோ.

வெறும் வம்பளப்பும், வாய்ப்பேச்சும், தர்க்கமும், அகராதி பேசுதலும், மனதின் செயல்பாடுகளே அன்றி அதைக் கடந்து செல்லும் சுவையைத் தராது. ஜே.கே. மற்றும் யு.ஜி. பயனற்றுப் போனதன் காரணம் அவர்கள் வாழ்ந்த வழி மனம் கடந்த செயல்பாடாக இல்லாமல் போனதுதான்.

தியானயுக்தியே தேவையில்லை, வாழ்வதே போதும் என்று வாழ்ந்த லாவோட்ஸூ உரையாற்றவோ, உரையாடவோ இல்லை. வாழ்வோடு கணத்துக்கு கணம் கரைந்து விட்டவராகவே இருந்தார்.

பக்தியே போதும் என்று வாழ்ந்த மீரா, கபீர், குருநானக் போன்றவர்கள் பாடி மகிழ்ந்தனரேயன்றி வறட்டு விவாதத்தில் இறங்கவில்லை.
நான் யார் என்ற தேடலே போதும் என்ற ரமணர் அதுவே போதும் என்று வாய் மூடி மௌனியாகவே வாழ்ந்தார்.

தந்திராவை கடைபிடித்தவர்கள் தந்திரா வாழ்வையே வாழ்ந்தனர்.
எல்லா ஞானிகளின் எல்லா வழிகளையும் புதுப்பித்து புனரமைத்துக் கொடுத்த ஓஷோவும் உலகையே உலுக்கி எடுக்கும் புயல் போன்ற வாழ்க்கையையே கொண்டவர்.

ஆகவே வெறும் மனதின் விளையாட்டாக உள்ள வார்த்தை ஜாலத்தில் சிக்கி அதைத் தவிர எந்த ஒரு ஆழ்ந்த வாழ்வையும் தொடாமல் வாழ்வதற்கு பதிலாக ஏதோ ஒரு தியான யுக்தியை ஒரு மணி நேரம் செய்து மனம் கடந்த நிலையின் கண நேர தரிசனம் பெறுவோர் பல படிகள் முன்னே உள்ளவர்களே.

வெறும் வார்த்தை விளையாட்டு, விவாதம், தர்க்கம், அறிவுத்தேடல், கருத்துக்கள், கருத்துக்களுக்கு எதிரான கருத்து, இப்படி இருப்பது எந்த விதத்திலும் மனம் கடந்த அனுபவத்தை கொடுக்காது. மாறாக நுட்பமான ஈகோவையே வளர்க்கும்.

இவைகளுக்கு பதிலாக பாடு, ஆடு, உடலில் விளையாடு, சிற்பம் செதுக்கு, செடி வளர், வானத்தைப் பார், நதியில் நீந்து, மலையேறு, குழந்தையோடு விளையாடு, பெண்களை துரத்து, ஆண்களை கவரு. ஏதாவதொன்று, ஆனால் வாழு. வெறும் மனதின் செயல்பாடாய் உள்ள உணர்வற்ற விவாதமும், கருத்துக்களும் உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளவே உதவக்கூடும். ஆனால் வாழ்வாகாது.

ஆகவே வாழு. தியானத்தோடு வாழு. ஆம். விழிப்புணர்வோடு வாழு. இதுதான் வளரும் வழி.

அன்பு
சித்.


கவிதை

உன்னையே நீ நேசி

அருமை நண்பா
பாசம் அக்கறை இரக்கம் காதல்........
இவையெல்லாம் அன்பு கலந்த பண்புகளில் சில.
ஆனால்....பண்புகளை பழக்கப்படுத்திக் கொள்வது
போலித்தனம் நடிப்பு ஏமாற்றம்

இப்படித்தான்......
உன் பாசம் வெறும் வியாபாரமாகிவிட்டது,
உன் அக்கறை வெறும் அரசியலாகிவிட்டது,
உன் இரக்கம் வெறும் அகம்பாவமாகிவிட்டது,
உன் காதல் வெறும் காமமாகிவிட்டது.

என் இனிய நண்பனே,
இந்த நாடக உலகைவிட்டு வாழும் உலகுக்கு வா
அதற்கு வழி ஒன்றே
அது உன்னையே நீ நேசி
ஆம்.....உண்மை எப்போதும் உன்னிடமிருந்தே பிறக்கமுடியும்
அன்பு செய்யாதே...... அன்பில் நிறை
கோபமும் காமமும் கொப்பளிப்பதுபோல்
பொங்கி பூரிக்கும் உணர்ச்சி அன்பு
அந்த அனுபவத்தையே அழித்துவிட்டு நடிக்குது உலகம்.
அன்பை வேரிலேயே வெட்டிவிட்டு போலிக்கிளை பரப்பும் வேலை
செய்கிறது சமூகம்.

ஏன் தெரியுமா
அன்பெனும் அமிர்தத்தைக் குடித்தவன்....
சமுதாய லேபிளுக்குள் அடையமாட்டான்.
போலி அடையாளங்களின் பின் மறைய மாட்டான்.
ஆம்......உடலின்பங்கள் சிறைபடுத்தாவனாய்,
இறப்பின் பயம் மிரட்டமுடியாதவனாய்,
ஆகிவிடுகிறான் இந்தப் புரட்சிக்காரன்.

இவன் பேதங்களை பார்த்துச் சிரிக்கிறான்....
இந்தச் சிரிப்பு.....
சாதி மதம் இனம் கட்சி மொழி நாடு போன்ற பெயர்களில்.....
மக்களை பிரித்தாளும் சுயநலக் கும்பலுக்குக் கேடு,
அதனால்தான், அன்பை எதிர்க்குது நாடு.

என் நண்பா...
அன்பின் வேர்... உன்னை நீ நேசிப்பது,
இந்த அன்பின் வேர் உன்னுள் படர்ந்து உன்னை அறியட்டும்..
அப்போது உன்னையே நீ அறிவாய்..
அந்த அனுபவத்திலிருந்து பிறக்கும்.......
ஆயிரத்தெட்டு பண்புகள்,
அப்போது அவை போலி பிளாஸ்டிக் பூக்கள் அல்ல,
மணம் பரப்பும் மலர்கள்..
ஆகவே நண்பனே
நேசி, நேசி, உன்னையே நீ நேசி...

ஓஷோ வீடியோ

1. Osho : I am an Existentialist

2. Osho : Psychologists know nothing about Themselves

3. Osho : One World (Meditation Minutes)


இம்மாதம் மூன்று தியானமுறைகளை ஓஷோவின் விளக்கங்களோடு அளிக்கிறோம்.

1. மனதை நிறுத்துவதும் இயக்குவதும்.
மனம் பல எண்ணங்களாலும் பல வார்த்தைகளாலும் நிரம்பியிருக்கிறது. நீ எந்த கம்ப்யூட்டரை வேண்டுமானாலும் நிறுத்தலாம், இயங்கச் செய்யலாம். ஆனால் உனது மனத்தை நிறுத்தச் செய்ய உன்னால் முடியாது. அதற்கான பட்டன் இல்லை. கடவுள் இந்த உலகத்தை, மனிதனை, உருவாக்கும்போது மனத்தை நிறுத்துவதற்கான பட்டனை எங்கே வைத்தார் எனற விவரமே இல்லை. அதனால் மனத்தின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. அதற்கான சுவிட்சு இல்லை. அதனால் பிறப்பிலிருந்து இறப்பு வரை அது ஓடிக் கொண்டே இருக்கிறது.

இந்த தொணதொணப்புக்கு காரணம் நமது கல்வி முறைதான். அது அடிப்படையிலேயே தவறானது. ஏனெனில் அது எப்படி மனதை உபயோகிப்பது என்று ஒரு பாதியை மட்டுமே சொல்லித் தருகிறது – அதை ஓய்வெடுக்க கூடியதாக நிறுத்துவது எப்படி என்பதை கற்றுக் கொடுப்பதில்லை. ஏனெனில் அது நீ தூங்கும்போதும் தொடர்ந்து செயல் பட்டுக் கொண்டே இருக்கிறது. அதற்கு தூங்கத் தெரிவதில்லை. எழுபது வருடங்கள் அல்லது எண்பது வருடங்கள் அது தொடர்ந்து செயல் படுகிறது.

நம்மால் அதையும் சொல்லிக் கொடுக்க முடிந்தால்...... அது சாத்தியம்தான். இதைதான் நான் உங்களிடம் வற்புறுத்த விரும்புகிறேன். நாம் அதை தியானம் என அழைக்கிறோம். மனது தேவைப்படாத போது அதை நிறுத்தும் ஒரு பட்டனை உருவாக்க முடியும். அது இரண்டு வழிகளில் உதவும். நீ இதுவரை அறிந்திராத ஒருவிதமான அமைதியை, ஒருவிதமான மௌனத்தை அது உனக்கு கொடுக்கும். உன்னைப் பற்றிய ஒரு அறிமுகத்தை உனக்கு கொடுக்கும். எப்போதும் தொணதொணத்துக் கொண்டிருக்கும் மனதினால் அந்த அறிமுகம் கிடைக்காமல் இருக்கிறது. அது உன்னை எப்போதும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது.

இரண்டாவதாக இந்த தியானம் மனதுக்கு ஓய்வை கொடுக்கும். மனதுக்கு ஓய்வை கொடுக்கும்போது அது விஷயங்களை மேலும் அதிக திறமையோடும், அதிக புத்திசாலித்தனத்தோடும் செய்யும் வலிமை பெறும்.

ஆக இரு விதமாகவும் நீ – மனதின் விதமாகவும் இருப்பின் விதமாகவும் – பயன் பெறுவாய். எப்படி மனதின் இயக்கத்தை நிறுத்துவது, எப்படி அதனிடம், போதும். நான் விழித்துக் கொண்டிருக்கிறேன். நான் பார்த்துக் கொள்கிறேன். கவலைப்படாதே. நீ ஓய்வெடுத்துக் கொள். என்று கூறுவது எனக் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.
தேவைப்படும்போது மட்டும் மனதை உபயோகப் படுத்து. பின் அது எப்போதும் இளமையாகவும், புதிதாகவும், மிகவும் சக்தியோடும், ,புத்துணர்வோடும் இருக்கும். பின் நீ சொல்வது எதுவும் வற்றிப் போனதாக இராது. அதில் உண்மையும் நேர்மையும் இருக்கும், அது ஆணித்தரமானதாக, ஆழ்ந்த பொருள் கொண்டதாக இருக்கும். அதனுள் வாழ்விருக்கும். நீ அதே வார்த்தைகளை உபயோகிக்கலாம், ஆனால் ஓய்வெடுத்ததன் மூலமாக மனம் மிகவும் சக்தி பெற்றிருப்பதால் ஒவ்வொரு வார்த்தையும் நெருப்பு போல மிகவும் வீரியமாக வெளி வரும்.

தேஜஸ் என்பது சக்தி சேகரித்துக்கொள்வது. எந்த மனது ஓய்வெடுத்து சக்தியை சேகரித்து கொள்கிறதோ அதற்கு இந்த உலகில் தேஜஸ் கிடைக்கிறது. அப்போது அது பேசும்போது அது கவிதையாகிறது, அது போதனையாகிறது. அது சொல்லும் விஷயங்களுக்கு எந்த ஆதாரமும் தர்க்கமும் தர தேவையில்லை. மக்களுக்கு புரிய அதன் சக்தி மட்டுமே போதும். மக்களால் அது இதுதான் எனக் குறிப்பிட்டு சொல்ல முடியாவிட்டாலும் இது ஏதோ ஒன்று என்று அவர்களுக்கு புரிந்திருக்கிறது. அதைதான் அவர்கள் தேஜஸ் என்றழைகின்றனர்.

முதன் முறையாக நான் தேஜஸ் என்றால் என்ன என்று உங்களிடம் கூறியிருக்கிறேன். நான் இதை அனுபவத்தின் வாயிலாக உணர்ந்திருக்கிறேன். இரவும் பகலும் வேலை செய்துகொண்டே இருக்கும் மனது வலிமையற்றதாக, சோர்வாக, இழுபறியோடுதான் இருக்கமுடியும். அது பயன்படும். அவ்வளவுதான். நீ காய்கறி வாங்கப் போகலாம். –அது பயனுள்ளதாக இருக்கும். அதற்குமேல் அதற்கு சக்தி இருக்காது. அதனால் கோடிக்கணக்கான மக்கள் ஆணித்தரமின்றி, தேஜஸ் வலிமையின்றி, சொல்லாற்றல் இன்றி இருக்கிறார்கள்.

மனதை மௌனத்தில் வைத்து அது தேவைப்படும்போது மட்டும் உபயோகப்படுத்த முடிந்தால் – அது சாத்தியம்தான் - அப்போது அது வீரியத்தோடு வெளிப்படும். அது மிக அதிக சக்தியை பெற்றிருப்பதால் அதன் வார்த்தைகள் இதயத்தை ஊடுருவும். தேஜஸ் பெற்றவர்கள் மற்றவர்களை மனோவசியம் செய்து விடுவதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படியல்ல. அவர்கள் வசியம் செய்வதில்லை. அவர்கள் மிகவும் புத்துணர்வோடும், இளமையோடும் இருப்பதால் அப்படி நிகழ்கிறது. இது மனதிற்கு நிகழ்வது.

இருப்பில் இந்த அமைதி ஒரு அழிவற்றதை, ஒரு நிலையான பிரபஞ்சத்தை நீ ஒரு வரமாக நினைக்கும் ஒரு விஷயத்தை உன்னுள் திறக்கிறது. அதனால் தியானம்தான் மிகத்தேவையான மதம், ஒரே மதம் என்று நான் வலியுறுத்துகிறேன். வேறு எதுவும் தேவையில்லை. மற்ற எல்லாமே தேவையற்ற சடங்குகள்தான்.

தியானம் தான் அடிப்படை, மிக அடிப்படையானது.

தியானம் உன் உள்ளிருப்பின் உலகத்தில் மிகவும் வளமையை உருவாக்கித் தரும். அதோடு உன்னுடைய திறன்களை உன்னுடைய மனதின் மூலமாக வெளிப்படுத்தும் சக்தியை பெற்றுத் தரும்.

ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட விதமான திறனுடன்தான் பிறக்கிறார்கள். அவன் தனது திறனை முழுமையாக வாழ்ந்தால் தவிர அவனுள் ஏதோ ஒன்று குறையாகவே இருக்கும். ஏதோ ஒன்று.

மனதுக்கு ஓய்வு கொடு. அதற்கு அது தேவை. அது மிகவும் எளிது. அதற்கு ஒரு சாட்சியாக இரு. அது உனக்கு பல விஷயங்களை கொடுக்கும்.

மெதுமெதுவாக மனம் மௌனமாக இருக்க கற்றுக் கொள்ளும். ஒருமுறை அமைதியாக இருக்க அது கற்றுக் கொண்டு விட்டால் பின் அது மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். பின் அதன் வார்த்தைகள் வார்த்தைகள் அல்ல. முன் எப்போதும் இல்லாத ஒரு தன்மை அதில் இருக்கும். அது சரியானதாகவும் வளமானதாகவும் இருக்கும். அவை ஒரு அம்பு போல துளைத்துக் கொண்டு போகும். அது எல்லா தடைகளையும் கடந்து இதயத்தை சென்றடையும்.

பின் மனமானது மௌனத்தின் மூலம் அளப்பரிய ஆற்றல் பெற்ற ஒரு வேலையாள் ஆகும்.
பின் இருப்பு முதலாளியாகும். பின் அதற்கு தேவைப்படும்போது மனதை உபயோகிக்கவும், தேவைப்படாத போது மனதின் இயக்கத்தை நிறுத்தி வைக்கவும் முடியும்.


2. உன்னுடைய மனதின் நிலையை மாற்றுதல்

காதில் போடப்படும் துளைகள் மிக முக்கியமான அங்குபஞ்சர் நிலைகளாகும். அவை நினைவாற்றலோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையவை. காது குத்தப்படும்போது ஏற்படும் சக்தியாற்றல் ஒரு மின்னலைப் போல இருக்கும். உண்மையில் காது குத்துவது சில மனதின் தடுமாற்றங்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகும். சீனாவில் இது ஒன்றுதான் மனது நிலைமாற்றங்களுக்கு சிகிச்சையாகும். இந்த துளை போடுவதன் மூலம் தேவையற்ற தடைகளை நீக்கி சக்தி மூளைக்கு நேரடியாக பாய உதவும். இது நினைவாற்றலை அதிகப் படுத்த மிகமுக்கியமான கருவியாகும்.

இது இந்தியாவில் ஒரு சடங்காகும். காது குத்துவதன் மூலம் வாழ்வின் சக்தியில் அடிப்படையான ஒரு மாறுதல் நிகழும். காது குத்துவது என்பது குழந்தைகளுக்கு இன்றியமையாதது. பிறந்த சில நாட்கள் கழித்து காது குத்துவது என்பது சம்பிரதாயமாக உருவாகி உள்ளது. என்று ஓஷோ கூறுகிறார்.

யுக்தி

செய்யும் நேரம்- நீ மிகவும் டல்லாக, கவலையாக, கோபமாக, சோகமாக இருக்கும்போது.

செய்முறை - (உன் காதுகளை குத்திக் கொள். சும்மா விளையாட்டுக்கு)
உன் காதுநுனியை பிடித்துக் கொள், அவற்றை கடினமாக அழுத்து. அப்போது உன் மனதின் நிலையில் ஒரு வித்தியாசத்தை காண்பாய்.


3. மூளையை சமன்படுத்துதல்.

எனது தலையின் இடது வலது பாகங்களில் வேறுவேறு விதமான உணர்வுகளை உணர்கிறேன். சமன் படுத்திக்கொள்ள என்ன செய்வது.

செய்யும் காலம் – ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் வீதம் 15 நாட்கள்.

முதல் படி – அமைதியாக அமர்ந்துகொண்டு 4 அல்லது 5 நிமிடங்களுக்கு உனது கண்களை நீயே அழுத்து. நீ கண்ணை அழுத்தும்போது கண்ணுக்குள் வெளிச்சம் தெரியும். அதுவரை அழுத்து. உனது கண்களை மிகவும் கஷ்டப்படுத்தாதே. சிறிதளவே போதுமானது. அந்த வெளிச்சத்தை பார்த்துக் கொண்டே இரு. இது பல விஷயங்களை சமன்படுத்தும்.

இரண்டாவது படி – இப்போது 5 நிமிடங்களுக்கு தளர்வாக இரு.

மூன்றாவது படி – திரும்பவும் அழுத்து.

உனது இரண்டு மூளைகளும் தனித்தனியாக செயல்படுகின்றன. ஒவ்வொருவருடைய மூளையும் அப்படித்தான். ஆனால் தியானம் உன்னை ஆழமாக தாக்கும்போது இந்த வேறுபடுதலும், வித்தியாசங்களும் காணாமல் போய் விடும். இந்த பயிற்சி உன்னுடைய மூளையில் பல விஷயங்களை சமன்படுத்தும். நீ மிகவும் அமைதியாகவும் ஒருமுகப்பட்டதாகவும் உணர்வாய்.


அறிவுரைக்கான தகுதி - ஓஷோவின் கதை 21

ஒரு பெண் தனது குழந்தையினால் மிகவும் தொந்தரவுக்குள்ளானாள். அவளுக்கு ஒரே ஒரு குழந்தை. அவளது கணவன் இறந்துவிட்டான். அவள் பெரும் பணக்காரிதான். ஆனால் அவளுக்கு வாழ்வில் மிகவும் சலிப்பாகிவிட்டது. அவள் தனது குழந்தைக்காகத்தான் வாழ்ந்தாள். சில சந்தர்ப்பங்களில் குழந்தைகள் மிகவும் தொந்தரவாகி விடுவர். அந்த பையன் இனிப்பைத் தவிர வேறு எதுவும் சாப்பிடுவதில்லை. டாக்டர்கள் இது மிகவும் தவறான பழக்கம். அவனது உடல்நிலை கெட்டுவிடும் எனக் கூறி விட்டனர். ஆனால் அந்த குழந்தை கேட்பதேயில்லை.

அவள் ஒரு சூஃபி ஞானியிடம் எப்போதும் செல்வாள். அதனால் அவள், இவன் நான் சொல்வதை கேட்பதேயில்லை. அவர் அவருக்கு அருகில் வரும் அனைத்து மக்களையும் ஈர்க்கும் சக்தியுடையவராக இருக்கிறார். அதனால் இவன் அவர் சொன்னால் கேட்கக் கூடும். என்று நினைத்தாள்.

அதனால் அவள் அந்த குழந்தையை அந்த ஞானியிடம் கூட்டி சென்று, இவன் இனிப்பைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதேயில்லை. நானும் ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். கேட்க மாட்டேன் என்கிறான். அதற்கு பதிலாக பட்டினி கூட கிடக்கிறான். டாக்டர்கள் உடல்நிலை கெட்டுவிடும் என்கிறார்கள். அவன் யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறான். எனது கணவர் இறந்துவிட்டார். இவன் எனது ஒரே குழந்தை இவனுக்காகத்தான் இருக்கிறேன். என்னால் இவன் பசியாக இருப்பதை பார்க்க முடியாது, அதனால் இவனுக்கு இனிப்பு கொடுக்க வேண்டி வருகிறது. இனிப்பு இவனுக்கு விஷம் என்று தெரிந்தே கொடுக்க வேண்டி வருகிறது. சர்க்கரை வெள்ளை விஷம். அதனால் நான் இவனை இங்கே கூட்டி வந்தேன். இவனுக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள். நீங்கள் மனிதரில் தெய்வம். நீங்கள் கூறும் வார்த்தைகளுக்கு பலன் இருக்கக் கூடும்.

அந்த ஞானி குழந்தையை பார்த்தார். அவர், என்னால் இந்த குழந்தைக்கு இப்போது அறிவுரை கூற முடியாது. ஏனெனில் இப்போது நானே இனிப்பை மிகவும் விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னும் இரண்டு வாரங்கள் கழித்து வாருங்கள். அதற்குள் இந்த இரண்டு வாரங்களும் நான் இனிப்பு சாப்பிடாமல் இருக்கிறேன். இதை என்னால் செய்ய முடிந்தால் பிறகு என்னால் அறிவுரை கூற முடியும். இல்லாவிடில் இந்த அறிவுரை கூற சரியான ஆள் நானல்ல. என்றார்.

அந்த பெண்மணியால் நம்பவே முடிய வில்லை. இது இன்னும் அபாயகரமானது. ஆனால் அந்த குழந்தை மிகவும் ஈர்ப்படைந்தான். அவன் அந்த ஞானியின் காலில் விழுந்தான். அவன், என் அம்மா பல பேரிடம் என்னை அழைத்து சென்றிருக்கிறாள். அத்தனை பேரும் உடனே எனக்கு அறிவுரை கூறினார். ஆனால் நேர்மையான முதல் ஆள் நீங்கள்தான். இரண்டு வாரங்கள் கழித்து வருகிறேன். நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன். நான் உங்களை நம்புகிறேன். என்று கூறினான்.

குழந்தையின் முன் தனது தவறை ஒத்துக் கொண்ட ஒரு வளர்ந்த மனிதன், நானே இப்போது இனிப்பு விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். அதனால் இப்போது அறிவுரை கூறும் இடத்தில் நான் இல்லை. அதனால் இரண்டு வாரங்களில் இந்த அறிவுரையை நானே கடைபிடித்து பார்க்கிறேன். நான் தோற்றுவிட்டால், என்னை மன்னித்துவிடு. என்னால் அறிவுரை கூற முடியாது. நான் வென்றுவிட்டால் அப்போது அறிவுரை கூறுவேன். ஒரு வயதான மனிதன் நானே வென்றுவிடும்போது உனக்கு இள வயது, அதிக ஆற்றலுடன், அதிக புத்திசாலித்தனமாக இருக்கிறாய். உன்னாலும் வெற்றியடைய முடியும். அதனால் ஒரு முயற்சி செய்து பார் என்று கூற முடியும். என்றார்.

அந்த தாய் மிகவும் அதிர்ச்சியடைந்தாள். அந்த ஞானி கூறிய இரண்டு வாரங்களில் அவரால் அதை கடைபிடிக்க முடியாவிட்டால் எல்லாமும் முடிந்தது. பின் அந்த குழந்தையை கூட்டிச் செல்ல வேறு எந்த இடமும் இல்லை.

இரண்டு வாரங்கள் சென்றபின் அவர்கள் திரும்பி வந்தனர். ஞானி அந்த குழந்தையிடம், மகனே, அது கடினம்தான். ஆனால் இயலாதது அல்ல. இந்த இரண்டு வாரங்களும் இனிப்பு சாப்பிடாமல் என்னால் சமாளிக்க முடிந்தது. நான் இனி என் வாழ்வு முழுவதும் இனிப்பு சாப்பிடப் போவதேயில்லை என உனக்கு உறுதியளிக்கிறேன். அப்போது உனக்கு அறிவுரை கூற தகுதி இருக்கிறது என நீ நினைக்கிறாயா – எனக்கு நீ அனுமதியளித்தால் என்னால் உனக்கு அறிவுரை கூற முடியும். எனக் கேட்டார்.

அந்த பையன், எதுவும் கூற வேண்டிய தேவையில்லை. எனக்கு புரிந்துவிட்டது. உங்களுக்கு எனது நன்றிகள். உங்களை போன்ற ஒருவர் எனக்கு அறிவுரை கூறுவதற்காக தனது வாழ்நாள் பூராவும் இனிப்பு சாப்பிடாமல் இருப்பது- தானே அப்படி இருப்பது - நம்பிக்கையுணர்வு வைக்க தகுதியானதே. நான் உங்கள் மேல் நம்பிக்கையுணர்வு கொண்டிருக்கிறேன். இந்த வினாடியிலிருந்து இனிமேல் நானும் இனிப்பு சாப்பிடப் போவதில்லை என உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்றான்.

THE GREAT ZEN MASTER TA HUI - CHA # 4

No comments: