Friday, October 22, 2010

மலர் 2 இணைய இதழ் 11 11 ஜூன் 2010

தலையங்கம்

அன்பு நண்பர்களே,

வழக்கம் போல் இந்த ஆண்டும் இமயமலைக்குச் சென்றிருந்தேன். ரூப்குண்ட் ஏரி – 5050 மீட்டர் உயரத்தில் உள்ளது – நோக்கி இந்தமுறை நடைப்பயணம்.

எப்போதும் போல் எங்கும் நிறைந்த நிசப்தம், இறுகி உறைந்திருக்கும் சக்தி மண்டலம், இயற்கையின் லீலையாய் பூக்களும், மரங்களும். தூய்மையை இழக்க மாட்டேன் என்று உயரத்தை விட்டு இறங்கி உருக மறுக்கும் பனி, இம்முறை பனிப்புயலில் சிக்கிய அனுபவம், என்று பலவும் இருந்தன.

இதில் ஒருநாள் பனியை – மணல் போல இருக்கும் – உறையை கழட்டி விட்டு என் வெறும் கைகளால் எடுத்தேன். சிறிது கூட சில்லிப்பு இல்லை. மறுபடியும் எடுத்தேன். சிறிதுகூட சில்லிப்பு இல்லாமல் இருக்கிறது, பாருங்கள் என்று சொல்லியபடியே பனியை அருகிருந்த நண்பரிடம் கொடுத்தேன். அவர் ஆ என்றபடி கீழே போட்டு விட்டார். பிறகு தான் எனக்குத் தெரிந்தது, என் உள்ளங்கை உறைந்துபோய் இருக்கிறது, உணர்விழந்திருக்கிறது என்று.

என் உள்ளங்கைக்கு உணர்வில்லை என்பதை செயல் மற்றும் அதன் விளைவு மூலம் என்னால் – என் மனதால் – தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் முதலிலேயே உணர முடியவில்லை. இப்படி தெரிந்து கொள்ள முடிந்ததற்கு காரணம் கூட முழு உடலும் உணர்விழக்காமல், உடலில் இருந்து என்னால் செயல்பட முடிந்ததுதான்.

என் முழு உடலும் உணர்விழந்து விட்டால், நான் இறந்துவிட்டால், என் மனம் அல்லது நான் அதை உணர்வேனா என்றால், அப்படி இல்லை. வலியை நம்மால் உணர முடியும். ஆனால் இறந்துவிட்டதை உணரமுடியாது.

ஏனெனில் மனதால் தெரிந்து கொள்ளதான் முடியும், புரிந்து கொள்ளத்தான் முடியும், அறிந்து கொள்ளத்தான் முடியும், ஆனால் உணர முடியாது, வாழ முடியாது.

அப்போது நான் இறந்தபின், என் முழு உடலும் உணர்விழந்தபின், என் எண்ண ஓட்டம் நின்று விடுமா, இல்லை, மாறிவிடுமா, இல்லை, புரிந்துகொண்டுவிடுமா, அதற்கும் வாய்ப்பில்லை, ஏனெனில் மனம் புரிந்துகொள்ள ஒரு உடலின் நிகழ்வு வேண்டும். அது சுத்தமாக அங்கு இல்லை.

ஆக, உடல் இறந்தபின்னும், மனம் தொடர்ந்து உடலோடு கூடிய எண்ணங்களின் படியே தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும். வேறு ஏதாவது ஒரு புது உடல் உருவாகையில் அது இதற்கு ஒரளவு பொருத்தமானது எனும்போது அதற்குள் நுழைவது இயற்கையாகவே நடக்கிறது. பிறகு அந்த உடல் கருப்பையில், வளர்ந்து, மண்ணில் பிறந்து, உடலின் செய்கைகள் துவங்கையில் சிறிது சிறிதாக அந்த ஓட்டம் பின்புலத்தில் தேய்ந்து மறைகிறது. அப்போதும் இப்போதைய உலகத்தை சந்திக்கும் ஒரு அடிப்படை அணுகுமுறை பழைய பதிப்பிலிருந்தே தொடர்கிறது. இதைத்தான் நாம் மறுபிறவி என்கிறோம்.

இப்படி தொடர்வதில் பெரும்பாலோர் அல்லது சமுதாயக்கூட்டு மனத்தின் பகுதியாக வாழ்ந்து இறப்பவர்கள் எந்த ஒரு குறிப்பிட்ட தொடர்ச்சியும் பெறுவதில்லை. அவர்கள் ஒரு கூட்டமாகவே பிறந்து, இறந்து, திரும்ப அதே கூட்டத்தில் பிறந்து என்பதோடு முடிந்தது. அவர்கள் இவ்வுலகில் இருக்கும்போதே தனிமனிதர்களாக இருப்பதில்லை. எனவே மறுபிறவி பிரச்னையே அங்கு இல்லை.

ஏதோ ஒரு விதத்தில் தனிமனிதர்களாக உருவெடுப்பவர்கள் இந்த மறுபிறவி சுழலில் சிக்குவர். இங்கு நான் மறுபிறவி என்று குறிக்கையில் அது மனதின் வலிவடைந்த எண்ண ஓட்டத்தின், எண்ண சுழலின் ஒரு தொடர்ச்சி என்பதையே குறிப்பிடுகிறேன். வாழ்வின் ஒரு சில சந்தர்ப்பங்களில் ஏற்படும் உணர்வுத் தேக்கம், உணர்ச்சிப் பெட்டகமாக, சக்தி முடிச்சாக தேங்கிவிடுகிறது மூளையில். இவையே இந்த மனம் என்னும் எண்ணச் சுழலுக்கு சக்தியாக செயல்படுகிறது. நான் என்ற சக்திமுடிச்சைச் சுற்றி நாம் ஆயிரம் முடிச்சுகளைப் போட்டுக் கொண்டே போகிறோம். இதனால்தான் மனம் என்ற எண்ணச் சுழல் பெரிதாகிக் கொண்டே போகிறது.

சரி, நான் சொல்ல வந்தது என்னவென்றால் இறக்கும்போது மனதை விடுவது இயலாது என்பதே. உடல் இருக்கும்போதே, புதிது புதிதாய் உணர முடியும்போதே, அந்த இயற்கை ஓட்டத்தில் நம்மைக் கரைத்துக் கொண்டு மனதை விடுவதே சாத்தியமே தவிர, உணர்வற்ற நிலையில் மனதை விட முடியாது. உண்மையில் அப்போது மனம் இடையூறு இல்லாமல், இடைவெளி இல்லா சினிமாவாய் ஓடிக் கொண்டே தான் இருக்கும். அது மட்டுமல்ல, அதற்கு உண்மையை, நிதர்சனத்தை உணரும் சக்தியில்லை.

மேலும் இறப்பதற்கு முன்பே நமது உடல் இறந்து கொண்டிருக்கிறது என்ற எண்ண ஓட்டம் ஏற்பட்டு, அதை சிறிது சிறிதாக தெரிந்து கொள்ள ஆரம்பிப்பதால், உடல் முழுதாய் இறந்தபின்பு மனம் தனது கனவு ஓட்டத்தில், தூக்கத்தில் நுழைவதுபோல நுழைகிறது. அப்படியில்லாமல் திடீரென உடல் இறந்தால், மனம் தொடர்ந்து உடல் இருப்பது போலவே எண்ணிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். விபத்துக்களில் இப்படி நடக்கலாம்.

இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால், மனதை விடுவது எவ்வளவு கடினம், நமது இருப்பு நிலையை உணர எந்த அளவு மனம், உடல் இறந்தபின்னும்கூட தடையாக இருக்கிறது என்று விளக்கத்தான்.

ஆகவே உடல் இருக்கும்போது நடக்கும் சக்தி ஓட்டத்தைப் பயன்படுத்தி மனதை கடந்து இருப்பு நிலை பெறுவோம். அதற்கு தன்னுணர்வு வளர்ப்போம். அதற்கு உதவ தியான முறைகளைப் பயன்படுத்திக் கொள்வோம்.

எப்போதும் தன்னை நேசிப்போம், தன்னை உணர்வோம், தன்னை மதிப்போம், தன்னை அறிவோம், தன்னை பகுத்தாய்வோம், தன்னை ரசிப்போம், தன்னைப் பார்த்து ஆச்சரியமடைவோம், தனக்கு உதவிக் கொள்வோம், தன்னில் அக்கறை கொள்வோம், தன்னை பகிர்ந்து கொள்வோம், தன்னலம் பேணுவோம்.

தன்னை உணர்ந்தவனால் இயற்கை செழிக்கும், எல்லோருக்கும் பயன் விளையும், தன்னை உணர்ந்தவன் எல்லோரையும், இயற்கையையும் உணர்வான். உணர்ந்து செயல்படுவான்.
தன்னை உணராதவன் நடிக்கத்தான் வேண்டும். சுயநலம் மட்டுமே விளையும், எல்லோருக்கும் பொய்மையும் தீமையுமே விளையும்.

தன்னை உணர்வோம், இருப்பாய் மலர்வோம்.

அன்பு,
சித்.
கவிதை

இயற்கையை பார்

நண்பா!
ஒருநாள் ஒரு நண்பன் வீடு சென்றேன்,
அவன் நேர் கொண்ட நெஞ்சினன்,
எடுத்த செயல் முடிப்பவன்,
கடின உழைப்பாளி,
நேரம் தவறாதவன்,
நினைவு சிதறாதவன்,
அவனது தேடல்......ஞானம், முக்தி, பரவசம்,
பத்து வருட முயற்சி,
பலப்பல வழிமுறைகள்,
எரியும் தாகத்தில் சுட்ட உடம்பு,
முறிந்த முயற்சியில் வாடிய இதயம்!
எல்லாம் துறந்து எடுத்த முயற்சியிலும்
ஏன் எட்டாமல் இருக்கிறது?
தவறு முறையிலா, முயற்சியிலா, சொல்லுங்கள் - என்றான்.

என் உயிர் நண்பனே!
தவறு செயலில் இல்லை,
தவறு ‘நீ’ உன் தேடல்,
தேடுவது பேராசை!
உன் கூர்மை முயற்சியும், எரியும் தாகமும்,
இதயத்திலிருந்து பிறந்தவை அல்ல,
உன் தேடல் உன் அகம்பாவம்!
வாழ்வில் பழுத்து எழுந்த தாகமல்ல அது,
வாழ்வை பகுத்து எழுந்த பேராசை!

ஆம் நண்பா!
இயற்கையைப் பார்,
இயல்பான வாழ்வு,
இயல்பான அன்பு,
எதையோ தேடி எங்கோ போவதில்லை எதுவும்!
பூமிக்கு வா!
இயல்பாக இரு!
கிடைத்த வாழ்க்கையை இழந்துவிடாமல்
முழுதாய் வழி நட!
மனதின் பேராசைக்கு முக்தியடையும்
தீனி போடாதே!
மனதை விட்டு இதயம் வா!
வாழ்வின் வானவில்லை அன்புக்கண் கொண்டு
அனுபவித்து ரசி!

புலன் சுவை துய்,
அறிவுக் கூர்மை அறி,
நட்புநாடி நனை,
பாசச் சிறையைப் பார்!
இந்தக் கண நேரமும் மாறும் வாழ்வின்........
அன்பிலும் அழகிலும் கரைந்து ஒன்றி விடும் கணங்களில்,
நீ அனுபவிக்கிறாயே..... ஒரு துளி ஆனந்தச் சுவை,
இந்த சுவையிலிருந்து பிறக்க வேண்டும்.......
உன் ஆர்வமும் தாகமும்,
அதுவே வழி நடத்தும் ஆரம்பம்!
இப்போதுள்ளது பேராசை,
அதிகத்தை, அதிகாரத்தை நாடும் அகங்காரம்,
அதற்கு வழியாய் ஆன்மீகத்தில் சாதிக்க நினைக்கும் தந்திரம்!

ஆகவே.......
தேடுவதை விடு,
அன்பு கொள்,
வாழு, சிரி!
அதிசயம் நடக்கும்,
பரவசம் பிறக்கும்,
வாசல் திறக்கும்..

ஓஷோ வீடியோ

1. Osho :

2. Osho :

3. Osho :



கேள்வி – பதில்

ஓஷோ விளக்கும் சில புரிதல்கள்

முயற்சியின்றி விழிப்புணர்வோடு இருத்தல்

விழிப்புணர்வு கணத்துக்கு கணம் இருக்க வேண்டும், ஆனால் அது அப்படி இருக்க வேண்டுமானால் அது முயற்சியின்றி நடைபெறுவதாக இருக்கவேண்டும். முயற்சியோடு செய்யும்போது நீ திரும்ப திரும்ப தொடர்பை விட்டு விடுவாய். முயற்சியோடு செய்யும்போது உனக்கு ஓய்வு தேவைப்படும். முயற்சி தொடர்ந்து இருக்க முடியாது. அது சாத்தியமற்றது. ஒவ்வொரு முயற்சிக்கும் பின் ஓய்வு தேவைப்படும். அதனால் விழிப்புணர்வு முயற்சியின் மூலம் வரும்போது விழிப்புணர்வு தொடர்ச்சியானதாக, ஒரு தொடர் ஓட்டமாக இருக்கமுடியாது. நீ விழிப்புணர்வை தவற விடும் கணங்கள் வரும். அவை முயற்சியின்றி ஓய்வாக இருக்கும் கணங்கள்.

வாழ்க்கை துடித்துக் கொண்டேயிருக்கும், அது எப்போதும் எதிர்மறைக்கு சென்றுவரும். முயற்சி செய்தால் நீ ஓய்வு எடுத்தே தீர வேண்டும். திரும்பவும் முயற்சி எடுப்பாய், பின் திரும்பவும் ஓய்வு எடுப்பாய். ஆனால் வாழ்வை தாண்டி செல்லும் ஒரு விழிப்புணர்வு உண்டு. அது கடந்து நிற்பது. அப்போது அங்கு அலைபாய்தல் இருக்காது. அது முயற்சியின்றி இருப்பது, அது இயல்பானது. முயற்சி இருக்குமானால் அது வலுக்கட்டாயமானது, வலுக்கட்டாயமானது எப்போதும் இயல்பானதாக இருக்காது. இயல்பற்ற விழிப்புணர்வு விழிப்புணர்வே அல்ல. அது வெளிவட்டத்தில்தான் இருக்கும். உன்னுள் இருக்காது. அது உன்னுள் இருக்குமானால் முயற்சி செய்ய தேவையே இல்லை. முயற்சி எப்போதும் வெளிவட்டத்தில் இருப்பது. முயற்சியின் மூலம் மையத்தை தொட முடியாது.

ஆரம்பத்தில் முயற்சி தேவைதான். இல்லாவிடில் நீ எப்படி ஆரம்பிப்பாய், நீ முயற்சி செய்தே தீர வேண்டும், மனமற்று இருக்க முயல்வாய், தன்னுணர்வோடு இருக்க எல்லா வழிகளிலும் முயற்சி செய்வாய். ஆனால் இந்த முயற்சி ஒருவித பதட்டத்தை உண்டாக்கும். எந்த அளவு முயற்சி செய்கிறாயோ அந்த அளவு பதட்டம் உண்டாகும். சிறிய அளவிலான அனுபவகீற்றுகள் கிடைக்கும், ஆனால் இந்த பதட்டத்தால் இந்த கணநேர அனுபவங்கள் கரைந்துவிடும். முயற்சி செய்தல் என்ற இந்த கட்டத்தை நீ கடந்து வந்தாக வேண்டும்.

ஆனால் முயற்சி செய்யும்போது சில சமயங்களில் திடீரென நாம் முயற்சி எதுவும் செய்யாமலே விழிப்புணர்வாக இருப்பது உனக்கு தெரியவரும். அந்த சமயங்களில் இருக்கும் விழிப்புணர்வுதான் ஒளியாக, நிறைவாக, மகிழ்வாக, நடனமாக இருக்கும்.

மூலம் - MY WAY: THE WAY OF THE WHITE CLOUDS


இணங்கி இருக்கும் கலை

அன்பு என்பது அடுத்தவருடன் இணங்கி இருக்கும் கலை. தியானம் என்பது நீ உன்னுடன் இணங்கி இருத்தல். அவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். தன்னுடன் எப்படி இருப்பது என்று தெரியாத ஒருவரால் மற்றவருடன் உண்மையாக தொடர்பு கொள்ள முடியாது. அவரது உறவுகள் அருவெறுக்கதக்கதாக, அசிங்கமானதாக, விபத்து போல, இருக்கும். ஒரு நிமிடம் எல்லாமும் நன்றாக இருக்கும், மற்றொரு நிமிடம் எல்லாமும் தவறாகி விடும். அது எப்போதும் மேலும் கீழுமாக சென்று வரும். அதற்கு ஆழமிருக்காது. அது மிகவும் கூச்சலிடும். அது உன்னை ஆக்ரமித்திருக்கும். ஆனால் அதில் எந்த லயமும் இருக்காது, அது உன்னை இயற்கையின் உயரங்களுக்கோ, இருப்பின் ஆழங்களுக்கோ எடுத்துச் செல்லாது.

மற்றொரு வகையிலும் இது அப்படித்தான். மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத ஒருவருக்கு தன்னுடன் தொடர்பு கொள்வதும் மிகவும் கடினமானதாக இருக்கும். ஏனெனில் தொடர்பு கொள்ளும் கலை என்பது அதேதான். உன்னுடன் நீ தொடர்பு கொள்வதோ, அன்றி மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதோ ஒன்றேதான். அதில் எந்த வித்தியாசமும் இல்லை.
இவை ஒரே நேரத்தில் சேர்ந்தே கற்றுக் கொள்ளப்பட வேண்டும். அவற்றை பிரிக்க முடியாது. மக்களுடன் இரு. தன்னுணர்வின்றி இருப்பது போல இருக்காதே. உணர்வுடன் இரு. புல்லாங்குழல் வாசிப்பது போல, ஒரு பாடல் பாடுவது போல மக்களுடன் தொடர்பு கொள். ஒவ்வொருவரும் ஒரு இசைக் கருவி போல. மரியாதை கொடு, அன்பு செய், அவர்களை ஆராதனை செய். ஏனெனில் ஒவ்வொருவருக்குள்ளும் இறைமை ஒளிந்திருக்கிறது.

அதனால் மிகவும் கவனமாக இரு. மிகவும் ஈடுபாட்டுடன் இரு. நீ சொல்வது என்ன என்பதில் கவனமாக இரு. நீ என்ன செய்கிறாய் என்பதில் கவனமாக இரு. சிறிய விஷயங்கள் உறவை சிதைத்துவிடும். சிறிய விஷயங்கள் உறவை மிகவும் அழகாக்கிவிடும். சில நேரங்களில் ஒரு புன்னகை கூட அடுத்தவரின் இதயத்தை உனக்கு திறந்துவிடும். சில நேரங்களில் உன்னுடைய கண்களில் இருக்கும் ஒரு தவறான பார்வை கூட அடுத்தவரின் இதயத்தை மூடி விடும். இதுதான் மிக மென்மையான செயல்பாடு. இதை ஒரு கலை. ஒரு ஓவியன் வண்ணத்திரையில் எவ்வளவு கவனமாக வரைவானோ அதைப் போலத்தான் இதுவும். ஒரு கோடு கூட வித்தியாசத்தை உண்டாக்கி விடும். ஒரு உண்மையான ஓவியனால் ஒரு சிறிய கோட்டின் மூலம் மிகப் பெரிய வித்தியாசத்தை கொண்டு வர முடியும்.

வாழ்க்கையை மிகவும் கவனத்துடன், மிகவும் மென்மையாக நுணுக்கமாக கற்றுக் கொள்ள வேண்டும். அதனால் மற்றவர்களுடன் நாம் தொடர்பு கொள்வது என்பது ஒரு கண்ணாடி போல. நீ என்ன செய்கிறாய், அதை எப்படி செய்கிறாய், என்ன நிகழ்கிறது என்று பார். அடுத்தவர்களுக்கு என்ன நிகழ்கிறது, நீ அவர்களது வாழ்க்கையை துயரமானதாக மாற்றுகிறாயா, நீ அவர்களுக்கு வலி கொடுக்கிறாயா, நீ அவர்களுக்கு ஒரு நரகமாக மாறுகிறாயா, அப்படி என்றால் விலகிவிடு. உன் வழியை மாற்றிக் கொள். உன்னைச் சுற்றி வாழ்க்கையை அழகாக்கு. உன்னை சந்திக்கும் ஒவ்வொருவரும் அதை ஒரு பரிசாக உணர வேண்டும். உன்னுடன் இருப்பதாலேயே ஏதோ ஒன்று பொங்கி பெருக வேண்டும், ஏதோ ஒன்று வளர வேண்டும், இதயத்துள் பாடல் மலர வேண்டும், மலர்கள் மலர வேண்டும். தனிமையில் இருக்கும்போது மௌனத்தில் இரு, நிசப்ததில் இரு, உன்னை நீயே கவனி.
எப்படி பறவைக்கு இரண்டு சிறகுகள் இருக்கிறதோ அது போல அன்பும் தியானமும் உனது இரண்டு சிறகுகள் ஆகட்டும். அவை இரண்டிற்க்கும் ஒத்த லயத்தை உருவாக்கு. அப்போது அவை இரண்டும் ஒன்றுகொன்று பிளவுபடாது, ஒன்றையொன்று வளப்படுத்தும், ஒன்றுகொன்று ஊட்டப்படுத்தும், ஒன்றுக்கொன்று உதவும். இதுதான் உன் பாதை. அன்பும் தியானமும் ஒருங்கிணைந்தது.

மூலம் - T HE RAINBOW BRIDGE

குறிக்கோள் இன்றி இருத்தல்


இங்கே இப்போது என இருப்பதற்கு எனக்கு கடினமாக இருக்கிறது. நான் எப்போதும் கனவு கண்டுகொண்டிருக்கிறேன். என்ன செய்வது.

அதற்காக கவலைப்படாதே. என்ன நிகழ்கிறதோ அதை அனுபவி. மேகத்தில் இருந்தால் அதை அனுபவி. எதற்காக அந்த கணத்தை நழுவ விடுகிறாய், அதில் கரைந்து போ, அதில் முழ்கு. இங்கே இப்போது எப்படி இருப்பது என்பதை ஒரு பிரச்னையாக மாற்றிக் கொள்ளாதே. அப்படி செய்தால் இதை நீ தவற விட்டு விடுவாய். எண்ணங்கள் இருந்தால் அவைதான் உனது நிகழ்காலம். நிகழ்காலத்தில் இருத்தல் என்பது அடைவதற்கான ஒரு குறிக்கோள் அல்ல. அது ஒரு குறிக்கோளாக இருந்தால் அதை ஒருநாளும் அடையவே முடியாது. நிகழ்காலம் என்பது இங்கே இருப்பது, குறிக்கோள் என்பது எதிர்காலத்தில் இருப்பது.
அதனால் நீ எங்கே இருந்தாலும், என்ன செய்து கொண்டிருந்தாலும் அந்த செயலில் இரு.

நினைத்தால் நினைத்துக் கொண்டிரு, கனவு கண்டு கொண்டிருந்தால் கனவு காணு. பிரிவினையை உண்டாக்கிக் கொள்ளாதே. கனவிலிருந்து உன்னை தனியே பிரித்து, நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன், நான் நிகழ்காலத்தில் இங்கே இப்போது இருக்க வேண்டுமே, கனவு கண்டு கொண்டிருக்கிறேனே, என யோசிக்காதே. ஏனெனில் கனவு காணுதல்தான் உன்னுடைய இங்கே இப்போது. என்னுடைய இங்கே இப்போது என்பதில் நீ இருக்க முடியாது. நீ உன்னுடைய இங்கே இப்போது என்பதில்தான் இருக்கமுடியும். புரிகிறதா

கனவு காணுதல்தான் உன்னுடைய நிதர்சனம். நீ வேறு ஏதாவது செய்ய ஆரம்பித்தால் உன்னுடைய நிகழ்காலத்திலிருந்து நீ வெளியேறுகிறாய்.

தியான முறைகள்

தலையணை யுத்தம்

எப்போது - ஒவ்வொரு நாளும் காலை

நேரம் - இரண்டு வாரங்களுக்கு தினமும் 20 நிமிடங்கள்.

அறையின் கதவை மூடிக்கொண்டு தனிமையில் இருங்கள். ஆத்திரம் வரட்டும். ஒரு தலையணையை எடுத்து அடித்து, உதைத்து, கடித்து, வீசி, மிதித்து, கிழித்து, துவையுங்கள். முக்கியமாக யார் மேலாவது கோபம் இருந்தால் அவர்கள் பெயரை அதன் மேல் எழுதுங்கள், அல்லது அவர்கள் போட்டோவை அந்த தலைகாணி மேல் ஒட்டி வையுங்கள்.
நீங்கள் மடத்தனமாக உணரக் கூடும். ஆனால் கோபமே மடத்தனமானதுதான். அதை நீங்கள் எதுவும் செய்ய முடியாது. அதனால் அது அங்கே அப்படியே இருக்கட்டும், அதை ஒரு சக்திநிலையாக உணருங்கள். நீங்கள் யாரையும் புண்படுத்தாதவரை அதில் எதுவும் தவறு இல்லை.

அதை நீங்கள் ஒரு தியானயுக்தியாக பயன்படுத்தும்போது, மெதுமெதுவாக அடுத்தவரை காயப்படுத்தும் எண்ணம் குறைவதை நீங்கள் காண்பீர்கள். கோபமாக மாறி சேகரமாகியுள்ள சக்தி வெளியே வீசப்படுவதால் நீங்களும் அமைதியடைவதை உணருவீர்கள். விஷமாகியுள்ள சக்தி உன் அமைப்பிலிருந்து வெளியேற்றப் படுகிறது.
சொல்லப்பட்டுள்ள காலகட்டம் வரை தினமும் தொடர்ந்து செய்தால் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் நீங்கள் கோபம் கொள்ளவில்லை என்பதை நீங்களே உணருவீர்கள். கோபத்தால் தூண்டப்படவில்லை
என்பது உங்களுக்குத் தெரியும்.

மூலம் - HAMMER ON THE ROCK


கேட்கும் முறை

எல்லா பக்கங்களிலிருந்தும் எல்லா விதமான எண்ணங்களும் உன்னுடைய மனதை வந்து மோதிக் கொண்டே இருக்கின்றன. தன்னை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு மனமும் தன்னைச் சுற்றி பஞ்சுபொதி போன்ற ஒரு சுவரை எழுப்பி கொள்கிறது, வந்த எண்ணங்கள் அதில் மோதி திரும்பி விடுகின்றன. அவை உன் மனதிற்குள் நுழைய முடிவதில்லை. இது நல்லதுதான். ஆனால் மெதுமெதுவாக அவை எதையும் உள்ளே வரவிடாமல் மிகப் பெரிதாக வளர்ந்துவிடுகின்றன. அவை உன் கட்டுப்பாட்டை தாண்டி விடுகின்றன. அதை உடைக்கும் ஒரே வழி எண்ணங்களை உடைப்பதுதான்.

உன்னுடைய எண்ணங்களுக்கு ஒரு சாட்சியாக இரு. உனது எண்ணங்கள் மறைய மறைய இந்த பஞ்சுப்பொதி சுவருக்கு தேவை இன்றி போய் விடுகிறது. அப்போது அவை விழுந்து விடுகின்றன. அவைகள் கண்ணுக்குத் தெரியும் பொருட்களல்ல. அதனால் உன்னால் அவற்றை பார்க்க முடியாது – ஆனால் அவற்றின் விளைவு இருக்கும்.
தியானம் செய்ய தெரிந்த மனிதனுக்கு மட்டுமே கேட்கவும் தெரியும். எதிர்மறையாகவும் இது இருக்கும். கேட்கத் தெரிந்த மனிதனுக்கு தியானம் செய்யவும் தெரியும், ஏனெனில் அவை ஒரே விஷயங்கள்தான்.

முதல் நிலை - ஒரு மரத்தடியில், உனது படுக்கையில், எங்கேயிருந்தாலும் சரி – வெளிப்புற சத்தத்தை கேட்க முயற்சி செய். நல்லது என்றோ கெட்டது என்றோ எந்த கருத்தும் கொள்ளாமல் முழுமையாக ஆழ்ந்து கேட்க முயற்சி செய்.

உனது எண்ணங்கள் தானே விழுந்துவிடும், அது போல அந்த பாதுகாப்பு சுவரும் விழுந்துவிடும். அப்போது திடீரென மௌனத்துக்கும் அமைதிக்கும் உன்னை அழைத்துச் செல்லக்கூடிய ஒரு பாதை திறக்கும்.

நூற்றாண்டுகளாக இயற்கையின் மர்மத்துக்கு அருகில் வருவதாக இருந்தாலும் சரி, தனது இருப்பின் நிதர்சனத்தை அறிந்து கொள்வதாக இருந்தாலும் சரி, எல்லோருக்கும் இந்த ஒரே வழிதான் உள்ளது. அருகில் நெருங்கி வர வர நீ குளிர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்வாய். நிறைவாகவும், திருப்தியாகவும், ஆனந்தமாகவும் உணர்வாய். நீ முழு நிறைவாக உணர்ந்து அதை இந்த முழு உலகத்துக்கும் பகிர்ந்து கொள்ளக் கூடிய ஒரு கட்டம் வரும். அப்படி பகிர்ந்து கொண்டாலும் அந்த நிறைவு குறையாமல் அப்படியே இருக்கும். நீ கொடுத்துக் கொண்டே இருப்பாய், ஆனாலும் அது தீராது.

இங்கே இந்த முறையை அறிந்து கொள். பின் இதை உபயோகப்படுத்து. எங்கேயிருந்தாலும் சரி, என்ன செய்தாலும் சரி இதை முயற்சி செய்து பார். உனக்கு இதற்கு ஏகப்பட்ட சந்தர்ப்பங்கள் கிடைக்கும். பேருந்தில் நின்று கொண்டிருக்கும் போது, ரயிலில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது, படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கும் போது.............

மூலம் - The Osho Upanishad

கேட்கும் வித்தை

கேட்பது ஒரு வேலையல்ல. கேட்க நீ செய்ய வேண்டியது எதுவும் இல்லை. நீ அங்கே இருந்தால் மட்டும் போதும்.
முயற்சியோ, ஈடுபாடோ எதுவும் தேவையில்லை – அமைதியாக அமர்ந்து கேள். வெறுமனே அமர்ந்திருக்கும் போது, எதையும் நீ செய்யாமலிருக்கும் போது தியானம் நடைபெறும்.
நீ தனிமையில் இருக்கும் போது, வீட்டில் இருக்கும் போது, இந்த பயிற்சியை செய்து பார்.

பறவைகளுடன், அருவியுடன், மரத்தின் இலைகளை அசைத்துப் போகும் காற்றுடன், நீ செய்யக் கூடியதெல்லாம் மௌனத்துக்கு நகர்ந்து விடலாம். நதியின் கரையில் அமர்ந்து அமைதியில் ஆழ்ந்து விடு. இப்போது நதி உன் குரு அல்ல, அதற்கு நீ அங்கே இருப்பது கூட தெரியாது. காற்றுக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லை. இலையின் அசைவு உனக்காக இல்லை. மரத்தடியில் அமர்ந்து வெறுமனே இந்த ஒலிகளை கேட்கும்போது அந்த கணத்தில் நீ வேறு உலகிற்கு செல்கிறாய்.

சரியாக கேட்பது என்பதை அடிக்கடி ஜே. கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தி சொல்வார். ஆனால் சரியாக கேட்பது என்பது கூட ஆபத்தாகி விடக் கூடும். அதற்கு ஒரு பயன் இருக்கிறது. அது உனக்கு முதன்முறை ஒரு அனுபவத்தை கொடுக்கும். ஆனால் அவற்றை உனது வாழ்வின் அடிப்படையாக கொள்ளாதே. அதற்கு பதிலாக அதே அனுபவங்களை வேறுபட்ட சூழ்நிலைகளிலும் பெற முயற்சி செய். அப்போது நீ அதிலிருந்து விடு பட்டு நிற்பாய். அதனால் சில நேரங்களில் மரத்தின் அருகில், சில நேரங்களில் ஒரு நதியின் அருகில், சில நேரங்களில் கடைவீதியின் நடுவில், சப்தத்தை மட்டும் கேட்டுக் கொண்டு அமைதியாக இரு. அங்கேயும் அந்த வேறு பட்ட உலகம் உனக்கு திறக்கும்.

மூலம் - NO WHERE TO GO BUT IN


புத்தரின் புரிதல் - ஓஷோவின் கதை 23

நான் சொல்லும் இதை தியானம் செய்து பாருங்கள். சோசுவை, ஒரு துறவி “ஒரு நாய்க்கு புத்தத்தன்மை இருக்கிறதா இல்லையா?” என்று கேட்டார். சோசு, “இருக்கிறது”. என பதில் கூறினார்.

இதை ஆழ்ந்து பார்க்க வேண்டும். ஒரு நாய்க்கு புத்த தன்மை இருக்குமானால் அது உனக்கும் இருக்கும். நாயும் ஒருநாள் புத்தராக கூடும் என்றால் உனது லட்சியம் வெகு தொலைவில் இல்லை. இதில் பல விஷயங்கள் உள்ளன. ஒரு நாய் புத்த தன்மை உடையது என்றால் பின் அது உனக்கும், உனது எதிரிக்கும்கூட இருக்கும். எல்லா உயிர்களுக்கும், உடையதுதானே – இதில் உயர்வு தாழ்வு ஏது?

விழித்துக் கொள்ளலாமா வேண்டாமா என்று முடிவெடுப்பதில்தான் முக்கியத்துவம் இருக்கிறது. இன்னும் சிறிது நேரம் தூங்கலாமா வேண்டாமா என்று நீ முடிவெடுப்பதில்தான் இருக்கிறது – புரண்டு படுத்து போர்வையை இழுத்து போர்த்தி தூங்குவதில்தான் சுகம். ஆனால் போர்வைக்குள் தூங்கும்போது, அதிகாலையை அனுபவித்தால் நீ புத்தர்தான். அது உன்னைப் பொறுத்தது. புத்தர் மரத்தடியில் உட்கார தீர்மானித்தார், நீ படுக்கையில் படுத்திருக்க தீர்மானித்திருக்கலாம். அது மிக முக்கியமான வித்தியாசம் அல்ல. ஒரு புத்தர் மரத்தடியில் ஞானத்தன்மை பெற முடியுமானால் உன்னாலும் போர்வைக்குள் ஞானத்தன்மை பெற முடியும். அது உண்மையிலேயே சிறப்பானதாக இருக்கும். ஏனெனில் நீ எதிர்கால மனித சமுதாயத்துக்கு ஒரு புதிய சாத்தியத்கூறை உண்டாக்குகிறாய். இல்லாவிடில் மக்கள் மரத்தடியில்தான் உட்கார வேண்டும் என எப்போதும் நினைக்க ஆரம்பித்து விடுவார்கள். அதிலும் குறிப்பாக மழைக்காலத்தில், குளிர்காலத்தில், ஏதாவது சூழ்நிலையில் பிரச்னை இருக்கும்போதெல்லாம் அவர்கள் புத்ததன்மையை ஒத்திப் போட்டு விடுவார்கள்.

அதில் எந்த பிரச்னையும் இல்லை என நான் உனக்கு கூறுகிறேன். போர்வைக்குள் கதகதப்பாக இருந்தபடியே நீ புத்தராகலாம். அதில் எந்த பிரச்னையும் இல்லை. ஏனெனில் புத்தராவதற்க்கும் மரத்தடியில் உட்காருவதற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படித்தான் என்று கிடையாது. அதேபோல பத்மாசனத்தில் உட்காருவதற்கும் ஞானத்தன்மைக்கும் எந்த தொடர்பும் இல்லை. பத்மாசனத்தில் அமர்வது தேவை என்றால் நாய்களால் ஞானத்தன்மை பெற முடியாது. எப்படி ஒரு நாயால் பத்மாசனத்தில் உட்கார முடியும்?.

போர்வைக்குள் இருக்கும் போது நடைபெறக்கூடும் என்றால் உங்களில் அதிகம் பேர் அதைத்தான் தேர்ந்தெடுப்பீர்கள் என நினைக்கிறேன். புத்தர் மரத்தடியில் அமர்ந்திருக்கும்போது அது நிகழ்ந்தது தற்செயலானது. அது போர்வைக்குள் இருக்கும் போதும் நிகழக்கூடும் என்பது அவருக்குத் தெரியாது. உண்மையில் இதே கேள்வி அவரது மனைவி அவரைப் பார்த்து கேட்டாள்........

பனிரெண்டு வருடங்கள் கழித்து அவர் தனது அரண்மனைக்கு வருகிறார். தந்தை மிக மிக கோபமாக இருப்பார் என்பது அவருக்கு மிக நன்றாக தெரியும். தந்தைக்கு மிகவும் வயதானபின் பிறந்த மகன், ஒரே மகன், தந்தையின் நம்பிக்கைகள் எல்லாம் இவரை சார்ந்துதான் இருந்தது. அவர் மிகவும் சக்தியிழந்து போய் விட்டார், ஓய்வெடுக்க விரும்பினார். தனது மகன் ராஜீய பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளவதற்காக காத்திருந்தார். அதற்கு முன்னதாக கௌதம புத்தர் அரண்மனையிலிருந்து சென்றுவிட்டார்.

இந்த கதையில் மனித மனம் மிக அழகாக வெளிப்பட்டிருக்கும். கௌதம புத்தர் கிளம்புவதற்கு முன்தினம்தான் அவருக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தது. தனது வாரிசை, தனது துணைவிக்கும் தனக்கும் உள்ள அன்பின் வெளிப்பாட்டை, கிளம்புவதற்குமுன் ஒருமுறை காண விரும்பினார். அதனால் அவர் தனது மனைவியின் அறைக்கு சென்றார். அவள் தூங்கிக் கொண்டிருந்தாள், குழந்தை போர்வைக்குள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. அவர் போர்வையை விலக்கி குழந்தையின் முகத்தை ஒரு முறை காண நினைத்தார். ஏனெனில் அவர் திரும்ப வராமலும் போகலாம்.

அவர் புரிபடாத யாத்திரைக்குச் செல்கிறார். அவருக்கு என்ன நடக்கும் என்று அவருக்கே தெரியாது. அவர் தனது நாடு, மனைவி, குழந்தை, தன்னை, எல்லாவற்றையும் ஞானவிழிப்படைய பணயம் வைக்கிறார். அதற்காகவே அலைந்து திரிந்து ஞானமடைந்த வெகு சிலரிடமிருந்து கேள்விப்பட்ட ஒரு சாத்தியக்கூறாக மட்டுமே உள்ள ஒன்றை தேடி செல்கிறார்.

உங்களைப் போலவே அவருக்கும் ஏகப்பட்ட குழப்பங்கள், கேள்விகள். ஆயினும் ஒரு முறை முடிவு பெற்று விட்டால்....... அவர் மரணத்தை, முதுமையை, நோயை, பார்த்த அந்த நாள், அவர் தனது வாழ்வில் முதன்முறையாக ஒரு சந்நியாசியை பார்த்த அந்த நாள்...... அவருள், “மரணம் உறுதி எனும்போது பின் அரண்மனையில் காலத்தை செலவிடுவது ஆபத்தானது. மரணம் வருவதற்கு முன் இறப்பை கடந்தும் இருப்பதை கண்டடைந்தேயாக வேண்டும்”. என்ற இறுதி நிலைப்பாட்டுக்கான கேள்வி எழுந்தது.

அவர் செல்ல முடிவெடுத்துவிட்டார். ஆனாலும் மனித மனம், மனித இயல்பு...... தனது குழந்தையின் முகத்தை ஒரு முறை பார்க்க விரும்பினார் - அவர் இன்னும் குழந்தையை பார்க்கவேயில்லை. ஆனால் போர்வையை விலக்கும்போது யசோதரா – அவரது மனைவி – விழித்துவிட்டால், அவள் எழுந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவள் எழுந்துவிட்டால், “இந்த இரவில் என் அறையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள், நீங்கள் எங்கோ செல்ல தயாராகி இருப்பதுபோல தோன்றுகிறதே?” எனக் கேட்பாள்.

தேர் வாசலில் தயாராக இருக்கிறது, எல்லாமும் ரெடி, அவர் கிளம்ப வேண்டியதுதான் பாக்கி. அவர் தனது தேரோட்டியிடம், “ஒரு நிமிடம் பொறு, நான் எனது குழந்தையின் முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன். ஏனெனில் நான் திரும்ப வராமலும் போகலாம்”. என்று கூறியிருந்தார்.

ஆனால் அவர் தனது குழந்தையின் முகத்தை பார்க்கவில்லை, ஏனெனில் யசோதரா எழுந்து அழுது, நீங்கள் என்ன செய்கிறீர்கள்?, எதற்கு இந்த துறவறம்?, நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?, ஞானமடைதல் என்பது என்ன? என்று கதற தொடங்கிவிட்டால்.... என்று பயப்பட்டார். ஒரு பெண்ணைப் பற்றி யாருக்கும் ஒன்றும் தெரியாது – அவள் முழு அரண்மனையையும் விழிக்க வைத்துவிடக் கூடும். தந்தை வந்துவிடுவார், எல்லாமும் முடிந்துவிடும். அதனால் அவர் நழுவி சென்றுவிட்டார்.

பனிரெண்டு வருடங்களுக்குப் பிறகு, ஞானமடைந்தபின் அவர் செய்த முதல் வேலை, தந்தையிடம், மனவியிடம், பனிரெண்டு வயதடைந்த மகனிடம் மன்னிப்பு கேட்க திரும்பி வந்ததுதான். அவர்கள் கோபமாக இருப்பார்கள் என்பதை அவர் அறிவார். தந்தை மிகவும் ஆத்திரமாக இருந்தார். புத்தரை பார்த்தவுடன், அரைமணி நேரம் திட்டி தீர்த்தார். பின் திடீரென தான் கூறிய எந்த விஷயமும் தன் மகனை தொடவில்லை, அவன் ஒரு பளிங்குச்சிலை போல நிற்கிறான் என்பதை உணர்ந்தார்.
தந்தை தன்னை கவனித்தவுடன் புத்தர், “இதைத்தான் நான் விரும்பினேன். கண்ணீரை துடைத்துக் கொள்ளுங்கள். என்னைப் பாருங்கள். அரண்மனையை விட்டு சென்றபோது இருந்தவன் அல்ல நான். உங்களது மகன் முன்னரே இறந்து விட்டான். நான் தோற்றத்தில் உங்களது மகன்போல இருக்கலாம். ஆனால் எனது இருப்பு மிகவும் வேறுபட்டது. என்னைப் பாருங்கள்”. என்றார்.

“நான் பார்த்துக் கொண்டிருந்தேன், அரைமணி நேரம் நான் உன்னைத் திட்டிக் கொண்டிருந்தேன், நீ எதுவுமே பேசவில்லை. நீ எவ்வளவு ஆத்திரக்காரன் என்று எனக்குத் தெரியும். உன்னால் அமைதியாக இருந்திருக்க முடியாது. இப்படி அமைதியாக இருந்தவிதமே நீ மாறிவிட்டாய் என்பதை காட்டுகிறது. உனக்கு என்ன நிகழ்ந்தது?” என்று கேட்டார்.

புத்தர், “சொல்கிறேன். அதற்குமுன் நான் போய் என் மனைவியையும் மகனையும் பார்த்துவிட்டு வருகிறேன். நான் வந்திருக்கிறேன் என்பதை அவர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். அவர்கள் எனக்காக காத்திருப்பார்கள்.” என்றார்.

அவரை பார்த்தவுடன் அவர் மனைவி, “நீங்கள் மாறியிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. இந்த பனிரெண்டு வருடங்கள் மிகவும் துன்பமான காலங்கள். நீங்கள் சென்று விட்டதல்ல காரணம், நீங்கள் என்னிடம் எதுவும் சொல்லாமல் சென்றதே காரணம். நான் உண்மையை தேட செல்கிறேன் என என்னிடம் கூறியிருந்தால் நான் உங்களை தடுத்து நிறுத்தியிருப்பேன் என நினைத்தீர்களா? நீங்கள் என்னை கேவலப் படுத்தி விட்டீர்கள். இந்த பனிரெண்டு வருடங்களும் என்னை வருத்திய விஷயம் இதுதான்.

நீங்கள் உண்மையை தேட சென்றது வருத்தப்பட வைக்க வில்லை,
அது சந்தோஷமான விஷயம்தான். நீங்கள் ஞானத்தை தேடி சென்றது குற்றமல்ல. நான் உங்களை தடுத்து நிறுத்தியிருக்க மாட்டேன். நானும் ஷத்திரிய குலத்தை சேர்ந்தவள்தான். கத்தி கதறி அழுது உங்களை தடுக்கும் அளவு பலவீனமானவளாகவா என்னை நினைத்தீர்கள்?,
நீங்கள் என்னை நம்பவில்லையே என்பதுதான் இந்த பனிரெண்டு வருடங்களும் என்னை வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறது. நான் நீங்கள் செல்ல அனுமதித்திருப்பேன், நான் உங்களுக்கு விடை கொடுத்திருப்பேன், தேர் வரை வந்து வழியனுப்பி வைத்திருப்பேன். நீங்கள் அடைந்திருப்பது எதுவோ அதை இங்கிருந்தே அடைந்திருக்க முடியாதா என்பதுதான் இந்த பனிரெண்டு வருடங்களும் உங்களை நான் கேட்க துடித்துக் கொண்டிருந்த கேள்வி. நீங்கள் எதையோ அடைந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது........

இந்த அரண்மனையிலிருந்த சென்ற நபர் அல்ல நீங்கள். நீங்கள் வேறுவிதமாக ஜொலிக்கிறீர்கள், உங்களது இருப்பு முற்றிலும் புதிதாக, புத்துணர்வோடு இருக்கிறது. உங்களது கண்கள் மேகமற்ற வானம் போல தெளிவாகவும் தூய்மையாகவும் இருக்கிறது. நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். நீங்கள் எப்போதும் அழகுதான், ஆனால் இந்த அழகு புறஅழகல்ல, அகஅழகு உங்களுக்குள் பூத்திருக்கிறது. உங்களுக்கு கிடைத்தது என்னவோ அது இங்கே நீங்கள் இருந்தால் கிடைத்திருக்காதா? இந்த அரண்மனை நீங்கள் ஞானம் பெறுவதை தடுத்து நிறுத்தி விடுமா?” என்று கேட்டாள்.

இது மிக புத்திசாலித்தனமான கேள்வி. இதை கௌதம புத்தர் ஏற்றுக் கொள்ள வேண்டி வந்தது. “நான் இங்கிருந்தே அடைந்திருக்கலாம். ஆனால் அப்போது எனக்கு எதுவும் தெரியாது. இப்போது என்னால் ‘இங்கிருந்தே அடைய முடியும், எந்த மலைகளுக்கும் செல்ல வேண்டியதில்லை, எங்கேயும் செல்ல வேண்டியதில்லை’ என சொல்ல முடியும். நான் என்னுள் சென்றாலே போதும், நான் எங்கே இருந்தாலும் அது நிகழும். வெளியே வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை. இந்த அரண்மனையும் மற்ற இடங்களைப் போன்றதே. ஆனால் என்னால் இதை இப்போது சொல்ல முடியும், அப்போது இதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதே.

நான் உன்னைப் பற்றியோ உன் தைரியத்தைப் பற்றியோ சந்தேகபடவில்லை. உண்மையில் நான் என்னைப் பற்றித்தான் சந்தேகப்பட்டேன். அதனால் என்னை மன்னித்துவிடு. நீ எழுந்துவிட்டாலோ, நம் குழந்தையை நான் பார்த்துவிட்டாலோ, “நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்?, என்னுடைய அழகான மனைவியை, இந்த முழுமையான அன்பை, என்னிடம் அவள் கொண்டிருக்கும் முழுமையான அர்ப்பணிப்பை விட்டு விலகுவதா?, இந்த ஒரு நாளே ஆன குழந்தை என்ன செய்தது?, நான் அவனை விட்டு போகிறேன் என்றால் ஏன் இவனை பெற்றெடுத்தேன்?, நான் என்னுடைய பொறுப்புகளிலிருந்து தப்பிப் போவதா? என்று நான் யோசிக்க ஆரம்பித்து விடுவேன்.

என்னுடைய தந்தை விழித்துக் கொண்டு விட்டாலோ என்னால் போகவே முடியாது. நான் உன்னை நம்பவில்லை என்பதல்ல, நான் என்னைத்தான் நம்பவில்லை. நான் முழுமையாக துறக்கவில்லை, அங்கு ஒரு அலைபாய்தல் இருக்கிறது என்று எனக்குத் தெரியும். என்னுள் ஒரு பாகம், ‘ஏய், நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்றது. மற்றொரு பாகம், ‘செல்வதற்கு இதுதான் சரியான சந்தர்ப்பம், இதை நீ விட்டுவிட்டால் போவது மேலும் மேலும் கடினமானதாகி விடும். உனக்கு முடி சூட்டுவதற்கு உனது தந்தை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். முடி சூட்டிக் கொண்டு அரசனாகி விட்டால் பின் செல்வது மிகவும் கடினம்’. என்றது.” என்று கூறினார்.

யசோதரா, “நான் உங்களிடம் கேட்க நினைத்த ஒரே ஒரு கேள்வி இதுதான். அதை எங்கிருந்தாலும் அடைய முடியும், இங்கிருந்தாலும் அடைந்திருக்க கூடும் என நீங்கள் கூறிய பதிலின் உண்மை தன்மையில் என் உள்ளம் குளிர்ந்தது. இதோ உங்கள் மகன், இவன் உங்களைப் பற்றிக் கேட்கும் போதெல்லாம் நான், “பொறு, அவர் திரும்பி வருவார். அவரால் மனிததன்மையற்று, கருணையின்றி, கொடூரமாக நடந்து கொள்ள முடியாது. ஒரு நாள் அவர் திரும்பி வருவார். அவர் எதை உணர சென்றிருக்கிறாரோ அதற்கு நாள் பிடிக்கும். ஆனால் அதை உணர்ந்த உடனே அவர் செய்யும் முதல் விஷயம் இங்கே திரும்பி வருவதுதான்.” என பதில் கூறுவேன்.

உங்களது மகனுக்கு நீங்கள் தரப் போகும் சொத்து என்ன?, அவனுக்குத் தர நீங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள்?, அவனுக்கு உயிர் கொடுத்திருக்கிறீர்கள், வேறு என்ன அவனுக்கு கொடுக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டாள்.

புத்தரிடம் பிச்சைப் பாத்திரத்தை தவிர வேறு எதுவும் இல்லை. அவர் தனது மகனை – அவன் பெயர் ராகுல். ஏன் அவன் பெயர் ராகுல் என்பதை நான் பிறகு சொல்கிறேன் அந்த பெயர் கௌதம புத்தர் அவனுக்கு கொடுத்தது – அருகில் அழைத்தார்.

ராகுலை அருகில் அழைத்து பிச்சைப் பாத்திரத்தை அவன் கையில் கொடுத்தார். “என்னிடம் வேறு எதுவும் இல்லை. இதுதான் என்னிடமுள்ள ஒரே விஷயம். இனிமேல் நான் என் கைகளையே பிச்சைப் பாத்திரமாக உபயோகப் படுத்தி பிச்சை எடுத்துக் கொள்வேன். இந்த பிச்சைப் பாத்திரத்தை உனக்கு கொடுத்ததன் மூலமாக நான் உனக்கு சந்நியாசம் கொடுத்துவிட்டேன். நான் கண்டறிந்த மிகப் பெரிய அரிதான விஷயம் இதுதான். நீயும் இதை கண்டறிய வேண்டும் என நான் விரும்புகிறேன்.” என்றார்.

அவர் தனது மனைவியிடம், “நீயும் எனது சந்நியாசிகளின் கூட்டத்தில் ஒரு பாகமாக தயாராகு,” என்றார். தனது மனைவிக்கும் தீட்சையளித்தார். புத்தரின் தந்தை வந்து இவையனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். “ஏன் என்னை மட்டும் விட்டு விட்டாய்?, நீ கண்டறிந்ததை உன் வயதான தந்தையுடன் பகிர்ந்து கொள்ள உனக்கு விருப்பமில்லையா?, என்னுடைய மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது...... எனக்கும் தீட்சை கொடு” என்று அவர் கேட்டார்.

புத்தர், “உங்கள் எல்லோரையும் என்னுடன் கூட்டிச் செல்லத்தான் நான் இங்கு வந்தேன். ஏனெனில் அழியாத, யாராலும் பறித்துக் கொள்ள முடியாத, முற்றிலும் பெரியதான சாம்ராஜ்யத்தை நான் அறிந்தேன். நான் இங்கே வந்தால் என்னுடைய இருப்பை, என்னுடைய தெளிவை, உங்களால் உணர முடியும் என்றே நான் இங்கே வந்தேன். என்னை பின் தொடர்ந்து வாருங்கள் என நான் உங்களை அழைக்க முடியும்.” எனக் கூறி அவர்கள் மூவருக்கும் தீட்சையளித்தார்.

இந்திய புராணங்களில் சந்திர கிரகணம் என்பது சந்திரனுக்கு உள்ள இரண்டு எதிரிகளான ராகுவும் கேதுவும் சந்திரனை பிடித்து கொல்ல முயற்சி செய்கின்றனர். ஒவ்வொரு முறையும் சந்திரன் அவர்கள் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்கிறான். என்பதை தான் சந்திரகிரகணம் என்று கூறப் படுகிறது. கௌதம புத்தர், “இந்த மகன்தான் எனக்கு மிகப் பெரும் தடையாக இருக்கப் போகிறான், இவன்தான் என்னுடைய எதிரியாக இருக்கப் போகிறான், இமயமலைக்கு நான் செல்வதை தடுக்கப் போவது இவன்தான். இவன்மேல் நான் வைக்கும் அன்பு, இவனுடன் நான் கொண்டுள்ள நேசம், பாசம். இவைதான் என்னுடைய விலங்குகளாக இருக்கப் போகின்றன.” என்று நினைத்ததால் அவர் தன் மகனுக்கு ராகுல் என பெயர் வைத்தார்.

அவர்கள் எல்லா சந்நியாசிகளும் தங்கியிருந்த, ஊரை விட்டு வெளியே தள்ளியுள்ள காட்டுக்கு வந்தனர். அன்று மாலை அவர் சந்நியாசிகளிடையே உரை நிகழ்த்துகையில், “எனது மனைவி யசோதரா என்னை ஒரு கேள்வி கேட்டாள். அது மிக முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி. ஒரு அரசராக வாழ்ந்து கொண்டே ஞானம் பெறுவது சாத்தியமில்லையா என்று கேட்டாள். ‘இடத்தைப் பற்றியோ, நேரத்தைப் பற்றியோ கேள்வியே கிடையாது. ஒருவர் எங்கேயிருந்தாலும் சரி ஞானம் பெற முடியும் – ஆனால் அந்த நேரம் இதை சொல்வதற்கு எனக்கு யாருமில்லை. எங்கே இதை பெற முடியும், யாரிடம் இதை கேட்பது, எங்கே போவது என்று எனக்கு எந்த யோசனையும் இல்லை. நான் அறியாததற்க்குள் குதித்து விட்டேன்.’ என்று உண்மையை கூறினேன். ஆனால் இப்போது, நீ எங்கே இருந்தாலும் கவனத்தோடும் விழிப்போடும் இருப்பதற்காக எதை வேண்டுமானாலும் பணயம் வைக்க கூடிய தைரியம் உன்னிடம் இருக்குமானால் ஞானமடைதல் நிகழும் என்று என்னால் கூற முடியும்.” என்றார்.

No comments: